வியாழன், 9 பிப்ரவரி, 2017

ஆண்டின் பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு (அ): Sixth Sunday in Ordinary Times.



ஆண்டின் பொதுக்காலம் ஆறாம் ஞாயிறு (அ)
12,02,2017

முதல் வாசகம்: சீராக் 15,16-21
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 118
இரண்டாம் வாசகம்: 1கொரிந்தியர் 2,6-10
நற்செய்தி: மத்தேயு 5,17-37

சீராக் 15,16-20
விருப்புரிமை
11'ஆண்டவரே என் வீழ்ச்சிக்குக் காரணம்' எனச் சொல்லாதே தாம் வெறுப்பதை அவர் செய்வதில்லை. 12'அவரே என்னை நெறிபிறழச் செய்தார்' எனக் கூறாதே பாவிகள் அவருக்குத் தேவையில்லை. 13ஆண்டவர் அருவருப்புக்குரிய அனைத்தையும் வெறுக்கிறார்; அவருக்கு அஞ்சிநடப்போர் அவற்றை விரும்புவதில்லை. 14அவரே தொடக்கத்தில் மனிதரை உண்டாக்கினார்; தங்கள் விருப்புரிமையின்படி செயல்பட அவர்களை விட்டுவிட்டார். 15நீ விரும்பினால் கட்டளைகளைக் கடைப்பிடி; பற்றுறுதியுடன் நடப்பது உனது விருப்பத்தைப் பொறுத்தது. 16உனக்குமுன் நீரையும் நெருப்பையும் அவர் வைத்துள்ளார்; உன் கையை நீட்டி உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள். 17மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன. எதை அவர்கள் விரும்புகிறார்களோ அதுவே அவர்களுக்குக் கொடுக்கப்படும். 18ஆண்டவரின் ஞானம் பெரிது. அவர் ஆற்றல் மிக்கவர்; அனைத்தையும் அவர் காண்கிறார். 19ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர் மீது அவரது பார்வை இருக்கும்; மனிதரின் செயல்கள் அனைத்தையும் அவர் அறிவார். 20இறைப்பற்றின்றி இருக்க யாருக்கும் ஆண்டவர் கட்டளையிட்டதில்லை பாவம் செய்ய எவருக்கும் அவர் அனுமதி கொடுத்ததும் இல்லை.

சீராக்கின் ஞானம் கிரேக்க மொழியில் கிடைக்கப்பட்ட ஞானநூல்களில் ஒன்று. இந்த புத்தகம் முதலில் சீராக் என்ற மெய்யியல் வாதியால் 180 (கி.மு) ஆண்டளவில் ஏழுதப்பட்டது என்று, இன்று பலரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால் 19ம் நூற்றாண்டு வரை இந்த எபிரேய நூல் கிடைக்கப்படவில்லை. சீராக்கின் பேரனாகிய இயேசு என்பவர், இந்த நூலை 130 (கி.மு) கிரேக்க மொழியில், மொழி பெயர்த்துள்ளார். செப்துவாஜின்ட் கிரேக்க விவிலியத்தில் இந்த நூல் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. இது எபிரேய மொழியில் எழுதப்படாததன் காரணமாகவும், வேறுபல மொழியியல் காரணத்திற்காகவும் இந்த நூலை எபிரேயர்களும், சீர்திருத்த கிறிஸ்தவர்களும் ஏற்றுக்கொள்வதில்லை. உரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும், பாரம்பரிய கிறிஸ்தவர்களும், தூய எரோமின் காலம் தொடங்கி இந்த நூலை தங்கள் விவிலியத்தில் இணைத்திருமுறைகளுள் ஒன்றாக ஏற்றுக்கொள்கின்றனர். சீராக் நூல் முதலில் எழுதப்பட்ட போது கிரேக்கர்களும் அவர்களது ஆதிக்கமும், பாலஸ்தீனாவிற்குள் வந்திருக்கவில்லை, இருப்பினும் சீராக் அந்த ஆபத்துக்களை நன்கு முன்னுணர்ந்து கொண்டார் என்பதை இந்த நூலில் காணலாம். சீராக்கின் நூலை, எபிரேயம் பென் சீராக் (சீராக்கின் மகன்) בּן סירא என்றும், இலத்தீன் எக்கிலிசியாஸ்டிகுஸ் Ecclesiasticus (திருச்சபை புத்தகம்) என்றும் பெயரிட்டு அழைக்கின்றன. 
விதி மற்றும் பரம்பரை தண்டனை போன்ற சிந்தனைகளை, அவை எபிரேய நம்பிக்கைகள் 
இல்லை என்பதை அழகாகவும் ஆழமாகவும் இந்த நூல் விளக்குகின்றது. ஒவ்வொருவருக்கும் முழுச் சுதந்திரம் தரப்பட்டிருக்கிறது, இதனால் ஆசீருக்கும், அழிவிற்கும் அவரவர்தான் பொறுப்பு என்று இந்த புத்தகம் விளக்குகின்றது. முதல் ஏற்பாட்டில் சில புத்தகங்கள், தந்தையின் குற்றத்திற்கு பிள்ளைகள் தண்டிக்கப்படுவர் என்ற படிப்பினையை கொண்டிருக்கிறபோது (✼காண்க வி.ப 20,5), பின்நாட்களில் எழுதப்பட்ட புத்தகங்கள் பல இதற்கு மாறாக, ஒருவருடைய பாவத்திற்கு அவரவர்தான் தண்டிக்கப்படுவார் என்பதைக் காட்டுகின்றன (✼✼காண்க எசேக்கியேல் 18,2-4).

(✼5நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக்கொள்ளமாட்டேன்; என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் தண்டித்துத் தீர்ப்பேன்.).
(✼✼2'புளித்த திராட்சைப் பழங்களைப் பெற்றோர் தின்ன, பிள்ளைகளின் பல் கூசிற்றாம்' என்னும் பழமொழியை இஸ்ரயேல் நாட்டைக் குறித்து நீங்கள் வழங்குவதன் பொருள் என்ன? 3என்மேல் ஆணை! என்கிறார் தலைவராகிய ஆண்டவர். இப்பழமொழி இஸ்ரயேலில் உங்களிடையே வழங்கப்படாது. 4உயிர் அனைத்தும் எனக்கே சொந்தம். பெற்றோரின் உயிர் என்னுடையது; பிள்ளைகளின் உயிரும் என்னுடையதே. பாவம் செய்யும் உயிரே சாகும்.).

வ.11: ஒருவருடைய வீழ்ச்சிக்கு யார் காரணம்? கடவுள் காரணம் என்றால், அவர் பொல்லாதவரா? கடவுள் இல்லையென்றால், யார் அவர் கடவுளைவிட பெரியவரா? இல்லாவிடில் கடவுள் ஏன் ஒருவரின் விழுதலிலிருந்து அந்த நபரைக் காக்க வில்லை? ஆசிரியர் இந்த கேள்வியை வேறு கோணத்தில் பார்க்கிறார், அதாவது யாரும் தன்னுடைய வீழ்ச்சியை விரும்ப மாட்டார், அப்படியிருக்க கடவுள் எப்படி அதனை விரும்புவார் என்பது இவரது விடையான கேள்வியாகும். 

வ.12: நெறிதவறி வாழ்கிறவர் கடவுளுக்கு தேவையில்லாதவர்கள் (ἀνδρὸς ἁμαρτωλοῦ)
இதனால் இவர்களில் நெறி தவறுதலான வாழ்விற்கு அவர்கள்தான் காரணம் என்கிறார். ஆசிரியர் காலத்தில், அந்த மக்கள் தங்களுடைய அனைத்து செயற்பாடுகளுக்கும் கடவுளை காரணம் காட்டியிருக்கலாம், அல்லது தங்கள் பிழைகளை ஆண்டவரின் கைகளில் விட்டுவிட்டு தப்பிக்க பார்த்திருக்கலாம். இதனையே மறுக்கிறார் ஆசிரியர். 

வ.13: ஆண்டவர் வெறுக்கிற அருவருப்புக்குரிய செயற்பாடுகள் எவை என்பதை ஆசிரியர் கூறாமல் விடுகிறார். இது சீராக்கின் கால வாசகர்களுக்கு நன்கு தெரிந்திருக்கலாம். இவை அனைத்து பாவங்களையும், அல்லது இஸ்ராயேல் மக்கள் வெறுத்த செயற்பாடுகளை சொல்லலாம். அத்தோடு ஆண்டவர் அவற்றை வெறுப்பது மட்டுமல்ல, ஆண்டவருக்கு அஞ்சிநடப்பவர்கள் அவற்றை விரும்புவதில்லை என்று, ஆண்டவருக்கு அஞ்சுபவர்களுக்கு புதிய வரைவிலக்கணத்தையும் கொடுக்கிறார். ஆண்டவருக்கு அஞ்சுபவர்கள் (τοῖς φοβουμένοις) என்பது, முதல் ஏற்பாட்டில் நீதிமான்களை அல்லது சட்டங்களை கடைப்பிடிப்பவர்களைக் குறிக்கும். 

வ.14: இந்த வரி மனிதரின் படைப்பு வரலாற்றை நினைவுபடுத்தும் அதே வேளை, மனிதருடைய சுதந்திரத்தையும் சுட்டிக்காட்டுகிறது. ஆண்டவர் தொடக்கத்தில் மனித இனத்தை உருவாக்கினார் என்ற எபிரேய நம்பிக்கை மிக முக்கியமானது, இது மனிதர் வேறெவராலும் உண்டாக்கப்படவில்லை என்பதை காட்டுகிறது. மனிதரின் படைப்பிற்கு கிரேக்க இலக்கியங்கள் பல காரணங்களையும் பல சிந்தனைகளையும் முன்வைத்தன, அவற்றை தவிர்க்கிறார் ஆசிரியர். அத்தோடு மனிதர்கள் விதிக்கு அல்லது கர்மத்திற்கு கட்டுப்பட்டவர்கள் அல்ல, அவர்கள் தமது சொந்த விருப்புரிமைக்கே கட்டுபட்டவர்கள் என்ற ஆழமான சிந்தனையையும் முன்வைக்கிறார். இது முழுக்க முழுக்க எபிரேய சிந்தனை. பல மத்திய கிழக்கு மற்றும் கிரேக்க சிந்தனைகள் மனிதனின் செயற்பாடுகளுக்கு பல புற காரணிகளை காரணம் காட்டியது, இதனால் பல வேளைகளில் மனிதர் தமது தவறுகளிலிருந்து தப்பிக்கக்கூடிய வாய்பிருந்தது. இவரின் சிந்தனைப்படி மனிதர் தம் பாவ வாழ்க்கைக்கு தம்மைத் தவிர மற்றவரை அல்லது மற்றவற்றை காரணம் காட்ட முடியாது. இந்த சிந்தனை பிற்காலத்தில் புதிய ஏற்பாட்டில் இன்னும் ஆழமாக ஆரயப்பட்டது. 

வ.15: ஆண்வரின் கட்டளையை கடைப்பிடிப்பது அல்லது விட்டுவிடுவது ஒருவரின் விருப்பத்தைப் பொறுத்தது அல்லது அவரவரின் தெரிவைப் பொறுத்தது. ஆண்டவர், அடிமையான நீதிமான்களை அல்ல சுதந்திரமான நீதிமான்களையே விரும்புகிறார், என்பதை இந்த வரி காட்டுகிறது. இந்த வரி இணைச்சட்ட நூலில் மோசே வாழ்வையும் சாவையும் தெரிவுகளாக முன்வைப்பதை நினைவூட்டுகிறது (காண்க இ.ச 30,15-19). பற்றுருதியுடன் நடப்பது ஒவ்வொருவரின் தெரிவு என்பது எவ்வளவு ஆழமான இறையியல் என்பதை இங்கே காணலாம். பற்றுருதி என்பது 'விருப்பமான நம்பிக்கை' என கிரேக்க விவிலியத்தில் காட்டப்பட்டுள்ளது (πίστιν εὐδοκίας).  

வ.16: நீரும் நெருப்பும் மிக முக்கியமான உருவகங்கள். ஒன்று இதத்தையம், இன்னொன்று வெப்பத்தையும் காட்டுகின்றன. பல இடங்களில் இந்த இரண்டும் ஒரே அர்த்தத்திலும் பாவிக்கப்பட்டுள்ளன. பலிப்பொருட்களை அர்ப்பணம் செய்யவும் இந்த இரண்டு பௌதீகப் பொருட்கள் பாவிக்கப்பட்டன. புதிய ஏற்பாட்டில் இவை தூய ஆவியை குறிக்கும் அடையாளங்களாகவும் பாவிக்கப்பட்டுள்ளன. சீராக் இந்த வரியில், இதனை இரண்டு எதிர் கருத்து பதங்களாக ஒப்பிடுகிறார். நீர் பாதுகாப்பான உருவகமாகவும் அல்லது ஆசீருக்கான உருவகமாகவும், நெருப்பு பாதுகாப்பற்ற உருவகமாகவும் அல்லது தண்டணைக்கான உருவகமாகவும் பாவிக்கப்பட்டுள்ளன. 

வ.17: மேற்குறிப்பிட்ட வசனத்தின் பொருளையே இந்த வரியும் உணர்த்துகின்றது. வாழ்விற்கும் சாவிற்கும் பொறுப்பாளிகள் மனிதர்களே என்பது இங்கே புலப்படுகிறது (ἡ ζωὴ καὶ ὁ θάνατος). வாழ்வையும் சாவையும் கடவுள் மட்டும்தான், அதுவும் மனிதரின் விருப்பம் இல்லாமல் தீர்மாணிக்கிறார் என்ற நம்பிக்கை பிழையானது என்பது சீராக்கின் மெய்யறிவு. 

வ.18: ஆண்டவரின் ஞானத்தை அளவிட முயல்கின்றார் ஆசிரியர். கடவுள் ஆற்றல் மிக்கவராக இருப்பதாலும் அத்தோடு அவர் அனைத்தையும் காண்கின்ற படியினாலும் அவருடைய ஞானம் உலக ஞானத்தைவிட பெரிதாக இருக்கிறது என்பது இவர் வாதம். செப்துவாஜின்ட் கடவுளுடைய ஞானத்தை 'அதிகம்' (πολλὴ ἡ σοφία τοῦ κυρίου) என்றே கூறுகின்றது. இதனுடன் ஒப்பிடும் போது மனிதர்களுடைய ஞானம் குறைவு என்பது புலப்படுகிறது.

