திருவருகைக்காலம் முதலாம் வாரம் (இ)
21.11.2021
A Commentary on the Sunday Readings
M. Jegankumar Coonghe OMI,
The Shrine of Our Lady of Good Voyage,
Velanai,
Jaffna.
Thursday, 25 November 2021
முதல் வாசகம்: எரேமியா 33,14-16
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 25,1.4-5. 9-10.
இரண்டாம் வாசகம்: 1தெசலோனிக்கர் 3,12-4,2
நற்செய்தி: லூக்கா 21,25-28.34-36
திருவருகைக் காலம்
ஒவ்வொரு திருச்சபைகளிலும் திருவருகைக் காலம் வெள்வொரு விதமாகக் கொண்டாடப்படுகிறது. கத்தோலிக்க திருச்சபையில் கி.பி. 480ம் ஆண்டுகளிலிருந்து இந்த வழிபாட்டு முறை நடைமுறையில் உள்ளது. சிலர் இதனை பேதுருவின் காலத்துடனும் இணைக்கப் பார்க்கின்றனர், அதற்கு வாய்மொழிப் பாரம்பரியம் மட்டுமே சாட்சியமாக உள்ளது. 'திருவருகை' என்ற சொல் கிரேக்க παρουσία பருசியா என்ற மூலச் சொல்லிலிருந்து வருகிறது. இதன்இலத்தின் வடிவமாக அத்வென்துஸ் adventus என்ற சொல் இருக்கிறது, இதிலிருந்துதான் ஆங்கில யனஎநவெ அட்வென்ட் என்ற தற்காலச் சொல் உருவாகியிருக்கிறது எனலாம்.
பரூசியா என்பது ஆரம்ப கால கிரேக்க நம்பிக்கையில் மனிதர்களின் கூட்டத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட தெய்வத்தின் வருகையைக் குறித்தது. பின்னர் கிரேக்க-உரோமையர்கள் காலத்தில் இது ஆட்சியாளர்களின் வருகையைக் குறிக்க பயன்பட்டது. சீசர்கள், அரசர்கள், ஆட்சியாளர்கள், தங்கள் மக்களை சந்திக்க, அவர்கள் இடங்களுக்கு எப்போதாவது வருவது வழமை, அவர்களின் வருகைக்காக மக்கள் காத்திருப்பர். இந்த நிகழ்வு அக்காலத்தில் வழக்கிலிருந்த ஒரு சாதாரண அரசியல் நிகழ்வு. இந்த வருகை மக்களின் வாழ்வில் பல மாற்றங்களை உண்டுபண்ணியதால், மக்கள் அதனை எதிர்பார்த்தனர்.
கிறிஸ்தவம் வளர்ந்ததன் பின்னர், இயேசுவின் இரண்டாம் வருகையை நினைவூட்டும் விதமாக இந்த பரூசியா என்ற சொல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக பயன்படுத்தப்பட தொடங்கியது. இது இரண்டு விதமான வருகையை கிறிஸ்தவர்களுக்கு நினைவூட்டுகிறது. முதலாவது வருகை மெசியாவின் பிறப்பிற்காக காத்திருந்த வருகையாகவும், இரண்டாவது வருகை இந்த மெசியா இரண்டாவது தடவையாக வருவதற்கான காத்திருத்தலாகவும் இருக்கின்றன. திருவருகைக் காலம் உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் ஒரு வழிபாட்டு ஆண்டை ஆரம்பித்து வைக்கிறது, இவ்வாறு இந்த ஆண்டு (இ-லூக்கா) ஆண்டாக இன்றிலிருந்து ஆரம்பிக்கின்றது. இந்த காலத்தில் நத்தார் மலர்-வலயம், நத்தார் இசைப் பாடல்கள், நத்தார் கால அட்டவணை, நத்தார் சோடினைகள், மற்றும் நத்தார் கொண்டாட்டங்கள் என நம் வீடுகளையும் ஆலயங்களையும் அலங்கரிக்கும். கீழைத்தேய கிறிஸ்தவர்கள் இந்த காலத்தில் நத்தார் உணவுத்தவிர்ப்பு என்ற நிகழ்வை 40 நாட்களுக்கு தவமாக மேற்கொள்கின்றனர், இந்த மரபு பல காலங்களுக்கு முன்பு கத்தோலிக்க திருச்சபையின் வழகிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது.
இந்த நாட்களின் வழிபாட்டு வாசகங்களின் கருப்பொருளாக இயேசுவின் இரண்டாம் வருகையும் அத்தோடு அவரின் வரலாற்று பிறப்பு நிகழ்வும் திகழ்கின்றன. கத்தோலிக்க திருச்சபை இந்த நான்கு வாரங்களை இரண்டாக பிரித்து, முதலாவது பகுதியாக, திருவருகைக் கால முதல் ஞாயிறிலிருந்து டிசம்பர் 16ம் திகதிவரை உள்ளதை, இயேசுவின் இரண்டாம் வருகைக்கான ஆயத்தமாகவும் (பரூசியா): இரண்டாவதாக, 17ம் திகதியிருந்து 24ம் திகதிவரையான நாட்களை இயேசுவின் முதலாவது வருகையான அவரது வரலாற்று பிறப்பு மகிழ்சியை நினைவு கூருவதாகவும் (நத்தார்) அமைத்துள்ளது. இந்த காலம் ஒர் ஆயத்த காலமாக இருப்பதனால், தபசு காலத்தைப்போல் ஊதா நிற ஆடைகள் வழிபாட்டில் அணியப்படுகின்றன. ஐரோப்பிய திருச்சபையிலும் மற்றும் அனைத்துலக திருச்சபையிலும் இந்த காலத்திற்கென்று பல தனித்துவமான கிறிஸ்து பிறப்பு பாடல்கள் இன்னும் அழியாமல் பாவனையில் உள்ளன. வட ஐரோப்பிய நாடுகளில் பல விதமான அத்வென்துஸ் பாரம்பரிய நிகழ்வுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்த நாட்களில் வரும் நான்கு வாரங்களில் முதலாவது வாரத்திற்கு நம்பிக்கையின் மெழுகுவர்த்தியும், இரண்டாவது வாரத்திற்கு பெத்லேகேம் மெழுகுவர்த்தியும், மகிழ்ச்சியை குறிக்கும் (Gaudete) எனும் மூன்றாவது வாரத்திற்கு ரோசா வண்ண மெழுவர்த்தியும், இறுதியாக வானவர்களின் மகிழ்ச்சி செய்தியைக் குறிக்கும் விதமான நான்காவது மெழுகுவர்த்தியாக வானதூதர் மெழுகுவர்த்தியும் (வெள்ளை) ஏற்றப்படுகின்றன. இருபத்திநான்காம் நாள் மாலைப் பொழுதில் ஆண்டவரின் பிறப்பை குறிக்கும் விதமாக ஐந்தாவது மெழுகுதிரி ஒன்றும் ஏற்றப்படுகின்றது. கிறிஸ்து பிறப்புக் காலம் பல பரிசில்களையும், மகிழ்வான தருணங்களையும் நினைவுபடுத்துவதால் இதனை குழந்தைகளின் காலம் என்றும் அழைக்கின்றனர். ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் நத்தார் பல குழந்தை பருவ நிகழ்வுகளை நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.
