வெள்ளி, 29 ஜூன், 2018

ஆண்டின் பொதுக்காலம் பதின்மூன்றாம் ஞாயிறு (ஆ); 13th Sunday in Ordinary Times (B)


ஆண்டின் பொதுக்காலம் பதின்மூன்றாம் ஞாயிறு ()
01.07.2018

மி. ஜெகன்குமார் அமதி
வசந்தகம், யாழ்ப்பாணம்,
Friday, June 29, 2018
முதல் வாசகம்: சாலமோனின் ஞானம் 1,13-15: 2,23-24
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 30
இண்டாம் வாசகம்: 2கொரிந்தியர் 8,7-15
நற்செய்தி: மாற்கு 5,2-43

சாலமோனின் ஞானம் 1,13-15: 2,23-25
13சாவைக் கடவுள் உண்டாக்கவில்லை; வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதில்லை. 14இருக்கவேண்டும் என்பதற்காகவே அவர் அனைத்தையும் படைத்தார். உலகின் உயிர்கள் யாவும் நலம் பயப்பவை; அழிவைத் தரும் நஞ்சு எதுவும் அவற்றில் இல்லை; கீழுலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை. 15நீதிக்கு இறப்பு என்பது இல்லை.

23கடவுள் மனிதர்களை அழியாமைக்கென்று படைத்தார்; தம் சொந்த இயல்பின் சாயலில் அவர்களை உருவாக்கினார். 24ஆனால் அலகையின் பொறாமையால் சாவு உலகில் நுழைந்தது. அதைச் சார்ந்து நிற்போர் இறப்புக்கு உள்ளாவர்.

சாலமோனின் ஞானம் என்ற நூல் கிரேக்க செப்துவாஜின்து மொழியில் எழுதப்பட்டபடியால் 
இதனை எபிரேய விவிலியத்தில் காணமுடியாது. இதனை எபிரேயர்கள் 'ஏற்றுக்கொள்ளப்படாத நூலாகவே' கருகின்றனர். கத்தோலிக்கருக்கு இந்த நூல் இணைத்திருமுறை நூல். ஞான நூல்கள் என்ற பிரிவில் இந்த நூல் இடம் பெறுகிறது. இந்த நூலை மன்னர் சாலமோனுக்கு அர்ப்பணித்தாலும், இதனை அந்த மன்னர்தான் எழுதினார் என்று நிரூபிப்பது கடினமாக இருக்கும். சாலமோன், ஞானத்தில் (மெய்யறிவில்) சிறந்து விளங்கியவர். ஆகவே மெய்யறிவு நூல்களை அவருக்கு அர்ப்பணிப்பது அக்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மரபு. இந்த வகையாக, நூல்களுக்கு அதிகாரமும், பிரசித்தமும் பெற்றுக்கொடுக்கப்பட்டது. இதனைப் போலத்தான் திருப்பாடல்கள் தாவீது அரசருக்கும், சட்ட புத்தகங்கள் மோசேக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்திலுள்ள ஒன்பதாவது அதிகாரம், 1அரசர்கள் 3,6-9 உள்ள சாலமோனின் செபத்தை ஒத்திருப்பதால் இந்த புத்தகத்திற்கும் சாலமோனுக்குமான உறவு நோக்கப்படுகிறது. சாலமோனின் ஞானம் என்று இந்த புத்தகம் அறியப்பட்டாலும், சாலமோனின் பெயர் இந்த புத்தகத்தில் 
இடம்பெறவில்லை. வல்கேற் இந்த புத்தகத்தை மெய்யறிவு புத்தகம் என்றே அழைக்கிறது. தூய ஜெரோமுடைய விரும்பத்தக்க புத்தகமாக இந்த நூல் இருந்திருக்கிறது
இந்த புத்தகத்தின் காலத்தை அறிவது இலகுவாக இருக்காது. அநேகமாக இந்த புத்தகம் முதலாம் நூற்றாண்டின் (கி.பி) இறுதிப் பகுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். கிரேக்கர்களின் ஆதிக்கம் இஸ்ராயேல் நாட்டில் இருந்தபோது இந்த இந்த புத்தகம் யூதர்களின் விசுவாசத்தை தக்க வைப்பதை நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கலாம். இதன் ஆசிரியர் நிச்சயமாக ஒரு பாரம்பரிய யூதர், அவர் செப்துவாயிந்து மொழிபெயர்ப்பில் பணி செய்திருக்க வேண்டும். இவர் எகிப்திய அலெக்சாந்திரியாவில் இருந்த பிரபலான யூதர்களில் ஒருவராக இருந்திருக்க வேண்டும்
இதனால் புலம்பெயர் யூதர் ஒருவரின் புத்தகம் என இதனை சிலர் வரையறுக்கின்றனர். பல ஆசிரியர்கள் இந்த புத்தகத்திற்கு இருந்திருக்க வேண்டும் எனவும், இந்த புத்தகம் முதலில் அரமேயிக்கத்தில் எழுதப்பட்டது என்று சிலர் வாதிட்டாலும், அவைகளுக்கு அக புற சான்றுகள் மிக குறைவாகவே இருக்கின்றன
இலக்கிய வகையில் இந்த புத்தகம் மெய்யறிவு புத்தக வகையைச் சார்ந்தது, முக்கியமாக கிரேக்க வகையைச் சார்ந்தது. இருப்பினும் எபிரேயர்களின் ஆழமான நம்பிக்கைகள், பாரம்பரியங்கள், இலக்கிய வரிவடிவங்கள் இந்த புத்தகத்தில் நிறைவாகவே உள்ளன. ஆய்வாளர்கள் இந்த புத்தகத்தை மூன்று பிரிவுகளாகவும் பிரிக்கின்றனர். இன்றைய வாசகம் முதலாம் அதிகாரத்திலிருந்து எடுக்கப்படுகிறது. இந்த வரிகள் சாவு என்கின்ற மறைபொருளை விளக்க முயற்சிக்கின்றது. ஞானம் பல கேள்விகளுக்கு விடையாக வருகிறது என்ற தொனியில் இந்த அதிகாரம் அமைந்துள்ளது

.13 சாவு ஒரு மறைபொருள். இதனை பல விதமான இறையியலில் விவிலியம் காட்டுகின்றது. (θάνατος தானாடொஸ்: מָוֶת மாவெத்- சாவு) இந்த சொற்கள் அடிப்படையில், உடலின் மரணத்தை காட்டுகின்றன. மரணம் இயற்கையான நிகழ்வாக இருந்தாலும், விவிலியம் மரணத்தை கடவுள் நேரடியாக கட்டுப்படுத்துகிறார் என்ற சிந்தனையைக் கொண்டிருக்கிறது. சில வேளைகளில் மரணம், அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. வாழ்விற்கு எதிர்ப்பதமாகவும், சாவு பார்க்கப்படுகிறது. சாவோடு ஆன்மா கடவுளிடமும், உடல் மண்ணிடமும் செல்வதாக நம்பப்பட்டது. மனிதர்களுக்கு சாவு 
இயற்கையானது என்ற எபிரேயர்கள் நம்பினாலும் கடவுளால் சாவை நிறுத்த முடியும் என்பதை அவர்கள் உறுதியாக நம்பினார்கள்
பல பயங்கரமான குற்றங்களுக்கு, ஆரம்ப கால எபிரேயர்கள் மரணத்தை தண்டனையாக கொடுத்தார்கள். அவற்றுள், கொலை, தெய்வ நிந்தனை, விபச்சாரம், பாலியல் குற்றங்கள், ஓய்வுநாள் முறிவுகள், போன்றவைகள் முக்கியமானவை. எபிரேய சட்டம் கற்களை எறிந்து குற்றவாளிகளை கொலைசெய்ய அனுமதித்தது, சில வேளைகளில் குற்றவாளிகள் எரித்தும் கொலை செய்யப்பட்டார்கள்
இறப்பிற்கு பின்னர் மனிதர்கள் செயோல் அல்லது பாதாளத்திற்கு செல்கிறார்கள் என நம்பப்பட்டது. சீயோலில் இருப்பவர்கள் கடவுளை புகழவோ அல்லது அவரை நினைக்கவோ வாய்பற்றவர்கள் என விவிலியம் காட்டுகிறது. இந்த தண்டனையிலிருந்து எனோக்கும்
இறைவாக்கினர் எலியாவும் தப்பினார்கள் என்பதையும் முதல் ஏற்பாடு காட்டுகிறது. எபிரேயர்களின் 
இறப்பு பற்றிய சிந்தனைகளுக்கு பின்னால் கானானிய மற்றும் மொசப்தேமிய நம்பிக்கைகளின் அதிகமாக தாக்கம் செலுத்துவதை அவதானிக்க முடிகிறது
இறப்பை பற்றி எபிரேயர்களின் தனித்துவமான சிந்தனைகளை ஆராய்வது சற்று கடினமாகவே இருக்கும். இருப்பினும் எபிரேயர்கள் மரணத்தை நேர்முகமாக எதிர்கொண்டமை அவர்களின் சிறப்பான இறையியலைக் காட்டுகிறது. மரணத்தை எழும்ப முடியாத தூக்கமாக பார்த்தாலும், கடவுளால் இந்த உறக்கத்திலிருந்து தான் விரும்பியவர்களை எழுப்ப முடியும் என நம்பினார்கள்
கிறிஸ்தவத்தின் மரணம் பற்றிய இறையியல் முற்றிலும் மாறுபடுகிறது. கிறிஸ்தவர்கள் மரணத்தை மறு வாழ்வின் தொடக்கமாக நம்புகிறார்கள். இருப்பினும் மரணம் நமக்கும் துன்பத்தோடே வருகின்றது
இந்த 13வது வரியில் மரணத்தை பற்றிய ஞான நூலின் பார்வை சற்ற வளர்ந்திருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. மரணத்தை கடவுள் உண்டாக்கவில்லை என்கிறார் ஆசிரியர். ὁ θεὸς θάνατον οὐκ ἐποίησεν ஹொ தியோஸ் தானாடொன் ஊக் எபொய்ஏசென்- கடவுள் மரணத்தை ஏற்படுத்தவில்லை. வாழ்வோரின் அழிவில் கடவுள் மகிழ்வதில்லை என்ற அழகான இறையியலை முன்வைக்கிறார் ஆசிரியர் (οὐδὲ τέρπεται ἐπ᾿ ἀπωλείᾳ ζώντων.  ஊதெ டெர்பொடாய் எப் அபோலெய்யா ட்சோன்டோன்- வாழ்வோரின் அழிவில் அவர் மகிழ்வதும் இல்லை). 

