ஆண்டின் பொதுக்காலம் மூன்றாம் வாரம் (இ)
27,01,2019
மி. ஜெகன்குமார் அமதி,
'சங்கமம்,'
கோப்பாய் தெற்கு,
யாழ்ப்பாணம்.
முதல் வாசகம்: நெகேமியா 8,2-10

பதிலுரைப் பாடல்: 19

இரண்டாம் வாசகம்: 1கொரிந்தியர் 12,12-30

நற்செய்தி: லூக்கா 1,1-4:4,14-21

நெகேமியா 8,2-10
2அவ்வாறே ஏழாம் மாதம் முதல்நாள் குரு எஸ்ரா ஆடவர், பெண்டிர், புரிந்துகொள்ளும் ஆற்றலுள்ள சிறுவர் அனைவரும் அடங்கிய சபை முன்னிலையில் திருநூலைக் கொண்டு வந்தார். 3தண்ணீர் வாயிலுக்குமுன் இருந்த வளாகத்தில் காலைமுதல் நண்பகல்வரை ஆடவரையும், பெண்டிரையும், புரிந்து கொள்ளும் ஆற்றலுள்ள சிறுவரையும் பார்த்து அதை உரக்க வாசித்தார். எல்லா மக்களும் திருநூலுக்குச் செவி கொடுத்தனர். 4திருநூல் வல்லுநரான எஸ்ராவோ இதற்காகச் செய்யப்பட்ட மர மேடையின்மேல் நின்றுகொண்டிருந்தார். 5எஸ்ரா மக்களை விட உயரமான இடத்தில் நின்றதால் அவர் திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் அதைப் பார்த்தார்கள்; திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் எழுந்து நின்றார்கள். 6அப்பொழுது எஸ்ரா மாபெரும் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்தினார். மக்கள் எல்லாரும் கைகளை உயர்த்தி 'ஆமென்! ஆமென்!' என்று பதிலுரைத்தார்கள்; பணிந்து, முகங்குப்புற விழுந்து ஆண்டவரைத் தொழுதார்கள். 8மக்களுக்குப் புரியும்படி தெளிவாகவும், பொருளோடும் கடவுளின் திருச்சட்டத்தை உரக்க வாசித்தார்கள். ஆதலால் மக்களும் வாசிக்கப்பட்டதன் பொருளைப் புரிந்து கொண்டனர். 9ஆளுநர் நெகேமியாவும், குருவும் திருநூல் வல்லுநருமான எஸ்ராவும், விளக்கம் கூறிய லேவியர்களும் மக்கள் அனைவரையும் நோக்கி: 'இன்று கடவுளாகிய ஆண்டவரின் புனித நாள்; எனவே நீங்கள் அழுதுபுலம்ப வேண்டாம்' என்றனர். ஏனெனில் மக்கள் அனைவரும் திருச்சட்டத்தின் சொற்களைக்கேட்டதிலிருந்து அழுது கொண்டிருந்தார்கள். 10அவர் அவர்களைப் பார்த்து, 'நீங்கள் போய்க் கொழுத்தவற்றை உண்டு, இனிய திராட்சை இரசத்தைக் குடியுங்கள்; எதுவும் தயார் செய்யாதவருக்குச் சிறிது அனுப்பிவையுங்கள். ஏனென்றால், நம் ஆண்டவரின் புனித நாள் இதுவே; எனவே வருந்த வேண்டாம்; ஏனெனில் ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை' என்று கூறினார்.
எஸ்ரா புத்தகத்தைப் போன்று, பபிலோனிய அடிமைத்தனத்தின் பின்னர் நாடு திரும்பிய இஸ்ராயேல் மக்கள் தங்களின் நாட்டைக் கட்டியெழுப்பியதையும், எருசலேமின் மதில்களை புதுப்பித்தலையும், ஆண்டவருடனான உடன்படிக்கையை புதுப்பித்தலையும் நெகேமியா புத்தகம் எடுத்துரைக்கின்றது. எஸ்ரா சமயத்தில் அக்கறைகாட்டினார் என்றால், நெகேமியா அரசியலில் அக்கறை காட்டுவார். நெகேமியா, இஸ்ராயேல் மக்கள் பாரசீக (மற்றும் கிரேக்க) கலாச்சாரத்தினால் ஆட்கொண்டிருந்தவேளை, இஸ்ராயேல் மக்களைத் தமது மூதாதையரின் பாரம்பரியத்துக்கு கொண்டுவந்த முக்கியமான சீர்திருத்தவாதி. எஸ்ராவை கடும் யூத அடிப்படைவாதி என்று இன்றைய திரனாய்வாளர்கள் கருதினாலும், அவர் அக்காலத்தில் யூத மக்களின் இன அடையாளத்தை காத்த முக்கிய தலைவர் என்றே கருதப்பட்டார்.

வ.1: தண்ணீர் வாயில் இஸ்ராயேல் நகரில் மக்கள் கூடும் வாயில்களில் ஒன்று (שַׁעַר־הַמָּ֑יִם ஷ'அர்-ஹம்மாயிம்). மோசேயின் திருநூல் என்று விவிலிய சட்ட புத்தகம் அடையாளப்படுத்தப்படுகிறது. סֵפֶר תּוֹרַת செபெர் தோராத்- தோறா புத்தகம். இது முதல் ஐந்து நூற்களின் பிரதியாக இருந்திருக்கலாம்.

