கிறிஸ்துவின் திருவுடல், திரு இரத்த பெறுவிழா, The Most Holy Feast of Corpus Christi
முதல் வாசகம்: தொ.நூல் 14,18-20
தி.பா: 110.
இரண்டாம் வாசகம்: 1கொரி 11,23-26.
லூக் 9,11-17.
கிறிஸ்துவின் திருவுடல், திரு இரத்த பெருவிழாவின் வரலாறு:
இலத்தீன் திருச்சபையில் இந்த பெருவிழா திரித்துவ பெருவிழாவிற்கு அடுத்த வியாழன் கொண்டாடப்படுகிறது. இந்த வியாழன் பெரிய வியாழனை நினைவுபடுத்துகிறது. இதனை (Natalis Calicis) நடாலிஸ் காலிசிஸ் அதாவது கிண்ணத்தின் பிறப்பு என்றும் அழைப்பர். பெல்ஜிய புனிதையான தூய யூலியானாதான் இந்த பெருநாளின் ஆரம்பத்திற்கு காரணமானவர் என வரலாறு நம்புகிறது. சிறுவயதிலிருந்தே நற்கருணை ஆண்டவரில் அதிக ஆர்வம் கொணடிருந்த இந்த புனிதை, ஒரு நாள், ஒரு காட்சியில், கரும் புள்ளியுடன் கூடிய முழு நிலவுக்கு கீழ் திருச்சபையை கண்டார். இந்த கரும் புள்ளி நற்கருணைக்கு ஒரு விழா இல்லாதனை தனக்கு உணர்த்தியதாக எண்ணினார். இதனை நெதர்லாந்து ஆயர்களுக்கும் தனது ஆயர்க்கும் அறிவித்த அவர், இருதியாக இந்த எண்ணம் திருத்தந்தையை சென்றடைய காரணமானார். நெதர்லாந்திய ஆயர்கள் அக்கால முறைப்படி 1246ம் ஆண்டு இவ்விழாவை தொடங்க முடிவு செய்தனர், ஆனால் சில சிக்கல்களின் காரணமாக 1261ம் ஆண்டே முதன் முதலில் இப்பெருவிழா கொண்டாடப்பட்டது. இந்த மறைமாவட்ட பெருவிழாவில் நிறைவடையாத புனித யூலியானா, படிப்படியாக திருத் தந்தை நான்காம் உர்பானுடைய கட்டளையால் அனைத்து திருச்சபையின் பெருவிழாவாக அது உருவெடுக்க தொடர்ந்தும் முயற்சி செய்தார். நற்கருணையில் அதிகம் விசுவாசம் கொண்டிருந்த இந்த திருந்தந்தை, இந்த விழாவை வருடாந்திர விழாவாக கொண்டாடும்படி தன்னுடைய திருத்தந்தை சுற்று மடல் (Bull Transiturus) டிரான்ஸிடுருஸ் மூலமாக அனுமதியளித்தார். வரலாற்றில் திரித்துவ ஞாயிறுக்கு அடுத்த வியாழனே இந்த விழா இவ்வாறு உருவெடுத்தது. இந்த விழாவில் பங்கேற்றால் பல பாவங்களுக்கு பரிகாரம் ஆகும் வாய்ப்பினையும் திருத்தந்தை அறிவித்தார். புனித அக்குவினா தோமா திருத்தந்தையின் பணிப்புரையின் பேரில் இந்த பெருவிழாவிற்கு திருச்சபையின் பாரம்பரிய செபங்களை, திருப்புகழ்மாலை புத்தகத்திற்கு உருவாக்கினார். இந்த செபமும் அங்கே காணப்படும் பாடல்களும் இன்றளவும் மெச்சப்படுகிறது. இந்த திருத்தந்தையின் மரணம், இவ்விழாவின் உத்வேகத்தை சற்று பாதித்தது. ஐந்தாம் கிளமந்து திருத்தந்தை, இந்த முயற்சியை மீண்டும் வியான்னா பொதுச்சங்கத்தில் (1311ல்) மேற்கொண்டார். சில மாற்றங்கள் புதுமைகளோடு அன்றிலிருந்து, திருச்சபை இந்த விழாவை பெருவிழாவாக கொண்டாடுகிறது. இன்றைய விழா-முறையான பாரம்பரிய ஊர்வலத்தை பற்றி திருத்தந்தையர்கள் பேசவில்லை, ஏனெனில் இப்படியான ஊர்வலங்கள் ஏற்கனவே, இந்த விழா அதிகாரமாக ஏற்படுத்தப்படும் முன்பே வழக்கிலிருந்தன. பதின்மூன்றாம் நூற்றாண்டில் இருந்தே உரோமைய-மேற்கத்தேய திருச்சபையின் முக்கிய விழாவாக இது இவ்வாறு உருவெடுத்தது. கிரேக்க திருச்சபையிலும் இந்த திருவிழா சிரிய, ஆர்மேனிய, கொப்திக்க, மெல்கித்த, மற்றும் ருத்தேனிய திருச்சபைகளின் கால அட்டவணையில் காணப்பட்டு பல இடங்களில் கொண்டாடப்படுகிறது.