எரேமியா 33,14-16
14இதோ, நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது இஸ்ரயேல் வீட்டாருக்கும் யூதா வீட்டாருக்கும் நான் கொடுத்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவேன். 15அந்நாள்களில் — அக்காலத்தில் — நான் தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார். 16அந்நாள்களில் யூதா விடுதலை பெறும்; எருசலேம் பாதுகாப்புடன் வாழும். 'யாவே சித்கேனூ' என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்.
எரேமியா, முதல் ஏற்பாட்டில், பிந்திய இறைவாக்கினருள் மிகவும் முக்கியமானவர். தென்நாட்டு யூதேயாவில் மிக வளமான காலங்களில் இருந்து மிக கடினமான காலங்களில் இறைவாக்குரைத்தவர். (יִרְמְיָהוּ யிர்மெயாகு) எரேமியா - என்றால் கடவுள் ஒளிர்கிறார், ஒளிர்கின்ற கடவுள், என்றும் பொருள் படும். ஐந்து யூதேயாவின் அரசர்களின் காலத்தில் இறைவாக்குரைத்த இவர், இறுதியாக எருசலேம் பாபிலோனியர்களினால் அழிந்த போது அதையும் தம் கண்களால் கண்டவர். இவருடைய காலத்தில்தான் எருசலேமில் இளம் அரசரான யோசியா தமது சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார், ஹூல்டா என்ற பெண்
இறைவாக்கினரும், எரேமியாவுடைய காலத்தைச் சார்ந்தவரே. அடையாளங்கள் மூலமாக இறைவாக்குரைப்பதில் வல்லவரான எரேமியா, பழைய ஏற்பாட்டில்
இயேசுவை அடையாளப்படுத்துகிறார் என்பர் கிறிஸ்தவ ஆய்வாளர்கள். உருவகங்கள் வாயிலாக பேசுவது, தமது சொந்த மக்களாலேயே புறக்கனிக்கப்பட்டது, மக்களுக்காகவும் எருசலேமிற்காகவும் கண்ணீர்விட்டது, சிறைப்படுத்தப்பட்டது, உயிர்தியாகம் செய்தது போன்றவை இயேசு ஆண்டவரின் வாழ்வை ஒத்திருந்ததை மறக்க இயலாது, இதனால் தானோ என்னவோ, சிலர் இயேசுவை எரேமியா என்றும் எண்ணினர் (காண். மத் 16,14).
வ.14: ஷநாட்கள் வந்துகொண்டிருக்கின்றன, சொல்கின்றேன், ஆண்டவர்| என்னும் பாடமே நேரடி மொழிபெயர்பாக இருக்கும். என்ன வித்தியாசம்? ஆண்டவரின் நாட்கள் மனித கணக்கில் அறியப்பட முடியாது என்கின்றார் எரேமியா. הִנֵּה יָמִים בָּאִים ஹின்னே யாமிம் பா'இம்- பாருங்கள் வருகின்றன நாட்கள்.
ஷபேத் யிஸ்ராயேல், யூதா வீட்டார்| (בֵּ֥ית יִשְׂרָאֵל בֵּ֥ית יְהוּדָה - பேத் யிஸ்ராயேல், பேத் யேஹூதா)இந்த இரண்டு நாட்டுக்காரரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியும் அந்நியப்படுத்தியும் வாழ்ந்துவரும் சகோதரர்கள் (இன்றுவரை), ஆண்டவருக்கு முன்னால் அனைவரும் சமமே என நாசுக்காக சொல்கிறார் எரேமியா. கடவுள் பிரிவினைகளுக்கு அப்பாற்பட்டவர், அவர் மனிதர்களைப்போல் சிறுபிள்ளைத்தனமானவர் அல்ல.
வ.15: ஷதாவீதின் வீடு, நீதியின் தளிர்| இங்கு பார்க்கவேண்டயது தாவீதல்ல அவர் வீடுமல்ல, மாறாக ஆண்டவரின் உடன்படிக்கையும் அத்தோடு தாவிதிற்கு வழங்கப்படவிருக்கும் ஷநீதியின் தலைவரை.| דָוִד צֶמַח צְדָקָה - தாவித் ட்செமாஹ் ட்செதாகாஹ் - தாவீதின் நீதியின் தளிர்.
அவர் நீதியின் நேர்மையும் நிலைநாட்டுவார் எனச் சொல்லப்படுகிறது. நீதியும் நேர்மையும், கடவுளுடைய முக்கிய பண்புகளாக கருதப்படுகின்றது. מִשְׁפָּט וּצְדָקָה மிஷ்பாத் வுட்செதாஹ் - நீதியின் நேர்மையும்.
வ.16: யூதா விடுதலை பெறும், எருசலேம் பாதுகாப்பில் வாழும்: எரேமியாவுடைய காலத்தில் யூதா நாடும் எருசலேம நகரும் பாபிலோனியரிடம் வீழ்ந்தது. வீழ்ச்சி எழுச்சியினுடைய அடையாளம் அத்தோடு வீழ்ச்சி மறுமலர்சியின் அடையாளம் என்கின்றது உலக வரலாறு. இந்த உண்மை
இவர்களுக்கு மட்டுமல்ல வீழ்த்ப்படுகின்ற அனைத்து இன மக்களுக்கும் பொருந்தும். ஈழ தமிழினத்திற்கும் பொருந்தும். எனெனில் வரலாற்றை அமைப்பவர் கடவுள் ஒருவரே.
உ) ஷஅடோனாய் சித்கேனு|: கடவுளுக்கு பல புனைப்பெயர்கள் விவிலியத்தில் வருவது வழமை ஆனால் எருசலேமிற்கு கடவுளின் ஒரு பண்பை பெயராக கொடுப்பது அழகான இறையியலை தூண்டுகின்றது. எருசலேம் என்றால் ஷசமாதானத்திற்தின் நகர்| எனவும் பொருள் படும். இங்கு ஷகடவுள் எங்கள் நீதி| (יְהוָה צִדְקֵנוּ யாவே சித்கேனு) என்பது நீதியில்லாமல் அமைதியில்லை, அந்த நீதியும் கடவுளுடைய இன மத மொழி சாராத நீதியாக இருக்கவேண்டுமென்பது எத்துனை அழகு. நீதியில்லாம்ல், அமைதியில்லாமல் இருந்த எருசலேமிற்கு கடவுளே நீதியாக வருவார், அதனால் அமைதி வரும் என எரேமியா விழிக்கின்றார். இன்று ஈழத்தில் பலர் நீதியை மழுப்பி ஷஅவர்களின்| அமைதியை கொண்டுவர முயல்கின்றார்கள். பயங்கரவாதற்திற்கெதிரான போர் என்பார்கள், அப்பாவிகளை கொல்வார்கள். நீதியில்லாம்மல் அமைதி வராது.
உலகம் முழுவதும் அப்பாவிகள் கொல்லப்படுகிறார்கள், கொல்பவர்கள் அரச பயங்கரவாதிகளும் கிழர்ச்சி பயங்கரவாதிகளும். ஐரோப்பிய அப்பாவிகளுக்கு செபம், கீழைத்தேய அப்பாவிகளுக்கு சாபம், ஆனால் கடவுளுக்கு தெரியும் இருவரும் அப்பாவிகளென்று.
(பி.கு: யாவே| יהוה என்பது கடவுளுடைய சொந்தப்பெயர் என எபிரேயர் கருதியதால் ஷஅடோனாய்| ஷஎன்தலைவர்| என கடவுளை செல்லமாக அழைக்கின்றனர், இயேசு ஆண்டவரும் அரமேயிக்க மொழியில் ஷஅப்பா| என அதனையே செய்தார். என்ன, இன்னும் கொஞ்சம் உரிமையோடு செய்தார்.)
திருப்பாடல் 25
வழிகாட்டிப் பாதுகாக்குமாறு வேண்டல்
(தாவீதின் புகழ்ப்பா)
1ஆண்டவரே, உம்மை நோக்கி, என் உள்ளத்தை உயர்த்துகிறேன்.
2என் கடவுளே, உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன்; நான் வெட்கமுற விடாதேயும்;
என் பகைவர் என்னைக் கண்டு நகைக்க விடாதேயும்.
3உண்மையிலேயே, உம்மை நம்பும் எவரும் வெட்கமுறுவதில்லை; காரணமின்றித் துரோகம் செய்பவரோ வெட்கத்திற்கு உள்ளாவர்.
4ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.
5உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுதும் நம்பியிருக்கின்றேன்;
6ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவை
தொடக்கமுதல் உள்ளவையே.
7என் இளமைப் பருவத்தின் பாவங்களையும், என் குற்றங்களையும் நினையாதேயும், உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர்.
8ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.
9எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார்.
10ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு, அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும்.
11ஆண்டவரே, உமது பெயரின் பொருட்டு என் குற்றத்தை மன்னித்தருளும்; ஏனெனில், என் குற்றம் மிகப் பெரியது.
12ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர் எவரோ அவருக்குத் தாம் தேர்ந்துகொள்ளும் வழியை அவர் கற்பிப்பார்.
13அவர் நலமுடன் வாழ்வார்; அவருடைய மரபினர் நாட்டைச் சொந்தமாக்கிக்கொள்வர்.
14ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போருக்கே உரித்தாகும்; அவர் அவர்களுக்கு தமது
உடன்படிக்கையை வெளிப்படுத்துவார்;
15என் கண்கள் எப்போதும் ஆண்டவரை நோக்கியிருக்கின்றன் அவரே என் கால்களை வலையிலிருந்து விடுவிப்பார்.
16என்னை நோக்கித் திரும்பி என் மீது இரங்கும்; ஏனெனில், நான் துணையற்றவன்; துயருறுபவன்.
17என் வேதனைகள் பெருகிவிட்டன் என் துன்பத்தினின்று என்னை விடுவித்தருளும்.
18என் சிறுமையையும் வருத்தத்தையும் பாரும்; என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருளும்.
19என் எதிரிகள் பெருகிவிட்டதைப் பாரும். அவர்கள் எத்துணைக் கொடுமையாய் என்னை வெறுக்கின்றனர்!
20என் உயிரைக் காப்பாற்றும்; என்னை விடுவித்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ள
என்னை வெட்கமுற விடாதேயும்.
21வாய்மையும் நேர்மையும் எனக்கு அரணாய் இருக்கட்டும்; ஏனெனில், நான் உம்மையே
நம்பியிருக்கின்றேன்.
22கடவுளே, இஸ்ரயேலரை அவர்கள் படும் துன்பங்கள் அனைத்தினின்றும் மீட்டருளும்.
திருப்பாடல்கள் புத்தகத்தை ஐந்து பிரிவுகளாக பிரிக்கும் பிரிவினுள், இந்த 25வது பாடல், முதலாவது பிரிவினுள் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் இந்த திருப்பாடலை ஒரு தனி மனித புலம்பல் பாடல் என வகைப்படுத்தியுள்ளனர். அத்தோடு இதனை முழுமையில்லாத அகரவரிசைப் பாடல் எனவும் வாதிடுகின்றனர். எபிரேய அகரவரிசையில் சில எழுத்துக்கள் இந்த பாடலிலே தவறவிடப்பட்டிருக்கின்றன. இந்தப் பாடலின் முன்னுரை இதனை தாவீதிற்குரிய பாடல் எனக் காட்டுகிறது (לְדָוִד லெதாவித்- தாவீதிற்குரியது).
வ.1: (א அலெப்- எபிரேய அரிச்சுவடியின் முதல் எழுத்து): முதலாவது எழுத்தில் தொடங்கும் இந்த வரியில், ஆசிரியர் தான் ஆண்டவரை நோக்கி தன் ஆன்மாவை அல்லது உள்ளத்தை உயர்த்துவதாகச் சொல்கிறார் (נַפְשִׁי אֶשָּׂא நப்ஷி 'எஸ்ஸா'). இது ஒரு தனிநபர் புலம்பல் பாடலாக இருக்கின்ற படியால், இங்கே ஆண்டவரை நோக்கி உள்ளத்தை உயர்த்துவது, அவரது துன்பமான நிலையைக் காட்டுகிறது என எடுக்கலாம்.
வ.2: இந்த வரியும் முதலாவது எழுத்துடனேயே தொடங்குகின்றது. தான் ஆண்டவரில் நம்பிக்கை வைத்திருப்பதால், தன்னை அவமானம் அடையவிடவேண்டாம் என்கிறார் (אַל־אֵבוֹשָׁה 'அல் -'எவோஷாஹ்- நான் அவமானம் அடையாதிருப்பேனாக). அதுவும் தான் தன்னுடைய எதிரிகளிடம் அவமானம் அடையவிடவேண்டாம் என்கிறார். என் எதிரிகள் என்னில் மகிழ்சி அடையாதிருப்பார்களாக என்று எபிரேய விவிலியம் காட்டுகிறது (אַל־יַעַלְצוּ אֹיְבַי לִי׃ 'அல்-ய'ல்ட்சூ 'ஓயெவாய் லி)
தான் அவமானம் அடைந்தால் அதுவும் கடவுளுடைய அனுமதியோடே நடைபெறுகிறது. அதாவது அனைத்தும் ஆண்டவரின் கைகளிலேயே உள்ளது, எனவே அவர் நினைத்தால் அதனை தடுக்கலாம் என்பதால் ஆண்டவரிடம் மன்றாடுகிறார் ஆசிரியர்.
வ.3: (ג கிமெல்- எபிரேயத்தின் மூன்றாவது எழுத்து). இந்த வரி மூன்றாவது எழுத்தில் ஆரம்பிக்கிறது. ஆண்டவரை நம்புவோர் வெட்கம் அடைவதில்லை என்பது இஸ்ராயேலரின் நம்பிக்கை, அதனை தானும் கொண்டிருக்கிறார் ஆசிரியர்.
அதேவேளை துரோகம் இழைக்கிறவர்கள் நிச்சயமாக அவமானம் அடைவார்கள் அதில் மாற்றம் இல்லை என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். இவர்களை குறிக்க הַבּוֹגְדִים רֵיקָם ஹபோக்திம் ரெகாம் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தங்களாக, தேவையில்லாமல் துரோகம் இழைப்பவர்கள் அல்லது பிரியோசனமில்லாமல் துரோகம் இழைப்பவர்கள் என்று வருகின்றன.
வ.4: (ד தலெத்- நான்காவது எழுத்து). எபிரேயத்தின் நான்காவது எழுத்தில் இந்த வரி தொடங்குகின்றது. திருப்பிக் கூறுதல் முறையில், உமது பாதைகளை (דְּרָכֶיךָ தெராகெகா) மற்றும் உமது வழிகளை (אֹרְחוֹתֶיךָ 'ஓர்ஹோதெகா) என்ற ஒத்த கருத்துச் சொற்கள் பாவிக்கப்பட்டுள்ளன.
ஆண்டவரின் பாதைகளையும் அவர் வழிகளையும் விட்டு தங்களை அகலவிட வேண்டாம் என்ற வேண்டுதலை ஆசிரியர் முன்வைக்கிறார்.
வ.5: (ה ஹெ - ஐந்தாவது எழுத்து). ஆசிரியர் கடவுளை தன்னுடைய மீட்பராம் கடவுளாக ஏற்றுக்கொள்வதால் (אֱלֹהֵי יִשְׁעִי 'எலோஹே யிஷ்'இ), உண்மை நெறியில் தன்னை நடத்தி கற்பிக்க கேட்கிறார். ஆண்டவரை மீட்பின் கடவுளாக காண்பது இஸ்ராயேலர்களின் நம்பிக்கைகளில் மிக முக்கியமானது. இந்த கடவுளையே இவர் நாள் முழுவதும் நம்பியிருப்பதாகவும் சொல்கிறார்.
இதிலிருந்து சிலர், சில வேளைகளில் கடவுளையும் பல வேளைகளில் பொய்த் தெய்வங்களையும் நம்பியிருக்கிறாகள்; என்ற குற்றச்சாட்டையும் முன்வைப்பது போல தெரிகிறது.
வ.6: (ז ட்ஸயின்- எழாவது எழுத்து). ஆறாவது எழுத்து தவறவிடப்பட்டுள்ளது. இந்த வரி ஏழாவது வரியில் தொடங்குகின்றது. ஆறாவது வரி தவறியதற்கான காரணம் அறியப்படவில்லை. ஆண்டவருக்கு, அவர் தன்னுடைய இரக்கத்தையும் (רַחֲמֶיךָ ரஹாமெகா), பேரன்பையும் (וַחֲסָדֶיךָ வஹாசாதேகா) நினைக்கவேண்டும் என சொல்லப்படுகிறது.
மனிதர்கள் கடவுளுக்கு எப்படி நினைவூட்டலாம் என்ற கேள்வியை இந்த வரி தரலாம். ஆனால் திருப்பாடல் ஆசிரியர் தன்னுடைய ஆழமான உறவின் பொருட்டும், தான் கடவுளிடம் கொண்டுள்ள நெருக்கத்தின் பொருட்டும் இப்படிச் சொல்கிறார் என எடுக்கலாம். இதுவும் ஒரு வகையான மன்றாட்டே. அதேவேளை இந்த இரக்கமும் பேரன்பும் தொடக்கமுதல் உள்ளவை என்பதையும் ஆசிரியர் தெளிவு படுத்துகிறார்.
வ.7: (ח ஹேத்- எட்டாவது எழுத்து). இளமைப் பருவத்தின் பாவங்களும் குற்றங்களும் இங்கே எழுவாய் பொருளாக எடுக்கப்படுகின்றன. இளமைப் பருவத்தில் பாவங்களும் குற்றங்களும் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிமாக உள்ளன என்பதை இவர் காட்டுகிறார் போல. ஆண்டவர் நல்லவராக இருக்கிறபடியால், அவரது பேரன்பிற்கேற்ப தன்னை மன்னிக்கும் படி கேட்கிறார்.
வ.8: (ט தெத்- ஒன்பதாவது எழுத்து). ஆண்டவர் நல்லவர், மற்றும் நேர்மையுள்ளவர் என்று விழிக்கப்படுகிறார் (טוֹב־וְיָשָׁר יְהוָה தோவ்-வெயாஷார் அதோனாய்). இதன் காரணமாகத்தான் அவர் பாவிகளுக்கு நல்வழியைக் காட்டுகிறார் என்று நம்புகிறார் ஆசிரியர். ஆசிரியர் தன்னையும் பாவியாக ஒப்புவித்து மன்னிப்பு கேட்பது போல வரிகள் அமைக்கப்பட்டுள்ளதை நோக்குவோம்.
வ.9: (י யோத்- பத்தாவது எழுத்து). பாவிகளைப் பற்றி பேசிய ஆசிரியர் இந்த வரியில் எளியோர்களைப் பற்றி பேசுகிறார். ஆண்டவர் எளியோருக்கு நேரிய வழியைக் காட்டி, அதில் வாழச் செய்கிறார் என்கிறார். இங்கே எளியோர்களை குறிக்க עֲנָוִים ('அனாயிம்) என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. அது வழக்கமாக தாழ்த்தப்பட்டவர்களை அல்லது வறியவர்களை குறிக்கின்ற சொல், ஆனால் இங்கே இது மனத்தாழ்மை உடையவர்களை குறிப்பதாக ஆய்வாளர்களால் நோக்கப்படுகிறது.
வ.10: (כּ கப்- பதினோராவது எழுத்து). இந்த வரி இஸ்ராயேல் ஞானிகளுடைய இன்னொரு நம்பிக்கையைக் காட்டுகிறது. ஆண்டவருடைய உடன்படிக்கையும் (בְּרִית பெரித்), அவருடைய ஒழுங்குமுறையும் (עֵדוּת 'எதூத்) மிக முக்கியமானவை. அதை அனைவரும் கடைப்படிக்க கட்டளையிடப்பட்டார்கள்.
இவற்றை கடைப்பிடிப்போருக்கு ஆண்டவருடைய பாதைகள் எல்லாம் பேரன்பு உள்ளதாகவும், உண்மையுள்ளதாகவும் விளங்குமாம்.
வ.11: (ל லமெத்- பன்னிரண்டாவது எழுத்து). இந்த எழுத்தில் ஆசிரியர் தன்னை நேரடியாகவே, பாவி என்று அழைக்கிறார் (לַעֲוֹנִי லா'அயோனி- என் குற்றத்தை). தன்னுடைய குற்றத்தை மன்னிக்க கேட்கும் அவர், அதனை ஆண்டவர் தனது பெயரின் பொருட்டு செய்ய வேண்டும் என்ற வாதத்தை முன்வைக்கிறார் (לְמַעַן־שִׁמְךָ֥ லெமா'அன்-ஷிம்கா). ஆண்டவருடைய பெயர் புனிதமானது, ஆக இந்த புனிதத்துவத்தை கொண்டுள்ள ஆண்டவர் தன் மக்களின் பாவத்தை மன்னிக்க வேண்டியவராக
இருக்கிறார் என்பதே ஆசிரியரின் வாதம். அதேவேளையில் தன்னுடைய குற்றங்களும் அதிகமாக உள்ளன என்றும் அறிக்கையிடுகிறார் (רַב־הוּא ராவ்-ஹு').
வ.12: (ם இמ மெம்- பதின்மூன்றாவது எழுத்து). ஆண்டவர் யாருக்கு தன் வழியை கற்பிக்கிறார் என்பதை இந்த வரி காட்டுகிறது. ஆண்டவருக்கு அஞ்சிநடப்பவர்கள் என்பவர்கள், ஆண்டவரில் நம்பிக்கை கொண்டவர்களைக் குறிக்கிறது, இவர்களுக்குத்தான் ஆண்டவர் தன் வழியை கற்பிக்கிறார். ஆக ஞானிகளுக்கல்ல மாறாக ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழியில் நடப்பவர்கள்தான் ஆண்டவரின் சீடர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
(מִי־זֶה הָאִישׁ יְרֵא יְהוָה மி-ட்செஹ் ஹா'இஷ் யெரெ' அதோனாய்- யார் இந்த மனிதன், அவன் கடவுளுக்கு அஞ்சுபவன்).
வ.13: (נ ,ן நுன்- பதினாங்காம் எழுத்து). கடவுளுக்கு அஞ்சுபவருக்கு இந்த உலகத்தில் நடப்பது என்னவென்று சொல்லப்படுகிறது. முதலில் இவர்கள் நலமுடன் வாழ்வார்கள். இதனை எபிரேய விவிலியம் 'அவருடைய ஆன்மா நன்மையில் வாழும்' என்கிறது (נַפְשׁוֹ בְּטוֹב תָּלִין நப்ஷோ பெதோவ் தாலின்;). அதேவேளை ஆண்டவருடைய ஆசீர் அவரின் வழிமரபையும் ஆசீர்வதிக்கிறது அதாவது அவர் வழிமரபினர் நாட்டை உரிமையாக்குவர் என்பதும் சொல்லப்படுகிறது (יִרַשׁ אָֽרֶץ யிராஷ் 'ஆரெட்ஸ்).
வ.14: (ס சாமெக்- பதினைந்தாவது எழுத்து). ஆண்டவரின் நட்புறவு யாருக்குரியது என்பதை இந்த வரி காட்டுகிறது. வழமையாக ஆண்டவருடைய நட்புறவைப் பற்றி விவிலியம் அதிகமாக பேசுவதில்லை, அது ஆண்டவருடைய இறைதன்மையை குறைத்துவிடும் என்பதால் அப்படி இருக்கலாம். ஆனால் திருவிவிலியத்தின், ஞான ஆசிரியர்கள் மற்றும் கவிஞர்கள் இந்த சட்டங்களை தாண்டியவர்கள் என்பதால் இந்த கருத்தை அவர் பயமின்றி முன்னெடுக்கிறார்.
(סוֹד יְהוָה சோத் அதோனாய்- ஆண்டவரின் நட்பு).
இப்படியாக ஆண்டவரின் நட்புறவை பெற்றவர்கள் அதாவது அவர் நண்பர்கள் என்போர் ஆண்டவருக்கு அஞ்சிநடக்கிறவர்கள், இவர்களுக்குத்தான் ஆண்டவர் தன்னுடைய உடன்படிக்கையை வெளிப்படுத்துகிறார்.
வ.15: (ע அயின்- பதினாறாவது எழுத்து). மீண்டுமாக தன்னுடைய நம்பிக்கையின் உணர்வுகளை தன் அங்க உறுப்புக்களை பாவித்து விளக்குகிறார். தன்னுடைய கண்கள் எப்போதும் ஆண்டவரையே நோக்கியிருக்கின்றன என்கிறார். கண்கள் என்பது இங்கே பார்வை, விருப்பம், நோக்கம் மற்றும் சிந்தை போன்றவற்றை குறிக்கின்றன (עֵינַי תָּמִיד אֶל־יְהוָה 'எனாய் தாமித் 'எல்-அதோனாய்: என் கண்கள் எப்போதும் ஆண்டவரிலே).
கண்களைப் போலவே தன் கால்களையும், ஆண்டவர் வலையிலிருந்து மீட்பார் என்கிறார் (רֶגֶל ரெகெல்- கால்). கால்கள் இங்கே ஒருவருடைய சுயத்தைக் காட்டுகின்றன. அவர் தன்னை கண்ணியில் சிக்கிய கால்களுடன் ஒப்பிடுகிறார்.
வ.16: (פּ , ף பே- பதினேழாவது எழுத்து). ஆசிரியர் தன்னுடைய வேதனையை மேலும் வலுப்படுத்துகிறார். கடவுளை தன்னைநோக்கி திரும்பி, அவர் மீது இரங்குமாறு கேட்கிறார். ஆண்டவரை திரும்பச் சொல்வது மனிதர்களை திரும்பச் சொல்வது போல இருக்கலாம். ஆனால் இங்கே ஆண்டவரை திரும்பச் சொல்வதன் வாயிலாக ஆசிரியர் ஆண்டவரின் கவனத்தை பெறவேண்டும் என்றே நினைக்கிறார். அதற்கான காரணத்தையும் முன்வைக்கிறார். அதாவது அவர் தனிமையாக இருப்பதாகவும், அவர் துணையற்று இருப்பதாகவும் சொல்கிறார் (כִּֽי־יָחִיד וְעָנִי אָנִי கி-யாஹித் வெ'ஆனி 'ஆனி).
வ.17: (צ, ץ, ட்சாதே- பதினெட்டாவது எழுத்து). தன்னுடைய வேதனைகள் பெருகிவிட்டதாகவும், தன்துயரங்களிலிருந்து தன்னை மீட்டருளும் என்றும் இரஞ்சுகிறார். இந்த திருப்பாடல் ஒரு தனி மனிதனுடைய வரலாற்று அனுபவமாக இருப்பதற்கு பல வாய்ப்புக்கள் உள்ளது என்பதை இந்த வரி நிரூபிக்கிறது.
இந்த வரி எபிரேய விவிலியத்தில் வித்தியாசமாக உள்ளது. צָרוֹת לְבָבִי הִרְחִיבוּ ட்சாரோத்
லெவாவி ஹிர்ஹிவூ- என் இதயத்தின் துன்பங்கள் பெருக்கப்பட்டுள்ளன - பெருக்குகிறார்கள்.
குறிப்பு:
(எபிரேய வினைச் சொல்லின் அர்த்தத்தில் இந்த இறுதி சொல்லின் தன்மைக்கு பல விளக்ங்கள் கொடுக்கப்படுகின்றன. சிலர் இதனை ஹிபில் மூன்றாம் ஆள் வினைமுற்று என காண்கின்றனர். அப்படியாயின் இதன் அர்த்தமாக 'அவர்கள் என் இதயத்தின் வேதனையை பெருக்குகிறார்கள்' என்று வரும் - הִרְחִיבוּ ஹிர்ஹிவூ: இன்னும் சிலர் இந்த சொல்லை எபிரேய வினைச் சொல்லின்
இன்னொரு வகையான ஹிபில் வியங்கோள் சொல்லாக பார்க்கின்றனர், இப்படியாயின் இதன்
அர்த்தமாக 'என் இதயத்தின் வேதனைகளில், என் உறைவிடத்தை பெரிதாக்கும்' என்று வரும் - הַרְחֵיב ஹர்ஹெவ். எபிரேய விவிலியம் ஆரம்ப காலத்தில் மெய்யெழுத்துக்களை மட்டுமே கொண்டு பரம்பரையாக வாசிக்கப்பட்டன. பிற்காலத்தில் மசரோட்டியர் என்ற மொழிவல்லுனர்கள்தான் இந்த விவிலியத்திற்கு உயிர் எழுத்து அடையாளங்களை வழங்கினர். இதனால் எபிரேய விவிலியம் பல இடங்களில் பல வித்தியாசமான விளக்கங்களை கொடுப்பது போன்று தோன்றுகிறது).
מִמְּצֽוּקוֹתַי הוֹצִיאֵנִי׃ மிம்மேட்சுகோதாய் ஹோட்சி'எனி- என்னுடைய துன்பத்திலிருந்து என்னை எடுத்தருளும்.
வ.18: (ר ரெஷ்- இருபதாவது எழுத்து). பதினொன்பதாவது எழுத்தும் இங்கே விடப்பட்டிருக்கிறது.
இது காலப்போக்கில் தவறவிடப்பட்டதா என்று தெரியவில்லை. இந்த வரியும் ஒரு செபமாக அல்லது வேண்டுதல் வாக்கியமாகவே வருகிறது. ஆசிரியர் தன்னுடைய சிறுமையையும் (עָנִי 'அனி), தன்னுடைய துன்பங்களையும் (עָמַל 'ஆமல்) பார்க்கச் சொல்லிக் கேட்கிறார். அதேவேளை தன்னுடைய அனைத்து பாவங்களையும் மன்னிக்குமாறும் கேட்கிறார். இந்த இடத்திலும் ஆசிரியர் தன்னை பாவியென்று வெளிப்படையாகவே ஏற்றுக்கொள்கிறார்.
வ.19: மீண்டும் ஒருமுறை எபிரேய அரிச்சுவடியின் இருபதாவது எழுத்து ר ரெஷ்- பாவிக்கப்படுகிறது. இதற்கான காரணம் புரியவில்லை. தன்னுடைய எதிரிகள் பெருகிவிட்டார்கள் என ஆண்டவரிடம் முறையிடுகிறார் (אוֹיְבַי כִּי־רָבּוּ 'ஓயெவாய் கி-ராவூ). இந்த பாடலின் ஆசிரியர் யார் என்று தெரியாமையினால், இவர் எதிரிகள் யார் என்றும் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது. அவர்கள் கொடுமையோடு தனக்கு கொடுமை செய்கிறார்கள் என்கிறார்.
வ.20: (שׁ ஷின்- இருபத்திதோராவது எழுத்து). இந்த வரி இறுதியான மன்றாட்டாக இருக்கிறது. மூன்றுவிதமான மன்றாட்டுக்களை அவர் முன்வைக்கிறார்.
அ. என்னுயிரைக் காப்பாற்றும் - שָׁמְרָה נַפְשִׁי ஷாம்ராஹ் நப்ஷி
ஆ. என்னை விடுவித்தருளும் - הַצִּילֵנִי ஹட்சிலெனி
இ. என்னை வெட்கமுறவிடாதேயும் - אַל-אֵ֝בוֹשׁ 'அல்-'எவோஷ்
இதற்கு காரணமாக தான் ஆண்டவரிடம் அடைக்கலம் புகுந்துள்ளவன் என்பதைக் காட்டுகிறார்.
வ.21: (ת தௌ- இருபத்திரண்டாவது எழுத்து, இது இறுதியான எழுத்து). கடவுளுடைய விழுமியங்களை ஆசிரியர் நன்கு புரிந்துவைத்திருக்கிறார் எனலாம். தன்னுடைய பாதுகாப்பு அரணாக வாய்மையையும் (תֹּם தோம்), நேர்மையையும் (יָשַׁר யாஷர்) காட்டுகிறார். தான் கடவுளையே நம்பியிருப்பதாக இந்த வரியிலும் காட்டுகிறார். இந்த வரி ஆசிரியரின் ஆழமான ஆன்மீகத்தைக் காட்டுகிறது.
வ.22: (פ பே- பதினேழாவது எழுத்து). ஏன் பதினேழாவது எழுத்தோடு இந்த பாடல் முடிவடைகிறது என்று புரியவில்லை. அத்தோடு ஏற்கனவே பதினேழாவது எழுத்து பாவிக்கப்பட்டுவிட்டது, மேலும் சில எழுத்துக்கள் பாவிக்கப்படவும் இல்லை. இப்படியிருக்க ஏன் இரண்டாவது தடவையாக פ பே என்ற எழுத்து பாவிக்கப்படுகிறது என்ற கேள்வி எழும்புகிறது.
இவ்வளவு நேரமும் தனிமனித புலம்பல் போல பாட்டிசைத்தவர் இந்த இறுதியான வரியில் முழு இஸ்ராயேலரையும் எழுவாய்ப் பொருளாக எடுக்கிறார். இப்படி பாடல் முடிவது வழக்கமாக
இருந்தாலும், இங்கே இந்த வரி சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது. சில வேளைகளில் குழு புலம்பல் பாடல்கள் தனிமனித பாடல்களாகவும், தனிமனித புலம்பல்கள் குழுப்பாடல்களாக வருவதும் திருப்பாடல்களில் காணப்படுகின்றன. திருச்சபையின் செபங்கள் மற்றும் சடங்குகளிலும் இப்படி நடப்பதுண்டு. முழு இஸ்ராயேலையும் உள்வாங்கி அனைவருக்கும் கடவுளின் இரக்கமும் மன்னிப்பும் தேவை என்று சொல்லி, அவர்களை துன்பங்களிலிருந்து மீட்கச்சொல்லி பாடலை நிறைவு செய்கிறார் ஆசிரியர்.
1தெசலோனிக்கர் 3,12-4,2
12உங்கள் மீது நாங்கள் கொண்ட அன்பு வளர்ந்து பெருகுவதுபோல, நீங்கள் ஒருவர் ஒருவருக்காகவும் எல்லாருக்காகவும் கொண்டுள்ள அன்பையும் ஆண்டவர் வளர்த்துப் பெருகச் செய்வாராக! 13இவ்வாறு நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது, நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக!
4. கடவுளுக்கு உகந்த வாழ்க்கை
1சகோதர சகோதரிகளே! நீங்கள் கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழும் முறையை எங்களிடம் கற்றுக் கொண்டீர்கள்; அப்படியே வாழ்ந்தும் வருகிறீர்கள். இதில் இன்னும் முன்னேற வேண்டுமென ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் உங்களிடம் இறுதியாகக் கேட்டுக் கொள்கிறோம். 2ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை நீங்கள் அறிவீர்கள்.
தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம், எற்கனவே நற்செய்தியை அறிந்திருந்த புதுக்கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதியது என் அறிஞர் கருதுவர். பிரிவினைகளால் பெறிதும் பாதிக்கப்படாத இத்திருச்சபையில் ஆண்டவரின் ,ரண்டாம் வருகையைப்பற்றிய பல வாதங்களையும் பிரதி வாதங்களையும் கொண்டிருந்தது. அவர்களுக்கு உடலின் உயிர்பையும் மற்றும் எதிர்கால நிகழ்வுகளையும் பற்றிய சரியான அறிவை கொடுக்க விளைகின்றார் தூய பவுல். பவுலுடைய ஆரம்ப கால கடிதங்களில் ஒன்றான இக்கடிதத்தில் பவுலுடைய ஆரம்ப இறையியலின் வளர்ச்சியையும் காண முடியும்.
வ.12: பவுல் தன்னை ஓர் பணியாளர் குழுவோடு இனைத்து நாங்கள் என்கிறார். தெசலோனிக்கர் மேல் பணியாளர்களுக்கு இருந்த அன்பு வெளிச்சம் போட்டுக்காட்டப்படுகிறது அதாவது, தெசலோனிகக் திருச்சபை பல முக்கியமான பிரச்சனைகளை சந்திக்கவில்லை என்று சொல்லலாம். இதே அன்பு தங்களுக்கிடையிலும், அனைவருக்கிடையிலும் இருக்க வேண்டும் என பவுல் எடுத்துரைக்கின்றார்.
வ.13: இயேசு ஆண்டவரின் இரண்டாம் வருகை சிந்திக்கப்படுகிறது. இயேசு ஆண்டவரின் வருகையில் அவருடைய தூயோர்களும் அவரோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கை முதல் முதல் எழுத்துக்களில் வருகிறது. παρουσίᾳ τοῦ κυρίου ἡμῶν Ἰησοῦ μετὰ πάντων τῶν ἁγίων αὐτοῦ பரூசியா டூ கூரியூ ஹேமோன் ஈசூ மெடா பான்டோன் டோன் ஹிகியோன் அவ்டூ - ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வருகையில், அவருடைய புனிதர்கள் அனைவரோடும்.
இவர்கள் தந்தையாம் கடவுள்முன் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர்களின் உள்ளங்களை கடவுள் உறுதிப்படுத்தவேண்டும் எனவும் செபிக்கிறார்.
4.1: தெசலோனிக்கர் கடவுளுக்கு உகந்த வாழ்க்கையை தங்களிடம் கற்றுக்கொண்டதாகவும், அதனை வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் பாராட்டப்படுகிறார்கள். இருந்தாலும் இதில் இன்னும் முன்னேற இடமுண்டு என்பதை இயேசுவின் பெயரில் கட்டளை போல முன்வைக்கிறார்.
முன்னேற்றம் அனைவரினதும் வாழ்வில் நடைபெறவேண்டும் என்பதில், பவுலடிகளார் மிகவும் கவனமாக உள்ளார்.
வ.2: கட்டளைகள் ஆண்டவர் இயேசுவின் பெயரால் கொடுக்கப்படுகின்றன, அதனை இவர்கள் அறிந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள் என்பது இந்த வரியில் காட்டப்படுகிறது.
லூக்கா 21,25-28.34-36
மானிடமகன் வருகை
(மத் 24:29-31 மாற் 13:24-27)
25'மேலும் கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். 26உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும். 27அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதை அவர்கள் காண்பார்கள். 28இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.'
மானிடமகன் வரும் நாள்
34-35மேலும் இயேசு, 'உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும் அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும். 36ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்' என்றார்.
ஒவ்வொரு நற்செய்தியாளருக்கும் இயேசு ஆண்டவரின் இரண்டாம் வருகையைப்பற்றிய போதனையை கொடுக்க வேண்டிய தேவையிருந்தது. லூக்காவிற்கும் அது பொருந்தும். பல உருவக அணிகள் ஊடாக லூக்கா அச்செய்தியை கொடுக்க விளைகின்றார்.
வ.25: கதிரவன் நிலா விண்மீன் இவை வானகத்திற்கும் பூலோகத்திற்கும் இடையில் கடவுளால் நிறுவப்பட்ட சிறு சக்திகள் என் அக்கால மனிதர்கள் நம்பினர். எபிரேயர் இவற்றை கடவுளுடைய படைப்புக்களாகவே கருதிய அதேவேளை கிரேக்கரும் உரோமரும் இவற்றை சிறு கடவுள்களாகவும் கருதினர். ஆனால் உண்மைக் கடவுளுக்கு முன்னால் இவை அடையாளங்களே அத்தோடு இவற்றை அசைவிப்பவரும் கடவுளே என சொல்ல விளைகின்றார் லூக்கா. இந்த அடையாளங்கள் ஆண்டவருடைய நாளின், அல்லது மெசியாவினுடைய இரண்டாம் வருகையின் அடையாளம் என தனது வாசகர்கள் அறிந்திருந்ததால் அவற்றையே உருவகிக்கின்றார். (இங்கு பேசுகிறவர் இயேசு ஆண்டவரே என்பதும் காட்டப்படுகிறது). ἔσονται σημεῖα ἐν ἡλίῳ καὶ σελήνῃ καὶ ἄστροιςஇ எசொன்டாய் சேமெய்யா என் ஹேலியோ காய் செலேனே காய் அஸ்ட்ரொய்ஸ்- கதிரவனிலும், சந்திரனிலும், நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்.
கதிரனவன், சந்திரன், நட்சத்திரங்கள் பற்றிய உருவகங்கள் முதல் ஏற்பாட்டில் அதிகமான இடங்களில் காணக்கிடக்கின்றன (எசா 13,9-10: 24,18-20: எசாயா 34.4: எசே 32,7-8: யோவேல் 2,1.30-31: 3,15).
மண்ணுலகின் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழுக்கத்தால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள் என்பதும் இந்த வரியில் சொல்லப்படுகிறது. கடல் விவிலியத்தில் பலவாறு அறியப்படுகின்றது, கடலிலே கடவுள் தீய சக்திகளை அடக்கி வைத்துள்ளார் என்பதும் அக்கால மக்களின் நம்பிக்கையாக இருந்தது. ஆதியிலே கடவுளுடைய ஆவி கடலின் மேல் அசைந்தார் என கடவுளி;ன் அதிகாரத்தை தொடக்க நூல் காட்டும், இயேசுவின் கடல் மீதான நடப்பு, பன்றிகளை கடலுக்குள் அமிழ்தியதும் இதனையே குறி;க்கும். இங்கே கடலின் நடுக்கம் ஆண்டவரின் வரவை பயத்துடன் தீய சக்திகள் நோக்குவதை குறிக்கிறது. θαλάσσης καὶ σάλου தாலாஸ்சேஸ் காய் சாலூ- கடலும் அலையும்.
(அன்னை மரியாளை கடலின் இராக்கினியாக வைத்ததும், எங்களுக்கு தீமைகளில் அவரின் பரிந்துரையை ஞாபகப்படுத்துகிறது).
வ.26: இந்த நேரத்தில் உலகிற்கு என்ன நேருமே என்று எண்ணி மக்கள் அச்சத்தினால் மயக்கமுறுவார்களாம், ஏனெனில் வான்வெளிக் கோல்கள் அதிரும் எனச் சொல்லப்படுகிறது. ஏனெனில் வான்வெளிக் கோள்கள் அதிரும் என்பது அதற்கான காரணமாகக் காட்டப்படுகிறது.
இந்த விவரனங்களை அவதானித்தால் ஏதோ சுனாமி அல்லது நிலநடுக்கம் ஏற்பட்டால் வரும் விளைவுகளை விவரிப்பதைப் போல் உள்ளதை காணலாம். அக்கால மக்கள் இயற்கையின் சீற்றத்தை கண்டு மிகவும் பயந்திருப்பார்கள். இங்கே மக்களின் மயக்கம் பேசு பொருளாக உள்ளது. இன்று மயக்கத்திற்கு விஞ்ஞான விளக்கம் கிடைத்தாலும், இன்னமும் மயக்கம் ஒரு மயக்கமாகவே உள்ளது எனலாம். இங்கே வைத்தியர் லூக்கா குறிப்பிடுவது உடல் ரீதியான மயக்கம் என்பதைவிட விசுவாச மயக்கம் அல்;லது சோர்வு என்பதையே மேலாக குறிக்கிறது என எண்ணுகிறேன். ஆண்டவருடைய வருகை பிந்தியதால் பலர் விசுவாசத்தை கைவிட்டதனை ஒரு மயக்கமாக பார்கிறார் போல.
δυνάμεις τῶν οὐρανῶν துனாமெய்ஸ் டோன் ஊரானோன் - வானங்களின் வல்லமைகள்.
வ.27: இந்த வேளையில் மானிட மகன் மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மேகங்கள் மீது வருவதை அவர்கள் காண்பார்கள் என்கிறார் லூக்கா. அவர்கள் காண்பார்கள் என்பதன் மூலம், இனி கடவுளின் காட்சி அனைவருக்கும் தெளிவாகிறது என்பது புலப்படுகிறது.
மேகம் கடவுளுடைய வெளிப்பாட்டின் ஒரு முக்கியமான அடையாளம், பாலை வனத்தில் இதனூடகவே கடவுள் மக்கைளை வழிநடத்தினார், இதனூடகவே தன்னையும் சில வேளைகளில் வெளிப்படுத்தினார். அதே உருவகம் இங்கு இயேசு ஆண்டவரை உண்மைக் கடவுளாக காட்டுகின்றது.
வ.28: இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது. இந்த வரிகள் துன்புறுகிறவர்களுக்கு ஆறுதல் தருவது போலஉள்ளது. ஆரம்ப கால திருச்சபை குழுக்கள் அனைத்தும் ஏதோ ஒரு விதத்தில் துன்பத்தை சந்தித்தன. லூக்காவின் திருச்சபையும் இதற்கு விதிவிலக்காக இருந்திருக்க வாய்ப்பில்லை.
தலையை நிமிர்த்தி நிற்றல் என்பது (ἐπάρατε τὰς κεφαλὰς எபாராடெ டாஸ் கெபாலாஸ்- தலையை நிமிர்த்துங்கள்) ஒருவருடைய வீரத்தைக் குறிக்கும், அதாவது ஒருவர் தன்னுடைய நம்பிக்கைக்கு பிரமானிக்கமாக நிற்றலைக் குறிக்கும். இது இராணுவ வீரர்களின் வழக்கம். தங்கள் தலைவருக்கு தவிர மற்றவருக்கு இவர்கள் தலை வணங்கக மாட்டார்கள். அதனைப் போலவே கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கைக்கு மட்டுமே தலை வணங்கக் கேட்கப்படுகிறார்கள்.
வவ.34-36: திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள், விழிப்பாயிருந்து மன்றாடுங்கள், அந்த நாள் வந்தே தீரும் என்கிறார் லூக்கா. ஆண்டவருடைய வருகை நிச்சயம் ஆனால் அதன் கணக்கு யாருக்கும் தெரியாது எனவே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறார். யாரும் சந்தேகம் கொள்ள தேவையில்லை இவை நிச்சயாக நடைபெறும் என்பதன் வாழிலாக அக்காலத்திலிருந்த சில வேறு வகையான படிப்பினைகளை சாடுகின்றார் நற்செய்தியாளர்.
கிறிஸ்தவர்களுக்கு பல அறிவுறுத்தல்கள் கொடுக்கப்படுகின்றது:
அ) விழிப்பாக இருக்க வேண்டும், ஆ) செபிக்கவேண்டும் இ) நிகழப்போகின்றவற்றிலிருந்து தப்ப வல்லமை பெற வேண்டும்.
திருவருகைக் காலத்தை ஷபரூசியா| (παρουσία) அல்லது அந்த நாள்| (בַּיּ֣וֹם הַהוּא - பய்யோம் ஹஹு) என்று விவிலிய சிந்தனைகளுடன் பார்ப்பது எமது வழக்கம்.
ஷஅந்த நாள்| என்ற சிந்தனை இறைவனை ஒருவர் இறப்பிற்கு பிறகு தனிப்பட்ட முறையிலோ அல்லது இறந்த மக்கட் கூட்டம் இறைவனை கூட்டமாக சந்தித்தல் என்னும் விசுவாசத்திலிருந்து வளர்ந்தது. இறந்த ஆன்மாக்கள் ஆண்டவரை அடையும், அல்லது துன்பப்படும் நாட்டினை வேற்றினத்தாரிடமிருந்து இஸ்ராயேலின் ஆண்டவர் மீட்க வருவார், என்பதும் இன்றுவரை இஸ்ராயேல் நண்பர்களின் நம்பிக்கை. விசேட விதமாக இஸ்ராயேல் மக்கள் தங்கள் மனித தலைவர்கள், நாடு, எருசலேம் ஆலயம் போன்றவை வேற்று நாட்டவரால் இல்லாமல் ஆக்கப்பட்ட போது இந்த சிந்தனையை அதிகமாக நம்பினர்.
ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் இதே சிந்தனையை தம்முடையதாக கருதி நம்பினர், அவர் வருகையை அருகிலிருப்பதாகவும் எண்ணினர். இயேசுவுடைய போதனைகளும் இதே கண்ணோட்டத்திலே பார்க்ப்பட்டது.
ஆண்டவருடை வரலாற்று பிறப்பே அவருடைய வருகைதான், ஏனெனில் அவர் ஏறகனவே இருந்தார். அவருடை இரண்டாம் வருகை எப்போது என்று யாருக்கும் தெரியாது, ஆண்டவரும் அறிவிக்கவில்லை. ஆனால் நிச்சயமாக வரும் என்பது அவரின் நற்செய்தி.
குழந்தைகளில் சிரிப்பிலும்,
ஏழைகளின் முகத்திலும்,
நல்லவர்களின் மனங்களிலும்
ஒவ்வொரு நாளும் வரும் ஆண்டவர்
இயேசுவை தவறவிடாமல் இருப்போமாக!!
ஆண்டவரின் இரண்டாம் வருகைக்கும் ஆயத்தம் செய்வோம்.
என்னில் வரும் உம்மை அடையாளம் காண உதவும் ஆண்டவரே ஆமேன்.