வ.2: ஏழாம் மாதம் முதல்நாள் என்பது யூதர்களின் புத்தாண்டைக் குறிக்கலாம் (செப்டம்பர் அல்லது அக்டோபர் தொடக்கம்), இங்கே ஏழு, முழுமையையும் குறிக்கலாம். இந்த மக்களின் கூட்டத்தில் அனைவரும் இருப்பதைக்கொண்டு இறைவார்த்தை வாசிப்பின் முக்கியத்துவத்தை உணரலாம். ஆடவர் (אִישׁ 'இஷ்), பெண்டிர் (אִשָּׁה 'இஷ்ஷாஹ்), மற்றும் புரிந்து கொள்ளும் ஆற்றலுள்ள சிறுவர் (כֹל מֵבִין கோல் மெவின்) அனைவரும் உள்வாங்கப்படுகின்றனர். வுழமையாக சிறுவர்களும் பெண்டிரும் முக்கியத்துவம் கொடுப்படமாட்டார்கள். இங்கே அவர்களுக்குரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதற்கு எஸ்ராவை பாராட்ட வேண்டும்.

வவ.3-4: தண்ணீர் வளாகம் எனப்படுவது இங்கே கிஹோன் (שַׁעַר־הַמַּיִם தண்ணீர் வாயில்) ஊற்றை குறிக்கிறது. இதற்கருகிலேயே நெகேமியா மதில்களை புதுப்பித்தார். இங்கே வாசிப்பவர் எஸ்ரா, மரமேடையில் வாசிக்கிறார், காலை முதல் மாலைவரை என்பது முழு நாளையும் குறிக்கும். வாசிப்பவர் ஆயத்தத்தோடும், கேட்போர் அவதானத்தோடும், நேரம் பார்காது, தகுந்த இடத்தில் வாசிப்பதை அவதானிப்போம். இந்நிகழ்வு சாலமோனின் செபத்தை எமக்கு நினைவூட்டுகிறது. (காண். 2குறிப் 6,13).

வவ. 5-6: திருநூல் என்பது விவிலிய சுருளைக் குறிக்கும். எழுந்து நின்றல், மரியாதையையும் அவதானத்தையும் காட்டும் நிலை. ஆண்டவரை வாழ்த்துதல், இஸ்ராயேல் மக்கள் அடிக்கடி செய்யும் முக்கியமான செபம். (בָּרַךְ பராக் வாழ்த்து). இயேசுவும் இதை அடிக்கடி செய்ததை காணலாம். ஆமென் (אָמֵן֙ உறுதியாக நில், நம்பு, விசுவசி எனப்பொருள்படும்). இதனை
இங்கு இரண்டு தடவை சொல்கின்றனர். கைகளை உயர்த்துதல், பணிந்து முகம்பட விழுதல் ஆராதனையைக் குறிக்கும்.

வ.7: லேவியர்கள் சட்டத்தை மக்களுக்கு விளங்கப்படுத்துகிறார்கள். லேவியர்கள் குரு குலமாக
இருந்ததால், அவர்கள் சட்டத்தில் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். இந்த இடத்தில் 13 லேவியர்கள் காட்டப்படுகிறார்கள் (ஏசுவா, பானி, செரேபியா, யாமின், கூபு, சபத்தாய், ஓதியா, மாசேயா, கெலிற்றா, அசரியா, யோசபாத்து, அனான், பெலாயா).

வ. 8-10: தெளிவான வாசிப்பே பொருளைக் கொடுக்கும். வாசகப்பணி எவ்வளவு முக்கியமானது என்பதை இங்கு காணலாம். தெளிவற்ற வாசிப்பு ஆபத்தானதும், மரியாதைக் குறைவானதுமாகும்.
எஸ்ராவும் அவரோடு இருந்தவர்களும் இறைவார்த்தையை உரக்க வாசிக்க மக்கள் அதனை புரிந்து கொள்கின்றனர்.

அதிகமான வேளைகளில் சட்டங்கள் (தோரா) வாசிக்கப்பட்ட போது மக்கள் குற்ற உணர்வோடு அழுவது வழக்கம், யோசியா அரசரும் அவ்வாறே செய்தார் (காண் 2அர 22,11).
இங்கே எஸ்ராவும், லேவியர்களும் மக்களை மகிழச் சொல்கின்றனர். உண்மையாகவே மறுமலர்ச்சிக்காரர்கள். அத்தோடு உண்ணவும் குடிக்கவும் சொல்கிறார்கள், இது ஆண்டவருடைய சட்டங்கள் தண்டிக்கவல்ல மாறாக வாழ்வு கொடுக்கவே என்பதைக் குறிக்கின்றது. இதனையே ஆண்டவர் பின்னர் அழகாகச் சொல்வார். ஆண்டவரில் மகிழ்ச்சி, அது உங்கள் வல்லமை.
(כִּֽי־חֶדְוַת יְהוָה הִיא מָֽעֻזְּכֶם׃ நேரடி மொழிபெயர்பு).

நாடு இழந்து நம்பிக்கை இழந்து எதிர்காலம் இழந்து நிற்கும் ஈழத்தவர்க்கும் இது நம்பிக்கையின் வார்த்தைகள்.

திருப்பாடல் 19
படைப்பில் கடவுளின் மாட்சி

1வானங்கள் இறைவனின் மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன் வான்வெளி அவர்தம் கைகளின் வேலைப்பாட்டை விவரிக்கின்றது.

2ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது; ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது.

