வியாழன், 29 ஆகஸ்ட், 2019



ஆண்டின் பொதுக்காலம் இருபத்திரண்டாம் வாரம்
The Twenty Second Sunday in Ordinary Times


இறுமாப்புக்கொண்டோரின் நோய்க்கு மருந்து இல்லை; ஏனெனில் தீமை அவர்களுள் வேரூன்றி விட்டது
01,09,2019



 முதல் வாசகம், சீராக்: 3,19-21.30-31
திருப்பாடல், திருப்பாடல் 68
இரண்டாம் வாசகம், எபி 12,18-19.22-24
நற்செய்தி, லூக்கா: 14,1.7-14

kp.n[fd;FkhH mkjp>
tre;jk;> mkjpfs; Md;kPf ikak;>
Nfhg;gha; njw;F>
aho;g;ghzk;.
Thursday, August 29, 2019

சீராக்: 3,19-21.30-31
 17குழந்தாய், நீ செய்வது அனைத்தையும் பணிவோடு செய்; அவ்வாறாயின், கடவுளுக்கு உகந்தோர் உனக்கு அன்பு காட்டுவர். 18நீ பெரியவனாய் இருக்குமளவுக்குப் பணிந்து நட. அப்போது ஆண்டவர் முன்னிலையில் உனக்குப் பரிவு கிட்டும். 19உயர்ந்தோர், புகழ்பெற்றோர் பலர் உள்ளனர். ஆயினும் எளியோருக்குத்தான் ஆண்டவர் தம் மறைபொருளை வெளிப்படுத்துகிறார்.20ஆண்டவரின் ஆற்றல் பெரிது ஆயினும், தாழ்ந்தோரால் அவர் மாட்சி பெறுகின்றார். 21உனக்கு மிகவும் கடினமாக இருப்பவற்றைத் தேடாதே உன் ஆற்றலுக்கு மிஞ்சியதை ஆராயாதே. 22உனக்குக் கட்டளையிடப்பட்டவை பற்றி எண்ணிப்பார்; ஏனெனில் மறைந்துள்ளவைபற்றி நீ ஆராய வேண்டியதில்லை. 23உனக்கு அப்பாற்பட்ட செயல்களில் தலையிடாதே ஏனெனில் உனக்குக் காட்டப்பட்டவையே மனித அறிவுக்கு எட்டாதவை. 24மாந்தரின் இறுமாப்பு பலரை நெறிபிறழச் செய்திருக்கிறது தவறான கணிப்புகள் தீர்ப்புகளை ஊறுபடுத்தியுள்ளன. 25கண் இல்லையேல் பார்க்க முடியாது. அறிவு இல்லையேல் அது இருப்பதாகக் காட்டிக் கொள்ளாதே.
26பிடிவாதம் கொண்டோர் இறுதியில் தீமைக்கு உள்ளாவர்; கேட்டினை விரும்புவோர் அதனால் அழிவர். 27அடங்கா மனத்தோர் தொல்லைகளால் அழுத்தப்படுவர்; பாவிகள் பாவத்தைப் பெருக்குவர். 28இறுமாப்புக்கொண்டோரின் நோய்க்கு மருந்து இல்லை; ஏனெனில் தீமை அவர்களுள் வேரூன்றி விட்டது. 29நுண்ணறிவாளர் உவமைகளைப் புரிந்துகொள்வர்; ஞானிகள் கேட்டறியும் ஆவல் மிக்கவர்கள்.

சீராக்கின் ஞானம் என்ற இந்த புத்தகம் எபிரேய மொழியில் கிடைக்காமையினால் இதனை யூதர்களும் மற்றும் அதிகமான கிறிஸ்தவ சபைகளும் தங்களுடைய விவிலியத்தில் ஏற்றுக்கொள்வதில்லை. கத்தோலிக்கருடையதும் கீழைத்தேயருடையதும் முதல் ஏற்பாடு, இணைத் திருமுறை நூல்களை உள்ளடக்கியிருப்பதனால் இந்த அழகான புத்தகம் நமக்கு கிடைத்திருக்கிறது. ஐம்பத்தொரு அதிகாரங்களை கொண்டுள்ள இந்த மெய்யறிவு நூல் வாழ்வின் ஒவ்வொரு அங்கங்களையும் ஆய்வு செய்து விளக்குகின்றது. இதனை பென்-சிரா என்று எபிரேயத்திலும் மற்றும் எக்கிலேசியாஸ்டிகுஸ் (Ecclesiasticus) என்று இலத்தினிலும் அழைப்பர். முதலில் இந்த நூல்  எபிரேயத்தில்  எழுதப்பட்டதாகவும் பின்னர் யோசுவா பென் சீராக்கினால் கிரேகத்திற்கு மொழி பெயர்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. அண்மைய கால, கும்ரான் மற்றும் மசாதா தொல்பொருளியல் கண்டுபிடிப்புக்களின் விவிலிய சுவடுகள் இந்த சீராக் நூலின் எபிரேய மூலத்தை ஏறக்குரைய 75 வீதம் மீட்டெடுத்திருக்கின்றன. மக்கபேயர்களுடைய புரட்சிக்கு முன்னர் பென் சிரா இறந்திருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர் ஆனாலும் கிரேக்க ஆதிக்கத்திற்கு எதிரான சிந்தனைகளும் எபிரேய தேசியவாதமும் நிறைவாகவே இந்நூலில் காணக்கிடக்கிறது. இந்த புத்தகம் மெய்யறிவு (ஞான நூல்) இலக்கிய வகையைச் சார்ந்ததுஇதன் மூன்றாம் அதிகாரத்தின் இன்றைய பகுதி பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வின் தேவைகளை விளக்குகின்றது. இந்த அதிகாரத்தின் முக்கிய கூறுகளாக

. வவ 1-16: பெற்றோர்பால் கடமை
. வவ 17-25: தாழ்ச்சி
. வவ 26-29: செருக்கு
. வவ 30-31: ஏழைகளுக்கு இரங்கல்

. 17: தாழ்ச்சி (πραύτης பிரவ்டேஸ்) கண்ணியம் என்று கிரேக்க மொழியில் பதியப்பட்டுள்ளது. இந்த வரி 'ஆல்' வகை இலக்கிய அமைப்பில் அமைந்துள்ளது. இவ்வாறு முதலாம் பிரிவில் சொல்லபட்டுள்ள விழுமியம் இரண்டாவது பகுதியிலுள்ள செயற்பாட்டை எதிர்பார்கிறது. தாழ்ச்சி அல்லது கண்ணியம் என்கின்ற பண்பு எபிரேய சிந்தனையில் முக்கியம் பெற்றுள்ளது என்பதை இந்த வரியின் மூலம் ஊகிக்க முடியும்

. 18: பெரியவனாக இருக்குமளவிற்கு பணிந்து நட என்பது புதிய ஏற்பாட்டில் தாழ்மையின் முக்கியத்துவத்தைப் பற்றிய இயேசுவின் சிந்தனையை நினைவூட்டுகிறது (காண்க மத் 23,12). இந்த வரியில் பரிவு என்று மொழிபெயர்கப்பட்டுள்ளது, கிரேக்க மூலத்தில் அருள் என்றுள்ளது (χάρις காரிஸ்- அருள்). 

. 19: எளியோர்கள் என்பவர்கள் இங்கே உருவகமாக பயன்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் சிறியவர்கள் என்பதைவிட வலுக்குறைந்தவர்கள் என்ற அர்த்தத்திலே பார்க்கப்பட்டுள்ளனர். புகழ்பெற்றோர் என்று சீராக் கூறுவது யாரை என்பது இங்கே தெளிவாக இல்லை, ஒருவேளை இவர்கள் கிரேக்க மயமாக்கலை ஆதரித்த யூத அறிவாளிகளாக இருக்கலாம். புதிய ஏற்பாட்டிலும் இயேசு, கடவுள் மறைபொருளை சிறுவர்களுக்கு வெளிப்படுத்தியதாக அடிக்கடி கூறுவார் (காண்க மத்தேயு 11,25✺✺).
(தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.)
(✺✺'தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.)

. 20: இந்த வரிகளில் மீண்டும் மீண்டும் வருகின்ற 'தாழ்ந்தோர்' என்பவர்கள், உண்மையான யூத மறையை பின்பற்றியவர்கள் என வாதிடலாம். கடவுள் பெரியவர், அவர் இவர்களால் மாட்சியடைய தேவையில்லை, இருப்பினும் அவர் இவர்களையே தெரிவு செய்கிறார் என்று விளக்கி தன்னுடைய ஆழமான இறையியலை முன்வைக்கிறார் ஆசிரியர்

. 21: திருப்பிக்கூறும் எபிரேய இலக்கிய அமைப்பில் இந்த வரிகள் எழுதப்பட்டுள்ளன
இந்த இலக்கிய வகையிலிருந்து சீராக் புத்தகத்தின் மூலம் எபிரேய மொழிதான் என வாதாடலாம்

. கடினமானதுஆற்றலுக்கு மிஞ்சியது
. தேடாதே - ஆராயாதே.
 இங்கே கடினமானது மற்றும் ஆற்றலுக்கு மிஞ்சியது என்பது ஒருவேளை இஸ்ராயேல் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட வேற்று நம்பிக்கைகள் எனலாம்.

வவ. 22-24: இந்த வரிகள் தாழ்ச்சியைப் பற்றி போதிக்கின்றன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஆற்றல் கொடுக்கப்பட்டுள்ளது அவை மனிதனை சமூகப்பிராணியாக்கிறது என்பது இஸ்ராயேலரின் நம்பிக்கை. மறைவாய் இருப்பதை விளக்கவேண்டியது கடவுளின் வெளிப்படுத்தல். அவரின் உதவியின்றி வெளிப்படுத்தலை விஞ்ஞான முறையில் அக்கால கிரேக்கர்கள் செய்ய முயன்றனர், இதற்கு எதிராக ஆசிரியர் மறைமுகமாக வாதிடுவதை இங்கே காணலாம். அறிவு என்பது தெய்வீகத்துடன் சம்மந்தப்பட்டது. இறையற்றமே அறிவின் தொடக்கம் என விவிலியம் வாதிடுகிறது. தெய்வீக பயமற்ற அறிவு உண்மையான அறிவல்ல என்கிறார் சிராக் ஆசிரியர்

வவ. 26-28: பிடிவாதம், அடக்கா மனம், மற்றும் இறுமாப்பு போன்றவை அழிவின் குணங்களாக விவிலியத்தால் சித்தரிக்கப்படுகிறது. இவைதான் மனிதனை அழிக்கின்றன அத்தோடு இவைதான் மூடர்களை தாங்கள் அறிவாளிகள் என காட்ட வைக்கிறது என்கிறார் இந்த ஞானி. 'உன்னை அறி' என்ற சோக்கரடீஸின் வாதத்தை இங்கே காணலாம்

. 29: கேட்டறிதல் அல்லது படித்தல் என்பது முக்கியமான விவிலிய விழுமியம். இதனாலேயே ஒருவர் நுன்னறிவாளராகிறார் அல்லது தன் நுன்னறிவை வளர்க்கிறார் என்பதில் ஆழமாக இருக்கிறார் சீரா.  


திருப்பாடல் 68
3நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்; கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்; மகிழ்ந்து கொண்டாடுவர்
4கடவுளைப் புகழ்ந்து பாடி அவரது பெயரை போற்றுங்கள்; மேகங்கள்மீது வருகிறவரை வாழ்த்திப் பாடுங்கள்; 'ஆண்டவர்' என்பது அவர்தம் பெயராம்; அவர்முன் களிகூருங்கள்.

6தனித்திருப்போர்க்குக் கடவுள் உறைவிடம் அமைத்துத் தருகின்றார்; சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு அழைத்துச் செல்கின்றார்; ஆனால், அவருக்கு எதிராகக் கிளம்புவோர் வறண்ட நிலத்தில் வாழ்வர்

9கடவுளே! உம் உரிமையான நாட்டின்மீது மிகுதியாக மழைபொழியச் செய்தீர்; வறண்டுபோன நிலத்தை மீண்டும் வளமாக்கினீர்
10உமக்குரிய உயிர்கள் அதில் தங்கியிருந்தன கடவுளே! நீர் நல்லவர்; எனவே ஒடுக்கப்பட்டோர்க்கு மறுவாழ்வு அளித்தீர்.

  திருப்பாடல் 68 ஒரு செபம்போல அறியப்படுகிறது. இந்த திருப்பாடலின் சாரம்சமாக மக்களுக்கு கடவுள் செய்த வியத்தகு செயல்கள், மக்களின் வாழ்கையில் கடவுளின் பிரசன்னம், கடவுளின் வெற்றி, அவர் ஆட்சியின் விரிவு, அத்தோடு அவர் மாட்சி போன்றவை பாடப்பட்டுள்ளது. கடவுளை வெறுத்து யாரும் வரலாற்றில் வெற்றியடைந்ததோ அல்லது நிலைபெற்றதோ இல்லை என்பதை இப்பாடல் காட்டுகிறது. கடவுள்தான் மக்களின் மகிழ்ச்சி, இதனால் அவர்கள் கடவுளின் முன்னிலையில் வரும்போது அவர்கள் சந்தோசப்படவேண்டும்

வவ. 3-4: நேர்மையாளர் யார் என்ற கேள்விக்கு இன்னொரு வரைவிலக்கனம் கொடுக்கப்படுகிறது. மகிழ்சியடைதலும், ஆர்பரித்து கொண்டாடுதலும் நேர்மையாளருக்கான வேறு அடையாளங்கள்'மேகங்கள் மீது வருபவர்' לָרֹכֵב בּעֲרָבוֹת என்பது 'அவர் பாலைநிலத்தில் சவாரி செய்கிறவர்' என்ற அர்த்தத்தையும் கொடுக்கிறது. இது இங்கே வானங்களின் மீது பயணம் செய்தல் என்ற இணை. சட் 33,26 வாசகத்தை நினைவூட்டுகிறது. இஸ்ராயேலின் கடவுள்தான் மழை வீழ்ச்சியின் காரணம் என்ற நம்பிக்கையையும் இது பிரதி பலிக்கின்றது. இந்த அரபோத் (பாலைநிலம்-மேகம்) என்ற சொல் அககாடியன் 'பால்' என்ற புயல் கடவுளையும் நினைவூட்டுகிறது
  இந்த பின்புலத்திலிருந்து, எவ்வளவு இஸ்ராயேலரின் நம்பிக்கையில் கானானிய-மொசேப்தேமிய கதைகளும் மற்றும் புராணங்களும் ஆதிக்கம் செலுத்தின என்பதைக் காணலாம்இங்கே நோக்கப்பட வேண்டியது, 'ஆண்டவர்' என்ற பெயரே. இந்த மேகங்களில் வருபவரை இஸ்ராயேலரின் இறைவன் என்று நினைவூட்டுகிறார் ஆசிரியர்

(எசுரூபின் இறைவன்போல் எவருமில்லை; அவர் உனக்கு உதவிட வானங்களின் வழியாக தமது மாட்சியுடன் மேகங்கள்மீது ஏறிவருவார்.)

. 6: தனித்திருத்தல் என்பது இஸ்ராயேலின் சமூக உறவிற்கு எதிரான முக்கியமான பிரச்சினை. தனிமையில் இருந்து ஒருவரை மீட்பது கடவுளின் ஆசீர்வாதமாகக் கருதப்பட்டது. சிறைவாழ்வும் அக்கால மக்களின் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக கருதப்பட்டது. கடவுளுக்கு எதிராக கிளம்புவோர் வரண்ட நிலத்திற்கு செல்லுவர் என்பது நோக்கப்படவேண்டிய முக்கியமான அடையாளம். கானான் நாடு வளமான தேசமாக கடவுளால் வாக்களிக்கப்பட்டது. வரண்ட நிலம் என்பது இவர்களை விடுதலை பயண அனுபவத்திற்கு எடுத்துச்செல்கிறது. இப்படியாக கடவுள் தரும் வளமான வாழ்வும், தண்டனையும் எப்படி மனிதரின் நம்பிக்கைக்கேற்ப மாறுபடுகிறது என்பதைக் காட்டுகிறது

வவ. 9-10: இந்த வரிகள் இஸ்ராயேலின் பௌதீக அமைப்பைக் காட்டுகிறது. இஸ்ராயேல் தேசத்தில் மழைப்பொழிவு நிச்சயமாக கடவுளின் ஆசீர்வாதமாகப் பார்க்கப்படும். பத்தாவது வசனத்தில் உள்ள 'உயிர்கள்' என்பது இஸ்ராயேல் மக்களைத்தான் குறிக்கிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.  



எபி 12,18-19.22-24
18நீங்கள் வந்து சேர்ந்திருப்பது தொட்டுணரக்கூடிய, தீப்பற்றியெரிகின்ற, இருள்சூழ்ந்த, மந்தாரமான, சுழல்காற்று வீசுகின்ற சீனாய் மலை அல்ல. 19அங்கு எக்காளம் முழங்கிற்று பேசும் குரலொன்று கேட்டது. அக்குரலைக் கேட்டவர்கள் அதற்குமேல் தங்களோடு அது ஒரு வார்த்தைகூடப் பேசவேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள்.

22ஆனால் நீங்கள் வந்து சேர்ந்திருக்கும் சீயோன் மலை வாழும் கடவுளின் நகர்; விண்ணக எருசலேம். அதனைப் பல்லாயிரக் கணக்கான வானதூதர் சூழ்ந்துள்ளனர். 23விண்ணகத்தில் பெயர் எழுதப்பட்டுள்ள தலைப்பேறானவர்களின் திருச்சபை விழாக் கூட்டமென அங்கே கூடியுள்ளது. நிறைவுபெற்ற நேர்மையாளர்களோடு சேர்ந்து, அனைவருக்கும் நடுவரான கடவுள் முன்னிலையிலும், 24புதியதோர் உடன்படிக்கையின் இணைப்பாளராகிய இயேசுவின் முன்னிலையிலும் நிற்கிறீர்கள். ஆபேலின் இரத்தத்தைப் போலன்றிச் சிறந்த முறையில் குரலெழுப்பும் இயேசுவின் இரத்தத்தினால் தெளிக்கப்பட்டிருக்கிறீர்கள்.

 எபிரேயர் திருமுகத்தின் இந்த அதிகாரங்கள் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை முறைக்கான அழைப்பு என்ற தலைப்பில் அமைந்துள்ளது. இதற்கு முன்னுள்ள பகுதி (வவ 14-17), இறுதி எச்சரிக்கை என்ற பகுதியாகவும், இந்த பகுதி அதற்கான பதிலாகவும் அமைந்துள்ளது. எச்சரிக்கையிலிருந்து உற்சாகப்படுத்தல் என்ற தலைப்பிற்கு திரும்பும் ஆசிரியர், கடவுளின் அருளினால் நம்பிக்கை கொள்பவருக்கு கிடைக்கும் அனுகூலங்களை விளக்குகிறார். ஆனால் இந்த அனுகூலங்கள் நம்பிக்கையினாலும் கீழ்படிவினாலுமே கிடைக்கும் என்று செக் (பொறி) வைக்கிறார். சீனாய் மலையில் கடவுளைக் காண இஸ்ராயேலர் ஒன்று கூடியது ஒரு பயங்கரமான அனுபவம் (ஒப்பிடுக வி. 19). இந்த நிகழ்விலே இஸ்ராயேலருக்கு மேலதிகமாக எந்த விளக்கமும் கொடுக்கப்படவில்லை. இந்த நிகழ்வோடு கிறிஸ்தவர்களின் இன்னொருவிதமான சீனாய் அனுபவத்தை ஒப்பிடுகிறார். இங்கே பயங்கரத்திலல்ல மாறாக மகிழ்ச்சியில் கடவுள் மக்களை சந்திக்கிறார். மோசேயைப் போலல்லாது இங்கே இணைப்பாளராக இருப்பர் இயேசு, ஆக கடவுளே இங்கு இணைப்பாளராக இருக்கிறார். இதனால் இவரை வெறுக்கவே அல்லது புறந்தள்ளவோ மக்களுக்கு எந்த தேவையும் கிடையாது. முதல் ஏற்பாட்டு மிருக பலிகளைப் போல் அல்லாது இங்கே பலி ஒப்புக் கொடுப்பதும், பலியும் கிறிஸ்துவாகவே இருக்கின்றார். கிறிஸ்துவினுடைய இந்த பலியின் தன்மை கடவுளின் வல்லமையைக் காட்டுகிறது

வவ. 18-19: இந்த வரி வி. 36ம் அதிகார நிகழ்வுகளை நினைவூட்டுகிறது. இந்த நிகழ்வில் காணப்பட்ட பௌதீக தன்மை, இருள், மந்தாரம் சுழல்காற்று போன்றவற்றை இரண்டாம் தர அடையாளங்களாக காண்கிறார் ஆசிரியர். எகிப்திய சீனாய் மலையை இப்போது இயேசுவின் உறவால் ஏற்படுகின்ற இன்னொரு ஆன்மீக சினாய் மலையுடன் ஒப்பிடுகிறார். இந்த வரிகளில் முக்கியமான நிகழ்வாக குரல்களில் ஒலிகள் காணப்படுகின்றன. எக்காளங்கள் மற்றும் அசிரிரிகள் போன்றவை முதல் ஏற்பாட்டில் இறை வெளிப்பாட்டைக் காட்டின. இந்த அடையாளங்கள் 
யூதர்களுக்கு மிகவும் பரீட்சயமான அடையாளங்கள் அப்படியான அடையாளங்களையே இரண்டாம் தரமாக்குவதன் மூலம், எபிரேய ஆசிரியர் புதிய சீனாய் மலையின் அடையாளங்களின் மகிமையை உயர்த்த முயல்கிறார்

. 22: இந்த வரியில் ஆசிரியர் விண்ணக எருசலேமின் அடையாளங்களை ஒப்பிடுகிறார். விண்ணக சீயோன் என்பது வாழும் கடவுளின் மலை என்கிறார். சீயோன் என்பது தாவீதின் நகர் என அறியப்பட்ட பழைய எருசலேம். இது இஸ்ராயேலருக்கு மிகவும் முக்கியமானது. இதுதான் மலைகளுக்கெல்லாம் மலை, இங்கேதான் கடவுளின் மாறாத இருப்பு இருந்ததாக அவர்கள் கருதினார்கள். இந்த சீயோன் என்னும் பெயர் யூதர்களின் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான பெயர். இந்தச் சொல் 199 தடவைகளுக்கு மேலாக விவிலியத்தில் பாவிக்கப்பட்டுள்ளது அதில் அதிகமான இடங்களில் இது பழைய எருசலேமை அதாவது தாவீதின் நகரை குறிக்கிறது 
( צִיּוֹן ட்சியோன்: Σιών ட்சிஓன்). ஈழத்தமிழருக்கு மடுவும், நல்லூரும் எப்படியிருக்குமோ அப்படித்தான் சீயோன் இருந்தது. இதனைத்தான் இரண்டாம் தர கடவுளின் நகராக காட்ட முயலுகிறார் ஆசிரியர்மண்ணக சீயோனில் கடவுள் இருக்கிறாரோ இல்லையோ, இந்த விண்ணக சீயோனில் கடவுள் வாழுகின்ற கடவுளாக  என்றும் இருக்கிறார் என்பதுதான் அவர் வாதம். 'வாழுகின்ற கடவுள்' என்பதும் முதல் ஏற்பாடு கடவுளுக்கு கொடுக்கும் இன்னொரு விவரணம், இதனையே எபிரேயர் நூல் ஆசிரியர் நன்கு கண்டு பாவிக்கிறார். மண்ணக சீயோனில் சாதாரண மக்கள்தான் சூழ்ந்து இருப்பார்கள் ஆனால் விண்ணக சீயோனில் வானதூதர்கள் சூழ்ந்து இருப்பார்கள்

வவ. 23-24: இந்த வரிகளில் சில முக்கியமான இறையியல் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன

. விண்ணகத்தில் பெயர் எழுதப்பட்ட தலைப்பேறானவர்கள்ἐκκλησίᾳ πρωτοτόκων (ekklēsia prōtokōn) வாழ்வென்னும் புத்தகம் ஒன்று இருந்ததாகவும் அதிலே நீதிமான்களுடைய பெயர்கள் எழுதப்பட்டதாகவும் இஸ்ராயேலரின் ஒரு நம்பிக்கை இருந்தது. இங்கே அந்த புத்தகத்தில் இடம் பெற்றிருந்த மக்கள் கூட்டம் திருச்சபையின் கிறிஸ்தவர்கள் என்கிறார் ஆசிரியர்

. நிறைவுபெற்ற நேர்மையாளர்கள்δικαίων τετελειωμένων dikaiōn teteiōmenōn
  இது விண்ணக திருச்சபை அல்லது துயவர்களின் திருச்சபை (புனிதர்கள்) என்ற சிந்தனையின் ஆரம்பம் எனச்சொல்லலாம். நீதிமான்கள் எனப்படுவோர் இனி உன்னதமான கிறிஸ்தவர்கள் என்ற வாதத்தை முன்வைக்கிறார் ஆசிரியர்

. அனைவருக்கும் நடுவரான கடவுள்: κριτῇ θεῷ πάντων kritē theō pantōn
  சாதரணமாக புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் இயேசுவைத்தான் நடுவராக இறையியல்படுத்துவர். இங்கே, இயேசுவை இணைப்பாளராக காட்ட வேண்டிய தேவையிருப்பதாலும், அத்தோடு இந்த நடுவர் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பொதுவானவர் என்று காட்ட வேண்டிய தேவையிருப்பதாலும் இப்படியான சிந்தனையை ஆசிரியர் மையப்படுத்துகிறார் எனலாம்

. புதிய இணைப்பாளர் இயேசுνέας μεσίτῃ Ἰησοῦ neas mesitē Iēsou 
 முதல் ஏற்பாட்டின் மறக்க முடியாத இணைப்பாளர் மோசே அவர் இஸ்ராயேல் மக்களால் சமரசம் செய்யப்பட முடியாதவர். ஆனால் இயேசு மற்றும் அவர் தரும் உடன்படிக்கை வாழ்வின் முன்னால் அவர் இரண்டாம் தரமானவரே என்ற சிந்தனையை எபிரேயர் திருமுகம் முன்வைக்கும்.

. இயேசு-ஆபேலின் இரத்தம்Ἅβελ. Abel
  ஆபேலின் இரத்தம் காயினின் அநீதிக்கு எதிராக ஆண்டவரை நோக்கி குரலெழுப்பியது. (ஒப்பிடுக தொ. நூல் 4,10), ஆனால் அதனைவிட உன்னதமான இயேசுவின் இரத்தம் சிறந்த முறையில் குரலெழுப்புவதாக ஆசிரியர் வாதாடுகிறார். இரத்தத்தால் தெளிக்கப்படுதலும் உடன்படிக்கையை நினைவூட்டுகிறது. மோசே இவ்வாறு இரத்தத்தை மக்கள்மீது தெளித்துத்தான் உடன்படிக்கை செய்தார் (வி. 29,21✺✺)ஆனால் அவை உடைக்கப்பட்டன, இவ்வாறில்லாமல் 
இயேசுவின் உடன்படிக்கை உடைக்கப்படாது என்கிறார் ஆசிரியர்

(அதற்கு ஆண்டவர், 'நீ என்ன செய்துவிட்டாய்! உன் சகோதரனின் இரத்தத்தின் குரல் மண்ணிலிருந்து என்னை நோக்கிக் கதறிக் கொண்டிருக்கிறது.)
(✺✺பலிபீடத்தின் மீதுள்ள இரத்தத்திலும் திருப்பொழிவு எண்ணெயிலும் சிறிது எடுத்து, அவற்றை ஆரோன், அவன் உடைகள், அவன் புதல்வர்கள், அவர்களின் உடைகள் மீது தெளிப்பாய். இதனால் அவன் அவனுடைய உடைகளோடும், அவன் புதல்வர்கள் அவர்களுடைய உடைகளோடும் புனிதம் பெறுவர்.)



லூக்கா: 14,1.7-14
1ஓய்வுநாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றிருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர்.

7விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை 8'ஒருவர் உங்களைத் திருமண விருந்துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத்தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களைவிட மதிப்பிற்குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். 9உங்களையும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், 'இவருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்' என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். 10நீங்கள் அழைக்கப்பட்டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், 'நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்' எனச் சொல்லும்பொழுது உங்களுடன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். 11தம்மைத்தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்.'
12பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, 'நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும் போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். 13மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். 14அப்போது நீர் பேறு பெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்' என்று கூறினார்.

  லூக்கா இந்த நிகழ்வு ஓய்வு நாளில் நடைபெற்றது என்று விவரிக்கும் போதே வாசகர்களின் அவதானிப்பை பெறுகிறார். இந்த பகுதியும் எருசலேமை நோக்கிய நீண்ட பகுதியின் ஒரு அங்கமாகவே அமைந்துள்ளது. மேசையில் இயேசு என்னும் பகுதி பல அடையாளங்கள் கலந்த பேதனையை முன்வைக்கிறது

. 1: ஒய்வு நாளில் இயேசு தன்னை பல செயற்பாடுகளில் ஈடுபடுத்திக்கொண்டார் என்று இவ்வாறு காணலாம். அதேவேளை பல கண்கள் எப்போதுமே அவரை பார்த்துக்கொண்டிருந்ததையும் லூக்கா அழகாக சித்தரிக்கின்றார். கூர்ந்து கவனித்தல் என்பதற்கு உன்னிப்பாக அவதானித்தனர் என்ற கிரேக்கச் சொல் பாவிக்கப்பட்டுள்ளது (παρατηρέω பராடேரெஓ). இங்கே இந்த அவதானிப்பு இயேசுவிடம் பிழை கண்டுபிடிப்பதற்காக நடாத்தப்படுகிறது

. 7: இந்த விருந்து இறையரசின் விருந்தை பிரதிநிதிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வழமையாக விருந்தில் முதன்மையான இடம் தரப்பட வேண்டும், அவை தெரிந்தெடுக்கப்படும் இடம் அல்ல

. 8: அக்கால வழக்கத்தில் இக்காலத்ததைப்போலவே முக்கியமான விருந்தினர்கள் காலதாமதமாகவே விருந்திற்கு வந்தனர். அவர்கள் எப்போது வந்தாலும் அவர்களுக்குரிய இடம் அவர்களுக்கு கொடுக்கப்படவேண்டும் என்பது உரோமைய கிரேக்க நாகரீகமாக இருந்தது.
இதனைத்தான் இயேசு நினைவூட்டுகிறார்

. 9: வெட்கத்தோடு கடைசி இடத்திற்கு போதல் இங்கே வெளிவேடத்தனத்தை குறிக்கின்றது. கடைசி இடத்திற்கு போதல்லல்ல ஆனால் தவறான முறையில் முதல் இடத்தை பிடிக்க முயல்வதே இங்கு கேள்வியாக இருக்கிறது. 'இடத்தை விட்டுக்கொடுத்தல்' என்பது இங்கே உரிமையை விட்டுக்கொடுத்தலுக்கு சமனாகும். இதனைத்தான் எசா யாக்கோபுவிற்கு விட்டுக்கொடுத்தார், இதனால் தன் தலைச்சான் உரிமையை இழந்தார்.

. 10: இங்கே கடைசி இடத்தில் இருப்பதனால் விருந்தாளியாக வந்தவர் நண்பராகிறார். அத்தோடு அவர் அனைவர் முன்னிலையிலும் பெருமையும் அடைகிறார். முதல் இடத்திற்கு வருதல் அவரின் ஆசீர் நிலையைக் குறிக்கிறதுcaHj;Jjy; kw;Wk; jho;j;Jjy; tptpypa Md;kPfj;jpNy ghHf;fg;gLfpwJ. இங்கே உயர்த்தல் கடவுளுக்கு நிகராக வரும் கர்வத்தையும், தாழ்த்துதல் நம்பிக்கையாளருக்குரிய இடத்திற்கு வருதலையும் குறிக்கிறது.

. 11: இதுதான் இந்த நற்செய்தியின் மையப்பகுதி அத்தோடு மற்றைய மூன்று வாசகங்களும் 
இந்த விழுமியத்தையே மையப்படுத்தியுள்ளன. இந்தச் செய்தி ஆரம்ப காலத்தில் ஒரு குறிப்பிட்ட குழுவினர்க்கு விசேடமாய் சொல்லப்பட்டதாகக்கூட இருக்கலாம்ὁ ὑψῶν ἑαυτὸν ταπεινωθήσεται, ho upsōn heauton tapeinōthēsetai - தம்மைத்தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்படுவார். ὁ ταπεινῶν ἑαυτὸν ὑψωθήσεται. ho tapeinōn heauton hupsōthēsetai - jk;ikj;jhNk jho;j;JNthH caHj;jg;gLthH. 


. 12-14: சகோதரத்துவம் யூதர்கள் மத்தியிலிருந்த முக்கியமான உறவு. ஆனால் இந்த சகோதரத்துவத்திற்குள் யூதர்கள் தங்கள் சக யூதர்கனை மட்டுமே உள்வாங்கினர் எனலாம். ஆனால் இயேசு இந்த வரையறையை விசாலமாக்குகிறார். அத்தோடு அவர் நோயாளிகளையும் 
இணைக்கிறபோது, நோயாளிகள் பாவிகள் என்ற சிந்தனையை உடைக்கிறார். அதேவேளை அவர்களை நேர்மையாளராக்கி அவர்கள் நிச்சயமாக உயிர்ப்பார்கள் அதோடு அவர்கள் மற்றவர்களுக்காக பரிந்து பேசுவார்கள் என்கிறார்
கைமாறு எதிர்பார்த்து விருந்து வைத்தல் உண்மையான விருந்து அல்ல சிந்தனையை ஆண்டவர் முன்வைக்கிறார். நம்முடைய கலாச்சாரத்தில், மொய் வைத்தல், மடுச்சீலை வைத்தல், மற்றும் அனைத்து விருந்துகளிலும் விருந்தினர்களை அழைத்தல் என்பது, இந்த சிந்தனையை உள்நிறுத்த வேண்டும் என நினைக்கிறேன். ஏழைகள் (πτωχός ptōchos), உடல் ஊனமுற்றோர் (ἀνάπειρος; anapeiros), பார்வையற்றோர் (τυφλός tuphlos), போன்றவர்களை அழைக்க ஆண்டவர் கட்டளை கொடுக்கிறார். நம்முடைய கலாச்சாரத்தில் பிள்ளைகள் அற்றோருக்கே பல சாபங்கள் வரும் வேளை, இந்த நோயர்களுக்கு இடம் கிடைக்குமா என்பது தெரியவில்லை
உம்மையாக விருந்தொன்று செய்கிறவர், ஆசீர்வாதத்தைதான் எதிர்நோக்க வேண்டும். உண்மையான கைமாறு, உயிhப்பின் பின்னர் கிடைக்கும் என்கிறார் இயேசு. இந்த கடைசி நான்கு வரிகள், அக்கால திருச்சபையில் காணப்பட்ட பல சிக்கல்களை படம்காட்டுகிறது என்பது போல உள்ளன.

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும் (குறள் 121)

அன்பு ஆண்டவரே, இந்த உலகம் பெரியது
இவ்வுலகில் இருப்பவை அனைத்தும் பெரியவை, ஆச்சரியமானவை,
என்ற பணிவையும் தாழ்ச்சியையும் தாரும். ஆமென்


ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...