வ.19: ஆண்டவரின் பார்வை என்பது ஆண்டவரின் கரிசனையும் மற்றும் அவரின் ஆசீரையும் குறிக்கும் (οἱ ὀφθαλμοὶ). பார்வை என்பது, செப்துவாஜின்ட் கிரேக்கத்தில் கண்களை குறிக்கிறது. தமிழ் இலக்கியத்திலும், கண்கள் பார்வையை குறிக்க பயன்படுத்தப்படுவது உண்டு. அத்தோடு மனிதரின் செயல்கள் அனைத்தையும் கடவுள் அறிவார் என்பதும் விவிலியத்தின் முக்கியமான ஒரு மெய்யறிவு. 

வ.20: இறைபற்றில்லாமல் இருப்பதும், பாவம் செய்வதும் ஒத்த கருத்துச் வசனங்கள். இவற்றை செய்வது மனிதரின் தெரிவாக இருந்தாலும், அதனை கடவுள் விரும்பவில்லை என்கிறார் ஆசிரியர். அதாவது கடவுள் மனிதர் நன்மை செய்ய வேண்டும் என்பதையே விரும்புகிறார் இருப்பினும் அவர் மனிதரை கட்டுபடுத்துபவர் அல்ல என்பதும் புலப்படுகிறது. அனுமதி கொடுத்தல் வேறு, கட்டுப்படுத்தல் வேறு என்பது இங்கே ஒப்பிடப்படவேண்டும். 

திருப்பாடல் 119
1மாசற்ற வழியில் நடப்போர் பேறுபெற்றோர்; ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்.2அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்; முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர். 

4ஆண்டவரே! நீர் உம் நியமங்களைத் தந்தீர்; அவற்றை நாங்கள் முழுமையாய்க் கடைப்பிடிக்க வேண்டும் என்றீர். 
5உம்முடைய விதிமுறைகளை நான் கடைப்பிடிக்க, என் நடத்தை உறுதியுள்ளதாய் இருந்தால் எவ்வளவோ நலம்!

17உம் அடியானுக்கு நன்மை செய்யும்; அப்பொழுது, நான் உம் சொற்களைக் கடைப்பிடித்து வாழ்வேன். 
18உம் திருச்சட்டத்தில் வியப்பானவற்றை நான் கண்டுணருமாறு என் கண்களைத் திறந்தருளும்.

33ஆண்டவரே! உம் விதிமுறைகள் காட்டும் வழியை எனக்குக் கற்றுத்தாரும்; நான் அவற்றை இறுதிவரை கடைப்பிடிப்பேன். 
34உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வுதாரும். அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன். 

விவிலியத்தின் மிக நீண்ட திருப்பாடல்களில், 119 வது பாடல்தான் மிக மிக நீளமான திருப்பாடல். இந்த திருப்பாடல் 176 வரிகளைக் கொண்டமைந்துள்ளது. இந்த திருப்பாடல் சட்டம் (מִשְׁפָּט) மற்றும் கடவுளின் நியமங்கள் (תּוֹרָה) என்ற தலைப்பை மையமாகக் கொண்டுள்ளது. இந்த திருப்பாடலுக்கு பல விசேட அம்சங்கள் உள்ளன:

அ. இது எபிரேய அகர வரிசையில் எழுதப்பட்ட மிக ஆச்சரியமான எபிரேய பாடல்.

ஆ. இதன் காலத்தை கணிப்பது மிக கடினம் என்பதால், இதனை எழுத எத்தனை சுருள்களை பயன்படுத்தினர் என்பதும் ஆச்சரியமாக உள்ளது.

இ. இறைவார்த்தை என்னும் சொல், ஒவ்வொரு வரியிலும் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவே வருகிறது.

ஈ. இந்த திருப்பாடலின் மையக் கருத்து திருச்சட்டத்தைப் பற்றியதாகும். திருச்சட்டத்தை குறிக்கின்ற முக்கியமான சொற்களான மிஷ்பாத் (מִשְׁפָּט நெறிமுறை), எதுத் (עֵדוּת சாட்சியம்) போன்றவை, சரியாக தீர்மானம் செய்தல் மற்றும் சாட்சியம் சொல்லுதல் என்ற அர்த்தத்தில் பாவிக்கப்பட்டுள்ளன. 

உ. பாறையில் எழுத்துக்கள் நித்தியத்திற்கும் பொறிக்கப்படுவது போல, திருச் சட்டங்கள் பொறிக்கப்பட வேண்டும் என்ற அர்த்தத்தை ஹொக் (חֹק பொறித்துவை) என்ற சொல் காட்டுகிறது. 

ஊ. இறைவார்த்தையின் அதிகாரமும் அன்பும்தான், திருச்சட்டம் என்பது மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. இதற்கு சட்டத்தை குறிக்கும் முக்கியமான சொல்லான தோறாஹ் (תּוֹרָה சட்டம், வழிமுறை, நெறி) பாவிக்கப்பட்டுள்ளது. 

எ. இறைவார்த்தை நாளாந்த வாழ்க்கை முறைகளில் கவனம் செலுத்துகிறது என்பதை குறிக்க மிட்ஸ்வாஹ் (מִצְוָה படிப்பினைகள்) என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இந்த சொல் 'சொல்லப்படுவதை செய்யவும்', என்ற அர்த்தத்தை தாங்கியுள்ளது. 
இஸ்ராயேல் மக்களுக்கு இந்தத் திருப்பாடல் ஒரு முக்கியமான, அத்தோடு ஒரு பொக்கிசமான செபம் போல வழங்கி வருகிறது. வழிதவறிய இஸ்ராயேலருக்கு இந்த திருப்பாடல், திருச்சட்டத்தின் மேன்மையையும், திருச்சட்டத்தின் நிறைவையும், அதன் ஆன்மீகத்தையும், அதன் புனிதத்துவத்தையும், அந்த சட்டங்கள் ஏன் பின்பற்றப்படவேண்டும் என்ற காரணங்களையும் குறிப்பனவாக அமைகின்றது. 
அத்தோடு எபிரேய அரிச்சுவடியின் 22 எழுத்துக்களுக்கும், ஓர் எழுத்திற்கு எட்டு வரிகள் வீதமாக, நேர்த்தியாகவும் தொடர்ச்சியாகவும், கருத்து சிதையாத வகையில் இந்த திருப்பாடலின் 176 வரிகள் அமைக்கப்பட்டுள்ளன (22x8= 176). இது எபிரேய கவிநடையின் வல்லமையைக் காட்டுகிறது. ஒவ்வொரு எட்டு வரி குழுவும் ஒரு முக்கியமான கருப்பொருளை மையமாகக் கொண்டே அமைந்துள்ளது. தமிழ் விவிலியம் அவற்றை தனித் தனியாக ஒவ்வொரு தலைப்பின் கீழுமாக பிரித்து காட்டுகிறது, ஆனால் எபிரேய விவிலியத்தில் இப்படியாக பிரிக்கப்படவில்லை. 

வவ.1-8 (א அலெப் - உச்சரிப்பு இல்லை): ஆண்டவரின் திருச்சட்டத்தின் பேறு
வவ.9-16 (בּ பேத் - பே): திருச்சட்டத்தின் படி நடத்தல்

வவ.17-24 (ג கிமெல் - கி): திருச்சட்டம் தரும் இன்பம்
வவ.25-32 (ד டலெத் - த): திருச்சட்டத்தின்படி நடக்க உறுதி கொள்ளல்
வவ.33-40 (ה ஹெ - ஹ): உள்ளார்ந்த புதுபித்தல், வேண்டல்
வவ.41-48 (ו வவ் - வ): திருச்சட்டத்தின் மீது நம்பிக்கை, நிலையான முன்னேற்றம்
வவ.49-56 (ז ட்செயின் - ட்ஸ்): இறைவார்த்தையில் நம்பிக்கை வைப்போர்
வவ.57-64 (ח ஹெத் - ஹெ): திருச்சட்டத்தின் மீது ஆர்வம், வாழ்க்கையின் நெறி
வவ.65-72 (ט தெத் - தெ): திருச்சட்டத்தின் பயன், ஆண்டவரின் நெறியில் பயிற்சி
வவ.73-80 (י யோத் - ய): திருச்சட்டத்தின் ஒழுங்குமுறை, துன்பம் சாட்சியமாக
வவ.81-88 (כּ காப் - க): விடுதலைக்கு மன்றாட்டு
வவ.89-96 (ל லமெத் - ல): திருச்சட்டத்தில் நம்பிக்கை, முடிவில்லாத வார்த்தை 
வவ.97-104 (מ மெம் - ம): திருச்சட்டத்தின் மீது அன்பு, மகிழ்ச்சி தரும் வார்த்தை
வவ.105-112 (נ நுன் - ந): திருச்சட்டத்தின் ஒளி, நடைமுறை வார்த்தை
வவ.113-120 (ס சமெக் - ச): திருச்சட்டம் தரும் பாதுகாப்பு, சமரசம் அற்ற சிந்தனை
வவ.121-128 (ע அயின் - உச்சரிப்பு இல்லை): திருச்சட்டத்தின் படி நடத்தல், ஆபத்தில் திட்டம்
வவ.129-136 (פּ பேஹ் - ப): திருச்சட்டதில் ஆவல், இரட்டை இழை ஒளி
வவ.137-144 (צ ட்சாதே - ட்ச): திருச்சட்டத்தின் ஒழுங்கு, நேர்மையான கடவுளும் வார்த்தையும்
வவ.145-152 (ק கொப் - க): விடுதலைக்கு மன்றாட்டு, உணரப்பட்ட உடனிருப்பு
வவ.153-160 (ר றெஷ் - ற): உதவிக்காக மன்றாட்டு, மூன்று நம்பக்கூடிய காரணிகள்
வவ.161-168 (שׂ சின் - ச, שׁ ஷின் - ஷ): திருச்சட்டத்தின் மீது பேரன்பு, பாதுகாக்கப்படவேண்டிய வார்த்தை
வவ.169-176 (תּ தௌ - த): உதவிக்கு மன்றாட்டு, தவறினாலும் கீழ்படிவுள்ள தன்மை

வவ. 1-2: இந்த வரிகள் இந்த திருப்பாடலின் ஆரம்ப வரிகளாக நின்று இந்த திருப்பாடலின் செய்தியை அறிமுகம் செய்கின்றன. இவை எபிரேய முதல் எழுத்தான א அலெப் குழுவிலிருந்து எடு;க்கப்பட்டுள்ளன. பேறு பெற்றவர்கள் என்பவர், நீதிமான்களைக் குறிக்கும் (אַשְׁרֵי அஷ்ரே) ஆவர். இவர்கள் திருச்சட்டத்தை மதித்து நடப்பவர்கள் (הַהֹלְכִ֗ים) அத்தோடு கடவுளை தேடுவோர் (יִדְרְשֽׁוּהוּ) என அடையாளப் படுத்தப்படுகின்றனர். 

வவ. 4-5: ஆண்டவர்தான் நியமங்களை தந்ததாகவும், அவற்றை மக்கள் கடைப்பிடிக்க அவர் விரும்புவதாகவும் ஆசிரியர் கடவுளையும், சட்டங்களையும் அறிமுகம் செய்கிறார். அத்தோடு 
இவற்றைச் செய்தால் அது எத்துணை நலம் என தனக்கே வியக்கிறார். ஒருவருக்கு நலம் என்பது திருச்சட்டத்தை கடைப்பிடித்தலே என்பது இவர் நம்பிக்கை.

வவ. 17-18: இந்த வரிகள் எபிரேயத்தின் மூன்றாம் எழுத்தான ג கிமெல் குழுவிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. இந்த பகுதி திருச்சட்டம் தரும் இன்பத்தை விளக்குகின்றது. திருச்சட்டத்திற்கு கீழ்படிதலே நன்மையாகும் என்கிறார் ஆசிரியர். இவர் தான் நன்மையடைய திருச்சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும் என நம்புகிறார். அத்தோடு திருச்சட்டம் வியப்பானது அதனைக் காண கண்கள் திறக்கப்பட வேண்டும் என்கிறார். 

வவ. 33-34: இந்த வரிகள் எபிரேயத்தின் ஐந்தாம் எழுத்தான ה ஹெ குழுவிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த வரிகள் நுண்ணறிவின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன. திருச்சட்டத்தை கடைப்பிடிக்க நுண்ணறிவு (בִּינָה பினாஹ்) மிகவும் தேவையானது அதனை கடவுள்தான் தர வேண்டும் என்பது ஆசிரியரின் வேண்டுதல். 

1கொரிந்தியர் 2,6-10
6எனினும் முதிர்ச்சி பெற்றவர்களோடு நாங்கள் ஞானத்தைப்பற்றிப் பேசுகிறோம். ஆனால் இது உலக ஞானம் அல்ல் உலகத் தலைவர்களின் ஞானமும் அல்ல. அவர்கள் அழிவுக்குரியவர்கள். 7வெளிப்படுத்தப்படாமல் மறைபொருளாய் இருக்கும் இறை ஞானத்தைப்பற்றியே நாங்கள் பேசுகிறோம். அது நாம் மேன்மை பெற வேண்டும் என்னும் நோக்குடன் உலகம் தோன்றும் முன்பே கடவுளின் திட்டத்தில் இருந்தது. 8இவ்வுலகத் தலைவர்கள் எவரும் அதை அறிந்து கொள்ளவில்லை. அறிந்திருந்தால், அவர்கள் மாட்சிக்குரிய ஆண்டவரைச் சிலுவையில் அறைந்திருக்க மாட்டார்கள். 9ஆனால் மறைநூலில் எழுதியுள்ளவாறு, 'தம்மிடம் அன்பு கொள்ளுகிறவர்களுக்கென்று கடவுள் ஏற்பாடு செய்தவை கண்ணுக்குப் புலப்படவில்லை; செவிக்கு எட்டவில்லை; மனித உள்ளமும் அதை அறியவில்லை.'
10இதைக் கடவுள் தூய ஆவியாரின் வழியாக நமக்கு வெளிப்படுத்தினார். தூய ஆவியாரே அனைத்தையும் துருவி ஆய்கிறார்; கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும் அறிகிறார். 