3அவற்றுக்குச் சொல்லுமில்லை, பேச்சுமில்லை; அவற்றின் குரல் செவியில் படுவதுமில்லை.

4ஆயினும், அவற்றின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகின்றது; அவை கூறும் செய்தி உலகின் கடையெல்லைவரை எட்டுகின்றது, இறைவன் அங்கே கதிரவனுக்கு ஒரு கூடாரம் அமைத்துள்ளார்.

5மணவறையிலிருந்து புறப்படும் மணமகனைப் போல அது வருகின்றது; பந்தயத்தில் ஓடும் வீரரைப்போல் அது தன் பாதையில் ஓடுகின்றது.

6அது வானத்தின் ஒரு முனையிலிருந்து புறப்படுகின்றது; அதன் பாதை மறுமுனை வரையிலும் செல்கின்றது; அதன் வெப்பத்திற்கு மறைவானது ஒன்றுமில்லை. ஆண்டவரின் திருச்சட்டம்

7ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது.

8ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன.

9ஆண்டரைப் பற்றிய அச்சம் தூயது அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை.

10அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை தேனினும் தேனடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை.

11அவற்றால் அடியேன் எச்சரிக்கப்படுகின்றேன்; அவற்றைக் கடைப்பிடிப்போர்க்கு மிகுந்த பரிசுண்டு.

12தம் தவறுகளை உணர்ந்து கொள்பவர் யார்தாம்? என் அறியாப் பிழைக்காக என்னை மன்னியும்.

13மேலும், ஆணவமிக்கோரிடமிருந்து உம் அடியானைக் காத்தருளும். அவர்கள் என்னை ஆட்டிப் படைக்காதிருக்கட்டும்; அப்பொழுது, நான் மாசற்றிருப்பேன்; பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன்.

14என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும்.

திருப்பாடல் பத்தொன்பது இரண்டு முக்கியமான செய்திகளை கொண்டமைந்த ஒரு புகழ்சிப்பாடல் அல்லது மெய்யறிவுப்பாடல் எனவும் எடுக்கலாம். திருப்பாடல்கள் பல மெய்யறிவு வாதங்களை தம்மகத்தே கொண்டுள்ளன என்பதற்கு இந்தப்பாடல் நல்லதொரு உதாரணம். பல ஆசிரியர்கள் இதனை இரண்டு பாடல்களாக பிரிக்கினறனர். (இப்பாடலின் வரி இலக்கங்கள் எபிரேயத்தில் வேறுவிதத்தில் அமைந்துள்ளன. எபிரேயத்தில் இப்பாடல் 15 வரிகளைக் கொண்டுள்ளதாக பிரிக்கப்பட்டுள்ளது).

வரிகள் 1-7: இயற்கை கடவுளின் மாட்சியை சாற்றுகின்றன என்ற புகழ்சிப்பாடல்.

வரிகள் 8-15: ஆண்டவரின் திருச்சட்டத்தினை பற்றிய தெளிவான மெய்யறிவுப் பாடல்.

வவ.1-7: கடவுளை எப்படிக் காணமுடியும்? அவர் எங்கிருக்கிறார்? இயற்கைக்கும் கடவுளுக்கும்
இடையிலான தொடர்பென்ன? இயற்கையா அல்லது கடவுளா பெரியவர்? என்ற பல கேள்விகளுக்கு சுலபமாக விடையளிக்கின்றன இந்த வரிகள். வானத்தின் படைப்புக்களை பல சிறு தெய்வங்களாகவும் அல்லது பிரிவுபட்ட சக்திகளாகவும் அன்றைய கானானிய மற்றும் மத்திய கிழக்கு நம்பிக்கைகளில் பாடம் கற்பிக்கப்பட்டன. இப்படியான மெய்யில்கள், இஸ்ராயேல் மக்களிடையேயும் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்த பிழையான கருத்தியல்களை சரிசெய்ய, இந்த திருப்பாடல் ஆசிரியர் வானத்தின் படைப்புக்களும், இயற்கையின் கூறுகளும் கடவுளின் கை வேலைப்பாடுகளேயன்றி வேறொன்றுமில்லை என படம் பிடிக்கிறார்.

வ.1-2: இந்தப்பாடலும், தாவீதின் பாடல் என்றே தொடங்குகிறது. திருப்பிக்கூறும் கவிநடை வகையில் அமைந்துள்ள இந்த வரி, வானத்தை (விண்ணகத்தை) விவரிக்கிறது.

வானங்கள் - மாட்சியை சொல்கின்றன (הַשָּׁמַ֗יִם ஹஷ்ஷமாயிம்)

ஆகாயவிரிப்பு - கைவேலைப்பாடுகளை புகழ்கின்றன (הָרָקִֽיעַ ஹாராகியா').

ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கான நற்செய்தி என்பதும், இரவும் அப்படியே என்பதும் மிகவும் அழகான வரி.

வ.3: இந்த வரி வித்தியாசமாக தமிழில் மொமிபெயர்கப்பட்டுள்ளது. இதனுடைய எழுவாயாக வானங்களையும் ஆகாயவிரிப்புக்களையும் எடுக்கவேண்டும். வானங்கள், பகல் பகலாகவும், இரவு இரவாகமும் கடவுளை புகழ்கின்றன.