.14: படைப்பின் நோக்கம் என்ன? என்பதை மிக நேர்த்தியாகக் காட்டுகிறார். இருக்கவே அனைத்தும் படைக்கப்பட்டுள்ளன (τὸ εἶναι τὰ πάντα,  டொ எய்னாய் டா பான்டா- இருக்கவே அனைத்தும் உள்ளன). உலகின் உயிர்கள் அனைத்தும் நல்லவை என காட்டுகிறார். இதனை 'மீட்பளிக்கும் சக்திகள் நிறைவானவை' (σωτήριοι αἱ γενέσεις τοῦ κόσμου,  சோடேரியொய் ஹாய் கெனெசெய்ஸ் டூ கொஸ்மூ-) என கிரேக்க செப்துவாஜிந்து காட்டுகிறது. அழிவைத்தரும் நஞ்சு உலகின் படைப்புக்களில் இல்லை என்பது ஆசிரியரின் வாதம் (οὐκ ἔστιν ἐν αὐταῖς φάρμακον ὀλέθρου ஊக் எஸ்டின் என் அவ்டாய்ஸ் பார்மாகொன் ஒலெத்ரூ- அழிவுக்குரிய நஞ்சு அவற்றில் இல்லை). 
இவற்றை எல்லாம், சாரம்சம் செய்யும் முகமாக, கீழுலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை என்கிறார் (οὔτε ᾅδου βασίλειον ἐπὶ γῆςஊடெ ஹதூ பசிலெய்யொன் எபி கேஸ்-பாதாள உலகின் ஆட்சி மண்ணுலகில் இல்லை). 

.15: இந்த வரி நீதியை எழுவாய்ப் பொருளாக கொண்டு வருகிறது. நீதிக்கு இறப்பு இல்லை என்பது சொல்லப்படுகிறது. வாழ்வையும் நீதியையும் ஒத்த கருத்துச் சொற்களாக பார்க்கிறாரோ என்று எண்ணத்தோன்றுகின்றது (δικαιοσύνη γὰρ ἀθάνατός ἐστιν.  திகாய்ஓசூனே கார் அதானாடொஸ் எஸ்டின்- நீதி சாகாமையாக இருக்கிறது).  

அதி.2: சாகாமையில் உலகை கடவுள் படைத்தார், இருப்பினும் சாவு மனிதர்களுடைய பாவத்தாலும், சாத்தானின் ஆதிக்கத்தாலும் உலகினுள் நுழைந்தது என்பதை காட்டுகிறார். வாழ்வைப் பற்றிய எதிர்மறையான சிந்தனைகள் நியாயமற்றவை என்பதை இந்த இரண்டாவது அதிகாரத்தில் காட்டுகிறார். வாழ்வு நிச்சயமில்லை என்று சொல்லி வாழ்வில் களியாட்டங்களை மட்டுமே முன்னிலைப் படுத்துவோரும் தவறிழைக்கின்றனர் என்பது இவரது போதனை. இவர்கள் நீதிமான்களை தங்களுக்கு எதிரிகளாக பார்த்து அவர்களை அழிப்பதை அறிவான செயல்களா செய்ய காத்திருக்கிறார்கள் என்று எச்சரிக்கை விடுகிறார்

.23: முதல் ஏற்பாட்டின் மிக முக்கிய படைப்பு மெய்யறிவு இங்கே காட்டப்படுகிறது. கடவுள் மனிதரை அழியாமைக்கு படைத்திருக்கிறார் (ἐπ᾿ ἀφθαρσίᾳ எப் அப்தார்சியா- அழியாமைக்கு). தம்முடைய சொந்த இயல்பின் சாயலில் அவர்களை பாடைத்திருக்கிறார் என்பதும் இந்த வரிக்கு மேலும் வலுச்சேர்க்கிறது (εἰκόνα τῆς ἰδίας ἀϊδιότητος ἐποίησεν αὐτόν· எய்கொனா டேஸ் இதியாஸ் அய்தியோடேடொஸ் எபொய்ஏசென் அவ்டொன்). 

.24: இறுதியாக, இப்படி அழியாமையில் படைக்கப்பட்ட மனிதருக்கு சாவு எப்படி வந்தது என்பதைக் காட்டுகிறார். அலகையின் பொறாமைதான் சாவை உலகில் கொண்டு வந்தது என்கிறார். அலகையை சார்ந்து நிற்போர் இறப்பது உறுதி என்பதையும் காட்டுகிறார் (διαβόλου θάνατος εἰσῆλθεν εἰς τὸν κόσμον, தியாபொலூ தானாடொஸ் எய்சேல்தென் எய்ஸ் டொன் கொஸ்மொன்- சாத்தான் சாவை உலகிற்கு கொண்டுவந்தான்). 


திருப்பாடல் 30
நன்றி செலுத்தல்
(புகழ்ப்பர் திருக்கோவில் அர்ப்பணப்பர் தாவீதுக்கு உரியது)
1ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்;
என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.
2என் கடவுளாகிய ஆண்டவரே, உம்மிடம் உதவி வேண்டினேன்; என்னை நீர் குணப்படுத்துவீர்.
3ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக்குழியில் இறங்கிய
எனது உயிரைக் காத்தீர்.
4இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள்.
5அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு.
6நான் வளமுடன் வாழந்தபோது, ‛என்னை ஒருபோதும் அசைக்க முடியாது' என்றேன்.
7ஆனால், ஆண்டவரே! உமது கருணையினால் மலையென உறுதியாக என்னை
நிலைநிற்கச் செய்தீர்; உம் முகத்தை மறைத்துக்கொண்டீர்; நான் நிலைகலங்கிப் போனேன்.
8ஆண்டவரே, உம்மைநோக்கி மன்றாடினேன்; என் தலைவரிடம் எனக்கு இரங்குமாறு வேண்டினேன்.
9நான் சாவதால், படுகுழிக்குப் போவதால், உமக்கு என்ன பயன்? புழுதியால் உம்மைப் புகழ முடியுமா? உமது வாக்குப் பிறழாமையை அறிவிக்க இயலுமா?
10ஆண்டவரே. எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.
11நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; என் சாக்குத் துணியைக் களைந்துவிட்டு
எனை மகிழ்ச்சியால் உடுத்தினீர்.
12ஆகவே என் உள்ளம் உம்மைப் புகழ்ந்து பாடும்; மௌனமாய் இராது;
என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்.

நன்றிப்பாடல்கள் அனேகமான வேளைகளில், செபங்களாக இருப்பதனைக் காணலாம் 
இதனை இந்த முப்பதாவது திருப்பாடலிலும் காணலாம். அத்தோடு நன்றிப்பாடல்களில் பழைய நிகழ்வுகளையும் நினைவூட்வதனையும் காணலாம். இறுதியாக, வேண்டுதல்கள் ஏற்கனவே நிறைவேறிவிட்டது எனவும், பாடலாசிரியர் தான் எக்காலமும் நன்றி செலுத்துவதாகவும் அமையும்
இந்தப் பாடல், தேவை-மீட்பு-நன்றி என்ற தோரணையில் அமைந்துள்ளதனைக் காணலாம்
தாவீதின் ஆலய அர்பணப் பாடல் என்று இத் திருப்பாடலின் தலைப்பு தொடங்குகிறது
இங்கு ஆலயம் என்பது (הַבַּיִת לְדָוִד ஹபாயித் லெதாவித்) தாவிதின் வீடு என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் இதனை அறிவது கடினமாய் இருக்கிறது. தாவிதின் காலத்தில் எருசலேம் ஆலயம் கட்டப்படவில்லை என்பதும் முக்கியமானது. சாலமோனின் ஆலயத்தை தாவிதின் ஆலயம் என்று சொல்வதும் அக்காலத்தில் வழக்கிலிருந்தது. சிலர் இந்த ஆலயத்தை சாலமோனின் முதல் ஆலயம், அல்லது யூதர்கள் பபிலோனிலிருந்து திரும்பி வந்து புதுப்பித்த இரண்டாவது ஆலயம், அல்லது கிரேக்கர்கள் இரண்டாவது ஆலயத்தை தீட்டுப்படித்தியபின் மக்கபேயரின் ஆலய தூய்மைப்படுத்தும் சடங்கிற்கான பாடல் எனவும் காண்கின்றனர். எவ்வாறெனினனும், இது ஒரு புகழ்சிப்பாடல் என்பது மட்டும் புலப்படுகிறது
מִזְמוֹר שִׁיר־חֲנֻכַּת הַבַּיִת לְדָוִד׃ மிட்ஸ்மோர் ஷிர்-ஹனூகாத் ஹபாயித் லெதாவித்- ஆலய அர்ப்பணிப்பு திருவிழா பாடல், தாவீதிற்குரியது