கடந்த வாரத்தின் தொடக்கமாக இந்த வாரமும், கொரிந்தியர் முதலாவது திருமுகத்திலிருந்து வாசிக்கின்றோம். திருச்சபையில் பிளவுகள் சகித்துக்கொள்ள முடியாதவை, அத்தோடு அவை கிறிஸ்தவத்திற்கே எதிரானவை என்பதையும் முதாலவது அதிகாரம் அழகாகக் காட்டுகிறது. அத்தோடு மனிதர் பற்றிக்கொள்ள வேண்டியது உலக ஞானத்தை அல்ல, மாறாக இறைஞானத்தையே என்றும் அது காட்டுகிறது. இந்த இரண்டாவது அதிகாரம், கடவுளின் ஞானம் வேறொன்றுமில்லை அது சிலுவையின் ஞானமே என அழகாகவும், ஆழமாகவும் காட்டுகிறது. சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தியை விளக்கிய பவுல் இந்த (வவ.6-10) வரிகளில் தூய ஆவியும் வெளிப்பாடும் என்ற தலைப்பில் எழுதுகிறார். ஆளுகின்ற அதிகார மிக்கவர்களின் ஞானங்கள் கவர்ச்சியானதாகவும், முதலாளித்துவமானதாகவும் இருந்த படியால் அதிகமானவர்கள் அதனையே விரும்பினர். இதற்கு எதிராக சிந்தித்த கிறிஸ்தவர்கள் கூட ஒரு கட்டத்தில் இந்த உலக சிந்தனையுடன் சேர்ந்து விட முயன்றனர். பவுல் இங்கே சாடுகின்ற உலக ஞானம் என்பது யாரைப் பற்றியது என்பது அவ்வளவு தெளிவாக இல்லை. இது ஒரு வேளை அரிஸ்டோட்டிஸ், சோக்கிரடீஸ், பிளேட்டோ போன்ற கிரேக்க மெய்யியல் வாதிகளாக இருக்கலாம் அல்லது, புதிதாக முளைத்த கிறிஸ்தவ மற்றும் யூதமத பிரிவினை தலைமைத்துவங்களாகவும் 
இருக்கலாம். ஒரு வேளை உரோமைய தத்துவங்களாகவும் கூட இது இருக்கலாம். எதுவானாலும், பவுல் தான் போதித்த கிறிஸ்துவின் நற்செய்திக்கு எதிரானவற்றை உலக ஞானமாகவும், அழியக்கூடியதாகவுமே காண்கிறார். 

வ.6: முதிர்ச்சி பெற்றவர்களோடு தாங்கள் ஞானத்தை பற்றி பேசுவதாக பவுல் வாதாடுகிறார். 
இங்கே முதிர்ச்சிபெற்றவர்கள் என்போரைக் குறிக்க τέλειος டெலெய்யோஸ், என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இது பவுல் கால கிரேக்க தத்துவமான ஒரு வகை மறைவான மதக் கொள்கையைக் குறிக்கிறது. பவுல் இந்த சொல்லை தன் நற்செய்தியை நம்பிய ஆரம்ப கால கிறிஸ்தவர்களைக் குறிக்க பயன்படுத்துகிறார். இவ்வாறு தனது வாசகர்களை அறிவுள்ள முதிர்ச்சியான ஞானிகளாக கருதுகிறார். அதே வேளை இந்த வாதத்தை அவர் தான் என்று ஒருமையில் கூறாமல், தாங்கள் என்று பன்மையில் கூறுவது, ஆண்டவரின் நற்செய்திப் பணி ஒரு குழு முயற்ச்சி என்பதில் கருத்தாய் இருப்பதைக் காட்டுகிறது. 
பவுல், தமது ஞானம் உலக ஞானம் அல்ல, உலக தலைவர்களின் ஞானமும் அல்ல என்கிறார், ஏனெனில் அவை அழிவுக்குரியது என்றும் மேலதிகமாக வாதிடுகிறார் (τούτου τῶν καταργουμένων). பவுல் தன் வாசகர்களை, அதாவது கிறிஸ்தவர்கள்தான் வருகின்ற காலங்களில் கிரேக்கத்தையும் முழு உலகையும் வழிநடத்தப் போகிறவர்கள் என்பதை மனதில் கொண்டவர் போல் பேசுகிறார். 

வ.7: தாங்கள் பேசும் ஞானம் வெளிப்படுத்தப்படாமல் மறைவாயிருக்கும் ஞானம் என்கிறார் (σοφίαν ἐν μυστηρίῳ τὴν ἀποκεκρυμμένην). அத்தோடு இந்த ஞானம் புதிதாய் உருவாகிய ஒன்றல்ல, மாறாக கிறிஸ்தவர்களின் மகிமைக்காக (δόξα டொக்ட்சா), தொடக்கத்திலிருந்தே, கடவுளின் திட்டத்தில் இருக்கிறது என்கிறார். கிறிஸ்தவர்களின் நற்செய்தியை ஒரு நவீன கால பிரமலமான சிந்தனை, மாறாக அது முழுமையான சிந்தனை கிடையாது என்று சிலர் வாதிட்டனர். இதனையே பவுல் இங்கே எதிர்க்கிறார். 

வ.8: பவுல் சொல்லும் இவ்வுலக தலைவர்கள் என்போர் கிரேக்க-உரோமைய ஆட்சியாளர்களையும், யூத தலைவர்களையும், கிரேக்க-உரோமைய மெய்யியல் வாதிகளையும் குறிக்கின்றன. இவர்கள் தங்களது நிலையின் காரணமாக பல முக்கியமான படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டனர், 
இருப்பினும் அவர்கள் உண்மையான ஞானத்தை பெறவில்லை என்கிறார். அதற்கான காரணமாக, அவர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்ததை காட்டுகிறார். அவர்கள் உண்மையான ஞானிகளாக இருந்திருந்தார் மாட்சிக்குரிய ஆண்டவரை சிலுவையில் அறைந்திருக்க மாட்டார் என்பது அவர் வாதம். மாட்சிக்குரிய ஆண்டவர் என்பது Κύριος της δόξης அக்காலத்தில் இயேசுவிற்கு பாவிக்கப்பட்ட பெயராக இருந்திருக்கலாம். 

வ.9: இந்த வரியில் பவுல் எசாயாவின் இறைவாக்கு ஒன்றை கோடிடுகிறார். (காண்க எசாயா 64,4). இந்த வரி செப்துவாஜின்ட் விவிலியத்தில் சற்று வித்தியாசமாக இருக்கிறது. 

וּמֵעוֹלָ֥ם לֹא־שָׁמְע֖וּ לֹ֣א הֶאֱזִ֑ינוּ  עַ֣יִן לֹֽא־רָאָ֗תָה אֱלֹהִים֙ זוּלָ֣תְךָ֔ יַעֲשֶׂ֖ה לִמְחַכֵּה־לֽוֹ׃
(முதல் ஏற்பாட்டு எபிரேய விவிலியத்திலிருந்து)

ἀπὸ τοῦ αἰῶνος οὐκ ἠκούσαμεν οὐδὲ οἱ ὀφθαλμοὶ ἡμῶν εἶδον θεὸν πλὴν σοῦ καὶ τὰ ἔργα σουஇ ἃ ποιήσεις τοῖς ὑπομένουσιν ἔλεον. (செப்துவாஜின்;ட் கிரேக்க விவிலியத்திலிருந்து)

ἃ ὀφθαλμὸς οὐκ εἶδεν καὶ οὖς οὐκ ἤκουσεν καὶ ἐπὶ καρδίαν ἀνθρώπου οὐκ ἀνέβη ⸀ἃ ἡτοίμασεν ὁ θεὸς τοῖς ἀγαπῶσιν αὐτόν. 
(பவுல் பாவிக்கும் கிரேக்க புதிய ஏற்பாட்டிலிருந்து)

பவுலுக்கு இந்த இரண்டு பாடங்களும் தெரிந்திருக்க அதிகமான வாய்பிருப்பதாகத் தோன்றுகிறது. 

வ.10: இந்த வரியில், மேற்குறிப்பிட்ட ஞானத்தை வெளிப்படுத்துபவர் தூய ஆவி என்கிறார் பவுல். இந்த தூய ஆவியார்தான் πνεῦμα அனைத்தையும் துருவி ஆய்கிறவர் அத்தோடு அவர்தான் கடவுளின் ஆழ்ந்த எண்ணங்களையும் அறிகிறவர். இந்த தூய ஆவியாரின் மட்டிலேதான் உலக ஞானத்தின் பலவீனமும் நற்செய்தியின் பலமும் தெளிவாக தெரிகிறது. 

(4தம்மை நம்பியிருப்போருக்காகச் செயலாற்றும் கடவுள் உம்மையன்றி வேறு யார்? முற்காலம் முதல் இதுபற்றி எவரும் கேள்வியுற்றதில்லை; செவியுற்றதுமில்லை, கண்ணால் பார்த்ததுமில்லை.)

மத்தேயு 5,17-37
திருச்சட்டம் நிறைவேறுதல்
17'திருச்சட்டத்தையோ இறைவாக்குகளையோ நான் அழிக்க வந்தேன் என நீங்கள் எண்ண வேண்டாம்; அவற்றை அழிப்பதற்கல்ல, நிறைவேற்றுவதற்கே வந்தேன். 18'விண்ணும் மண்ணும் ஒழிந்து போகுமுன் திருச்சட்டம் யாவும் நிறைவேறும். அதன் ஒரு சிற்றெழுத்தோ ஒரு புள்ளியோ ஒழியாது என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். 19எனவே, இக்கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார். இவையனைத்தையும் கடைப்பிடித்துக் கற்பிக்கிறவரோ விண்ணரசில் பெரியவர் எனக் கருதப்படுவார். 20மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்.
சினங்கொள்ளுதல்
21'கொலை செய்யாதே கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்' என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள். 22ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ 'முட்டாளே' என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; 'அறிவிலியே' என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார். 23ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், 24அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். 25உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்துக்குக் கூட்டிச் செல்லும் போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள். 26கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்.
விபசாரம்
(மத் 19:9; மாற் 10:11,12; லூக் 16:18)
27''விபசாரம் செய்யாதே' எனக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.✠ 28ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று. 29உங்கள் வலக்கண் உங்களைப் பாவத்தில் விழச்செய்தால் அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்தில் எறியப்படுவதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது.✠ 30உங்கள் வலக்கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதையும் உங்களிடமிருந்து வெட்டி எறிந்து விடுங்கள். உங்கள் உடல் முழுவதும் நரகத்திற்குச் செல்வதைவிட உங்கள் உறுப்புகளில் ஒன்றை நீங்கள் இழப்பதே நல்லது. 31'தன் மனைவியை விலக்கி விடுகிறவன் எவனும் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுக்கட்டும்' எனக் கூறப்பட்டிருக்கிறது.✠ 32ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எவரும் தம் மனைவியைப் பரத்தைமைக்காக அன்றி வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலக்கிவிடக் கூடாது. அப்படிச் செய்வோர் எவரும் அவரை விபசாரத்தில் ஈடுபடச் செய்கின்றனர். விலக்கப்பட்டோரை மணப்போரும் விபச்சாரம் செய்கின்றனர்.

ஆணையிடுதல்
33'மேலும், 'பொய்யாணை இடாதீர். ஆணையிட்டு நேர்ந்து கொண்டதை ஆண்டவருக்குச் செலுத்துவீர்' என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.✠ 34ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனென்றால் அது கடவுளின் அரியணை. 35மண்ணுலகின் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது அவரின் கால்மணை. எருசலேம் மேலும் வேண்டாம்; ஏனெனில் அது பேரரசரின் நகரம். 36உங்கள் தலைமுடியின் மேலும் ஆணையிட வேண்டாம்; ஏனெனில் உங்கள் தலைமுடி ஒன்றையேனும் வெள்ளையாக்கவோ கறுப்பாக்கவோ உங்களால் இயலாது. 37ஆகவே நீங்கள் பேசும்போது 'ஆம்' என்றால் 'ஆம்' எனவும் 'இல்லை' என்றால் 'இல்லை' எனவும் சொல்லுங்கள். இதைவிட மிகுதியாகச் சொல்வது எதுவும் தீயோனிடத்திலிருந்து வருகிறது.

மத்தேயு நற்செய்தியில் மழைப் பொழிவிற்கு பின்னர், அதகிமான கட்டளைகளை உள்ளடக்கி இந்த வரிகள் அழகாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ் விவிலியம், வாசகர்களின் நோக்கத்தை கருத்தில் கொண்டு இந்த அதிகாரத்தை பல தலைப்பின்கீழ் வரிசைப்படுத்துகிறது. இன்றைய வாசகத்தில் வரும் தலைப்புக்களான திருச்சட்டத்தை நிறைவேற்றுதல், சினங்கொள்ளுதல், விபச்சாரம், மற்றும் ஆணையிடுதல் போன்றவை நம் சிந்தனையை உலுப்பி விடுகின்றன. 

அ. திருச்சட்டம் நிறைவேறுதல் (வவ 17-20). 
திருச்சட்டமும், அதனை நிறைவேற்றுவதில் உள்ள ஆர்வமும் ஒரு யூதரை நீதிமானாகக் காட்டியது. விவிலியம் பல இடங்களில் திருச்சட்டத்தின் மகிiiயையும், விட்டுக்கொடுக்க முடியாத அதன் ஒருமைப்பாட்டையம் அழகாகக் காட்டுகிறது. திருப்பாடல் 119 இதற்கு நல்ல உதாரணம். திருச்சட்டத்தை மீறுகிறவர்கள் கடவுளின் பிள்ளைகள் என்ற அந்தஸ்தை இழக்கிறார்கள் (ஒப்பிடுக சீராக் 41,8). இயேசுவின் மீதும், திருத்தூதர்கள் மீதும் ஆரம்ப கால திருச்சபை மீதும் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் மிக முக்கியமானது, அவர்கள் திருச்சட்டத்தை மீறுகிறார்கள் என்பதாகும். இந்த குற்றச்சாட்டை அழகாக இயேசுவின் வார்த்தைகளைக் கொண்டே முறிக்க முயல்கிறார் மத்தேயு. இந்த வரிகளில் இயேசு 'ஆமென் நான் உங்களுக்கு சொல்கிறேன்' (ἀμὴν γὰρ λέγω ὑμῖν) என்பது, இயேசுவின் மெசியானித்துவ அதிகாரத்தைக் காட்டுகிறது. 