தொ.நூல் 14,18-20
18அப்பொழுது சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார். அவர் 'உன்னத கடவுளின்' அர்ச்சகராக இருந்தார். 19அவர் ஆபிராமை வாழ்த்தி, 'விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுள் ஆபிராமிற்கு ஆசி வழங்குவாராக! 20உன் எதிரிகளை உன்னிடம் ஒப்புவித்த உன்னத கடவுள் போற்றி! போற்றி!' என்றார். அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்.
இன்றைய முதல் வாசகம், தொடக்க நூலின் மிக ஆச்சரியங்கள் நிறைந்த பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் தான், நாம் முதல் முதலில் மெல்கிசதேக் என்னும் அரசர்-குருவை சந்திக்கின்றோம். இவருடைய பெயரும், இடமும், அவர் செய்யும் செயல்களும் பல கேள்விகளை இன்னும் விவிலிய பிரியர்களுக்கும், விசுவாசிகளுக்கும் நிறைவுறாமல் எற்படுத்திக்கொண்டிருக்கின்றன. மெல்கிசெதேக் என்னும் எபிரேயச் சொல் இரண்டு வார்த்தைகளிலிருந்து அமைக்கப்பட்டுள்ளது. מַלְכִּי־צֶדֶק (מֶלֶךְ மெலக்-அரசன், צֶדֶק செதெக்-நீதி, நேர்மை) ஆக இது நேர்மையின் அரசர் என்றும் பொருள் தரலாம். இது காரணப்பெயரா, இடுகுறிப்பெயரா அல்லது தனிப்பெயரா என்பதற்கு இன்னமும் விடை கிடையாது.
இவரை விவிலியம் உன்னத கடவுளின் குரு என்று விவரிக்கின்றது. இங்கே கடவுளுக்கு பாவிக்கப்பட்டுள்ள சொல்லும் புராதன பெயராக இருப்பதும் இங்கே விசேடமானது. ( וְהוּא כֹהֵן לְאֵל עֶלְיוֹן - அவர் ஏல் எலியோனின் குருவாக இருந்தார்). குருத்துவம் (ஆரோனின்) ஏற்படுத்தப்படாத காலத்தில் இவரை குருவென்று விவிலியம் விளிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. பல முதல் ஏற்பாட்டு ஆய்வாளர்கள் இந்த பகுதியை (14,18-20) பின்நாள் இணைப்பு என்றும் கருதுகின்றனர். முதல் ஏற்பாட்டில் மெல்கிசேதேக்கு இரண்டு தடவையும், புதிய ஏற்பாட்டில் எட்டு தடவையுமாக பத்து தடைவைகள் விவிலியத்தில் வருகிறார். தாவீதுடைய அரச-குருத்துவத்தை முதன்மைப் படுத்துவதற்காகவும் எருசலேமின் முக்கியத்துவத்தை நிலைநாட்டுவதற்காகவும் இந்த பகுதி இணைக்கப்பட்டது என்கின்றனர் சிலர். இங்கே வருகின்ற கடவுளின் பெயர்களைக் கொண்டு இப்பெயர்கள் அக்கால கானானிய சமயங்களின் ஒருங்கிணைப்பு என்றும் வாதாடுகின்றனர். பிரிந்து போன வட-நாடு தென்-நாடு காலப் பகுதியில், தென்நாட்டின், தலைநகரை முக்கியத்துவப்படுத்த இந்த பகுதி உருவானதென்றும், பாபிலோனிய நாடுகடத்தலின் பின்னர், எருசலேமின் குருத்துவப் பணியை மீண்டும் நிலைநாட்டவும் இந்த கதை உருவானதென்றும் ஒரு வாதம் இருக்கிறது. எது எப்படியாயினும் மெல்கிசேதேக்கு என்பவர், எபிரேயர் திருமுக ஆசிரியர் கூறுவதைப்போல முதலும் முடிவுமில்லாத ஆச்சரியத்துக்குரிய ஆச்சாரியார்.
வ. 18: சாலம் என்பது (שָׁלֵם ஷாலெம்) சீயோன், அதாவது பழைய தாவிதின் எருசலேமை குறிப்பதாக பாரம்பரியமாக நம்பப்படுகிறது. சாலம் என்பது செக்கேமினுடைய இன்னொரு பெயர் என்ற சறிய வாதமும் இருக்கிறது (காண்க தொ.நூ 33,18). யோவான் திருமுழுக்கு கொடுத்த செலுமியாஸ் என்ற பகுதியோடும் இதற்கு தொடர்பிருப்பதாக சிலர் காண்கின்றனர் (காண்க யோவான் 3,23). அதிகமான வல்லுனர்கள் (தொல்பொருளியல்) சாலமை எருசலேமுடனே காண்கின்றனர்.
வ. 19: மெல்கிசேதேக்கு ஆபிராமை வாழ்த்துவது, ஆபிராம் (ஆபிரகாம்) ஏற்கனவே ஆசீர்வதிக்கப்பட்டவர் என்பதை நினைவூட்டுகிறது. (காண்க தொ.நூல் 12,2). இந்த ஆசீர் இஸ்ராயேலர் சாதாரணமாக பயன்படுத்தும் ஆசீர்வாத வார்த்தைகளை உள்ளடக்கியிருக்கிறது. உதராணமாக, இயேசு காப்பாரக! என்று நாம் வாழ்த்துவதைப் போல. அத்தோடு வானங்களையும், நிலத்தையும் கடவுள் படைத்தார் அல்லது உரிமையாக்கினார் என்பது, இஸ்ராயேலரின் அடிப்படை நம்பிக்கையும் உள்வாங்கியிருக்கிறது.
வ. 20: அ). ஆபிராமை ஆசீர்வதித்த மெல்கிசேதேக்கு, கடவுளைப் போற்றுகிறார். கடவுளையும் மனிதரையும் போற்ற (ஆசீர்வதிக்க) ஒரே வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, ஆசீரின் இரண்டு முகங்களை காணலாம். (בָּרַךְ பராக்-ஆசீர்வதி, முழந்தாள் படியிடு).
ஆ). பத்தில் ஒன்று கொடுத்தல் இஸ்ராயேலருக்கு மட்டும் உரிய வழக்கமல்ல, அது மத்திய கிழக்கு சமுதாயங்களில் அன்றே வழக்கிலிருந்தது. இது சமய பொருளாதார, இரு-நோக்கங்களைக் கொண்டமைந்த பயன்பாடு. லேவியர் புத்தகமும் (27,30-33), இணைச்சட்டமும் (14,22-24) இந்த வழக்கத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன. இந்த பத்திலொன்று கொடுத்தல் பல இடங்களில் சமுக அக்கறையான ஏழைகளுக்கு உதவுதல் என்ற எண்ணத்தையும் காட்டுகிறது (காண்க இணை. 14,28-29), அத்தோடு இது வருமானமற்ற குருக்களுக்கு உதவும் முறையாகவும் காணப்பட்டது. இந்தச் சட்டத்தை கடைப்பிடிக்காதவர் கடவுளிடம் திருடுபவர் என்றும் எச்சரிக்கப்பட்டனர் (காண்க மலா 3,8). அரசர்கள் குருக்கள் சேகரிக்கும், இந்த காணிக்கைகள் சில வேளைகளில், தவறான வழியிலும் பாவிக்கப்பட்டன. (ஊழலின் வயது மிக பழமையானது போல). ஆபிராம் மெல்கிசேதேக்குவுக்கு காணிக்கை கொடுத்ததால், அவரை குருவாகவும், அவரின் கடவுளை, தன்கடவுளாக ஏற்றதாகக் கொள்ளலாம்.
தி.பா: 110
1ஆண்டவர் என் தலைவரிடம் 'நான் உம் பகைவரை உமக்குப் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்' என்று உரைத்தார்.
2வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஒங்கச்செய்வார்; உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்!
3நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்; வைகறை கருவுயிர்த்த பனியைப்போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர்.
4'மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே' என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார் அவர் தம் மனத்தை மாற்றிக் கொள்ளார்.
5என் தலைவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்; தம் சினத்தின் நாளில் மன்னர்களை நொறுக்குவார்.
6வேற்று நாடுகளுக்கு அவர் தீர்ப்பளித்து அவற்றைப் பிணத்தால் நிரப்புவார்; பாருலகெங்கும் தலைவர்களை அவர் நொறுக்குவார்.
7வழியில் உள்ள நீரோடையிலிருந்து அவர் பருகுவார்; ஆகவே அவர் தலைநிமிர்ந்து நிற்பார்.
இந்த திருப்பாடலை பொதுவாக அரச பாடல் என்றே கருதுகின்றனர். לְדָוִ֗ד מִ֫זְמ֥וֹר லெதாவித் மிட்ஸ்மோர். தாவீதின் பாடல் என்றே இந்தப் பாடல் தொடங்குகின்றது இங்கே அரசர்க்கும் குருவுக்குமான இருத்தியல் தொடர்பை ஆசிரியர் காட்டுகிறார். நாம் விவிலியத்தில், மெல்கிசேதேக்கை இரண்டாவது முறையாக இங்கே நினைவுகூருகின்றோம். ஆரோனுடைய குருத்துவம் இல்லாமலும், அரசர்கள் குருக்களாக சில சேவைகளைச் செய்ய முடியும் அல்லது, குருத்துவம் அரசத்துவத்திற்கு மேலானது அல்ல என்ற சில அக்கால சமூக சிக்கல்களை இங்கே ஊகிக்கலாம். இயேசு ஆண்டவரையும், எபிரேயர்-திருமுக ஆசிரியர் அரச-குரு என்று இறையியல்படுத்துவதிலும் இந்த திருப்பாடல் முக்கியம் பெறுகிறது.