.1: ஆண்டவரை ஏந்திப் புகழ்வதாக வாக்களிக்கிறார் ஆசிரியர், அதற்கான காரணமாக, அவர் ஆண்டவர் தன்னை எதிரிகளின் மகிழ்வில் இருந்து பாதுகாத்தார் என்கிறார். לֹא־שִׂמַּחְתָּ אֹיְבַי לִֽי׃ லோ'- சிம்ஹதா 'ஓய்வாய் லி- என் எதிரிகள் என்னில் மகிழவிடவில்லை. எதிரிகள் கதாநாயகரின் தோல்வியில் மகிழ்வது, அவருக்கு தோல்வியை விட மிகுதியான சங்கடத்தைக் கொடுக்கும், அப்படியான ஒரு உணர்வைத்தான் தாவீதும் கொண்டுள்ளார் போல. எதிரிகள் யார் என்று ஆசிரியர் குறிப்பிடவில்லை. ஆசிரியர் தாவீதாக இருந்தால், எதிரிகள் வேற்று நாட்டு அரசர்களாக இருந்திருக்கலாம். பிலிஸ்தியர்கள் தாவீதின் நேரடியான எதிரிகளாக இருந்தார்கள்

.2: ஆண்டவர் குணப்படுத்துகிறார் என்பது முதல் ஏற்பாட்டின் நம்பிக்கையில் மிக முக்கியமானது. உடல் ரீதியான குணப்படுத்தலையும், உள ரீதியான குணப்படுத்தலையும், ஆசிரியர் மாறி மாறி குறிப்பிடுவதால், இந்த இடத்தில் என்ன குணப்படுத்தல், காட்டப்படுகிறது என்பது புரியவில்லை. תִּרְפָּאֵנִי திர்பா'எனி - என்னை குணப்படுத்தினார். ஆசிரியர் ஏதோ ஒரு பொல்லாத நோயால் பாதிக்கப்பட்டிருந்து குணமாகியது போல தோன்றுகிறது

.3: ஆண்டவர் தன்னை சாவிலிருந்து பாதுகாத்தார் என்கிறார். சாவைக் குறிக்க இரண்டு சொற்கள் பாவிக்கப்படுகின்றன: பாதாளம், சாவுக்குழி. ஆண்டவர் இவரை பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்கிறார் அத்தோடு சாவுக்குழியில் இறங்கிய இவரை ஆண்டவர் காக்கின்றார் (שְׁאוֹל ஷெ'ஓல், בוֹר போர்). இந்த வரியும் ஆசிரியர் ஏதோ ஒரு ஆபத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார் என்ற அனுபவத்தைக் கொடுக்கிறது எனலாம்

.4: இறையன்பர்களுக்கு கட்டளை கொடுக்கிறார் ஆசிரியர். இறையன்பர்களைக் குறிக்க (חָסִיד) ஹசித் என்ற சொல்லை பயன்படுத்துகிறார்
பிற்காலத்தில் சட்டஙக்ளை பின்பற்றியவர்கள், எசேனியர்கள், புனிதர்கள் போன்றவர்களுக்கு 
இந்த சொல் பாவிக்கப்பட்டது. ஆண்டவருடைய புனிதமான பெயரை நினைவுகூர்வது இந்த தூயவர்களின் முக்கியமான பணியாக கருதப்பட்டது. זַמְּרוּ לַיהוָה ட்சம்ரூ லஅதோனாய்- கடவுளை நினைவுகூருங்கள்

.5: ஆசிரியர் கடவுளின் சினத்தையும், இரக்கத்தையும் நன்கு அனுபத்திருக்கிறார் போல பாடுகிறார். ஆண்டவரின் சினத்தையும், இரக்கத்தையும் ஒப்பிடுகிறார். ஆண்டவருடைய சினம் ஒரு நொடிப்பொழுதுதான் இருக்கும் என்கிறார் (כִּי רֶגַע ׀ בְּאַפּוֹ֮ கி றெகா' பெ'அபோ- அவர் கோபம் ஒரு கணம்). ஆண்டவரின் சினம் ஒரு நொடிப்பொழுதுதான் என்பதை அவர் அடையாளமாகவே பாவிக்கிறார் எனலாம்
அதற்கு எதிராக ஆண்டவருடைய கருணையை வாழ்நாட்கள் முழுவதற்கும் ஒப்பிடுகிறார் 
(חַיִּ֪ים בִּרְצוֹנוֹ ஹய்யிம் பிர்ட்சோனோ- வாழ்நாட்கள் அவர் நன்மைத்தனம்). இந்த ஒப்பிடுதலைக் குறிக்க இன்னோர் உதாரணத்தை முன்வைக்கிறார். அதாவது மாலையின் ஆழுகை கடவுளின் தண்டனையைக் குறிக்க, காலையின் விடியல் ஆண்டவரின் ஆசீரைக் குறிக்கிறது

.6: தன்னுடைய பழைய வாழ்க்கையை ஆசிரியர் நினைத்துப் பார்க்கிறார். தான் வழமுடன் வாழ்ந்தபோது என்று இறந்த கால வினையில் பேசுகிறார் (אָמַ֣רְתִּי 'அமர்த்தி-நான் சொன்னேன்). தன்னை யாரும் அசைக்க முடியாது என்று சொன்னதை எதிர்மறையாக நினைவுகூர்கிறார் 
(בַּל־אֶמּוֹט לְעוֹלָם׃ பால்-'எமோத் லெ'ஓலாம்- எக்காலமும் அசையாது). 

.7: ஆண்டவர்தான் ஒருவரின் பலம் என்பதைக் காட்ட மலையை உருவகத்திற்கு எடுக்கிறார் ஆசிரியர். மலை இஸ்ராயேலருக்கு மிக நன்கு தெரிந்த உருவகம். மலை அசையாது நிற்பதாலும், நில நடுக்கத்திலும் அவை அசையாது இருப்பதாலும், மலை உயரமாக இருப்பதாலும் அதில் கடவுள் இருக்கிறார் என்று நம்பப்பட்டது. முதல் எற்பாட்டில் பல இடங்களில் ஆண்டவரின் காட்சி மலையில்தான் வெளிப்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக உறுதிக்கு உதாரணமாக மலை மாறுகிறது
ஆண்டவருடைய கருணையால் தான் மலைபோல உறுதியாக நின்றதாகச் சொல்கிறார் (לְהַרְרִ֫י עֹז லெஹர்ரி 'ஓட்ஸ்- உறுதியான மலைபோல). இதற்கு எதிர்மாறாக, கடவுள் தன் முகத்தை மறைத்தால் உடனே தான் நிலைகலங்கிப் போனதாகச் சொல்கிறார். ஆண்டவரின் முகத்தை யாரும் கடண்டதில்லை, இருந்தும் முகத்தை மறைத்தல் என்பது, ஆண்டவரின் கரிசனை இல்லாமல் போனதை குறிக்க பாவிக்கப்படும் உருவகம் (הִסְתַּרְתָּ פָנֶ֗יךָ ஹிஸ்தார்த்தா பானெகா- உம் முகத்தை மறைத்தீர்). 

.8: ஆண்டவரை தன் தலைவர் என விழிக்கிறார். இந்த சொல் விவிலியத்தில் ஆண்டவருக்கு பாவிக்கப்படும் பிரத்தியோகமான ஒரு சொல் (אֲדֹנָ֗י 'அதோனாய்-என் தலைவர்). இந்த பெயரைத்தான் விவிலிய ஆய்வாளர்கள் ஆரம்ப காலத்தில் கடவுளுடைய இயற்பெயருக்கு பதிலாக பாவித்தனர். ஆண்டவருடைய இயற்பெயர் அதிதூய்மையாக இருந்த படியால் (יְהוָה யாவே, யெஹோவா) அதனை உச்சரிக்க தயங்கி, அதோனாய் (என் தலைவர்) என்ற சொல்லை பயன்படுத்தினர். தனக்கு 
இரங்குமாறு ஆண்டவராகிய தலைவரிடம் கேட்கிறார் ஆசிரியர்.