வ.17: இந்த வரியிலிருந்து அக்காலத்தில் இயேசு மீதும் ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் மீதும் இருந்த குற்றச்சாட்டு தெளிவாக தெரிகிறது. இயேசு திருச்சட்டத்தையும், இறைவாக்குகளையும் அழிக்க வந்தவர் இல்லை என்பது மத்தேயுவின் முக்கியமான படிப்பினை. திருச்சட்டம் என்பது இங்கே சட்டங்களையம் தாண்டி, முதல் ஐந்து நூல்களையும் குறிக்கின்றன (தொடக்க நூல், விடுதலைப் பயணம், லேவியர், எண்ணிக்கை மற்றும் இணைச் சட்டம்). இறைவாக்குகள் என்பது இறைவாக்கு நூல்களை குறிக்கலாம் அல்லது இறைவாக்கினர்களின் இறைவாக்கை குறிக்கலாம். மத்தேயு, இயேசு திருச்சட்டத்தையும் இறைவாக்கையும் கடைப்பிடிக்கிற ஒரு சாதாரண யூதரல்ல அதற்கும் மேலாக அவர் அவற்றை நிறைவேற்றுகின்ற மெசியா எனக் காட்டுகிறார். 

வ.18: இந்த வரியினூடாக விண்ணையும் மண்ணையும் விட திருச்சட்டத்தின் ஒவ்வொரு எழுத்துக்களும் முக்கியம் என்பது புலப்படுத்தப்படுகிறது. சிற்றெழுத்தும் புள்ளியும் என்பது, ἰῶτα ἓν ἢ μία κεραία - ஒரு புள்ளியோ அல்லது கோடோ என்ற கிரேக்க மூல மொழியில் உள்ளது. இது திருச்சட்டம் (விவிலியம்) பற்றிய நல்ல புரிதலை காட்டுகிறது.

வ.19: திருச்சட்டத்தை போதிப்பதால் ஒருவர் பெரியவராக முடியாது, மாறாக அதை வாழ்பவரே பெரியவர் என்கிறார் இயேசு. பல யூத தலைவர்கள், திருச்சட்டதின் சிறியவற்றையேனும் கடைப்பிடிக்காமல், அதனை போதித்து தங்களை பெரியவர்களாகக் காட்டிக்கொண்டனர், அதனை வைத்து மற்றவர்களையும் பாவிகள் என சுட்டிக் காட்டினர். இவர்கள் உண்மையிலேயே வி;ண்ணரசில் சிறியவர்கள் என்பதுதான் வாதம். விண்ணரசு (βασιλείᾳ τῶν οὐρανῶν) என்பதும் மத்தேயு நற்செய்தியில் மிக முக்கியமான ஒரு தலைப்புப் பொருள். 

வ.20: இந்த வரியில், யாருக்கு எதிராக மத்தேயு மேற்குறிப்பிட்ட வரிகளை பாவிக்கிறார் என்பது புலப்படுகிறது. இயேசுவின் மீதும், ஆரம்ப கால திருச்சபை மீதும், முக்கியமாக மத்தேயுவின் திருச்சபைமீதும், குற்றம் சுமத்தியவர்கள் இந்த (சில) மறைநூல் அறிஞர்கள், பரிசேயர், மற்றும் தலைவர்கள், இவர்களைத்தான் சட்டத்தை காட்டி ஏமாற்றும் சிறுவர்கள் என்கிறார் மத்தேயு. (அன்று அந்த யூதர்களுக்கு, இன்று பல கிறிஸ்தவர்களுக்கு இது நச்சென பொருந்தும்). 

ஆ. சினம் கொள்ளுதல் (வவ. 21-26): 
முதல் ஏற்பாட்டில் கோபம் கொள்ளுதல் அதிகாரத்தில் இருப்பவர்களின் தகைமையாக கருதப்பட்டது. முதலில், அநீதியைக் கொண்டு கடவுளே பல வேளைகளில் கோபம் கொள்கிறார், பின்னர் அவர் கோபம் ஒவ்வொரு நிகழ்விலும் தணிகிறது. இறைவாக்கினர்கள், அரசர்கள் மற்றும் தலைவர்கள் அநீதிக்கு எதிராக கோபம் கொண்டார்கள். முதல் ஏற்பாடு இதனை ஒரு சாதாரண மன வெளிப்பாடாகவும் கருதியது. மத்தேயு இங்கே குறிப்பிடுகின்ற கோபம் (ὀργή), நீதியில்லாத கோபத்தைக் குறிக்கும். இது ஒருவேளை யூத மற்றும் உரோமைய தலைமைகள், கிறிஸ்தவர்கள் மேல் காட்டிய கோபத்தைக் குறிக்கலாம். 

வவ.21-22: உடலியல் ரீதியான வன்முறைக்கு காரணம் என்ன என்பதை இயேசு அழகாக காட்டுகிறார். இஸ்ராயேல் மக்களுக்கு இணைச்சட்ட நூல் மற்றும் லேவியர் கால சட்டங்கள் எழுதப்பட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு பின், இயேசுவின் சட்டங்கள் மீதான புதிய பார்வைகள் வருகின்றன. இங்கே இயேசு வன்முறையின் தொடக்கத்தை ஆய்வு செய்கிறார். வன்முறை அல்ல உண்மையான பிரச்சனை, மாறாக வன்முறையை தூண்டும் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் நிவர்த்தி செய்யப்படவேண்டும் என்கிறார். சினங்கொள்ளுதல், கீழ்தரமான வார்த்தை பிரயோகங்கள், அவமானப்படுத்தும் வசனங்கள் போன்றவை நிச்சயமாக வன்முறையை தூண்டி மரணங்களை தோற்றுவிக்கும். எனவே இவை தண்டிக்கப்படவேண்டியது என பயமுறுத்துகிறார். அதிசயமாக 
இயேசு இங்கே, தண்டனை, தலைமைச் சங்க தீர்ப்பு, எரிநரக வாழ்வு போன்றவை இங்கே உதாரணப்படுத்தப்பட்டுள்ளன என்கிறார். 

வவ.23-24: காணிக்கை செலுத்தி உறவுகளை சீர்ப்படுத்த முடியாது மாறாக மன்னிப்பு மற்றும் பரஸ்பர அன்பின் மூலமாகத்தான் நல்ல உறவு ஏற்படுகிறது என இந்த வரிகள் காட்டப்படுகின்றன. பலிப்பீடத்திற்கு முன் யாரும் கொண்டுவந்த காணிக்கைகளை செலுத்தாமல் விட்டுவிடுவது அபூர்வம், இருப்பினும் சமரசம் முக்கியமான இடத்தை இங்கே பெறுகிறது. நல்லுறவை ஏற்படுத்த, கோபம் கொண்டவர்களை தேடிப் போய் சமரசம் செய்ய சொல்லுவது இயேசுவின் புதுமையான ஆன்மீகத்தைக் காட்டுகிறது. சகோதரர்களுடன் உறவில்லாத காணிக்கையால் எந்த பயனும் இல்லை என்பதையும் இந்த வரிகள் காட்டுகின்றன. சகோதரர்கள் என்பது, இங்கே சொந்த சகோதரர்கள் என்பவரை விட, இனத்தவரைக் குறிக்கலாம் (ἀδελφός)

வவ.25-26: நடுவர் மற்றும் நீதிமன்ற தீர்ப்பு போன்றவை, மத்தேயுவின் வாசகர்களுக்கு நன்கு தெரிந்த உதாரணங்களாக இருந்திருக்கலாம். மத்தேயுவின் திருச்சபை அங்கத்தவர்கள் பல, இந்த நடுவ தீர்ப்பிற்கு கிறிஸ்தவத்தின் பொருட்டு உள்ளானவர்களே. இந்த பின்புலத்துடன், எதிரிகளோடு நீதியற்ற முறையில் முரண்பாடு நல்லதல்ல என்று ஒரு வித்தியாசமான பார்வையை காட்டுகிறார் மத்தேயு. 

இ. விபச்சாரம் (வவ 27-32):
வவ.27-28: விபச்சாரம் பற்றிய அன்றைய உலகின் சிந்தனையை (இன்றைய உலகும் கூட) மாற்றுகிறார் இயேசு. விபச்சாரம் என்பது உடலியல் ரீதியான பாவம் மட்டுமல்ல அது உளவியல் ரீதியான பாவம் என்கிறார் இயேசு. வி.ப 20,14 மற்றும் இ.ச 5,18 போன்றவை விபச்சாரத்தை, கட்டளைகளுக்கு எதிரான பாவமாக காட்டுகின்றன, ஆனால் இவை அதன் மூல காரணியை பற்றிக் கூறவில்லை. 
இயேசு, இவற்றின் மூல காரணி இச்சையான பார்வை என்கிறார். ஆக, விபச்சாரத்தில் இனி பெண்கள் மட்டுமல்ல அனைத்து ஆண்களும் சமமான குற்றவாளிகள் என்பது புலப்படுகிறது. 

வவ.29-30: வலக்கண்ணும், வலக்கரமும் மிக முக்கியமான உறுப்புக்கள். இவற்றை வெட்டி விடுவது என்பது, முழு உடலையும் முடமாக்குவதற்கு சமன். இருப்பினும் நரக வாழ்க்கையை விட, 
இயலாமல் இருப்பது மேல் என்கிறார் இயேசு. ஒரு பாவத்திற்கு செயற்பாடுகளைப் போல, பார்வையும் சிந்தனையும் சமமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அழகாக காட்டுகிறார். 

வவ.31-32: மணவிலக்கு சான்றுதல் என்பது (ἀποστάσιον), திருமணத்தில் ஏற்படும் அநீதிகளை கட்டுபடுத்த அக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒரு முறை. இ.ச 24,1-4 மணவிலக்கையும், மறுமணத்தையும் பற்றி விவரிக்கின்றன. இதனை இயேசு நன்கு அறிந்திருக்கிறார். இந்த சட்டங்கள் ஆணின் உரிமைகளை பற்றி பேசுகின்ற அதே வேளை, பெண்ணின் உரிமைகளை பேசாமல் விட்டுவிடுகிறது. இதனால் பல வேளைகளில் பெண்கள் அநீதிக்கு தள்ளப்பட்டார்கள். சில சில ஏற்றுக்கொள்ளப்பட முடியாத காரணங்களுக்காகவெல்லாம் பெண்கள் மணமுறிவை சந்தித்தார்கள். மணமுறிவு, பெண்களை மேலும் பலவீனத்துக்குள்ளும், சமூக அநீதிக்குள்ளும் தள்ளும் என்பதில் இயேசு கவனமாக இருக்கிறார். பரத்தமை (πορνεία பெர்நெய்யா) என்று இயேசு இங்கே குறிப்பிடுவது, சாதாரண விபச்சாரத்தை அல்ல மாறாக, இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத பால் உறவுகளைக் குறிக்கும். உதாரணமாக சில உறவுகளுடன் பாலியல் உறவுகளை வைத்துக்கொள்வது இன்றும், அன்றும் ஏற்றுக்கொள்ளப்படாதவை, அதனைத்தான் இந்த சொல் குறிக்கிறது. ஆக சந்தர்ப்பவாத, விபச்சாரங்கள் பாவமாகவும், அநீதியாகவும் இருந்தாலும்,
உடனடியாக விவாகரத்திற்கு போவது நல்லதல்ல என்கிறார். பெண்கள் விபச்சாரம் செய்கிறார்கள் என்பதைவிட அவர்கள் விபச்சாரத்துக்குள் தள்ளப்படுகிறார் என்ற உண்மை இன்று பல மனித உரிமை ஆர்வளர்களால் பேசப்படுகிறது. இதனை அன்றே இயேசு ஆழமாக கூறிவிட்டார். விபச்சாரத்தை விட, விபச்சாரத்திற்குள் தள்ளுவது முக்கியமான பாவமாகும் என்பது, இயேசு பெண்கள் மேல் வைத்திருந்த மரியாதையைக் காட்டுகிறது. இது கடவுளின் பார்வை. 

ஈ. ஆணையிடுதல் (வவ. 33-37):
வ. 33: லேவியர் 19,12: எண் 30,2 மற்றும் இ.ச 23,21 போன்றவை, பொய்யாணையிடுதலை பாவம் என்று கடுமையாக கண்டிக்கிறது. இஸ்ராயேல் மக்கள் தங்களுடைய சாட்சியமாக வாழுகின்ற கடவுள் மேல் ஆணை எனறே பல சாட்சியங்களை முன்வைத்தனர். இதனால், இந்த உண்மையான வாழுகின்ற கடவுளின் பெயரால் செய்யப்படுகின்ற பொய் சாட்சியங்கள், அவரின் உண்மையான 
இருப்பை பொய்ப்பித்துவிடும் என்பதால், அவை கனமாக பாவமாக கருதப்பட்டது. இதனால் இந்த பாவம் கடவுளின் இருப்பிற்கெதிரான பாவமாக கருதப்பட்டது. பொய்யாணைகள், சரிசெய்யப்படலாம் என்ற முதல் ஏற்பாட்டு சிந்தனையை இயேசு இல்லாமல் ஆக்குகிறார். 

