ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் வாரம் (இ) 19.01.2024: Ordinary Times (C)
ஆண்டின் பொதுக்காலம் இரண்டாம் வாரம் (இ)
மி. ஜெகன்குமார் அமதி,
Shrine of Our Lady of Good Voyage,
Chaddy, Velanai, Jaffna.
யாழ்ப்பாணம்.
Thursday, 16 January 2025
முதல் வாசகம்: எசாயா 62:1-5
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 96
இரண்டாம் வாசகம்: 1கொரிந்தியர் 12:4-11
நற்செய்தி: யோவான் 2:1-12
எசாயா 62,1-5
1சீயோனின் வெற்றி வைகறை ஒளியெனவும், அதன் மீட்பு சுடர் விளக்கெனவும் வெளிப்படும்வரை, அதனை முன்னிட்டு மவுனமாயிரேன்; எருசலேம் பொருட்டுச் செயலற்று அமைதியாயிரேன். 2பிறஇனத்தார் உன் வெற்றியைக் காண்பர்; மன்னர் யாவரும் உன் மேன்மையைப் பார்ப்பர்; ஆண்டவர் தம் நாவினால் சூட்டும் புதியதொரு பெயரால் நீ அழைக்கப்படுவாய். 3ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்; உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய். 4'கைவிடப்பட்டவள்' என்று இனி நீ பெயர்பெற மாட்டாய்; 'பாழ்பட்டது' என இனி உன் நாடு அழைக்கப்படாது; நீ 'எப்சிபா' என்று அழைக்கப்படுவாய்; உன் நாடு 'பெயுலா' என்று பெயர் பெறும். ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்; உன் நாடு மணவாழ்வு பெறும். 5இளைஞன் கன்னிப் பெண்ணை மணப்பதுபோல உன்னை எழுப்பியவர் உன்னை மணந்து கொள்வார்; மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.
எசாயாவின் 62வது அதிகாரம், சீயோனின் மகிமை என்ற பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறது.
இது ஒருவகை கவிநடையில் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் விசேடமாக இந்த பகுதியில் சீயோன் ஒருபெண்ணாக வர்ணிக்கப்படுகிறாள்.
வ.1: எசாயா ஆசிரியர், எதோ எதிர்காலத்திற்கான இறைவாக்கு போல இதனை பதிவு செய்கிறார். இந்த வரியின்மூலமாக எருசலேம் தற்காலத்தில் துன்பப்படுகிறது ஆனால் எதிர்காலத்தில் நிச்சயமாக மகிழ்வுறும் என்பதனைப்போல காட்சியமைக்கப்படுகிறது. சீயோன் צִיּוֹן (ட்சியோன்) இங்கு வழக்கம்போல எருசலேமை குறிக்கிறது. வைகறை ஒளியும், சுடர் விளக்கும் நம்பிக்கையின்அடையாளங்கள், இதனை வைத்துத்தான் அக்காலத்தில் விடியலை கணித்தார்கள்.
வ.2: பிற இனத்தார் மற்றும் மன்னர்கள் என்னும் சொற்கள் இங்கே ஒத்த கருத்துச்சொற்களாகபாவிக்கப்பட்டுள்ளன. எருசலேமிற்கு ஆண்டவர் ஒரு புதிய பெயரை שֵׁם חָדָ֔שׁ (ஷெம் ஹாதாஷ்) சூட்டுவார் என்றுசொல்லப்படுகிறது. புதிய பெயர் என்பது புதிய வாழ்வையும், புதிதான நம்பிக்கையையும் குறிக்கிறது. இஸ்ராயேலின் வெற்றி (צֶדֶק ட்செதெக் நீதி), மற்றும் அதன் மகிமை நினைவூட்டப்படுவதன் மூலமாகதற்காலத்தில் எருசலேம் தோல்வியில் துவண்டாலும், பல தாழ்வுகளைக் கண்டாலும் அவை நிரந்தரம் இல்லைஎன்பது சொல்லப்படுகிறது.
வ.3: ஆண்டவரின் கையில் எருசலேம் மணிமுடியாகவும் עֲטָרָה ('அதாராஹ்), அரச மகுடமாகவும் צָנִיף (ட்சாநிப்) சித்தரிக்கப்படுவது எருசலேமின் மேன்மையையும் விசேட கவனிப்பையும் காட்டுகிறது. மணிமுடி மற்றும் அரசமகுடம் என்பன ஒருவரின் இறைமையை காட்டும் அடையாளங்கள். இந்த அடையாளங்கள் மூலமாக எருசலேமிற்கு நம்பிக்கை கொடுக்கப்படுகிறது.
வ.4: எருசலேம் தன்னுடைய போர் தோல்விகளாலும், அன்நியரின் படையெடுப்புக்களாலும் சீரழிக்கப்பட்டது. இதனால் அதற்கு முக்கியமான பெயர்கள் கொடுக்கப்பட்டன உ-ம். עֲזוּבָה அட்சுவாஹ்- கைவிடப்பட்டவள், שְׁמָמָה ஷெமாமாஹ்- புறக்கணிக்கப்பட்டவள். ஆனால் கடவுளின் கண்பார்வையால் இந்த பெயர்கள் மாற்றம்பெறுகின்றன. அவை: חֶפְצִי־בָהּ ஹெப்ட்சிபாஹ்- மகிழ்ச்சி, בְּעוּלָה பெ'வுலாஹ்- திருமணமானவள். இவை சாதாரணபெயர்மாற்றங்கள் அல்ல மாறாக வாழ்வின் முழுமையான மாற்றங்கள்.
வ.5: ஒரு இளைஞனின் திருமண அனுபவம் இங்கே உவமிக்கப்படுகிறது. இளைஞன் பலவிதமானஎதிர்பார்ப்புக்களோடு தன்னுடைய திருமணத்தை அரங்கேற்றுகிறார். அங்கே புதிய உறவு, காதல், சுவாசம்என்பன அவர் இதயத்தில் ஏற்படுகிறது. இதனை எசாயா எருசலேமை மணமகளாகவும், கடவுளை திருமணம்செய்யப்போகும் இளைஞனாகவும் ஒப்பிட்டு காட்சிப்படுத்துகிறார். (உன்னை எழுப்பியவர் என்ற தமிழ்மொழிபெயர்ப்பு எபிரேய விவிலியத்தில் בָּנָיִךְ உன் மைந்தர் (பானாயித்) என்றே உள்ளது. இதற்கு பலர் பலஅர்தங்களைக் கொடுக்கின்றனர். அதில் ஒன்றுதான் உன்மைந்தர் என்ற சொல்லை உன்னை எழுப்பியவர் בֹּנָיִךְ (போனாயித்) என்று மாற்றுவது. அர்த்தத்தை பொறுத்த மட்டில் இது சரியாக தோன்றினாலும் மொழியியலில ;அவ்வாறு சரியாக தோன்றாது.)
திருப்பாடல் 96
அனைத்து உலகின் அரசர்
(1குறி 16:23 - 33)
1ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;
2ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்; அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.
3பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.
4ஏனெனில், ஆண்டவர் மாட்சிமிக்கவர்; பெரிதும் போற்றத் தக்கவர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே.
5மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர்.
6மாட்சியும் புகழ்ச்சியும் அவர் திருமுன் உள்ளன் ஆற்றலும் எழிலும் அவரது திருத்தலத்தில் உள்ளன்
7மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள். மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.
8ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள்; உணவுப்படையல் ஏந்தி அவர்தம் கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள்.
9தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள்.
10வேற்றினத்தாரிடையே கூறுங்கள்; 'ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். 11விண்ணுலகம் மகிழ்வதாக் மண்ணுலகம் களிகூர்வதாக் கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்.
12வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும்.
13ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார்.
திருப்பாடல்கள் 95-100 வரையுள்ளவை அரச முடிசூட்டுப் பாடல்கள் என அறியப்படுகின்றன. இந்த பாடல்கள் ஆண்டவரின் அரசத்துவத்தைப் பற்றிப் பாடுகின்றன. திருப்பாடல் 96இன் பின்புலத்தை சில ஆய்வாளர்கள் தாவீதோடு இணைத்துப்பார்க்கின்றனர். தாவீது ஆண்டவரின் திருப்பேழையை ஒபேத்-ஏதோம் வீட்டிலிருந்து எருசலேமிற்கு கொண்டு வந்தார், பின்னர் அதனை அதற்கென ஆயத்தம் செய்த இடத்தில் வைத்தபின்பு, அங்கே எரிபலிகளையும், தானிய பலிகளையும் ஒப்புக்கொடுத்தார். இறுதியாக தாவீது குருவாக செயற்பட்டு அங்கே கூடியிருந்த தன் மக்களுக்கு ஆண்டவரின் ஆசிரையும், பரிசுப்பொருட்களையும் கொடுக்கிறார். மேலுமாக தாவீது சில லேவியர்களையும், பாடகர்களையும் ஆண்டவரின் கூடாரத்தில் பணியாற்றுமாறு வேலைக்கு அமர்;த்துகிறார். இப்படியாக அமர்த்தப்பட்ட பாடர்கள் அங்கு பாடிய பாடல்களில் ஒன்றே இந்த திருப்பாடல் 96 என்ற வாதமும் இருக்கிறது.
வ.1: இந்தப் பாடல் வியங்கோல் வாக்கியத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் கட்டளை கொடுப்பவராக இந்த பாடலை அமைத்துள்ளார். வழமையான எதுகை மோனைகள், திருப்பிக் கூறல்கள் போன்றவை இந்த பாடலிலும் அவதானிக்கப்படக்கூடியவை.
ஆண்டவருக்கு புதியதொரு பாடல் பாடுமாறு கட்டளையிடுகிறார் ஆசிரியர் (שִׁיר חָדָשׁ ஷிர் ஹாதாஷ்- புதுப் பாடல்). புதிய பாடல் என்பது இங்கே ஆண்டவரின் புகழை மனிதர் ஒவ்வொரு கணமும் புதுமையாக பார்க்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. இந்த வரியின் பிரிவை ஒத்தே அடுத்த பிரிவும், ஆண்டவரை புகழ்ந்து பாடுங்கள் என்ற கட்டளையும் கொடுக்கப்படுகிறது. இங்கணம் புதிய பாடல் என்பது புகழ்ந்து பாடுங்கள் என்பதுடன் ஒப்பிடப்படுகிறது எனலாம்.
வ.2: இரண்டாவது வரியில் மூன்று கட்டளைகள் கொடுக்கப்படுகின்றன:
அ. ஆண்டவரை போற்றிப் பாடுங்கள், שִׁירוּ ஷீரூ
ஆ. அவர் பெயரை வாழ்த்துங்கள், בָּרֲכוּ பாரகு
இ. அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள், בַּשְּׂרוּ பஷ்ரூ
இந்த கட்டளைகள் ஆண்டவரை மகிமைப்படுத்துவதையே மையமாகக் கொண்டுள்ளன. ஆண்டவரை போற்றுதலும், அவரை வாழ்த்துதலும் அவரை அறிவித்தலும் மையத்தில் ஒரே நோக்கத்தையே கொண்டுள்ளன. அவை ஆண்டவரை புகழ்வதற்கான அறைகூவல்கள்.
வ.3: இந்த வரியின் நோக்கமாக பிறவினத்தவர்கான அறிவிப்பு உள்ளது. பிறவினத்தவர்க்கு கடவுளை அறிவிக்க கட்டளையிடுகிறார் ஆசிரியர். பிறிவினத்தவர்கள் (גּוֹיִם கோயிம்) சாதாரணமாக இஸ்ராயேலருக்கு இரண்டாவதாக கருதப்பட்டார்கள். ஆனால் விவிலியத்தில் பல இடங்களில் கடவுள் பிறவினத்தவர்க்கு முக்கியத்துவம் கொடுப்பதை அவதானிக்கலாம். பிறவினத்தவர் என முதல் பகுதி காட்டுவோரை இரண்டாவது பகுதி மக்களினங்கள் (הָעַמִּים ஹா'அம்மிம்) என்று ஒத்தவார்த்தைப் படுத்துகிறது.
வ.4: இந்த கட்டளைகளுக்கான காரணத்தை இந்த வரியில் தெளிவு படுத்துகிறார் பாடலாசிரியர். ஆண்டவர் மாட்சிமிக்கவர் என்பது இவருடைய முதலாவது காரணம் (כִּי גָדוֹל יְהוָה கி கதோல் அதோனாய்). இரண்டாவதாக அவர் பெரிதும் போற்றுதலுக்குரியவர் (מְהֻלָּל מְאֹד மெ{ஹல்லால் மெ'ஓத்). மூன்றாவதாக அவர் தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான அஞ்சுதற்குரியவர் (עַל־כָּל־אֱלֹהִֽים 'அல்-கோல்-'எலோஹிம்: அனைத்து கடவுள்களுக்கும் மேலானவர்). கடவுளுக்கு அஞ்சுதல் என்பது கடவுளை விசுவசித்தல் என்ற பொருளையே விவிலியத்தில் தருகிறது. அத்தோடு இங்கே வேறு தெய்வங்களைக் குறிக்க எலோஹிம் என்ற வார்த்தை பாவிக்கப்பட்டுள்ளது இதன் பொருளாக தெய்வங்கள் என்பது வரும், இதே வார்த்தை இஸ்ராயேலின் கடவுளை குறிக்க பயன்படும்போது இறைவன் அல்லது கடவுள் என்று ஒருமையில் பாவிக்கப்படுகிறது.
வ.5: திருப்பாடல் ஆசிரியர் தம்மை சுற்றியிருந்த தெய்வ சிலைகளை நன்கு அறிந்திருப்பார். அக்காலத்தில், பலவிதமான சிலைவழிபாடுகள், எகிப்து, பாரசீகம், கிரேக்கம், கானானிய பிரதேசங்கள் மற்றும் உரோமையில் பரவிக்கிடந்தன. இவைகளை மக்களினங்களின் சிலைகள் என்கிறார் ஆசிரியர். இந்த வரியில் அழகான எதுகை மோனை பாவனை கையாளப்படுகிறது. சிலைகளைக் குறிக்க எலிலிம் என்ற சொல் பாவிக்கப்படுகிறது, இதனை கடவுளைக் குறிக்கும் எலோகிம் என்ற சொல்லை ஒத்த ஒலியை தருவது விசேடமானது.
כָּל־אֱלֹהֵי הָעַמִּים אֱלִילִים கோல்-'எலோஹெ ஹா'அமிம் 'எலிலிம்
இதற்கு மாறாக இஸ்ராயேலின் கடவுள் விண்ணுலகை படைத்தவர் எனப்படுகிறார். விண்ணுலகை படைத்தவர்கள் என்று அக்காலத்தில் பல கடவுள்களை புராணங்கள் முன்னிலைப்படுத்தின, இதனை அறிந்திருக்கிற ஆசிரியர் உண்மையில் விண்ணுலகை படைத்தவர் இஸ்ராயேலின் கடவுள் என்கிறார்.
וַֽיהוָ֗ה שָׁמַ֥יִם עָשָֽׂה׃ வாஅதோனாய் ஷாமாயிம் 'ஆசாஹ்.
வ.6: இந்த கடவுளின் திருமுன் மாட்சியும் புகழும் உள்ளதாகச் சொல்கிறார் (הוֹד־וְהָדָר ஹோத்-வெஹாதார்). முதல் ஏற்பாட்டுக் காலத்தில் அதிகமான மனித அரசர்கள் தங்களை தெய்வ மனிதர்களாகவே காட்ட முயன்றனர். இவர்களுக்கு மாட்சியும் புகழும் அதிகமாகவே தேவைப்பட்டன. இதனால்தான் பலவிதமான போர்களும், கட்டடக்கலைகளும், அபிவிரித்திகளும் முன்னெடுக்கப்பட்டன. திருப்பாடல் ஆசிரியர் இந்த தேடப்படும் புகழும் மாட்சியும் கடவுளின் திருமுன்தான் உள்ளன என்கிறார். ஆக இவை மனிதர் முன் இல்லை என்பதை சொல்கிறார் எனலாம்.
இதற்கு ஒத்த கருத்தாக பலமும், எழிலும் கடவுளின் தூயகத்தில் இருக்கிறது என்றும் சொல்ப்படுகிறது. இந்த பலம் மற்றும் எழில் போன்றவையும் அக்கால அரசர்களால் அதிகம் விரும்பப்பட்டன. இதனால் அவர்கள் தங்கள் அரண்மனைகளை பலமானதாகவும், எழில்மிகுந்ததாகவும் வடிவமைக்க முனைந்தனர். ஆயினும் ஆண்டவரின் தூயகத்தில்தான் பலமும் எழிலும் நிறைவாக இருக்கிறது என்று சொல்லி, மனித தலைவர்களின் பலவீனத்தைக் காட்ட முயற்சிக்கிறார் ஆசிரியர் என எடுக்கலாம். (עֹז וְתִפְאֶרֶת 'ஓட்ஸ் வெதிப்'எரெத் - பலமும் அழகும்).
வவ.7-8: மக்களினங்களின் குடும்பங்களுக்கு (מִשְׁפְּחוֹת עַמִּים மிஷ்பெஹொத் 'அம்மிம்) கட்டளைகள் கொடுக்கப்படுகின்றன. ஆசிரியர் இவர்களை கடவுளிடம் வருமாறு கட்டளையிடுகிறார், கடவுளிடம் வந்து அவருக்கு பலத்தையும், மாட்சியையும் கொடுக்கச் சொல்கிறார்.
ஆண்டவரின் பெயருக்கு மாட்சி சாற்றுதல், மற்றும் அவருக்கு காணிக்கைகள் கொண்டுவருதல் போன்றவையும் ஆண்டவருக்கு கொடுக்கும் மரியாதைகளைக் காட்டுகின்றன. ஆண்டவருக்கு மரியாதை செலுத்துதல் என்பது ஆண்டவரில் ஒருவர் நம்பிக்கை கொள்ளுதலைக் குறிக்கிறது. நம்பிக்கை உள்ள கடவுளுக்கு மட்டும்தான் மனிதர்கள் மாட்சியையும், காணிக்கைகளையும் கொண்டுவந்தார்கள். ஆசிரியரின் நோக்கம், மக்களின் காணிக்கை அல்ல மாறாக மக்களின் நம்பிக்கை. இந்த இரண்டு வரியிலும் கட்டளையை பெறுகிறவர்கள், யூதர்கள் அல்ல மாறாக மக்களினங்கள், இந்த சொல் புறவினத்தவர்களைக் குறிக்கிறது. இந்த திருப்பாடல் அதிகமாக புறவின மக்களை நோக்கியதாக அமைக்கப்பட்டிருக்கிறது.
வ.9: மீண்டுமாக புறவின மக்கள் தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபட கேட்கப்படுகிறார்கள் (בְּהַדְרַת־קֹדֶשׁ பெஹத்ரத்-கோதெஷ்). தூய கோலம் என்பது இங்கே தூய உள்ளத்தைக் குறிக்கலாம். ஆண்டவரை வழிபட தூய்மையான உள்ளம் தேவையானது என்பதை பல இடங்களில் விவிலியம் காட்டுகிறது. இஸ்ராயேல் மக்களின் சட்டங்களும் அதனைத்தான் வலியுறுத்தின. இந்த தேவையை இப்போது ஆசிரியர் புறவினத்தவருக்கும் கட்டளையாக்குகிறார்.
இதற்கு ஒத்த கருத்தாக, ஆண்டவர் முன் நடுங்குங்கள் என்று சொல்கிறார் (חִילוּ ஹிலூ). இப்படியாக ஆண்டவர் திருமுன் நடுங்குதல் என்பதும், ஆண்டவரிடம் நம்பிக்கை கொள்ளுதல் என்ற அர்த்தத்திலே பார்க்கப்படவேண்டும்.
வ.10: இந்த வரி இஸ்ராயேல் மக்களுக்கு கட்டளை கொடுக்கிறது. அவர்கள் ஆண்டவர் யார் என புறவினத்தவருக்கு அறிவிக்க அழைக்கப்படுகிறார்கள். ஆண்டவர் ஆட்சி செய்கிறார், பூவுலகு உறுதியாக நிலைத்திருக்கிறது, அது அசைவுறாது, ஆண்டவரின் தீர்ப்பு வழுவாது போன்றவற்றை புறவினத்தவர்க்கு அறிவிக்க அழைக்கப்படுகிறார்கள். இந்த ஏக்கங்கள் புறவினத்தவர்க்கு
இருந்திருக்கலாம், இஸ்ராயேல் மக்களுக்கும் இருந்திருக்கலாம். இவற்றை இவர்கள் அறிவிக்க அழைக்கப்படுகிறார்கள் என்றால் முதலில் இவர்கள் இதனை நம்ப வேண்டும் என்றாகிறது.
வவ.11-12: இந்த வரிகளில் ஆசிரியர் தன்னுடைய விருப்பங்களை படைப்புக்களுக்கு கட்டளைகளாக விடுகிறார். விண்ணுலகை மகிழக் கேட்கிறார் (יִשְׂמְחוּ הַשָּׁמַיִם யிஸ்மெ{ஹ ஹஷாமயிம்). விண்ணுலகம் என்பது எப்போதும் மகிழ்வாக இருக்கும் இடம் என நம்பப்பட்டது. இதனையே மகிழ்வாக இருக்கும்படி கேட்பதன் வாயிலாக ஆண்டவரின் மகிழ்விற்கு அனைவரும் ஏங்குகின்றனர் என்பதை காட்டுகிறார் எனலாம். விண்ணுலகை மகிழக் கேட்டவர் மண்ணுலகையும் களிகூரக் கேட்கிறார் (תָגֵל הָאָרֶץ தாகெல் ஹா'ஆரெட்ஸ்). மண்ணுலகிற்கு களிப்புணர்வு மிகவும் தேiவாயனது, அதனை ஆசிரியர் கேட்பது நியாமாகிறது. விண்ணுலகு, மண்ணுலகுடன் இணைத்து கடலில் உள்ளவையும் உள்வாங்கப்படுகிறது. கடலில் தீய சக்திகள் இருப்பதாக நம்பிய அக்கால உலகில், இந்த வரியை வைத்து பார்ப்பதன் வாயிலாக ஒருவேளை இவர் கடலை கீழுலகாக பார்க்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. அதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.
இந்த வரியுடன் ஒத்து அடுத்த வரியும் வருகிறது. இந்த வரியில் வயல்வெளியில் உள்ளனவும், காட்டில் உள்ளவையும் எழுவாய்ப் பொருளாக எடுக்கப்படுகின்றன. வயல் வெளியில் உள்ளவை வீட்டு விலங்குகளாகவும், காட்டில் உள்ளவை காட்டு விலங்குகளாகவும் பார்க்கப்பட்டன. இன்னும் விசேடமாக காட்டு மரங்களை ஆசிரியர் அழகாக வர்ணிக்கிறார். மரங்களின் அசைவும், அவைகளின் இலை மற்றும் கிழைகள் ஏற்படுத்தும் ஒலிகளையும் மொழியாக பார்க்கிறார். இதனால்தான் காட்டு மரங்களின் ஓசைகளை பாட்டாக காண்கிறார் ஆசிரியர் (אָז יְרַנְּנוּ כָּל־עֲצֵי־יָעַר 'அட்ஸ் யெரன்னூ கோல்-'அட்செ-யா'ர்). கவிஞர்களுக்கு மரங்களின் அசைவுகள் நடனமாகவும், ஒலிகள் பாடலாகவும் தெரிவது சாதாரணமே.
வ.13: இந்த வரியில் ஆண்டவருடைய வருகை எழுவாய் பொருளாக்கப்படுகிறது. இந்த திருப்பாடல் ஆண்டவரின் அரச பாடலாக இருக்கின்ற படியால் அவருடைய வருகை முக்கியமாக சொல்லப்பட வேண்டும். அரசர்களுடைய வருகைக்காக மக்கள் காத்து இருப்பார்கள். அதே நோக்கோடு இங்கே ஆண்டவருடைய வருகையும் பார்க்கப்படுகிறது.
ஆண்டவருடைய வருகையின் நோக்கம் என்னவென்பதும் சொல்லப்படுகிறது. ஆண்டவர் பூவுலகிற்கு நீதித்தீர்ப்பு வழங்கவே வருகிறார். நிலவுலகை நீதியுடனும் உண்மையுடனும் நடத்தவே வருகிறார் என்கிறார். நீதியும் உண்மையும் கடவுளின் கொடையாக பார்க்கப்படுவது
இங்கே நோக்கப்படவேண்டும். (צֶדֶק ட்செதெக், நீதி: אֶמוּנָה 'எமூனாஹ், உண்மை).
1கொரிந்தியர் 12,4-11
4அருள்கொடைகள் பலவகையுண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே. 5திருத் தொண்டுகளும் பலவகையுண்டு; ஆனால் ஆண்டவர் ஒருவரே. 6செயல்பாடுகள் பலவகையுண்டு; ஆனால் கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துபவர். 7பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது. 8தூய ஆவியார் ஒருவருக்கு ஞானம் நிறைந்த சொல்வளத்தை அருளுகிறார். இன்னொருவருக்கோ அதே ஆவியார் அறிவுசெறிந்த சொல்வளத்தை அளிக்கிறார். 9அதே ஆவியார் வேறொருவருக்கு நம்பிக்கை அருளுகிறார். அந்த ஒரே ஆவியார் மற்றொருவருக்குப் பிணிதீர்க்கும் அருள் கொடையையும் அளிக்கிறார். 10.தூயஆவியார் ஒருவருக்கு வல்ல செயல் செய்யும் ஆற்றலையும் இன்னொருவருக்கு இறைவாக்குரைக்கும் ஆற்றலையும் வேறொருவருக்கு ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றலையும் மற்றொருவருக்குப் பல்வகை பரவசப் பேச்சு பேசும் ஆற்றலையும் பிறிதொருவருக்கு அப்பேச்சை விளக்கும் ஆற்றலையும் அருளுகிறார்.
11அந்த ஒரே ஆவியாரே இவற்றையெல்லாம் செயல்படுத்துகிறார்; அவரே தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் இவற்றைப் பகிர்ந்தளிக்கிறார்.
கொரிந்தியர் பன்னிரண்டாவது அதிகாரம் தூய ஆவியார் அருளும் கொடைகளைப் பற்றி விவாதிக்கின்றது. பவுலுடைய காலத்தில் தூய ஆவியார் பற்றிய அறிவு முதல் ஏற்பாட்டுக் காலத்தைப் போலன்றி நன்கு வளர்ந்திருந்தது. இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தி இயேசுவின் சிந்தனைகளை தன்னுடைய வார்த்தைகளில் சொல்ல முயல்கிறார் என எடுக்கலாம்.
வவ.1-2: தூய ஆவரியாரின் கொடைகள், ஆரம்ப காலத்திலேயே திருச்சபையின் விசுவாசத்தில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். தூய ஆவியாரின் கொடைகளைக் குறிக்க τῶν πνευματικῶν (டோன் புனுமாடிகோன்) ஆவியாருடையவை என்ற சொல் பாவிக்கப்படுகிறது. இந்த கொடைகளைப் பற்றி சீடர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதில் புனித பவுல் கவனமாக இருக்கிறார் எனலாம்.
தூய ஆவியாரைப் பற்றி அறிந்திருக்கிறவர்கள் பொய் தெய்வங்களில் நாட்டங்களை கொள்ளாதவர்களாயிருப்பர், அவர்கள் சிலைகளை வழிபடமாட்டார்கள் என்பது அவரது நம்பிக்கை. இந்த பிறவின தெய்வங்களை அவர் ஊமைச் சிலைகள் என்கிறார் (εἴδωλα τὰ ⸀ἄφωνα எய்தோலா டா அபோனா- கதைக்க முடியா உருவங்கள்).
வ.3: பலர் தங்களை தூய ஆவியாரின் கொடைகளைப் பெற்றிருக்கிறவர்கள் என்று சொல்லி பல தப்பறைகைள பரப்பினர். இதில் சிலர் இயேசுவை வெளிப்படையாக சபிக்கவும் தொடங்கினர்.
இயேசுவை சபித்தல் என்பதற்கு கிரேக்க விவிலியம் அனாமெதா இயேசுஸ் (Ἀνάθεμα Ἰησοῦς) என்ற சொற்களை பாவிக்கிறது. இதே சொற்பிரயோகம் தான் பிற்காலத்தில் ஒருவரை திருச்சபையில் இருந்து வெளியேற்றவும் பாவிக்கப்பட்டது (அனத்தெமா சித்). ஆண்டவரின் ஆவியாரின் துணையின்றி எவரும் இயேசுவே ஆண்டவர் (Κύριος Ἰησοῦς கூரியோஸ் ஈயேசூஸ்) என்றும் சொல்ல முடியாது என்கிறார் பவுல். இதிலிருந்து, இயேசுவை ஆண்டவர் என்று சொல்வது தூய ஆவியாருடைய ஞானம் என்பது புலப்படுகிறது.
வ.4: அருட்கொடைகள் பலவகை உண்டு என்று பவுல் சொல்வதில் இருந்து அக்காலத்தில் பல அருட் கொடைகள் இருந்திருக்கின்றன என்பது தெரிகிறது. மக்கள் சில வேளைகளில் இந்த பன்முக அருட்கொடைகளுக்கு பல ஆவிகளை காரணம் காட்டியிருக்கலாம். இதனைத்தான் பவுல் தெளிவு படுத்துகிறார். அதாவது ஆவியார் ஒருவரே என்கிறார். அருட்கொடைகளுக்கு கரிஸ்மா (χάρισμα) என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இதனை இறைவனின் கொடை, இலவசமான இறைதானம் மற்றும் இறையருள் என்று பலவாறு கிரேக்க அகராதிகள் வரைவிலக்கணங்கள் தருகின்றன. இந்த வசனம் திரித்துவத்தின் மூன்றாவது ஆளைக் குறிப்பது போல உள்ளது (πνεῦμα புனுமா, ஆவி).
வ.5: நான்காவது வசனத்தைப் போலவே, இந்த வசனத்தையும் எதுகை மோனையில் அமைக்கிறார் பவுல். இந்த இரண்டு வரிகளிலும் மிக அழகான கிரேக்க சொற்கள் பாவிக்கப்பட்டுள்ளன. திருத்தொண்டுகள் என்பதற்கு தியாகோனியோன் (διακονιῶν) என்ற கிரேக்க சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பணி, சேவை என்ற பல பொருள் உண்டு. திருத்தொண்டர் என்ற சொல்லும் இந்த சொல்லிருந்துதான் வருகிறது. இந்த வரியிலும், பணிகள் பலவாறாக இருந்தாலும் ஆண்டவர் ஒருவரே என்பதுதான் பவுலின் மையமான செய்தி. இது திரித்துவத்தின் இரண்டாம் ஆளைக் குறிப்பது போல உள்ளது (κύριος கூரியோஸ், ஆண்டவர்).
வ.6: முதல் இரண்டு வசனங்களைப்போலவே இந்த வசனமும் கடவுளின் ஒருமையைக் காட்டுகிறது. செயற்பாடுகளின் பன்மை கடவுளின் ஒருமையை பாதிக்காது என்பதும், அவர் பன்மையில் வேலை செய்யும் ஒருமை என்பதை பவுல் காட்டுகிறார். செயற்பாடுகள் என்பதற்கு எனெர்கெமாடோன் (ἐνεργημάτων) என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இது செயற்பாடு, வேலை, முயற்சி போன்றவற்றைக் குறிக்கும். கடவுள் ஒருவராக இருந்தாலும் அவர்தான் அனைத்தையும் அனைவரிலும் செயற்படுத்துகிறார் என்று சொல்லி கடவுளின் வல்லமையை அழகாகக் காட்டுகிறார் பவுல். இந்த வசனம் திரித்துவத்தின் முதலாவது ஆளாகிய கடவுளைக் குறிப்பது போல உள்ளது (θεός தியோஸ், கடவுள்).
வ.7: எதற்காக தூய ஆவியாரின் செயற்பாடுகள் என்பதை விளக்குகிறார். அவை பொது நன்மைக்காகவே என்பது பவுலுடைய விடை. ஆரம்ப கால திருச்சபையில் சில வேளைகளில் கொடைகளும், பணிகளும், சேவைகளும் தனிநபருடைய புகழுக்காக பயன்பட்டன, இவை திருச்சபையில் பல பிளவுகளை உருவாக்கியது. இந்த பின்புலத்தில்தான், தூய ஆவியாரின் கொடைகளின் நோக்கம் விளக்கப்படுகிறது.
இன்றை நாளிலும் இந்த நோய் திருச்சபையை தாக்க முயற்சிக்கலாம். தூய ஆவியாரின் கொடைகள் கடவுளை மாட்சிப்படுத்த வேண்டும். தனிநபர் அல்லது கதாநாயகர்கள் வழிபாட்டை உண்டாக்கக்கூடாது. மக்கள் கடவுளை நாடவேண்டும், பணியாளர்களை அல்ல. பணியாளர்கள் வேலையாட்கள் என்பதை மறக்கக்கூடாது. πρὸς τὸ συμφέρον புரொஸ் டொ சும்பெரொன்- நன்மையை கொண்டுவருவதற்கே.
வ.8: தூய ஆவியாரின் ஞானம் நிறைந்த சொல்வளமும் (λόγος σοφίας லொகொஸ் சொபியாஸ்), அறிவு செறிந்த சொல் வளமும் (λόγος γνώσεως லொகொஸ் குனோசெயோஸ்) காட்டப்படுகிறது.
இவை வித்தியாசமாக வௌ;வேறு நபர்களுக்கு கொடுக்கப்படுகிறது. அதாவது இவை பகிரப்படுகின்றன என்பதும், இவற்றின் மூலம் தூய ஆவியார்தான் என்பதும் காட்டப்படுகிறது. ஆக இவற்றை கொண்டிருக்கிறவர்கள், தங்களில் பெருமை பாடாட்டக்கூடாது என்பது அழகாக காட்டப்படுகிறது.
வ.9: இந்த வரியில் நம்பிக்கையும் (πίστις பிஸ்டிஸ்), பிணிதீர்க்கும் அருட் கொடையும் (χαρίσματα ἰαμάτων காரிஸ்மாடா இமாட்டோன்) வேறு கொடைகளாக காட்டப்படுகின்றன.
வ.10: இந்த வரியில் இன்னும் பல தூய ஆவியாரின் கொடைகள் ஆராயப்படுகின்றன. அவை: வல்ல செயல் செய்யும் ஆற்றல் (ἐνεργήματα δυνάμεων எனெக்கேமாடா தூனாமெயோன்),
இறைவாக்குரைக்கும் ஆற்றல் (προφητεία புரொபேடெய்யா), பகுத்தறியும் ஆற்றல் (διακρίσεις தியாகிறிசெய்ஸ்), பல்வகை பரவசப்பேச்சு ஆற்றல் (γένη γλωσσῶν கேனே க்லோஸ்சோன்), பேச்சை விளக்கும் ஆற்றல் (ἑρμηνεία γλωσσῶν ஹெர்மேனெய்யா க்லோஸ்சோன்), போன்றவை.
இந்த ஆற்றல்கள் ஆரம்ப கால திருச்சபையில் பாவனையில் இருந்ததையும் அவை மற்ற மனிதர்களால் ஆச்சரியத்துடன் பார்க்கப்பட்டதையும் பவுல் இங்கே காட்டுகிறார். இந்த ஆவிக்குறிய கொடைகளே பிற்காலத்தில் தவறாக பாவிக்கப்பட்டதற்கும் இந்த வரிகள் சாட்சிகள். ஆதனால்தான் அவற்றை நோக்கம், மற்றும் மூலம் அறிந்து பயன்படுத்த கேட்கிறார்.
வ.11: இந்த வரி மிகவும் கவனத்துடன் நோக்கப்பட வேண்டும். அதாவது எந்த கொடையும் ஆவியாரிடமிருந்தே வருகின்ற வேளை, அதனை தீர்மாணிப்பவரும் ஆவியாராகவே இருக்கிறார். ஆகவே ஆவியாரை துறந்து கொடைகள் பயன்படுத்தப்படக் கூடாது.
ஆவியார் ஒரே ஆள் என்பது காட்டப்படுகிறது (τὸ αὐτὸ πνεῦμα டொ அவ்டொ புனுமா- அந்த ஆவியார்.). ஆவியாரின் சுதந்திரமும் இங்கே காட்டப்படுகிறது. அதாவது ஆவியார் தான் விரும்பிய படி, விரும்பிய நபருக்கு அவற்றை பகிர்ந்து கொடுக்கிறார் (διαιροῦν °ἰδίᾳ ἑκάστῳ καθὼς βούλεται. தியாரூன் இதியா ஹெகாஸ்டோ காதோஸ் பூலெடாய்).
யோவான் 2,1-12
கானாவில் திருமணம்
1மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். 2இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர். 3திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, 'திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது' என்றார். 4இயேசு அவரிடம், 'அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே' என்றார். 5இயேசுவின் தாய் பணியாளரிடம், 'அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்' என்றார். 6யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும். 7இயேசு அவர்களிடம், 'இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்' என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள். 8பின்பு அவர், 'இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டுபோங்கள்' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். 9பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, 10'எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?' என்று கேட்டார். 11இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர். 12இதன் பிறகு அவரும் அவர் தாயும் சகோதரர்களும் அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தனர்.
யோவான் நற்செய்தியை வாசிப்பதற்கு முன் யோவான் நற்செய்தியின் ஆசிரியர் இயேசுவை,
இறைவன், மெசியா, இறைமகன், என்பதனை ஒவ்வொரு வார்த்தையிலும் விளக்குவதை அவதானமாக நோக்குவோம். சில ஆய்வாளர்கள் யோவான் நற்செய்தியின் 2-12 அதிகாரங்களை அடையாளங்களின் பகுதியாக பார்க்கின்றனர். இன்றைய வாசகம் ஆண்டவருடைய முதலாவது அடையாளம் என்ற கானான் ஊர் திருமணவிழாவைக் காட்டுகிறது. யோவான் நற்செய்தியில் ஷஅடையாளம்| (σημεῖον சேமெய்யொன்) எனச்சொல்லக் காரணம், இயேசுவின் ஓர் அடையாளம் பின்னர் அதே தொடக்க பகுதியில் படிப்பினைகளைக் கொண்டுவரும். இந்த நற்செய்தியில் அடையாளங்கள் மெசியாவின் யுகத்தைக் குறிக்கிறது. பழையன புதிதாக மாறுவதை யோவான் அழகாக காட்டுவார்.
வ.1: கானா என்கிற ஊர், யோர்தான் நதியிலிருந்து (இயேசு திருமுழுக்கு பெற்ற யோர்தான் பகுதி) மூன்று நாள் நடை தொலைவிலிருந்தது. இயேசுவின் தாய் இங்கிருப்பதன் மூலம் இயேசு தாயும் சமூக வாழ்வில் இருந்ததைக் காணலாம். இயேசு சீடர்களோடு இங்கு வருவது, பாலைநில அல்லது தனிமை வாழ்வை தெரிவுசெய்யாமல் சமூக வாழ்வை தனக்கும் தன் சீடர்களுக்கும் (தாய்க்கும்) தெரிவுசெய்வது
இயேசுவின் தனித்துவத்தைக் காட்டுகிறது.
இயேசுவின் தாய்தான் முதலில் காட்சிப்படுத்தப்படுகிறார். அதாவது மரியாதான் அங்கே
இருக்கிறார், இதனால்தான் இயேசுவும் அங்கிருக்க வேண்டிய தேவையிருக்கிறது (ἡ μήτηρ τοῦ Ἰησοῦ ἐκεῖ· ஹே மேடேர் டூ ஈசூ - இயேசுவின் தாய் மரியா அங்கே இருந்தார்). மரியாவை இயேசுவின் தாய் எனக் காட்டும் மிக முக்கிய பகுதிகளில் இதுவும் ஒன்று.
வ.2: ஏற்கனவே மரியா அங்கிருக்க இயேசுவும் அவர் சீடர்களும் அழைப்பு பெற்றிருந்தனர். இயேசுவோடு மூன்று சீடர்கள் இருந்திருக்கலாம். அழைப்பு பெற்றிருந்தார்கள் என்பதன் மூலம், இவர்கள் இயேசுவின் நண்பர்கள் அல்லது உறவினர்களாக இருந்தார்கள் என எடுக்கவும் வாய்ப்புள்ளது.
இந்த மணமக்களைப் பற்றிய தரவுகள் தரப்படவில்லை. அவர்களை முக்கியப்படுத்த யோவான் விரும்ப வில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
வ.3: இரசம் (οἶνος ஒய்னோஸ்), முதல் ஏற்பாட்டில் மெசியாவின் காலம் புலருவதைக் குறிக்கிறது. (காண் ஆமோஸ 9,13-14: யோவேல் 3,18). இங்கே நிச்சயமாக மெசியாவைக் காட்டவே யோவானின் கழுகுப் பார்வை செல்கிறது எனக் கொள்ளலாம். இரசம் தீர்ந்துவிட்டது என்று மரியா தன் மகனிடம் சொல்வது, அவர் மற்றவரின் சிக்கலில் எவ்வளவு கரிசனையாக இருந்தார் என்பதைக் காட்டுகிறது. திருமணவீட்டில் இரசம் தீர்ந்தால் அது மணமக்களுக்கு அவமானமாக அமையலாம். (நமக்கு திருமண வீட்டில் சோறு போல)
திருமண வீடும், இங்கே மெசியா சிந்தனையில் நோக்கப்பட வேண்டும். திருமணம் விவிலியத்தில் கடவுளுக்கும் மக்களுக்குமான உறவின் அடையாளமாக முதல் ஏற்பாட்டில் பாவிக்கப்படுகிறது. இங்கும் அந்த அர்த்தத்தைக் குறிக்கலாம். γάμος காமொஸ்- திருமணம்.
வ.4: இந்த வசனத்தை மிக கவனமாக நோக்கவேண்டும். இயேசுவின் விடையாக (τί ἐμοὶ καὶ σοί, γύναι;) உமக்கும் எனக்கும் என்ன? பெண்ணே! (நேரடி மொழி பெயர்ப்பு) என்ற கேள்விவருகிறது. ஏன் தனது தாயை பெண் என்கிறார் இயேசு. இந்த சொல்லின் மேல் பல சொற்போர்களே நடந்திருக்கறது. இதனுடைய முழுமையான விளக்கத்தை இதுவரை யாரும் கொடுக்கவில்லை. சில கருத்துக்கள்:
அ. அரேமேயிக்க-எபிரேய பிள்ளைகள் தாயை ஷஷபெண்னென்று|| அழைப்பதில்லை. (இத்தாலியில் சில நகரவாசிகள் தங்கள் பெற்றோர்களை பெயர்சொல்லி அழைப்பார்கள், நாகரீகம்!). யோவான் இயேசுவைக் கடவுள் என்று வாசகர்களுக்கு நினைவூட்ட இச்சொல்லை பயன்படுத்தியிருக்கலாம்.
ஆ. இயேசு இன்னொரு முக்கியமான இடத்திலும் மரியாவை பெண்ணே என்றே அழைக்கிறார். (காண் யோவான் 19,26) இரண்டு இடத்திலும் நற்செய்தியாளர் மரியாவை இயேசுவின் தாய் என்றே எழுதுவதை அவதானிக்க வேண்டும்.
இ. இங்கே நோக்கப்படவேண்டியவர் இயேசுவும் அவரது அடையாளமும். அன்புச் சீடரும், மரியாவை இறுதிவரை பாராமரித்தவருமான யோவான், மரியாவை இகழ்சிப்படுத்தினார் எனபதை ஏற்க முடியாது. யோவான் ஒரு இடத்திலும் மரியாவை 'பெண்' என்று அழைக்கவில்லை. ஆக பெண் என்ற வார்த்தை இங்கே இயேசுவால் எதோ ஒரு அர்த்தத்திலேயே பயன்படுத்தப்படுகிறது.
வ.5: இது திருமணவீட்டாருக்கு மட்டுமல்ல மாறாக நமக்கும் மரியாவின் கட்டளை. இந்த வசனம், மரியா இயேசு நிச்சயமாக உதவிசெய்வார் என்பதை நம்பினார் எனக் காட்டுகிறது. இருவர்கிடையிலிருந்து புரிந்துணர்வையும் காட்டுகிறது.
மரியாவை எதிர்க்கிறவர்கள் இந்த வார்த்தையை கவனமாக நோக்க வேண்டும். மரியா இயேசுவிடம் பரிந்துரை செய்யும் அதேவேளை, சீடர்களை இயேசு சொல்வதை மட்டுமே செய்யச் சொல்கிறார்.
λέγει ἡ μήτηρ αὐτοῦ τοῖς διακόνοις· அவருடைய தாயார் பணியாளர்களுக்குச் சொல்கிறார்,
ὅ τι ἂν⸃ λέγῃ ὑμῖν ποιήσατε. ஹொ டி அன் லெகே ஹுமின் பொய்யேசாடெ.
வ. 6: தண்ணீர் முதல் ஏற்பாட்டில் மனித தூய்மையாக்கும் ஒரு சடப்பொருளையே குறிக்கும். இங்கே சாடிகள் நிரப்பப்படுவது, கடவுள் மனிதனை அடுத்த நிலைக்கு உயர்த்துவதைக் குறிக்கலாம். சிலர் பழைய சடங்குகளை இயேசு புதியதாக்குகிறார் என்று இதனைப் பார்க்கின்றனர்.
ஆறு கல்தொட்டிகள் நிரப்பப்படுகின்றன. ஒவ்வொரு தொட்டியும், இரண்டு அல்லது மூண்று மெட்ரேடாஸ் கொள்ளும் என்கிறது கிரேக்க விவிலியம். ἀνὰ μετρητὰς δύο ἢ τρεῖς. அனா மெட்ரேடாஸ் துவொ ஹே ட்ரெய்ஸ். மெட்ரேடாஸ் μετρητὰς என்பது கலன்களை குறிக்கலாம். இப்படியாக ஒவ்வொரு குடமும் 115 லீட்டர் தண்ணீர் கொள்ளும். இப்படியாக மொத்தமாக 720 லீட்டர் தண்ணீர் அங்கே இருந்திருக்கும். இயேசு 720 லீட்டர் இரசம் உருவாக்கியிருக்கிறார். இது நிறைவான அளவு. மெசியாவின் காலத்தில் இப்படி அதிகமான இரசம் பெருகும் என்பதை இந்த வரி காட்டுகிறது.
வ.7: இயேசுவின் கட்டளை: தொட்டிகளை அவர் விளிம்புவரை நிரப்பச் சொல்கிறார். யோவான் இந்த வரிகளை அடையாளமாக பயன்படுத்துகிறார் என்பது என்னுடைய நம்பிக்கை. அதாவது தண்ணீர் நம் விசுவாசத்தையும், இரசம் அவரின் ஆசீரையும் குறிப்பனவாக உள்ளது. நிறைவான ஆசீருக்கு விளிம்புவரை விசுவாசம் தேவை போல தென்படுகிறது. ἐγέμισαν αὐτὰς ἕως ἄνω எகெமிசான் அவ்டாஸ் ஹேஓஸ் அனோ- அவர்கள் விளிம்புவரை நிரப்பினார்கள்.
வ.8: இயேசு தான் செய்வதனைத்திலும் மிக கவனமாக இருப்பார். இந்த செயற்பாடு யோவான் நற்செய்தியில் மிகவும் தெளிவாக இருக்கும். இங்கே இயேசு இரமாக மாறிய முன்னால் தண்ணீரை பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு செல்லச் சொல்கிறார். இதிலிருந்து அவர் சாதாரண மக்களின் வழக்கத்தை மதிக்கிறார் எனலாம். ஏனெனில் பந்தி மேற்பார்வையாளர்தான் பந்தியை தீர்மாணிக்கிறவர். இவரை இயேசு மதிக்கிறார். இயேசு இரசத்தை மரியாவிடம் அல்லது மணமகனிடம் அல்லது தானே கொடுத்திருக்கலாம்.
இயேசு சொன்னதை பணியாளர்களும் அப்படியே செய்கிறார்கள். அவர்கள் இயேசுவின் முக்கியத்துவத்தை அறிந்திருக்கிறார்கள் எனலாம்.
வ.9: யோவான் தான் ஒரு நல்ல வர்ணனையாளர் என்பதை மிக தெளிவாக இந்த வரியில் காட்டுகிறார். புந்தி மேற்பார்வையாளருடைய ஆதிக்கம் இந்த தண்ணீர் இரசமாக மாறியதில் இல்லை என்பதைக் காட்டுகிறார். தண்ணீர் இரசமாக மாறியதோ அல்லது அதனை செய்தவர் யார் என்பதோ இவருக்கு தெரியவில்லை. அதாவது இவர் கதையில் முக்கிமில்லாதவர் என்பது காட்டப்படுகிறது.
வீட்டு விருந்தில் எதாவது முறையீடு இருந்தால் அவை மணமகனுக்கு சொல்லப்படும். அதனைத்தான் இந்த மேற்பார்வையாளர் செய்கிறார். இங்கே இவருடைய ஆச்சரியம் முறையீடாக வருகிறது. ἀρχιτρίκλινος அர்கிட்ரிகிலினொஸ்.
வ.10: திருமணவிழாக்களில் விருந்தினர் மது மயக்கத்தில் இருக்கும் போது இரண்டாம் தர இரசத்தை தருவது வழக்கம், இங்கே இயேசு தரும் இரசம் எந்த இரசத்தையும்விட மேலானது என்று, மேற்பார்வையாளரின் கேள்வி மூலமாக காட்டுகிறார் யோவான்.
மேற்பார்வையாளரின் கேள்வி நியாயமான கேள்வி. இந்த கேள்வி மூலமாக யூத சமூதாயத்திற்கு எதோ வித்தியாசமான செய்தியை யோவான் கொடுக்கிறார் எனலாம். யூதர்களுக்கு இல்லாத நேரடி வெளிப்பாடு எதற்காக புறவினத்தாருக்கு? என்பது அக்கால திருச்சபையின் கேள்விகளில் ஒன்றாக இருந்தது.
இந்த அடையாளம் மூலமாக, கடவுளின் தீர்மானங்கள் வித்தியாசமானவை என்பது காட்டப்படுகிறது. கடவுளுக்கு மனிதர்களின் நியமங்கள் பொருந்தாது. அவர் தன்னுடைய நியமங்களை செய்கிறவர் என்பது காட்டப்படுகிறது.
வ.11: இந்த அடையாளத்தை யோவான் இயேசுவின் முதலாவது அடையாளம் என்கிறார். அதுவும் அது கானா-கலிலேயாவில் நடந்தது என்கிறார். யோவான் எருசலேமிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறவர். இந்த இடத்தில் கலிலேயா தன்னுடைய முக்கயித்துவத்தை தவறாமல் பெறுகிறது. இயேசு இந்த அடையாளத்தின் மூலம் தன்னுடைய மாட்சியை வெளிப்படுத்துகிறார். இதுதான் யோவான் நற்செய்தியில் அருளடையாளத்தில் ஒரே நோக்கம் . ἐφανέρωσεν τὴν δόξαν αὐτοῦ, எபானெரோசென் டேன் டொக்சான் அவ்டூ.
அத்தோடு இந்த வரி இயேசுவின் இந்த அடையாளத்தின் நோக்கத்தை காட்டுகிறது. சீடர்கள் நம்பினர், இயேசுவோடு சென்றனர். ἐπίστευσαν எபிஸ்டெயுசான்- நம்பினார்கள்.
வ.12: இயேசு மரியாவோடு இருந்தார் என்பதை யோவான் காட்ட மறக்கவில்லை. இதன் மூலமாக மரியா தொடர்ந்தும் இயேசுவின் உலகத்திலே இறுதிவரை இருந்தார் என்கிறார்.
இயேசுவின் சகோதரர்கள் என்ற வார்த்தை இந்த வரியில் வருகிறது. யார் இந்த இயேசுவின் சகோதரர்கள் என்பது புரியாமல் இருக்கிறது. கத்தோலிக்க நம்பிக்கையின் படி இவர்கள் மரியாவின் பெறாமக்களாக இருக்கலாம். அல்லது இயேசுவின் நெருங்கிய உறவினர்களாக இருக்கலாம். யூத வழக்கத்தில் சகோதரர்கள் என்பது உடன் பிறந்தவர்களாக இருக்க வேண்டிய தேவையில்லை.
இன்றைய உலகிலும் இரசம் தீர்ந்துவிட்டதை காணலாம்.
உலகம், நல்ல இரசம் இல்லாததால் அசுத்தமானதை பகிர்ந்து
மேலும் பிரச்சனைகளை கூட்டுகிறது.
நல்ல இரசத்தை தர நல்ல இயேசுவை வேண்டுவோம்.
அன்னை மரியாவை பரிந்து பேச சொல்லுவோம்.
அவர் சொன்ன படி, இயேசு சொல்வதெல்லாம் செய்ய முயல்வோம்.
என்விசுவாசத்தை விளிம்புவரை நிரப்ப உதவும் ஆண்டவரே, ஆமென்.