.9: சாவு ஆண்டவருக்கு பயனற்றது என்பதை அழகாகக் காட்டுகிறார். சாவினால் மனிதர்கள் படுகுழிக்குள் செல்கிறார்கள் என இஸ்ராயேலர் கருதினர் (שָׁחַת ஷாஹத்-குழி). இங்கே மரணத்தை குறிக்க மூன்று விதமான சொற்கள் பாவிக்கப்பட்டுள்ளன

. இரத்தத்தை எடுத்தல் (דָּם தாம்): இரத்தத்தில்தான் உயிர் உள்ளதாக கருதப்பட்டது.
. படுகுழியினுள் செல்லல் (שָׁחַת ஷாஹத்): இது சீயோலைக் குறிக்கிறது
. தூசாக மாறுதல் (עָפָר 'ஆபார்): மனிதர் தூசினால் உருவாகினர், மரணத்தின் பின் தூசாக மாறினர் என நம்பப்படுகிறது
படுகுழியினுள் இருப்பவர்களும், தூசியாக போனவர்களாலும் கடவுளின் மாட்சிக்கு எதுவும் செய்ய முடியாது, எனவே இந்நிலையில் இவர்கள் இருப்பதனால், கடவுளுக்கு நன்மையில்லை என்பதைப் போல சொல்கிறார். உயிரோடு இருப்பவர்களால்தான் கடவுளின் வாக்குப் பிறழாமை தெரிவிக்கப்படுகிறது என்கிறார்

.10: எபிரேய திருப்பாடல்கள் எவ்வகையான பாடல்களாக இருந்தாலும், அவற்றில் வேண்டுதல் மிக முக்கியமான இடத்தை பிடிக்கும். இந்த பாடலிலும் வேண்டுதல் மிக முக்கியமான இடத்தை பிடிக்கிறது
ஆசிரியர் கடவுளை தனக்கு செவிசாய்க்கவும் (שְׁמַע ஷெமா'- கேளும்), இரங்கவும் (חָנֵּנִי ஹான்னேனி), துணையாக இருக்கவும் (הֱיֵה־עֹזֵר ஹெயெஹ்-'ஓட்செர்- உதவியாக இரும்) கேடக்கிறார். இந்த மூன்று வினை சொற்களும் ஒத்த கருத்தில் பாவிக்கப்படுகின்றன

.11: புலம்பலை கடவுள் களிநடனமாக மாற்றிவிட்டார் என்கிறார் ஆசிரியர், இதனை மேலும் சொல்ல சாக்குடைக்கு பதிலாக மகிழ்ச்சியை உடுத்தினார் என்றும் சொல்கிறார்
புலம்பல் துன்பத்தைக் குறித்தது. இந்த புலம்பலில் பலவகையான செயற்பாடுகள் காணப்பட்டன. புலம்பல்கள் பாடல்களாகவும் இருந்திருக்கின்றன. சாக்குடை தரித்தலும் புலப்பலைக் காட்ட பயன்பட்டது. தாவீது தன்னுடைய முதல் மகனின் இறப்பிற்கு முதல் இந்த சாக்குடையைத்தான் தரித்து செபித்தார் என விவிலியம் காட்டுகின்றது (מִסְפֵּד மிஸ்பெத்- புலம்பல்: שַׂק சாக்- சாக்கு). 
மகிழ்ச்சியை ஆடையாக காட்டுவது விவிலியத்திற்கே உரிய தனித்துவமான அடையாளம். மகிழ்ச்சி இங்கே ஆடையாக வர்ணிக்ப்படுவது, ஒருவகையான சிறப்பு ஆடையைக் குறிக்கலாம் என்றும் வாதிடப்படுகிறது (וַתְּאַזְּרֵנִי שִׂמְחָה வாத்தெ'அட்ஸ்ரெனி சிம்ஹாஹ்- மகிழ்வை ஆடையாக உடுத்தினீர்). 

.12: இதனால் தன் உள்ளம் அமைதியாக இராமல், நன்றிசொல்லி புகழ்ந்துபாடும் என்கிறார்
உள்ளத்தைக் குறிக்க (כָבוֹד) காவோத் என்ற சொல் பாவிக்கப்படுகின்றது. இந்த சொல்ல 'மாட்சியை' குறிக்கிறது. ஏன் இந்த சொல் பாவிக்கப்பட்டடுள்ளது என தெரியவில்லை. சிலர் இதனை כְּבֵדִי (கெவெதி) என காண்கின்றனர். அதாவது 'என் ஈரல்' என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. ஈரல் ஒருவருடைய உணர்வுகளின் உறைவிடமாக கருதப்பட்டது. ஆகவே இந்தச் சொல் இங்கே பொருத்தமாக இருந்திருக்கலாம். ஆரமப் கால விவிலியம் மெய்யெழுத்துக்களால் மட்டுமே எழுதப்பட்டதால், இப்படியான பல சிக்கல்கள் இன்றும் காணக்கிடக்கின்றன



2கொரிந்தியர் 8,7-15
7நம்பிக்கை, நாவன்மை, அறிவு, பேரார்வம் ஆகிய அனைத்தையும் மிகுதியாய்க் கொண்டிருக்கிறீர்கள். எங்கள் மேல் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பெருகிக்கொண்டு வருகிறது. அதுபோல் இந்த அறப்பணியிலும் நீங்கள் முழுமையாய் ஈடுபட வேண்டும்.
8நான் இதை உங்களுக்கு ஒரு கட்டளையாகச் சொல்லவில்லை. மாறாக, பிறருடைய ஆர்வத்தை எடுத்துக் காட்டி உங்கள் அன்பு உண்மையானதா எனச் சோதிக்கவே இவ்வாறு செய்கிறேன். 9நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அருள்செயலை அறிந்திருக்கிறீர்களே! அவர் செல்வராயிருந்தும் உங்களுக்காக ஏழையானார். அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு இவ்வாறு செய்தார். 10இவ்வறப்பணியைப் பொறுத்தவரை என் கருத்து இதுவே; இது உங்களுக்குப் பயனளிக்கும். கடந்த ஆண்டிலிருந்தே நீங்கள் இப்பணியைச் செய்து வருகிறீர்கள்; அது மட்டுமல்ல் இதனை விருப்பத்தோடு தொடங்கியவர்களும் நீங்களே. 11அப்பணியை இப்போதே செய்து முடியுங்கள். ஆர்வத்தோடு தொடங்கியது போலவே உங்கள் நிலைக்கு ஏற்றவாறு கொடுத்து, ஆர்வத்தோடு அதனைச் செய்து முடியுங்கள். 12ஆர்வத்தோடு கொடுத்தால், தம் நிலைக்கேற்றவாறு எவ்வளவு கொடுத்தாலும் அது இறைவனுக்கு ஏற்புடையதாகும். தம்மிடம் இருப்பதற்குக் கூடுதலாக யாரும் கொடுக்க வேண்டியதில்லை. 13மற்றவர்களின் சுமையைத் தணிப்பதற்காக நீங்கள் துன்புற வேண்டும் என்று நாங்கள் சொல்லவில்லை. மாறாக, எல்லாரும் சமநிலையில் இருக்க வேண்டும் என்றே சொல்கிறோம். 14இப்பொழுது உங்களிடம் மிகுதியாயிருக்கிறது; அவர்களுடைய குறையை நீக்குங்கள். அவ்வாறே அவர்களிடம் மிகுதியாக இருக்கும் போது உங்கள் குறையை நீக்குவார்கள். இவ்வாறு உங்களிடையே சமநிலை ஏற்படும். 15'மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை; குறைவாகச் சேகரித்தவருக்கும் எதுவும் குறைவுபடவில்லை' என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ!

2கொரிந்தியர் 8ம் அதிகாரம் யூதேயாவிலுள்ள ஏழை கிறிஸ்தவர்களின் நிலையை எடுத்துரைப்பதாகவும், அவர்களுக்கு நன்கொடை திரட்டுவதாகவும் உள்ளது. இந்த அதிகாரத்தின் ஆரம்ப வரிகளில் மசிதோனிய திருச்சபையின் நிலையை விளக்குகிறார் பவுல். மசிதோனிய திருச்சபை ஏழைகளுக்கு நன்கொடை கொடுப்பதில் ஆர்வமாய் இருக்கிறார்கள் என காட்டுகிறார் பவுல். இந்த பணியோடு தீத்துவிற்கு நல்ல தொடர்பு இருக்கிறது என்பதையும் பவுல் எழுதுகிறார். இதன் தொடர்ச்சியாக பவுல் கொரிந்திய திருச்சபையையும் ஏழைகளுக்க உதவி செய்யச் சொல்லி கேட்கிறார்.

.7: கொரிந்தியரிடம் நம்பிக்கை (πίστις பிஸ்டிஸ்), நாவன்மை (λόγος லொகொஸ்), அறிவு (γνῶσις கினோசிஸ்), பேரார்வம் (πάσῃ σπουδῇ பாசே ஸ்பூதே), அனைத்தும் மிகுதியாக கிடைக்கின்றன என்கிறார். அதேவேளை தங்கள்மேல் கொரிந்தியருக்கான அன்பும் பெருகிக்கொண்டே வருகின்றது என்கிறார் (ἀγάπῃ ஆகாபே-அன்பு). இந்த பண்புகளை மிக உயர்ந்த கிறிஸ்தவ பண்புகள் என அடையாளம் காண்கிறார் பவுல்.
இதனை விளக்கிய பவுல், இப்போது அறப்பணியிலும் அவர்கள் முழுமையாக ஈடுபடவேண்டும் என விரும்புகிறார். கிறிஸ்தவர்களின் பணியாளர்கள் மீதான அன்பும், தனிப்பட்ட விழுமியங்களும் போதுமானது அல்ல, மாறாக அவர்கள் ஏனைய கிறிஸ்தவர்களின் அன்பும் கொண்டிருக்க வேண்டும் என்கிறார்

.8: இதனை அவர் கட்டளை என்று சொல்லாமல், ஏனையவர்களுடன் ஒப்பிட்டு நோக்குகிறார். அதாவது மசிதோனியரின் அன்பு இப்படியாக இருக்கின்ற படியால் கொரிந்தியரின் அன்பு எப்படிப் பட்டது என காட்டவே அவர் சொல்கிறார். இதனை அவர் ஒரு சோதனை என்கிறார் (δοκιμάζων தொகிமாட்ஸ்சோன்-சோதனை செய்தல்)

.9: பகிர்தல் மற்றும் ஈகைக்கு, பவுல் இயேசுவை உதாரணமாக எடுக்கிறார். இதனை அவர் 
இயேசுவின் அருட் செயல் என சொல்கிறார் (χάριν τοῦ κυρίου காரின் டூ கூரியூ- கிறிஸ்தவின் அருட் செயல்). இயேசு செல்வராய் இருந்தும் ஏழையானார் என்கிறார், இங்கே இயேசுவின் செல்வம் அவரது இறையியல்பைக் காட்ட, அவரது ஏழ்மை அவரது மனிதத்தைக் காட்டுகிறது (ὑμᾶς ἐπτώχευσεν πλούσιος ὤν ஹுமாஸ் எப்டோகெயூசென் புளுசியோஸ் ஓன்- ஏழையானார், செல்வராய் இருந்தும்). 
அவருடைய ஏழ்மையினால், மக்கள் செல்வராகும்படி இப்படிச் செய்தார் என்பது பவுலுடைய அழகான வாதம். ஆண்டவருடைய மனிதம் ஏற்பினால், மனிதர்கள் இயேசுவுடைய இறைமையில் பங்கேற்க வாய்ப்பினை பெற்றுக்கொள்கிறார்கள்

.10: இயேசுவின் ஈகையை வர்ணித்த பவுல், கொரிந்தியரின் நன்னடத்தைக்கு வருகிறார். அறப்பணியை பொறுத்தவரை தன்னுடைய சொந்த கருத்திற்குதான் பவுல் முக்கியத்துவம் கொடுக்கிறார்
அறப்பணியை கொரிந்தியர்கள் கடந்த வருடத்தில் இருந்து செய்கிறார்கள் என்று பவுல் அடையாளம் காட்டுகிறார், ஆக இந்த பணி முதலில் கொரிந்தியரிடமிருந்துதான் தொடங்கியிருக்க வேண்டும். அத்தோடு இந்த பணியை அவர்கள் விருப்பத்தோடு தொடங்கினார்கள் எனவும் சொல்லப்படுகிறது

.11: தொடங்கிய பணியை அதே ஆர்வத்தோடு செய்து முடிக்கக் கேட்கிறார். ஒருவேளை கொரிந்தியருடைய ஈகைப் பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கலாம், அல்லது சிலர் அதற்கு முட்டுக் கட்டை போட்டிருக்கலாம். அதற்கு எதிராக அல்லது அந்த தொய்வை சீர்திருத்த பவுல் இந்த வரிகளை எழுதியிருக்கலாம். νυνὶ δὲ καὶ τὸ ποιῆσαι ἐπιτελέσατε நுனி தெ காய் டொ பொய்யேசாய் எபிடெலெசாடெ- இப்போது அதனை செய்து முடியுங்கள்.

.12: ஆர்வத்தோடு கொடுத்தல் பல மாற்றங்களை கொண்டுவருகிறது என்கிறார். ஒருவர் தங்கள் நிலைக்கு ஏற்றவாறு கொடுத்தல் போதுமானது எனவும், அது கடவுளுக்கு ஏற்புடையது எனவும் (εὐπρόσδεκτος எவ்புரொஸ்தெக்டொஸ்-ஏற்புடையது), தன்னிடம் இருப்பதற்கு மேலாக கொடுக்க வேண்டிய தேவையில்லை எனவும் பவுல் மேலும் காட்டுகிறார்.  

.13: இந்த அதிகாரத்தின் மிக முக்கியமான வரி. மற்றவர்களின் சுமையை இறக்க ஒருவர் தேவையில்லாத சுமையை சுமக்க வேண்டியதில்லை ஈகை, என்கிறார் பவுல். கிறிஸ்தவம் வறுமையை போதிக்கவில்லை. கொடுப்பதன் மூலம் ஒருவர் தானாக வறுமையை தேடவேண்டிய தேவையும் இல்லை என்கிறார் பவுல். கொடுப்பதன் வாயிலாக அனைவரும் தங்கள் தங்கள் சுமைகளைக தாங்களே சுமக்கக்கூடடிய சமநிலை உருவாகும் என்கிறது
ஆரம்ப கால மார்க்சிய வாதிகள் அதிகமான சமநிலை பொருளாதார சிந்தனைகளை புதிய ஏற்பாட்டின் போதனைகளிலிருந்தே பெற்றுக்கொண்டார்கள். அதற்கு இந்த வரியும் நல்லதோர் உதாரணம். இந்த சமநிலையை காட்ட கிரேக்க விவிலியம் ἰσότης (இசொடேஸ்) என்ற சொல்லை பயன்படுத்துகிறது

.14: வாழ்வில் வறுமையும் செல்வமும் மாறி மாறி வரும் எனவும், இப்போது உதவி செய்கிறவர்கள் எதிர்காலத்தில் நிச்சயமாக உதவி பெறுவார்கள் என்று அழகாக 
இறைவாக்குரைக்கிறார்
எருசலேம் திருச்சபையை விட கொரிந்து திருச்சபை செல்வத்தில் உறுதியாக இருந்திருக்க வேண்டும். இதனால்தான், கொரிந்து திருச்சபையை இப்போது உதவி செய்யக் கேட்கிறார். அதேவேளை காலத்தில் கொரிந்து திருச்சபையும் வறுமையை சந்திக்கும் அப்போது மற்றவர்கள் உதவி செய்வார்கள் என்கிறார். இந்த அறிவுரை இன்று பல திருச்சபைகளுக்கு சரியாகவே பொருந்தும்
சமநிலையை பேணுதல் தளத்திருச்சபைகளிடையே முக்கியமான சகோதர கரிசனையாக இருக்க வேண்டும் என்பதை புனித பவுல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டிருக்கிறார் என்பது சரியாக தெரிகிறது

.15: இந்த சிந்தனைக்கு சார்பாக பவுல் இறைவார்த்தை ஒன்றையும் பிரயோகிக்கிறார்
இந்த இறைவார்த்தை விடுதலைப் பயணநூல் 16,18 இலிருந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும் (ஆனால் இரண்டு படி அளவீட்டில் அதனை அளந்து பார்த்தபோது மிகுதியாகச் சேகரித்தவருக்கு எதுவும் மிஞ்சவில்லை; குறைவாகச் சேகரித்தவருக்கும் எதுவும் குறைவுபடவில்லை. ஒவ்வொருவரும் தாம் உண்ணும் அளவுக்கே சேகரித்திருந்தனர்). இது இஸ்ராயேலர் பாலைவனத்தில் மன்னா உணவை சேகரித்தபோது ஏற்பட்ட நிகழ்வைக் காட்டுகிறது
மிகுதியாக சேகரித்தலும், அதாவது வளமையும், குறைவாக சேகரித்தலும், அதவாது வறுமையும் கடவுளுடைய பார்வையில் வித்தியாசமாக இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. பவுல் விவிலிய அறிவில் மிகவும் புலமையுடையவராக இருந்தார். முதல் ஏற்பாட்டு 
இறைவார்த்தையை அதன் சூழலமைவுகளையும் தாண்டி, வேறு சிந்தனைக்கு பாவிப்பதில் கைதேர்ந்தவராக இருந்தார் என்பதற்கு இதுவும் ஓரு நல்ல உதாரணம்
ὁ τὸ πολὺ οὐκ ἐπλεόνασεν, ஹொ டொ பொலூ ஊக் எப்லெயொனாசென், அதிகம் உள்ளவருக்கு மிக அதிகம் இல்லை
καὶ ὁ τὸ ὀλίγον οὐκ ἠλαττόνησεν. காய் ஹொ டொ ஒலிகொன் ஊக் ஏலாட்டொன்னேசென், குறைவாக உள்ளவர்க்கு மிகக் குறைவும் இல்லை.

மாற்கு 5,21-43
இரத்தப் போக்குடைய பெண் நலம் பெறுதலும், சிறுமி உயிர்பெற்றெழுதலும்
(மத் 9:18-26 லூக் 8:40-56)

21இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். 22தொழுகைக் கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, 23'என் மகள் சாகுந்தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக்கொள்வாள்' என்று அவரை வருந்தி வேண்டினார்.
24இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக் கொண்டே பின்தொடர்ந்தனர். 25அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். 26அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வர வர மிகவும் கேடுற்றது. 27அவர் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டு மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையைத் தொட்டார். 28ஏனெனில், 'நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்' என்று அப்பெண் எண்ணிக் கொண்டார். 29தொட்ட உடனே அவருடைய இரத்தப் போக்கு நின்று போயிற்று. அவரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார். 30உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, 'என் மேலுடையைத் தொட்டவர் யார்?' என்று கேட்டார். 31அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், 'இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், 'என்னைத் தொட்டவர் யார்?' என்கிறீரே!' என்றார்கள். 32ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார். 33அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார். 34இயேசு அவரிடம், 'மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு' என்றார்.
35அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலிருந்து ஆள்கள் வந்து, அவரிடம், 'உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?' என்றார்கள். 36அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், 'அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்' என்று கூறினார். 37அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை. 38அவர்கள் தொழுகைக் கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓலமிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். 39அவர் உள்ளே சென்று, 'ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்' என்றார். 40அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றியபின், சிறுமியின் தந்தையையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக் கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். 41சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், 'தலித்தா கூம்' என்றார். அதற்கு, 'சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு' என்பது பொருள். 42உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள். 43'இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது' என்று அவர் அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.