வவ.34-35: ஆணையிடுவதே பாவம் என்கிறார் இயேசு. விண்ணுலகின் மீது ஆணையிடுவது ஆண்டவரின் அரியணையை கொச்சைப்படுத்துவதாகும். மண்ணுலகின் மீது ஆணையிடுவது அவரது கால்மணையை கொச்சைப்படுத்துவதாகும். எருசலேம் மீது ஆணையிடுவது அதன் புனிதத்துவத்தை கெடுப்பதாகும். இந்த வரிகளில் விண்ணகம், மண்ணகம், மற்றும் எருசலேமின் முக்கியத்துவங்கள் காட்டப்படுகின்றன. இந்த மூன்றும் ஒன்றுக்கொன்று முக்கியமானவை என்பது காட்டப்படுகிறது. எருசலேமை பேரரசரின் நகரம் (μεγάλου βασιλέως), என்ற கூறுவதில் பேரரசராக கடவுளை குறிப்பிடுகிறார் எனலாம். பல இனங்கள் இன்று வரை கடவுள் மீது ஆணையிடுவதை பெரிய பாவமாக கருதுவார்கள், முக்கியமாக இத்தாலியர்கள் இதனை (Bestemmia பெஸ்தேமியா) தெய்வ நிந்தையாக கருதுகிறார்கள். (நமக்கு இது பழகிவி;ட்டதால் இதன் கனாகனம் தெரிவதில்லை)

வ.36: தலைமுடியின் மீதும் ஆணையிட வேண்டாம் என்கிறார் இயேசு. தலைமுடி மிகவும் கீழ்மட்டமான உடலின் ஒரு அங்கம், அதனைக் கூட தீர்மானிக்கிற சக்தி மனிதர்க்கு இல்லை என்பதாலும், தலைமுடியின் நிறம் ஒருவரின் ஆயுளுடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதனை மாற்றக்கூடிய சக்தி மனிதர்கில்லை என்பதை இயேசு காட்டுகிறார், (தலை முடிக்கு நிறம் பூசி தங்கள் வயதை குறைப்பவர்களை என்ன வென்று மத்தேயு காட்டுவார்?).

வ.37: மத்தேயு நற்செய்தியில் மிக முக்கியமான வரி இதுவாகும். ஆம் என்றால் ஆம் எனவும் (ναὶ ναί நாய் நாய்), இல்லை என்றால் இல்லை (οὒ οὔ ஊ ஊ) எனவும் சொல்லுவது நீதிமான்களின் பண்பைக் குறிக்கும். இயேசுவின் பாதை இடுக்கமான பாதை, அங்கே நடுநிலமை கிடையாது. ஒன்றில் சரி அல்லது தவறு. ஆரம்ப கால திருச்சபையில் பல வேளைகளில் இந்த இரண்டு பக்கமும் சாயும் வாழ்வு, மற்றவர்களின் சாட்சிய வாழ்விற்கு இடைஞ்சலாக இருந்தது. இப்படியான வாழ்வு சாத்தானுடையது என்கிறார் மத்தேயு. இன்று சில வேளைகளில் உலகம், பொய் என்ற பாவத்திற்கு, 'சரியானதை சொல்லாமல்விடும் விவேகம்' என்று வரைவிலக்கணம் கொடுக்க முயற்சி செய்கிறது. இவர்களுக்கு மத்தேயுதான் முடிவு சொல்ல வேண்டும். 

சட்டம் என்பது தீமையானது அல்ல,
சட்டங்கள் நன்மைக்காகவே உருவாக்கப்படுகின்றன,
ஆனால் சட்டங்கள் மனிதர்காகவே தவிர, மனிதர் அவற்றிக்காக அல்ல,
இருப்பினும், மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காக சட்டங்களை மாற்ற முடியாது. 
;சட்டம் என்பது என்றும் நிலைக்கும்,
அது திருச்சட்டம் என்றால்.

ஆம் என்றால் ஆம் எனவும்,
இல்லை என்றால் இல்லை எனவும், 
சொல்லி வாழ, வரம் தாரும் உண்மை ஆண்டவரே!

மி. ஜெகன் குமார் அமதி
தூய செபஸ்தியார் பேராலயம், மன்னார்.
புதன், 8 பிப்ரவரி, 2017

வியாழன், 2 பிப்ரவரி, 2017

ஆண்டின் பொதுக்காலம் ஐந்தாம் வாரம் (அ), Fifth Sunday in Ordinary Times.



ஆண்டின் பொதுக்காலம் ஐந்தாம் வாரம் (அ)
05,02,2017

முதல் வாசகம்: எசாயா 58,7-10
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 112
இரண்டாம் வாசகம்: 1கொரிந்தியர் 2,1-5
நற்செய்தி: மத்தேயு 5,13-16

எசாயா 58,7-10
7பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு! 8அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின்சென்று காக்கும். 9அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்; அவர் உனக்குப் பதிலளிப்பார்; நீ கூக்குரல் இடுவாய்; அவர் 'இதோ! நான்' என மறுமொழி தருவார். உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு, 10பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும்.

உண்ணா நோன்பு (צוֹם ட்சோம்- உணவுத் தவிர்ப்பு) என்பது இஸ்ராயேல் மக்கள், காலம் காலமாக பின்பற்றிய ஓர் ஆன்மீக புதுப்பித்தல் நிகழ்வு. இதற்க்கு பல பின்னனிகள் இருந்தன. மத்திய கிழக்கு நாடுகளில் இது முதலில் மருத்துவ பின்புலத்தைக் கொண்டு, பின்னர் சமய அர்த்தங்களை கொடுக்கிற ஒரு நிகழ்வாக மாறியது. இஸ்ராயேலின் உண்ணாநோன்பு புலம்பலுடனும், அழுகையுடனும் செய்யப்பட்டது (காண்க 2சாமு 1,12). சாதாரண செபத்திற்கு வலுச்சேர்க்கும் முயற்சியாகவே இஸ்ராயேலர் இதனைக் கண்டனர். அனேகமாக உண்ணா நோன்பிருக்கிறவர்கள் சாக்குடை உடுத்தி, சாம்பலைத் தடவி, வெறும் தரையில் அமர்ந்தனர். உண்ணா நோன்பு என்னும் இந்த செயல், மனிதர்கள் தங்களது இயலாமையை கடவுளுக்கு வெளிப்படுத்தும் ஒரு அடையாள செபம் என்றும் மானிடவியலாளர்கள் சிலர் வாதிடுகின்றனர். உண்ணாநோன்பு மூலமாக கடவுளின் வெளிப்படுத்தல்களை கண்டுகொள்ளலாம் என்ற நம்பிக்கை கிரேக்கர்களின் காலத்தில் வளர்ந்தது. போரில் வெற்றி பெறுவதறக்காகவும் உண்ணா நோன்பு ஒரு பரித்தியாகமாக செய்யப்பட்டது (ஒப்பிடுக 1சாமு 14,24). பபிலோனிய இடப்பெயர்விற்கு பின்னர், இந்த உண்ணாநோன்பு முறை கடவுளுடைய நேரடி தலையீட்டை பெற விளையும் ஒரு நிகழ்வாக மாறியது. இந்த முறையை இயேசு நன்கு அறிந்திருந்தார், என்பதை நற்செய்திகளில் காணக்கூடியதாக இருக்கிறது (காண்க மாற் 9,29: மத் 17,21). இயேசுவும் நாற்பது நாட்கள் பாலை நிலத்தில் உண்ணா நோன்பிருந்ததை இங்கே நினைவுகூரல் நல்லது. உண்ணா நோன்பு தேவயற்றது என்று எசாயாவோ அல்லது நற்செய்தியாளர்களே சொல்லவில்லை, அத்தோடு உண்ணா நேன்பு என்னும் ஒரு அழகான பாரம்பரியம் மெதுமெதுவாக பல நவீன காரணங்களைப் பொருட்டு திருச்சபையில் மெதுவாக மறைந்து வருவது அபாயமானது.  
இந்த அதிகாரத்தில் (58) எசாயா உண்மையான நோன்பின் மகத்துவத்தை தன்னுடைய சாயலில் கொடுக்க விளைகிறார். இந்த வரிகளையும், எசாயா புத்தகத்தின் இந்த அதிகாரத்தின் இட அமைவையும் கொண்டு இது பபிலோனிய அடிமைத்தனத்தின் பின்னர் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகின்றது. வரிகள் 1-6, போலியான நோன்பை காட்டுகின்றன. அந்த நோன்பின் பின்னால் சுயநலமும், ஆன்மீக வெறுமையும் தான் இருக்கின்றன என்பதைக் காட்டுகின்றன. இதற்கு மாறாக உண்மையான நோன்பினை வரிகள் 7-12 விளக்குகின்றன. 

வ.7 கடவுள் விரும்பும் உண்ணா நோன்பின் அமைவுகள் என்ன, என்பதை இலக்கிய வடிவில் கொடுக்கிறார் எசாயாவின் ஆசிரியர். இந்த வரியில் வரும் நல்ல செயற்பாடுகள் நமக்கு மத்தேயு 25ம் அதிகாரத்தை நினைவூட்டும் (✽ஒப்பிடுக மத். 25, 35-36).

(✽35ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; 36நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்' என்பார்.)

அ. பசித்தோருக்கு உணவை பகிர்ந்து கொடுத்தல்: உண்ணா நோன்பு செய்து உணவை சேமித்து வைக்க முடியும், அத்தோடு உண்ணா நோன்பிருந்து பின்னர் மாலையில் அதிகமான உண்ணவும் முடியும். ஆனால் உண்மையான உண்ணா நோன்பு என்பது, தவிர்க்கப்படும் உணவை பசிப்போருக்கு கொடுப்பதில் பெறுமை அடைகிறது என்று அழகான உண்மையை ஆசிரியர் காட்டுகிறார். உண்ணா நோன்பு என்பது ஒரு அடையாளம் மட்டுமே, இது கடவுளின் பார்வையை ஈர்க்காது ஆனால் நல்ல எண்ணமான உணவுப் பகிர்வு கடவுளின் பார்வையை நிச்சயமாக ஈர்க்கும் என்பது ஆசிரியரின் செய்தி. அத்தோடு இங்கே தங்களின் உணவை ஆசிரியர் பகிரக் கேட்கிறார் (לַחְמֶ֔ךָ உனது உணவு), அதாவது உணவை தவிர்ப்பவர், அந்த உணவை கொடுக்கவேண்டும் அப்போது அவருக்கு பசியின் கொடூரம் தெரியும். இதுதான் உண்மையான உண்ணா நோன்பு. 

ஆ. தங்க இடமில்லா வறியோருக்கு இல்லத்தில் இடம் தருதல்: பபிலோனிய இடப்பெயர்விற்கு பின்னர், வறியவர்கள் மேலும் வறியவர்கள் ஆயினர். பணக்காரர்கள் தங்கள் நிலங்களை பெரிதாக்கிய அதே வேளை ஏழைகள் வீடு நிலமற்றவர்களாயினர். இஸ்ராயேல் இனம், சகோதரத்துவத்தை பாராட்டுகின்ற முக்கியமான இனங்களில் ஒன்று. மோசே காலம் தொடங்கி பபிலோனிய இடப்பெயர்வு காலம் வரைக்கும், வீடற்றவர்களுக்கு வீட்டில் இடம் கொடுத்தல் ஒரு புண்ணியமாக பார்க்கப்பட்டது. கடவுள் அனைவரின் தந்தையாக இருப்பதனாலும், அனைத்து உலகு கடவுளுக்கு சொந்தம் என்பதாலும்,  வீடற்றவர்கு இடம்தருவதன் வாயிலாக இஸ்ராயேலர் அந்த கடவுளின் உண்மையான மக்களாகின்றனர். (இந்த புண்ணியம் இந்த காலத்திலும் மனிதத்தை மதிக்கிற அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்டும், டரம்ப் போன்ற சில தலைவர்கள் மட்டும்தான் இதற்கு வேறு வரைவிலக்கணம் கொடுக்க முயல்வர்). 

இ. உடையற்றோருக்கு உடையளித்தல்: உடை அக்காலத்தில் வெறும் ஆடையை மட்டுமல்ல அது ஆளையும் காட்டியது. நம்முடைய தமிழ் பழமொழி 'ஆள் பாதி ஆடை பாதி' என செல்வது போல. ஒருவருடைய உடையை வைத்து அவரின் தராதரம், செல்வம், படிப்பு, சமூக நிலை போன்றவை கணிக்கப்பட்டன. இங்கனம், உடையற்று இருப்பவர், அனைத்தையும் இழந்தவராகிறார். அவர் அடிமை என்றே கருதப்படுவார். உடையற்றவருக்கு உடையளிப்பது, அவருக்கு மனிதத்தை கொடுப்பதற்கு சமன். (அன்று உடை ஒருவரின் கலாச்சாரத்தையும், உரிமைகளையும் காட்டிய அதே வேளை இன்று ஆடைகுறைத்தல் அல்லது வெற்றுடம்பு ஒருவரின் உரிமை அல்லது கலாச்சாரமாகிறது, இதனை என்னவென்று சொல்வது). 

ஈ. இனத்தாருக்கு உதவிசெய்தல்: உன் இனத்தாரை, என்ற தமிழ் விவிலிய சொல்லை எபிரேய மூல பாடம் 'உன் சதைக்கு' என்றே (מִבְּשָׂרְךָ) குறிப்பிடுகிறது. இவ்வாறு ஒவ்வொரு இஸ்ராயேலரும், ஒரே உடல் அல்லது சதை என்பது புலப்படுகிறது. தேவையிலிருக்கும் இனத்தாருக்கு ஒருவர் தன் இன அடையாளத்தை மறைத்தல் என்பது, அவருக்கு உதவிசெய்ய முடியாது, என்ற இனவெறுப்பையே காட்டுகிறது. இது ஒரு பாவம் என்கிறார் எசாயாவின் ஆசிரியர். இப்படி செய்கிறவரின் உண்ணா நோன்பு, உதவாதது என்பது சாலப்பொருந்துகிறது. 

வ.8: மேற்குறிப்பிட்ட புண்ணியங்களை ஒருவர் செய்வதன் வாயிலாக அவருக்கு கிடைக்கும் மாற்றங்களை இந்த வரி விளக்குகின்றது. 

அ. ஒளி விடியல் போல் இருக்கும்: ஒளி (אוֹר ஓர்), முதல் ஏற்பாட்டில் கடவுளின் பிரசன்னத்தைக் காட்டும் மிக முக்கியமான அடையாளம். இந்த ஒளியை நோக்கியே அன்று பலமதங்கள் மற்றும் மொழியியல்கள், பல மெய்யறிவு வியாக்கியானங்களை தந்தன. விவிலியம் இதற்கு ஒரு படி மேலே சென்று, நல்ல இஸ்ராயேலரின் ஒளி சாதாரண ஒளியல்ல அது, விடியல் போல் இருக்கும் என்கிறார். விடியல் (שַׁחַר ஷஹர்), இது விவிலியத்திலுள்ள இன்னொரு முக்கியமான அடையாளம். இதற்கு, நீதி, நிம்மதி, உரிமை, விடியல், சுதந்திரம் என்ற பல அர்த்தங்கள் உள்ளன. இந்த இடத்தில் இது வெளிச்சத்தையே குறிக்கின்றது. 

ஆ. விரைவில் நலமான வாழ்வு துளிர்க்கும்: அடிமைத்தனத்தில் இருப்பவர்கள் நலமான வாழ்வை எதிர்பார்ப்பார்கள். உண்ணா நோன்பின் நோக்கமும் இதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும். நலமான வாழ்வு என்பது (אֲרוּכָה), சுகநல ஆரோக்கியத்தை குறிக்கிறது. இருப்பினும் இது உடல், உள, பொருள,; மற்றும் நல்வாழ்வையும் குறிக்கலாம். 

இ. முன்செல்லும் நேர்மை: இது அழகான ஒரு உவமானம். ஆசிரியர் நேர்மையை ஒரு வானதூதர் போல், நல்லவர்களின் முன்னால் சென்று காக்கும் என்கிறார் (הָלַ֤ךְ לְפָנֶ֙יךָ֙ צִדְקֶ֔ךָ). உன் நேர்மை உன் முகத்திற்கு முன் செல்லும் என்றும் இதனை மொழிபெயர்க்கலாம். ஒருவருக்கு முன் நேர்மை செல்லும் போது அவர் தீமை, மற்றும் ஆபத்துக்களை தவிர்ப்பார். நேர்மை விவிலியத்தில் மிகவும் விரும்பப்பட்ட மிக முக்கியமான ஒரு இறையியல் விழுமியம். நேர்மையற்ற உலகிலும், நேர்மையான உலகிலும் இந்த பண்பு என்றும் இன்றும் விரும்பப்படுகிறது. 

ஈ. பின் காக்கும் ஆண்டவரின் மாட்சி: மாட்சி என்பது (כָבוֹד கவோட்), ஆண்டவரின் வல்லமையைக் குறிக்கிறது. ஆண்டவர் உருவம் அற்றவர் என்ற படியால், அவரின் மாட்சி ஒரு உருவகமாக வர்ணிக்கப்படுகிறது. இந்த மாட்சி என்பது கடவுளுடைய அதிகாரத்தையும், நிறைவையும், வளத்தையும், மகத்துவத்தையும், பயபக்தியையும் குறிக்கிறது. இவைதான், இந்த நல்ல நபருக்கு பின்னால் காவல் தூதர் போல் செல்லும் என்கிறார் ஆசிரியர். 

வ.9: இந்த வரி ஆண்டவரின் பதிலளிப்பை பற்றிக் கூறுகிறது. ஆண்டவர் நீதிமான்களுக்கே செவிசாய்கிறார் என விவிலியம் காட்டுகிறது (காண்க: தி.பா 4,3: 5,3). நோன்பிருப்பதன் வாயிலாக ஒருவர் கடவுளின் செவிசாய்த்தலை பெறமுடியாது மாறாக நேர்மையான வாழ்வும், இரக்கச் செயல்களுமே ஒருவரை கடவுளின் செவிசாய்ப்பிற்கு தகுதியாக்கிறது என்பது இவர் வாதம். ஆண்டவருடைய செவிசாய்த்தல் இரண்டு ஒரே கருத்துச் சொற்களில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. 'இதோ நான்' என் ஆண்டவர் மறுமொழி தருவது (הִנֵּנִי), ஆண்டவருடான நெருக்கமான உறவைக் காட்டுகிறது. 
இதே வரியில், மேலதிகமான எதிர்பார்ப்புக்களும் முன்வைக்கப்படுகிறது. தங்களிடம் உள்ள நுகத்தை அகற்றக் கேட்கிறார், இது இவர்களின் தேவையற்ற பாரங்களைக் குறிக்கலாம். அல்லது இவர்களின் வேற்று தெய்வ வழிபாட்டையும் குறிக்கலாம். குற்றம் சாட்டுதலும் மற்றும் பொல்லாதன பேசுதலையும், நுகங்கள் என்பது போல் ஆசிரியர் வரிசைப்படுத்துகிறார். 

வ.10: மேலதிகமான புண்ணியங்கள் சொல்லப்படுகின்றன. பசித்திருப்போருக்கு உன்னையே கையளித்தல் என்னும் சொற்றொடர் வித்தியாசமாக இருக்கிறது. எபிரேய மூல பாடம் இங்கே, வித்தியாசமாக முழு ஆளையையும் குறிப்பதாக அமைகிறது. பசித்தோருக்கு உணவளித்தலும், வறியோறின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுதலும் ஒத்த கருத்தாக பார்க்கப்படுகிறது. இதனால் இருண்ட வாழ்வு, பகல் வெளிச்சம் போல பிரகாசமாக இருக்கும் என்கிறார் ஆசிரியர். பகல் வெளிச்சம் என்பது சூரிய வெளிச்சத்தைக் குறிக்கும், அதாவது சூரிய வெளிச்சம் எதனாலும் மறைக்கப்படாது என்னும் அடையாளம் இங்கே காட்டப்படுகிறது. 

திருப்பாடல் 112
1அல்லேலூயா! ஆண்டவருக்கு அஞ்சிநடப்போர் பேறுபெற்றோர்; அவர்தம் கட்டளைகளில் அவர்கள் பெருமகிழ்வு அடைவர். 
2அவர்களது வழிமரபு பூவுலகில் வலிமைமிக்கதாய் இருக்கும்; நேர்மையுள்ளோரின் தலைமுறை ஆசிபெறும். 3சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும். 4இருளில் ஒளியென அவர்கள் நேர்மையுள்ளவரிடையே மிளிர்வர்; அருளும் இரக்கமும் நீதியும் உள்ளோராய் இருப்பர். 
5மனமிரங்கிக் கடன் கொடுக்கும் மனிதர் நன்மை அடைவர்; அவர்கள் தம் அலுவல்களில் நீதியுடன் செயல்படுவர். 
6எந்நாளும் அவர்கள் அசைவுறார்; நேர்மையுள்ளோர் மக்கள் மனத்தில் என்றும் வாழ்வர். 7தீமையான செய்தி எதுவும் அவர்களை அச்சுறுத்தாது; ஆண்டவரில் நம்பிக்கை கொள்வதால் அவர்கள் இதயம் உறுதியாய் இருக்கும். 
8அவர்கள் நெஞ்சம் நிலையாய் இருக்கும்; அவர்களை அச்சம் மேற்கொள்ளாது; இறுதியில் தம் எதிரிகள் அழிவதை அவர்கள் காண்பது உறுதி. 
9அவர்கள் வாரி வழங்கினர்; ஏழைகளுக்கு ஈந்தனர்; அவர்களது நீதி என்றென்றும் நிலைத்திருக்கும்; அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும்.✠ 
10தீயோர் அதைப் பார்த்து எரிச்சல் அடைவர்; பல்லை நெரிப்பர்; சோர்ந்து போவர்; தீயோரின் விருப்பமெல்லாம் வீணாய்ப்போம்.

கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் பேறுகளை இந்தப் பாடல் காட்டுகின்றது. திருப்பாடல் 111 மற்றும் 112 போன்றவை எபிரேய அரிச்சுவடி அமைப்பில் எழுதப்பட்ட, ஒரே கருத்துக்களை கொண்டுள்ள பாடல்கள் என அறியப்படுகின்றன. எபிரேய அரிச்சுவடி அமைப்பில் திருப்பாடல்கள் எழுதப்படுவது, எபிரேய கவிக்கே உரிய மிக தனித்துவமான பண்பு. இந்த வகையில் சிறுவர்கள், வளர்ந்தவர்கள் இந்த பாடல்களை மனனம் செய்ய இது உதவியாக அமைந்தது. ஒளவையாரின் பல தத்துவ பாடல்களும் இப்படியான தமிழ் அரிச்சுவடி அமைப்பிலே அமைந்துள்ளன. (உ-ம்: றம் செய்ய விரும்பு, றுவது சினம், யல்வது கரவேல், வது விலக்கேல்...). இந்த பாடலின் அதிகமான அடிகள், திருப்பிக் கூறல் என்ற எபிரேய கவிநடையையும் பிரதி பலிக்கினறன. 

வ.1: ஆண்டவருக்கு அஞ்சு நடப்போர் பேறுபெற்றோராகின்றனர். ஆண்டவருக்கு அஞ்சி நடத்தல் என்பது முதல் ஏற்பாட்டின் மிக முக்கியமான ஒரு விழுமியம். அஞ்சி நடத்தல் என்பது பயத்தை அல்ல மாறாக, தனிமனித மரியாதையையே முக்கியமாக காட்டுகிறது. ஆண்டவரின் கட்டளைகளில் இவர்கள் பெருமகிழ்சி அடைவர் என்றும் சொல்லப்படுகிறது. இந்த திருப்பாடல் அப்படியே திருப்பாடல் ஒன்றை நமக்கு நினைவூட்டுகின்றன. 

வ.2: இஸ்ராயேல் மக்கள் தங்களுடைய தோல்விகளை பல முறை பார்த்தவர்கள், அனுபவித்தவர்கள். இது இ;ப்படியிருக்க, மனித தோல்விகளுக்கு காரணம் மனித பலவீனமான குறைவான படைப்பலம் அல்ல, மாறாக மனிதர் கடவுளின் கட்டளைகளை கடைப்பிடிக்காததே காரணம் என்பது போல சொல்கிறார். கடவுளின் கட்டளைகளை கடைப்பிடிப்பதால் அவர்களின் வழிமரவு வலிமையானதாக அல்லது அது ஆசிபெற்ற நேர்மையான வழிமரபாக இருக்கும் என்பது இவர் நம்பிக்கை.

வ.3: சொத்தும் செல்வமும் கடவுள் மனிதர்க்கு தருகின்ற கண்ணுக்கு தெரிகின்ற ஆசீர்கள். விவிலியத்தில் கடவுளின் நண்பர்கள் அல்லது கடவுள் பார்வையில் நல்லவர்கள் எனப்பட்டவர்கள் அதிகமானவர்கள் நிறை செல்வத்துடன் வாழ்ந்தவர்களே. விவிலியம் எளிமையை போற்றுகின்றதே தவிர வறுமையை போற்றாது. சொத்தும் செல்வமும் (הוֹן־וָעֹ֥שֶׁר) வீட்டில் தங்கியிருப்பது, அந்த வீட்டில் நீதி நிலைத்திருப்பதற்கு சமனாகும். 

வ.4: இருளில் ஒளி அதிசயமான ஆச்சரியம் (בַּחֹ֣שֶׁךְ א֭וֹר). மின்சாரம் அல்லது சூரிய மின்சக்தி இல்லாத அக்காலத்தில் இருள் நிச்சயமாக மறைபொருளாகவே கருதப்பட்டது. ஒளி எப்போதுமே கடவுளின் அடையாளமாக பார்க்கப்பட்டது. ஆசிரியர் இந்த பொளதீக உண்மைகளையும் தாண்டி ஒரு படி மேலே சென்று உண்மையான ஒளி, நேர்மை, அருள் மற்றும் இரக்கம் கொண்ட வாழ்வு என்கிறார். பகலும் இரவும் மாறி மாறி வரும் அதாவது ஒளி மறையும் இருள் ஆட்சி செய்யும், ஆனால் நேர்மை, அருள் மற்றும் இரக்கம் உடையோர் என்றும் ஒளிபோல திகழ்வர் என்பது இவர் நம்பிக்கை. 

வ.5: கடன் கொடுத்தல் (לָוָה) இஸ்ராயேல் சமூக அக்கறையில் நோக்கப்படவேண்டியது. சக இஸ்ராயேலருக்கு வட்டிக்கு கடன் கொடுத்தல் பாவமாக கருதப்பட்டது (✽காண்க இ.ச 23,19). இருப்பினும் வெளிநாட்டவருக்கு வட்டிக்கு கடன் கொடுப்பது சகிக்கப்பட்டது (காண்க இ.ச. 23,20). கடன் கொடுத்தல் வழியாக வறுமையில் வாடிய ஓர் இஸ்ராயேலருக்கு நம்பிக்கை பிறக்க வழி பிறந்தது. இதனால் வட்டியில்லாத கடன் ஒரு உதவியாகவே பார்க்கப்பட்டு போற்றப்பட்டது. அத்தோடு அவர்கள் நீதியானவர்கள் என்றே கருதப்பட்டார்கள். 

(✽19உன் இனத்தவனிடமிருந்து வட்டி வாங்காதே. பணத்துக்கோ, தானியத்துக்கோ, கடனாகக் கொடுத்த எந்தப் பொருளுக்கோ வட்டி வாங்காதே.)

வ.6: நேர்மையாளர்களின் குணங்கள் மேலுள்ள வரிகளில் விளக்கப்பட்டுள்ளன. நேர்மையாளர்கள் 
இறந்தும் வாழ்வர் என்கிறார் ஆசிரியர். அதாவது, முதல் ஏற்பாடு மறுவாழ்வில் நம்பிக்கை கொள்ளவில்லை ஆனால் நேர்மையாளர் என்றும் மக்கள் மனதில் வாழ்வர் என்கிறது (לְזֵכֶר עוֹלָ֗ם יִהְיֶה צַדִּיק). என்றுமே வாழ்தல் என்பது, ஆசீர் பெற்றவர்களின் கொடையாக இருப்பதால், அதனை பெற நீதியான வாழ்வு தேவையானதாகிறது. 

வ.7: மேலதிகமாக, நேர்மையானவர்களுக்கான நன்மைத்தனங்கள் காட்டப்படுகின்றன. தீமையான செய்தியின் அச்சுறுத்தலின்றி இதயம் அமைதியில் இருத்தல் என்பது மிக முக்கியமான நற்செய்தி. பல விதமான தீமை செய்திகளான, போர், வன்முறை, வெளிநாட்டவர் படையெடுப்பு, காட்டு மிருகங்களின் தாக்குதல், வழிப்பறி கொள்ளைகள், கொள்ளை நோய்கள், வரட்சி, மணல் புயல் போன்றவை அக்கால மக்களுக்கு தீமையான செய்தியாக அடிக்கடி வந்து போயின. நீதிமான்கள் ஆண்டவரிடம் நம்பிக்கை வைப்பதால் (בָּטֻחַ בַּיהוָה), இந்த தீய (שְּׁמוּעָה רָעָה) செய்திகளால் அவர்கள் இதயம் அசைவுறாது என்கிறார். 

