Lenten Season, Second Sunday, C, 21,02,2016
தொ.நூ 15,5-12.17-18:
5அப்பொழுது ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, 'வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்' என்றார். 6ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார். 7ஆண்டவர் ஆபிராமிடம், 'இந்நாட்டை உனக்கு உரிமைச் சொத்தாக அளிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே' என்றார். 8அதற்கு ஆபிராம், 'என் தலைவராகிய ஆண்டவரே, இதை நான் உரிமையாக்கிக் கொள்வேன் என்பதை எப்படித் தெரிந்து கொள்வேன்?' என்றார். 9ஆண்டவர் ஆபிராமிடம், 'மூன்று வயதுள்ள இளம் பசு, மூன்று வயதுள்ள வெள்ளாடு, மூன்று வயதுள்ள செம்மறியாடு, ஒரு காட்டுப்புறா, ஒரு மாடப்புறா ஆகியவற்றை என்னிடம் கொண்டுவா' என்றார். 10ஆபிராம் இவற்றை எல்லாம் அவரிடம் கொண்டுவந்து, அவைகளை இரண்டிரண்டு கூறுகளாக வெட்டி, ஒவ்வொரு பகுதியையும் அததற்கு இணையான பகுதிக்கு எதிரெதிரே வைத்தார். ஆனால் பறவைகளை அவர் வெட்டவில்லை. 11துண்டித்த உடல்களைப் பறவைகள் தின்ன வந்தபொழுது ஆபிராம் அவற்றை விரட்டிவிட்டார். 12கதிரவன் மறையும் நேரத்தில் ஆபிராமுக்கு ஆழ்ந்த உறக்கம் வந்தது. அச்சுறுத்தும் காரிருள் அவரைச் சூழ்ந்தது. 17கதிரவன் மறைந்ததும் இருள்படர்ந்தது. அப்பொழுது புகைந்து கொண்டிருந்த தீச்சட்டி ஒன்றும் எரிந்து கொண்டிருந்த தீப்பந்தம் ஒன்றும் அந்தக் கூறுகளுக்கிடையே சென்றன. 18அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, 'எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறுவரை உள்ள 19 கேனியர், கெனிசியர், கத்மோனியர், 20இத்தியர், பெரிசியர், இரபாவியர் 21எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர் ஆகியோர் வாழும் இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்' என்றார்.
இந்தப் பகுதி கடவுள் ஆபிரகாமுடன் (அவரின் பெயர் இன்னும் மாற்றப்படவில்லை) செய்த உடன்படிக்கையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிக்கு சற்று முன்னர் ஆபிரகாம் கீழைத்தேய அரசர்களை லோத்துவின் பொருட்டு தோற்கடித்திருந்தார். அத்தோடு விவிலியத்தில் கிறிஸ்துவுக்கு முன்அடையாளமாக கருதப்பட்டு பல கேள்விகளை இன்னும் எழுப்பிக்கொண்டிருக்கும் சாலமின் அரசர் மெல்கிசதேக்கின் ஆசீரையும் பெற்றிருந்தார், இருந்தும் தனக்கு வாரிசில்லாத துன்பம் அவரை வாட்டிக்கொண்டிருந்தது. இப்படியான வேளையில்தான் உண்மையான ஆசீர் கடவுளிடம் இருந்து வருகிறது. இந்தப்பகுதியிலே விவிலிய ஆசிரியர், ஆபிரகாமின் விசுவாசத்தையே மையக்கருத்தாக காட்டுகிறார். இதனை பல வேளைகளில் பவுல் தனது கடிதங்களில் கோடிடுவார். ஆண்டவர் இயேசுவும் ஆபிரகாமின் விசுவாசத்தை பாராட்டுவார். இங்கே பல பாரம்பரியங்கள் (யாவே மற்றும் எலோயிஸ்து) ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளதாக சில அறிஞர்கள் கருதுகின்றனர். ஆழமாக வாசித்தால் சில வித்தியாசங்களைக் காணலாம். வ5 இரவுக் காட்சியை காட்டுகிறது, வவ12,17 மாலைக் காட்சிகளைக் காட்டுகின்றன. வ6 ஆபிரகாமின் விசுவாசத்தை காட்டுகிறது, வ7 கடவுளின் பெயரை மீண்டும் நினைவூட்டுகிறது, எற்கனவே வ2ல் ஆபிரகாம் கடவுளின் பெயரைத் தெரிந்திருக்கிறார். இங்கே சில பகுதிகள் 1-6, 13-16 எதிர்கால சந்ததியை பற்றி கூறும் வேளை, 17-21 உடன்படிக்கை சடங்குகளைப் பற்றி கூறுகிறது.