இயேசு இரத்தபோக்குடைய பெண்மணியை குணப்படுத்தலும், யாயீரின் மகளை உயிர்ப்பித்தலுமான நிகழ்வுகள் மூன்று நற்செய்திகளிலும் காணப்படுகின்றன. விவிலிய ஆய்வாளர்களின் கருத்துப்படி, மாற்குதான் இந்த நிகழ்வுகளை எடுத்தியம்புவதில் முன்னோடியாக அல்லது மூலமாக இருந்திருக்க வேண்டும். இயேசுவின் குணப்படுத்தல் நிகழ்வும், மரணித்தவர்களை உயிர்ப்பிக்கும் நிகழ்வும் இயேசுவுடைய வல்லமையைக் காட்டுகின்றன. இயேசுவிற்கு மரணத்தின் மீது ஆதிக்கம் இருந்தது என்பதைக் காட்டவே இந்த நிகழ்வுகள் முயற்சிக்கின்றன

.21: இந்த பகுதியில் குறிப்பிடப்படும் கடல் கெனசரேத் அல்லது கலிலேயக் கடற்கரையைக் குறிக்கிறது. இயேசுவின் அதிகமான பணிகள் இந்த பகுதியை அண்டியதாகவே இருந்திருக்கிறது
இயேசுவை சந்திக்க இரண்டு கரைகளிலும் மக்கள் கூடுகிறார்கள் என்பது அவருடைய புகழ் இந்த பகுதியில் உச்சத்தில் இருந்தது என்பதைக் காட்டுகிறது

.22: தொழுகைக் கூடத் தலைவர் யாயீர் (ἀρχισυναγώγων,  ὀνόματι Ἰάϊρος, அர்கிசுனாகோகோன், ஒனொமாடி ஈயாய்ரொஸ்). செபக்கூடத் தலைவர்கள், குருக்களாக இருந்திருக்க வேண்டிய தேவையில்லை. அவர்கள் சாதாரண மக்கள் கூட்டத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும், அரசியல் செல்வாக்குள்ளவர்களாக இருந்திருக்கலாம்
செபக்கூடங்கள் பபிலோனிய இடப்பெயர்வு காலத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டும். எங்கு இந்த செபக்கூடங்கள் முதலில் உருவாகின என்பது தெளிவாக இல்லை. பத்து ஆண்கள் இருந்தாலே ஒரு நகரில் செபக்கூடம் அமைக்கலாம் என்ற வாய்ப்பு இருந்திருக்கிறது
இந்த செபக்கூடத்தில் இறைவார்த்தை வாசிக்கப்பட்டு ஆராயப்பட்டது. திருச்சட்டங்களை ஆராயவும் இந்த செபக்கூடங்கள் நல்ல வாய்ப்பை கொடுத்தன
செபக்கூடத் தலைவர் யாயீரின் மகள் 12வயதான சிறுமியாக இருந்திருக்க வேண்டும். மத்தேயு இவருக்கு பெயர் கொடுக்கவில்லை. மாற்குவின் சில படிவங்களும் இவருக்கு பெயர் கொடுக்கவில்லை. லூக்காதான் முதலில் இவருக்கு யாயீர் என்ற பெயரைக் கொடுக்கிறார். இந்த பெயருக்கு பின்னால், 'அவர் எழும்புவார்' என்ற அர்த்தம் உள்ளதாகவும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்
சாதாரணமாக நல்ல நிலையில் இருக்கும் செபக்கூட தலைவர்கள் யாருடைய காலிலும் விழ மாட்டார்கள், இவர் இயேசுவின் காலில் விழுவதன் மூலம் இயேசுவில் இவர் பூரண நம்பிக்கை வைத்திருந்தார் என்பதும் மகளுக்காக எதையும் செய்வார் என்பதும் புலப்படுகிறது. அத்தோடு 
இயேசுவின் அதிகாரம் செபக்கூடத்தையும் தாண்டியது என்பதும் புரிகிறது

.23: யாயீர் தன் விசுவாசத்தை அறிக்கையிடுகிறார். தன் மகள் சாகும் தருவாயில் இருக்கிறார் என்பதை அவர் ஏற்றுக்கொண்டாலும், இயேசுவால் அவரை குணப்படுத்த முடியும் என நம்புகிறார்: ἵνα ἐλθὼν ἐπιθῇς τὰς χεῖρας αὐτῇ ἵνα σωθῇ καὶ ζήσῃ. ஹினா எல்தோன் எபிதேஸ் டாஸ் கைராஸ் அவ்டே ஹினா சோதே காய் ட்சேசே- நீர் வந்து கைவத்தால் அவள் உயிர் பெறுவாள்
செபக்கூடத் தலைவர்கள் இறைவாக்குகளில் மிகுந்த அறிவுடையவர்கள். மரணத்தை கடவுளால் மட்டுமே மாற்ற முடியும் என்பது இவருக்கு நன்கு தெரியும். ஆக இயேசுவால் மரணத்தை தடுக்க முடியும் என்று இவர் சொல்வதன் மூலம், இயேசுவை இவர் கடவுளாக ஏற்றுவிட்டார் என்பது தெரிகிறது

.24: இயேசுவும் எந்த எதிர்ப்பும் இல்லாமல் அவர் பின்னால் செல்கிறார். இதன் மூலம் இயேசு யூத தலைமைத்துவத்தை காரணமின்றி எதிர்க்கவில்லை என்பதும், அவருக்கு அனைவரும் சமனாகவே 
இருந்தார்கள் என்பதும் புலப்படுகிறது
இயேசு யாயீரை பின்பற்றி அவர் வீடு செல்ல, பெரும் திரளான மக்கள் கூட்டம் இயேசுவை பின்பற்றுகிறது. இந்த கதையில் யாயீர் மக்களை இயேசுவிடம் கொண்டுவரும் முக்கிய பங்கினை பெறுகிறார் எனலாம்

வவ.25-34: இந்த பகுதியினுள் மாற்கு இன்னொரு புதுமையை புகுத்துகிறார். யாயீர் மறைந்து போக இரத்த போக்குடைய பெண் அவர் இடத்தை எடுக்கிறார்

.25: பன்னிரண்டு ஆண்டுகளாக இரத்தபோக்குடைய பெண்ணை அறிமுகம் செய்கிறார் மாற்கு. αἵματος δώδεκα ἔτη அய்மாடொஸ் தோதெகா ஏடே- பன்னிரண்டு ஆண்டுகள் இரத்தபோக்குடையவர். 
இரத்த போக்கு நோய் அக்காலத்தில மரணத்தை எற்படுத்தக்கூடிய நோயாக கருதப்பட்டது. பெண்களின் பிறப்புறுப்பில் ஏற்படும் இந்த இரத்தபோக்கு, சாதாரணமாக அவர்களின் மாதவிடாயோடு சம்பந்தப்பட்டது. இந்த நோய் பெண்களுக்கு உடல் வியாதியையும், உள வியாதியையும் கொடுத்தது. ஆண்-ஆதிக்கமும், நோய்களைப் பற்றி பல பிழையான வாதங்களுக் காணப்பட்ட அக்காலத்தில், இது மேலதிகமான துன்பத்தை பெண்களுக்கு கொடுத்தது. மாதவிடாய் காலத்தில் லேவியர் சட்டப்படி ஏழு நாட்களுக்கு பெண்கள் தூய்மையற்றவர்களாக கருதப்பட்டார்கள் (காண்க லேவியர் 15,19-24). இந்த காலத்தில் இப்பெண்களை தொடும் ஆண்களும் பெண்களும் தீட்டுள்ளவர்களாக கருதப்படுவார்கள் (லேவியர் 18,19: 20,18). தொடர்ச்சியாக இரத்தப் போக்கு உடைய பெண்களும், இரத்த போக்கு நிறைவடையும் வரையும், அது நின்ற பின்னரும் ஏழு நாட்களுக்கு அவர்கள் தீட்டுள்ளவர்களாக கருதப்பட்டார்கள்
இயேசு பெண்களை அதிகமாக மரியாதை செய்து அன்பு செய்தவர் என்ற காரணத்தால் 
இதனை அவர் நன்கு அறிந்திருப்பார்.