வ. 1: ஆண்டவர் என்று இங்கு விளிக்கப்படுவது கடவுளைக் குறிக்கிறது. என்தலைவர் (אדֹנִ֗י அதோனி) என்பது பாரம்பரியமாக தாவீதைக் காட்டுகிறது என்றே நம்பப்படுகிறது. கால்மணையாக்குதல் என்ற அழகிய செந்தமிழ்ப் பதம், எதிரிகளை கால் வைக்கும் சிறிய கால்மணையாக்குதலைக் குறிக்கும். வலப்பக்கம் வீற்றிருத்தல் அதிகாரத்தை அல்லது மிக முக்கியமான உரிமைகளைப் பெறுதலைக் குறிக்கும். (הֲדֹ֣ם hodom - foot stool)
வ. 2: சீயோனில் இருந்து ஆண்டவர் பலமளிப்பதாக பாடகர் அரசருக்கு ஊக்கம் கொடுக்கிறார். செங்கோல் தமிழ் இலக்கியங்களில் உள்ளது போல எபிரேய இலக்கியங்களிலும் ஆட்சி மற்றும் அரச அதிகாரத்தை குறிக்கிறது. தூய கோலத்துடன் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, ஒரு புராதன போருக்கு செல்லும், ஆடை அலங்கார முறைகளை இது குறிக்கலாம் (מַטֵּֽה־עֻזְּךָ֗ matte-‘udzzeka your mighty scepter). இதனை 'தூய மலைகளில்' என்றும் வாசிக்க முடியும். இந்த தூய மலைகள் என்பது சீயோனை சூழயிருக்கும் மற்றைய குன்றுகளை குறிப்பதாகவும் வாசிக்கலாம்.
வ. 3: போருக்கு செல்லும் காட்சியை ஆசிரியர் அமைக்கிறார். தூய கோலத்துடன் உவந்தளித்தல் என்பது காணிக்கை என்பதை விட போருக்கு செல்ல இளையோர் சுயமாக முன்வருவதைக் குறிக்கலாம். வைகறை கருவுயிர்த்த பனியைப்போல என்று தமிழில் அழகாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இது அவ்வளவு இலகுவான வார்த்தையில்லை. இது இந்த அரசரின் படைப்பலத்தையோ அல்லது அவரின் சொந்த வீரத்தையோ குறிக்கலாம்.
வ. 4: ஏன் ஆசிரியர், அரசரை குருவாக்குகிறார் என்பதில் பல கேள்விகள் வருகின்றன. 'முறைப்படி' என்பது ஒருவகை குரு சபையை குறிக்கலாம். ஆனால் இதன் உண்மையான அர்த்தத்தை காண்பது கடினம். இங்கே இரண்டு வகையான செய்தி கொடுக்கப்பட்டுள்ளது.
அ. அரசரும் குருவைப்போல முக்கியமானவரே.
ஆ. கடவுள் தந்த ஆசீர் என்றும் திருப்ப பெறமாட்டாது. (சில வேளைகளில் தாவீதும், சாலமோனும் மக்களை ஆசீர்வதிப்பதனை விவிலியத்தில் காணலாம்). אַתָּֽה־כֹהֵ֥ן לְעוֹלָ֑ם עַל־דִּ֝בְרָתִ֗י מַלְכִּי־צֶֽדֶק׃ 'அத்தாஹ் - கோஹென் லெ'ஓலாம் 'அல்-திவ்ராதி மல்கி-ட்செதெக்- நீர் மெச்கிசெகத்கின் முறைப்படி என்றென்றும் குருவே.
வ. 5-7: ஐந்தாவது வசனத்தில் தலைவர் என்பது கடவுளை குறிக்க பயன்பட்டுள்ளது. இந்த வரிகளில் பாடல் தலைவர் கடவுளா அல்லது அரசரா என்பதில் மயக்கம் இருக்கிறது. மசரோட்டிக் மெய்யெழுத்து குறிகள் இல்லாத விவிலியம், இரண்டு வகையான அர்த்தங்களையும் கொடுக்கும். ஒன்று மட்டும் நிச்சயம் கடவுளின் அரசரால், கடவுளுக்கு புகழும், அரசர்க்கு வெற்றியும் கிடைக்கின்றன. பிணங்களால் நிரப்புதல் என்னும் வார்த்தை பிரயோகம், போரின் கோர முகத்தை நினைவூட்டுகிறது. (எந்தப் போரின் முடிவிலும் இரண்டு பக்கங்களும் மரணிக்க, மிஞ்சியருப்பது பிணங்களும், பிணக்குகளும் மட்டுமே). நீரோடையிலிருந்து பருகுதல், அழகிய உருவகம். இது இஸ்ராயேல் நாட்டின் முக்கியமான வளங்களான நீரோடைகளை (வற்றக்கூடிய ஆறுகள்) கடவுளின் ஆசீரின் அடையாளமாகக் காட்டுகிறது. מִנַּחַל בַּדֶּרֶךְ יִשְׁתֶּה மின்னாஹால் பதெரெக் யிஷ்தெஹ்- மின்னாஹால் பாதெரெக் யிஷ்தெஹ் - வழியிலுள்ள நீரோடைகளில் பருகுவர்.
இரண்டாம் வாசகம்: 1கொரி 11,23-26
23ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, 24கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப்பிட்டு, 'இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்' என்றார். 25அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, 'இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்' என்றார். 26ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.
இந்த பகுதி தூய பவுல் கொரிந்திய திருச்சபைக்கு ஒழுக்கத்தைப் பற்றி கூறும்வேளை, திருச்சபையில் நற்கருணையின் பிறப்பை நினைவூட்டியபோது இவை மேற்கோள் காட்டப்பட்டவை. கொரிந்திய திருச்சபையில் கிறிஸ்தவம் போதித்த, தனி மனித மற்றும் சமூக சுதந்திரம் பல பிரச்சனைகளுக்கு காரணமாய் அமைந்தது. ஒழுக்கமற்ற சுயநோக்கங்கள் மட்டுமே கொண்டமைந்த சுதந்திரம் காட்டாறு போல பல சமூக சிக்கல்களை தோற்றுவிப்பதனை இந்த 11வது அதிகாரத்தில், பவுல் சுட்டிக்காட்டும் பிரச்சனைகள் காட்டுகின்றன. புதிய ஏற்பாட்டில், ஆண்டவரின் நற்கருணையின் வரலாற்றோடு சம்மந்தப்பட்ட தரவுகளில் இந்த பகுதியும் மிக முக்கியமானது. நாம் ஒவ்வொரு நாளும் திருப்பலியில் செபிக்கும் வசீகரச் செபங்கள் இந்தப் பகுதியிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளன. பவுலுடைய வார்த்தைகள், அவர் எதை திருத்தூதர்கள் அல்லது முதல் சாட்சிகளிடமிருந்து பெற்றுக்கொண்டாரோ, அதையே இப்போது அறிக்கையிடுவதாக காட்டுகிறது.
வ. 23: இந்த வசனம் திருச்சபையில் இருந்த சில பிரிவினைகளைக் காட்டுகிறது. பவுல் ஒற்றுமை நிலவச் செய்ய, ஆண்டவரின் இறுதி இராவுணவு வரலாற்றை அதே வார்த்தையில் மீண்டும் கூறுகிறார். ஒரு வேளை ஆண்டவரின் இறுதித் தருணங்களை நினைவூட்டுகின்ற போது கிறிஸ்தவர்கள் ஒற்றுமைப்படுவார்கள் அல்லது தங்களது சிற்றின்பங்களை விட்டு, கிறிஸ்தவ இலட்சியங்களை முதன்மைப்படுத்துவார்கள் என்று பவுல் நினைத்திருக்கலாம். பவுல் இங்கே கோடிடுகின்ற காட்சிகளை முக்கியமாக மாற்கு 14,17-31ல் காணலாம். காட்டிக்கொடுக்கப்பட்ட என்ற சொல், இயேசு ஆண்டவரின் துன்பங்களுக்கு, சீடர்களும் முக்கியமான காரணம் என்பதனைக் காட்டுகிறது. பவுல் இங்கே சீடர்களின் (கிறிஸ்தவர்களின்) குற்ற உணர்வை தூண்டப் பார்கிறார். ஒரு வேளை இது அவர்களின் பிரிவினையை கைவிட உதவும் என்று நினைத்திருக்கலாம்.
வ. 24: உணவின் முன் நன்றி செலுத்துதல் சாதாரண யூத மக்களின் வழமை. அவர்கள் உணவை தந்தமைக்காக, கடவுளுக்கு நன்றி சொன்னார்கள். முதல் ஏற்பாட்டில் கடவுளைப் போற்றினார்கள் என்று காணலாம். இங்கே இயேசு சாதாரண அப்பத்தை (ἄρτος ஆர்டொஸ்- அப்பம், பாண்) தன்னுடைய உடலாக மாற்றியதை நினைவூட்டுகிறார். ஆக இந்த அப்ப பகிர்வின் போது ஏற்படும் அவமரியாதைகள் இயேசுவையே நேரடியாக அவமரியாதை செய்வதற்கு சமம் என்பததையும் நினைவூட்டுகிறார். இயேசுவின் வார்த்தைகள், ஒவ்வொரு அப்பப்பகிர்வும் அவரின் நினைவை நினைவூட்டுவதாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதனைக் காட்டுகின்றன.
வ. 25: பாவிக்கப்பட்டுள்ள அதே வார்த்தைகள், ஆண்டவருடைய புதிய உடன்படிக்கையையும் அதன் புதிய அர்த்தத்தையும் நினைவூட்டுகின்றன. முதல் ஏற்பாட்டில் அதிகமான உடன்படிக்கைகள் மிருக இரத்தத்தால் ஏற்படுத்தப்பட்டன, இங்கே இறைமகனுடைய இரத்தத்தால் ஏற்படுத்தப்படும் உடன்படிக்கை நித்திய உடன்படிக்கையாகிறது. மிருக உடன்படிக்கைகள் அதிகமாக மீறப்பட்டன அல்லது உடைக்கப்பட்டன. இந்த உடன்படிக்கை கடவுளின் இரத்தத்தினால் செய்யப்படுவதால் மீறவும் படாது, உடைக்கவும் படாது. இங்கே பவுல், இந்த கொண்டாட்டம் களியாட்டமல்ல, மாறாக கடவுள் காட்டிய அன்பின் நினைவு, அதனை மக்கள் துஸ்பிரயோகம் செய்வது, வெட்கக்கேடானது அத்தோடு ஆபத்தானது என்றும் காட்டுகிறார். விவிலியத்தில் கிண்ணம் ஒரு தொழிலையோ அல்லது துன்பத்தையோ குறிக்கலாம்.
வ. 26: சாவை மீண்டும் அறிக்கையிடுத்ல் என்ற வசனம் மிகவும் காட்டமான வசனம், ஆனால் அது அன்றும் இன்றும் தேவையான வசனம். τὸν θάνατον τοῦ κυρίου καταγγέλλετε ἄχρι οὗ ἔλθῃ. டொன் தானாடொன் டூ கூரியூ காடான்கெல்லெடெ அக்ரி ஹூ எல்தே.ஒருவருடைய சாவை நினைக்கிறபோது அவரின் அன்பும், மேன்மையும் நினைவுகூறப்படுகின்றது. பவுல் மீண்டும் மீண்டும் இயேசுவின் சாவை நினைவு கூர்ந்து அவருக்கு பிரமாணிக்கமாய் இருக்க, இந்த அப்பப்பகிர்வை நேர்த்தியாக ஒப்புக்கொடுக்கச் சொல்கிறார். பவுலுடைய வார்த்தைகளின் பாரத்திலிருந்து, அக்கால திருச்சபை எவ்வளவு மோசமாக இந்த ஒன்றுகூடல்களை அவமதித்தது என நினைக்கத்தூண்டுகிறது. (இந்த கேவலங்கள் இன்றும் இல்லாமல் இல்லை). ஆண்டவருடைய சாவை என்று, பவுல் எதிர்மறையாக கருத்துரைக்கவில்லை, மாறாக ஆண்டவரின் பணி இன்னும் நிறைவேற இருக்கிறது என்கிறார், இதனால்தான், அவர் வரும்வரை, என்று தொடர்கிறார்.
லூக் 9,11-17
11அதை அறிந்து திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்களை அவர் வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர்களைக் குணப்படுத்தினார். 12பொழுது சாயத் தொடங்கவே பன்னிருவரும் அவரிடம் வந்து, 'இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே; சுற்றிலுமுள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவு வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்' என்றனர். 13இயேசு அவர்களிடம், 'நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்' என்றார். அவர்கள், 'எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும்' என்றார்கள். 14ஏனெனில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு அவருடைய சீடர்களை நோக்கி, 'இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள்' என்றார். 15அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள். 16அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற்றின் மீது ஆசிகூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார். 17அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.
லூக்கா நற்செய்தியின் ஒன்பதாவது அதிகாரம், பன்னிருவரை அனுப்புதல், ஏரோதுவின் குழப்பம், ஐயாயிரம் பேருக்கு உணவு, பேதுருவின் அறிக்கை, இயேசு சாவை முன்னறிவித்தல், தோற்றம் மாறுதல், சிறுவனிடமிருந்து பேயை அகற்றுதல், இயேசுவை ஏற்க மறுத்த சமாரியர், மற்றும் இயேசுவை பின்பற்ற விரும்பியவர்கள் போன்ற சிறுபகுதிகளைத் தாங்கி வருகிறது. இங்கு வருகின்ற வசனங்களை ஆண்டவர் சொல்லும் முன், பன்னிருவர் அதிகாரத்தோடு அனுப்பப்பட்டிருந்தனர் ஆக இந்தப் பகுதியும் எப்படி ஆண்டவரின் பணியாளர்கள் பணிசெய்ய வேண்டும் என்ற பயிற்சியை தருவதைப் போல் அமைக்கப்பட்டிருக்கிறது. அத்தோடு ஏரோதுவின் குழப்பத்திற்கும் (9,7-9) பேதுருவின் விசுவாச அறிக்கைக்கும் (9,18-21) இடையிலான ஒரு இணைப்பாக இப்பகுதி அமைந்துள்ளது.
வ. 11: திரளான மக்களுக்கு உணவளித்தல் பல்வேறு நற்செய்திகளில், ஒத்தமைவோடும் சிறுவித்தியாசங்களோடும் அமைந்துள்ளன. மாற்கு நற்செய்தியில் இந்த நிகழ்வு, கலிலேய கடலுக்கு அப்பாலிருந்த ஒரு தொலை பிரதேசத்தில் நடந்தது (காண்க மாற்கு 6,32), இங்கே லூக்கா சிறு மாற்றங்களைச் செய்கிறார். லூக்காவிற்கு இந்த இடம் பெத்சாய்தா. அத்தோடு மாற்குவில் இயேசு மக்கள்கூட்டத்தை கண்டு பரிவு கொள்கிறார், இங்கே லூக்கா அதனையும் விட்டுவிடுகிறார் (காண்க மாற்கு 6,34). ஆனால் இந்த மக்கள் கூட்டத்திற்கு, அதே பரிவால் என்னென்ன செய்தார் என்பதை விவரிக்கிறார் லூக்கா. லூக்கா வைத்தியாரனபடியால், குணமாக்குதலுக்கு எப்போதுமே முக்கியம் கொடுக்கிறார் போல.
வ. 12: மக்களுக்கு சேவை செய்யவும் அவர்களைப் பற்றி அக்கறை கொள்ளுதலையும் லூக்கா நற்செய்தியில் சீடர்களே தொடங்கிவைக்கின்றனர். சீடர்களின் அக்கறைக்கு காரணம் இருக்கிறது. பெத்சாய்தாவாக இருந்தாலும், இப்போது அவர்கள் இருப்பது தொலை தூரமாகும், அந்தியும் சாய்ந்துவிட்டது, மக்கள் களைத்திருக்கிறார்கள், அனைவருக்கும் கொடுக்குமளவிற்கு தங்களிடம் பணமோ உணவோ இல்லை என்பதை நினைக்கிறார்கள். திருத்தூதர்கள் முக்கியமான ஒன்றை மறந்துவிட்டார்கள், இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் ஏன் இன்னும் கூடுதலாக இருந்தாலும், தங்களோடு கடவுளே இருக்கிறார் என்பதை மறந்து விட்டார்கள். அதனால் ஆபத்தை மட்டுமே பார்க்கிறார்கள். தாங்களே மக்களை அனுப்பாமல் அதனை செய்யச்சொல்லி இயேசுவை கேட்கிறார்கள், நல்ல சீடர்கள்.
வ. 13: நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் (δότε αὐτοῖς ⸉ὑμεῖς φαγεῖν தெடெ அவ்டொய்ஸ் ஹூமெய்ஸ் பாகெய்ன்- நீங்களே அவர்களுக்க உண்ணக் கொடுங்கள்) என்ற வார்த்தைகள், விவிலியத்தில் பல நிகழ்வுகளை இனம் காட்டுகிறது.
அ. பாலைவனத்தில் இஸ்ராயேலருக்கு உணவூட்டியது
ஆ. எலியா நூறு பேருக்கு, இருபது அப்பங்களில் உணவூட்டியது (2அர 4,42-44)
இ. இயேசு இறுதி இராவுணவில் அப்பங்களை பிய்த்து நற்கருணையாக்கியது.
இப்படியாக அப்பங்களை பெருகச்செய்வது கடவுளின் இறை-அளித்தலை நினைவூட்டுகிறது. அத்தோடு இயேசு ஒவ்வொரு சீடராலும் மற்றவருக்கு உணவு கொடுக்க முடியும், உணவு கொடுக்க வேண்டும் என்ற நியதியை சுட்டிக்காட்டுகிறார். ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமுடைய குறியீட்டு அடையாளங்களை இனம்காண்பது அவ்வளவு எளிதல்ல. அப்பம் கலிலேயருடைய, அல்லது அனைத்து யூதருடைய முக்கிய உணவாகும். மீன் கலிலேயருடைய முக்கியமான உணவாக இருந்திருக்கலாம். பெரிய எண்ணிக்கையிலான மக்கள் திரள் வரும்போது மாமிசத்தை விட மீன் பொருட்செலவில்லாமல் இருந்திருக்கும். அத்தோடு
மீன்களின் அடையாளம், பல மறைந்துள்ள வெளிப்பாட்டு இலக்கியங்களில் (2பாருக்கு, 1ஏனோக்கு, 4எஸ்ரா) இறுதிக்கால விருந்தை நினைவூட்டுகின்றன.
மீன், ஆரம்ப கால கிறிஸ்தவர்களின் அடையாளமாகவும் இருந்தது. மீன் என்ற அடையாளம் 'இயேசு கிறிஸ்து கடவுளின் மகன், அவர் மீட்பர்' என்ற விசுவாச பிரமாணத்தின் அடையாளமாக இருந்தது. காண்க (தி.பணி 8,37). இந்த வசனம் அதிகமான மூலப் பிரதிகளில் காணப்படாது. தமிழ் விவிலியம் இதனை குறிப்பிடுகிறது. இப்படியாக மீன் கிறிஸ்தவரின் விசுவாச அடையாளமாக இருந்திருக்கிறது.
வ. 14: ஐயாயிரம் மற்றும் ஐம்பது உண்மையான இலக்கங்களையும் தாண்டி குறியீடுகளில் பல அர்த்தங்களைத் தரவல்லவை. இது இஸ்ராயேலரை குழுக்களாக பிரிக்கும் செயற்பாடுகளையும்
நினைவூட்டுகிறது. ஆனால் இதனை லூக்கா நினைத்து அமைத்திருப்பாரா என்பது சந்தேகமே. ஐயாயிரம் ஆண்கள் (ἄνδρες அந்திரஸ்-ஆண்கள்) என்பது, பெண்கள் அங்கே இல்லை என்பதல்ல, மாறாக பெண்களை எண்ணாமல் ஆண்கள் மட்டும் ஐயாயிரம் என்றெடுக்க வேண்டும். ஆக உண்மையான எண்ணிக்கை ஐயாயிரத்தையும் விட அதிகமாகும்.
வ. 15: அனைவரையும் பந்தியில் அமரச்செய்தது, ஆண்டவருடைய பந்தியில் அனைவருக்கும் இடமுண்டு என்பதைக் காட்டுகிறது. சீடர்களும் ஆண்டவர் சொன்னதை அப்படியே செய்கிறார்கள். ஆண்டவர் உள்ளெடுப்பவர்களை, வெளியில் அனுப்ப எந்த சீடருக்கும் உரிமை கிடையாது. (மக்களை கூட்டமாக வைத்து, இடிபட வைத்து, உணவு கொடுத்து, நம் மக்களின் மாண்பை கெடுக்கும் செயற்பாடுகளை புனிதத் தலங்கள் நிறுத்தவேண்டும. அமரச்செய்து, அவர்களை மதித்து, உணவு பரிமாறுவோம்).
வ. 16-17: வானத்தை அண்ணாந்து பார்த்து நன்றி கூறி செபித்தல் இஸ்ராயேலரின் செபிக்கும் முறையைக் காட்டுகிறது. மோசே, எலியா, எலிசேயு போன்றவர்கள் இவ்வாறே செய்தார்கள். ஆண்டவர் பகிர்ந்தளிக்கும் பணியை சீடர்களிடமே கொடுக்கிறார். ஆசீரை ஆண்டவர் கொடுக்கிறார், பகிர்வை, சீடர்கள் செய்ய கேட்கப்படுகிறார்கள். கொடுக்கப்படுவை அனைத்தும் பகிரப்படவே என்பதை இந்த அப்பங்களும் மீன்களும் நினைவூட்டுகின்றன. ஆண்டவரின் பந்தியில் குறைவுகிடையாது, பசி கிடையாது. எஞ்சுபவை கூட நிறைவாக இருக்கும் என்பதை இலக்கம் பன்னிரண்டு காட்டுகிறது. இந்த எஞ்சியவை இன்னும் பசியால் பலர் இருக்கிறார்கள், அத்தோடு எதிர்காலத்திலும் இருப்பார்கள் என்பதையும் பன்னிருவருக்கு (நமக்கும்)
நினைவூட்டுகிறது.
இந்த உலகில் ஆண்டவரின் ஆசீர்வாதங்கள் நிறைவாகவே உள்ளன,
அனைத்து ஆசீருக்கும் சொந்தக்காரர் ஆண்டவர் மட்டுமே.
ஆசீர்வதிக்கிற ஆண்டவர், அந்த ஆசீரை மற்றவருடன் பகிரக் கேட்கிறார்.
இவ்வுலகின் வறுமையும், இல்லாமைகளும்,
பகிராத சுயநலமிக்க சிந்தனைகளாலேயே உருவாகின்றன.
ஆண்டவர் நம்மைப் பார்த்து,
அவர்களை அமர வைத்து, 'நீங்கள் உள்ளதைக் கொடுங்கள்,
உங்களுக்கு நிறைவாகவே மிஞ்சும்' என்கிறார்.
ஆண்டவர் இயேசுவே!
எங்களிடம் இருப்பவை அனைத்தும் நீர் தந்தது, அவற்றை மற்றவருடன் பகிர நல்ல மனத்தை தாரும்.
நாங்களே ஆசீராய் மாற எங்களைத் தொடர்ந்து ஆசீர்வதியும்.
நற்கருணை எங்கள் வாழ்வாக, எங்கள் நம்பிக்கையையும் அதிகரியும். ஆமென்.