வ.8: நெஞ்சம் உறுதியாக இருக்க, தீயவர்கள் அழிவதை காணவேண்டும் என்பது உலக நீதி. இதனை திருப்பாடல் ஆசிரியர் நன்கு அறிந்திருக்கிறார். அச்சம் உள்ளத்தை மேற்கொள்வதுதான் சகல உள நோய்களுக்கும் காரணம் என இன்றைய உளவியல் மருத்துவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். இதனை அக்கால திருப்பாடல் ஆசிரியர் நன்கு அறிந்திருக்கிறார். இந்த பாடல் ஆசிரியர் எதிரிகள் என்று (צרר), யாரை குறிப்பிடுகிறார் என்பது தெளிவாக இல்லை, இது தனிப்பட்ட எதிரிகளாகவோ அல்லது இஸ்ராயேலின் எதிரிகளாகவோ இருக்கலாம். இந்த சொல் צָרַר தனிப்பட்ட உறவு, எதிரி போலத் தோன்றுகின்றது. 

வ.9: நீதிமான்களுடைய சில குணங்கள் மேலும் விவரிக்கப்படுகிறது. இங்கே நீதிமான்கள் என்ற எழுவாய் இல்லை அத்தோடு முதல் வரி பாவிகளைப் பற்றி சொல்லிக்கொண்டு இந்த வரி தலைப்பில்லாமல் நீதிமான்களை பற்றி பாடுவது சற்று மயக்கமாக உள்ளது. வாரி வழங்குதலும், ஏழைகளுக்கு ஈகையும் ஒத்த கருத்துச் சொற்கள் (פִּזַּ֤ר ׀ נָתַן לָאֶבְיוֹנִים). பின்வரும் சொற்கள் நீதித் தன்iமையை பற்றி பாடுவதால் இந்த வரியின் தலைவராக நீதிமான்களை எடுக்கலாம். இந்த வரியின் இரண்டாவது பாகம், 'அவர்களது வலிமை மாட்சியுடன் மேலோங்கும்' என்று தமிழ் விவிலியத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எபிரேய மூல பாடத்தில் இது 'அவருடைய கொம்பு மரியாதையுடன் உயர்த்தப்படும்;' (קַרְנ֗וֹ תָּר֥וּם בְּכָבֽוֹד) என்றே உள்ளது. இதன் அர்த்தமும் ஒன்றே. கொம்பு (קֶרֶן கெரென்) வெற்றி மற்றும் பலத்தின் அடையாளம். இது முதல் ஏற்பாட்டு காலத்தில் பல அடையாளங்களுடன் பாவிக்கப்பட்டது. மாட்டின் கொம்பு மாட்டின் பலம் என்ற அர்த்தத்தில் இந்த நம்பிக்கை தொடங்கியிருக்கலாம். 

வ.10: இவ்வளவு நேரமும் நீதிமான்களையும் பேறுபெற்றவர்களையும் பாடிய ஆசிரியர் இவர்களுக்கு எதிரான, பாவிகளுக்கு என்ன நடக்கும் என்பதையும் மறக்காமல் தருகிறார். எரிச்சல் அடைதல் தீயவர்களனின் முக்கியமான அடையாளம். எரிச்சல் அன்பின் எதிர் கருத்து. எரிச்சல் இதயத்தில் அன்பு, இரக்கம் போன்றவை இல்லாமையை காட்டுகிறது. இன்றைய உலகில் எரிச்சல் அடைபவர்களே அதிகம், அதிலும் அதனை உளவியல் ரீதியாக நியாயப்படுத்துபவர்களும் அதிகம். எவ்வாறெனினும் கடவுளின் பார்வையில் இது ஒரு பாவமும், நோயுமாகும். எரிச்சலுக்கு எபிரேயம் பார்வை (רָאָה) என்ற சொல்லை பயன்படுத்துகிறது, இதிலிருந்து எரிச்சல் பார்வையில் இருந்து தொடங்குகிறது என்ற நம்பிக்கையை ஊகிக்கலாம். எரிச்சலோடு கோபமும் வருகிறது என்கிறார் ஆசிரியர். எரிச்சலும் கோபமும் சகோதரர்கள் போல. 
பல்லை நெரித்தல் (שִׁנָּיו יַחֲרֹק): பல்லை நெரித்தல் என்பது விவிலிய மொழியில் உள்ளார்ந்த அமைதியின்மையையும், நெருக்குதல்களையும் காட்டுகிறது. விலங்குகள் கோபத்தில் தம் பற்களை நறுக்குவதை போல பொறாமையுடையவர்கள் விலங்குகள் என ஆசிரியர் காட்டுகிறார். சோர்ந்து போதலை 'விருப்பம் அகன்றுபோதல்' என்று எபிரேய மூல பாடம் காட்டுகிறது (נָמָס תַּאֲוַת). இறுதியாக அனைத்திற்கும் 'அவர்களின் விருப்பம் எல்லாம் அழிந்து போகும்' என்று முடிவுரை எழுதுகிறார்.  

1கொரிந்தியர் 2,1-5
1சகோதர சகோதரிகளே, கடவுளைப் பற்றிய மறைபொருளை அறிவிக்க நான் உங்களிடம் வந்தபோது மிகுந்த சொல்வன்மையுடனோ ஞானத்துடனோ வரவில்லை. 2நான் உங்களிடையே இருந்தபோது மெசியாவாகிய இயேசுவைத்தவிர, அதுவும் சிலுவையில் அறையப்பட்ட அவரைத் தவிர, வேறு எதையும் அறியவேண்டும் என்று நினைக்கவில்லை. 3நான் உங்கள் நடுவில், வலுவற்றவனாய், மிகுந்த அச்சத்தோடும் நடுக்கத்தோடும் இருந்தேன். 4நான் பறைசாற்றிய செய்தி ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை. ஆனால் அது தூயஆவியின் வல்லமையை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. 5உங்கள் நம்பிக்கைக்கு அடிப்படை மனித ஞானம் அல்ல, கடவுளின் வல்லமையே.

கொரிந்திய திருச்சபைக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து கடந்த வாரத்திலும் வாசித்தோம். திருச்சபையில் பிளவுகள் சகித்துக்கொள்ள முடியாதவை, அத்தோடு அவை கிறிஸ்தவத்திற்கே எதிரானவை என்பதையும் முதாலவது அதிகாரம் அழகாகக் காட்டுகிறது. அத்தோடு மனிதர் பற்றிக்கொள்ள வேண்டியது உலக ஞானத்தை அல்ல, மாறாக இறைஞானத்தையே என்றும் அது காட்டுகிறது. இந்த இரண்டாவது அதிகாரம், கடவுளின் ஞானம் வேறொன்றுமில்லை அது சிலுவையின் ஞானமே என அழகாகவும், ஆழமாகவும் காட்டுகிறது. இந்த அதிகாரத்தில் இரண்டு முக்கியமான பிரிவுகள் உள்ளன அவை: 

அ. சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தி (வவ.1-5), 
ஆ. தூய ஆவியும் வெளிப்பாடும் (வவ.6-15) என்பவையாகும். 
பவுல் தன்னை தாழ்த்திக் கொள்வதில் வல்லவர், அவருடைய வரிகளைக் கொண்டு அவரை தவறாக எடைபோட்டுவிடக் கூடாது. பவுல் விவிலியத்தை நன்கு கற்றவர் அதனை முறையாக கமாலியேல் என்ற ராபியிடம் பயின்றார், அத்தோடு நல்ல பரிசேயனாக யூத மதம் மீதும், 
இஸ்ராயேல் மண் மீதும் உன்மையான காதல் கொண்டவர் (காண்க தி.பணி 22,3). பவுல் தர்சு நகரை சேர்ந்தவராதலால் அவருக்கு கிரேக்க மொழியும், அவர் உரோமைக் குடிமகன் என்பதால் 
இலத்தீனையும் நன்கு அறிந்திருப்பார். இருப்பினும் இவருடைய கற்றல் மற்றும் உலக மெய்யறிவுகள் அனைத்தையும் கிறிஸ்துவின் பொருட்டு குப்பையாக கருதுவதாலே (காண்க பிலி 3,8), இந்த வரியில் அவர் தாழ்ச்சியுடன் பேசுகிறார். அப்பலோவைப் போல பவுல் திறமையான பேச்சாளராக 
இருக்காவிடினும், பவுல் ஒரு கிறிஸ்து-மெய்யியல்வாதி என்பதை மறுக்க இயலாது. 

வ.1: இந்த வரி மூலம், இதனை எழுதியபோது அவர் கொரிந்தில் இல்லை என்பது புலப்படுகிறது. கிரேக்க விவிலியம், இந்த இடத்தில் பவுல் ஆண்களையும் பெண்களையும் விழிப்பதாகவே காட்டுகிறது. ἀδελφοί அடெல்பொய் என்ற பன்மைச் சொல், ஆண்களையும் பெண்களையும், அதுவும் நெருக்கமான நண்பர்களை குறிக்கிறது. இந்த வரியில் பவுல் யாரையோ மறைமுகமாக சாடுவதனைப் போலுள்ளது. மிகுந்த சொல்வன்மையுடனும் (ὑπεροχὴν λόγου), ஞானத்தோடோ (σοφίας), தான் உங்களிடம் வரவில்லை என்பதிலிருந்து இவை கிறிஸ்துவிற்கு முன் செல்லாக் காசு என்கிறார் போல. இதனை அவர் கடவுளின் மறைபொருள் என்கிறார் (μυστήριον τοῦ θεοῦ)

வ.2: முதலாவது வரியில் கொரிந்தியர் விரும்பியவற்றை தான் கொண்டுவரவில்லை என்று சொல்லி, இந்த வரியில் தான் என்ன கொண்டு வந்தார் என்பதைக் காட்டுகிறார். இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் முழுச் சுருக்கத்தையுமே இங்கே சுருக்கித்தருகிறார். 

அ. இயேசு மெசியா: இதுதான் பவுலுடைய நற்செய்தியின் சுருக்கம். சிலர் இயேசுவை மெசியா இல்லை என்றனர், சிலர் வேறு பலரை மெசியாவாகக் கண்டனர். இன்னும் சிலர், மெசியா இன்னும் வலவில்லை என்றனர். இந்த வேளையில், பவுல் தன் நற்செய்தியில் உறுதியாக இருப்பதை இந்த வரி காட்டுகிறது.

ஆ. அவர் சிலுவையில் அறையப்பட்டார்: சிலுவை யூதர்களுக்கு சாபம் (காண்க இ.ச 21,22), உரோமையருக்கு மடமை (காண்க 1கொரிந் 1,23), இருப்பினும் அந்த சிலுவையில் தான் மெசியா அறையப்பட்டார், இதனால் சிலுவை (σταυρός ஸ்டௌரொஸ்) மட்டுமல்ல இந்த உலகில் முழு ஞானமுமே மாற்றியமைக்கப்பட்டுவிட்டது என்பது புலப்படுகிறது. உரோமையர்கள் கொடுத்த தண்டனையில் கொடுரமான மற்றும் அசிங்கமான தண்டனையாக சிலுவை மரணமே 
இருந்தது. இதனை அவர்கள் உரோமையல்லாதவர்க்கு கொடுத்தார்கள். இயேசுவை காட்டிக்கொடுத்த யூதர்கள், இந்த தண்டனை மூலம் இயேசுவை கேவலப்படுத்தி அவரின் மெசியா தன்மையை மறைக்க முயன்றார்கள். ஆனால் இந்த சிலுவையே இன்று மெசியாவின் சிம்மாசனமாக மாறிவிட்டது. 
இறுதியாக, தனக்கு இந்த இரண்டையும் தவிர வேறெதையும் தான் நினைக்கவேண்டிய தேவை இல்லை என்கிறார். கொரிந்திய கிரேக்க பேச்சாளர்கள், தங்கள் நகரைப் பற்றியும், அல்லது அவர்களது கல்வித் தகமைகளைப் பற்றியும் பேசி கேட்பவர்களை மயக்குவார்கள். இது அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட விவாத முறையாக இருந்தது. இதனை பவுல் உடைக்கிறார். அவருக்கு இயேசுவையும் சிலுவையையும் தவிர வேறொன்றும் சரியாக படவில்லை. 

வ.3: தான் கொரிந்தியர் நடுவில் வலுவற்றவராகவும், அச்சத்தோடும், நடுக்கத்தோடும் இருந்ததாக கூறுகிறார் (ἀσθενείᾳ καὶ ἐν φόβῳ καὶ ἐν τρόμῳ πολλῷ). இது ஒரு பக்தர், கடவுள் முன் செபிக்கும் போது இருப்பதை குறிக்கும் நிலைகள். இந்த நிலைகள் ஒரு கிரேக்க பேச்சாளருக்கு ஏற்றதல்ல, அத்தோடு இவற்றை, கேட்பவர்கள் விரும்ப மாட்டார்கள். மேலும், இது படித்தவர்கான கலாச்சாரமுமல்ல. இந்த கிரேக்க பேச்சாற்றல் திறமைகளை, தான் கொண்டிருக்கவில்லை என்று சொல்லி தன்னுடைய ஞானம் கிரேக்க அல்லது மனித ஞானம் இல்லை என்பதை அழகாகக் காட்டுகிறார். 

வ.4: கிரேக்க மொழி, நம் தாய் மொழியைப் போல கவர்ச்சியான மொழி. இந்த மொழி பல ஆயிரம் ஆண்டுகளை கடந்து இன்று வரை சிறந்த மொழிகளில் ஒன்றாகவே இருக்கிறது. அக்கால அரிஸ்டோட்டில், சோக்கிரடீஸ் மற்றும் பிளேட்டோ போன்ற பேச்சாளர்கள், கிரேக்க கவர்ச்சியான மொழியைக் கொண்டே தங்கள் வாதங்களை திறமையாக முன்னெடுத்தனர். பவுல் தன்னுடைய நற்செய்திக்கு பலம் கொடுப்பது மனிதர்கள் உருவாக்கிய மொழியல்ல மாறாக ஞானத்தின் உறைவிடமாகிய தூய ஆவி என்கிறார். இவ்வாறு தன்னுடைய ஞானம், மனித வல்லமையிலல்ல மாறாக தூய ஆவியின் எடுத்துக்காட்டிலே தங்கியுள்ளதைக் காட்டுகிறார். 