வவ.4-5: இந்த வரிகளும் வானங்களின் மாட்சிப்படுத்தலையே விவரிக்கின்றன. வானங்கள் அமைதியான முறையில் ஆனால் உறுதியான முறையில் இந்த செயற்பாட்டை செய்கின்றன. வானங்களின் அறிக்கை உலகெங்கும் சென்றடைகிறது. இந்த அனைத்து உலகை குறிக்க உலகின் கடை எல்லை என்ற சொல்லும் பாவிக்கப்படுகிறது (בִקְצֵה תֵבֵל விக்ட்செஹ் தெவெல்).

கடவுள் இந்த வானங்களிலே கதிரவனுக்கு கூடாரம் அமைத்துள்ளார். கதிரவனை இவ்வாறு ஓர் ஆளாக காட்டி இந்தக் சுடாரத்தினுள் வந்து தங்குவதால் இரவும் பகலும் உருவாவதைக் காட்டுகின்றார்.

வவ.6-7: இந்த வரிகள் கதிரவனின் செயற்பாடுகளை விவரிப்பதன் மூலமாக அதனை உருவாக்கி நிறுவியவரின் மகிமையைப் பாடுகின்றன. பல சமயங்களின் நம்பிக்கைகளில் கதிரவன் ஒரு சக்தியாகவே நம்பப்பட்டு வருகிறது (שֶׁמֶשׁ ஷெமெஷ்- கதிரவன்). இந்து மதம் கதிரவனை முக்கியமான தேவர்களில் ஒருவராக நம்புகிறது.

கிரேக்க சமயங்களும், மெசபத்தோமிய சமயங்களும் எகிப்திய சமயங்களும் கதிரவனை அறியமுடியாக உயர்ந்த தெய்வமாக நம்பின. இஸ்ராயேல் நம்பிக்கை கதிரவனை ஒரு ஒளிப்பிளம்பாகவே முன்வைத்தது. கதிரவனை கடவுள் பகல் வெளிச்சத்திற்காக உருவாக்கியதாகவும், அவரே அதனை வானத்தில் நிறுவியதாகவும் தொடக்கநூல் காட்டுகிறது
(காண் தொ.நூ 1,16❄︎). இஸ்ராயேலர்கள் சிலர் சிலவேளைகளில் இந்த அயல்நாட்டு நம்பிக்கைகளால் தூண்டப்பட்டு சூரிய வழிபாடுகளில் ஈடுபட்டதை விவிலியத்தில் காணலாம். இந்த திருப்பாடலில் ஆசிரியர் கதிரவனை ஒர் ஆளாக வர்ணிப்பதை இலக்கிய கண்களில் மட்டுமே பார்க்க வேண்டும்.

சூரியனின் பாதை விசாலமானது எனவும், அதன் வெப்பம் என்றும் நிலையானது எனவும் காட்டப்படுகிறது.

(❄︎ கடவுள் இருபெரும் ஒளிப்பிழம்புகளை உருவாக்கினார். பகலை ஆள்வதற்குப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள்வதற்குச் சிறிய ஒளிப்பிழம்பையும் மற்றும் விண்மீன்களையும் அவர் உருவாக்கினார்.)

இனிவருகின்ற வரிகள் தோறாவைப் (சட்டம்) பற்றிய வரிகள். இதனை மெய்யியல் வரிகள் என்றும் அழைப்பர். விவிலியத்தில் தோறா பாடல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. பல திருப்பாடல்கள் இப்படியான சுபாவத்தைக் கொண்டுள்ளன. திருப்பாடல் 119 இவற்றில் மிக முக்கியமானது.

வ.8: இந்த வரிகள் கடவுளின் தோராவின் (תּוֹרָה- சட்டம், நியமம்) பண்புகளை விளக்க முயற்சி செய்கின்றன. ஆசிரியர் கடவுளின் சட்டங்களை இவ்வாறு விவரிக்கிறார், அவை:

ஆண்டவரின் திருச்சட்டங்கள் நிறைவானவை (תּוֹרַת יְהוָה תְּמִימָה தோறா அதோனாய் தெமிமாஹ்),

அவை புத்துயிரளிப்பவை (מְשִׁיבַת נָפֶשׁ மெஷிவத் நாபெஷ்),

ஆண்டவரின் ஒழுங்குமுறைகள் நம்பத்தக்கவை (עֵדוּת יְהוָה נֶאֱמָנָ֗ה 'எதூத் அதோனாய்

நெ'ஏமானாஹ்), சிறுவருக்கும் ஞானம் தரக்கூடியவை (מַחְכִּ֥ימַת פֶּֽתִי மஹ்கிமாத் பெதி),

ஆண்டவரின் நியமங்கள் சரியானவை (פִּקּוּדֵי יְהוָה יְשָׁרִים பிகுதெ அதோனாய் யெஷாரிம்),

இதயத்தை மகிழ்விக்கின்றன (מְשַׂמְּחֵי־לֵב மெஸாமெஹெ-லெவ்),

ஆண்டவரின் கட்டளைகள் ஒளிர்மயமானவை (מִצְוַת יְהוָה בָּרָ֗ה மிட்செவத் அதோனாய் பாராஹ்),

கண்களை ஒளிர்விக்கின்றன (מְאִירַת עֵינָיִם மெ'யிராத் 'எனாயிம்).