வ5: ஆபிரகாமின் இறைவாக்கினர்-தன்மை காட்டப்படுகிறது. ஒர் இறைவாக்கினரைப் போல ஆபிரகாம் வெளியே அழைக்கப்படுகிறார். விண்மீன்கள், அளவிட முடியா எண்ணிக்கையையும் என்றும் அசையாத உறுதியையும் குறிக்கின்றன.
வ.6: அதிகமாக புதிய ஏற்பாட்டில் பாவிக்கப்படுவது. (காண் உரோ 4,3.20-24: கலா 3,6: யாக் 2,23), இதுவே இந்த பகுதியின் மையக்கருத்தாக இருந்திருக்க வேண்டும். நீதியாக கருதுதல், ஒரு குருத்துவ மொழி. ஒருவரின் காணிக்கை இவ்வாறே ஏற்றுக்கொள்ளப்பட்டது. இங்கே ஆபிரகாமின் நம்பிக்கையே அவருடைய காணிக்கையாக கடவுளால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. (צְדָקָה ட்செதெக்காஹ் - நீதியாக)
வவ. 7-8: இந்த வரிகள் கடவுளுக்கும் ஆபிரகாமிற்கும் இடையிலான உடன்படிக்கை உரையாடல். ஆபிரகாமின் கேள்விக்கு பின்னால் தன்னுடைய வாரிசைப்பற்றிய கவலை தெரிகிறது. இந்த உரையாடல் ஆபிரகாமிற்கு மட்டுமல்ல பல வேளைகளில் தங்களது எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்பட்ட போது, இஸ்ராயேல் மக்களுக்கு நம்பிக்கை தருவாத அமைந்தது. இன்று நமக்கும் சரியாக பொருந்தும்.
வவ.9-11: மிகவும் ஆச்சரியத்திற்குரிய பகுதி. இது மெசப்தேமியாவில் இருந்த உடன்படிக்கை சடங்குகளை ஒத்திருக்கிறது. மூன்று வயதுள்ள பசு, செம்மறி, வெள்ளாடு போன்றவை நிறைவான பலிகளைக் குறிக்கலாம். மிருகங்களை வெட்டியவர் புறாக்களை வெட்டவில்லை ஏன் என்று இன்றுவரை சரியாகத் தெரியாது. தின்ன வந்த பறவைகளை சில ஆய்வாளர்கள் எகிப்திய அடிமைத்தனமாகவும், வெட்டப்பட்ட மிருகங்களை, எகிப்தில் பலியான இஸ்ராயேலரை குறிப்பதாகவும் காண்கின்றனர்.
வவ.12,17: அந்தி, உறக்கம், காரிருள், படர்ந்த இருள், புகை மற்றும் தீப்பந்தம் என்பவை கடவுளை குறிக்கவும், அவருடைய வெளிப்பாட்டை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டு;ள்ளன. சிலர் இதனை எகிப்திலிருந்து மக்களை மீட்டதற்கான முன் அடையாளமாகவும் காண்கின்றனர்.
வவ. 18-20: இந்த மக்கள் கூட்டம் அக்காலத்தில் இந்த பகுதியிலே வாழ்ந்தவர்களை குறிக்கிறது. எகிப்தின் ஆறு என்பது நைல் நதியைக் குறிக்காது. இந்த பகுதிகள் உண்மையில் சாலமோனின் காலத்தில் மட்டும்தான் இஸ்ராயேலரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த பத்து வகையான மக்கள் கூட்டம் இந்த இடத்தில் மட்டுமே தனித்துவமாக உள்ளது. இங்கு நோக்கப்பட வேண்டியது, அனைத்து நிலங்களும் கடவுளுடையவை, அவர் தான் விரும்பியவர்களுக்கு கொடுக்கிறார். யாரும் இந்த பூமியை பரம்பரை சொத்தாக கொள்ள முடியாது. சிலர் தங்களைத் தவிர மற்றவரை வெளிநாட்டவர், வந்தேரிகள் என்று கூறுவது வேடிக்கையானது.
பதிலுரைப்பாடல்
தி.பா 27
ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? என்று தொடங்கும் இந்த 27வது திருப்பாடல், 14 வரிகளைக் கொண்டுள்ளது. ஒரே பாடல் போல தோன்றினாலும், உற்று நோக்கின் இரண்டு பகுதிகளைக் காணலாம். 1-6: நம்பிக்கைப்பாடல் 7-14 புலம்பல் பாடல். முதலாவது வாசகத்தைப் போல் இங்கும் நம்பிக்கை என்னும் சிந்தனை மையமாக வருவதை அவதானிக்கலாம் (இது சில ஆய்வாளர்களின் கருத்து மட்டும்) இந்த திருப்பாடலை நான்கு பகுதிகாளாக பிரித்து நோக்குவோம்:
அ. 1-3: ஆண்டவரே ஒளியாகவும், மீட்பாகவும் அடைக்கலமுமாகவும் இருப்பதானால் அஞ்சவும் நடுங்கவும் வேண்டாம் என்று கேள்வியாக விடையைச் சொல்கிறார் ஆசிரியர். ஒளி (אוֹרִ ஓர்), மீட்பு (יֵשַׁע யேஷா), அடைக்கலம் (מָעוֹז மாஓட்ஸ்) போன்றவை கடவுளை குறிக்கும் காரணச் செற்கள். இந்த சொற்களுக்கு பின்னால் இருக்கும் ஆசிரியரின் நம்பிக்கையை தியானிக்க வேண்டும்.
ஆ. 4-6: இங்கே எருசலேம் ஆலயம், மையப் படுத்தப்படுகிறது. இல்லம், கோவில், கூடாரம் மற்றும் குன்று, எருசலேம் ஆலயத்தை குறிக்கும் ஒத்த கருத்துச் சொற்கள். ஆண்டவரின் அழகை காணவேண்டும் என்பது அவரது பிரசன்னத்தை காணவேண்டும் என்பதைக் குறிக்கும். அழகு என்பதற்கு அருள் மற்றும் இனிமையைக் குறிக்கும் சொல் பாவிக்கப்பட்டுள்ளது (נֹעַם நோஆம், இனிமை)
இ. 7-10: இங்கே ஆசிரியரின் வேண்டுதல்கள் வியங்கோல் வாக்கியத்தில் ஆரம்பிக்கின்றது. கேட்டருளும், இரக்கம்கொள்ளும், பதிலளியும், மறைக்காதேயும், விலக்கிவிடாதேயும், தள்ளிவிடாதேயும், கைவிடாதிரும், என்ற வியங்கோள் வார்தைகள் ஆசிரியரின் ஏக்கத்தை காட்டுகிறன்றன. ஆனால் 10வது வசனத்தில் நம்பிக்கையோடு முடிக்கிறார்.
ஈ. 11-14: மீண்டும் ஏவல் வார்தைகளை மையமாக கொண்டுள்ளது. துன்பத்தில் இருந்தாலும் ஆண்டவரின் வழியைக் கற்பியும் என்று ஆசிரியர் பாடுவது அவருடைய நம்பிக்கைக்கு சிறந்த உதாரணம். 13வது வசனம் வாழ்வோரின் நாடு என்று கூறுவது இந்த உலகத்தையே முதலில் குறிக்கும் (אֶרֶץ חַיִּים). ஆண்டவருடைய ஆசிர்வாதங்கள் இந்த உலகத்திற்கும் உரியவையே. ஆண்டவருக்காக காத்திரு திடம்கொள் என்று ஆசிரியர் பாடுவது அழவரது ஆன்மாவிற்கல்ல கடவுளின் பிள்ளைகளாகிய நம் ஒவ்வொருவருக்கும். வ.14. நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு மன உறுதிகொள்;, உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு.
இரண்டாம் வாசகம்
பிலி 3,17-4,1:
17சகோதர சகோதரிகளே, நீங்கள் அனைவரும் என்னைப்போல் வாழுங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டிய முன்மாதிரியின்படி வாழ்பவர்களைப் பின்பற்றுங்கள். 18கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாய் நடப்போர் பலர் உள்ளனர். அவர்களைப் பற்றி மீண்டும் மீண்டும் உங்களிடம் கூறியுள்ளேன். இப்பொழுதும் கண்ணீரோடு சொல்கிறேன். 19அழிவே அவர்கள் முடிவு; வயிறே அவர்கள் தெய்வம்; மானக்கேடே அவர்கள் பெருமை; அவர்கள் எண்ணுவதெல்லாம் மண்ணுலகைச் சார்ந்தவை பற்றியே. 20நமக்கோ விண்ணகமே தாய்நாடு; அங்கிருந்துதான் மீட்பராம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வருவாரெனக் காத்திருக்கிறோம். 21அவர் தமது ஆற்றலால் தாழ்வுக்குரிய நம் உடலை மாட்சிக்குரிய தமது உடலின் சாயலாக உருமாற்றவும் அனைத்தையும் தமக்குப் பணியவைக்கவும் வல்லவர். 1ஆகவே என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, என் வாஞ்சைக்குரியவர்களே, நீங்களே என் மகிழ்ச்சி; நீங்களே, என் வெற்றி வாகை அன்பர்களே, ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள்.
பிலிப்பி நகரம் பல வகைகளில் உரோமையருக்கும் கிரேக்கருக்கும் மிக முக்கியமான நகரம். வெளியிலிருந்த சின்ன உரோமை என இதனை அழைத்தனர் (சில்லாலையை சின்ன உரோமை என அழைப்பது போல) காண்: தி.ப 16,12. உரோமையர் அனுபவித்த பல சுகபோகங்களை இந்நகரும் அனுபவித்தது. அலெக்ஸான்டரின் தந்தை பிலிப்புவின் பெயரைத்தான் இந்நகர் கொண்டிருந்தது. உரோமையர்களின் பல போர்களை இந்நகர் சந்தித்திருந்தது. இதுதான் திருத்தூதர் பவுலின் முதலாவது ஐரோப்பிய மறைத்தலம். இங்கு அவர் சீலாவோடும் திமோத்தேயுவோடும் பணியாற்றினார். இங்கே தான் லிதியா என்ற பெண் பவுலுக்கு பல உதவிகளைச் செய்தார். இங்கே பவுல் சிறைபடுத்தப்பட்டாலும், அவர் நிறுவிய தலத்திருச்சபை என்றும் அவருக்கு பிரமாணிக்கமாய் இருந்தது. பவுலுடைய திருச்சபைகளில் அவருக்கு பிடித்த தலத்திருச்சபையாக இதனைக் கொள்ளலாம். பிலிப்பியருக்கான திருமுகம் அவர் செசாரியாவில் சிறையில் இருந்தபோது எழுதினார் என பலர் கருதுகின்றனர். இன்றைய இரண்டாம் வாசகம் விண்ணக குடியுரிமையைப் பற்றி விவரிக்கின்றது. பவுல் உலக வாழ்க்கை தீயது என்று சொல்லவில்லை மாறாக உலக வாழ்வை அர்த்தமுள்ளதாகக் கேட்கிறார்.
வ.17. இந்த வசனத்தை, 'என்னுடைய முன்மாதிரிகையை பின்பற்றுகிறவர்களாய் இருங்கள்' என்றுதான் அர்த்தப்படுத்த வேண்டும். இங்கே எழுவாய் பொருள் பவுல் அல்ல இயேசு ஆண்டவர். இரண்டாவது பகுதியில் உதாரண நடத்தைக்கு தன்னோடு இருந்தவர்களையும் பவுல் உள்வாங்குகிறார்.
வ.18. கிறிஸ்துவின் சிலுவைக்கு எதிரானவர்கள் என்று பவுல் குறிப்பிடுவது, கிளர்ச்சி அல்லது பிரிவினை செய்பவர்களாக இருக்கலாம். இவர்கள் யூதர்கள், கிரேக்க-உரோமையர்கள் அல்லது கிறிஸ்தவர்களாக கூட இருக்கலாம். கண்ணீரோடு சொல்லுதல், அக்கால பவுலின் மன ரீதியான வேதனைகளைக் காட்டுகிறது. ஒருவேளை பவுல், இயேசு தன் மக்களை நினைத்து அழுததை பின்பற்றுகிறார் எனச் சொல்லலாம்.
வ.19. இவர்களின் செயல்களை விவரிக்கின்றார்: இதிலிருந்து எதோ உணவுச் சடங்குடன் சம்பந்தப்பட்டவர்களை பவுல் சாடுவதைப் போல தெரிகிறது. பிலிப்பு நகரில் இப்படியான பல சடங்குகள் அக்காலத்தில் பாவனையிலிருந்தன. சில யூத கிறிஸ்தவர்களும், திருமுழுக்கு பெற்றவர்கள் யூதச் சடங்குகளை பின்பற்ற வேண்டும் என்று குழப்பம் செய்தனர்.
வ.20-21: சடங்குகளுக்காக மகிழ்வாக இருப்பவர்களுக்கு எதிர் மக்களாக கிறிஸ்தவர்கள் விண்ணகத்தை தாய் நாடாக அமைக்கக் கேட்கிறார். தாய் நாடு என்ற கருத்துக்கு கிரேக்க மூல மொழியில் குடியுரிமை அல்லது பொநுநலவாயம் என்ற சொல்லே பாவிக்கப்பட்டுள்ளது (πολίτευμα). இந்தச் சொல்லின் ஊடாக பல கடமைகளையும் பல உரிமைகளையும் சொல்லுகிறார். மீட்பர் என்ற சொல்லை பவுல் இயேசுவிற்கு மிக அரிதாகவே பாவிப்பார் (σωτήρ சோதேர் மீட்பர்), இச் சொல் சீசருக்கு பாவிக்கப்பட்டது. சில தேவைகளுக்காக பவுல், இச்சொல்லை பாவித்து சீசரை அல்லது மனித தலைவர்களை விட உன்னதமானவர் என்கிறார். அழியக்கூடிய உடலை மீட்கக்கூடியவர் இயேசு ஒருவரே என்பது பவுலுடைய வாதம்.
வ.1: இந்த வசனம் பவுல் பிலிப்பிய திருச்சபையை எவ்வளவு அன்பு செய்தார் எனக் காட்டுகிறது. பவுல் பாவிக்கும் அன்பு சொற்கள்: என் சகோதர சகோதரிகளே, அன்பிற்குரியவர்களே, விரும்பப்பட்டவர்களே, எனது மகிழ்சியானவர்களே, என் முடியானவர்களே. மகிழ்ச்சி (χαρά காரா) என்பதுதான் பிலிப்பியர் கடிதத்தின் முக்கியமான செய்தி. பவுல் பிலிப்பியர்களை தனது முடி, வாகை (στέφανος ஸ்டெஃபானோஸ்) எனச் சொல்லி தன்னை ஒரு மெய்வல்லுனராக காட்டுகிறார். விசுவாச வாழ்வு ஒரு ஓட்டப் போட்டி என்பதும் பவுலுடைய ஒரு உதாரணம். ஆண்டவரின் அன்பில் நிலைத்திருங்கள் என்பதே பவுலுடைய பிலிப்பியருக்கான காதல் செய்தி.
நற்செய்தி
லூக் 9,28-36
28இவற்றையெல்லாம் சொல்லி ஏறக்குறைய எட்டுநாள்கள் ஆனபிறகு இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார். 29அவர் வேண்டிக்கொண்டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவருடைய ஆடையும் வெண்மையாய் மின்னியது. 30மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக் கொண்டிருந்தனர். 31மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறைவேறவிருந்த அவருடைய இறப்பைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
32பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சியோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள். 33அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, 'ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்' என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார்.
34இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைக் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார்கள். 35அந்த மேகத்தினின்று, 'இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்' என்று ஒரு குரல் ஒலித்தது. 36அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.
இந்த பகுதி லூக்கா நற்செய்தியின் ஆழத்திற்கு இன்னொரு உதாரணம். 4-8 அதிகாரங்களில் பல போதனைகள் புதுமைகளை செய்த ஆண்டவர் தன்னுடைய எருசலேம் பயணத்திற்கு ஆயத்தம் செய்கிறார். லூக்கா இங்கே பதிவு செய்யும் ஆண்டவருடைய திரு உருமாற்றக் காட்சி, முதலாம் வாசகத்திலே ஆண்டவர் ஆபிரகாமுக்கு காட்சி கொடுத்ததை பல வழிகளில் ஒத்திருக்கிறது. அத்தோடு முதல் ஏற்பாட்டில் சீனாய் மற்றும் ஒரேபு மலைகளில் ஆண்டவர் மோசே எலியாவுக்கு காட்சிகளை கொடுத்ததையும் நினைவூட்டுகின்றது. லூக்கா, மாற்கு நற்செய்தியில் இருந்து முக்கியமான மூலங்களைப் பெற்றார் எனினும் இன்னும் பல ஆதாரங்களை இங்கே சேர்கிறார். ஒப்பிட்டு பார்க்க (மத் 17,1-9: மாற் 9,2-10, லூக் 9,28-36). லூக்காவினுடைய இந்த பதிவு, இயேசுவின் கிறிஸ்தியலிலும், மெசியா-நிலையிலும் மிக முக்கியமான படிப்பினைகளைக் தருகிறது. இதனை ஆறு பகுதிகளாக பிரித்து அவதானிப்போம்.
௧. இயேசு மலைக்குச் செல்லுதல், வ.28:
லூக்கா எட்டு நாட்கள் என்று இன்னொரு வடிவத்ததை பதிவு செய்கிறார். அத்தோடு மற்றைய நற்செய்திகளை விட சீடர்களின் பெயர்களின் வரிசையிலும் மாற்றம் செய்கிறார். இயேசு செபிப்பதற்கே மலைமீது ஏறினார் என்று சொல்லி இன்னொரு செய்தியையும் இங்கே சேர்க்கிறார். இந்த மலையினுடைய இட அமைவு சரியாக சொல்லப்படவில்லை. சிலர் எர்மோன் எனவும், சிலர் தார்போர் எனவும் எண்ணுகின்றனர். இந்த மலை அனுபவம், மோசே எலியாவின் சீனாய், ஒரேபு மலை அனுபவங்களை ஒத்திருக்கிறது.
௨. திரு உருமாற்றம், வ.29:
முக மாற்றம், உடைகளின் வெண்மை இயேசுவை கடவுளாக காட்ட பயன்படலாம். மோசே சீனாய் மலையில் கடவுளைக் திரிசித்த போது அவரின் முகம் மின்னியது. ஆண்டவரின் விண்ணேற்றத்தின் பின் தோன்றிய இரண்டு மனிதர்கள் வெண் ஆடைகளிலேயே இருந்தனர் (தி.ப 1,10).
௩. மோசே எலியாவின் தோற்றங்கள், வவ.30-33அ:
இந்த இரண்டு தலைவர்களின் தோற்றம் பல எண்ணங்களை முன்வைக்கிறது. சிலர் மோசே-சட்டம், எலியா-இறைவாக்கு இயேசுவில் நிறைவடைவதாக இதனை காண்பர். இதற்கு அதிகமான வாய்ப்புக்கள் உள்ளது. பல வேளைகளில் இது லூக்காவின் நோக்கமாக இருக்கிறது. இவர்கள் இயேசுவின் இறப்பைப் பற்றி பேசுகிறார்கள். கிரேக்க மூலம் விடுதலைப் பயணத்தைப் பற்றி பேசினார்கள் (ἔξοδος எட்ஸோடொஸ்) என்கிறது. லூக்கா ஆண்டவரின் மரணத்தை உண்மையான விடுதலைப் பயணமாக காண்கிறார் போலும். அதே. சீடர்கள் தூக்க மயக்கமாய் இருக்கிறார்கள் ஆனால் மூவரையும் காண்கின்றனர். ஆபிரகாமும் தூக்க மயக்கத்தில் இருந்தது நினைவுக்கு வருகிறது. பல முக்கியமான வேளைகளில் இவர்கள் தூக்க முகமாகவே இருக்கின்றனர். (லூக் 22,46)
௪. பேதுருவின் பதில், வ.33ஆ:
பேதுருவின் கூடாரம் அமைக்கும் ஆலோசனை, பாலைவன சந்திப்புக் கூடாரத்தை
நினைவூட்டலாம். கிரேக்க மூலத்தில் அவர் ஆண்டவரை (κύριος கூரியோஸ்), தலைவரே (ἐπιστάτης எபிஸ்டாடேஸ்) என்று அழைக்கிறார். இன்னும் மயக்கத்தில்தான் இருக்கிறார் போல.
௫. மேகத்திலிருந்து குரல், வவ.34-35:
மேகம் கடவுளின் இருப்பை காட்டும் மிக முக்கியமான உருவகம். விடுதலைப் பயணத்திலும், தானியேல் நூலிலும் இதனை நன்கு அவதானிக்கலாம். திரு முழுக்கின் போது கேட்டதனைப்போல இன்னொரு குரல் இயேசுவை கடவுளின் அன்பு மகனாக விளக்கம் கொடுக்கிறது. லூக்கா எசாயா 42,1ஐ நினைவூட்டுகிறார். இயேசு தெரிவு செய்யப்பட்ட மகனாகக் மோசேயையும் எலியாவையும் பின்னுக்கு தள்ளுகிறார்.
௬. சீடர்களின் செயல், வவ.36: மாற்கு நற்செய்தியை போலல்லாது, இங்கே இன்னொரு விதமான அமைதி காக்கிறார்கள். ஆண்டவரின் உயிர்ப்புக்குப்பின் பின்னர் நிறைவாக அறிக்கையிடுவார்கள்.
ஆண்டவரே! இயேசுவே! இரக்கமில்லாத சட்டங்களையும்,
இறை இல்லாத இறைவாக்குகளையும் விடுத்து,
உம்மை பற்றிக்கொள்ள வரம் தாரும். ஆமென்.
மி. ஜெகன் குமார் அமதி
உரோமை
செவ்வாய், 16 பிப்ரவரி, 2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக