வியாழன், 9 மார்ச், 2017

Second Sunday of Lent: தவக்காலம் இரண்டாம் ஞாயிறு (அ)



தவக்காலம் இரண்டாம் ஞாயிறு (அ)
12,03,2017

முதல் வாசகம்: தொடக்க நூல் 12,1-4
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 33
இரண்டாம் வாசகம்: 2 திமோத்தேயு 1,8-10
நற்செய்தி: மத்தேயு 17,1-9

தொடக்க நூல் 12,1-4
1ஆண்டவர் ஆபிராமை நோக்கி, 'உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல். 2உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய். 3உனக்கு ஆசி கூறுவோர்க்கு நான் ஆசி வழங்குவேன்; உன்னைச் சபிப்போரை நானும் சபிப்பேன்; உன் வழியாக மண்ணுலகின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்' என்றார். 4ஆண்டவர் ஆபிராமுக்குக் கூறியபடியே அவர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் லோத்தும் சென்றார். ஆபிராம் ஆரானைவிட்டுச் சென்றபொழுது அவருக்கு வயது எழுபத்தைந்து.

தொடக்க நூல் பதினோராம் அதிகாரம் ஆபிராமை அறிமுகப்படுத்துகின்றது, இருப்பினும் பன்னிரண்டாவது அதிகாரத்தில்தான் ஆபிராம் கடவுளை சந்திக்கிறார். இந்த சந்திப்பில் ஆபிராம் ஆபிரகாமாய் மாறி அவருடைய இறப்பு வரை தொடர்கிறது. இன்று அவர்க்கும் கடவுளுக்கும் 
இடையிலான உறவு, அவருரடைய இறப்பின் பின்னரும், பல ஆயிரம் வருடங்களைக் கடந்தும் வாழ்ந்து வருகிறது. ஆபிராம் אַבְרָם, தெராவின் மகன், சாராவின் கணவர் இவருக்கு
இஸ்மாயில் மற்றும் ஈசாக்கு என்று மூத்த பிள்ளைகள் இருந்தனர். ஆபிரகாம், யூதம், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் போன்ற மூன்று மதங்களின் பிதாவாகக் கருதப்படுகிறார். இஸ்ராயேலர்கள் தங்கள் வழிமரபை ஈசாக் வழியாக காண்கின்றனர், இஸ்லாமியர்கள் தங்கள் வழிமரபை இஸ்மாயேல் வழியாக காண்கின்றனர், ஆனால் கிறிஸ்தவர்கள் தங்கள் வழிமரபை நம்பிக்கை வழியாக தொடர்கின்றனர். 
ஆபிரகாம் விசேட விதமாக கடவுளால் அழைக்கப்பட்டு தன்னுடைய சொந்த நாடான ஊரிலிருந்து கானானுக்கு செல்லச்சொல்லி அனுப்பப்படுகிறார். அங்கே அவர் பல தடைகளுக்கு பின் மக்கள் கூட்டத்தின் தந்தையாகிறார். ஆபிராம் என்கின்ற இவருடைய இயற்பெயர், ஆபிரகாமாக மாற்றப்படுகிறது. இதற்கு மக்களினங்களுக்கு தந்தை என்ற பொருளும் கொடுக்கப்படுகிறது. இந்த இரண்டு பெயர்களும் எபிரேயம் மற்றும் அரேமேயிக்க வட்டார வழக்குகளுக்கிடையிலான உச்சரிப்பு வேறுபாடுகளேதான் என்ற வாதமும் இருக்கிறது. இருப்பினும் பெயர் மாற்றம் ஒருவருடைய தனிமனித நிலையில் மாற்றம் ஏற்படுவதற்கான ஒரு அடையாளமாக இருக்கிறது. இதே போல ஆபிரகாமின் மனைவியின் பெயரும் சாராயிலிருந்து சாராவாக மாற்றப்படுகிறது (காண்க தொ.நூல் 17,15). பிற்காலத்தில் யாக்கோபின் பெயரும் யாக்கோபிலிருந்து இஸ்ராயேலாக மாற்றம் பெற்றது (காண்க தொ.நூல் 32,28)
வரலாற்று ஆபிரகாமிற்கும், விவிலியம் காட்டும் ஆபிரகாமிற்கும் பல வேறுபாடுகள் 
இருக்கலாம் என்ற வாதம் முற்காலத்திலிருந்தே முன்வைக்கப்படுகின்றன. விவிலிய ஆபிரகாம், தாவீதின் காலத்திற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்தான் வாழ்ந்ததாக காட்டப்படுகிறது. ஆனால் ஆராய்ச்சியாளர்கள் ஆபிரகாமை கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருக்கலாம் என வாதாடுகின்றனர் (இது இரண்டாம் வெண்கல யுகத்தைக் குறிக்கும்). ஆபிரகாம் இஸ்ராயேலின் தெற்கு அல்லது வடக்கு பாரம்பரியங்களின் அடையாளமாக காட்டப்படவில்லை, மாறாக அவர் முழு இஸ்ராயேல் இனத்தின் அடையாளமாக காட்டப்படுகிறார். இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரை (யாவே) மையாமாகக் கொண்ட மத அடையாளம். நிலங்களை வாங்குதல், மற்றைய அரசர்களுடன் சமரசம் செய்தல், மற்றும் இறந்தவர்களுக்கு நினைவிடம் அமைத்தல் போன்ற முக்கியமான செயற்பாடுகளின் தொடக்கமாக ஆபிரகாம் பார்க்கப்படுகிறார். இவைதான் ஆபிரகாமை குலமுதுவராகக் காட்டுகின்றன. ஆபிரகாமின் முன்னோர்கள் ஊர் தேசத்திலிருந்து ஹாரானுக்கு குடிபெயர்ந்திருந்தார்கள். இந்த ஹாரான் அக்காலத்திலிருந்து முக்கியமான பொருட்கள் கொண்டுசெல்லப்படும் பாதையாக இருந்தது. இஸ்ராயேல் மக்கள் தாங்கள் கானானியருடன் உறவில்லாதவர்கள் மாறாக ஹாரான் அல்லது மொசோபத்தோமியாவுடன் தொடர்புள்ளவர்கள் என்பதை காட்ட முயற்சிக்கிறார்கள். ஆபிரகாமுடைய முன்னோர்களின் பெயர்கள்கூட பல மொசோபத்தோமியா நகர்களை குறித்துக் காட்டுகின்றது. ஆபிரகாமுடைய சகோதரனான ஹாரானின் புதல்வர்கள் அரமேயர்களின் முன்னோர்களாக கருதப்படுகிறார்கள். இவர்கள் சிரிய பாலைநிலத்தில் வசித்தார்கள். லோத், மோவாபு மற்றும் அம்மோனியர்களின் முன்னோர்களாக கருதப்படுகிறார் (காண்க தொ.நூல் 22,20-23)
ஆபிரகாமின் மூன்று பிள்ளைகளும் பல இனங்களின் குலமுதுவர்களாக காட்டப்படுகிறார்கள். இஸ்மாயில் - அரபியர் அல்லது இஸ்மாயேலர், ஈசாக்கு - இஸ்ராயேலர் மற்றும் இதுமேயர், அத்தோடு கெத்தூரா வழியாக பிறந்த பிள்ளைகள் மற்றைய அரமயிக்க குலங்களின் மக்களாக காட்டப்படுகிறார்கள். அராபிய பாலைவன மக்கள் கூட்டங்களுக்கும், சிரிய பாலைவன மக்கள் கூட்டங்களுக்கும் ஆபிரகாமின் மற்றைய மனைவிகளுக்கு பிறந்த பிள்ளைகளுடன் தொடர்புள்ளவர்களாக காட்டப்படுகிறார்கள். அவர்களின் பெயர்கள் அக்காலத்திலிருந்து பாலைவன நகர்களை சுட்டிக்காட்டுகின்றன. 
இவற்றைவிட ஆபிரகாம் தன்னுடைய கேள்வியற்ற கீழ்ப்படிவிற்காக விவிலியத்தில் மின்னுகிறார். தெரியாத கடவுள், தெரியா நாடு, தெரியாத மக்கள் என ஆபிராகம் தனக்கு தெரிந்த அனைத்தையும் துறக்க தயாராக இருப்பது அவருடைய ஆழமான விசுவாசத்தைக் காட்டுகிறது. ஆபிரகாமின் கேள்வி கேட்காத கீழ்ப்படிவு பிறக்கால இணைப்பு என்று சொல்வதிற்கில்லை என அதிகமான ஆய்வாளர்கள் வாதாடுகின்றனர், ஏனெனில் ஈசாக்கின் கதையிலும் ஆபிராம் இப்படியான கேள்வி கேட்காத கீழ்ப்படிவை மேற்கொள்கிறார். இவ்வாறு முதல் ஏற்பாட்டையும் கடந்து புதிய ஏற்பாட்டிலும், இன்னும் பல கிறிஸ்தவ மற்றும் யூத இலக்கியங்களிலும் ஆபிரகாம் நம்பிக்கையின் முன்னுதாரணமாக திகழ்கின்றார். 

வ.1: இந்த வரிதான் தொடக்கநூலில் உள்ள ஆபிரகாமிற்கான கடவுளின் முதலாவது கட்டளை. ஆபிரகாமின் பெயர் ஆபிராம் என்று குறிப்பிட்பட்டுள்ளது (אַבְרָם). இங்கே ஆபிராகமிற்கு மூன்றுவிதமான கட்டளைகள் கொடுக்கப்பட்டுள்ளது:
அ. உன் நாட்டிலிருந்தும் מֵאַרְצְךָ֥
ஆ. உன் இனத்தவரிடமிருந்தும் מֵאַרְצְךָ֥
இ. உன் தந்தைவீட்டிலிருந்தும் מִבֵּ֣ית אָבִ֑יךָ
ஈ. நான் உனக்கு காண்பிற்கும் நாட்டிற்கு செல் אֶל־הָאָרֶץ אֲשֶׁר אַרְאֶךָּ
இந்த கட்டளைகள் ஒருவரின் மிக முக்கியமான அடையாளங்களையே தியாகம் செய்யச் சொல்லி கேட்கின்றன. இக்காலத்தை போலல்லாது, ஆபிரகாமின் காலத்தில் நாடும், இனமும், தந்தைவீட்;டாரும் ஒருவருக்கு மிக முக்கியமானவையாக கருதப்பட்டன.  இதனை வைத்தே ஒருவரின் உறவும் உரிமையும் அளவிடப்படுகின்றன. கடவுளை பின்பற்ற இந்த உறவுகளையும் உரிமைகளையும் ஆபிரகாம் துறக்கவேண்டியதாக உள்ளது. இந்த கட்டளைகளை கடைப்பிடிக்க ஆபிரகாமிற்கு சாதாரணமாக மிக கடினமாக இருந்திருக்கும், இருப்பினும் அவருடைய கடவுள் அனுபவம் இதற்கு துணையாக இருந்திருக்கலாம்.

வ.2: இந்த வரி முதலாவது வரியில் சொல்லப்பட்ட கட்டளைகளின் விளைவாக வருகிறது. ஏற்கனவே சொல்லப்பட்ட கட்டளைகள் வாயிலாக பின்வரும் வரப்பிரசாதங்கள் ஆபிரகாமிற்கு கிடைக்கின்றன.

அ. பெரிய இனமாக்குவேன் ג֣וֹי גָּדוֹל
ஆ. உனக்கு ஆசி வழங்குவேன் אֲבָ֣רֶכְךָ֔
இ. உன் பெயரை சிறப்புறச் செய்வேன் אֲגַדְּלָה שְׁמֶךָ
ஈ. நீயே ஆசியாக விளங்குவாய் הְיֵה בְּרָכָֽה

இந்த ஆசீர்கள் மிக முக்கியமானவையாக விவிலியத்தில் கருதப்படுகின்றன. பல விவிலிய நூல்கள் இந்த ஆசீர்களை முன்னுதாரணமாக எடுத்து விளக்குகின்றன. பெரிய இனமாகுதலும் கடவுளுடைய ஆசீரை பெறுதலும், முதல் ஏற்பாட்டில் மிக உன்னதமான பெறுபேறுகளாக கருதப்படுகின்றன. இந்த பெறுபேறுகளை ஆபிரகாம் கேட்காமலேயே பெற்றுக்கொள்கிறார். இது அவரின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன. இதில், 'நீயே ஆசீராய் விளங்குவாய்' என்ற சொற்றொடர் மிக முக்கியமானது. இந்த வரி ஆபிரகாமிற்கு மட்டுமே முதல் ஏற்பாட்டில் பொருந்துகின்றது. வேறெவர்க்கும் இந்த வார்த்தைகள் பாவிக்கப்பட்டாலும், அது அவர்களை ஆபிரகாமின் ஆசீர்களை நினைவூட்டுவதாகவே இருக்கிறது 

(※ஒப்பிடுக செக்கரியா 8,13). 
(※13யூதா குடும்பத்தாரே! இஸ்ரயேல் குடும்பத்தாரே! வேற்றினத்தாரிடையே நீங்கள் ஒரு சாபச் சொல்லாய் இருந்தீர்கள்; இப்பொழுதே நான் உங்களை மீட்டருள்வேன்; நீங்களும் ஓர் ஆசி மொழி ஆவீர்கள்; அஞ்சாதீர்கள்; உங்கள் கைகள் வலிமை பெறட்டும்.)

வ.3: ஆபிரகாமிற்கு வழங்கப்பட்ட ஆசீர் இப்போது அவர்வழியாக அவர் நாட்டிற்கும் முழு உலகிற்கும் வழங்கப்படுகிறது. ஆபிரகாமின் முக்கியத்துவத்தின் மூலமாக அவரைச் சார்ந்தவர்கள் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். ஆபிரகாமின் மக்கள் கடவுளின் மக்களாகவும், அவரின் எதிரிகள் கடவுளின் எதிரிகளாகவும் உருவாகுகின்றார்கள். இந்த ஆசீர்கள் சாதாரணமாக அரியணை ஏறும் அரசர்க்கு அவரின் தெய்வங்களின் ஆசீர்களாக கருதப்பட்டன. இங்கே ஆபிரகாம் இதற்கும் மேற்பட்ட ஆசீரை பெறுகிறார். இங்கே ஆசீர்வதிப்பவர் சாதரண உயிரற்ற தெய்வமல்ல, ஆசீர்வதிக்கப்படுகிறவர் சாதாரண அரசரும்மல்லர். ஆதாமின வாயிலாக மண்ணுலகு தண்டனை பெற்றதிற்கு பின்னர் ஆபிரகாமின் வாயிலாக அனைத்து மக்களினமும் ஆசீர்வதிக்கப்படுகின்றன. இந்த வரியை எபிரேய விவிலியம், 'அனைத்து மக்கள் கூட்டமும்' என்று (כֹּל מִשְׁפְּחֹת הָאֲדָמָה׃) காட்டுகிறது.  

வ.4: இஸ்ராயேல் மக்கள் தாங்கள் கானானியருடைய உறவினர்கள் இல்லை என்பதில் கவனமாக இருந்தார்கள். அவர்கள் தாங்கள் செமித்தியர்கள் அதாவது ஆபிரகாமின் வழிமரபினர், இந்த ஆபிரகாம் ஊரிலிருந்து ஹாரானுக்கும், பின்னர் ஹாரானிலிருந்து கானானிற்கும் வந்தவர். அவர் அப்படி வருவதற்கான காரணம், கடவுளைத் தவிர வேறொன்றும் இல்லை என்பதை இந்த வரி காட்டுகிறது. ஆபிரகாம் தனி மனிதனாக ஹாரானை விட்டு செல்லவில்லை, அவருடன் அவருடைய சகோதரன் லோத் வருகிறார். இந்த லோத் ஆபிரகாமைப் போல செமித்திய இனங்களின் மூதாதை. இவரிலிருந்துதான் மோவாபியரும், அமோனியரும் உருவாகினர் என்று விவிலியம் காட்டுகிறது. இந்த இனத்தவர்கள் இஸ்ராயேலருக்கு எதிரிகளாகவே காட்டப்படுகின்றனர், இதற்கு உதாரணமாக லோத்தின் மகள்கள் தந்தையுடன் கொண்ட தவறான உறவு காட்டப்படுகிறது (தொ.நூல் 19,30-38). இந்த நிகழ்வுகள் நடந்தபோத ஆபிரகாமின் வயது 75 ஆக இருக்கிறது. இந்த வயதின் மூலமாக ஆசிரியர், ஆபிரகாம் ஏற்கனவே நிறைவான வயதை அடைந்திருந்தார் என்பதைக் காட்டுகிறார். 


திருப்பாடல் 33
1நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. 2யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்; 
3புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக்குரல் எழுப்புங்கள். 4ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. 5அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. 6ஆண்டவரது வாக்கினால் வானங்கள் உண்டாயின் அவரது சொல்லின் ஆற்றலால் வான்கோள்கள் எல்லாம் உருவாயின. 
7அவர் கடல்நீரைக் குவியல்போல் சேர்த்துவைத்தார்; அந்நீரை ஆழ் நிலவறைகளில் சேமித்துவைத்தார். 
8அனைத்துலகும் ஆண்டவருக்கு அஞ்சுவதாக! உலகில் வாழ்வோர் அனைவைரும் அவருக்கு அஞ்சிநடுங்குவராக! 
9அவர் சொல்லி உலகம் உண்டானது அவர் கட்டளையிட, அது நிலை பெற்றது. 10வேற்றினத்தாரின் திட்டங்களை ஆண்டவர் முறியடிக்கின்றார்; மக்களினத்தாரின் எண்ணங்களைக் குலைத்துவிடுகின்றார். 
11ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும். 
12ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர். 
13வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார். 
14தாம் வீற்றிருக்கும் இடத்திலிருந்து உலகெங்கும் வாழ்வோரைக் கூர்ந்து நோக்குகின்றார். 15அவர்களின் உள்ளங்களை உருவாக்குகின்றவர் அவரே! அவர்களின் செயல்கள் அனைத்தையும் உற்று நோக்குபவரும் அவரே! 
16தன் படைப் பெருக்கத்தால் வெற்றிபெரும் அரசருமில்லை; தன் வலிமையின் மிகுதியால் உயிர் தப்பிய வீரருமில்லை. 
17வெற்றி பெறப் போர்க்குதிரையை நம்புவது வீண்; மிகுந்த வலுவுள்ளதாயினும் அது விடுவிக்காது. 18தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 
19அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். 
20நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். 
21நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். 
22உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!

திருப்பாடல் 33, புகழ்ச்சிப்பாடலாக கருதப்படுகிறது. இருப்பத்திரண்டு வரிகளைக்கொண்டுள்ள இந்தப் பாடல் அழகாக இரட்டை வரி அமைப்பில் பிரித்து நோக்கப்படுகிறது. தொடக்க மற்றும் முடிவு வரிகள் கடவுளில் மகிழ்வதற்கான அழைப்பை விடுகின்றன. அனேகமான திருப்பாடல்களைப் போல இந்த திருப்பாடலும் திருப்பிக்கூறல் என்ற எபிரேய கவிநடையில் அமைந்துள்ளது. இந்தப் பாடலுக்கு தலைப்பு வழங்கப்படவில்லை, இதனால் இதனுடன் தொடர்புள்ள விவிலிய பின்புலத்தை அறிவது கடினமாக இருக்கலாம். 

வ.1: இந்த வரி இப்பாடலின் ஆரம்ப அழைப்பாக பணியாற்றுகிறது. நீதிமான்கள் ஆண்டவரில் களிகூரக் கேட்கப்படுகிறார்கள். அதாவது நீதிமான்கள் என்பவர்கள் (צַדִּיקִים ட்சத்திகிம்), ஆண்டவரில் தங்களது திருப்தியை தேடக் கேட்கப்படுகிறார்கள், இச்செயலானது அவரைப் புகழ்வதற்கு பொருத்தமானது என சொல்கிறார் ஆசிரியர். 

வ.2: யாழ், எபிரேய இசைக்கருவிகளில் மிகவும் பிரசித்தமானது, இதனை வாசிப்பதில் தாவீது அரசர் விருப்பமுடையவராய் இருந்தார் என சொல்லப்படுகிறது. இது ஒருவகை நரம்பிசைக் கருவி. நம்முடைய யாழ் நகருக்கும் இதற்கும் தொடர்பிருப்பதாக ஈழ வரலாறு சொல்கிறது. பத்து நரம்பிசைக் கருவி என்றும் இதனை ஒத்த சொல்லில் அழைத்தார்கள். இதனைத்தான் ஆசிரியர் திருப்பிக்கூறும் நடையில் இங்கே பாவிக்கிறார். இதிலிருந்து இந்த திருப்பாடல் ஒரு புகழ்ச்சிப்பாடல் என்பது புலப்படுகிறது. ஆகவே திருப்பாடல்கள் வாசிக்கப்படுவதை விட, பாடப்படவேண்டும் என்பது உண்மையே.

வ.3: ஆண்டவருக்கு புதிய பாடல் பாடப்படவேண்டும் (שִׁיר חָדָשׁ), அவருக்கான பாடல்கள் திறம்பட இசைக்கப்பட வேண்டும் என்பதில் பல அர்த்தங்கள் இருக்கின்றன. ஆண்டவர் சாதாரண தலைவர்களைப் போல அர்த்தமில்லா உதட்டுப் புகழ்ச்சிக்கு உரியவர் அல்லர், அவர் மேன்மை மிக்கவர், இறைவன். இதனால் அவருக்கான பாடல்கள் எப்போதும் புதியனவாகவும், மகிழ்ச்சி ஒலியுடையதாகவும் இருக்க வேண்டும் என்பது இவர் நம்பிக்கை.
வ.4: வாக்கு என்பது ஒருவரின் அடையாளம். அரசர்களுடைய வாக்கு கட்டளை அல்லது ஆணை போன்றது, அது பொய்க்கக் கூடாது, இதனை விட ஆண்டவருடைய வாக்கு உண்மையானது என்கிறார் ஆசிரியர் (דְּבַר־יְהוָה தெவார் அதோநாய்). ஒருவருடைய வாக்கிற்கும் செயல்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பிருக்க வேண்டும். தாறுமாறான செயற்பாடுகள் நல்ல வாக்கை பிரதிபலிக்காது. ஆனால் ஆண்டவரைப் பொறுத்த மட்டில் அவர் வாக்கும் செயல்களும் (מַעֲשֶׂה) ஒன்றானவை என்கிறார். 

வ.5: ஆண்டவர் எதை விரும்புகிறார். சடங்குகளின் பெருக்கம், ஆண்டவர் சடங்குகளையும், பலிகளையும் மற்றும் இரத்தத்தையும் விரும்புகிறார் என்ற பொய்பிரச்சாரத்தை முன்வைத்தன. 
இஸ்ராயேல் இனம் குருத்துவத்தை மையப்படுத்தியபோது, இந்த ஆபத்துக்களை அதிகமாகவே எதிர்கொண்டது. ஆனால் ஆரம்ப காலத்தில் ஆண்டவர் பலிகளையோ அல்லது எரிபலிகளையோ விரும்பியதாக காட்டப்படவில்லை. இந்த பலிகள் அனைத்தும் காலத்தால் பிற்பட்டவை. 
இவற்றைவிட ஆண்டவர் உண்மையாக விரும்புவை, நீதியும் நேர்மையும் என்கிறார் இந்த ஆசிரியர் (צְדָקָ֣ה וּמִשְׁפָּט). இயேசு ஆண்டவருடைய படிப்பினைகளில் இந்த சிந்தனை ஆழமாக ஊடுருவி இருந்தது. இதன் காரணமாகத்தான் இந்த முழு பூவுலகுமே அவரது அன்பால் நிறைந்துள்ளது. ஆண்டவருடைய பேரன்பு என்பது முதல் ஏற்பாட்டில் மிக முக்கியமான சொற் பிரயோகம்

வ.6: இந்த வரி ஆண்டவரின் வாக்கின் பலத்தை காட்டி, அத்தோடு பிரபஞ்சத்தின் தொடக்கத்தையும் காட்டி நிற்கின்றன. பிரபஞ்ச படைப்புக்களை கடவுள்களாக பார்த்த அக்கால கானானிய மக்கள் நடுவில் வாழ்ந்த இஸ்ராயேலருக்கு கடவுளின் பெருமையையும், பிரபஞ்ச படைப்புக்களின் சிறுமையையும் காட்ட வேண்டிய தேவை ஆசிரியருக்கு இருந்தது. வானங்களும் (שָׁמַ֣יִם ஷமாயிம்), வான்கோள்களும் (כָּל־צְבָאָֽם கோல் ட்செவாம்), ஒன்றுமில்லை மாறாக கடவுளுடைய படைப்பே என்பது இவர் சிந்தனையில் உள்ள உண்மை. 

வ.7: வானங்கள் மட்டுமல்ல அதற்கு இணையாக கீழ் உள்ள நீரைப் மற்றும் அறிவிக்க வேண்டிய தேவை ஆசிரியருக்கு இருந்தது. கடல், பல விதத்தில் விவிலியத்தில் காட்டப்படுகிறது. சில வேளைகளில் இது நேர்முகமாகவும் பல வேளைகளில் எதிர் மறையாகவும் காட்டப்படுகிறது. இந்த கடலில்தான் தீய சக்திகள் உறைவதாகவும் அக்கால விஞ்ஞானம் கருதியது. ஆனால் கடவுளுக்கு முன்னால் இவையும் சாதாரண படைப்புக்களே. அத்தோடு இவையும் கடவுளின் சிந்தனையால் உருவானவையே என்று பெரிய விஞ்ஞானத்திற்கு, சிறிய ஆனால் ஆழமான முடிவுரையை எழுதுகிறார் ஆசிரியர். இந்தக் கடலை (מֵי הַיָּם), கடவுள் குவியல் போல் குவித்துள்ளார் எனச் சொல்கிறார், இது தொடக்க நூல் (※1,9) சிந்தனையை நினைவூட்டுகிறது எனலாம். நிலவறைகளில் சமுத்திர நீரை சேமித்துவைத்துள்ளார் கடவுள் என்கிறார் ஆசிரியர். இதற்க்கு תְּהוֹמֽוֹת தெஹோமோத் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆழ்கடல் நீர்கள் என்று எபிரேயம் காட்டுகின்றது. இது எதனை குறிக்கிறது என்பது தெளிவாக இல்லை. ஒருவேளை இது நிலக்கீழ் நீரைக் குறிக்கலாம். அத்தோடு ஆழமான பாதாளங்கள் நிலத்தின் கீழே உள்ளன என்பதும் இவர்கள் நம்பிக்கையாக இருந்தது. இந்த இடத்திலே கடவுள் நீரை சேமித்து வைத்துள்ளார் என்கிறார் ஆசிரியர். 
(※அப்பொழுது கடவுள், 'விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!' என்றார். அது அவ்வாறே ஆயிற்று.)

வ.8: ஆண்டவருக்கு அஞ்சுதல் என்பது ஒரு விவிலிய விழுமியம். இக்கால சிந்தனையில் இது மூட நம்பிக்கையாக பார்க்கப்படலாம். ஆனால் இந்த கடவுள் அச்சம் என்பது ஆழமான விசுவாசத்தைக் குறிக்கிறது. இந்த அச்சத்தின் காரணமாக மனிதர் நன்மைத் தனத்தை இறுக்கிப் பிடித்துக்கொண்டனர். இக்கால சிந்தனையில் இதனை மரியாதை கலந்த அன்பு என்று கூடச் சொல்லலாம். இன்று உலகில் உள்ள அவவிசுவாசம் மற்றும் காட்டுச் சுதந்திரத்திறத்திற்கான காரணமாக இந்த இறையச்சம் இன்மையே என்பது பலருடைய எண்ணம். 

வ.9: இந்த உலகத்தின் படைப்பு எப்படி உருவானது, அதனுடைய மூல கர்த்தர் யார் என்பது அக்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி முக்கியமான கேள்வியாக உள்ளது. புகழ்ச்சிப்பாடல்களில் பல மெய்யறிவுச் சிந்தனைகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதற்கான சான்றை இந்த வரியில் கண்டுகொள்ளலாம். உலகத்தை ஒரு சொல்லால் படைத்தவர் நம் கடவுள் என்ற ஆழமான மெய்யறிவு வாதத்தை முன்வைக்கிறார் ஆசிரியர். 'அவர் சொன்னார் அது உருவானது' என்பது இஸ்ராயேலின் அசைக்க முடியாத நம்பிக்கை (כִּי הוּא אָמַר וַיֶּהִי). இந்த வரியில் உலகம் என்ற எழுவாய் பொருள் எபிரேய விவிலியத்தில் இல்லை, ஆனால் முன்னுள்ள வரியில் அது உள்ளபடியால் தமிழ் விவிலியம் இந்த வரிக்கும் உலகு என்ற சொல்லை பயன்படுத்துகிறது. 

வ.10: ஆண்டவர் ஏன் வேற்றினத்தாரின் திட்டங்களை முறியடிக்க வேண்டும், ஏன் வேற்றினத்தார் தோற்க்க வேண்டும் என்பது நம்முடைய கேள்வியாக இருக்கலாம். கடவுள் இஸ்ராயேலின் கடவுள் மட்டுமல்ல, அவர் அனைவரின் கடவுள். இதனைத்தான் இயேசு காட்டினார். ஆனால் இங்கு வேற்றினத்தார் என குறிப்பிடப்படுகிறவர்கள் (גּוֹיִם கோயிம்), அனைத்து மக்களையும் குறிக்கவில்லை, மாறாக இஸ்ராயேலின் வீழ்ச்சியை விரும்பிய ஒரு குறிப்பிட்ட மக்களாக அல்லது அவர்களது தலைமைத்துவமாக இருக்கலாம். இங்கே இவர்களின் எண்ணங்கள் குலைக்கப்படுகிறது என்றால், இஸ்ராயேல் காக்கப்படுகிறது என்று பொருள். 

வ.11. தீயவர்களுடைய எண்ணங்கள் தீமையானவை, ஆனால் கடவுளுடைய எண்ணங்கள் அனைவருக்கும் நன்மையானவை. இதனால் இந்த எண்ணங்கள் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கும் (לְעוֹלָם), அவர் இதயத்தின் திட்டங்களும் அனைத்து பரம்பரைக்கும் உறுதியாக இருக்கும். ஆசிரியர் ஆண்டவருக்கும் இதயத்தைக் கொடுத்து மனித வார்த்தைகளில் அவரை வடிக்க முயல்கிறார்.  

வ.12: இஸ்ராயேல் இனம் அக்கால சமூதாயத்தில் ஒப்பிடுகின்ற வேளை மிக சிறியதாகவும், மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவும் இருந்தது. நிலத்தை பொறுத்த மட்டில் பெரிதாக வளமான நிலங்களை கொண்டிருந்தது என்று சொல்வதற்கும் இல்லை. இங்கே 'ஆண்டவரை தம் கடவுளாக கொண்ட இனம்' என்பதை 'யாவேயை கடவுளாக கொண்ட இனம்' (אֲשֶׁר־יְהוָה אֱלֹהָיו), என்று மொழிபெயர்க்க வேண்டும். இதனால் பலர் கடவுளாக பல தெய்வங்களை கொண்டிருந்த வேளை, இஸ்ராயேல் தங்கள் கடவுளாக ஆண்டவரை (அதோனாய்-யாவே) கொண்டிருப்பதனால் அது பேறுபெற்றது என்கிறார் ஆசிரியர். அதே வேளை ஆண்டவரும் இஸ்ராயேலை தன் உரிமைச் சொத்தாக எடுத்திருந்தார், இதனால் இஸ்ராயேல் பேறுபெற்றதாகின்றது. உரிமைச் சொத்தாக எடுத்தல் என்பது ஆட்சி அதிகாரம் அல்லது வாரிசு அதிகாரம் போன்றவற்றைக் குறிக்கும். இதனை இஸ்ராயேல் பெற்றுள்ளது என்பது இவர் வாதம். 

வ.13: கடவுள் எங்கிருக்கிறார், என்ன செய்கிறார் என்பதற்கு இந்த வரி விளக்கம் கொடுக்கிறது. வானின்று கடவுள் பார்க்கிறார், இதனால் கடவுள் வானில் இருக்கிறார் என்ற இவர்களின் நம்பிக்கை புலப்படுகிறது. ஆதாமின் மக்கள் அனைவரையும் பார்க்கிறார் என்று எபிரேய பாடம் வாசிக்கிறது. 
இங்கே ஆதாம் என்பவர் அனைத்து மக்களினங்களையும் குறிக்கிறார் (כָּל־בְּנֵי הָאָדָם).

வ.14-15: இந்த வரிகளும் பதின்மூன்றாவது வரியை ஒத்ததாக இருக்கின்றன. பார்த்தல் என்ற எபிரேய சொல் רָאָה (ரா'ஹ்), நோக்கல், கண்நோக்கல், அவதானித்தல், உற்றுபார்த்தல், ஆராய்தல் போன்ற அர்த்தத்தைக் கொடுக்கும். கடவுள் மனிதர்களின் உள்ளங்களை உருவாக்குகின்றவர் என்ற படியாலும், மனிதர்களின் செயல்களை உற்று நோக்குவதனாலும் அனைத்தும் அவருக்கு நன்கு தெரிந்திருக்கின்றன. 

வ.16-17: மனிதரின் பலம் என்ன?, அரசர் தன் படையால் காப்பாற்றப்பட முடியாதவர், படைவீரர் தன்னுடைய அதீத பலத்தாலும் மீட்கப்பட முடியாதவர், என்பது அக்கால இராணுவ அறிவுக்கு எதிரானது. ஏனெனில் சாதாரண அரசர்களும், வீரர்களும், தங்கள் படைபலத்திலும் உடல் வலிமையிலுமே அதிக கவனம் செலுத்தினர். இதனைத்தான் வீண் என்கிறார் ஆசிரியர். அதற்கான காரணத்தையும் வரலாறு இவருக்கு சொல்லிக் கொடுத்திருக்கலாம். இந்த பாடலின் ஆசிரியர் ஒரு அரசராக இருந்தால் இது அவருக்கு நன்கு தெரிந்திருக்கும். இந்த சிந்தனைக்கு மேலும் வலுவூட்ட போர்க் குதிரையை உதாரணமாக எடுக்கிறார் ஆசிரியர் (סּוּס சுஸ் குதிரை). அக்காலத்தில் குதிரையின் வலுவினைக் கொண்டு படைகளில் பலம் கணக்கிடப்பட்டது. இக்காலத்தில் இராணுவ வாகனங்களைப் போல. 

வ.18: இது இப்படியிருக்க கடவுள் யாரை காக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. அதற்கான விடையை, கடவுள் தமக்கு அஞ்சி நடப்போரையும், தம் பேரன்பிற்காக காத்திருப்போரையும் காக்கிறார் என்கிறார் ஆசிரியர். இந்த சிந்தனை ஏற்கனவே முன் வரியில் வந்திருக்கிறது. கடவுளுக்கு அஞ்சுதல் என்பது கடவுளில் நம்பிக்கை வைத்தல் என்பதைக் குறிக்கும். கடவுளின் அன்பிற்காக காத்திருத்தல் என்பதும் (לַֽמְיַחֲלִ֥ים), கடவுளில் நம்பிக்கை வைத்தலையே குறிக்கும்.

வ.19: இவர்களுக்கான உதவி சொல்லப்படுகிறது. கடவுள் இவர்களை சாவினின்று காக்கிறார் 
(מִמָּוֶת נַפְשָׁם), அத்தோடு அவர்களை பஞ்சத்திலும் உயிர்விக்கின்றார் (לְחַיּוֹתָם בָּרָעָב). இந்த வரியும் இராணுவ சிந்தனைகளையே பின்புலமாகக் கொண்டுள்ளது. போர் காலத்தில் பஞ்சமும் சாவும் நிச்சயமானவை, இதனை அரசரின் பலமோ, போர்க்குதிரைகளோ தவிர்க்காது. அதனை தவிர்க்கக்கூடியவர் ஆண்டவர் ஒருவரே. 

வ.20-21: இந்த வரிகளில் ஆசிரியர் இஸ்ராயேல் மக்களின் வரைவிலக்கணத்தைக் காட்டுகிறார். அவர்கள் ஆண்டவரை நம்பியிருக்கிறவர்கள், அவர்களின் கேடயமும் துணையும் ஆண்டவர் என்கிறார்;. இதனால் இதயம் களிகூர்வதாகவும், அவரது தூய்மையான பெயரில் நம்பிக்கை வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

வ.22: இந்த வரி இறுதியான வரியாக, வேண்டுதலாக வருகிறது. இறுதியாக ஆசிரியர் கடவுளின் பேரன்பிற்காக இரஞ்சுகிறார் (יְהִי־חַסְדְּךָ יְהוָ֣ה עָלֵינוּ). அதற்கான நியாயமாக தங்களுடைய எதிர்நோக்கை காட்ட முயற்சிக்கிறார். இந்த எதிர்நோக்கு (יָחִיל யாஹில்), இந்த எதிர்நோக்கு ஒரு விவிலிய விழுமியமாக இருக்கிறபடியால் இவருடைய வேண்டுதல் சரியான பாதையில் செல்கிறது எனலாம். 


2 திமோத்தேயு 1,8-10
8எனவே நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத் தேவை இல்லை; கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள். 9அவர் நம் செயல்களை முன்னிட்டு அல்ல, காலங்களுக்கு முந்திய தமது தீர்மானத்தின்படி, கிறிஸ்து இயேசு வழியாக நமக்கு அளிக்கப்பட்ட அருளின்படி நம்மை மீட்டுள்ளார்; நமக்குத் தூய அழைப்பு விடுத்துள்ளார். 10நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு உலகில் தோன்றியதன்மூலம் இப்போது அருள் வெளிப்பட்டுள்ளது. அவர் சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார்.

இரண்டாம் திமோத்தேயுவிற்கான திருமுகம் பவுலுடைய பணித்திருமுகங்களில் ஒன்று என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த திருமுகத்தை பவுல் எழுதினாரா என்பதில் சந்தேகம் 
இருந்தாலும் இது கொண்டுவருகின்ற இறையியல் சிந்தனைகள் பவுலுடைய ஆழமான இறையியல் சிந்தனையையே அடித்தளமாக கொண்டவை என்பதை மறுக்க முடியாது. அத்தோடு இங்கே சிந்திக்க வைக்கின்ற கருத்துக்கள் அனைத்தும் ஆரம்ப கால திருச்சபை சந்தித்த சவால்களை பிரதிபலிக்கின்றன என்ற தெளிவு இந்த திருமுகத்தை இன்னும் தெளிவாக வாசிக்க உதவி செய்யும். இந்த வரிகளுக்கு முந்தின வரிகளில் பவுல் தான் இயேசுவிற்காக கைதியாக இருப்பதாகவும், அதனைக் குறித்து பெருமைப்படுவதாகவும் கூறுகிறார். அத்தோடு திமோத்தேயுவின் விசுவாசத்தையும் அவர் முன்னோரின் விசுவாசத்தையும் திமோத்தேயுவிற்கு நினைவுபடுத்துவதன் வாயிலாக அவர், அந்த விசுவாசத்தை கட்டிக்காக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். அதேவேளை திமோத்தேயுவின் அபிசேக அனுபவத்தையும் மீள நினைவுபடுத்துகிறார் (வ.6). கோழைகளாக இருப்பது கடவுளின் அரசிற்கும், பணிக்கும் எதிரானது என்பதை வலிமையாகக் காட்டுகிறார் (வ.7). கைவிடுதல்களும், காட்டிக்கொடுப்புக்களும் சாதரணமாகவிருந்த ஆரம்ப கால திருச்சசபைக்கு இப்படியான வரிகள் மிகவும் அவசியமாக இருந்திருக்கும். 

வ.8: கிறிஸ்துவைப் பொருட்டு வெட்கம் அடைதல், முக்கியமான பிரச்சனையாக இருந்திருக்கலாம். பலருக்கு, தங்களுடைய பழைய யூத நம்பிக்கைக்கும், அல்லது உரோமைய-கிரேக்க நம்பிக்கைக்கும் எதிராக கிறிஸ்தவ நம்பிக்கை இருந்ததாகவும், இது வெட்கத்துக்குரியது என்ற சிந்தனை ஒரு உறுத்தலாக இருந்திருக்க வேண்டும். இதனைத்தான் திமோத்தேயுவின் பெயரில் விளக்குகிறார் ஆசிரியர். அதேவேளை கைதியாக இருக்கிறவர், குற்றவாளி. ஆக பவுல் ஒரு குற்றவாளி, இந்த குற்றவாளி எப்படி நற்செய்தியை அறிவிக்க முடியும் என்ற கேள்விகளையும் திமோத்தேயுவோ அல்லது ஆரம்ப கால திருச்சபையோ சந்தித்திருக்கலாம். இதனைத்தான் தேவையில்லா கவலை என்கிறார் பவுல். நற்செய்தியின் பெருட்டு துன்பமடைதல், என்பது மறைசாட்சியத்தின் அடித்தளமாக ஆரம்ப கால திருச்சபையில் இருந்தது. பவுல் இதனை வலுப்படுத்துகிறார். 

வ.9: இந்த துன்பம் மீட்கும் துன்பம். கிறிஸ்தவர்கள் அல்லது அனைவரும் மீட்கப்படுவது அவர்களுடைய செயல்களினால் அல்ல. இந்த சிந்தனை பிற்கால யூத சிந்தனைகளுக்கு முரணாக இருக்கிறது. பிற்கால சில யூத சிந்தனைகள், மனித செயல்கள் காரணமாகத்தான் மீட்பு கிடைக்கிறது என்று நம்பினார்கள். இதனை மறுக்கிறார் பவுல். மீட்பு என்பது காலங்களுக்கு முன்பே தீர்மானிக்கப்பட்டது. அதுவும் அந்த மீட்பு, அருளாக இயேசு ஆண்டவர் வழியாகத்தான் தரப்பட இருக்கிறது. இதற்கான அழைப்புத்தான் இப்பொழுது கிறிஸ்தவர்களுக்கு புதிதாக வழங்கப்பட்டுள்ளது. அழைப்புத்தான் புதிது, ஆனால் திட்டம் ஏற்கனவே இருந்தது. 

வ.10: அருள் இயேசு இந்த உலகத்தில் தோன்றியதன் மூலமாகத்தான் இது உண்மையாகிறது. (φανερωθεῖσαν δὲ νῦν διὰ τῆς ἐπιφανείας τοῦ σωτῆρος ἡμῶν  ⸂Χριστοῦ Ἰησοῦ⸃) இது பவுலுடைய முக்கியமான நற்செய்தி. அருள் உலகிற்கு ஆபிரகாம் மூலம் அல்லது திருச்சட்டங்கள் மூலம் அல்லது விருத்தசேதனம் மூலம் வந்தது என்ற பலர் கருதுகின்றவேளை, பவுல் அந்த அருள் உண்மையாக இயேசுவின் வருகையுடன் வந்திருக்கிறது என்கிறார். இயேசு கிறிஸ்துவை, 'நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு' (σωτῆρος ἡμῶν  ⸂Χριστοῦ Ἰησοῦ) என்பது பழங்கால நம்பிக்கை என்பது இந்த வரியில் புலப்படுகிறது. இந்த மீட்பர் செய்த செயல்கள் அறிக்கையிடப்படுகின்றன. ஒரு பக்கம் அவர் சாவை அழித்தார், மறுபக்கம் அழியா வாழ்வை நற்செய்தியின் ஒளியில் ஒளிரச் செய்தார். 


மத்தேயு 17,1-9
1ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். 2அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார். அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது. அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின. 3இதோ! மோசேயும் எலியாவும் அவர்களுக்கு முன் தோன்றி இயேசுவோடு உரையாடிக்கொண்டிருந்தனர். 4பேதுரு இயேசுவைப் பார்த்து, 'ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைக்கட்டுமா? இது உமக்கு விருப்பமா?' என்றார். 5அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது ஒளிமயமான மேகம் ஒன்று அவர்கள்மேல் நிழலிட்டது. அந்த மேகத்தினின்று, 'என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர்பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்' என்று ஒரு குரல் ஒலித்தது. 6அதைக் கேட்டதும் சீடர்கள் மிகவும் அஞ்சி முகங்குப்புற விழுந்தார்கள். 7இயேசு அவர்களிடம் வந்து அவர்களைத் தொட்டு, 'எழுந்திருங்கள், அஞ்சாதீர்கள்' என்றார். 8அவர்கள் நிமிர்ந்து பார்த்தபோது 
இயேசு ஒருவரைத்தவிர வேறு எவரையும் காணவில்லை. 9அவர்கள் மலையிலிருந்து 
இறங்கிவந்தபோது இயேசு, 'மானிட மகன் இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை இக்காட்சியைப்பற்றி எவருக்கும் சொல்லக்கூடாது' என அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

இயேசுவின் உருமாற்றம் சமநோக்கு நற்செய்திகள் மூன்றிலும் சிறு வித்தியாசங்களுடன் பதியப்பட்டுள்ளது. மாற்கு நற்செய்தியிலிருந்தும், பொதுவான மூலத்திலிருந்து மத்தேயுவும் லூக்காவும் இந்த தரவுகளைப் பெற்றிருக்கலாம். ஆனால் மத்தேயுவிலிருந்து லூக்கா சில இடங்களில் வேறுபடுகிறார், இந்த இடத்தில் இவர்களின் மூலத் தரவுகள் வௌ;வேறான இடங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன எனலாம் (ஒப்பிடுக மாற்கு 9,2-13: லூக்கா 9,28-36). ஆண்டவரின் உருமாற்றத்தை சமநோக்கு நற்செய்தியாளர்கள் காட்சியாக காட்டாமல் அதனை வெளிப்பாடாக காட்டுகின்றனர். இந்த வெளிப்பாடு முதல் ஏற்பாட்டில் கடவுள் தன்னை வெளிப்படுத்திய காட்சிகளை நினைவூட்டுகிறது. 

வ.1: இங்கே நடக்கிற நிகழ்வுகள் மற்றைய நற்செய்திகளில் முக்கியமான தரவுகளில் ஒன்றாகவும், சில இடங்களில் வேறாகவும் இருக்கின்றன. மாற்கு, லூக்காவைப் போல இயேசு தன்னோடு பேதுரு, யாக்கோபு, மற்றும் யோவானை கூட்டிக்கொண்டு உயரமான மலையொன்றிக்கு ஏறிச் செல்கிறார். மத்தேயு மாற்குவில் இது ஆறுநாட்களுக்குப்பின் நடைபெறுகிறது, லூக்காவில் இது எட்டு நாட்களுக்குப்பின் நடைபெறுகிறது. நற்செய்தியாளர்கள் எவரும் இங்கே இந்த உயரமான மலை எதுவென குறிப்பிடவில்லை. இனி மத்தேயுவின் தனித்துவங்களை உற்று நோக்குவோம்.
மத்தேயு, ஆறு நாட்களுக்குப்பின் இந்த நிகழ்வு நடைபெறுவதாக கூறுகிறார். இதனால் 
இதற்கு முன் முக்கியமான நிகழ்வொன்று நடைபெற்றுள்ளது என்பது புலப்படுகிறது. விவிலியத்தின் படி முன் அதிகாரங்களில் இயேசு தன் சாவை முன்னறிவிக்கிறார் (ஒப்பிடுக மத் 16,21-28). இயேசு தன்னோடு தன்னுடைய வழமையான மும்மூர்த்திகளை அழைத்துச் செல்கிறார், அவர்கள் பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான். இவர்கள் அனைத்து முக்கியமான நிகழ்வுகளிலும் இயேசுவோடு 
இருக்கிறார்கள். இப்படியிருக்க யோவான் நற்செய்தியில் இந்த நிகழ்வு தவிர்க்கப்பட்டுள்ளது. 
இதிலிருந்து இயேசு தன்னுடைய திருத்தூதர்களில் சிலருக்கு முக்கியமான அனுபவங்களை கொடுத்திருக்கிறார் எனலாம். இவர்கள் நான்கு பேரும், ஓரு பெயரிடப்படாத மலைக்கு தனிமையாக செல்கின்றனர். மலை ὄρος இங்கே கடவுளின் பிரசன்னத்தை குறிக்கும் உயரமான இடத்தை குறிக்கலாம். தனிமையாக κατ᾿ ἰδίαν  இவர்கள் செல்வது முக்கியமான விடயத்தை குறிப்பதாக இருக்கலாம். 

வ.2: இந்த வரி இங்கே ஒரு தெய்வீக காட்சி நடைபெறுவதைக் காட்டுகின்றது. இயேசு தோற்றம் மாறினார். இதற்கு கிரேக்க மூல பாடம் செயற்பாட்டு வினையை பாவிக்கிறது (μετεμορφώθη உருமாற்றப்பட்டார்) அத்தோடு இந்த நிகழ்வு, இந்த மூவருக்கும் முன்னால் நடைபெறுகிறது. பிற்கால யூதர்கள், நீதிமான்கள் பரலோகத்தை அடையும் வண்ணம் மாட்சியான உடலை பெறுவர் என்ற நம்பிக்கையை கொண்டிருந்தனர் (ஒப்பிடுக 1கொரிந்தியர் 15,42-49). இதனை இயேசு இவர்களுக்கு முன்சுவையாக காட்டுகிறார் என எடுக்கலாம். அவருடைய முகம் கதிரவனின் (ἥλιος ஹேலியோஸ்) முகத்தைப் போன்று ஒளிர்கின்றது. இது மோசேயின் முகத்தை நமக்கு நினைவூட்டுகிறது (காண்க வி.ப 34, 29-35). கதிரவன் கிரேக்க இலக்கியங்களில் முக்கியமான கடவுளின் அடையாளமாக இருக்கிறது. இந்து மத நம்பிக்கைகளிலும் இந்த தரவுகளைப் காணலாம். முதல் ஏற்பாடு சூரியனை கடவுளின் படைப்பாகவும் முக்கியமான தீச்சுவாலையாகவும், உலகத்திற்கு ஒளி தரும் முக்கியமான ஊடகமாகவும் காண்கிறது. கிறிஸ்தவ பிற்கால இலக்கியங்கள் கதிரவனை இயேசுவின் ஒரு அடையாளமாக காண்கிறது. 

வ.3: மோசேயும் எலியாவும் இயேசுவோடு உரையாடுகின்றனர். இந்த இருவரும் எபிரேய நம்பிக்கையில் மிக முக்கியமானவர்கள். மோசேயும் எலியாவும் ஒரே கடவுள் கொள்கையிலும், யாவே கடவுள் நம்பிக்கையினதும் மூல கர்த்தாக்கள் என யூத பாரம்பரியம் கருதுகின்றது. மோசே சட்டங்களின் தந்தையாக இருக்கிறார், அத்தோடு முதல் ஏற்பாட்டின் முதல் ஐந்து நூல்கள் (தோறா), மோசேக்கே அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இன்னுமாக முதல் ஏற்பாடு மேசேயை கடவுளின் நண்பனாகவும் பணியாளனாகவும் காட்டுகிறது (※காண்க சீராக் 45,1). சட்டத்தையும் மோசேயையும் பிரித்துப்பார்க்க முடியாது. இந்த மோசே இங்கே இயேசுவுடன் கலந்துரையாடுகிறார். இதே வேளை, யூதர்கள் இயேசுவை சட்டத்தை மீறுகிறார் என பலவேளைகளில் குற்றம் சாட்டியதை நினைவுகூர வேண்டும். எலியா இறைவாக்குகளின் பிதாப்பிதாவாக கருதப்படுகிறார். இந்த இறைவாக்கினர் வட அரசில் பணியாற்றினாலும், இவரின் ஒரு கடவுள் கொள்கையும், தாக்கமும் தென்நாட்டிலே மிகவும் பிரசித்தமாக இருந்தது. எலியாவிற்கென்று தனித்துவமான புத்தகங்கள் இல்லாவிட்டாலும்,எலியாவைப் போல ஒரு இறைவாக்கினரை இஸ்ராயேல் கண்டதில்லை. அத்தோடு மோசேயும் எலியாவும் மீண்டும் வருவார்கள் என்ற நம்பிக்கையும் இஸ்ராயேல் மக்களிடையே பரவலாக இருந்தது. மோசேயின் கல்லறையை மக்கள் கண்டதில்லை, அதே வேளை எலியா நெருப்புக் குதிரைத் தேரிலே எடுத்துக்கொள்ளப்பட்டார் எனவும் விவிலியத்தில் வாசிக்கிறோம் (காண்க 2அரசர் 2,11). இதனை பின்புலமாகக் கொண்டு இந்த இரண்டு பிரமாண்டமான கடவுளின் மனிதர்கள் நடுவில் இயேசுவை நிறுத்தி, இயேசு சட்டத்திற்கும், இறைவாக்கிற்கும் மையாமாக இருக்கிறார் என்று காட்டுகிறார் மத்தேயு. அத்தோடு இவர்கள் இயேசுவோடு உரையாடுகின்றார்கள், அதாவது இயேசு இவர்களைவிட பெரியவராக இருக்கிறார் என்பது புலப்படுகிறது போல. 

(※1யாக்கோபின் வழிமரபிலிருந்து இறைப்பற்றுள்ள ஒரு மனிதரைக் கடவுள் தோற்றுவித்தார்; அம்மனிதர் எல்லா உயிரினங்களின் பார்வையிலும் தயவு பெற்றார்; கடவுளுக்கும் மனிதருக்கும் அன்புக்குரியவரானார். அவரது நினைவு போற்றுதற்குரியது. அவரே மோசே!)

வ.4: பேதுருவின் கேள்வி சாதாரணமானதுதான். இயேசு தன்னுடைய உண்மையான முகத்தை காட்டிய போது அதனை பற்றிக்கொள்ள மனித பலவீனமான இதயம் முயற்ச்சி செய்கிறது. இங்கே பேதுரு துன்புறும் மத்தேயுவின் திருச்சபையை பிரதிபலிக்கிறார். முதல் ஏற்பாட்டிலே கடவுளுக்கு கூடாரம் அமைத்து அதனை சந்திப்பு கூடாரமாக மக்கள் கண்டனர். அங்கே மோசே தொடர்ச்சியாக கடவுளுடன் பேசினார். இதனை பேதுரு நினைத்திருக்கலாம். அத்தோடு இயேசுவின் உண்மையான மாட்சியில் இருப்பதுதான் நல்லது என ஆலோசனைவேறு சொல்கிறார். இருப்பினும் இயேசுவின் விருப்பத்தை கேட்கிறார் பேதுரு. 

வ.5: பேதுரு பேசிக்கொண்டிருக்கும் போதே காட்சி மாறுகிறது. இதிலிருந்து பேதுருவின் பேச்சு முக்கியமில்லாத பேச்சு அல்லது தெளிவில்லாத பேச்சு என்பதுபோல காட்டப்படுகிறது. இந்த வேளையில் ஒளிமயமான மேகம் ஒன்று இவர்கள் மேல் நிழலிடுகிறது (νεφέλη φωτεινὴ). முதல் ஏற்பாட்டில் முக்கியமாக, விடுதலைப் பயணத்தில் மேகம் கடவுளின் முக்கியமான ஓர் அடையாளம். இந்த மேகத்தின் உள்ளிருந்து வருகின்ற குரல் கடவுளின் குரலாகக் காட்டப்படுகிறது. இந்தக் குரல் முக்கியமான செய்தியை சொல்கிறது. οὗτός ἐστιν ὁ υἱός μου ὁ ἀγαπητός ἐν ᾧ εὐδόκησα·  ⸂ἀκούετε αὐτοῦ. 'இவர் என் அன்பு மகனாக இருக்கிறார், அவரில் நான் பூரிப்படைகிறேன், அவருக்க செவிகொடுங்கள்'. இந்த செய்தி ※இ.ச 18,15ஐ நினைவூட்டுகிறது. இப்படியான இன்னொரு செய்தி இயேசுவின் திருமுழுக்கின்போதும் சொல்லப்பட்டது, அது இங்கே மீளவும் உறுதிப்படுத்தப்படுகிறது (※※காண்க மத் 3,17)

(※15கடவுளாகிய ஆண்டவர் உன் சகோதரர் நடுவினின்று என்னைப்போல் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவார். நீ அவருக்குச் செவிகொடு.). 
(※※'என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்' என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது). 

வ.6: சீடர்கள் அஞ்சி முகம் குப்புறவிழுதல், இயேசு சாதாரண மனிதர் மட்டுமல்ல என்பதைக் காட்டுகிறது அல்லது அவர்கள் கண்டது மாயையோ அல்லது கனவோ அல்ல உண்மையான வெளிப்பாடு என்பதைக் காட்டுகிறது. முகம் குப்புற விழுதல் சாதாரணமாக கடவுளுக்கு முன்னால் செய்யப்படும் மரியாதையின் அடையாளம். 

வ.7-8: இயேசு அவர்களை தொட்டு திடப்படுத்துகிறார். இதிலிருந்து இங்கே நடக்கும் அத்தனை நிகழ்வுகளும் இயேசுவின் அறிவுடன்தான் நடைபெறுகின்றன என்பது புலப்படுகிறது. இயேசு தன் சீடர்கள,; சாதாரண மனிதர்கள் என்பதிலும் அக்கறையுள்ளவராயுள்ளார். எழுந்திருங்கள் மற்றும் அஞ்சாதீர்க்ள் என்றும் சொற்தொடர், கடவுளின் வார்த்தைகளை பிரதிபலிக்கின்றன. எழுந்த திருத்தூதர்கள் இயேசுவைத் தவிர வேறு எவரையும் காணாது விழிக்கிறார்கள். இதிலிருந்து இந்த வெளிப்பாடு ஒரு முக்கியமான செய்தியை சீடர்களுக்கு கொடுப்பதற்காகவே திட்டமிடப்பட்டு இயேசுவால் வெளிப்படுத்தப்பட்டது எனலாம்.

வ.9: இதுதான் இந்த காட்சியின் முக்கியமான செய்தி. அதாவது சீடர்கள் மலையிலிருந்து இறங்கி வரவேண்டும். வாழ்வின் நியதிகளை சந்திக்க வேண்டும். இயேசுவின் இறைதன்மையைப் போல, அவரின் பாடுகள் மிக முக்கியமானவை. பாடுகள் வரும் முன் அவரின் தெய்வீகத்தைப் பற்றி பேசுவது இயேசுவின் திட்டம் கிடையாது. இயேசுவின் இறப்பு உயிர்ப்பின் முன் இந்த செய்தி மற்றவர்களுக்கு சொல்லப்படக்கூடாது என்பது அவர் வேண்டுகோள் அல்ல, ஆனால் அது அவரின் கண்டிப்பான கட்டளை. ஒரு வேளை இதன் காரணமாகத்தான் நாம் இந்த செய்தியை அவருடைய உயிர்ப்பின் பிற் காலத்தில் பெறுகிறோம். 

பாடுகள் இல்லாமல் உயிர்ப்பில்லை, 
ஆபிரகாமிற்கு கொடுக்கப்பட்ட ஆசீர்வாதம், இயேசுவில் நிறைவடைகிறது.
இயேசுதான் சட்டத்தினதும் மற்றும் இறைவாக்குகளின் மையமும்,
நிறைவுமாகிறார். 

அன்பு ஆண்டவரே, 
நீரே எமது ஆசீர்வாதமாகவும், 
நாங்கள் மற்றவருக்கு ஆசீர்வாதமாகவும் அமைய
உதவிசெய்யும். ஆமென்.  

மி. ஜெகன் குமார் அமதி
தூய தொம்மையப்பர் ஆலயம்- மகாஞானொடுக்கம்
மாதகல், யாழ்ப்பாணம்.
புதன், 8 மார்ச், 2017




வியாழன், 2 மார்ச், 2017

First Sunday of Lent (A):தவக்காலம் முதலாம் ஞாயிறு (அ)



தவக்காலம் முதலாம் ஞாயிறு (அ)
05,03,2017

முதலாம் வாசகம்: தொடக்க நூல் 2,7-9: 3,1-7
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 51
இரண்டாம் வாசகம்: உரோமையர் 5,12-19
நற்செய்தி: மத்தேயு 4,1-11

தொடக்க நூல் 2,7-9: 3,1-7
7அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான். 8ஆண்டவராகிய கடவுள் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்துத் தாம் உருவாக்கிய மனிதனை அங்கே வைத்தார். 9ஆண்டவராகிய கடவுள் கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லா வகை மரங்களையும், தோட்டத்தின் நடுவில் வாழ்வின் மரத்தையும் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்தையும் மண்ணிலிருந்து வளரச் செய்தார்.

1ஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது. அது பெண்ணிடம், 'கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?' என்று கேட்டது.
2பெண் பாம்பிடம், 'தோட்டத்தில் இருக்கும் மரங்களின் பழங்களை நாங்கள் உண்ணலாம். 3ஆனால் 'தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது; அதைத் தொடவும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள்' என்று கடவுள் சொன்னார்,' என்றாள்.
4பாம்பு பெண்ணிடம், 'நீங்கள் சாகவே மாட்டீர்கள்; 5ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்' என்றது. 6அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான். 7அப்பொழுது அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன் அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர். ஆகவே, அத்தி இலைகளைத் தைத்துத் தங்களுக்கு ஆடைகளைச் செய்துகொண்டனர்.

மனிதனின் தொடக்கத்தைப் பற்றிய அறிவும் ஊகங்களும், மதங்கள் மற்றும் பாரம்பரியங்களுக்கிடையில் வித்தியாசமானவையாகவும், வியக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன. மனிதர் யார்? அவர்கள் எதிலிருந்து உருவானவர்கள்? அவர்கள் உருவானார்களா, அல்லது உருவாக்கப்பட்டார்களா? மனிதர்கள் சாதாரண விலங்குகளா? அல்லது அவர்கள் கூர்படைந்த சிந்திக்கும் விலங்குகளா? மனிதர்கள் ஆன்மாவை உடையவர்கள் என்பதன் பொருள் என்ன? மனிதர்கள் ஆறு அறிவுகளை உடையவர்கள் என்பதன் அர்த்தம் என்ன? மனிதர், கடவுளின் சாயல் என்பதன் அறிவு என்ன? இப்படியாக மனிதர்களைப் பற்றிய கேள்விகளும் அதற்கான விடைகளும் நீண்டுகொண்டே போகின்றன. மனித இனம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது மனிதரைப் பற்றிய கேள்விகளும் அத்தோடு அவற்றின் விடைகளும். இஸ்ராயேலை சுற்றி வாழ்ந்த கானானியர், பிலிஸ்தியர், எகிப்தியர், மொசொபெத்தோமியர், பாரசீகர், இந்தியர், மற்றும் கிரேக்கர் பலவிதமான அறிவை தங்கள் மக்களுக்கு புகட்டினர். இதில் சில மனித மாண்புகளுக்கு எதிராகவும் இருந்தன. பபிலோனிய ஏனுமா ஏலிஷ் (Enuma elish) மற்றும் உகாரித்திய பால் புராணம் (Ugaritic Baal epic) போன்றவை, மனிதர் பிளவுகள் அல்லது தெய்வங்களுக்கிடையிலான சண்டையிலிருந்து உருவானவர்கள் என்பதை காட்டின. இந்த அறிவு விவிலிய ஆசிரியர்களுக்கு நன்கு தெரிந்திருந்தது. அத்தோடு இது இஸ்ராயேல் பிள்ளைகளுக்கும், பலருக்கு அக்காலத்தில் தெரிந்திருக்கலாம். இப்படியிருக்க, இஸ்ராயேலின் விசுவாசம் தனித்துவமானது, மனிதர்கள் தெய்வங்களின் சண்டையால் உருவானவர்கள் அல்லர், மாறாக அவர்கள் கடவுளின் அன்பினாலும், சிந்தனையாலும், மற்றும் அவரின் சொந்த திட்டத்தினாலும் உருவானவர்கள். இயற்கையாக அவர்கள் நல்லவர்கள், இருப்பினும் அவர்கள் அலகையினால் சோதிக்கப்பட்டு பின்னர் தங்கள் தெய்வீக நிலையை இழந்தார்கள் என்று விவிலிய ஆசிரியர்கள் இஸ்ராயேலின் தனித்துவமான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். அத்தோடு இஸ்ராயேல் மக்களிடையேயும் கூட வித்தியாசமான அறிவுகள், மனிதரின் படைப்பைப் பற்றி இருந்திருக்கிறது என்பதற்கு தொடக்கநூலின் முதல் இரண்டு அதிகாரங்களும் நல்ல உதாரணங்கள். விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களில் நான்கு பாரம்பரியங்கள் (யாவே, குரு, எலோகிம் மற்றும் இணைச்சட்ட பாரம்பரியங்கள்) காணப்படுகின்றன இவற்றைப் பற்றிய புரிதல்கள் விரிவடைந்துகொண்டே வருகின்றன. தற்காலத்தில் இவற்றைப் பற்றிய சந்தேகங்களும் எழுகின்றன. இந்த பாரம்பரியங்கள் விவிலிய நம்பிக்கையை ஒவ்வொரு கோணத்தில் தத்தமது தேவைகளுக்கேற்ப விளக்க முயற்சிக்கின்றன. இந்த வகையில் மனிதனின் படைப்பை குரு பாரம்பரியமும், யாவே பாரம்பரியமும் வித்தியாசமாக காட்சிப்படுத்துகின்றன என அறிஞர்கள் நம்புகின்றனர். தொடக்க நூலின் முதல் அதிகாரம், குரு பாரம்பரியத்தில், கடவுள் மனிதரை தம் உருவில் ஆணாகவும், பெண்ணாகவும் படைத்ததாக காட்டுகிறது (❖காண்க தொ.நூல் 1,27). இரண்டாவது அதிகாரம், யாவே பாரம்பரியத்தில், கடவுள் மனிதரை தம் கரங்களாலே, அதுவும் மண்ணிலிருந்து படைத்ததாக காட்டுகின்றது. இந்த வித்தியாசத்திலிருந்து, ஆரம்ப கால இஸ்ராயேல் நம்பிக்கையில் மனிதரைப்பற்றிய பல படைப்புக் கதைகள் புழக்கத்திலிருந்திருக்கின்றன என ஊகிக்கலாம். இருப்பினும் விவிலிய ஆசிரியர் 
இந்த கதைகளை உபயோகித்து பல ஆழமான உண்மைகளை பகிர முயல்கிறார் என்பதை மறக்கக் கூடாது. இங்கே இவரின் முயற்சி விஞ்ஞான அறிவை தருவதல்ல, மாறாக விசுவாச உண்மையை தருவதே என்பதையும் மனதிலிருத்;த வேண்டும். இதனைவிட கிரேக்க காலத்தில் உருவாகி, விவிலியத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத பல கிரேக்க யூத புத்தகங்கள், மனிதரின் படைப்பை இன்னும் அதிகமாக கிரேக்க சிந்தனைகளில் விளக்க முயற்ச்சித்தன, இதற்கு உதாரணமாக ஏனோக்கு புத்தகத்தைக் எடுக்கலாம். 

(❖27கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்; கடவுளின் உருவிலேயே அவர்களைப் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.)

வ.7: இந்த வரி இஸ்ராயேலின் மனித படைப்பு பற்றிய ஒரு பாரம்பரியத்தை படம்பிடிக்கிறது. இந்த வரியில், ஆசிரியர் மனிதர் எவ்வாறு உருவானார் என்பதையும், அவர் எப்படி உயிரைப் பெற்றார் என்பதையும் விளக்குகிறார். மனிதரை கடவுள் நிலத்தின் மண்ணால் உருவாக்குகிறார், இந்த சொற்றொடரை எபிரேய விவிலியம் 'கடவுள் மனிதருக்கு நிலத்தின் தூசியிலிருந்து உருகொடுத்தார்' என்று வாசிக்கின்றது 
(וַיִּיצֶר֩ יְהוָ֨ה אֱלֹהִ֜ים אֶת־הָֽאָדָ֗ם עָפָר֙ מִן־הָ֣אֲדָמָ֔ה). உருவாக்கினார் அல்லது உருகொடுத்தார் என்பதற்கு பாவிக்கப்பட்டுள்ள வினைச் சொல், குயவன் சட்டி பானைகளை உருவாக்கும் வினையை ஒத்திருக்கிறது (יָצַר யட்சார்). இங்கே மனிதரின் மூலப் பொருளாக மண்ணின் தூசி (עָפָר֙ מִן־הָ֣אֲדָמָ֔ה) விளக்கப்படுகிறது. தூசி என்னும் சொல்லை காரணத்தோடே ஆசிரியர் பாவிக்கிறார், ஒருவேளை இது மனிதனை ஒரு சிற்பமாக காட்டுவதற்கான முயற்சியாக இருக்கலாம் அல்லது மனிதர் தூசிக்கு சமமான அற்ப்பப் பொருள் என காட்டும் ஒரு இறையியல் முயற்சியாகக் கூட இருக்கலாம். இன்றைய விஞ்ஞான அறிவு, மனிதர் கூர்படைந்து உருவானார்கள் என நம்புகின்றது, இருப்பினும் மனிதனின் உடலில், நிலத்திலுள்ள அதிகமான பொளதீக மூலக்கூறுகள் இருக்கின்றன என்பதையும் நிரூபிக்கின்றது. இது ஒரு ஆச்சரியமான உண்மை. 
மனிதரின் படைப்பில் இரண்டாவது முக்கியமான செய்தி அவர்களின் உயிர்மூச்சு பற்றிய செய்தி. இந்த உயிர் மூச்சை கடவுள் அவர்களின் நாசியில் ஊதினார் என சொல்கிறார் இந்த ஆசிரியர், இதனால் மனிதர் உயிரை அல்லது ஆன்மாவை பெற்றார் எனவும் சொல்கிறது 
(בְּאַפָּיו נִשְׁמַת חַיִּ֑ים וַֽיְהִי הָֽאָדָ֖ם לְנֶפֶשׁ חַיָּה׃). மனிதரின் சடப்பொருள் மண்ணாக இருந்தாலும் மனிதரின் உயிர் கடவுளுடையது என்பது மிகவும் அழகான இறையியில். இந்த உயிரை கடவுள் தாமே தன்னுடைய மூச்சிலிருந்து கொடுப்பதாக ஆசிரியர் காட்டுகிறார். இந்த ஆசிரியர் யாவே பாரம்பரியத்தை சார்ந்தவராதலால், இந்த படைப்புக் காட்சிகளை ஒரு திரைப்படம் போல மனித அமைப்புக்களில் வடிக்கிறார். 

வ.8: கடவுள் மனிதரை கிழக்கிலிருந்த ஏதேன் தோட்டத்தில் குடி அமர்த்துகிறார். ஏதேன் தோட்டம் (גַּן־בְעֵדֶן), இதனைப் பற்றி பல கதைகளும் புராணக்கதைகளில் உலகிலுள்ள அனைத்து மதங்களிலும் பாவனையில் உள்ளன. விவிலிய ஆசிரியர் இதனை கிழக்கிலிருப்பதாக கூறுகிறார் (מִקֶּדֶם). இந்த ஏதேன் என்பது, ஒரு இடம் என்பதைவிட, து ஒரு உணர்வாக இருப்பதாகவும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஏதேன் என்னும் சொல் எபிரேயத்தில் மகிழ்வைக் குறிக்கிறது (עֵדֶן). உண்மையில் இது எங்கிருந்தது, இதன் அர்த்தம் என்ன, ஏன் இதனை கிழக்கில் நிறுவுகிறார் ஆசிரியர் என்பவற்றை, இறையியல் சிந்தனைகளில் பார்பதே பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன். விவிலியத்தில் 19 தடவைகளாக இந்த ஏதேன் என்னும் சொல் பாவனையில் வருகிறது. பாரம்பரிய கதைகள் இந்த ஏதேன் தோட்டத்தை, கடவுளின் தோட்டமாகவும், அதனை ஆர்மேனியா, பபிலோனியா, மற்றும் கிழக்கு மொசோபத்தோமியா போன்ற 
இடங்களுடன் இணைக்கப் பார்க்கின்றன. ஒரு அரேமேயிக்க சொல் ஏதேனை (עדּן), சம வெளி என்றும் குறிப்பிடுகிறது. அத்தோடு ஏதேனோடு காட்டப்பட்டுள்ள நான்கு முக்கியமான ஆறுகளும், வித்தியாசமான இட அமைப்பைக் கொண்டுள்ளன. இவ்வாறு ஏதேன் என்னும் இந்த இடத்தை பற்றிய பல கதைகள் விவிலிய ஆசிரியருக்கு நன்கு தெரிந்திருந்தன, அத்தோடு இந்த இடத்தை அவர் கடவுளின் தோட்டமாகவும், அந்த தோட்டம் மகிழ்வின் தோட்டமாகவும் இருந்ததையே காட்ட விளைகிறார் என்பதை நினைவில் கொள்வோம்.  

வ.9: ஏதேன் தோட்டத்தில் என்னவெல்லாம் இருந்தது என்பது இங்கே காட்டப்படுகிறது. பலவிதமான மரங்கள் ஏதேன் தோட்டத்தில் நிறுத்தப்படுகிறன. முதலாவது வகையான காண்பதற்க்கு இனிமையான மரங்கள் என வகைப்படுத்தப்படுகின்றன. இந்த இனிமை மரத்தின் அழகை வர்ணிக்கின்றது (כָּל־עֵץ נֶחְמָד לְמַרְאֶה). இரண்டாவது வகை மரங்கள், உண்பதற்கு பொருத்தமான மரங்கள், அதாவது அதன் கனிகள் உண்ணக்கூடியவை (טוֹב לְמַאֲכָל). இறுதியாக முக்கியமான இன்னொரு மரம் அங்கே நிறுவப்படுகிறது. அது, நன்மை தீமையை அறியக்கூடிய மரமும், வாழ்வின் மரமும் ஆகும். இவை இரண்டு வகையான மரங்கள் போல தோன்றுகின்றன. வாழ்வின் மரம் (עֵץ הַֽחַיִּים֙) என்பது, வாழ்வைத் தரக்கூடிய கனியுடைய மரம் என்ற பொருளைத் தரலாம் (ஆறாம்  வேற்றுமை உருபு). நன்மை தீமையை அறியும் மரம் (וְעֵץ הַדַּעַת טוֹב וָרָע), இது முதல் ஏற்பாட்டில் அதிகமாக தேடப்பட்ட அல்லது வியாபிக்கப்பட்ட மிக முக்கியமான வார்த்தைகளாக இருக்கின்றன. இந்த மரம், அல்லது அதன் கனிகள் மனிதரை தங்களுடைய மனித சாயலில் இருந்து தெய்வீக சாயலுக்கு உயர்த்தக்கூடிய மரமாக விவிலிய ஆசிரியரால் பார்கப்படுகிறது. மனிதர் தன் சுதந்திரத்தை எந்தளவிற்கு பாதுகாக்கின்றார் என்பதை அளவிடக்கூடியதாகவும் இது அமைகிறது. விவிலிய தொல்பொருளியல் ஆய்வுகளில் இருந்து, கானானிய மக்களின் தெய்வக்கூட்டத்தில் மர வழிபாடு அல்லது மரத்தோடு சம்மந்தப்பட்ட ஒருவகையான வழிபாடு அக்காலத்தில் இருந்திருந்ததை காட்டுகிறன. அசேராக் கம்பங்கள் இந்த மர வழிபாட்டின் ஒரு அங்கம் என்பதை சிலர் ஏற்றுக்கொள்கின்றனர் (❖காண்க நீதி 3,7). இதிலிருந்து இந்த நன்மை தீமை அறியக்கூடிய மரம் என்பது சாதாரண மரத்தையும் தாண்டிய ஒருவகை அடையாளம் என்பது விளங்குகி;ன்றது. 
(❖7ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதை இஸ்ரயேலர் செய்தனர். தங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்து, பாகாலுக்கும் அசேராக்களுக்கும் ஊழியம் செய்தனர்.)

வ.1: பாம்பு (נָּחָשׁ֙ நாஹாஷ்) கடவுள் உருவாக்கிய மிருகங்களில் எல்லாம், பாம்பு சூழ்ச்சியானதாக காட்டப்படுகிறது. இந்த பகுதியில் பாம்பு ஒரு சாதாரண விலங்காகவே காட்டப்படுகிறது. அதிகமான 
இறையியலாளர்கள் பாம்பை சாத்தானின் அடையாளமாக காண்கின்றனர். இதற்கு அக்காலத்தில் இருந்து பாம்பு வழிபாடு மிக முக்கியமான காரணமாக இருந்திருக்கலாம். பாம்பு அதன் பலவீனத்தின் காரணமாக மிகவும், சூழ்ச்சியானதாகவும், நச்சுத் தன்மை வாய்ந்ததாகவும் காணப்படுகிறது. இது அதன் இயற்கையான ஒரு 'தக்கன பிழைக்கும்' வாழ்வியல் நியதி. பாம்பின் அமைப்பும், அதன் குணாதிசயங்களும், பாம்பை தீய சக்தியாக காட்டுகின்றன. இந்த நம்பிக்கைகள் இஸ்ராயேல் மக்களுக்கு மட்டுமல்ல, இன்னும் பல மதங்களிலும் காணக்கிடைக்கிறது. 
இந்த வசனத்தின் இரண்டாவது பகுதி, பாம்பை ஒரு பேசும் மிருகமாக காட்டுகின்றது. பாம்பு மற்றும் அனைத்து உயிரினங்களும் ஆரம்ப காலத்தில் பேசும் மிருகங்களாக இருந்ததாகவும், மனிதனுடைய பாவத்தின் காரணமாக அவைகள் தங்களது பேசும் திறனை இழந்ததாகவும் ஒரு பழைய நம்பிக்கை இருந்திருக்கிறது. கானானியர் மத்தியில் பிரபலமான பாம்பு வழிபாடு, இஸ்ராயேல் வழிபாடுகளில் ஆதிக்கம் செலுத்தாதிருக்கவே, தொடக்க நூல் ஆசிரியர், சாதாரண விலங்கினமான பாம்பை, சாத்தானின் அடையாளமாக உருவகிக்கிறார் என்றும் சிலர் வாதிடுகின்றனர். பாம்பு இங்கே சூழ்ச்சி நிறைந்த மிருகமாக காட்டப்படுகிறது. பாம்பின் கேள்வி பெண்ணை ஏளனப்படுத்துவதைப் போல உள்ளது. 

வ.2-3: தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை தொடவோ உண்ணவோ கூடாது என்றா ஆண்டவரின் கட்டளையை பெண் நினைவூட்டுகிறார் (וּמִפְּרִי הָעֵץ֮  אֲשֶׁ֣ר בְּתוֹךְ־הַגָּן֒). இங்கே தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனி என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. அது அப்பிள் என்றோ வாழ்வின் மரம் என்றோ குறிப்பிடப்படவில்லை. இங்கே மரம் மற்றும் கனி, போன்றவை அடையாளங்களாக குறிக்கப்பட்டுள்ளன. இதனை உண்மையான பொருட்களாக எடுப்பது அவ்வளவு ஆரோக்கியமாக இருக்காது. கீழ்ப்படிவுஆதிப் பெற்றோரிடம் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது. 

வ.4: மரத்தின் கனி சாவைத் தரும் என்கின்றபோது, சாத்தான், அது சாவைத்தராது என்கின்றான். 
இங்கே இரண்டு விதமான உறுதிகளை ஆசிரியர் காட்டுகிறார். மரம் மற்றும் கனி சாவின் அடையாளமாக இருக்கிறபோது, பாம்பு (சாத்தான்) அதனை மறுக்கிறது. பாம்பு 'நீங்கள் சாகவே சாக மாட்டீர்கள்' என்று அழுத்திச் சொல்கிறது (לֹֽא־מוֹת תְּמֻתֽוּן)

வ.5: சாவிற்கு பதிலாக இன்னொரு வரப்பிரசாதம் கிடைக்கும் என்றும் சொல்கிறது. அதனைப் பற்றி கடவுளுக்கு நன்கு தெரியும் என்றும் சொல்கிறது. அதாவது அந்தக் கனியை உண்ணும் நாளில், கண்ணகள் திறக்கப்படும் (נִפְקְח֖וּ עֵֽינֵיכֶ֑ם), கடவுளைப் போல நன்மை தீமையை அறியும் பலம் கிடைக்கும் (וִהְיִיתֶם֙ כֵּֽאלֹהִ֔ים יֹדְעֵי ט֥וֹב וָרָע). நன்மை தீமை அறியும் ஆற்றல் என்பது, கடவுளின் அதிகாரத்தை மிஞ்சிய ஒருவகையான சுதந்திரத்தை தரும் என்பதாகும். 

வ.6: தொடக்க நூலில் இந்த வசனம் மிக முக்கியமானது. இந்த வசனம் மனித குலத்தின் முதல் பாவத்தை பதிவு செய்கிறது. முதலில் அந்த பெண், அந்த குறிப்பிடப்பட்ட கனி உண்பதற்கு நலமாக இருப்பதாக காண்கிறார், ஏனெனில் அது கண்களுக்கு இனிமையாக இருக்கிறது. ஒருவரை ஞானியாக்கக் கூடியதாகவும் இருந்தது. கண்களுக்கு இனிமையானவை அனைத்தும் நன்மையானதல்ல அத்தோடு ஞானம் கடவுளிடமிருந்து வரவேண்டும் என்றும் ஆசிரியர் காட்டுகிறார். பின்னர் அந்தப் பெண், அந்த மரத்தின் கனியை எடுத்து உண்டார், அத்தோடு தன் கணவனுக்கும் கொடுத்தார். கணவனை பாவத்தில் விழசெய்வதற்கான முயற்சியாக இது இருந்திருக்காது என நினைக்கின்றேன். இங்கே தன்னுடைய செயலை தன் கணவனுடன் பகிர்ந்து கொள்கிறார். அவரும் தன் மனைவியின் செயலுக்கு துணை போகிறார். பெண் பாம்பை கேள்வி கேட்கவில்லை, ஆண் தன் பெண்ணின் செயலையும் வினவவில்லை. ஒருவருடைய செயலுக்கு மற்றவர் துணை போகின்றனர். 

வ.7: பாவத்தின் விளைவு காட்டப்படுகிறது. இவர்களின் கண்கள் திறக்கப்பட்டன என ஆசிரியர் ஒரு அடையாள செய்தியைக் குறிக்கிறார். அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதைக் உணர்கின்றனர். இந்த வசனத்திலிருந்து இவர்கள் இவ்வளவு நேரமும், ஆடையின்றி இருந்தும் அதனை ஒரு பொருட்டாக கருதவில்லை என்பது புலப்படுகிறது. இது இவர்களுக்கு அசிங்கமாக இருக்க அதனை மறைக்க அத்தியிலைகளை பாவித்து கச்சை செய்கின்றனர். ஏற்கனவே பாம்பு சொன்ன மெய்யறிவு, 
இங்கே இவர்களுக்கு தங்கள் உடம்பின் வெறுமையை அசிங்கமாகவும் ஏளனமாகவும் காட்டுகிறது. இந்த அறிவைத்தான் பாம்பு மெய்யறிவு என்று பொய் சொன்னது. 

திருப்பாடல் 51
1கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். 
2என் தீவினை முற்றிலும் நீங்கும் படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் 
தூய்மைப்படுத்தியருளும்; 
3ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக் கண்முன் நிற்கின்றது. 4உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன்; எனவே, உம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்; உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர். 
5இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்; பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள். 
6இதோ! நீர் விரும்புவது உள்ளத்து உண்மையையே; மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும். 7ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன். என்னைக் கழுவியருளும்; உறைபனியிலும் வெண்மையாவேன். 
8மகிழ்வொலியும் களிப்போசையும் நான் கேட்கும்படி செய்யும்; நீர் நொறுக்கிய என் எலும்புகள் களிகூர்வனவாக! 
9என் பாவங்களைப் பாராதபடி உம்முகத்தை மறைத்துக்கொள்ளும்; என் பாவக்கறைகளை எல்லாம் துடைத்தருளும். 
10கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும். 
11உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். 
12உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். 
13அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். 14கடவுளே! எனது மீட்பின் கடவுளே! இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்; அப்பொழுது, என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும். 
15என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். 16ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை. 
17கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. 
18சீயோனுக்கு இன்முகம் காட்டி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களை மீண்டும் கட்டுவீராக! 19அப்பொழுது, எரிபலி, முழு எரிபலியெனும் முறையான பலிகளை விரும்புவீர்; மேலும், இளங்காளைகள் உமது பீடத்தில் பலியாகச் செலுத்தப்படும்.

திருப்பாடல் 51, தனிமனித புலம்பல் பாடல் என இன்று அதிகமான திருப்பாடல்கள் ஆய்வாளர்களினால் ஏற்றுக்ககொள்ளப்படுகின்றது. இதன் முகவுரை, தாவீது இந்தப் பாடலை அவர் உரியாவின் மனைவியுடன் பாவம் செய்ததனை நாத்தான் இறைவாக்கினர் சுட்டிக்காட்டிய போது, அவர் உண்மையாகவே மனமாறினார், அந்த வேளையில் பாடிய பாடல் என காட்டுகிறது 
(בְּבוֹא־אֵלָיו נָתָ֣ן הַנָּבִ֑יא כַּֽאֲשֶׁר־בָּ֝֗א אֶל־בַּת־שָֽׁבַע׃). (ஒப்பிடுக 2சாமுவேல் 12,1-13). இருப்பினும் இந்த பாடல் சாமுவேல் புத்தகத்திலோ அல்லது குறிப்பேடு புத்தகத்திலோ குறிக்கப்படவில்லை. ஒருவரின் பாவம் மனமாற்றத்தாலே கழுவப்படுகிறது, மனமாற்றமில்லா வெறும் பலிகள் ஒருவரின் பாவத்தை கழுவாது அத்தோடு கடவுள் தன்னுடைய தண்டனைத் தீர்ப்பில் நேர்மையானவர் போன்ற பல ஆழமான சிந்தனைகளை இந்தப் பாடல் முன்வைக்கின்றது. கடவுளுடைய பார்வையின் முன்னால் அனைவரும் சமன், அவர்கள் அரசராக இருந்தாலும்கூட அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். மனமாற்றம் ஒன்றே ஒருவரை பாதுகாக்கும் என்பதும் இந்த ஆசிரியரின் நம்பிக்கை. இந்த திருப்பாடலின் அதிகமான வரிகளும் எபிரேய கவிநடையான திருப்பிக் கூறுதல் நடையை பிரதிபலிக்கின்றன. 

வவ.1-2: இந்த வரிகள் திருப்பாடல் 51ஐ அரசர் தாவீதுடன் சம்மந்தப்படுத்துகின்றன. இதன் காரணமாக தமிழ் விவிலியத்தின் வரிகளின் எண்ணிக்கைக்கும், எபிரேய விவிலியத்தின் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் வருகிறது. தமிழ் மற்றும் தேசிய மொழிகள் 19 வரிகளைக் காட்டுகின்ற அதேவேளை, எபிரேய விவிலியம் 21வரிகளைக் காட்டுகின்றது. இந்த இரண்டு வரிகளும் பின்நாளில் சேர்க்கப்பட்டவை என்ற ஒரு வாதமும் இருக்கின்றது. 

வ.3: ஆசிரியர் தன்னுடைய குற்றங்களை மன்னிக்குமாறு கடவுளை கேட்கிறார், இதற்கு ஆதாரமாக கடவுளின் பேரன்பையும் (חֶסֶד), அளவற்ற இரக்கத்தையும் (רַחֲמִים) கோடிடுகிறார். கடவுளுடைய இரக்கம் என்பது பாவிகளின் குற்றங்களை துடைத்தலாகும் என்று பாடுகிறார். இந்த முதலாவது வரியே, ஆசிரியர் தன் பாவத்தின் கனாகனத்தை உணர்ந்திருப்பதைக் காட்டுகிறது. 

வ.4: சாதரணமாக புலம்பல் பாடல்கள் வேண்டுதலை ஒரு பகுதியாகக் கொண்டிருக்கும். இந்த பாடலில் இந்த வேண்டுதல்கள் ஆரம்பத்திலேயே வருகின்றன. பாவம் (חַטָּאת) என்பதைப் பற்றி பல புரிதல்கள் விவிலியத்தில் இருக்கின்றன. அதனை இந்த பாடல் ஆசிரியர் உடலின் அழுக்குடன் ஒப்பிட்டு அதனை கடவுள் கழுவ வேண்டும் என்று மன்றாடுகின்றார். இந்த முதல் இரண்டு வரிகளில் மூன்று வகையான பாவத்தினை ஆசிரியர் காட்டுகிறார் (குற்றம், தீவினை, பாவம்), இவை ஏற்கனவே லேவியர் சட்டங்களில் நன்கு தெரிந்தவை (காண்க வி.ப 34,7).

(❖7ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு செய்பவர்; கொடுமையையும் குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர்; ஆயினும், தண்டனைக்குத் தப்பவிடாமல் தந்தையரின் கொடுமையைப் பிள்ளைகள் மேலும் பிள்ளைகளின் பிள்ளைகள் மேலும், மூன்றாம் நான்காம் தலைமுறைவரை தண்டித்துத் தீர்ப்பவர்' என அறிவித்தார்.)

வ.5: பாவ மன்னிப்பிற்கு முதலில் தேவையானது சுய அறிவு என்பதை ஆசிரியர் அழகாக காட்டுகிறார். தனக்கு தன்னுடைய பாவம் நன்கு தெரிவதாகவும், அந்த பாவம் தொடர்ச்சியாக தன் முன்னால் 
இருப்பதாகவும் கூறுகின்றார். 

வ.6: இந்த வரியில் தன்னுடைய பாவம் யாருக்கு எதிரானது என்பதைக் காட்ட முயல்கிறார். முதலில் தன் பாவம் கடவுளுக்கு எதிரானது என்பதை அறிக்கையிடுகிறார். பாவம் சமூக மயமானது, ஒருவர் தன் அயலவருக்கு எதிராக செய்யும் பாவங்கள் உண்மையாக கடவுளுக்கு எதிரானவை என்பதை 
இஸ்ராயேலர்கள் நன்கு அறிந்திருக்கின்றனர். இந்த பாடலின் ஆசிரியர் தாவீது என்று நாம் கருதினால், தான் உரியாவிற்கும் அவர் மனைவிக்கும் செய்த பாவம் உண்மையிலேயே கடவுளுக்கும், அவர் மாட்சிக்கும் எதிரான பாவம் என்பதை ஏற்றுக்கொள்கிறார். ஆண்டவர் தன் தீர்ப்பினால் நீதியை வெளிப்படுத்தினார் என்கிறார். நாத்தான் தாவீதை கடுமையாக கண்டித்தார் அத்தோடு இந்த பாவத்திற்கான தண்டனை கடுமையாக இருக்கும் என்று எச்சரித்தார் (காண்க 2சாமு 12,7-13). இந்த தண்டனை உடனடியாக பெத்செபாவின் முதலாவது மகனின் மரணத்துடன் தொடங்கி பின்னர், தாவீதின் சொந்த மக்களே அவர் மனைவியருடன் விபச்சாரம் செய்யும் அளவிற்கு நீண்டது. இந்த தண்டனையைத்தான் தாவீது நீதியான தண்டனை என்கிறார். 

வ.7: பாவியாக தன்னுடைய பாவத்திற்கு மன்னிப்பு கேட்கும் தாவீது, பாவம் எங்கு தொடங்குகின்றது என்பதற்கு விளக்கமும் கொடுக்கிறார். தான் பாவத்திலே பிறந்ததாக சொல்கிறார் (חוֹלָ֑לְתִּי). பாலியல் உறவு தறவான இச்சையினால் உருவாகிறது என்று அதிகமான கலாச்சாரங்கள் முற்காலத்தில் நம்பின. தூய அகுஸ்தினார் கூட, சென்ப பாவம் உடலியல் உறவினால் சந்ததிக்கு சந்ததி கடத்தப்படுகிறது என நம்பினார். தமிழ் இலக்கியங்கள் இதற்கு மாறாக, பல காலத்திற்கு முன்பே பாலியல் உறவு தூய்மையானது என்பதைக் காட்டிவிட்டன. இந்த பாடலில் தாவீது தன் தாய் பாவி என்று சொல்கிறாரோ என்ற கேள்வி எழுகிறது. இருப்பினும் அவர் தன்னை மட்டும்தான் பாவி என்று சொல்வதைப் போலத்தான் வார்த்தைகள் அமைந்திருக்கின்றன (בְחֵ֗טְא יֶֽחֱמַ֥תְנִי אִמִּֽי- பாவத்தில் என் தாய் என்னை கருத்தரித்தாள் ).

வ.8: இனிவருகின்ற வரிகளில் கடவுள் செய்யவேண்டியதைக் காட்டுகின்ற அதேவேளை, பாவ மன்னிப்பால் தான் செய்ய இருக்கின்ற பரிகாரங்களையும் வரிசைப் படுத்துகின்றார். கடவுள் விரும்புவது உள்ளத்து உண்மை (אֱמֶת), அத்தோடு மறைவாக ஞானத்தை அறிய செய்கின்றார் எனவும் பாடுகிறார். இங்கனம் உள்ளத்து உண்மையும் ஞானமும் ஒன்றோடொன்று சம்மந்தமாகின்றது. 

வ.9: ஈசோப்பு என்னும் ஒருவகை சிறிய தாவரம் எரிபலிகனின் மீது தண்ணீர் தெளிக்க பயன்பட்டது. இது ஒரு வகை பலிசெலுத்தும் சடங்கு முறை (காண்க 1அரசர் 4,33: வி.ப 12,22). திருப்பாடல் ஆசிரியர் இந்த வெளிச்சடங்கு முறையை உள்ளாந்த மனமாற்ற சடங்கு முறைக்கு ஒப்பிட்டு பார்க்கின்றார். பலிப்பொருட்கள் தூய்மையாக்கப் படுவதைப் போல, தானும் தூய்மையாக வேண்டும் என்பது இவர் விருப்பம். இதனால் இவர் உறைபனியிலும் வெண்மையாவார் என நம்புகிறார். இஸ்ராயேல் குளிர் காலங்களில் சிலவேளைகளில் உறைபனியை கண்டது. அத்தோடு வடக்கில் ஏர்மோன் மலையுச்சிகள் வெண்மையாக காட்சியளித்தன, 
இதனால் வெண்மை தூய்மை மற்றும் கடவுளின் நிறமாக பார்க்கப்பட்டது. 

வ.10: மகிழ்வையும் (שָׂשׂוֹן), சந்தோசத்தையும் (שִׂמְחָ֑ה) கேட்க வேண்டும் என விரும்புகிறார். இங்கே உருவக அணிகள் பாவிக்கப்பட்டுள்ளன. பாவ மன்னிப்பினால் ஒருவருக்கு மகிழ்ச்சியும் சந்தேசமும் வருகின்றது, 
இதனைத்தான் ஆசிரியர் கடவுளிடமிருந்து எதிர்பார்க்கிறார். பலமாக தாக்கப்படும் போது எலும்புகள் உடைகின்றன. இந்த தாக்குதல்கள் மனிதராலோ அல்லது மிருகங்களாலோ ஏற்படலாம். எலும்புகளில்தான் மனித உணர்வுகள் அடங்குகின்றன என்பது எபிரேய சிந்தனையாகவும் இருக்கிறது (עֶצֶם எட்செம் - எலும்பு, சுயம்). ஆக தன்னுடைய பாவத்தின் நிலையை எலும்புகள் உடைக்கப்படுதலுக்கு ஒப்பிடுகிறார் தாவீது. 

வ.11: தன் பாவங்கள் கொடூரமாக இருப்பதனால் அதனை கடவுள் பார்க்கக்கூடாது என விரும்புகிறார். அத்தோடு அந்த பாவக் கறைகள் துடைக்கப்படவேண்டும் எனவும் விரும்புகிறார். முகத்தை மூடிக்கொள்ளல் என்பது பாவத்திற்காக தீர்ப்பு வழங்க வேண்டாம் என்பதைக் குறிக்கிறது. பாவத்தை துடைத்தல் என்பதுவும் ஒரு சடங்கு போல காட்டப்படுகிறது.

வ.12-13: பாவத்தை கழுவி துடைக்கும் ஆண்டவர் மேலும் என்ன செய்யவேண்டும் என்பதைக் கேட்கிறார். புதிய இதயத்ததை உருவாக்கக் கேட்கிறார் (לֵב טָהוֹר בְּרָא־לִי). அத்தோடு புதியதும் உறுதியானதுமாக ஆவியை தன்னுள்ளே வைக்கவும் கேட்கிறார். தாவீது இங்கே கடவுளின் ஆவியை நினைவூட்டி மன்றாடுகிறார். சவுல் கடவுளுக்கெதிராக பாவம் செய்த போது தன் ஆவியை இழந்தார், அந்நாளில் இருந்து சவுல் தோற்கத் தொடங்கினார் (❖காண்க 1சாமுவேல் 16,14). ஒருவேளை இப்படியான நிகழ்வு தனக்கும் ஏற்பட்டு விடுமோ என்று தாவீது அஞ்சியிருக்கலாம். 

(❖14ஆண்டவரின் ஆவி சவுலை விட்டு நீங்க, ஆண்டவர் அனுப்பிய தீய ஆவி அவரைக் கலக்கமுறச் செய்தது.)

வ.14: தன் பாவத்தின் காரணமாக மீட்பின் மகிழ்ச்சி அவரிடமிருந்து சென்றுவிட்டதாகவும், அதனை மீண்டும் தரும் படியாகவும் கேட்கிறார். அத்தோடு முன்போல் இனியொரு போதும் பாவம் செய்யாதபடி தன்னார்வமாக கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும் பக்குவத்தையும் கேட்கிறார். 

வ.15: இங்கே தாவீது தன்னுடைய பணிகளை மீண்டுமாக நினைவூட்டுகிறார். ஒரு அரசர் குற்றம் செய்தவர்களையும், பாவிகளையும் திருத்தவேண்டிய கட்டயாத்தில் இருக்கிறார். ஆனால் அரசரே பாவம் செய்து கடவுளின் ஆவியை இழந்தால் அவரால் இந்த காரியங்களைச் செய்ய இயலாது போகும். இதனை நினைவில் கொண்டு, அரசர் தன் பணியை செய்ய முதலில் ஆண்டவர் அவரை மன்னிக்கவேண்டியுள்ளது.

வ.16: கடவுளை தன் மீட்பின் கடவுளாக விழித்து, இரத்த பழியினின்று தன்னை மீட்குமாறு வேண்டுகிறார் (מִדָּמִ֨ים). இரத்தப்பழி இங்கே ஒருவேளை உரியாவின் மரணத்தைக் குறிக்கலாம். தாவீதின் தூண்டுதலாலேயே யோவாபு உரியாமை அந்நியரின் கையாளே சாவடித்தார் (ஒப்பிடுக 2சாமு 11,17). இந்தப் பாவம் யோவாபை அல்ல தாவீதையே சாரும். இதனை தாவீது நினைத்திருக்கலாம். இதன் காரணமாக தான் நீதியற்றவனாக இருப்பதாகவும், கடவுளின் மன்னிப்பு அந்த நீதியை மீண்டும் கொண்டு வரும் என காட்டுகின்றார். 

வ.17: இந்த வரி ஒவ்வொரு நாளும் கிறிஸ்தவர்கள் தங்கள் புகழ்மாலை புத்தகத்திலே சொல்லுகின்ற ஆரம்ப வரி. 'ஆண்டவரே என் இதழ்களை திறந்தருளும், அப்போது என் நா உம்மை புகழ்தேற்றும்'. தன்னுடைய பாவத்தின் பொருட்டு பாடகராக தாவீது தன் இதழ்களை திறக்க முடியாமல் உள்ளார், இதனால் அவரால் கடவுளுடைய புகழையும் பாடமுடியாமல் உள்ளது. எனவே தன் பாவத்தை மன்னிக்க கேட்கிறார். 

வ.18-19: இந்த வரி மிக முக்கியமான வரி. எரிபலியினாலும் எந்தப் பலியினாலும் இஸ்ராயேலின் கடவுள் திருப்திப்படுத்தப்பட முடியாதவர். அவர், நீதியின் தேவன். நீதியொன்றே அவரை திருப்திப்படுத்த முடியும். இந்த வரிகளின் மூலமாக தாவீது பலிகளுடைய அல்லது எரிபலிகளுடைய முக்கியதுவத்தை 
இல்லாமலாக்குகிறார் என்று நினைக்க முடியாது மாறாக, அவர் அந்த பலிகளைவிட உன்மையான மனமாற்றமே மேலானது என்கிறார். நொறுங்கிய உள்ளமும் (ר֪וּחַ נִשְׁבָּ֫רָ֥ה நொறுங்கிய ஆவி), குற்றமுணர்ந்த 
இதயம் (לֵב־נִשְׁבָּ֥ר உடைந்த இதயம்), இதனை கடவுள் நல்ல பலியாக ஏற்றுக்கொள்கிறார் என்பது தாவீதின் நம்பிக்கை.  

வ.20: இந்த வரி தாவிதின் ஆசிரியத்துவத்தை சந்தேகிக்க வைக்கிறது. தாவீது இந்த பாடலின் ஆசிரியர் என்றால், ஏன் எருசலேமின் மதில்கள் உடைந்திருக்கின்றன? தாவீதின் காலத்தில் எருசலேமின் மதில்கள் உறுதியாக இருந்தன. சில ஆய்வாளர்கள் இந்த மதில்ளை மக்களின் விசுவாசத்திற்கு ஒப்பிடுகின்றனர். ஆக இங்கே தாவீது கடவுளிடம் கட்டச்சொல்லி கேட்பது கல் மதில்களை அல்ல மாறாக மக்களின் உள்ளங்களை என்று வாதிடுகின்றனர். சீயோனும் எருசலேமும் இங்கு ஒத்த கருத்துச் சொற்களாக மக்களையும் இடங்களையும் குறிக்கின்றன. 

வ.21: மனமாற்றத்தின் வாயிலாக, மற்றைய மிருக பலிகள் கடவுளால் விரும்பப்படும் என்பதை இந்த 
இறுதியான வரி பாடிநிற்கின்றது. 


உரோமையர் 5,12-19
ஆதாமும் கிறிஸ்துவும்
12ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது. 13திருச்சட்டம் தரப்படுமுன்பும் உலகில் பாவம் இருந்தது; ஆனால், சட்டம் இல்லாதபோது அது பாவமாகக் கருதப்படவில்லை. 14ஆயினும் ஆதாம் முதல் மோசே வரையில் இருந்தவர்கள் ஆதாமைப்போல் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்யவில்லை எனினும் சாவு அவர்கள்மீதும் ஆட்சி செலுத்திற்று; இந்த ஆதாம் வரவிருந்தவருக்கு முன்னடையாளமாய் இருக்கிறார்.
15ஆனால், குற்றத்தின் தன்மை வேறு, அருள்கொடையின் தன்மை வேறு. எவ்வாறெனில், ஒருவர் செய்த குற்றத்தால் பலரும் இறந்தனர். ஆனால் கடவுளின் அருளும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள்கொடையும் பலருக்கும் மிகுதியாய்க் கிடைத்தது. 16இந்த அருள்கொடையின் விளைவு வேறு, அந்த ஒரு மனிதர் செய்த பாவத்தின் விளைவு வேறு. எவ்வாறெனில், ஒரு மனிதர் செய்த குற்றத்துக்குத் தீர்ப்பாகக் கிடைத்தது தண்டனை. பலருடைய குற்றங்களுக்கும் தீர்ப்பாகக் கிடைத்ததோ அருள்கொடையாக வந்த விடுதலை. 17மேலும் ஒருவர் குற்றத்தாலே, அந்த ஒருவர் வழியாகச் சாவு ஆட்சி செலுத்தினதென்றால் அருள்பெருக்கையும் கடவுளுக்கு ஏற்புடையவராகும் கொடையையும் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவர் வழியாக அடைந்து கொண்டவர்கள் வாழ்வுபெற்று ஆட்சி செலுத்துவார்கள் என இன்னும் மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ?
18ஆகவே ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது. 19ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள். 20குற்றம் செய்ய வாய்ப்புப் பெருகும்படி சட்டம் இடையில் நுழைந்தது ஆனால் பாவம் பெருகிய இடத்தில் அருள் பொங்கி வழிந்தது. 21இவ்வாறு, சாவின் வழியாய்ப் பாவம் ஆட்சி செலுத்தியதுபோல், நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் அருள் ஆட்சி செய்கிறது அந்த அருள்தான் மனிதர்களைக் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக்கி, நிலைவாழ்வு பெற வழிவகுக்கிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில், பவுல் ஆதாமையும் கிறிஸ்துவையும் ஒப்பிட்டு அவர்களின் ஒற்றுமை வேற்றுமைகளை பரித்துக்காட்டுகிறார். பவுல் முதல் ஏற்பாட்டில் நல்லதொரு விற்பன்னர் அத்தோடு அவருக்கு பல விவிலிய ஆய்வு வழிமுறைகள் நன்கு தெரிந்திருந்தது என்பதையும் இது காட்டுகிறது. ஆதாம் இஸ்ராயேல் மக்களுக்கு மிக முக்கியமான ஒரு முதல் ஏற்பாட்டு நபர். அவரோடு வரவிருக்கின்ற மெசியா தொடர்பு பட்டிருக்கிறார் என்பதும் இஸ்ராயேலர்களின் நம்பிக்கை. இதனை யூதராக பவுல் நன்கறிந்திருக்கிறார். அதனையே இங்கு அவர் உரோமைய திருச்சபைக்கு விளக்குகிறார். ஆதாம்-இயேசு, குற்றம், பாவம் - கீழ்படிவு, அருள் மற்றும் கடவுளுக்கு ஏற்புடையவராதல் போன்ற கருத்துக்கள் இந்த பகுதியில் மீண்டும் மீண்டும் வருகின்றன. பாவத்தின் சம்பளம் மரணம் (❖உரோ 6,23) என்கின்ற பவுலுடைய முக்கியமான சிந்தனை இந்த அதிகாரத்தில் வளர்வதைக் காணலாம். 

(❖23பாவத்துக்குக் கிடைக்கும் கூலி சாவு; மாறாகக் கடவுள் கொடுக்கும் அருள்கொடை நம் ஆண்டவர் கிறிஸ்து இயேசுவோடு இணைந்து வாழும் நிலைவாழ்வு.)

வ.12: ஒரு மனிதனால் இந்த உலகத்திற்கு பாவம் (ἁμαρτία ஹமார்தியா), அதனால் அனைவருக்கும் மரணம் (θάνατος தனாடோஸ்), வந்தது என்பது பவுலுடைய வாதம். இந்த வரியில் யார் இந்த ஒரு மனிதர் என்பதை அவர் நேரடியாக விளக்கவில்லை, மாறாக இந்த பகுதியின் சூழலியலிலிருந்து அது ஆதாம் என்பது புலப்படுகிறது. அத்தோடு அனைவரும் பாவம் செய்தவர்கள் என்பதன் வாயிலாக முழு பாவத்தின் பொறுப்பையும் ஆதாமின் தலையில் போடாதவாறு கவனமாக இருக்கிறார் பவுல். அனைவரும் பாவம் செய்ததன் வாயிலாகத்தான் சாவு அனைவரையும் கௌவிக்கொண்டது என்கிறார். 

வ.13: திருச்சட்டம் (νόμος நொமொஸ்) என்பது இஸ்ராயேல் மக்களுக்கு மிகவும் முக்கியமான அடையாளம். இந்த திருச்சட்த்தின் வாயிலாக அவர்கள் கடவுளின் பிள்ளைகளாகின்றனர் என்ற வாதத்தை முன்வைத்தனர். ஆனால் திருச்சட்டம் ஆபிரகாம் அல்லது மோசே வாயிலாகத்தான் இஸ்ராயேல் மக்களுக்கு தரப்பட்டது. இதனை வைத்துக்கொண்டு பாவம் என்பது திருச்சட்டம் வந்ததன் பின்னால்தான் கண்டுபிடிக்கப்பட்டது என்று சொல்ல முடியாது. திருச்சட்டத்திற்கு முன்பே பாவம் இருந்தது, அத்தோடு அது தெரியாமலிருந்தது (οὐκ  ⸀ἐλλογεῖται) என்பது பவுலடியாருடைய வாதம். 

வ.14: ஆதாமிற்கும் அவருக்கு பின் வந்த மோசே போன்ற முக்கியமானவர்களையும் வாதத்திற்குள் கொண்டு வருகிறார் பவுல். ஆதாம் கீழ்படியாமையால் பாவம் செய்தார், ஆனால் அவரைப்போல் மோசே மற்றும் மற்றவர்கள் பாவம் செய்யவில்லை இருந்தாலும் அவர்களும் இறந்தனர். பாவம் ஆதாம் முதல் அனைவர் மேலும் ஆட்சிசெலுத்தியது (ἐβασίλευσεν ὁ θάνατος ἀπὸ Ἀδὰμ μέχρι Μωϋσέως). இந்த ஆதாம் வரவிருந்த கிறிஸ்துவின் முன்னடையாளம். 

வ.15: ஆதாம் பற்றியும் பாவத்தை பற்றியும் விவாதித்த பவுல் இந்த வரியில் அருளைப் பற்றி விவாதிக்கிறார். ஒருவடைய பாவத்தால் பலரும் இறந்தனர், அதனைவிட ஒருவருடைய அருட்கொhடையால் அனைவரும் அருளடைந்தனர். இந்த ஒருவர் இயேசு கிறிஸ்து. இந்த இயேசுக் கிறிஸ்துவை பவுல் கடவுளுடைய ஒரே மனிதர் என்கிறார் (ἑνὸς ἀνθρώπου Ἰησοῦ Χριστοῦ). கடவுளுடைய உண்மையான மனிதர் யார் என்ற கேள்விக்கு அவர்தான் இயேசு என்று விடையளிக்கிறார் பவுல். இயேசு கடவுளின் மனிதர் என்பது அக்காலத்தில் வழக்கிலிருந்த இயேசுவிற்கான ஓர் அடைமொழி என்ற ஊகிக்கலாம். 

வ.16: அருட்கொடையையும் பாவத்தையும் ஒப்பிட்டு விளக்கினாலும், இவையிரண்டும் வேறானவை என்பதில் பவுல் கவனமாக இருக்கிறார். ஒருவருடைய பாவத்தால் சாவு வந்து அனைவரையும் ஆட்கொண்டது அதேவேளை ஒருவருடைய அருளால் அனைவரையும் அருள் உள்வாங்குகின்றது. இந்த அருள்கொடையின் பலன் விடுதலை என்கிறார் பவுல். இந்த விடுதலை என்ற தமிழ்ச்சொல்லுக்கு நீதித்தீர்ப்பு δικαίωμα என்று சொல்லிடுகிறது மூல பாடம் கிரேக்கம். 

வ.17: இயேசு என்னும் ஒருவரால் எப்படி அனைவரும் அருள் பெறமுடியும் என்பது யூதர்கள் மற்றும் கிரேக்க உரோமையர்களின் கேள்வியாக இருந்தது. இதற்கு பவுல் பாவம் மற்றும் மரணத்திலிருந்து விடையளிக்கிறார். ஒருவரின் குற்றம் சாவை தருகின்றது என்போமானால், அதேபோல ஏன் ஒருவரின் வழியாக அருள்பெருக்கையும், கடவுளுக்கு ஏற்புடையவராதலையும் ஏன் பெற்றுக்கொள்ள முடியாது என்கிறார் பவுல். 

வ.18: இந்த வரி மேலுள்ள வாதங்களுக்கு முடிவுரை எழுதுகின்றது. அதாவது ஒருவருடைய குற்றம் பலருக்கு தண்டனைத் தீர்ப்பை வழங்கியது (κατάκριμα), அதேபோல ஒருவருடைய நீதியான வாழ்வு பலருக்கு நீதியான வாழ்வை பெற்றுக்கொடுத்துள்ளது (δικαίωσιν ζωῆς)

வ.19: இந்த வரியில் பவுல் கீழ்படிதலைப்பற்றி பேசுகிறார் (ὑπακοή உபாகொயே). கீழ்ப்படிவு என்பது கடவுளுடைய சட்டங்களை கடைப்படிப்பதாகும். இதனை கடைப்பிடிக்காமல் பலர் பாவிகளாயினர், அதேபோல் ஒருவருடைய கீழ்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவராயினர். முதலாவதிற்கு காரணமானவர் ஆதாம், இரண்டாவதிற்கு காரணமானவர் இயேசு. 

வ.20: இந்த வரியில் பவுல் சட்டத்தை உட்புகுத்துகின்றார். சட்டத்தை கிட்டதட்ட சாடுகிறார். இந்த சட்டத்தின் வாயிலாகத்தான் மனிதர் பாவத்திற்கான வாய்ப்பை பெற்றனர் என்பது போல சொல்கிறார். 
இருப்பினும் எங்கெல்லாம் பாவம் பெருகியதோ அங்கெல்லாம் அருள் இன்னும் அதிகமான பொங்கியது என்கிறார் பவுல் (οὗ δὲ ἐπλεόνασεν ἡ ἁμαρτία, ὑπερεπερίσσευσεν ἡ χάρις.). இந்த வரி மிகவும் முக்கியமான வரி. இதன் வாயிலாக கடவுளின் அருளையும் அதன் ஆட்சியையும் பாவம் என்கின்ற கறை கட்டுப்படுத்த முடியாது என்று வாதிடுகிறார். 

வ.21: இறுதியாக சாவின் வழியாக பாவம் ஆட்சி செலுத்தியது போல, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக அருள் ஆட்சி செலுத்துகிறது என்கிறார். இந்த வரியில் காரியத்தை முதன்மையாக்கி, காரணத்தை பின்னெடுத்து விளக்குகிறார். இது ஒரு கிரேக்க தத்துவவியல் நடை. இந்த அருள்தான் χάρις காரிஸ் மனிதர்களை கடவுளுக்கு ஏற்புடையவராக்குவதாகவும் (δικαιοσύνη திகாய்யொசுனே), பின்னர் நிலைவாழ்வு தருவதாகவும் (ζωὴν αἰώνιον) சொல்கிறார். பவுலுடைய இந்த பகுதி ஒரு வகை கிரேக மெய்யியல் விவாத அமைப்பை ஒத்திருந்தாலும், சில இடங்களில் பவுல் அந்த நடையை தனக்கு ஏற்றால் போல் மாற்றுவதை அவதானிக்கலாம். 


மத்தேயு 4,1-11
இயேசு சோதிக்கப்படுதல்
(மாற் 1:12 - 13 லூக் 4:1 - 13)

1அதன்பின் இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலை நிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார். 2அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன் பின் பசியுற்றார். 3சோதிக்கிறவன் அவரை அணுகி, 'நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்' என்றான். 4அவர் மறுமொழியாக,''மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்'என மறைநூலில் எழுதியுள்ளதே' என்றார். 5பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, 6'நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; 'கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்'
என்று மறைநூலில் எழுதியுள்ளது' என்று அலகை அவரிடம் சொன்னது. 7இயேசு அதனிடம்,
''உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்கவேண்டாம்' எனவும் எழுதியுள்ளதே' என்று சொன்னார். 8மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி, 9அவரிடம், 'நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்' என்றது. 10அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, 'அகன்று போ, சாத்தானே,'உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்' என்றும் மறைநூலில் எழுதியுள்ளது' என்றார். 11பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.

இயேசு ஆண்டவர் சோதிக்கப்டுகின்ற காட்சி மூன்று சமநோக்கு நற்செய்திகளிலும் வித்தியாசமாக காட்டப்படுகிறது. இருப்பினும் அவர் அலகையினால், பாலை நிலத்தில் தனிமையக சோதிக்கப்பட்டார் என்ற உண்மை புலப்படுகிறது. அலகை இயேசுவை மூன்றுமுறை சோதிக்கிறது, ஒவ்வொரு முறையும் வித்தியாசமான பார்வையில் கேள்விக்கணைகளை தொடுக்கிறது. மத்தேயுவின் பார்வை வித்தியாசமானது என்பதை, அலகை தாறுமாறாக முதல் ஏற்பாட்டு வரிகளை கோடிடுவதிலிருந்து கண்டுகொள்ளலாம். மத்தேயு அதிகமான முதல் ஏற்பாட்டு இறைவார்த்தையை பாவிப்பார், இங்கே மத்தேயுவில் வருகின்ற அலகையும் மத்N;தயுவின் நடையை பின்பற்றுகிறது. சமநோக்கு நற்செய்திகளின் ஒப்பீட்டு இலக்கங்களில் இந்த பகுதி 20வது இலக்கத்தை பெறுகிறது. மாற்கு இந்த பகுதியை இரண்டே வரிகளில் விவளக்குகிறார் (காண்க மாற்கு 1,12-13). இருப்பினும் மாற்கு இந்த பகுதியின் சாரம்சத்தை கொடுக்கிறார், இந்த சாரம்சத்தையும் அத்தோடு வேறு பாரம்பரியங்களையும் மத்தேயுவும் லூக்காவும் பொதுவான ஒரு மூலத்திலிருந்து பெற்றிருக்கிறார்கள். அதனை இருவரும் தங்கள் நடைகளில் காட்டுகின்றனர். ஏற்றுக்கொள்ளப்படாத யூத இலக்கியங்களில் சில, ஆதாம் அலகையால் சோதிக்கப்பட்டு பின்னர் அதன் சூழ்சிகளுக்குள் வீழ்ந்து மெசியா வரும் வரை அவதியுற்றார் என்கின்றன. தொடக்க நூல், ஆதாம்-ஏவாள் அலகையால் வஞ்சிக்கப்பட்டு ஏதேன் தோட்டத்தை இழந்தார்கள் என்கிறது. 

வ.1: இந்தப் பகுதிக்கு சற்று முன்னர் தான் இயேசு திருமுழுக்கு பெற்றுக்கொண்டார், அத்தோடு அவர் கடவுளின் அன்பார்ந்த மைந்தர் எனவும் ஏற்றுக்கொள்ளப்பட்டார். உடனடியாக அவர் பாலைநிலத்திற்கு அழைத்துச்செல்லப்படுகிறார். மத்தேயுவும் லூக்காவும் இந்த இடத்திலும் ஒற்றுமையாக, இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காக (πειρασθῆναι ὑπὸ τοῦ διαβόλου), தூய ஆவியினால் (ὑπὸ τοῦ πνεύματος), பாலை நிலத்திற்கு (εἰς τὴν ἔρημον) அழைத்துச் செல்லப்பட்டார் என்கின்றனர். மத்தேயு, தூய ஆவி என்று சொல்லாமல் ஆவி, என்றே சொல்கிறார், இது சூழலியலில் தூய ஆவியாகத்தான் 
இருக்கவேண்டும். ஏன் இயேசு தூய ஆவியால் பாலைநிலத்திற்கு அதுவும் அலகையினால் சோதிக்கப்பட வேண்டும் என்பது நம்முடைய முக்கியமான கேள்வி. இதற்கு பலர் பல விளக்கங்களை முன்வைக்கின்றனர். பாலை நில அனுபவம், இஸ்ராயேல் மக்களுடைய விடுதலைப் பயணத்தை நினைவூட்டுகிறது. அத்தோடு ஆதாமைப்போல் அல்லது இஸ்ராயேல் மக்களைப்போல், இயேசு எந்த அலகையின் சோதனையாலும் விழக்கூடியவரல்லர் என்ற உண்மை இங்கே வெளிப்படுத்தப்படுகிறது. 

வ.2: நாற்பது நாட்கள் இரவும் பகலும் (ἡμέρας τεσσεράκοντα  ⸂καὶ νύκτας τεσσεράκοντα) நோன்புற்றார் பின்னர் அவர் பசியுற்றார். இந்த நாற்பது நாட்கள் முதல் ஏற்பாட்டில் பல கதைகளை நமக்கு நினைவூட்டுகின்றன. 

அ. கடவுள் நாற்பது நாட்களில் வெள்ளப்பெருக்ககை அனுப்பினார் (காண்க தொ.நூல் 7,4)
ஆ. மோசே சீனாய் மலையில் நாற்பது நாட்கள் தங்கியிருந்தார் (காண்க வி.ப 24,18)
இ. யோசுவாவின் ஒற்றர்கள் நாட்பது நாட்கள் கானானை உளவு பார்த்தார்கள் (காண்க எண் 13,25)
ஈ. மோசே நாற்பது நாட்கள் இஸ்ராயேலருடைய பாவத்திற்காக செபித்தார் (காண்க இ.ச 9,25)
உ. எலியா நாற்பது நாட்கள் பயணம் செய்து ஒரேபை அடைந்தார் (காண்க 1அரசர் 19,8).
ஊ. கடவுள் யூதா வீட்டாரின் குற்றத்திற்காக நாற்பது நாட்களை எசேக்கியேலுக்கு கொடுக்கிறார் (காண்க எசே 4,6). 
எ. யோனா நாற்பது நாட்கள் நினிவேயின் மனமாற்றத்திற்காக பிரசங்கித்தார் (காண்க யோனா 3,4)
ஏ. இயேசு உயிர்ப்பின் பின் நாற்பது நாட்கள் தொடர்ச்சியாக தோன்றினார் (காண்க தி.ப 1,3)
ஐ. இஸ்ராயேலர் நாற்பது ஆண்டுகள் பாலைவனத்தில் அலைந்தனர், மன்னாவையும் உண்டனர் 
(காண்க வி.ப 16,35)

இப்படியான நாற்பது ஒரு அடையாளமாக அல்லது நிறைவின் அடையாளமாக இயேசுவிற்கு காட்டப்படுகிறது. இயேசு பசியுற்றார் என்பதன் வாயிலாக அவர் உண்மையாகவே மனிதராக பல துன்பங்களைப் பட்டார் அல்லது மனிதர்களின் கஸ்டங்களை உணர்ந்துகொண்டார் என்பது புலப்படுகிறது. 

வ. 3: சோதிக்கிறவன் என்ற அலகைக்கு பெயரிடுகிறார் மத்தேயு (ὁ πειράζων சோதிக்கிறவன்). இதிலிருந்து சோதனைகளுக்கு சொந்தக்காரன் அலகை, கடவுள் இல்லை என்ற வாதததையும் முன்வைக்கலாம். அலகையின் முதலாவது சோதானை இயேசுவின் இறைதன்மைக்கு சவால் விடுகிறது. அத்தோடு அவரின் பசியை பாவித்து கற்களை அப்பமாக்க கேட்கிறது. ஒருவேளை அலகை இயேசுவிற்கு மன்னா அனுபவத்தை நினைவூட்டியிருக்கலாம். 

வ. 4: இயேசு அலகைக்கு இறைவார்த்தையைக் கொண்டு பதிலளிக்கிறார். அத்தோடு இயேசுவிற்கு முதல் ஏற்பாட்டில் நல்ல அறிவு இருக்கிறது என்பதும் இங்கே தெளிவாகிறது. இயேசு இங்கே ❖இணைச்சட்டம் 8,3 ஐ உதாரணம் காட்டுகிறார். மனிதருடைய ஒரே தேவை உணவல்ல மாறாக, அதற்கும் மேலாக 
இறைவார்த்தை என்பதை அலகைக்கு அல்ல வாசகர்களுக்கு காட்டுகிறார். இறைவார்த்தை அழியாத பலத்தை கொடுக்கவல்லது என்பது இதிலிருந்து புலப்படுகிறது. 

(❖இ.ச 8,33அவர் உங்களை எளியவராக்கினார். உங்களுக்குப் பசியைத் தந்தார். ஆனால், மனிதர் அப்பத்தினால் மட்டுமன்று, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் உயிர்வாழ்கின்றார் என்று நீங்கள் தெரிந்துகொள்ளுமாறு, நீங்களும் உங்கள் மூதாதையரும் அறிந்திராத மன்னாவினால் உங்களை உண்பித்தார்.)

வவ. 5-6: யோர்தான் பாலைநிலத்திலிருந்த இயேசு ஆண்டவரை அலகை எருசலேம் தேவாலயத்தின் உச்சிக்கு கூட்டிச் செல்கிறது. அலகையும் இயேசுவும் காலத்தையும், இடங்களையும் கடந்தவர்கள் என்பதால் இது சாத்தியமாகிறது. எருசலேம் தேவாலயத்தின் உச்சியில் அலகையை நிறுத்துவதன் மூலமாக மத்தேயு யூதர்களையும், அவர்கள் கிறிஸ்தவர்களை ஆலயத்திலிருந்து துரத்திவிட்டதையும் நினைத்து நகைக்கிறார் என எடுக்கலாம். இங்கே ஆலயத்தின் உச்சிக்கு அலகையினால் வர முடிகிறது. இந்த உச்சி கிழக்கிலிருந்த ஆலயத்தின் முகப்பு அது ஏறக்குறைய 450 அடி உயரத்திலிருந்தது. இந்த முறையும் அலகை இயேசுவின்இறைதன்மையை சோதிக்கிறது. அலகைக்கும் இறைவார்த்தை நன்கு தெரிந்திருக்கிறது. இந்த முறை அலகை திருப்பாடல் 91,11-12ஐ கோடிடுகிறது. கடவுளின் விசேட கவனிப்பிற்கு இயேசு சொந்தக்காரர் என்பதை அலகை நன்கு அறிந்திருக்கிறது. தெரிந்திருந்தும் ஏன் அவரை சோதிக்கிறது என்பது புரியவில்லை. 

(❖திருப்பாடல் 91,11-12: 11நீர் செல்லும் இடமெல்லாம் உம்மைக் காக்கும்படி, தம் தூதர்க்கு அவர் கட்டளையிடுவார். 12உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர்.)

வ.7: அலகையின் கேள்விக்கு இயேசு ❖இ.ச 6,16 இலிருந்து விடைதருகிறார். நல்ல யூதர் எவரும் தன் கடவுளை சோதிக்க மாட்டார், இவ்வாறு இங்கே இயேசுவை நல்ல யூதராக காட்டுகிறார் மத்தேயு. இந்த காட்டல் கிறிஸ்தவர்களுக்கு எதிரான யூதர்களின் குற்றச்சாட்டுக்களை பொய்பிக்க முயற்ச்சி செய்கிறது. 

(❖இ.ச 6,16: மாசாவில் நீங்கள் சோதித்தது போல, உங்கள் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்.).

வ.8-9: எருசலேமிலிருந்து ஆண்டவரை அலகை மிக உயர்ந்த மலையுச்சிக்கு கூட்டிச் செல்வதாக மத்தேயு காட்டுகிறார். இது எந்த இடம் என்று தெளிவாக இல்லை. ஒருவேளை இது கார்மேல், ஒரேபு, சீனாய் அல்லது ஏர்மோன் மலையுச்சிகளாக இருந்திருக்கலாம். இந்த மலையுச்சியிலிருந்து அலகையினால் உலக அரசுகளையும் (τὰς βασιλείας τοῦ κόσμου), அதன் மாட்சிகளையும் (τὴν δόξαν αὐτῶν) காட்ட முடிகிறது. அத்தோடு இந்த முறை அலகை இயேசுவின் அதிகாரத்திற்கு சவால் விடுகிறது. தன்னை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கச் சொல்கிறது. இதனைத்தான் கீழைத்தேய ஞானியர் இயேசு குழந்தையாக இருந்தபோது செய்தனர் (❖காண்க 2,11). நெடுஞ்சாண்கிடையாக வணங்குதல் கடவுளுக்கு மட்டுமே (தனக்கு மட்டுமே) உரியது என்பதை இயேசு நன்கு தெரிந்து வைத்திருக்கிறார். இதனால் கோபம் கொள்கிறார். ஆரம்ப கால திருச்சபையில் பல கிறிஸ்தவர்கள் சீசருக்கு இந்த வணக்கத்தை தெரிவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள், இந்த வரலாறும் இதன் பின்புலமாக இருக்கலாம். அத்தோடு அலகை, உலக அரசுகளையும் அதன் மாட்சியையும் கடவுளுக்கு தருவதாக சொல்கிறது. இதிலிருந்து யார் உலக அரசுகளையும், அதன் மாட்சிகளையும் கட்டுபடுத்துகிறார் என்ற கேள்வி எழுகிறது. இன்று உலகில் நடப்பவற்றைப் பார்த்தால் சில வேளைகளில் அலகைதான் ஆட்சி செய்கிறான் போலத் தோன்றுகிறது. 

(❖11வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.)

வ.10: அலகையின் இந்த கேள்விக்கு இயேசு காட்டமாக பதில் சொல்லி இறைவார்த்தையை மீண்டுமாக கோடிடுகிறார் (❖காண்க இ.ச 6,13). இந்த முறை இயேசுவின் பதில் பயங்கரமாக இருக்கிறது. அத்தோடு இயேசு சாத்தானை அகன்று போகும்படி சொல்கிறார். இனியும் சாத்தானுக்கு இங்கே வேலையில்லை என்பது போல தோன்றுகிறது. 

(❖13உன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நட! அவருக்குப் பணிந்து அவர் பெயராலே ஆணையிடு!)

வ.11: இந்த இறுதியான வசனம் மத்தேயுவிலும் மாற்குவிலும் மட்டுமே காணக்கிடைக்கிறது. வானதூதர்கள் (ἄγγελοι) வந்து ஆண்டவருக்கு பணிவிடை செய்கிறார்கள். இது இயேசுவின் தெய்வீகத்தை காட்டும் அதேவேளை இடுக்கண் வேளையில் கடவுள் இயேசுவோடு இருக்கிறார் என்பதையும் காட்டுகிறது.

பாவம் என்பது நம்முடைய அடையாளத்தை இழத்தலாகும்,
பாவம் நம் சாயலை குலைத்து, கடவுளிடமிருந்து தூர போகச் செய்கிறது.
சோதனை கடவுளிடமிருந்து வருகிறது என்பது கேள்விக்குறியே!
சோதனைகள் பாவத்திற்கு இட்டுச் செல்கிறது என்பதும் சந்தேகமே.
இயேசு சோதனைக்கே சோதனை கொடுத்தார்.

அன்பு ஆண்டவரே, சோதனைகளில் உம்மை மட்டுமே பற்றிக்கொள்ள வரம் தாரும்.

நிலமற்று அனாதைகாள சொந்த ஈழத்திலே அலகையினால் அவதியுறும் மக்களுக்கு சமர்ப்பணம்.


மி. ஜெகன் குமார் அமதி
அதியகம், வவுனியா
வியாழன், 2 மார்ச், 2017

Thirty-third Sunday in Ordinary Time (C) ஆண்டின் பொதுக்காலம் முப்பத்தி மூன்றாம் வாரம் 13.11.2022

  Thirty-third Sunday in Ordinary Time (C) ஆண்டின் பொதுக்காலம் முப்பத்தி மூன்றாம் வாரம் 13.11.2022 Thirty-third Sunday in Ordinary T...