வ.5: இந்த வசனம் தான் இந்த பகுதியில் மிக முக்கியமான வரி. இவ்வளவு நேரமும் தன்னுடைய நம்பிக்கையைப் பற்றிக் கூறிய பவுலடியார் இப்போது அதனை தன் வாசகர்களுக்கு கொடுக்கிறார். அதாவது, கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு அடிப்படை, அறிவல்ல (ἡ πίστις ὑμῶν μὴ ᾖ ἐν σοφίᾳ) என்கிறார். கிறிஸ்தவர்களின் நமபிக்கை மனித அறிவில் தங்கியருந்தால், அது மிக ஆபத்தாக அமையும், ஏனெனில் மனித அறிவு வளரும், பொய்பிக்கப்படும், மெய்ப்பிக்கப்படும் மற்றும் மாறும். 
முடிவில் கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு அடிப்படை கடவுளின் வல்லமை ஆகும் என்கிறார். கடவுளின் வல்லமை கிரேக்க ஞானமல்ல, அத்தோடு அது மனித ஞானமே அல்ல. அது ஒரு கொடை என்கிறார் பவுல்.  

மத்தேயு 5,13-16
13நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாய் இருக்கிறீர்கள். உப்பு உவர்ப்பற்றுப் போனால் எதைக் கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்க முடியும்? அது வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடும்; வேறு ஒன்றுக்கும் உதவாது. 14நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. 15எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை; மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்.✠ 16இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.

மத்தேயு நற்செய்தியின் ஐந்தாம் அதிகாரம் மிகவும் தனித்துவமானது அத்தோடு அது மிகவும் பிரசித்தி பெற்றது என்பதைக் கடந்த வாரம் கண்டோம். மத்தேயு நற்செய்தியின் ஆசிரியர் ஒரு ஆசிரிய போதகராக இருந்திருக்க வேண்டும், இதனால்தான் மிகவும் நேர்த்தியாக, அழகான உருவகங்கள் வாயிலாக ஆழமான சிந்தனைகனை முன்வைக்கிறார். இந்த பகுதி உப்பு மற்றும் ஒளி போன்ற உருவகங்களை சீடத்துவத்திற்கு கொடுக்கிறது. 

அ. உப்பு ἅλας ஹலாஸ்: விஞ்ஞானம் இதனை சோடியம் குளோரைட் (sodium chloride) என்று அறிவியல் படுத்துகிறது. விவிலிய காலத்தில் இந்த உப்பு ஒரு முக்கியமான அடையாளம். அரிஸ்டோட்டிலும் இந்த உருவகத்தை தன் எழுத்து வேலைகளில் பாவித்திருக்கிறார். உணவுகளை பதப்படுத்தவும், பாதுகாக்கவும் இந்த உப்பு தொழில் ரீதியாக பாவிக்கப்பட்டது. பயனற்ற உலர்ந்த நிலங்களை வளப்படுத்தவும் உப்பு விதைக்கப்பட்டது. அத்தோடு முடிவுறாத உறவிற்கும், பயனிற்கும் உப்பு அடையாளமாக பார்க்கப்பட்டது. மருத்துவத்திற்கும், சமய காரியங்களுக்கும் இந்த உப்பு அன்று பாவிக்கப்பட்டது (✽காண்க லேவியர் 2,13) இன்றைய உலகில் உப்பு இன்னும் பல தேவைகளுக்காவும், சிந்தனைக்காகவும் பாவிக்கப்படுகிறது. பாலஸ்தீன நாட்டில் நிலவிய கடுமையன வறட்ச்சி உடலில் உள்ள உப்பு தன்மையை உறிஞ்சியது இதனால் மேலதிகமாக இஸ்ராயேல் மக்கள் உப்பை சேர்த்து உண்டார்கள் (✽✽காண்க சீராக் 39,26). சாக்கடல் உப்பு விளைவிக்கும் முக்கியமான விளைநிலமாகும். இருப்பினும் சாக்கடல் உப்பு மிக நல்ல உப்பாக இல்லாத படியால் வடக்கு வாணிபர்களிடம் இஸ்ராயேலர் உப்பை வாங்கினர். இதனாலும் உப்பு மதிப்பு மிக்கதாய் 
இருந்தது. போரின் போதும், இராணுவம் தாங்கள் பிடித்த நிலங்களை அழிக்க உப்பைத் தூவினர் (✽✽✽காண்க நீதி 9,45). உப்பு சில வேளைகளில் எதிர் கருத்தை தந்தாலும் (ஒப்பிடுக யோபு 39,6), அதிகமான வேளையில் உப்பு நேர்முக சிந்தனையையே தருகிறது. எலிசா இறைவாக்கினர் உப்பைக்கொண்டே உதவாத நீரை நல்ல நீராக்கினார் (ஒப்பிடுக 2அரசர் 2,19-22). 
புதிய ஏற்பாடும் உப்பை அழகான உருவகமாகவே காட்டுகிறது. இயேசு தன் சீடர்களை உலகின் உப்பாக இருக்க கேட்கிறார் (மாற்கு 9,50: லூக்கா 14,34). தூய பவுல் கிறிஸ்தவர்களின் பேச்சுக்களை உப்பைப் போல் பாதுகாக்கும் கருவியாக இருக்க கேட்கிறார் (ஒப்பிடுக கொலொ 4,6). 

(✽13நேர்ச்சையான எந்த உணவுப்படையலும் உப்பிடப்பட வேண்டும். உன் உணவுப் படையலில் கடவுளின் உடன்படிக்கையாகிய உப்பைக் குறையவிடாமல் உன் நேர்ச்சைகள் அனைத்தோடும் உப்பையும் படைப்பாயாக.)
(✽✽26நீர், தீ, இரும்பு, உப்பு, கோதுமை மாவு, பால், தேன், திராட்சை இரசம், எண்ணெய், உடை ஆகியவை மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளாகும்.)
(✽✽✽45அபிமெலக்கு அந்நாள் முழுதும் நகருக்கு எதிராகப் போரிட்டு, நகரைக் கைப்பற்றினான்; அதனுள் இருந்த மக்களைக் கொன்றான்; நகரைத் தரை மட்டமாக்கி அதில் உப்பை விதைத்தான்.)

ஆ. ஒளி φῶς போஸ்: உலக படைப்பு தொடங்கி, உலகின் முக்கிய சக்திகளான கதிரவனையும் நிலாவையும் கொண்டே ஒளியின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம். அதிகமான மதங்களிலும் இலக்கியங்களிலும் ஒளி, மிக முக்கியமான அடையாளம். விவிலியம் ஒளியை உயிரின் அடையாளமாக காட்டுகிறது (காண்க ✽யோபு 3,16: ✽✽தி.பா 49,19). ஒளியில் நடத்தல் மற்றும் ஒளியில் வாழ்தல் போன்றவை நேர்மையான வாழ்வையும், கடவுளுடனான வாழ்வையும் குறிக்கின்றன. ஒளி வளமையையும், அத்தோடு மகிழ்ச்சியான வாழ்வையும் குறித்தது (✽✽✽காண்க எஸதர் 8,16). திருப்பாடல் ஆசிரியர் ஒளியை பல இறையியல் விழுமியங்களுக்கு பாவிக்கிறார். அத்தோடு ஒளி, கடவுளின் இறைமகிமையையும், மாட்சியையும் காட்டவும் அடையாளப்படுத்தப்படுகிறது. 
முதல் ஏற்பாட்டைப் போலவே புதிய ஏற்பாட்டிலும் ஒளி பல அடையாளங்களைக் கொடுக்கிறது. கிறிஸ்துவிற்கும் ஒளி ஓர் அடையாளமாக பாவிக்கப்பட்டுள்ளது (✽✽✽✽காண்க மத் 17,2). இயேசு தன்னுடைய சீடர்களையும் ஒளியின் மக்களாக இருக்க கேட்கிறார். பல புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களும், இந்த ஒளி உருவகத்தை பல கோணங்களில் பாவிக்கின்றனர் (✽✽✽✽✽ காண்க தி.பணி 13,47).

(✽16அல்லது முழுமை பெறாக் கருவைப் போலவும் ஒளியைக் காணாக் குழவியைப் போலவும் அழிந்திருப்பேன்.)
(✽✽19அவர்கள் தம் மூதாதையர் கூட்டத்தோடு சேர்ந்து கொள்வர்; ஒருபோதும் பகலொளியைக் காணப் போவதில்லை.)
(✽✽✽16யூதர்களுக்கு அது ஒளியின் நாள்! மகிழ்வின் நாள்! )
(✽✽✽✽2அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின.)
(✽✽✽✽✽47ஏனென்றால், 'உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னை வேற்றினத்தார்க்கு ஒளியாக ஏற்படுத்துவேன்' என்று ஆண்டவர் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்' என்று எடுத்துக் கூறினார்கள்.)

வ. 13: இயேசு தன் மக்களுக்கு உப்பை உருவகமாக பாவிக்கிறார், அதேவேளை இந்த பெறுமதியான பொருள் நேர்த்தியாக பாதுகாக்கப்படாவிட்டால் பொருளற்று போகும் என்று எச்சரிக்கிறார். யூத இராபிகள் இந்த உருவகத்தையே பாவித்தனர், அவர்கள் கருத்துப்படி அறிவில்லா யூதர்கள், உவர்ப்பற்ற உப்பிற்கு சமமான அறிவிலிகள் என்று திட்டினர். 
இதனையே இயேசு மென்மையாக தன் சீடர்களுக்கும், மக்களுக்கும் பாவிக்கிறார். 
நவீன உலகத்திலே உவர்பற்ற உப்பை காண்பது கடினம், அல்லது அதனை உப்பென்று அழைப்பதும் கிடையாது. உப்பு மேன்மையானது அத்தோடு பலமிக்கது. ஆனால் அதனை வெளி சக்திகொண்டு மீள உருவாக்க முடியாது என்பது அழகான செய்தி. கிறிஸ்தவர்களின் உள்ளார்ந்த சக்தி இயேசு, அவரைத் தவிர வேறு எந்த சக்தியும் இவர்களை மீட்க முடியாது என்கிறார் போல. 

வ. 14: மத்தேயு கிறிஸ்தவர்களுக்கு பாவிக்கும் இன்னொரு உருவகம், ஒளி. இந்த உருவகத்தின் முக்கியத்துவத்தை அறிந்தும், அத்தோடு உண்மையான ஒளி இயேசு என்பதை அறிந்தும்தான் இந்த உருவகம் பாவிக்கப்படுகிறது. உலகிற்கு ஒளி என்பது மிக முக்கியமான வார்த்தைப் பிரயோகம் 
(τὸ φῶς τοῦ κόσμου டோ போஸ் டூ கொஸ்மூ). யோவான் இந்த அர்த்தத்தை இயேசுவிற்கு பாவிப்பார் (✽காண்க யோவான் 9,5). மத்தேயு இதனை மக்களுக்கு பாவிப்பது மிகவும் நோக்கப்பட வேண்டியது. அந்த நாட்களில் பல நகர்கள் பல்வேறு தேவைகளுக்காக மலை உச்சியில் அமைக்கப்பட்டன. இந்த நகர்களில் இரவு வேளைகளில் ஏற்றப்படும் ஒளி, மற்றும் தீபங்கள் அந்த நகரையை ஒளிர்விக்கும். இதனைத்தான் மத்தேயு குறிப்பிடுகிறார்.
(✽5நான் உலகில் இருக்கும்வரை நானே உலகின் ஒளி' என்றார்.)

வ. 15: விளக்கு அக்காலத்தில் சாதாரண வீடுகளின் சொத்தாக இருந்தது. பணக்காரர்கள் ஆட்சியாளர்களைத் தவிர மற்றவர்கள் பந்தம் போன்ற விளக்குகளையே பாவித்தனர். இந்த பந்தங்கள் பாதுகாப்பிற்காகவும், அனைவரும் பாவிக்கும் படியாகவும், அதன் தண்டுகள் (λυχνία)  மேல் கவனமாக வைக்கப்பட வேண்டும. இந்த உதாரணத்தை மக்களின் நிலைக்கு அழகாக பாவிக்கிறார் மத்தேயு. மரக்கால் என்பது கூடைகளைக் குறிக்கும் (μόδιος), இந்த கூடைக்குள் விளக்கை வைத்தால் ஒன்றில் தீபற்றும் அல்லது அணைந்து போகும். 

வ.16: இங்கே ஒளி என்பது இயேசுவின் சீடர்களுடைய சாட்சிய வாழ்வை, இந்த சாட்சிய வாழ்வு ஒழித்து வைக்கப்படவேண்டிய வாழ்வல்ல, மாறாக ஒளிர வேண்டிய வாழ்வு என்கிறார் ஆசிரியர். கடவுளுக்கு மாட்சி கிடைக்க அவர் மக்கள் நல்ல வேலைகளைச் செய்ய வேண்டும் என்பது, சாட்சிய வாழ்விற்கும், வெளிச் செயற்பாட்டிற்கும் நெருங்கிய தொடர்பிருப்பதைக் காட்டுகிறது. 

கிறிஸ்தவ வாழ்வு, தியானங்களையும், செபங்களையும் கொண்ட,
மறைவான வாழ்வு மட்டும் கிடையாது. 
அது செயற்பாடுகள் நிறைந்தது. 
இயேசு வணங்கப்படவேண்டியவர்தான், 
இருப்பினும் முதலில் 
அவர் வாழப்பட வேண்டியவர்.

அன்பு ஆண்டவரே எம்மை, 
எமக்கும், உலகிற்கும், இயற்கைக்கும்,
உப்பாகவும், ஒளியாகவும், மாற்றும் ஆமென். 

மி. ஜெகன் குமார் அமதி
தூய செபஸ்தியார் பேராலயம், மன்னார்.
மகா ஞானொடுக்கம்.
வியாழன், 2 பிப்ரவரி, 2017


Thirty-third Sunday in Ordinary Time (C) ஆண்டின் பொதுக்காலம் முப்பத்தி மூன்றாம் வாரம் 13.11.2022

  Thirty-third Sunday in Ordinary Time (C) ஆண்டின் பொதுக்காலம் முப்பத்தி மூன்றாம் வாரம் 13.11.2022 Thirty-third Sunday in Ordinary T...