வ.9: இந்த வரி ஆண்டவரைப் பற்றிய அச்சத்தை பேசுகின்றன:

ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது (יִרְאַ֤ת יְהוָ֨ה ׀ טְהוֹרָה யிர்'அத் அதோனாய் தெஹோராஹ்),

ஆண்டவரின் நீதி நெறிகள் உண்மையானவை (מִשְׁפְּטֵי־יְהוָה אֱמֶת மிஷ்பெதெ-அதோனாய் 'எமெத்)

வ.10: ஆண்டவரின் சட்டங்களின் பண்புகள் இந்த வரியில் விளக்கப்படுகின்றன:
அவை பொன் பசும் பொன்னைவிட உயர்ந்தவை (הַנֶּחֱמָדִים מִזָּהָב ஹன்னெஹெமாதிம் மிட்சாஹாவ்),
தேனைவிட இனிமையானது (מְתוּקִים מִדְּבַ֗שׁ மெதூகிம் மித்வாஷ்),
தேனைடயைவிட இனிமையானது (נֹפֶת צוּפִים நோபெத் ட்சுகிம்).

இங்கே கடவுளின் சட்டங்கள் என்பவற்றை திறந்த பார்வையுடன் பார்க்க வேண்டும். தோரா எனப்படுவது, கடவுளின் வார்த்தைகளையும், பத்துக்கட்டளைகளையும், மற்றைய லேவியர் சட்டங்களையும் குறிக்கலாம். இஸ்ராயேல் மக்களுக்கு இந்த சட்டங்களே தனித்துவமான அடையாளத்தை கொடுத்தன. இந்த சட்டங்களே அவர்களை கடவுளின் பிள்ளைகளாக மாற்றியது. சில வேளைகளில் முதல் ஐந்து நூல்களும் கூட தோரா என்றே காணப்பட்டன. இப்படியான சட்டங்களை விளக்க என்று கூறி பல நூறு சட்டங்கள் உருவாகின. ஒவ்வொரு விவிலிய பகுதியிலும் அங்கே இந்த சட்டங்கள் எவற்றை குறிக்கின்றன என்பதை அவதானத்துடன் வாசிக்க வேண்டும்.

வவ.11-15: இந்த வரிகள் சட்டங்களுக்கு ஆசிரியரின் சொந்த வாழ்விற்கும் இடையிளான உறவைக் காட்டுகின்றன. இந்த சட்டங்களை கடைப்பிடிப்பதால்தான், தான் நீதியான வாழ்வு வாழ்வதாகவும், தன்னை வஞ்சிப்பவர்களிடம் இந்த சட்டங்கள் இல்லை எனவும் பாடுகிறார். வார்த்தைக்கும் (உதடுகள்) வாழ்க்கைக்கும் (இதயம்) நெருங்கிய தொடர்புள்ளதை இறுதி வரி அழகாகக் காட்டுகிறது. இறுதியாக கடவுளை தனது பாறையாகவும், மீட்பராகவும் புகழ்ந்து இந்த பாடலை நிறைவு செய்கிறார் ஆசிரியர்.

வ.11: சட்டத்தால் தனக்கு எச்சரிக்கையும், அதனை கடைப்பிடிப்போருக்கு பரிசுமுண்டு என்கிறார். சட்டங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டியவை என்பதை இந்த வரி காட்டுகிறது.
இந்த பரிசு ஆண்டவரின் ஆசீர்வாதத்தைக் குறிக்கலாம் (עֵקֶב 'எகெவ்- பரிசு).

வ.12: இலக்கிய கேள்வி ஒன்று கேட்கப்படுகிறது. அதாவது யாரால்தான் பிழைசெய்யாமல் இருக்க முடியும். நல்லவர்கள் கூட பிழைவிடுவது வழக்கம் தானே, ஆக கடவுள் பெரிய மனது பண்ணி பிழையை மன்னிக்க வேண்டும் என்பது இங்கே விளக்கமாக வருகிறது. שְׁגִיאוֹת מִי־יָבִין ஷெகி'ஓத் மி-யாபின்- பிழைகளை யார்தான் அறிய முடியும். מִנִּסְתָּרוֹת נַקֵּנִי׃ மின்னிஸ்தாரோத் நாகெனி- என் குற்றங்களை மறைத்தருள்க.

வ.13: ஆணவமிக்கோரிடமிருந்து தன்னை காக்க கேட்கிறார் ஆசிரியர். ஆணவமிக்கோர் என்பவர் מִזֵּדִים மிட்செதிம் என அறியப்படுகின்றது. இது தன்னுடைய ஆணமாகவும் இருக்கலாம். இந்த ஆணவம் அல்லது ஆணவமிக்கோர் தன்னை கட்டுப்படுத்தாதபடி பார்க்கக் கேட்கிறார்.
இதனால் தான் இன்னும் பிழைசெய்யாமல் இருப்பேன் என்கிறார். அனைத்து பிழைகளுக்கும் ஆணவம் தான் காரணம் என்பது இங்கணம் தெரிகிறது.

வ.14: இந்த திருப்பாடலின் மிகவும் அழகான வரி. இந்த வரியில் இஸ்ராயேலின் நம்பிக்கையின் வடிவமான வார்த்தைகளில் கடவுளை அழைக்கிறார். ஆண்டவர் அரணும் கற்பாரையும் என அழைக்கப்படுகிறார் (יְהוָה צוּרִי וְגֹאֲלִי׃ அதோனாய் ட்சூரி வெகோ'அலி- ஆண்டவர் என் பறை மற்றும் அரண்).

அதே வேளை தன்னுடைய வாய்ச் சொற்களும், உள்ளத்தின் எண்ணங்களும் ஆண்டவருக்கு உகந்ததாக இருக்கவும் கேட்கிறார். אִמְרֵי־פִי 'இம்ரே-பி என் வாய்ச் சொற்கள், הֶגְיוֹן לִבִּי ஹெக்யோன் லிப்பி- இதயத்தின் சிந்தனைகள்.

1கொரிந்தியர் 12,12-30
12உடல் ஒன்றே உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். 13ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம். 14உடல் ஒரே உறுப்பால் ஆனது அல்ல பல உறுப்புகளால் ஆனது. 15'நான் கை அல்ல ஆகவே இவ்வுடலைச் சேர்ந்தவன் அல்ல' எனக் கால் சொல்லுமானால், அது அவ்வுடலைச் சேர்ந்ததில்லை என்றாகிவிடுமா? 16'நான் கண் அல்ல ஆகவே இவ்வுடலைச் சேர்ந்தவன் அல்ல' எனக் காது சொல்லுமானால், அது அவ்வுடலைச் சேர்ந்ததில்லை என்றாகிவிடுமா? 17முழு உடலும் கண்ணாயிருந்தால் கேட்பது எப்படி? முழு உடலும் காதாயிருந்தால் முகர்வது எப்படி? 18உண்மையில் கடவுள் ஒவ்வோர் உறுப்பையும் தாம் விரும்பியவாறே உடலில் அமைத்தார். 19அவை யாவும் ஒரே உறுப்பாயிருந்தால் உடல் என ஒன்று இருக்குமா? 20எனவேதான் பல உறுப்புகளை உடையதாய் இருந்தாலும் உடல் ஒன்றே.
21கண் கையைப்பார்த்து, 'நீ எனக்குத் தேவையில்லை' என்றோ தலை கால்களைப் பார்த்து, 'நீங்கள் எனக்குத் தேவையில்லை' என்றோ சொல்ல முடியாது. 22மாறாக, உடலில் மிக வலுவற்றனவாய்த் தோன்றும் உறுப்புகளே மிகவும் தேவையானவையாய் இருக்கின்றன. 23உடலின் மதிப்புக் குறைவான உறுப்புகள் என நமக்குத் தோன்றுபவற்றிற்கே நாம் மிகுந்த மதிப்புக் கொடுக்கிறோம். நம் மறைவான உறுப்புகளே மிகுந்த மதிப்புப் பெறுகின்றன. 24மறைந்திராத நம் உறுப்புகளுக்கு அது தேவையில்லை. மாறாக, மதிப்புக் குறைந்த உறுப்புகளுக்கு மிகுந்த மதிப்புக் கொடுத்தே கடவுள் உடலை ஒன்றித்து உருவாக்கினார். 25உடலில் பிளவு ஏற்படாமல், ஒவ்வொரு உறுப்பும் மற்ற உறுப்புகளின் மீது ஒரேவிதக் கவலை கொள்ளவேண்டுமென்றே இப்படிச் செய்தார். 26ஓர் உறுப்பு துன்புற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து துன்புறும். ஓர் உறுப்பு பெருமை பெற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து மகிழ்ச்சியுறும்.
27நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள். 28அவ்வாறே திருச்சபையிலும் கடவுள் முதலாவது திருத்தூதர்களையும், இரண்டாவது இறைவாக்கினர்களையும், மூன்றாவது போதகர்களையும், பின்னர் வல்லசெயல் செய்வோர்களையும், அதன்பின் பிணி தீர்க்கும் அருள்கொடை பெற்றவர்கள், துணைநிற்பவர்கள், தலைமையேற்று நடத்துபவர்கள், பல்வகை பரவசப்பேச்சு பேசுகிறவர்கள் ஆகியோரையும் ஏற்படுத்தினார். 29எல்லாருமே திருத்தூதர்களா? எல்லாருமே இறைவாக்கினர்களா? எல்லாருமே போதகர்களா? எல்லாருமே வல்ல செயல் செய்பவர்களா? இல்லை. 30எல்லாருமே பிணி தீர்க்கும் அருள்கொடையைப் பெற்றவர்களா? எல்லாருமே பரவசப் பேச்சுப் பேசுகிறவர்களா? எல்லாருமே விளக்கம் அளிப்பவர்களா? இல்லையே!
பவுலடிகளாரின் கிரேக்க யூத மெய்யியல் அறிவிற்கும் அவரது கிறிஸ்தியல் புலமைத்துவத்திற்கும் ஒரு வரைவிலக்கனமாக இந்த பகுதியைக் காணலாம். கிரேக்க மெய்யியலிலும், தல பிரிவினைகளிலும் மூழ்கியிருந்த ஆரம்பகால கிறிஸ்தவர்களை பவுல் கிறிஸ்து, உடல், திருச்சபை போன்ற நற்சிந்தனைகளில் மூழ்கச்செய்கிறார்.

வவ. 12-13: உடல், உறுப்புக்கள், கிறிஸ்து, தூயஆவி, போன்றவற்றை உதாரணத்துக்கு எடுத்து ஒற்றுமையை கொரிந்தியருக்கு ஆழமாகச் சொல்கிறார். கிரேக்கர்கள் உடல்உறுப்பியல் சம்பந்தமான மருத்துவத் துறையில் புலமைபெற்றவர்கள், அவர்களுக்கு உடலை உதாரணமாக எடுப்பதன் வாயிலாக அவர்களின் அறிவிலே அவர்களுக்கு பாடம் புகட்டுகிறார். கடவுளுக்கு முன்னால் மனிதன் அவர் பிள்ளையாக மட்டுமே இருக்க முடியும் என்பது புவுலுடைய நம்பிக்;கை, இது மீண்டும் மீண்டும் பவுலுடைய கடிதங்களில் வருவதைக் காணலாம். யூதர், கிரேக்கர், உரிமை மக்கள், அடிமைகள் இந்த பிரிவினைதான் கொரிந்தியரை சலனப்படுத்தியது, அதனை பவுல் இங்கு வேரறுக்கிறார். (சிலர் கடவுளுக்கு உடலைக் கொடுத்து, அதனை தரப்படுத்தி, கடவுள் பிள்ளைகளை மேலோர் கீழோர் என பிரிவுபடுத்தி, தமிழர்களை கடவுளின் கீழ் உறுப்புகளில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லி, அடிமைப்படுத்துவதை: சில தமிழர்களே இன்றுவரை நம்பத்தான் செய்கிறார்கள்). (σῶμα சோமா: மனித, மிருக உடல்)

வவ. 14-17: கிரேக்க ஸ்தொயிக்க மெய்யறிவு, சமுதாயத்தின் ஒற்றுமை வேற்றுமையைக் காட்ட உடல் உறுப்புகளின் உருவக அணியை பாவித்தது தங்கியிருக்கும் தன்மையை விளங்கப்படுத்தியது. பவுல் இந்த ஒப்புவமையில் மூளையை அல்லது, தலையை அல்லது இதயத்தை உதாரணத்திற்கு எடுக்காதது அவரின் சிறந்த தெளிவைக்காட்டுகிறது. ஏனெனில் கிரேக்கர் அவற்றை ஆன்மாவின் உறைவிடமாகக் கொண்டு மற்றவற்றை இரண்டாம்தரப்படுத்தினர். கை, கால், கண், காது, இவை வெளியால் தெரியக்கூடிய அதிகமான வேலைகளைச் செய்கிற முக்கியமான உறுப்புக்கள். உயிரைப் பொறுத்தவரையில் இவை இரண்டாம் தர உறுப்புக்கள்;, ஏன் பவுல் இவற்றை சிந்தனைக்கு எடுக்கிறார் என்பதை நோக்க வேண்டும்?

வவ. 18-20: கடவுளை சாட்சிக்கு எடுக்கிறார். உடலின் வேற்றுமையை தெரிவு செய்ய வேண்டியவர் கடவுள் ஒருவரே, அவருடைய வேலையை மனிதர் செய்ய வேண்டாம் எனச் சொல்கிறார்.

வவ. 21-23,24-26: உடலின் அதிசியத்தைக் காட்டுகிறார், வலுவற்றது தேவையாய் இருக்கிறது, மதிப்புக்குறைவானதும் மறைவானதும், மிக மதிப்பு பெறுகிறது. பலவீனமானவர்களை தெரிவு செய்வது முதல் ஏற்பாட்டிலும் எபிரேய சரித்திரத்திலும் மிக முக்கியமான கடவுளின் செயல். இதற்கான காரணம், பொறுப்புணாச்;சி, அக்கறை, பகிர்வு எனவும் விடையளிக்கிறார்.

வவ. 27-30: இங்குதான் பவுல் சொல்லவருகிற செய்தி இருக்கிறது. கிறிஸ்துவின் உடலான (σῶμα Χριστοῦ சோமா கிறிஸ்து) திருச்சபையின் பணியாளர்களை வரிசைப்படுத்துகிறார். திருத்தூதர், இறைவாக்கினர், போதகர்கள், வல்லசெயல் செய்வோர், குணமாக்குவோர், துணையாளர்க்ள், தலைவர்கள், பரவசப்பேச்சாளர்கள். தற்பெருமை, கிறிஸ்துவின் உடலான திருச்சபையில் ஏற்றுக்கொள்ள பட முடியாதது என்பதே பவுலடியாரின் செய்தி. (இந்த நோய்க்கு இன்னும் திருச்சபையில் மருந்து முழுமையாக வரவில்லை என்பது ஆபத்தான உண்மை).

லூக்கா 1,1-4:4,14-21
1மாண்புமிகு தியோபில் அவர்களே, நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி ஒரு வரலாறு எழுதப் பலர் முயன்றுள்ளனர்; 2தொடக்க முதல் நேரில் கண்டும் இறைவார்த்தையை அறிவித்தும் வந்த ஊழியர் நம்மிடம் ஒப்படைத்துள்ளவாறே எழுத முயன்றனர். 3அது போலவே நானும் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு, 4அவற்றை ஒழுங்குப்படுத்தி உமக்கு எழுதுவது நலமெனக் கண்டேன்.

14பின்பு இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது. 15அவர் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்.16இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். 17இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது:
18'ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில்,
அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும்
சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர்
என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்
19ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.'

வவ.1-4: யார் இந்த லூக்கா, யார் இந்த தியோபில்? (Θεόφιλος தியோபிலோஸ்) என்பவர்கள் இலகுவாக பதிளிக்க முடியாதவர்கள். மாண்புமிகு வைத்தியர், லூக்கா தன்னுடைய நற்செய்தியின் நோக்கத்தை இங்கே பதிவுசெய்கிறார். தியோபில் என்பவர் ஆரம்ப கால மதிக்பட்ட இரண்டாம் தலைமுறை கிறிஸ்தவராக இருந்திருக்கலாம். தற்போது சிலர் இவரை அனைத்து கிறிஸ்தவர்களை குறிக்க லூக்கா பயன்படுத்திய ஒரு சொல் எனவும் காண்கின்றனர். லூக்கா தான் எழுதுவதற்கு முன்னர் பல நற்செய்திகள் இருப்பதையும் ஏற்றுக்கொள்கிறார், ஆக அவருடையது முதலாவதல்ல. அவர் எவ்வாறு எழுதினார் என்பதன் மூலம், லூக்கா ஒர் இரண்டாம் தலைமுறை கிறிஸ்தவர் என்பது வெளிப்பாடு. வரலாற்றில் முக்கியமானவர்களுக்காக ஆண்டவரின் வரலாற்றை எழுதுவது லூக்காவின் காலத்திற்கு முன்னரும் இருந்த ஒரு சாதாரண வழக்கம்.

வ. 14: நான்காம் அதிகாரத்தில் இயேசு ஆண்டவரின் பாலைவன தியானத்தைப் பார்க்கலாம். திருமுழுக்கு, பரம்பரை அட்டவணை, பாலைவன அனுபவம் என கடவுள் மெசியாவை தயார்படுத்தியதை அழகாக காட்சிப்படுத்துகிறார், இந்த வைத்தியர். தூயஆவியார், லூக்கா நற்செய்தியிலும் திருத்தூதர்பணிகள் நூலிலும் அதிகமாக வருகிறவர். (லூக்கா 12 தடவைகளாக, தி.ப. 38 தடவைகளுக்கு மேலாக)

வவ. 15-16: இயேசு ஆண்டவர் கலிலேயாவிற்கும் நசரேத்திற்கும் போவது, முதல் ஏற்பாட்டில் கடவுள் ஆபிரகாமை சந்திக்க வருவதை ஞாபகப்படுத்துகிறது. ὑπέστρεψεν திரும்பிச்சென்றார் என்பதன் வாயிலாக கடவுள் எப்போதும் தன் மக்களின் இருப்பிடத்தையே உறைவிடமாகக் கொள்கிறார் என்பது, லூக்காவின் படிப்பினை. யோவானைப் போலல்லாது, ஆண்டவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கிறார், அனைவரும் அவரைப்பற்றி பேசுகின்றனர். இவை இயேசு ஆண்டவர்தான் மெசியா எனக்காட்டும் ஒப்பீட்டுச் செயல்.

வ. 17: சாதாரணமாக ஓய்வுநாளில் தோராவில் இருந்தும் இறைவாக்குகளிலிருந்தும் ஒன்றுமாக இரண்டு பாடங்கள் வாசிப்பது வழக்கம், ஆண்டவர் இரண்டாவதை தெரிவு செய்வது, கடவுள் இறைவாக்கிற்கு முக்கியத்துவம் கொடுப்பதனைப்போல் உள்ளது.

வவ. 18-19: இயேசு எசாயாவின் இறைவாக்கை சற்று மாற்றி வாசிக்கிறார். (எசா 61,1-2). ஆண்டவரின் ஆவி, அருட்பொழிவு (מָשַׁח மாஷா), ஏழைகளுக்கு நற்செய்தி, சிறைப்பட்டோருக்கு விடுதலை (எசாயா: உடைந்த இதயங்களை ஒன்று சேர்க்க), பார்வையற்றோருக்கு பார்வை, ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை, அருள் ஆண்டை அறிவிக்க என்று இயேசு வாசிக்கிறார், ஆனால் ஆண்டவரின் பழிவாங்கும் நாளை அறிக்கையிடும் செயலை இயேசு கூறாமலே ஏட்டை சுருட்டுகிறார். லூக்காவின் கடவுள் ஆசிர்வதிக்கிறவா,; பழி வாங்குபவரல்ல.

வவ. 20-21: இயேசுவின் அமர்தலும், அனைவரின் பார்வையும் அவரைநோக்கியிருப்பதும், இயேசுவை புதிய மோசேயாகவோ, அரசராகவோ அல்லது மேலாக, கடவுளாகவோ காட்டுவதைப்போல அமைக்கப்பட்டிருக்கிறது.

வசனம் 21, ஆண்டவரின் தீர்ப்பு அல்லது விளக்கம் போல வருகிறது. மக்கள் அதனை எவ்வாறு எடுக்கிறார்கள் என்பதிலிருந்துதான், ஆண்டவர் அவர்களோடு அங்கிருப்பாரா அல்லது வெளியே செல்வாரா என்பது அமையும்.

சட்டங்கள் தேவையானவை,

அவை மனிதனுக்கு தெய்வீகத்தை கொடுக்க ஏற்படுத்தப்பட்டவை.

சட்டங்களை அதன் விளக்கம் இல்லாமல் பயன்படுத்தினால்,

மனிதன் பயங்கரவாதியாக மாறி,

கடவுளைக்கூட பாவியாகத்தான் பார்ப்பான்,

சட்டமே இல்லாமல்,

சுய நலத்தோடே மட்டும்,

நினைத்ததை எல்லாம் செய்தால்,

கடவுளைக்கூட கல்லாக மட்டுமே பார்ப்பான்.

இந்த இரண்டு வகை மனிதர்களே இன்று உலகை ஆக்கிரமித்துள்ளனர்.

ஆண்டவரில் மகிழ்ச்சி அது வல்லமை!

மீண்டும் உமது அருளின் ஆண்டை அறிவிக்க வாரும் ஆண்டவரே, ஆமென்.

உரோமை

மி. ஜெகன்குமார் அமதி

(முதல் பதிவு உரோமையில் மூன்று ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது).