ஆண்டின் பொதுக்காலம் இருபத்திமூன்றாம் ஞாயிறு (ஆ)
(08.09.2024)
முதல் வாசகம்: எசாயா 35,4-7
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 146
இரண்டாம் வாசகம்: யாக்கோபு 2,1-5
நற்செய்தி: மாற்கு 7,31-37
மி. ஜெகன் குமார் அமதி,
Shrien of Our Lady of Good Voyage,
Chaddy, Velanai,
Jaffna.
Thursday, 5 September 2024
எசாயா 35,4-7
4உள்ளத்தில் உறுதியற்றவர்களை நோக்கி, 'திடன் கொள்ளுங்கள், அஞ்சாதிருங்கள்; இதோ, உங்கள் கடவுள் பழிதீர்க்க வருவார்; அநீதிக்குப் பழிவாங்கும் கடவுளாக வந்து உங்களை விடுவிப்பார்.' 5அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும்; காது கேளாதோரின் செவிகள் கேட்கும். 6அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர்; வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்; பாலைநிலத்தில் நீரூற்றுகள் பீறிட்டு எழும்; வறண்ட நிலத்தில் நீரோடைகள் பாய்ந்தோடும். 7கனல் கக்கும் மணல்பரப்பு நீர்த் தடாகம் ஆகும்; தாகமுற்ற தரை நீரூற்றுகளால் நிறைந்திருக்கும்; குள்ளநரி தங்கும் வளைகள் எங்கும் கோரையும் நாணலும் முளைத்து நிற்கும்.
எசாயா புத்தகத்தின் 32 தொடக்கம் 35 வது அதிகாரங்கள் மீட்பையும் அதற்கு முன் வரும் இருள் பற்றிய நிகழ்வுகளையும் விவரிக்கின்றன. எசாயாவின் 35ம் அதிகாரம் 'தூயவழி' என்று தமிழ் விவிலிய மொழிபெயர்ப்பாளர்களால் தலைப்பிடப்பட்டு;ள்ளது. நம்பிக்கையில்லாத் தன்மை, கடவுளால் கைவிடப்பட்ட உணர்வு, அரசனின் தூரநோக்கற்ற அரசியல், அரசின் பலவீனம், அசிரியாவின் அச்சுறுத்தல் மற்றும் வட அரசான இஸ்ராயேலின் அழிவு போன்றவை எசாயாவின் வாசகர்களுக்கு பலவிதமான கேள்விகளை எழுப்பியிருக்கும். அதற்கான விடையைப் போல இந்த அதிகாரம் அமைகிறது. தமிழ் பக்திப்பாடல்களிலும் மற்றய மொழி பக்திப்பாடல்களிலும் இந்த அதிகாரம் பல தாக்கங்களை செலுத்தியிருக்கிறது. அத்தோடு எபிரேயத்தில் இந்த அதிகாரம் திருப்பிக்கூறும் கவி நடையில் அழகாக கவிநயத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் விவிலியமும் எபிரேய கவி நடைக்கு அநீதி இழைக்காமல் தமிழிலும் அழகாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
வ.4: தொடர் தோல்விகளாலும், தொடர் ஏமாற்றங்களினாலும், சுமக்கமுடியாத கப்பங்களினாலும் துவன்டுபோயிருந்த அரசனுக்கும், மக்களுக்கும் உடனடியான நம்பிக்கை வார்த்தைகள் தேவைப்பட்டது. உள்ளத்தில் உறுதியற்றவர்கள் என்பது எபிரேய விவிலியத்தில் 'இதயத்தில் சங்கடமாக இருப்பவர்கள்' (לְנִמְהֲרֵי־לֵב) என்று வருகிறது. இது அக்காலத்தில் இதயம்தான் அதிகமான உணர்வுகளின் இருப்பிடமாக பார்க்கப்பட்டது என்பதைக் காட்டுகிறது. கடவுள் பழிவாங்குபவராக வந்து அநீதிக்காக பழிவாங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணுவது சாதாரணம், இதனால்தான் முதல் ஏற்பாட்டில் கடவுள் பழிவாங்கும் கடவுள் என்றும் அறியப்பட்டார்
(אֱלֹֽהֵיכֶם נָקָם). பழிவாங்குதல் தண்டனை அல்லது கடவுளின் தண்டனை முகம் என்பதைவிட அதனை கடவுளின் நீதியின் முகம் என்றே முதல் ஏற்பாடு காட்ட முயல்கிறது என்பதை அவதானிக்க வேண்டும். இப்படியான நீதி, பாதிக்கப்பட்டவர்களை மீட்கிறது என்பதுதான் இதிலுள்ள இறையியல்.
வவ.5-7: இந்த வரிகள் ஆண்டவரின் வருகையின் நாளில் நடக்கவிருப்பவையை விவரிக்கின்றன.
அ. பார்வையற்றோரின் கண்கள் திறக்கப்படுதல்: கண் தெரியாதவர்கள் தண்டனை பெற்றவர்களாகவே முதல் ஏற்பாட்டு காலத்தில் பார்க்கப்பட்டார்கள். பார்வைபெறுதல் என்பது இவர்கள் கடவுளால் சாபத்திலிருந்து மீட்கப்படுகிறார்கள் என்ற நம்பிக்கையையும் கொடுக்கிறது.
ஆ. காது கேளாதவர்களின் காது கேட்கும்: இங்கே இவர்கள் கடவுளின் மீட்புச் செய்தியை கேட்பார்கள் என்ற சிந்தனை மையப்படுத்தப்படுகிறது. (இன்றைய ஈழத்து நிலையியலில், சில வேளைகளில், பார்வையற்றும் செவிப்புலனற்றும், மாற்றுத்திறனாளிகளாய் இருப்பதுதான், மாற்றக்கூடிய திறனை தருவது போல் உள்ளது அல்லது பாவம் இல்லா வாழ்வை தருவது போலவும் உள்ளது).
இ. கால் ஊனமுற்றோர் மான்போல் துள்ளலும், வாய்பேசாதோர் மகிழ்ந்து பாடுதலும் கடவுளின் அதிசயங்களைக் குறிக்கின்றன. இவர்கள் இதனைதான் எதிர்பார்த்தார்கள் அவற்றை அக்கால வைத்தியர்களால் கொடுக்க முடியாதிருந்தது, ஆக கடவுளால்தான் கொடுத்திருக்க முடியும். விவிலிய எபிரேயம், பழைய மொழியாக தொடர்ந்து இருப்பதனால் மூடம் (פִּסֵּחַ பெசெஹா), ஊமை (אִלֵּם 'இல்லெம்) என்ற சொற்களை பயன்படுத்துகிறது, ஆனால் நம் அழகு தமிழ் இவர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் சொற்களை பயன்படுத்துவது அழகான ஒரு புதுமுயற்சி. நிச்சயமாக எசாயாவும் கடவுளும் இதனைத்தான் விரும்புவார்கள்.
பாலை நிலத்தில் நீரூற்றும், வறண்ட நிலத்தில் நீரூற்றும் அதிசயங்கள். அவற்றை கானானிய பாலை நிலங்களில் சாதாரணாமாக காணமுடியாது. அதனையும் கடவுளால்தான் செய்ய முடியும். இதனைத்தான் கடவுள் மேசே வாயிலாக சீனாய் பாலைநிலத்தில் செய்தார். இது கடவுள் மக்களை மீட்கிறார் என்பதற்கான ஒரு தொட்டுணரக்கூடிய அடையாளம். இது ஆண்டவரின் வருகையில் இடம்பெறும் என்பது எசாயாவின் நம்பிக்ககை.
ஈ. அனல் போன்ற மணல் தரை, தடாகமாவதும்: தரை, நீர்தடாகம் ஆவதும்: நரிகளின் பழைய வளைகள் புதிய புற்தரைகளாக மாறுவதும் இன்னோர் அடையாளம். நீர் மற்றும் நீரூற்று கடவுளின் அடையாளம் அத்தோடு குள்ள நரிகள் (תַּן தான்-குள்ள நரி) மந்தைகளை தாக்குவதால் அவை ஒரு கெட்ட விலங்காக அக்கால மக்களால் பார்க்கப்பட்டது. புற்தரைகளில் நரிகள் தங்காது மாறாக மான், முயல் போன்ற தீங்கில்லா விலங்குகள் அங்கே குடிகொள்ளும். இதனால்தான் இதனை விரும்புகிறார் ஆசிரியர்.
திருப்பாடல் 146
1அல்லேலூயா! என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு;
2நான் உயிரோடு உள்ளளவும் ஆண்டவரைப் போற்றிடுவேன்; என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப் புகழ்ந்து பாடிடுவேன்.
3ஆட்சித் தலைவர்களை நம்பாதீர்கள்; உன்னை மீட்க இயலாத மானிட மக்களை நம்ப வேண்டாம்.
4அவர்களின் ஆவி பிரியும்போது தாங்கள் தோன்றிய மண்ணுக்கே அவர்கள் திரும்புவார்கள்; அந்நாளில் அவர்களின் எண்ணங்கள் அழிந்துபோம்.
5யாக்கோபின் இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர்; தம் கடவுளாகிய ஆண்டவரையே நம்பியிருப்போர் பேறுபெற்றோர்.
6அவரே விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உருவாக்கியவர்; என்றென்றும் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பவரும் அவரே!
7ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான நீதியை நிலைநாட்டுகின்றார்; பசித்திருப்போர்க்கு உணவளிக்கின்றார்; சிறைப்பட்டோர்க்கு விடுதலை அளிக்கின்றார்.
8ஆண்டவர் பார்வையற்றோரின் கண்களைத் திறக்கின்றார்; தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்; நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.
9ஆண்டவர் அயல் நாட்டினரைப் பாதுகாக்கின்றார்; அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்; ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக் கவிழ்த்து விடுகின்றார்.
10சீயோனே! உன் கடவுள், என்றென்றும், எல்லாத் தலைமுறைகளுக்கும் ஆட்சி செய்வார். அல்லேலூயா!
திருப்பாடல்கள் 146-150 வரையானவை 'முடிவில்லா அல்லேலூயா பாடல்கள்' என திருப்பாடல் புத்தகத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பாடல்களில் தனிப்பட்ட தேவையோ, அல்லது வேண்டுதல்களோ அல்லது வரலாற்று பின்புலங்களோ இருப்பதுபோல தெரியவில்லை.
இவை கடவுளை புகழ்வதை மட்டுமே ஒரே நோக்கமாக கொண்டுள்ளன. ஆனால் தனி மனித புகழ்சியாக தொடங்கும் இந்த பாடல்கள், குழுப் புகழ்ச்சியாக மாறி, பின்னர் பூலோகம் மற்றும் பரலோகம் கடவுளை புகழ்வது போல நிறைவுறுகின்றன. அத்தோடு, அனைத்தும் இறுதி மூச்சுவரை கடவுளை புகழவேண்டும் என்ற ஆசிரியரின் ஆழமான வார்த்தைகளை இந்த பாடல்கள் நினைவூட்டுகின்றன (காண்க 150,6).
திருப்பாடல் 146, ஒரு தனி மனித அல்லேலூயா புகழ்சிப்பாடல் போல் தொடங்கி பின்னர் குழுப்பாடலாக மாறி, இறுதியில் மீண்டும் தனி மனித புகழ்சியாகவே மாறுகிறது. பல திருப்பாடல்களைப் போல இந்த திருப்பாடலும் ஆழகான திருப்பிக் கூறும் எபிரேய கவிநடையைக் கொண்டுள்ளது. கடவுள் என்றுமே புகழப்பட வேண்டியவர் என்பதே இந்த பாடலினதும் மையக் கருத்தாகும்.
வ.1: ஆசிரியர் தன் நெஞ்சத்திற்கு கட்டளை கொடுப்பது போல பாடுகிறார். அல்லேலூயா என்ற சொல் (הַלְלוּ־יָהּ ஹல்லூ-யாஹ்) கடவுளைப் புகழுங்கள் என்ற எபிரேய சொல்லின் தமிழ் வடிவம்.
இது பன்மை வடிவமாக இருந்தாலும், தனி மனிதருக்கும் இந்த சொல் பாவிக்கப்படுகிறது. நெஞ்சே என்கின்ற சொல் (נֶפֶשׁ நெபெஷ்), ஒருவரின் சுயத்தை அல்லது ஆன்மாவைக் குறிக்கும்.
வ.2: எபிரேய திருப்பிக்கூறல் அழகாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
அ1. நான் உயிரோடு உள்ளவரை - ஆ1. ஆண்டவரை போற்றிடுவேன்.
அ2. என் வாழ்நாள் எல்லாம் - ஆ2. கடவுளை புகழ்ந்து பாடுவேன்.
இந்த வரிகள் இப்படியான புகழ்சிப்பாடல்களின் மையக் கருத்ததை வெளிப்படையாகவே காட்டுகின்றன. மனித பிறப்பின் காரணமும், இலக்கும் கடவுளை புகழ்தலே என்ற முதல் ஏற்பாட்டின் மிக முக்கியமான இறையியல் ஒன்றை நமக்கு நினைவூட்டுகின்றன.
வ.3: ஆட்சியாளர்களை மிகவும் நக்கலாக கிண்டலடிக்கிறார் ஆசிரியர். அவர்களை நம்பவேண்டாம் என்றும், அவர்கள் சாதாரன மானிடர்களே என்பதையும் மற்றவர்களுக்கு தெளிவூட்டுகிறார். ஆட்சியாளர்களை (נְדִיבִים בְּבֶן நெதிபிம் பெபென்- அரச மக்களில்), தெய்வீக பிறப்புக்களாக இஸ்ராயேலின் அயலவர்கள் நம்பினார்கள். இந்த நம்பிக்கை படிப்படியாக இஸ்ராயேல் வழிபாட்டிலும் வளர தொடங்கிய ஆபத்தை ஆசிரியர் சாடுவதனைப் போல இந்த வரி உள்ளது. இப்படியான தலைவர்கள் ஒரு விசுவாசியை காப்பாற்ற முடியாதவர்கள், ஏனெனில் அவர்களும் சாதாரண மனிதர்களே என்பது இவர் வாதம்.
வ.4: இந்த வரி, ஏன் மனித தலைவர்கள் நம்ப முடியாதவர்கள் என்பதை விளக்குகிறது. மனிதர்கள் பிரியக்கூடிய ஆவியால் உருவானவர்கள், அவர்களின் ஆவி (רוּחַ றுவாஹ்) பிரியும்போது அவர்கள் மண்ணுக்கு திரும்புவார்கள் என்கிறார். இது அவர்கள் மண்ணினால் உருவானவர்கள் என்ற தொடக்க நூல் நம்பிக்கையை நினைவூட்டுகிறது. மேலும், அவர்களின் இறப்போடு, அவர்களின் (ஆட்சியாள்களின்) எண்ணங்களும் மறையும் என்று, மிக ஆழமான மெய்யறிவையும் வாசகர்களுக்கு முன்வைக்கிறார்.
வ.5: மேற்குறிப்பிட்ட ஆட்சியாளர்களைப் போலல்லாது, யாக்கோபின் கடவுள் உயர்ந்தவர் என்ற சிந்தனையை முன்வைக்கிறார். 'யாக்கோபின் இறைவன்' (אֵל יַעֲקֹב 'எல் யா'அகோவ்) என்பது, முதல் ஏற்பாட்டில் கடவுளுக்கு கொடுக்கப்பட்ட அழகான பெயர்களில்; ஒன்று. இது யாக்கோபுக்கும்- கடவுளுக்கும்- இஸ்ராயேலருக்கும் இடையிலான நம்பிக்கையின் உறவைக் குறிக்கிறது. பேறு பெற்றோர் என்போர், இஸ்ராயேல் மக்களுக்கு மிக முக்கியமானவர்கள். நம்முடைய தூயவர்களை இது நினைவூட்டுகிறது. இந்த பேறுபெற்றவர்களுக்கு ஒரு வரைவிலக்கணமாக அவர்கள் கடவுளாகிய ஆண்டவரை நம்பியிருப்போர் என்கிறார்.
நம்பிக்கை, பேறுபெற்றோரின் உன்னதமான பண்பு என்பது புதிய ஏற்பாட்டின் மிக முக்கியமான படிப்பினை. இந்த படிப்பினை முதல் ஏற்பாட்டிலும் காணப்படுகிறதை இந்த வரியில் காணலாம் (✼ஒப்பிடுக: லூக் 7,50), அல்லது இந்த படிப்பினையின் தொடர்சியாகவே புதிய ஏற்பாடு இருக்கிறது எனவும் கருதலாம். (✼இயேசு அப்பெண்ணை நோக்கி, 'உமது நம்பிக்கை உம்மை மீட்டது அமைதியுடன் செல்க' என்றார்.)
வ.6: இந்த கடவுள் யார் என்று விளக்க முயல்கிறார் ஆசிரியர். இந்த கடவுள் புராணக் கதைகளிலுள்ள பெயர் தெரியாத கடவுள் அல்ல, மாறாக இவர் விண் (שָׁמַיִם ஷமாயிம்), மண் (אָרֶץ அரெட்ஸ்), கடல் (יָּם யாம்) மற்றும் அவற்றில் உள்ள யாவற்றையும் படைத்தவர். இந்த மூன்று பொளதீக சக்திகளும் அக்கால மக்களுக்கு பல ஆச்சரியங்களையும், கேள்விகளையும் கொடுத்தன. இவற்றை படைத்தவர்களாக பலரை பாரசீக, பபிலோனிய, கிரேக்க கதைகள் முன்மொழிந்தன. இஸ்ராயேல் ஆசிரியர், இவற்றை உருவாக்கியவர், பெயர் தெரியாக் கடவுள் அல்ல மாறாக அவர் யாக்கோபின் கடவுள், அத்தோடு இந்த கடவுள்தான் என்றென்றும் நம்பிக்கையை காப்பாற்றுகிறவர் என்கிறார்.
வ.7: ஆண்டவரின் முப்பரிமாண மீட்புச் செயல்கள் பாராட்டப்படுகின்றன.
அ. ஒடுக்கப்பட்டோருக்கு நீதி (עֹשֶׂה מִשְׁפָּט ׀ לָעֲשׁוּקִ֗ים 'ஓசெஹ் மிஷ்பாத், லா'அஷுகிம்):
ஒடுக்கப்பட்டோருக்கு நீதி செய்தல் இக்காலத்தில் மட்டுமல்ல, அக்காலத்திலும் மிக முக்கியமான சமூக பணியாக பார்கப்பட்டது. எளியவர்கள் பலவாறு ஒடுக்கப்பட்டார்கள். நீதியில்லாத கட்டமைப்பு இவர்களுக்கு ஆபத்தானதாகவே அமைந்தது. இதனால் இவர்கள் தலைவர்களின் இரக்கத்தையே அதிகமாக நம்பினார்கள், இருப்பினும் பல அரசியல் தலைவர்கள் இந்த கடமைகளில் தவறியவர்களே. இவர்களைப் போல் அல்லாது இஸ்ராயேலின் கடவுள் ஒடுக்கப்பட்டோருக்கு நீதி வழங்குவார் என்கிறார் ஆசிரியர்.
ஆ. பசித்தோருக்கு உணவு (נֹתֵן לֶחֶם לָרְעֵבִ֑ים நோதென் லெஹெம் லார்'எபிம்): உணவு மனிதரின் அடிப்படைத்தேவைகளில் மிக முக்கியமானது. உணவினால்தான் பல புரட்சிகளும், போர்களும் வரலாற்றில் உருவாகின்றன. பசியால் வாடுதல், வறுமை என்பவை சாத்தானின் கோர முகங்கள். இந்த வறுமையிலிருந்து தலைவர்கள் அல்ல, மாறாக கடவுள்தான் தம் மக்களை காக்கிறவர் என்கிறார் ஆசிரியர்.
இ. சிறைப்பட்டோருக்கு விடுதலை (מַתִּיר אֲסוּרִים׃ மதிர் 'அசூரிம்): அதிகமான குற்றவாளிகள் சிறையில் இல்லை வெளியில்தான் இருக்கிறார்கள், பல நல்லவர்கள் சிறையில் வாடுகிறார்கள் என்பது மனித உரிமை வாதிகளின் வாதம். விவிலிய கால உலகில் பல காரணங்களுக்காக அப்பாவிகள் சிறையில் வாடினார்கள். இவர்களின் விடுதலை மனித தலைவர்களின் சுய விருப்பத்திலேயே தங்கியிருந்தது. இப்படியில்லாமல், கடவுள் சிறைப்பட்டோரை உண்மையாக விடுவிப்பவர் என்கிறார் ஆசிரியர்.
இந்த மூன்று சமூகப் பணிகள் புதிய ஏற்பாட்டில் இயேசுவிற்கு பல விதத்தில் ஒப்பிடப்படுகிறது, இயேசுவும் தன்னுடைய பணிகள் இவைதான் என, பல இடங்களில் காட்டியுள்ளார். ஆக இந்த பணிகள் இறைவனின் பணிகள் என்பது புலனாகிறது.
வ.8-9: இந்த வரிகளில், இன்னும் மேலதிகமான தனிமனித நல்வாழ்வின் நலன்கiளை ஆண்டவர் செய்வதாக ஆசிரியர் பாடுகிறார்.
அ. பார்வையற்றவரின் கண்களை திறத்தல் - பாhவையற்றவர் வாழ்ந்தும் இறந்தவராக கருதப்பட்டவர். அத்தோடு பார்வையற்ற தன்மை கடவுளின் தண்டனையாகவும் கருதப்பட்டது. பார்வைபெறுவது என்பது ஒருவர் மீண்டும் உயிர் பெறுதலுக்கு சமனாக பார்க்கப்பட்டது.
ஆ. தாழ்த்தப்பட்டோருக்கு உயர்ச்சி - பலவிதமான தாழ்ச்சிகளை விவிலிய கால உலகம் காட்டுகிறது. முக்கியமாக பெண்கள், கைம்பெண்கள், ஏழைகள், நோயாளிகள், புறவினத்தவர், சிறுவர்கள் மற்றும் பலர் இந்த வகைக்குள் அடங்குவர். இவர்கள் சந்தித்த தாழ்ச்சி அவர்களை மிகவும் பலவீனப்படுத்தியது. அத்தோடு இவர்களை இரண்டாம்தர குடிமக்களாக்கியது.
இவர்களும் மதிக்கப்படாத மனிதர்களாவே பார்க்கப்பட்டார்கள்.
இ. நீதிமான்களுக்கு அன்பு - நீதிமான்கள் கடவுளுடைய சட்டங்களை கடைப்பிடிப்பவர்கள் என்று முதல் ஏற்பாடு அழகாக காட்டுகிறது (✼காண்க தி.பா 1,2). நீதிமான்களை கடவுள் அன்பு செய்கிறார் என்பது முதல் ஏற்பாடு காட்டுகின்ற ஓரு முக்கியமான படிப்பினை. இதன் வாயிலாக ஒருவர் கடவுளின் அன்பை பெற நீதிமானாக வாழ வேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்படுகிறது.
(✼2ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்; அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர்;).
ஈ. அயல் நாட்டினர்க்கு பாதுகாப்பு - அயல் நாட்டினரை இஸ்ராயேல் மக்கள் உட்பட பலர் தரக்குறைவானவராகவே கருதினர். இஸ்ராயேல் மக்களின் சகோதரத்துவம் தங்கள் மக்களை மட்டுமே உள்வாங்கியது. ஆனால் இந்த திருப்பாடலின் வரி இஸ்ராயேலின் உண்மை ஆன்மீகத்தை காட்டுகிறது. அதாவது அயல் நாட்டவரும் இஸ்ராயேல் கடவுளின் பிள்ளைகள் என்பது இங்கே புலப்படுகிறது.
உ. அனாதைப் பிள்ளைகளையும், கைம் பெண்களையும் ஆதரிக்கிறார் - இந்த இரண்டு வகையான குழுக்கள் பல சக்திகளால் சுரண்டப்பட்டவர்கள். இஸ்ராயேல் சமுகத்தின் அடி தட்டு மக்கள் என்று கூட இவர்களைச் சொல்லலாம். இயற்கை அழிவுகள், மற்றும் மனித செயற்பாட்டு அழிவுகளால் முதலில் பாதிக்கப்படுபவர்கள் இவர்களே. இவர்களை காத்தல், அரசன் மற்றும் அரசியல் தலைவர்களின் முக்கியமான கடமையாக கருதப்பட்டது.
ஆனால் அதிகமான சந்தர்பங்களில் இவர்கள் பாதிக்கப்பட்ட மக்களாகவே தொடர்ந்து இருந்தனர். ஆனால் கடவுளின் பார்வையில் இவர்கள் பாதிக்கப்பட்டவர்களில்லை, அவர்கள் அவர் பாதுகாப்பிற்கு உரியவர்கள் என்பது ஆசிரியரின் வாதம்.
ஊ. பொல்லாரை கவிழ்கிறார் - மேற்குறிப்பிட்ட வாதங்கள் கடவுளின் ஆக்க செயற்பாட்டை காட்டுகின்ற அதேவேளை, இது கடவுளின் தண்டனையைக் காட்டுகிறது. கடவுள்
இரக்கமுடையவர் இருப்பினும் கடவுளின் இன்னொரு முகம் நீதி மற்றும் நீதித்தீர்ப்பு. கடவுளின் இரக்கத்தால் பொல்லாருக்கு வாய்ப்பு கிடையாது, மாறாக அவர்கள் தங்கள் பொல்லாப்பிலிருந்து அழிவது திண்ணமே என்கிறார் ஆசிரியர்.
வ.10: இந்த இறுதியான வசனம், சீயோனுக்கு புகழ் பாடுவது போல் உள்ளது. கடவுளின் ஆட்சி காலத்தில் மட்டுபடுத்தப்பட்ட அரசியல் ஆட்சியல்ல அத்தோடு சீயோன் என்பது ஒரு சாதாரண அரசியல் தலைவரின் ஆட்சிப் பீடம் அல்ல, மாறாக அது காலத்தை கடந்த கடவுளின் வீடு உள்ள இடம் என்பதை காட்டுகிறார் ஆசிரியர்.
அல்லேலூயா என்ற சொல்லுடன் தொடங்கிய இந்த அழகான திருப்பாடல் அதே சொல்லுடன் முடிவடைவது இந்த வகை திருப்பாடல்களின் தனித்துவம்.
யாக்கோபு 2,1-5
1என் சகோதர சகோதரிகளே, மாட்சி மிக்க நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் ஆள்பார்த்துச் செயல்படாதீர்கள். 2பொன் மோதிரமும் பளபளப்பான ஆடையும் அணிந்த ஒருவரும் அழுக்குக் கந்தையணிந்த ஏழை ஒருவரும் உங்கள் தொழுகைக் கூடத்தினுள் வருகிறார்கள் என வைத்துக்கொள்வோம். 3அப்பொழுது நீங்கள் பளபளப்பான ஆடை அணிந்தவர்மீது தனிக் கவனம் செலுத்தி அவரைப் பார்த்து, 'தயவுசெய்து இங்கே அமருங்கள்' என்று சொல்கிறீர்கள். ஏழையிடமோ, 'அங்கே போய் நில்' என்றோ அல்லது 'என் கால்பக்கம் தரையில் உட்கார்' என்றோ சொல்கிறீர்கள். 4இவ்வாறு உங்களுக்குள்ளே வேறுபாடு காட்டி, தீய எண்ணத்தோடு மதிப்பிடுகிறீர்கள் அல்லவா? 5என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்; உலகின் பார்வையில் ஏழைகளாய் இருப்பவர்களை, நம்பிக்கையில் செல்வர்களாகவும் தம்மீது அன்பு செலுத்துபவருக்கு வாக்களிக்கப்பட்ட அரசை உரிமைப்பேறாகப் பெறுபவர்களாகவும் கடவுள் தேர்ந்து கொள்ளவில்லையா?
ஆள்பார்த்துச் செயல்படுதல் என்பது, ஆரம்ப கால திருச்சபையில் ஒரு பிரச்சனையாக
இருந்திருக்கிறது என்பது இந்த பகுதியை ஆய்வு செய்கின்றபோது புலப்படுகிறது. ஏழைகள் பல காலமாக துன்புறுத்தலுக்கு உள்ளாகித்தான் இருந்திருக்கிறார்கள் என்பதும் புலப்படுகிறது.
வ.1: ஆள் பார்த்து செயற்படவேண்டாம் என்கிறார், யாக்கோபு. வாசகர்களை தன்னுடைய சகோதர சகோதரிகளே என்கிறார். Ἀδελφοί μου, அதெல்பொய் மூ (என் சகோதரர்களே). அவர்களை ஆண்டவர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டுள்ளவர்கள் என்று அடைமொழியில் அழைக்கிறார்.
வ.2: தொழுகைக் கூடத்திற்குள் வரும் இரண்டு வகையான நபர்களை விவரிக்கிறார். பணக்காரர்களைக் குறிக்க, பொன் மோதிரமும், பளபளப்பான ஆடையும் விபரிக்கப்படுகிறது.
இதனை அக்காலத்தில் பணக்காரர்கள் மட்டுமே அணிந்திருக்க முடியும். இதற்கு எதிர்மாறாக ஏழையின் உடை வர்ணிக்கப்படுகிறது. அவர்கள் அழுக்கு கந்தையை உடையாக அணிந்திருந்தார்கள் (πτωχὸς ἐν ῥυπαρᾷ ἐσθῆτι, புடோகொஸ் என் ஹுபாரா எஸ்தேடி) எனச் சொல்லப்படுகிறது.
இந்த இரண்டு வகையான சமூக பிரிவினருக்கும் செபக்கூடம் தன்னுடைய கதவுகளை திறந்து வைத்திருக்க வேண்டும் என்பது சொல்லப்படுகிறது.
வ.3: ஏழைகளும் பணக்காரர்களும் எப்படி சந்திக்கப்பட்டார்கள் என்பதை இந்த வரி காட்டுகிறது. சாதாரணமாக பணக்காரர்கள், அனைவராலும் வரவேற்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மிகுந்த மரியாதையுடன் அமர்த்தப்படுகிறார்கள் (σὺ κάθου ὧδε καλῶς சு காதூ ஹோதெ காலோஸ்- தயவு செய்து இங்கே அமருங்கள்).
ஏழைகள் மரியாதை இல்லாமல் அமர்த்தப்படுகிறார். கால் பக்கத்தில் அமரச் சொல்லி ஏழைகளுக்கு மிகவும் தாழ்மையான இடம் கொடுக்கப்படுகிறது (ὑποπόδιόν ஹுபொபொதியொன்- காலடியில்).
வ.4: வேறுபாடு காட்டுவது, தீய எண்ணம் என்பது அழகாகக் காட்டப்படுகிறது. வேறுபாடு காட்டுவது ஒருவருடைய உள்ளத்து தீமையான எண்ணம் என்பதும் அதனை திருச்சபை அடியோடு மறுக்கிறது என்பதிலும், ஆரம்ப கால திருச்சபை கவனமாக இருக்கிறது (διαλογισμῶν πονηρῶν தியாலொகிஸ்மோன் பெனேரோன்- தீமையான எண்ணங்கள்).
வ.5: உலகின் பார்வை வேறு ஆண்டவரின் பார்வை வேறு என்பது காட்டப்படுகிறது. உலகின் பார்வையில் ஏழைகளாக இருப்பவர்கள் ஆண்டவரின் பார்வையில் செல்வர்களாக இருக்கிறார்கள், அதற்கு காரணமாக அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை காட்டப்படுகிறது.
நம்பிக்கையில் செல்வரானவர்கள், கடவுள் மீது அன்பு காட்டிய காரணத்திற்காக அவருடைய வாக்களிக்கப்பட்ட நாட்டை உரிமைச் சொத்தாகக் கொண்டவர்கள் ஆகிறார்கள்.
இவர்களை கடவுள் தேர்ந்துகொள்ளவில்லையா என்ற கேள்வியை முன்வைக்கிறார், திருத்தூதர் யாக்கோபு. இந்த இடத்தில் இஸ்ராயேலருக்கும், கிறிஸ்தவர்களுக்கும் ஒற்றுமை காட்டப்படுகிறது.
மாற்கு 7:1-8.14-15.21-23
31மீண்டும் இயேசு தீர் பகுதியை விட்டு, சீதோன் வழியாகச் சென்று தெக்கப்பொலி பகுதி நடுவே வந்து, கலிலேயக் கடலை அடைந்தார். 32காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமான ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்து, அவர்மீது கைவைத்துக் குணமாக்குமாறு அவரை வேண்டிக் கொண்டனர். 33இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்று, தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார். 34பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி 'எப்பத்தா' அதாவது 'திறக்கப்படு' என்றார். 35உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன் நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார். 36இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார். அவரது கட்டளைக்கு நேர்மாறாக இன்னும் மிகுதியாய் அவர்கள் அதை அறிவித்து வந்தார்கள். 37அவர்கள் அளவு கடந்த வியப்பில் ஆழ்ந்தவர்களாய் , 'இவர் எத்துணை நன்றாக யாவற்றையும் செய்து வருகிறார்! காதுகேளாதோர் கேட்கவும் பேச்சற்றோர் பேசவும் செய்கிறாரே!' என்று பேசிக்கொண்டார்கள்.
காதுகேளாதவர் நலமடைதல், என்ற பகுதியிலிருந்து இன்றைய நற்செய்தி வாசகம் எடுக்கப்படுகிறது. மாற்கு நற்செய்தியாளருக்கே உரிய தனித்துவத்தில் இந்த பகுதி மிகவும் சுருக்கமாக அமைக்கப்பட்டுள்ளது.
வ.31: இயேசு கலிலேய பகுதியை அடைய தீர், சீதோன் தெக்காப்போலி பகுதிகளின் வழியை பயன்படுத்துகிறார். இந்த பகுதிகள் கானானியர்களின் புறவின நகர்கள். இயேசு புறவின மக்களை அதிகமான தன்னுடைய கரிசனைக்குள் வைத்திருந்தார் என்பதற்கு இந்த வரியும் நல்லதோர் உதாரணம். (தெக்காப்போலி என்பது பத்து நகர்களை உள்ளடக்கிய நகர்த்தொகுதியை குறிக்கும், இது ஒரு கிரேக்கப் பெயர், உரோமையர்கள் கிரேக்க நடைமுறைகளை சில வேளைகளில் அப்படியே பின்பற்றினார்கள் Δεκάπολις தெகாபொலிஸ்).
வ.32: காது கேட்கமாலும், திக்கிப்பேசுபவருமான ஒருவர் இயேசு ஆண்டவரிடம் கொண்டு வரப்படுகிறார் (κωφὸν καὶ μογιλάλον கோபொன் காய் மொகிலாலொன்- செவிடும் திக்கிவாயும்.). இந்த உடல் குறையைக் குறிக்க தமிழில் மரியாதைச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முறை புதிய தமிழ் மொழிபெயர்ப்பில் நடைமுறைப்படுத்தப்படும் நல்லதோரு முயற்ச்சி.
உடல் பலவீனங்கள் அக்காலத்தில் கடவுளின் தண்டனையாகவும் கருதப்பட்டிருக்கிறது.
இவரும் அப்படியே கடவுளால் கைவிடப்பட்டவராகவே கருதப்பட்டிருக்க வேண்டும். சிலர் அவரை
இயேசுவிடம் கொண்டு வந்தனர். ஆக மனிதம் என்றுமே நல்ல நிலையில்தான் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
இந்த நபரைக் கொண்டு வந்தவர்கள், இயேசுவை அவருடைய கைகளை நோயாளர் மீது வைத்து குணமாக்க வேண்டுகிறார்கள். கைகளை வைத்து செபித்தல் குணமாக்கல் யூத வழக்கத்தில் மிக முக்கியமானதாக கருதப்பட்டது. கைகள் அதிகாரத்தின் அடையாளமாக கருதப்பட்டதாலும், அது ஆசீரைத் தருவதாகவும் கருதப்பட்டதாலும், கைகளை வைத்து செபித்தல் அல்லது ஆசீர்வதித்தல் என்பது நம்பிக்கையைக் கொடுக்கிறது.
வ.33: இந்த மனிதரைக் குணப்படுத்த இயேசு சில அடையாளங்களை முன்னெடுக்கிறார். முதலில் இயேசு அவரைக் கூட்டதிலிருந்து தனிமைப் படுத்துகிறார் (ὄχλος ஒக்லொஸ்-கூட்டம்). நற்செய்தியில் கூட்டம் எதிர்மறையான அர்த்தத்தையே கொடுக்கிறது. இவர்கள் பல வேளைகளில் உணர்ச்சிகளால் தூண்டப்பட்டவர்களாகவே இருந்தார்கள். இந்த கூட்டத்தின் போக்குகளை இயேசு கண்டித்திருக்கிறார்.
இயேசு தன் விரல்களை அந்த மனிதரின் காதுகளில் இட்டு, உமிழ் நீரால் அவர் நாவைக் தொடுகிறார். மனித உமிழ்நீரால் குணப்படுத்தும் முறைமை யூத வழக்கமாக இருந்திருக்கவில்லை. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இயேசு மக்களுடன் நெருக்கமாக இருக்க இந்த தொடுகையை பயன்படுத்தியிருப்பார் என்ற வாதம்தான் இங்கே நோக்கப்பட வேண்டும்.
இயேசு இந்த நோயாளரின் உணர்வுகளை புரிந்தவராக அவர் காதுகளையும் நாவையும் தொடுகிறார். இப்படியாக ஆண்டவர் மனிதரின் சுக துக்கங்களை சரியாக புரிந்துவைத்துள்ளார் என்பது காட்டப்படுகிறது. இயேசுவை மருத்துவராக காட்டுவதற்கான இன்னொரு காட்சியாகவும் இதனை எடுக்கலாம்.
வ.34: இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து 'எப்பாத்தா' என்கிறார் (εφφαθα எப்பாதா-திறக்கப்படு). இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்தல், கடவுள் அங்கிருக்கிறார் என்ற யூத நம்பிக்கையை நினைவு படுத்துகிறது. இயேசுவின் பெருமூச்சு கடவுளின் உணர்வுகளையும், அவர் மனிதர் மேல் கொண்டுள்ள அக்கறையையும் குறிக்கிறது.
எபாத்தா என்ற சொல் எபிரேயச் சொல், இதனை மாற்கு நற்செய்தியாளர் கிரேக்க மொழியிலே தந்திருக்கிறார். அதனை விளங்கிக்ககொள்ள முடியாத கிரேக்க வாசகர்களுக்காக அதன் விளக்கமும் கிரேக்க மொழியில் தரப்படுகிறது (ὅ ἐστιν διανοίχθητι. ஹோ எஸ்டின் தியானொக்தேடி- அதாவது திறக்கப்படு).
வ.35: இயேசுவின் பெருமூச்சும் கட்டளையும் வேலை செய்கிறது. உடனடியாக இயேசுவுடைய கட்டளை வேலைசெய்கிறது. அந்த மனிதரின் நாவு கட்டவிழ்கிறது, அவர் பேசுகிறார், அவருடைய செவிகளும் கேட்கின்றன, இதனால் அவர் தெளிவாக பேசுகிறார்.
காது கேளாதவர்கள் பேசுவது குறைவு. கேட்டலுக்கும் பேசுதலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனிதர்கள் தாங்கள் கேட்பவையைக் கொண்டே பேசுகிறார்கள். மனித மூளை செவிப்புலம் மற்றும் பார்வைப் புலனோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கிறது. வாய்பேச முடியாதவர்களால் கேட்க முடியும், ஆனால் செவிப்புலன் அற்றவர்கள் அதிகமானவர்களால் பேச முடியாது என்பது மருத்துவக் கண்டுபிடிப்பு. இயேசுவின் குணப்படுத்தல் இந்த இரண்டு உறுப்புக்களையும் உள்ளடக்குகிறது.
வ.36: இயேசு இந்த அரும் அடையாளத்தை யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று வழக்கமான கட்டளையைக் கொடுக்க, அவர்களும் வழக்கமாக அதனை அனைவருக்கும் சொல்லிவிடுகிறார்கள்.
மாற்கு நற்செய்தியில் மெசியாவைப் பற்றிய அறிவு இரகசியாக வைக்கப்படுகிறது. அல்லது அது தனி மனிதருடைய முயற்சியில் விட்டுவிடப்படுகிறது. மற்றவர்களின் அறிவிப்பின் மூலம் அல்லாது ஒருவர், மெசியாவை தானாகவே கண்டுகொள்ள வேண்டும் என்பது மாற்குவின் நோக்கம். அதனை இந்த நலமடைந்தவர் புரியவில்லை. கடவுள் என்றும் கடவுள், மனிதர் என்றும் மனிதர்.
வ.37: இந்த மனிதரின் சாட்சிய அறிவிப்பு மற்றவர்களுக்கு நம்பிக்கையை கொண்டுவராமல், வியப்பைக் கொண்டுவருகிறது. நற்செய்தியில் வியப்பு (ἐκπλήσσω எக்பலேஸ்ஸோ-ஆச்சரியப்படு), நம்பிக்கைக்கு (πιστεύω பிஸ்டெயுயோ-நம்பு) எதிரான செயற்பாடாக கருதப்படுகிறது.
இருப்பினும் அவர்களின் சாட்சியம் நன்றாகவே இருக்கிறது. அவர்கள் இயேசுவின் செயற்பாட்டை நன்மைத்தனமாக பார்க்கிறார்கள் (καλῶς πάντα πεποίηκεν, காலோஸ் பான்டா பெபொய்யேகென்- அனைத்தையும் நன்றாக செய்கிறார்.).
காதுகேளாதவர் கேட்டலையும், வாய்பேசாதவர் வாய் பேசலையும் அவர்கள் கடவுளின் செயல்களாக பார்க்கின்றனர். இருந்தாலும் இதனைச் செய்கிறவரை அவர்கள் ஆண்டவராக பார்க்க தவறுகிறார்கள்.
உடல் ஊனங்கள் உண்மையில் குறைபாடுகள் கிடையாது.
அதனால்தான் அழகு தமிழ் அதனை மாற்றுத் திறன்கள் என்கிறது.
படைப்பிற்கு மனிதர்கள் பொறுப்பாளிகள் அல்ல.
உடலில் பலசாலிகள் பலர் உள்ளத்தில் ஊனமுற்றவர்களாக இருக்கிறார்கள்.
உள்ளத்து ஊனமே உண்மையான நோய்.
உள்ளத்து ஊனம் குணப்படுத்தப்பட வேண்டும்.
உடல் பலவீனம் குணப்படுத்தப்படலாம்,
உள்ளத்து பலவீனம் மிக ஆபத்தானது.
அன்பு ஆண்டவரே நலமான உள்ளத்தை தாரும், ஆமென்.