.26: மாற்கு இந்த பெண்ணின் நிலையை வாசகர்களுக்கு தெரியப்படுத்துகிறார். இவர் இந்த நோயை தீர்க்க மருத்துவர்கள் பலரிடம் தன் சொத்துக்களை இழந்தும், இவரின் நிலை மிக மோசமாகவே மாறியிருக்கிறது
இப்படியான நோயை சந்திக்கிறவர்கள் தங்கள் உடமைகள் அனைத்தையும் விற்றாவது குணமடைய விரும்புவார்கள். இதனைத்தான் இவரும் செய்திருக்கிறார், அத்தோடு இவருடைய மருத்துவர்களினால் எந்த பயனும் இல்லை என்பதும் புலப்படுகிறது

.27: இவர் இயேசுவைப் பற்றி கேள்விப்படுகிறார், அந்த செய்தி அவரை இயேசுவின் மேலுடையை தொடவைக்கிறது (ἥψατο τοῦ ἱματίου αὐτοῦ· ஹேப்ஸ்சாடொ டூ ஹிமாடியூ அவ்டூ- பின்னால் வந்து அவர் ஆடையைத் தொட்டார்.). தன் நிலையைக் கருத்தில் கொண்டு இவரால் ஆண்கள் கூட்டத்திற்க்குள் வரமுடியாது, இயேசுவிற்கு முன்னாலும் வரமுடியாது. ஆகவே பின்னால் வருகிறார். ஆடையை தொடுவதன் மூலம், இவர் இயேசுவையும் தீட்டுப்படுத்தலாம் என்பது லேவியர் சட்டம். இதன் படி இவர் தண்டிக்கவும் படலாம், அல்லது மரண தண்டனையும் பெறலாம். அனைத்தையும் அறிந்தும் அவர் இயேசுவை தொடுகிறார், ஆக இவர் இயேசுவை நன்கு அறிந்திருக்கிறார் என எடுக்கலாம் (ἀκούσασα  περὶ τοῦ Ἰησοῦ ஆகூசாசா பெரி டூ ஈயேசூ- இயேசுவைப் பற்றி கேள்விப்பட்டு). 

.28: அவருடைய விசுவாசத்தை மாற்கு வெளிப்படுத்துகிறார்: (ἐὰν ἅψωμαι κἂν τῶν ἱματίων αὐτοῦ σωθήσομαι. இயான் ஹப்ஸ்சோமாய் கான் டோன் ஹிமாடியோன் அவ்டூ சோதேசொமாய்- அவர் ஆடையை தொட்டால் நலம் பெறுவேன்)
இவர் இயேசுவிடம் வேறெதையும் எதிர்பார்க்கவில்லை என்பது தெரிகிறது

.29: அவர் நினைத்தது நடக்கிறது. καὶ εὐθὺς ἐξηράνθη ἡ πηγὴ τοῦ αἵματος αὐτῆς காய் எவ்துஸ் எக்ஸ்தேரான்தே ஹே பேகே டூ ஹய்மாடொஸ் அவ்டேஸ்- உடனடியாக அவருடைய இரத்தப்போக்கு காய்ந்தது. καὶ ἔγνω τῷ σώματι ὅτι ἴαται ἀπὸ τῆς μάστιγος. காய் என்னோஓ டோ சோமாடி ஹொடி இமாடாய் அபொ டேஸ் மாஸ்டிகொஸ்- அத்தோடு உடலில் மாற்றம் எற்பட்டு அது குணமானதை அவர் உணர்ந்தார்
இந்த வரி மூலம் அந்த பெண்ணின் குணமாகல் உண்மையாகவே நடந்தது என்பதையும், அது ஒரு தனிப்பட்ட உணர்வல்ல என்பதையும் மாற்கு காட்டுகிறார்

.30: இயேசுவும் என்ன நடக்கிறது என்பதை அறிந்திருக்கிறார். இயேசுவிற்கு தன்னுடைய வல்லமைமேல் பூரண அதிகாரம் இருக்கிறது என்பதை மாற்கு காட்டுகிறார். அதாவது தன் விருப்பம் இல்லாமல் எதுவும் நடக்காது என்பதை இயேசு காட்டுகிறார்
தன் வல்லமை வெளியேறியதை இயேசு உணர்கிறார் (ἐξ αὐτοῦ δύναμιν ἐξελθοῦσαν எக்ஸ் அவ்டூ துனாமின் எக்ஸ்செல்தூசான்- அவரிலிருந்து வல்லமை வெளியேறியது). தன்னை யாரோ தொட்டார்கள் என்பதையும் இயேசு அறிந்து கேள்வி கேட்கிறார்: τίς μου ἥψατο τῶν ἱματίων; டிஸ் மூ ஹேப்ஸ்சாடொ டோன் ஹிமாடியோன் என் ஆடையைத் தொட்டது யார்?
இயேசுவின் இந்த கேள்வி, அவரை வல்லமையுள்ளவராகவும், தன்னை மீறி யாரும் தன்னை தொட முடியாது என்பதை காட்டுவதாகவும் உள்ளது. அவர் கூட்டத்தில் ஒருவர் அல்ல என்பது புலப்படுகிறது

.31: இயேசுவின் கேள்வி சீடர்களுக்கு விசித்திரமாக உள்ளது. கூட்டம் இடிபடும், அதில் ஒருவர் இன்னொருவரை முட்டுவது வழக்கம். அதிலும் ஆடைகளில் தொடுகை அதிகமாகவே 
இருக்கும். இப்படியிருக்க இவர், யார் தொட்டது? என்று கேட்பது இவர்களுக்கு வியப்பாக 
இருக்கிறது. சீடர்களின் இந்த கேள்வி மூலம், இயேசுவிற்கும் சீடர்களும் அதிகமான வித்தியாசம் உள்ளது என்பதை மாற்கு அழகாகக் காட்டுகிறார்
சீடர்களுக்கு இது சாதாரண தொடுகை, இயேசுவிற்கு இது வல்லமை பொருந்திய தொடுகை

.32: இயேசு அவர்களின் சமாதானத்தை கேட்பதாக இல்லை. அவருடைய பார்வை யாரையோ தேடுகிறது: καὶ περιεβλέπετο ἰδεῖν காய் பெரிப்லெபெடொ இதெய்ன்- அவர் அறிந்துகொள்ள பார்த்துக்கொண்டிருந்தார்
இயேசு வேறு எதையோ தெரிந்துகொள்ள முயல்கிறார்

.33: சீடர்களின் கருத்து தவறு, ஆண்டவரின் கருத்து சரியென காட்டப்படுகிறது. இயேசுவை தொட்ட பெண் சமர்ப்பணம் ஆகிறார். இவர் அஞ்சுகிறார் (φοβηθεῖσα பொபேதெய்சா), நடுங்குகிறார் (τρέμουσα திரெமூசா), அவர் முன் விழுகிறார் (προσέπεσεν புரொசெபெசென்) அனைத்தையும் சொல்லிவிடுகிறார். εἶπεν αὐτῷ πᾶσαν τὴν  ἀλήθειαν. எய்பென் அவ்டூ பாசான் டேன் அலெதெய்யான்- உண்மை அனைத்தையும் சொன்னார்
இவருடைய பயத்திற்கு காரணம் இருக்கிறது. லேவியர் சட்டப்படி இவர் தண்டிக்கப்பட வேண்டியவர், அத்தோடு இவர் இயேசுவையும் தீட்டாக்கிவிட்டார். இதனால் இயற்கையாகவே பயம் இவரை ஆட்கொள்கிறது எனலாம்

.34: இயேசு பழைய அல்லது காலாவதியான சட்டத்திற்கு உட்பட்டவர் அல்லர், அவர் சட்டத்தின் ஆண்டவர் என காட்டுகிறார் மாற்கு. இயேசுவின வார்த்தைகள் கவனிக்கப்பட வேண்டியவை. இயேசு இவரை 'மகளே' என அழைக்கிறார், அவருடைய நம்பிக்கைதான் அவரை குணமாக்கிற்று என்கிறார்: θυγάτηρ ἡ πίστις σου σέσωκέν σε·  தூகாடேர், ஹே பிஸ்டிஸ் சூ செசோகென் செ- மகளே உம் விசுவாசம் உம்மை குணமாக்கிற்று. சாதராண நோயாளி பெண்ணாக இருந்தவர், ஆண்டவர் பார்வையில் மகளாகிறார். இதற்காகத்தான் அவர் காத்திருந்தார் போல
அமைதியுடன் செல்லச் சொல்கிறார்: ὕπαγε εἰς εἰρήνην ஹுபாகெ எய்ஸ் எய்ரேனேன்- அமைதியில் செல். இந்த உடல் உபாதை இனியும் இவர் அமைதியை கெடுக்க முடியாது, அல்லது மனிதர்களின் சட்டமும் இனி இவரை துன்பப்படுத்த முடியாது என்கிறார்
நோய் நீங்கி நலமாக இருக்கச் செய்கிறார்: ἴσθι ὑγιὴς ἀπὸ τῆς μάστιγός σου. இஸ்தி ஹுகியேஸ் அபொ டேஸ் மாஸ்டிகொஸ்- நோய் நீங்கி இருக்கப்பெறுக. மனிதர்கள் நேய் நீங்கி நலமாக இருத்தல்தான் கடவுளின் விருப்பம் என்பது காட்டப்படுகிறது. இயேசு தேவையற்ற சட்டத்தை நீக்கி ஆசீர்வாதம் கொடுத்து விடுதலையும் கொடுக்கிறார்

வவ.35-43: இந்த பகுதியில் யாயீரின் மகளுக்கு நடந்தது விவரிக்கப்படுகிறது. இந்த பகுதியை விவரிப்பதன் மூலம், மாற்கு தெரிந்துதான் இந்த பகுதிகளை தொகுத்திருக்கிறார் என்பது புலப்படுகிறது

.35: யாயீரின் வீட்டிலிருந்து ஆட்கள் வந்து, சிறுமி இறந்துவிட்டார் என்பதையும் சொல்லி, போதகரை தொந்தரவு செய்யவேண்டாம் என்று ஆலோசனையும் சொல்கிறார்கள்.
இந்த ஆட்கள் யார் என்று மாற்கு சொல்லவில்லை. நம் சமுதாயத்தில் தேiயில்லாமல் கருத்துச் சொல்லும் சுற்றத்தாரை இவர்கள் குறிக்கிறார்கள். இவர்கள் சிறுமி இறந்துவிட்டார் என்று சொல்வதன் மூலம் அனைத்தும் நடந்துவிட்டது என்று அவர்களாகவே முடிவுக்கு வருகிறார்கள் என்பது தெரிகிறது (ἡ θυγάτηρ σου ἀπέθανεν· ஹெ தூகாடேர் சூ அபெதானென்- உம் மகன் இறந்துவிட்டாள்.)
போதகரை இவர்கள் தொந்தரவு செய்வதாக இவர்களே முடிவிற்கு வருகிறார்கள்
இவர்கள் இயேசுவில் இவ்வளவு அக்கறை கொள்ளக் காரணம் புரியவில்லை. ஒருவேளை 
இவர்கள் இதனை ஏளமாக சொல்லியிருக்கலாம். அல்லது, இயேசுவால் இனி ஒன்றும் செய்ய முடியாது என நினைத்திருக்கலாம். மாற்குவின் சமூகத்தில் இவர்கள் ஒரு பிரிவினரை அடையாளம் காட்டுகிறார்கள்

.36: இவர்களின் பேச்சை கேட்ட இயேசு, யாயீரிடம் 'நம்பிக்கை மட்டும் இழக்காதீர்' என்கிறார்: μὴ φοβοῦ, μόνον πίστευε. மே பொபூ, மொனொன் பிஸ்டெயூ- பயம் வேண்டாம் நம்பிக்கை மட்டும் கொள்ளும். 
நம்பிக்கைதான் அனைத்திற்கும் காரணம் என்பதை அவர் யாயீருக்கு அறிவிக்க இப்படிச் சொல்லியிருக்கலாம். நம்பிக்கையினால் மட்டும் அவர் அனைத்தையும் பெறுவார் என்பதில் இயேசு உறுதியாக இருக்கிறார்

.37: இன்னொரு முறை இயேசு தன் மும்மூர்த்திகளை உடன் அழைத்து செல்கிறார். அவர்கள்: Πέτρον καὶ Ἰάκωβον καὶ Ἰωάννην τὸν ἀδελφὸν Ἰακώβου. பெட்ரொன் காய் ஈயாகோபொன் காய் ஈயோஅன்னேன் டொன் அதெல்பொன் ஈயாகோபூ. பேதுரு, யாக்கோபு, யாக்கோபுவின் சகோதரரான் யோவான் ஆகியோர் ஆவர்
பல முக்கியமான நிகழ்வுகளில் இயேசு இவர்களை மட்டும்தான் அழைத்துச் செல்கிறார்
இதற்கு பல காரணங்களை விவிலிய ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள். அவையனைத்தும் ஊகங்கள் மட்டுமே. இயேசு மட்டும்தான் இதற்காக காரணத்தை விளக்கக்கூடியவர். பெரிய கூட்டத்தை தவிர்க்க இயேசு இவர்களை மட்டும் தெரிந்திருக்கலாம். அல்லது, இவர்களுக்கு விசேடமாக சில பாடங்களை படிப்பிக்க இப்படிச் செய்திருக்கலாம்

.38: இறந்த வீடுகளில் அழுகையும், புலம்பலும் சாதாரணமாக இருக்கும் (καὶ κλαίοντας καὶ ἀλαλάζοντας காய் கலாய்ஒன்டாஸ் காய் அலாலாட்சொன்டாஸ்- அழுகையும் புலம்பலும்). இந்த நிகழ்வுகள் யூத சமுதாயத்திலும் இருந்தது என்பது காட்டப்படுகிறது
இயேசுவுடைய இருப்பில் இந்த அழுகையும் புலம்பலும் தேவையற்றது என்பதை மாற்கு மறைமுகமாகக் காட்டுகிறார். இயேசு இதனைக் காண்கிறார், ஆக அவருக்கு அனைத்தும் தெரிந்திருக்கிறது

.39: இயேசு இந்த அமளியும் அழுகையும் தேவையில்லை என்கிறார், சிறுமி இறக்கவில்லை மாறாக உறங்குகிறார் என்கிறார் (τὸ παιδίον οὐκ ἀπέθανεν ἀλλὰ καθεύδει. பாய்தியொன் ஊக் அபெதானென் அல்லா காதெயுதெய்- சிறுமி இறக்கவில்லை உறங்குகிறார்.). 
மனிதர்களுடைய பார்வை வித்தியாசமானது, இயேசுவுடைய பார்வை வித்தியாசமானது என்பதை மாற்கு காட்டுகிறார்

.40: இயேசுவுடைய பதில் இவர்களுக்கு நகைப்பை உண்டாக்குகின்றது. இயேசு இவர்களுக்கு பேச இடம் கொடுக்காமல் உடனடியாக இவர்களை வெளியேற்றுகிறார். சில வேளைகளில் அமளி உண்டாக்கிறவர்களை உடனடியாக வெளியேற்றுவது முக்கியமாகிறது
இவர்கள் வீட்டின் வெளியில்தான் இருந்திருக்க வேண்டும். இவர்களை வெளியேற்றிய பின்னர், சிறுமியின் இடத்திற்கு அவர் பெற்றோர் சகிதம், தன் சீடர்களுடன் இயேசு செல்கிறார். சில தேவைகளுக்காக அவர், தனிமையாக அந்த இடத்திற்கு செல்லவில்லை என எடுக்கலாம். ஒருவேளை தான் செய்யும் செயலை இவர்கள் பார்த்து நம்பிக்கையில் வளரவேண்டும் என அவர் நினைத்திருக்கலாம்

.41: இயேசுவின் வார்த்தைகளை அரமேயத்தில் அப்படியே பதிவு செய்கிறார் மாற்கு: ταλιθα κουμ தாலிதா கூம் ( சொல்கிறேன் எழுந்திரு)
இயேசு இந்த இடத்தில் தன் கடவுள் தன்மையை காட்டுகிறார். தன் முழு அதிகாரத்தையும் அவர் பயன்படுத்துகிறார். அவருடைய வார்த்தைகள் முதல் ஏற்பாட்டு கடவுளை நமக்கு நினைவூட்டும்

.42: ஆண்டவருடைய வார்த்தையால் பன்னிரண்டு வயது சிறுமி உடனே எழுந்திருக்கிறார். அவர் எழுந்து நடந்தார் என்று மாற்கு காட்டுகிறார் (εὐθὺς ἀνέστη τὸ κοράσιον καὶ περιεπάτει· எவ்துஸ் அனெஸ்டே டொ கொராசியோன் காய் பெரிபாடெய்- உடனே சிறுமி எழுந்தாள் நடக்கத் தொடங்கினாள்). 
இவர் நடக்க தொடங்கினார் என்பதன் மூலம், அவர் முழுமையாக உயிர்பெற்றார் என்பதை மாற்கு காட்டுகிறார். அதற்கு சார்பாக கூடிநின்றவர்களும் வியந்து போகிறார்கள். அங்கே மக்கள் 
இருக்கவில்லை, இருந்தவர்கள், அச் சிறுமியின் பெற்றோரும், சீடர்களுமே. இவர்களுடைய வியப்பு, இன்னமும் இவர்கள் முழுமையாக இயேசுவை நம்பவில்லை என்பதைக் காட்டுகிறது

.43: இயேசு இந்த வியப்பை வெறும் வியப்பாக யாருக்கும் சொல்ல வேண்டாம் என்கிறார். அதாவது ஒருவர் தனிப்பட்ட விதத்தில் நம்பிக்கையில் வளரவேண்டும். நம்பிக்கை ஒரு பயணம். அதில் ஒவ்வொருவரும் பங்கெடுக்க வேண்டும். வியப்பு போதுமானது அல்ல என்கிறார் போல. மாற்கு நற்செய்தியில் பல இடத்தில் இயேசு இப்படியான கட்டளைகளைக் கொடுப்பதை அவதானிக்கலாம்
இது போக இயேசு, சிறுமிக்கு உணவு கொடுக்கச் சொல்கிறார் (εἶπεν δοθῆναι αὐτῇ φαγεῖν. எய்பென் தொதேனாய் அவ்டே பாகெய்ன்- அவளுக்கு உண்ண கொடுக்கச் சொன்னார்.). இவர்களின் உணர்வு தேவையில்லா வியப்பாக இருக்க, ஆண்டவரின் உணர்வு இந்த சிறுமியின் பசியை புரிந்திருக்கிறது. இதனையும் மாற்கு வித்தியாசமாக காட்டுகிறார்

மரணம், ஆண்டவரின் பார்வையில் உறக்கம்
மரணத்திற்கு மரணம் கொடுத்தவர் நம் ஆண்டவர்
மனிதரின் துன்பத்தில் இன்பம் காண்கிறவர் நம் ஆண்டவர் அல்லர்
அமளியையும், அழுகையையும் நம் ஆண்டவர் அகற்றுவார்
சிறுவர்களையும் விட்டுவைக்காத இந்த உலகில்,
ஆண்டவரின் பார்வையும் வருகையும், நிச்சயம் நலம் தரும்

 அன்பு ஆண்டவரே உறக்கம் தவிர்த்து வாழ்வு தாரும். ஆமென்


ஈழத்தில் மரணிக்கும் விழிமியத்தினால்
உயிர்நித்து, நீதி கேட்கும், குழந்தை றெஜினாவிற்கு சமர்ப்பணம்
தமிழினத்தின் தோல்விக்கு இன்னொரு உதாரணம், இவர் மரணம்


ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...