புதன், 30 நவம்பர், 2016

திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு (முதலாம் ஆண்டு அ) 07,12,2016: Second Sunday of Advent

திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு (முதலாம் ஆண்டு அ)
07,12,2016


முதல் வாசகம்: எசாயா 11,1-10
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 72
இரண்டாம் வாசகம்: உரோமையார் 15,4-9
நற்செய்தி: மத்தேயு 3,1-12 


எசாயா 11,1-10
1ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தளிர் ஒன்று துளிர்விடும்; அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று வளர்ந்து கனிதரும். 2ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்; ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு — இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும். 3அவரும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில் மகிழ்ந்திருப்பார். கண் கண்டதைக் கொண்டு மட்டும் அவர் நீதி வழங்கார்; காதால் கேட்டதைக் கொண்டு மட்டும் அவர் தீர்ப்புச் செய்யார்; 4நேர்மையோடு ஏழைகளுக்கு நீதி வழங்குவார்; நடுநிலையோடு நாட்டின் எளியோரது வழக்கை விசாரிப்பார்; வார்த்தை எனும் கோலினால் கொடியவரை அடிப்பார்; உதட்டில் எழும் மூச்சினால் தீயோரை அழிப்பார். 5நேர்மை அவருக்கு அரைக்கச்சை; உண்மை அவருக்கு இடைக்கச்சை. 6அந்நாளில், ஒநாய் செம்மறியாட்டுக் குட்டியோடு தங்கியிருக்கும்; அக்குட்டியோடு சிறுத்தைப் புலி படுத்துக் கொள்ளும். கன்றும், சிங்கக்குட்டியும், கொழுத்த காளையும் கூடி வாழும்; பச்சிளம் குழந்தை அவற்றை நடத்திச் செல்லும். 7பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும்; அவற்றின் குட்டிகள் சேர்ந்து படுத்துக்கிடக்கும்; சிங்கம் மாட்டைப் போல் வைக்கோல் தின்னும்; 8பால் குடிக்கும் குழந்தை விரியன் பாம்பின் வளையில் விளையாடும்; பால்குடி மறந்த பிள்ளை கட்டுவிரியன் வளையினுள் தன் கையை விடும். 9என் திருமுலை முழுவதிலும் தீமை செய்வார் எவருமில்லை; கேடு விளைவிப்பார் யாருமில்லை; ஏனெனில், கடல் தண்ணீரால் நிறைந்திருக்கிறது போல, மண்ணுலகம் ஆண்டவராம் என்னைப் பற்றிய அறிவால் நிறைந்திருக்கும். 10அந்நாளில், மக்களினங்களுக்குச் சின்னமாய் விளங்கும் ஈசாயின் வேரைப் பிறஇனத்தார் தேடி வருவார்கள்; அவர் இளைப்பாறும் இடம் மாட்சி நிறைந்தகாக இருக்கும்.

எசாயா புத்தகத்தின் எழாவது அதிகாரத்திலிருந்து பதினோராவது அதிகாரம் வரையிலான பகுதிகள் அசிரியாவின் ஆபத்துக்களையும், ஆண்டவர் இந்த ஆபத்திலிருந்து யூதாவையும் தாவீதின் வழிமரபையும் எங்கணம் காப்பாற்றுவார் என்பதையும் விவரிக்கின்றன. எசாயாவின் காலத்தில் அசிரியா யூதாவின் நண்பனாகி பிற்காலத்தில் அதன் எசமானாகியது. எசாயாவின் எதிர்பையும் தாண்டி, யூதேயா அசிரியாவுடன் கூட்டுச் சேர்ந்து அதன் நண்பராக முயன்றது, பிற்காலத்தில் இந்த அசிரியாவே யூதாவிற்கு ஆபத்தாய் அமைந்தது. இந்த வேளையில், எசாயா அசிரியாவை கடவுள்தான் துருப்பாக பாவிக்கின்றார், சிறிது காலத்தின் பின் இந்த அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கிடைக்கும் எனவும், தாவீதின் வழிமரபு என்றும் நீடித்து நிலைக்கும் என்று நம்பிக்கை தருகிறார். அவருடைய நம்பிக்கை வார்த்தையில் இந்த பகுதி மிகவும் முக்கியமானது. 

வ1: ஈசாய்- இவரின் பெயரின் அர்த்தமாக 'கடவுளின் மனிதன்' (יִשַׁי யிஷாய்) என எடுக்கலாம். எசாயா, தாவீது என்னும் முக்கியமான யூதாவின் அரசரைப் பயன்படுத்தாமல், அவருடைய தகப்பனான ஒரு ஏழை குடிமகனின் பெயரைப் பயன்படுத்துகின்றார். ஒரு வேளை தாவீதின் வழிமரபில் வந்தவர்கள் எல்லாரும், தாவீதுக்கு கடவுள் கொடுத்த வாக்குறுதிகளை பெறாமலே கடவுளை ஏமாற்றினர். ஆக இனிவருபவர் புதிய தாவீதாக அவர் தந்தையிலிருந்து வருபவர் என சொல்கிறார் எனலாம். ஈசாய், தாவீதின் தந்தை, ஓபேதின் மகன், மற்றும் போவாசின் பேரனாவார். இவருக்கு தாவீது அடங்கலாக ஏழு புதல்வர்களும் இரண்டு புதல்வியர்களும் இருந்தனர். தாவீதின் சகோதரிகள் வாயிலாக இந்த குடும்பத்திற்கு மோவாமியர் மற்றும் அம்மோனியர் தொடர்பிருந்திருக்கலாம் என்று சிலர் வாதாடுகின்றனர். இந்த ஈசாய் தான் தாவீதை சவுலுக்கு இசை மீட்ட அனுப்பினார், அத்தோடு இவர்தான் போர்களத்திலிருந்த தம் புதல்வர்களை நலம் விசாரிக்க தாவீதை களத்திற்கு அனுப்பினார். தாவீதையும் தாண்டி, நல்ல ஒரு தந்தையாக ஈசாய் இன்றும் அறியப்படுகிறார். இவர் உண்மையில் கடவுளின் மனிதரே. 
அடிமரத்திலிருந்து தளிர் வருதல் மற்றும் வேரிலிருந்து கிளைவருதல் என்பது அழிவிலிருந்தும் வாழ்வைத் தரக்கூடியவர் கடவுள் என்னும் அர்த்தத்தை காட்டுகிறது. அடிமரத்தளிர், வேர்க்கிளை என்பவை யூதாவின் ஆபத்தான நிலையைக் காட்டுகிறது. 

வ.2: இங்கே இரண்டு விதமான இறைவாக்குகளை எசாயா உரைக்கிறார். 

அ. ஈசாயுடைய வாரிசின் பண்புகள்: 
ஆண்டவரின் ஞானம் அவரில் இருக்கும் (רוּחַ יְהוָה றூவா அதோனாய்). இந்த ஆவி அவருக்கு ஞானம் (חָכְמָה ஹொக்மாஹ்), மெய்யுணர்வு (בִינָה பினாஹ் பகுத்தறிவு), அறிவுரைத்திரன் (עֵצָה֙ எட்சாஹ் ஆலோசனை), ஆற்றல் (גְבוּרָה கெவுறாஹ் வீரம்), நுண்மதி (דַּעַת டஆத் அறிவு), மற்றும் ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு (יִרְאַת יְהוָה யிராத் அதோனாய் இறையச்சம்) போன்றவற்றை அவருக்கு அருளும். 

ஆ. எசாயா மறைமுகமாக இப்படியான பண்புகள் தற்போதைய அரசனும், தாவீதின் வழிமரபான அகாசுக்கு இல்லை என்பதை நினைவூட்டுகிறார். 

வ.3: இறையச்சம் என்பது எபிரேய நம்பிக்கைப் படி ஞானத்திற்கான முக்கியமான வழிமுறை, இந்த வழிமுறையை அரசர் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வது நேர்மறையாக உள்ளது. கண்ணால் காண்பதையும், காதால் கேட்பதையும் வைத்து நீதி வழங்குதல் உண்மையாகது என்பதை இருபதாம் நூற்றாண்டில்தால் உலகம் புரிந்து கொண்டது ஆனால் ஆசிரியர் இதனை 2700 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்திருக்கிறார். 
இதிலிருந்து அக்கால நீதிமுறைகள் விழுமிய அளவில் இக்காலத்திற்கு எந்த வகையிலும் குறைந்தல்ல என்பது புலப்படுகிறது. 

வ.4: ஆகாசுடைய காலத்தில் ஏழைகள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு நீதியும், நடுநிலையும் எட்டாக் கனிகளாவே இருந்தது (இன்றும் அப்படித்தான்). ஏழையாக பிறத்தலே சாபம் என்றாட் போல் ஆகிவிட்டது. 'வார்த்தை எனும் கோலினால் கொடியவரை அடிப்பார்' என்பது எபிரேய விவிலியத்தில் 'வார்த்தை எனும் கோலினால் நிலத்தை அடிப்பார்' (וְהִכָּה־אֶרֶץ בְּשֵׁבֶט פִּיו) என்றே உள்ளது. தமிழ் மொழிபெயர்ப்பு இந்த வரியின் பின்னைய வரியடியின் அர்த்த்திற்கேற்ப மாற்றப்பட்டுள்ளது. அரசர்களின் வார்த்தைகளாக, அரச கட்டளையாக சக்திமிக்கது இதனையே, இறைவாக்கினர் இங்கு குறிப்பிடுகிறார். 

வ.5: இடைக்கச்சை (אֵזוֹר எட்சோர் இடைகச்சை, இடைப்பட்டி) என்பது ஒரு அடையாள வார்த்தை. இது ஒரு தலைவரின் அதிகாரத்தை அல்லது அடிப்படை எண்ணங்களைக் குறிக்கிறது. எசாயா சொல்லும் ஈசாயின் வாரிசுக்கு நேர்மையும் (צֶדֶק ட்செடெக்), உண்மையும் (אֱמוּנָה எமுனாஹ்) தான் இவர் இடைக்கச்சையாகிறது. இப்படியான தலைவர் நிச்சயமாக கடவுள் ஒருவராகவே இருக்க முடியும் என்பது எசாயாவின் அனுபவம் போல். 

வவ.6-8: இந்த வரிகள் எசாயா இறைவாக்கின் மிக முக்கியமான வரிகளும், பல காலமாக ஆராயப்பட்ட வரிகளுமாகும். இந்த வரிகள் மெசியாவின் ஆட்சி சிறப்பை அடையாள ரீதியாக தெளிவுபடுத்துகின்றன. ஓநாய் (זְאֵב֙) செம்மறியாட்டுக்கு (כֶּבֶשׂ) மத்திய கிழக்கு நாடுகளில் முக்கியமான வேட்டை மிருகம். சிறுத்தைப்புலி (נָמֵר) இளம் (גְּדִי) ஆடுகளை அதிகமாக வேடடையாடும் மிருகம். சிங்கக் குட்டி (כְּפִיר) கன்றுகளையும் (עֵגֶל), கொழுத்த மிருகங்களை (מְרִיא) விரும்பி வேட்டையாடும். சிங்கக் குட்டிகள், சிங்கங்கள் எசாயாவின் காலத்திற்கு முன்பே பாலஸ்தீனாவிலிருந்து அழிந்திருந்தன. இருப்பினும் சிங்கங்களைப் பற்றிய கதைகள் அக்காலத்திலும் பாவனையில் இருந்தன. அசிரியாவையும் சிங்கத்திற்கு அக்கால வரலாறுகள் ஒப்பிடுகின்றன. இங்கே எசாயாவின் கருத்துப்படி இந்த மிருகங்கள் இயற்கையாக சேர்ந்து வாழ முடியாதவை, ஆனால் ஈசாயின் வாரிசின் ஆட்சியில் இவை சேர்ந்து வாழும், அத்தோடு சிறு குழந்தை (נַעַר קָטֹן) இவற்றை வழிநடத்தும். சிறு குழந்தைகள் அக்காலத்தில் விவேகம் இல்லாதவர்களாக கருதப்பட்டனர், ஆனால் இவர்கள்தான் இந்த இளர்தளிர் காலத்து ஞானிகளாக இருப்பர் என்பது எத்துணை அழகு. 
கரடி (דֹב֙) தன்னுடைய குட்டிகளின் ஆபத்துக்காக மிக வன்முறையாக மாறும் இது இயற்கை, ஆனால் ஈசாயின் மகனின் காலத்தில் இது கன்றுக்குட்டிகளோடு தன்குட்டிகளையும் விடுமாம், அத்தோடு கரடி, பசு மாட்டோடு (פָּרָה) மேய்வது கிடையாது இங்கே அதுவும் நடக்கிறது. 'புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது' என்பது நம் பழமொழி ஆனால் புதிய படைப்பில் சிங்கம் (אַרְיֵה) மந்தையைப்போல் வைக்கோல் புசிக்கிறது. உண்மையாகவே இது புதிய படைப்புத்தான். பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பது நமக்கு நன்கு தெரியும் இங்கே பால்குடி மறவாத குழந்தை நல்ல பாம்பின் (פֶּתֶן) வளைக்குள் கையை விடுமாம். இந்த உவமை திருப்பிச் சொல்லப்படுகிறது. கட்டுவிரியனும், விரியனும் இங்கே காட்டப்பட்டுள்ளது. இந்த பாம்புகள் பாலஸ்தீனாவில் காணப்பட்ட ஒரு வகை விசம் பொருந்தி நல்ல பாம்பு வகைகளை குறிக்கின்றன. (நல்ல பாம்புகள் உண்மையில் நல்லவை கிடையாது, விசத்தை பொறுத்த மட்டில்). 
இந்த உருவக அணிகள் மூலமாக, மிருகங்கள் தங்களது மிருக குணங்களை விடுத்து, ஆதியில் கடவுள் ஏற்படுத்திய மனித-மிருக சுமூக உறவிற்கு திரும்புவர் என்ற ஆழமான அர்த்தத்தை எசாயா இங்கே கொடுக்கிறார். பாம்பினால்தான் பாவம் வந்தது என்பது எபிரேயரின் நம்பிக்கை, அத்தோடு பாம்பு தீண்டப்படக்கூடாத ஒரு ஊர்வனவாகவும் கருதப்பட்டது. இதற்கு அவர்களை சுற்றியிருந்த பாம்பு வழிபாடே காரணம். (✽ஒப்பிடுக தொ.நூல் 3,1)ஆனால் இந்த நம்பிக்கையையும் தாண்டி ஈசாயின் வழிமரபு காலத்தில் பாம்புகள் கூட செல்லப்பிராணிகளாக மாறும் என்பது மிகவும் வியப்பாக இருக்கிறது. 

(✽ஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது. அது பெண்ணிடம், 'கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?' என்று கேட்டது.)

வ.9: இந்த வரி மேல் குறித்தவை அனைத்தையும் மீட்டுப்பார்க்கிறது. இங்கே ஆண்டவரின் திருமலை என்று தமிழ் விவிலியம் சொல்வது (כָל־הַר קָדְשִׁי) சீயோனையோ, எருசலேமையோ, யூதாவையோ, இஸ்ராயேலையோ அல்லது முழு உலகையோ குறிக்கலாம். உலகில் தண்ணீர் 75வீதமாக உள்ளது அதுபோல ஆண்டவரை பற்றிய அறிவின் காரணமாக தீமைசெய்வோரும், கேடுவிளைவிப்போரும் இரார் என்கிறார் எசாயா. ஆண்டவரைப் பற்றிய அறிவுதான் எல்லா தீமைகளிலிருந்தும் விடுபட ஒரே வழி என ஆழமாக நம்புகிறார் ஆசிரியர், அத்தோடு இவர் நல்ல ஒரு புவியியலாளர் போல தோன்றுகிறார். 

திருப்பாடல் 72
1கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும். 
2அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக! 3மலைகள் மக்களுக்குச் சமாதானத்தைக் கொடுக்கட்டும்; குன்றுகள் நீதியை விளைவிக்கட்டும். 
4எளியோரின் மக்களுக்கு அவர் நீதி வழங்குவாராக! ஏழைகளின் பிள்ளைகளைக் காப்பாராக் பிறரை ஒடுக்குவோரை நொறுக்கி விடுவாராக! 
5கதிரவனும் நிலாவும் உள்ளவரையில், உம் மக்கள் தலைமுறை தலைமுறையாக உமக்கு அஞ்சி நடப்பார்களாக. 
6அவர் புல்வெளியில் பெய்யும் தூறலைப்போல் இருப்பாராக் நிலத்தில் பொழியும் மழையைப் போல் விளங்குவாராக. 
7அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக் நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக. 
8ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். 
9பாலைவெளி வாழ்வோர் அவர்முன் குனிந்து வணங்குவர்; அவர் எதிரிகள் மண்ணை நக்குவார்கள். 
10தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டுவருவார்கள். 
11எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள்; எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள். 
12தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார். 
13வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். 
14அவர்கள் உயிரைக் கொடுமையினின்றும் வன்முறையினின்றும் விடுவிப்பார்; அவர்கள் இரத்தம் அவர் பார்வையில் விலைமதிப்பற்றது. 
15அவர் நீடுழி வாழ்க! சேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்; அவருக்காக இடையறாது வேண்டுதல் செய்யப்படுவதாக! அவர்மீது ஆசிகள் வழங்கப்பெறுமாறு நாள் முழுதும் மன்றாடப்படுவதாக! 
16நாட்டில் தானியம் மிகுந்திடுக! மலைகளின் உச்சிகளில் பயிர்கள் அசைந்தாடுக! லெபனோனைப்போல் அவை பயன் தருக! வயல்வெளிப் புல்லென நகரின் மக்கள் பூத்துக் குலுங்குக! 
17அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருப்பதாக! கதிரவன் உள்ளவரையில் அவர் பெயர் நிலைப்பதாக! அவர்மூலம் மனிதர் ஆசிபெற விழைவராக! எல்லா நாட்டினரும் அவரை நற்பேறு பெற்றவரென வாழ்த்துவராக! 18ஆண்டவராகிய கடவுள், இஸ்ரயேலின் கடவுள் போற்றி! போற்றி! அவர் ஒருவரே வியத்தகு செயல்களைப் புரிகின்றார்! 
19மாட்சி பொருந்திய அவரது பெயர் என்றென்றும் புகழப்பெறுவதாக! அவரது மாட்சி உலகெல்லாம் நிறைந்திருப்பதாக! ஆமென், ஆமென். 
20(ஈசாயின் மகனாகிய தாவீதின் மன்றாட்டுகள் நிறைவுற்றன.)

திருப்பாடல் 127க்கு பிறது சாலமோனுடன் சம்மந்தப்பட்ட பாடலாக திருப்பாடல் 72 கருதப்படுகிறது. இருப்பினும் இவை சாலமோனினால் எழுதப்பட்டன என்பதைவிட அவருக்கு அர்ப்பணிகக்ப்பட்டது என்றே கொள்ளவேண்டும் என்பது பல ஆய்வாளர்களின் கருத்துக்கள். தாவீது தன் மகன் சாலமோனுக்காக மன்றாடியது போல இந்த பாடல் அமைந்திருந்தாலும், தாவீது தனக்காக இந்தப் பாடலை பாடினார் என்ற வாதமும் இருக்கிறது. அத்தோடு இந்தப் பாடல் மனித அரசர்களையும் தாண்டி மெசியா அரசரை பற்றிய பாடல் என்ற ஒரு வாதமும் இருக்கிறது. இருபது வரிகளைக் கொண்டுள்ள இந்தப் பாடல் திருப்பிக்கூறல் (chiasmus) வகையில் அமைந்திருக்கிறது:

அ1. வவ.1-5: பராமரிக்கும் அரசர்
ஆ1. வவ.6-8: உலக தலைவர்
அ2. வவ.11-14: பராமரிக்கும் அரசர்
ஆ2. வவ.15-17: உலகத்திற்கான ஆசீர்

தலைப்பு: சாலமோனுக்கு உரியது என்ற தலைப்பு இதற்க்கு கொடுக்கப்பட்டுள்ளது (לִשְׁלֹמֹה)

வ.1-2: இந்த திருப்பாடலின் ஆரம்ப வரி ஒரு மன்றாட்டு போல அரசர்காக பரிந்து பேசுகிறது. அரசரிடம் நீதி தீர்ப்புக்கான அற்றலையும் நீதியையும் (צְדָקָה ட்செதாகாஹ்) ஆசிரியர் எதிர்பார்ப்பது தெரிகிறது. அரசர் தம் மக்களையும், ஏழைகளையும் இந்த நீதியோடு ஆள எதிர்பார்க்கப்படுகிறார்.  

வ.3: மலைகளும் הָרִים குன்றுகளும் גְבָעוֹת அடையாளங்களாக உருவகப்படுத்தப்பட்டுள்ளன. மலைகளும் குன்றுகளும் சமதள நிலத்திற்கு மேல் உயர்ந்து நிற்பது எதோ செய்தி சொல்வது போல ஆசிரியருக்கு தெரிகின்றன.

வ.4: ஏழைகளுக்கு நீதி வழங்குதல், ஏழைகளின் பிள்ளைகளை காத்தல், பிறரை வஞ்சிப்போரை அழித்தல் போன்றவை ஒன்றோடொன்று தொடர்பு பட்டவை. 

வ.5: சூரியனும் (שָׁמֶשׁ) நிலாவும் (יָ֝רֵ֗חַ) இந்த ஆசிரியரின் கருத்துப்படி அழியாத படைப்புக்கள் அவற்றிக்கு முடிவு கிடையாது. அதேபோல் கடவுளின் மேல் கொள்ளவேண்டிய இறையச்சம் எதிர்பார்க்கப்படுகிறது. 

வ.6: புல் வெளித் தூறலும், நிலமேல் மழையும் பாலஸ்தீன ஆசிரியருக்கு கடவுளின் தெரியக்கூடிய முக்கியமான ஆசீர்வாதங்கள். இவை வளர்ச்சியை கொடுக்கக்கூடிய வளங்கள், மக்கள் கடவுளுக்கு அஞ்சுவதால் இதனைப்போல் இருப்பார்களாக என எதிர்பார்க்கப்படுகிறார்கள். 

வ.7: நிலா ஒவ்வொருநாளும் தெரியக்கூடிய நல்லதொரு அடையாளம், இது மறைந்துபோகாது என்பது 
இவர்களின் வானசாஸ்திர நம்பிக்கை, அதேபோல் ஆண்டவரின் நீதி எதிர்பார்க்கப்படுகிறது. 

வ.8: ஒரு கடலிலிருந்து மற்றக் கடல் என்பது மத்தியதரைக்கடலிலிருந்து சாக்கடலைக் குறிக்கலாம் 
(מִיָּם עַד־יָם). இங்கே பேராறு என்பது (נָהר) யூப்பிரடிஸ் நதியை குறிப்பதாக பலர் காண்கின்றனர். இந்த ஆற்றிலிருந்து உலகின் எல்லைவரை இந்த அரசரது ஆட்சி எதிர்பார்க்கப்படுகிறது. 

வ.9: பாலைநிலத்தில் வாழ்ந்தோர் என்றும் எருசலேம் அரசருக்கு தலைவலியாக இருந்தவர்கள், மண்ணை நக்குவர் என்பது, அவர்கள் வாயில் மண் கவ்வப்பட தலைவணங்குவர் என்பதைக் குறிக்கிறது. தலையடிபட குனிந்து வணங்குதல் ஒருவர் அரசருக்கு காட்டும் வணக்கத்தையும் விசுவாசத்தையும் குறிக்கிறது.  

வ.10: இந்த வரி சாலமோனின் காலத்தில் நடந்த நிகழ்வுகளை காட்டுகிறது. தார்சிசு என்பது யூதேயாவிற்கு வடமேற்கிலிருந்த (தற்போதைய தெற்கு துருக்கி) இடமாகும், இருப்பினும் இதன் துல்லியமான இடவரைபு கிடைக்கப்படவில்லை. ஷெபா (שְׁבָא) தென் அரேபியாவிலுள்ள ஒர் இடம், செபா (סְבָא) வடகிழக்கு ஆபிரிக்காவிலுள்ள ஓர் இடம். இப்படியாக உலகின் வடக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் இந்த அரசர்க்கு பரிசில்கள் வருகின்றன. சாலமோன் இந்த அரசுகளுடன் நல்ல ராஜதந்திரத்தை பேணினார். இதனால் அவர்கள் அவருக்கு பரிசில்களை கொணர்ந்தனர் என வரலாறு சொல்கிறது. 

வ.11: இந்த வரியை ஒரு புகழ்ச்சி எதிர்பார்ப்பாகவே கருதவேண்டும். பல அரசர்கள் சாலமோனை புகழ்ந்தது உண்மையே ஆனால் அனைத்து அரசர்களும் அவருக்கு தரைமட்டும் தாழ்ந்து பணிந்து வணங்குவார்கள் என்பது கொஞ்சம் அதிகமான எதிர்பார்ப்பாகவே காண்படுகிறது. (இதன் இலக்கு சாலமோனாக இருந்தால்). இந்த பாடல் மெசியா அரசரருக்காக இருந்தால் இந்த எதிர்பார்ப்பில் பிழையிருக்காது.

வவ.12-14: இந்த வரிகள், இந்த அரசர் ஏழைகள் மட்டில் கொண்டுள்ள கரிசனையைக் காட்டுகிறது. ஏழைகளை விடுவித்தலும், அவர்களுக்கு கரிசனை காட்டுதலும், அவர்களின் உயிரைக் காத்தலும் நல்ல அரசரின் உயரிய பண்பாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு எல்லா வேளைகளிலும் ஏழைகளே அன்றும் பாதிக்கப்பட்டனர் என்பது இவ்வாறு புலப்படுகிறது. ஏழைகளின் இரத்தம் விலைமதிப்பற்றது என்னும் வரித்தொடர் அக்காலத்திலும் மனித மாண்பு உயர்வாக இருந்தது என்பதைக் காட்டுகிறது. 

வ.15: அரசர்க்கு ஆசியுரை வழங்கப்படுகிறது. அரசருக்கு நீடுழி வாழ்வும், பரிசில்களும், வேண்டுதல்களும், ஆசீக்கான மன்றாட்டுக்களும் இரஞ்சப்படுகின்றன. ஷேபா அக்காலத்தில் பொன்னுக்கு பெயர்போன இடம். 

வ.16: அவர் நாட்டிற்கு ஆசிகள் வழங்கப்படுகின்றன. தானிய மிகுதி, மலைகளில் பயிர்ச்செய்கை, மக்களின் பெருக்கம், போன்றவை நாட்டில் வளர்ச்சியைகாட்டும் வெளியடையாளங்கள். இஸ்ராயேலுக்கு வடக்கிலிருந்த லெபனான் மிகவும் வளமான நாடாகும், இஸ்ராயேலைவிட காட்டு வளங்களில் அது மிகுந்திருந்தது. ஆசிரியர் அதனையும் நன்கு அறிந்திருக்கிறார். 

வ.17: இந்த மன்னரின் பெயர் சூரியனைப்போல் நிலைத்திருக்க ஆசிக்கப்படுகிறார். அவர் ஆசீராக 
இருப்பதனால் அவரால் மற்றவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். ஆண்டவர் ஆபிரகாமிற்கு சொன்னது போல் (தொ. நூல் 12,2: 'உன்னை நான் பெரிய இனமாக்குவேன்; உனக்கு ஆசி வழங்குவேன். உன் பெயரை நான் சிறப்புறச் செய்வேன்; நீயே ஆசியாக விளங்குவாய்'), இந்த அரசர் ஆசீராக மாறுகிறார். எபிரேய விவிலியத்தில் வரும் இந்த சொல் பல விதாமாக ஆராயப்படுகிறது, இது பல விதமான அர்த்தங்களையும் கொடுக்கிறது (יִתְבָּ֥רְכוּ அவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.) இதனால் எல்லா நாட்டினரும் அவரை வாழ்த்துவார்கள். 

வவ.18-19: இந்த இரண்டு வசனங்கள் அரசர் என்ற தலைப்பிலிருந்து மாறி, கடவுளை மையப்படுத்துகின்றன. இந்த ஆசீர்கள் இஸ்ராயேலர் சாதாரணமாக பாவிக்கின்ற நாளாந்த ஆசியுரை. 
(בָּרוּךְ ׀ יְהוָ֣ה אֱלֹהִים אֱלֹהֵ֣י יִשְׂרָאֵל இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக.) அத்தோடு இந்த கடவுள் ஒருவரே கடவுளாக போற்றப்படுகிறார். இதற்கு முன் சொல்லப்பட்ட அனைத்து புகழ்ச்சியும் கடவுளுடைய புகழ்ச்சியில்தான் நிறைவு பெறுகிறது. அத்தோடு அவரது மாட்சி அனைத்து உலகிலும் 
இருக்கும் படியாக வேண்டப்படுகிறது. இறுதி வசனம் 'தாவீதின் செபம் முடிவடைந்தது' என வாசிக்கிறது. இப்படியாக இது தாவீதின் பாடல் என சொல்ல முயல்கிறார் ஆசிரியர். 


உரோமையார் 15,4-9
4முற்காலத்தில் எழுதப்பட்டவை அனைத்தும் நமக்கு அறிவுரையாகவே எழுதப்பட்டன. மறைநூல் தரும் மன உறுதியினாலும் ஊக்கத்தினாலும் நமக்கு எதிர்நோக்கு உண்டாகிறது. 5கிறிஸ்து இயேசுவின் முன்மாதிரிக்கேற்ப நீங்கள் ஒரே மனத்தினராய் இருக்குமாறு மன உறுதியையும் ஊக்கத்தையும் தரும் கடவுள் உங்களுக்கு அருள்புரிவாராக! 6இவ்வாறு நீங்கள் அனைவரும் ஒருமனப்பட்டு, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவரை ஒருவாய்ப்படப் போற்றிப் புகழ்வீர்கள். 7ஆகையால், கிறிஸ்து உங்களை ஏற்றுக் கொண்டது போல நீங்களும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது கடவுளைப் பெருமைப்படுத்துவீர்கள். என் கருத்து இதுவே. 8கடவுள் உண்மையுள்ளவர் என்பதைக் காட்டுமாறு கிறிஸ்து விருத்தசேதனம் செய்து கொண்டவர்களுக்குத் தொண்டர் ஆனார். மூதாதையருக்குத் தரப்பட்ட வாக்குறுதிகளை உறுதிப்படுத்தவும், 9பிற இனத்தார் கடவுளுடைய இரக்கத்தைப் பார்த்து அவரைப் போற்றிப் புகழவும் இவ்வாறு தொண்டர் ஆனார். ஆகவே, 'பிறஇனத்தாரிடையே உம்மைப் போற்றுவேன்; உமது பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன்' என் இதைக் குறித்து மறைநூலில் எழுதியுள்ளது.

பவுலுடைய இறுதி ஆலோசனையிலிருந்து இந்த பகுதி எடுக்கப்பட்டுள்ளது. பிறருக்கு உகந்தவற்றையே தேடவேண்டும், அத்தோடு நற்செய்தி அனைவருக்கும் உரியது என்ற தலைப்புக்கள் இந்த வரிகளுக்குள் அடங்கியுள்ளது. 

வ.4: இங்கே முற்காலத்தில் எழுதப்பட்டவை என்று பவுல் முதல் ஏற்பாட்டு நூல்களை குறிப்பிடுகிறார். பவுல் எபிரேய இறைவார்த்தையில் நல்ல தெளிவு பெற்றிருந்தவர் என்பதை இது காட்டுகிறது. அத்தோடு அனைத்தும் நல் அறிவுரை என்று முதல் ஏற்பாட்டிற்கு நல்ல யூதனாக மரியாதை செய்கிறார். மறைநூல் ஒருவருக்கு உற்சாகத்தை தந்து அதன் வாயிலாக எதிர்நோக்கை பெறவைக்கிறது என்கிறார். 

வ.5: கடவுளுக்கு இரண்டு வரைவிலக்கணம் கொடுக்கப்படுகிறது, அவர் மனவுறுதியையும் ஊக்கத்தையும் தரும் கடவுளாக காட்டப்படுகிறார் (ὁ δὲ θεὸς τῆς ὑπομονῆς καὶ τῆς παρακλήσεως மனவுறுதியினதும் ஊக்கத்தினதும் கடவுள்). ஆரம்ப திருச்சபையில் கடவுளுக்கு பல விதமான பெயர்களும் வரைவிலக்கணங்களும் சுதந்திரமாக வழங்கப்பட்டன, இதில் பவுல் கடவுளுடைய அனைத்து பண்புகளையும் வரைவிலக்கணமாக தலத் திருச்சபைகளின் தேவைக்கேற்ப பாவிக்கிறார். இந்த கடவுள் உரோமைய கிறிஸ்தவர்களை ஒற்றுமையாக இருக்க அழைக்கிறார் என்கிறார் பவுல், அதற்கு உதாரணமாக இயேசுவைக் காட்டுகிறார். இதிலிருந்து உரோமை திருச்சபையில் சில முக்கிய பிளவுகள் இருந்திருக்க வேண்டும் என ஊகிக்கலாம். 

வ.6: இந்த வசனம் அந்த ஊகத்தை உறுதிப்படுத்துகிறது. அனைவரும் ஒருமனப்பட்டு கடவுளை போற்ற அழைக்கப்படுகின்றனர். இங்கே கடவுளை இயேசுவின் கடவுளும் தந்தையுமாக பார்க்கிறார் பவுல் (τὸν θεὸν καὶ πατέρα τοῦ κυρίου ἡμῶν Ἰησοῦ Χριστοῦ. எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் ) இந்தக் காலத்தில் கிறிஸ்தியலோ அல்லது இறையியலோ தற்காலத்தைபோல வளர்ந்திருக்கவில்லை, இதனாலதான் சில சொற் பதங்கள் மாறி மாறி இயேசுவிற்கும் தந்தையாகிய கடவுளுக்கும் பாவிக்கப்படுவதை அவதானிக்கலாம். 

வ.7: ஒற்றுமையின் தேவையையும் நீதியையும் விளக்குகிறார் பவுல். இயேசுவிற்கு யூதரன்றோ யூதரல்லாதவரன்றோ இல்லை, அவர் அனைவரையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். இந்த ஒரு ஏற்றுக்கொள்ளலே போதும் கிறிஸ்தவர்கள் மற்றவர்களை ஏற்றுக்கொள்வதற்கு. இப்படி ஏற்றுக்கொள்வது மட்டுமே கடவுளை பெருமைப் படுத்தும். இதனை தன்னுடைய கருத்தாக காட்டமாக சொல்கிறார் பவுல் (இது கிரேக்க விவிலியத்தில் நேரடியாக இந்த வரியில் இல்லை).

வவ.8-9: முன்சொன்ன அறிவுரைக்கு காரணம் காட்டுகிறார் பவுல். இயேசுவின் செயற்பாடுகள் விளக்கப்படுகின்றன:

அ. கடவுள் உண்மையுள்ளவர் என காட்ட கிறிஸ்து விருத்த சேதனம் செய்துகொண்டவர்களுக்கு (யூதருக்கு) தொண்டரானார். 

ஆ. மூதாதையருக்கு தரப்பட்ட வாக்குறிதிகளை உறுதிப்படுத்தவும், பிறவினத்தார் கடவுளின் இரக்கத்தைக் கண்டு அவரை புகழவும் இயேசு தொண்டர் ஆனார். 

இதன் காரணமாகத்தான் முற்கால இறைவாக்கான 'பிறஇனத்தாரிடையே உம்மைப் போற்றுவேன்; உமது பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன்;' (διὰ τοῦτο ἐξομολογήσομαί σοι ἐν ἔθνεσιν  καὶ τῷ ὀνόματί σου ψαλῶ.) என்பது நிறைவேறுகிறது (✽காண்க தி.பா 18,49).
(✽ஆகவே, பிற இனத்தாரிடையே உம்மைப் போற்றுவேன்; உம் பெயருக்குப் புகழ்மாலை சாற்றுவேன்.)

இவ்வாறு இயேசுவின் தொன்டர் நிலை (διάκονος தியாகொனொஸ்) யூதரையும் யூதரல்லாதோரையும் ஒருவர் மற்றவரை ஏற்றுக்கொள்ளவேண்டிய தேவையை ஆழப்படுத்துகிறது. (உரோமைய கிறிஸ்தவர்கள் அன்று இதை ஏற்றார்களோ என்னவோ, ஆனால் இன்று பல கிறிஸ்தவர்கள் மற்றவர்களை சக கிறிஸ்தவர்களை சமமானவர்களாக ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர் அத்தோடு அதற்கு மடத்தனமாக வியாக்கியானங்களையும் முன்வைக்கின்றனர்). 

மத்தேயு 3,1-12
திருமுழுக்கு யோவான் விண்ணரசின் வருகையை அறிவித்தல்
(மாற் 1:1 - 8; லூக் 3:1 - 9, 15 - 17; யோவா 1:19 - 28)

1-2அக்காலத்தில் திருமுழுக்கு யோவான் யூதேயாவின் பாலை நிலத்துக்கு வந்து, 'மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' என்று பறைசாற்றி வந்தார். 3இவரைக் குறித்தே,
'பாலைநிலத்தில் குரல் ஒன்று
முழங்குகிறது: ஆண்டவருக்காக
வழியை ஆயத்தமாக்குங்கள்;
அவருக்காகப் பாதையைச்
செம்மையாக்குங்கள்'
என்று இறைவாக்கினர் எசாயா உரைத்துள்ளார். 4இந்த யோவான் ஒட்டக முடியாலான ஆடையை அணிந்திருந்தார்; தோல் கச்சையை இடையில் கட்டி இருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார். 5எருசலேமிலும் யூதேயாமுழுவதிலும் யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகளனைத்திலும் 
இருந்தவர்கள் அவரிடம் சென்றார்கள். 6அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்றுவந்தார்கள். 7பரிசேயர், சதுசேயருள் பலர் தம்மிடம் திருமுழுக்குப் பெற வருவதைக் கண்டு அவர் அவர்களை நோக்கி, 'விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்? 8நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள். 9'ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை' என உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ள வேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன். 10ஏற்கெனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும். 11நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். 12அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார்; தம் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்' என்றார்.


மத்தேயு நற்செய்தியின் ஆசிரியத்துவமும் காலமும்:
(கடந்த வாரத் தொடர்ச்சி)

ஆரம்ப கால பாரம்பரியம் இந்த நற்செய்தியை கப்பாநாகுமை சேர்ந்த லேவியான மத்தேயுவே எழுதினார் என நம்புகிறது (காண்க மத் 9,9). அத்தோடு முதல் மத்தேயு நற்செய்தி கிரேக்கத்திலல்ல மாறாக அரமாயிக்கத்தில் எழுதப்பட்டது என்ற ஒரு பாரம்பரிய நம்பிக்கையும் இருக்கிறது. இந்த இரண்டு சிந்தனைகளையும் இன்றைய மத்தேயு ஆய்வாளர்கள் பலர் ஏற்றுக்கொள்வதில்லை. 
நம்மிடம் உள்ள மத்தேயு கிரேக்க நற்செய்தி ஒரு மொழிபெயர்ப்பு என்ற எண்ணத்தை தராது அது மாற்கு, லூக்கா நற்செய்திக்கு எந்த விதத்திலும் குறையாமல் நல்ல கிரேக்க மொழியிலே எழுதப்பட்டுள்ளது. ஆரம்பகால கிறிஸ்தவர்கள் எபிரேய அல்லது அரமாயிக்க மத்தேயு நற்செய்தியை பாவித்திருக்கலாம் ஆனால் அவைதான் நம்முடைய இந்நாள் கிரேக்க நற்செய்தி என்றும் சொல்வதிற்கில்லை. பபியாஸ் என்ற ஒரு ஆரம்ப கால எழுத்தாளர் ஒருவரே மத்தேயுவின அரமாயிக்க நற்செய்தி வாசகங்கள் பற்றி முதல்முதலில் குறிப்பிடுகிறார், ஆனால் அவர் எதனை குறிப்பிடுகிறார் என்பதும் தெளிவில்லை. ஆக மத்தேயு நற்செய்தி அரமாயிக்கத்தில்தான் எழுதப்பட்டது என்பதை நிறுவுவது மிகக் கடினம். அதேவேளை நம்முடைய இந்த கிரேக்க நற்செய்திக்கு திருத்தூதர் மத்தேயுவைவிட வேறு ஒரு பொருத்தமான ஆசிரியரைக் கண்டுபிடிப்பதும் கடினமாக உள்ளது. 
வரிதண்டுவோராக இருந்து மனமாற்றமடைந்த திருத்தூதர் மத்தேயு இதன் ஆசிரியராக இருப்பதுபோல பல உள்ளக காரணிகள் இருக்கின்றன. முக்கியமாக இவருடைய யூத எதிர்ப்பு பார்வையை குறிப்பிடலாம். ஆயக்காரர்கள் பத்திரங்களையும், கணக்குகளையும் பாதுகாப்பதில் வல்லவர்கள் இந்த சாயலை மத்தேயு நற்செய்தியில் இலகுவாக காணலாம். இருப்பினும் இவை மத்தேயுதான் இதன் ஆசிரியர் என்பதற்கு போதுமான சான்றுகள் அல்ல. மத்தேயு நற்செய்தியும் எந்த இடத்திலும் இதன் ஆசிரியரை பற்றி குறிப்பிடவில்லை. 
பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை மத்தேயுவின் ஆசிரியத்துவம் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. மாற்கு நற்செய்தியின் முக்கியத்துவத்தின் அறிவு மத்தேயு நற்செய்தி மாற்குவிலும் பிந்தியது என்ற வாதத்தை முன்வைக்க தொடங்கியது. இவ்வாறு இந்த நற்செய்தி முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுதப்பட்டது என நம்பப்பட்டது. மாற்குவின் முக்கியத்துவமும் (Markan Priority) இப்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. இதனால் பலர் மத்தேயுவின் காலத்தை மத்தேயு நற்செய்தியிலிருந்தே கணிக்க வேண்டும் என நம்புகிறார்கள். 
கி.பி 70 ஆண்டில் எருசலேம் தேவாலயம் அன்றைய உரோமைய தளபதியும் பின்நாள் சீசருமான தீத்துவினால் அழிக்கப்பட்டது, இது மத்தேயு நற்செய்தியில் ஒரு முக்கியமான பார்வை. மத்தேயு இதனை எதிர்கால நிகழ்வாக இயேசுவின் வாயில் வைத்தாலும், மத்தேயுவின் ஆசிரியர் எருசலேம் அழிவின் பின்னர்தான் இந்த நற்செய்தியை எழுதினார் என பலர் நம்புகின்றனர். இந்த வாதத்தை எதிர்பவர்களும் 
இல்லாமல் இல்லை. ஏனெனில் சில இடங்கள் எருசலேம் தேவாலயத்தின் இருப்பை அழகாக வர்ணிக்கின்றன காண்க (5:23-24 17:24-27 23:16-22). எப்படியாயினும் பலருடைய கருத்துப்படி இந்த நற்செய்தி கி.பி 60-80 ம் ஆண்டுகளிலே எழுதப்பட்டிருக்க வேண்டும். 

விரிவுரை:
மத்தேயு நற்செய்தியின் முதல் இரண்டு அதிகாரங்களும் இயேசுவின் குழந்தை பருவத்தைபற்றி விவரிக்கின்றன. பதினேழு வசனங்களை மட்டுமே கொண்டுள்ள இந்த மூன்றாம் அதிகாரம் திருமுழுக்கு யோவானையையே மையப்படுத்துகின்றது. திருமுழுக்கு யோவான் ஒரு முக்கியமான நபராக அக்காலத்தில் 
இருந்ததாலும், திருமுழுக்கு யோவானின் ஒரு சக்திமிக்க குழு அவரைத்தான் மெசியாவாக கருதியதாலும் மத்தேயு ஆசிரியருக்கும் யோவானைப் பற்றி எழுதவேண்டிய தேவையிருந்தது எனலாம். இந்த பன்னிரண்டு வசனங்கள் திருமுழுக்கு யோவான் யார்? அவர் பணி என்ன? அவருக்கும் இயேசுவிற்கும் தொடர்பென்ன? என்பதை சுருக்கமாக ஆனால் ஆழமான இறையியல் சிந்தனையில் காட்டுகிறது. மத்தேயு ஒரு ஆயக்காரர் என்பதால் என்னவோ, இந்த மூன்றாவது அதிகாரத்திலும் மறைமுகமாக இயேசுவையே காதாநயகனாக வைக்கிறார். 

வ.1: திருமுழுக்கு யோவானை திடீரென மத்தேயு அறிமுகப்படுத்துகிறார். லூக்கா நற்செய்தியின் உதவியுடன் யோவானின் பின்புலத்தை அறிதுள்ள நாம் இதனை சார்பாக எடுக்கின்றோம். ஆனால் மத்தேயு யோவானின் குழந்தை பருவ நிகழ்ச்சியை குறிப்பிடாமல் இருப்பதற்கு முக்கியமான காரணங்கள் இருந்திருக்கும். முக்கியமாக மத்தேயு எந்த இடத்திலும் இயேசுவின் முக்கியத்துவத்தை குறையாமல் பார்ப்பார். திருமுழுக்கு யோவானின் காலத்தில் இந்த யூதேயாவின் பாலைநிலத்தில் (ἐρήμῳ τῆς Ἰουδαίας) பலர் உலகத்தையும் உரோமை அடக்குமுறையையும் வெறுத்து கடவுளை மட்டுமே நினைக்க பாலைவன வாழ்க்கை வாழ்ந்தனர் என சில ஆய்வுகள் காட்டுகின்றன. 

வ.2: திருமுழுக்கு யோவானின் முதலாவதும் மிக முக்கியமான நற்செய்தியாக 'மனமாறுங்கள், வானக அரசு நெருங்கிவந்துவிட்டது' என்பதாகும் (μετανοεῖτε· ἤγγικεν γὰρ ἡ βασιλεία τῶν οὐρανῶν). இங்கே அவதானமாக நோக்கப்படவேண்டியது, மத்தேயு இறையரசு என்று சொல்ல மாட்டார் மாறாக விண்ணரசு என்றே சொல்வார். இதற்கு மிக முக்கிய காரணம் இருக்கிறது. இறையரசு (ἡ βασιλεία τοῦ θεοῦ) என்றால் அது யூத கிறிஸ்தவர்களுக்கும் அல்லது யூத வாசகர்களுக்கும் சிலைவழிபாடாக அல்ல தேவநிந்தனையாக இருக்கலாம் எனவே அவர் எபிரேய சிந்தனையான வானரசு (βασιλεία τῶν οὐρανῶν) என்ற அழகான பதத்தை பாவிக்கிறார்.
திருமுழுக்கு யோவானின் இந்த அவரச பிரகடணம் முதல் ஏற்பாட்டு இறைவாக்கினர்களை நமக்கு நினைவூட்டும். இங்கே ஒரு அவசரம் தெரிகிறது. மத்தேயு பிற்பகுதியில் இயேசுவும் இதே வார்த்தைகளை பாவிப்பதை காட்டுவார் (காண்க 4,17: 10,7). 

வ.3: மத்தேயுவின் கருத்துப்படி யோவான்தான் எசாயா குறிப்பிகின்ற பாலைவனக் குரல் (✽காண்க எசாயா 40,3). ஆனால் எசாயாவின் (40,3) இறைவாக்கிற்கும், மத்தேயு அதனை குறிப்பிடுகின்ற விதத்திற்கும் முக்கியமான வேற்றுமை காணப்டுகிறது.

Is. 40:3 φωνὴ βοῶντος ἐν τῇ ἐρήμῳ Ἑτοιμάσατε τὴν ὁδὸν κυρίου, εὐθείας ποιεῖτε τὰς τρίβους τοῦ θεοῦ ἡμῶν·  (செப்துவாஜிந்து - குரலொலி ஒன்று முழங்குகின்றது, பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள், பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள்.)

ק֣וֹל קוֹרֵ֔א בַּמִּדְבָּ֕ר פַּנּ֖וּ דֶּ֣רֶךְ יְהוָ֑ה יַשְּׁרוּ֙ בָּעֲרָבָ֔ה מְסִלָּ֖ה לֵאלֹהֵֽינוּ׃ Is. 40:3
(எபிரேய விவிலியம் - குரலொலி ஒன்று முழங்குகின்றது, பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள், பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள்)

Mtt. 3:1. φωνὴ βοῶντος ἐν τῇ ἐρήμῳ· ἑτοιμάσατε τὴν ὁδὸν κυρίουஇεὐθείας ποιεῖτε τὰς τρίβους αὐτοῦ. 
(கிரேக்க மத்தேயு - பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்.)

முதல் இரண்டு இடத்திலும் பாலைநிலத்தில்தான் ஆண்டவருக்கு பாதையொன்றை தயார்படுத்த கேட்க்கப்படுகிறன. ஆனால் மத்தேயு சுதந்திரமாக இந்த இறைவாக்கை மாற்றி, அதனை திருமுழுக்கு யோவானின் குரலாகவும், பாலைநிலத்தில் அல்ல மாறாக முழு உலகத்தையும் இயேசுவிற்காக தயார் படுத்தக் கேட்கிறார். இதிலிருந்து மத்தேயுவின் புலமைத்துவமும், முதல் ஏற்பாட்டில் அவருக்கிருந்த அறிவும் புலப்படுகிறது. 
(✽குரலொலி ஒன்று முழங்குகின்றது, பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள், பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள்.)

வ.4: யோவானின் நடை, உடை மற்றும் பாவனை விவரிக்கப்படுகிறது. யோவானின் உடையும் நடையும் எருசலேமில் செல்வத்திலிருந்த பல குருக்களின் வாழ்க்கைக்கு எதிராக இருக்கிறதை மத்தேயு காட்டுகிறார். இவரின் உணவும் அவரின் ஆடையும் அவரின் பாலைவன வாழ்க்கையைக் காட்டுகிறது. இவருடைய தோற்றம் இறைவாக்கினர் எலியாவை நினைவூட்டுகிறது (✽காண்க 2அரச1,8). வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் பாலைவனத்தில் மக்கள் உண்ட பொதுவான உணவு அத்தோடு அதனை லேவியர் சட்டம் தூய்மையான உணவாக ஏற்றிருந்தது (✽✽காண்க லேவி 11,22)

(✽அவனுக்கு அவர்கள் மறுமொழியாக, 'அவர் மயிரடர்ந்த மனிதர்; இடையில் தோற்கச்சை அணிந்திருந்தார்' என்றனர். அப்பொழுது அவன், 'அந்த ஆள் திஸ்பேயைச் சார்ந்த எலியாதான்!' என்றான்.)

(✽✽ நீங்கள் உண்ணக்கூடியவை தத்துக்கிளி, அதன் இனம்; வெட்டுக்கிளி, அதன் இனம்; மொட்டை வெட்டுக்கிளி, அதன் இனம்; சுவர்க்கோழி, அதன் இனம்.)

வவ.5-6: இந்த வசனத்தின் மூலம் அனைவரும் யோவானை இறைவாக்கினராக ஏற்றதையும் அவரை 
இறைவாக்கினராக ஏற்றதையும் மத்தேயு குறிப்பிடுகிறார். ஆக இவர்தான் எலியாவின் வருகை என்பதை அறிந்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் இந்த புதிய எலியா சுட்டிக்காட்டிய மெசியாவை ஏற்க மறுத்தனர் என மறைமுகமாக கிண்டல் செய்கிறார். 

வ.7: மத்தேயுவிற்கு பரிசேயரையும் சதுசேயரையும் மிகவே பிடிக்காது. இவரின் கருத்துப்படி உரோமையரை விட இயேசுவின் பாடுகளுக்கு இவர்களே காரணம். மத்தேயு இவர்களை விரியன் பாம்புக்குட்டிகளாக்குகிறார். தொடக்க நூலில் பாம்புதான் முதல் பெற்றோரின் வீழ்ச்சிக்கு காரணம் சாத்தான். பாம்பு சாத்தானாகவும், சுழ்ச்சியின் அடையாளமாகவும் கருதப்பட்டது. இவர்களை மத்தேயு விரியன் பாம்புகளாக்குவது (ἔχιδνα- விரியன் குட்டிகள், பாம்புக்குணம் உடையவர்கள்) சற்று அதிகம்தான். 

வ.8: உண்மையான மனமாற்றம் செயல்களில் வரவேண்டும் வெளியடையாளங்கள் முக்கியமல்ல என்பது யோவானின் கருத்து. இதன்படி இவர்களின் மனமாற்றம் வெறும் வெளிவேடமே. 

வ.9: சதுசேயர்கள் மற்றும் பரிசேயர்கள் தங்களை ஆபிரகாமின் மக்கள் என்று சொல்லி மார்தட்டுபவர்கள் என்று யோவான் சாடுகிறார். ஆபிரகாம் இவர்களுக்கு ஒரு முக்கியமான அடையாளம். ஆனால் கடவுள் முன் இவர்களின் பெறுமதி கற்களைவிடவும் குறைவானது என யோவான் காட்டுகிறார். இந்த வசனம் மிகவும் காட்டமானதாக இருந்தும் இவர்கள் யோவானை சத்தமின்றி ஏற்றுக்கொள்கின்றனர். 

வ.10: கிளைகளை வெட்டுவது மரத்தை வளர்க்க, ஆனால் வேரருகே கோடரி வைக்கப்படுவது பலன்தராத மரத்தை வேரோடு வெட்டி அழிக்கவே. இப்படியாக யோவானின் கருத்துப்படி கடவுளின் தண்டனை மனந்திரும்புவதற்காக அல்ல மாறாக இறுதியழிப்பிற்காக, அத்தோடு ஆபத்து மிக அருகில் இருக்கிறது என்பதையும் இது காட்டுகிறது. 

வ.11-12: இயேசுவின் உயர்தன்மை யோவானுடன் ஒப்பிடப்படுகிறது:

அ. யோவானின் திருமுழுக்கு தண்ணீரால் கொடுக்கப்படும் மனமாற்ற அடையாளம்.
ஆ. இயேசு யோவானைவிட வலிமையானவர், அவர் மிதியடியைகூட யோவானால் கழற்ற முடியாது. 
இ. இயேசுவின் திருமுழுக்கு தூய ஆவியால் கொடுக்கப்படும். 
ஈ. இவரின் திருமுழுக்கு மனமாற்றத்தையும் தாண்டி இறை நீதியையும் காட்டுகிறது.  
சுளகினால் பதரை பிரித்தல் என்பது நன்கு தெரிந்த ஒரு விவசாய அறுவடை அடையாளம். இதனை அழகாக மத்தேயு (திருமுழுக்கு யோவான்) பயன்படுத்துகிறார். இந்த அடையாளம் இறுதிநாள் தண்டனை பற்றிய கருத்தையும் குறிக்கும். 
மத்தேயு இந்த பகுதி மூலமாக திருமுழுக்கு யோவானை கொச்சைப்படுத்துகிறார் என்ற எடுக்க முடியாது. இங்கே அவர் இயேசுவையே மையப்படுத்துகிறார். அவருடைய பார்வை சதுசேயர் பரிசேயர் மேலேயே அதிகமாக இருக்கிறது. 

திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு இறை அன்பை மையப்படுத்துகிறது. 
இறை அன்பு பல வடிவங்களில் தரப்படும் ஒரு இனிமையான அனுபவம். 
அதனை புத்தகத்திலும் செபத்திலும் மட்டும் தேடி உணராமல்,
 வீட்டிலிலும் தேடுவோம், உணருவோம். ஆமென். 

மி. ஜெகன் குமார் அமதி
தூய பிரான்சிஸ்கு சவேரியார் ஆலயம், கட்டைக்காடு
புத்தளம்.
புதன், 30 நவம்பர், 2016





செவ்வாய், 22 நவம்பர், 2016

திருவருகைக் காலம் முதலாம் ஆண்டு (அ) 2016 முதலாம் ஞாயிறு 27,11,2016 1st Sunday of Advent 


திருவருகைக் காலம் முதலாம் ஆண்டு (அ) 2016
முதலாம் ஞாயிறு
27,11,2016 1st Sunday of Advent 

முதல் வாசகம்: எசாயா 2,1-5
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 122
இரண்டாம் வாசகம்: உரோமையர் 13,11-14
நற்செய்தி: மத்தேயு 24,37-44            

திருவருகைக் காலம் 
ஒவ்வொரு திருச்சபைகளிலும் திருவருகைக் காலம் வௌ;வொரு விதமாகக் கொண்டாடப்படுகிறது. கத்தோலிக்க திருச்சபையில் கி.பி. 480ம் ஆண்டுகளிலிருந்து இந்த வழிபாட்டு முறை நடைமுறையில் உள்ளது. சிலர் இதனை பேதுருவின் காலத்துடனும் இணைக்கப் பார்க்கின்றனர், இஅதற்கு வாய்மொழிப் பாரம்பரியம் மட்டுமே சாட்சியமாக உள்ளது. 'திருவருகை' என்ற சொல் கிரேக்க παρουσία பருசியா என்ற மூலச் சொல்லிலிருந்து வருகிறது. இதன்இலத்தின் வடிவமாக அத்வென்துஸ் யனஎநவெரள என்ற சொல் இருக்கிறது, இதிலிருந்துதான்ஆங்கில adventus அட்வென்ட் என்ற தற்போதைய சொல் உருவாகியிருக்கிறது. 
பரூசியா என்பது ஆரம்ப கால கிரேக்க நம்பிக்கையில் மனிதர்களின் கூட்டத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட தெய்வத்தின் வருகையைக் குறித்தது. பின்னர் கிரேக்க-உரோமையர்கள் காலத்தில் இது ஆட்சியாளர்களின் வருகையைக் குறிக்க பயன்பட்டது. சீசர்கள், அரசர்கள், ஆட்சியாளர்கள், தங்கள் மக்களை சந்திக்க, அவர்கள் இடங்களுக்கு எப்போதாவது வருவது வழமை, அவர்களின் வருகைக்காக மக்கள் காத்திருப்பர். இந்த நிகழ்வு அக்காலத்தில் வழக்கிலிருந்த ஒரு சாதாரண அரசியல் நிகழ்வு. 
கிறிஸ்தவம் வளர்ந்ததன் பின்னர், இயேசுவின் இரண்டாம் வருகையை நினைவூட்டும் விதமாக இந்த பரூசியா என்ற சொல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக பயன்படுத்தப்பட தொடங்கியது. இது இரண்டு விதமான வருகையை கிறிஸ்தவர்களுக்கு நினைவூட்டுகிறது. முதலாவது வருகை மெசியாவின் பிறப்பிற்காக காத்திருந்த வருகையாகவும், இரண்டாவது வருகை இந்த மெசியா இரண்டாவது தடவையாக வருவதற்கான காத்திருத்தலாகவும் இருக்கின்றன. திருவருகைக் காலம் உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் ஒரு வழிபாட்டு ஆண்டை ஆரம்பித்து வைக்கிறது, இவ்வாறு இந்த ஆண்டு (அ-மத்தேயு) ஆண்டாக இன்றிலிருந்து ஆரம்பிக்கின்றது. இந்த காலத்தில் நத்தார் மலர்-வலயம், நத்தார் இசைப் பாடல்கள், நத்தார் கால அட்டவணை, நத்தார் சோடினைகள், மற்றும் நத்தார் கொண்டாட்டங்கள் என நம் வீடுகளையும் ஆலயங்களையும் அலங்கரிக்கும். கீழைத்தேய கிறிஸ்தவர்கள் இந்த காலத்தில் நத்தார் உணவுத்தவிர்ப்பு என்ற நிகழ்வை 40 நாட்களுக்கு தவமாக மேற்கொள்கின்றனர், இந்த மரபு பல காலங்களுக்கு முன்பு கத்தோலிக்க திருச்சபையின் வழகிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது.
இந்த நாட்களின் வழிபாட்டு வாசகங்களின் கருப்பொருளாக இயேசுவின் இரண்டாம் வருகையும் அத்தோடு அவரின் வரலாற்று பிறப்பு நிகழ்வும் திகழ்கின்றன. கத்தோலிக்க திருச்சபை இந்த நான்கு வாரங்களை இரண்டாக பிரித்து, முதலாவது பகுதியாக, திருவருகைக் கால முதல் ஞாயிறிலிருந்து டிசம்பர் 16ம் திகதிவரை உள்ளதை, இயேசுவின் இரண்டாம் வருகைக்கான ஆயத்தமாகவும் (பரூசியா): இரண்டாவதாக, 17ம் திகதியிருந்து 24ம் திகதிவரையான நாட்களை இயேசுவின் முதலாவது வருகையான அவரது வரலாற்று பிறப்பு மகிழ்சியை நினைவு கூருவதாகவும் (நத்தார்) அமைத்துள்ளது. இந்த காலம் ஒர் ஆயத்த காலமாக இருப்பதனால், தபசு காலத்தைப்போல் ஊதா நிற ஆடைகள் வழிபாட்டில் அணியப்படுகின்றன. ஐரோப்பிய திருச்சபையிலும் மற்றும் அனைத்துலக திருச்சபையிலும் இந்த காலத்திற்கென்று பல தனித்துவமான கிறிஸ்து பிறப்பு பாடல்கள் இன்னும் அழியாமல் பாவனையில் உள்ளன. வட ஐரோப்பிய நாடுகளில் பல விதமான அத்வென்துஸ் பாரம்பரிய நிகழ்வுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்த நாட்களில் வரும் நான்கு வாரங்களில் முதலாவது வாரத்திற்கு நம்பிக்கையின் மெழுகுவர்த்தியும், இரண்டாவது வாரத்திற்கு பெத்லேகேம் மெழுகுவர்த்தியும், மகிழ்ச்சியை குறிக்கும் (Gaudete) எனும் மூன்றாவது வாரத்திற்கு ரோசா வண்ண மெழுவர்த்தியும், 
இறுதியாக வானவர்களின் மகிழ்ச்சி செய்தியைக் குறிக்கும் விதமான நான்காவது மெழுகுவர்த்தியாக வானதூதர் மெழுகுவர்த்தியும் (வெள்ளை) ஏற்றப்படுகின்றன. இருபத்திநான்காம் நாள் மாலைப் பொழுதில் ஆண்டவரின் பிறப்பை குறிக்கும் விதமாக ஐந்தாவது மெழுகுதிரி ஒன்றும் ஏற்றப்படுகின்றது. கிறிஸ்து பிறப்புக் காலம் பல பரிசில்களையும், மகிழ்வான தருணங்களையும் நினைவுபடுத்துவதால் இதனை குழந்தைகளின் காலம் என்றும் அழைக்கின்றனர். ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் நத்தார் பல குழந்தை பருவ நிகழ்வுகளை நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.  

எசாயா 2,1-5
1யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சியின் மகன் எசாயா கண்ட காட்சி: 2இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும்; எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்; மக்களினங்கள் அதைநோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள். 3வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து 'புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்; யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம். அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்; நாமும் அவர் நெறிகளில் நடப்போம்' என்பார்கள். ஏனெனில், சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும்; எருசலேமிலிருந்தே ஆண்டவரின் திருவாக்கு புறப்படும். 4அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்; பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்; அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெற மாட்டார்கள். 5யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்; 

எசாயா தென்நாட்டின் முக்கியமான அரசியல் காலத்தில் தென் அரசவையில் பணியாற்றிய ஒரு பெரிய இறைவாக்கினராக அறியப்படுகிறார். கிமு. ஏழாம் நூற்றாண்டில் பணியாற்றிய இவரது காலத்தின் பின்பகுதியில் வட நாடான இஸ்ராயேல் அசிரியரிடம் வீழ்ந்து அழிந்தது. சகோதர நடானான, வட அரசு-இஸ்ராயேலும், நட்பு நடான சீரியாவும் அசிரியாவை எதிர்க்க தங்கள் அணியில் யூதாவையும் சேருமாறு வற்ப்புறுத்தினர். இந்த அணியில் சேரவேண்டாம் என எசாயா யூதா அரசனை எச்சரித்தார், அவனும் பணியவே, அந்த கூட்டணி முதலில் யூதேயா மீது படையெடுத்தனர். இந்த போரை யூத-எபிராயிம் போர் என வரலாற்று ஆசிரியர்கள் கணிக்கின்றனர். இந்த சிக்கலான காலப்பகுதியில் யூதேயா அரசன் கடவுளை நம்பாமல் அசீரியாவை நம்பினான் இதனால் கடவுளால் புறக்கணிக்கப்பட்டான். அவன் யாரை நம்பினானோ அவர்களே பிற்காலத்தில் யூதேயா மீது படையெடுத்தனர். அவர்கள் யூதேயாவின் வட நகர்களையும் கைப்பற்றினர். இந்த அரசனின் (ஆகாஸ்) தவறான அரசியல் நகர்வு, தங்கள் சகோதர நாட்டை (இஸ்ராயேலை) இல்லாமல் ஆக்கியது அத்தோடு தங்கள் சொந்த சுதந்திரத்தையும் 
இழக்கவைத்தது. இப்படியான காலகட்டத்திலே எசாயா இறைவாக்குறைக்கிறார்.  
இறைவாக்கினர் புத்தக குழுவிலே எசாயா புத்தகம் மிக பெரிய புத்தகமாக இருக்கிறது.
இந்த புத்தகம் மொத்தமாக அறுபத்தாறு அதிகாரங்களைக் கொண்டுள்ளது. தற்கால எசாயா ஆய்வாளர்கள் இந்த 66 அதிகாரங்களையும் ஒரு இறைவாக்கினர்தான் எழுதினார் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். இந்த அதிகாரங்களை மூன்றாக பிரித்து அவற்றை முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது எசாயா என்று காண்கின்றனர். அத்தோடு அவற்றை முறையே இடப்பெயர்வுக்கு முன் (பபிலோனிய), 
இடப்பெயர்வின் போது, மற்றும் இடப்பெயர்வின் பின் என்று பிரிக்கின்றனர். மெசியா பற்றிய இறைவாக்கு, சமூக நீதி, நீதிமான் வாழ்க்கைமுறை, வல்லமை, நம்பிக்கைபோன்ற இறைவாக்குகளால் இன்றும் எபிரேய இறைவாக்குகளில் மங்காத நட்சத்திரமாக இது துலங்குகின்றது. 
இன்றைய வாசகம் முதலாவது எசாயா புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி கடவுள் தரும் முடிவில்லை அமைதியைப் பற்றி இறைவாக்குறைக்கிறது. அத்தோடு இது கடவுளின் நகரைப்பற்றி ஆய்வு செய்கிறது. 

வ.1: இந்த வரி இறைவாக்கினர் எசாயாவை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. ஏற்கனவே முதல் அதிகாரம் முதலாம் வசனத்தில் எசாயா அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார், இருப்பினும் இங்கு மீண்டும் எருசலேம், யூதாவுடன் இணைக்கப்பட்டு எசாயா அறிமுகப்படுத்தப்படுகிறார். எசாயா ஆமோட்சின் மகன் எனப்படுகிறார் (יְשַׁעְיָהוּ בֶּן־אָמוֹץ யெஷாயாஹஉ பென் அமோட்ஸ்). பின்வரும் வரிகள் எசாயாவின் காட்சிகள் என ஆசிரியரால் முன்வைக்கப்படுகின்றன. 

வ.2: இந்த வரி எருசலேமைப் பற்றிய இறைவாக்குகளில் மிக முக்கியமானது. எருசலேம் ஒரு மலையில் அமைந்துள்ளது. அதனை ஒரு குன்று என்று கூடச் சொல்லலாம். தாவீது, சீயோன் குன்றின்மீது தன் நகரை அமைத்தார், ஆனால் சாலமோன் அதன் வடக்கு மலையையும் இணைத்து எருசலேமை பெரிய நகராக்கினார். இந்த பெரிய மலையில்தான் எருசலேம் தேவாலயம் அமைந்தது. ஆக எசாயாவின் இந்த இறைவாக்கு அனைத்து எருசலேம் மலைக் குன்றையும் குறிக்கும் அல்லது முழு நகரையும் குறிக்கிறது என எடுக்கலாம். எசாயா முதலாவதாக இறுதி நாட்களைப் பற்றி குறிப்பிடுகிறார். எருசலேம் எதிரிகளிடம் விழப்போகிறது என்பதை நன்கு அறிந்திருக்கிறார் போல. இந்த இறைவாக்கின் ஒளியில், எருசலேம் இன்னும் அனைத்து மலைகள் மற்றும் குன்றுகளின் முதன்மையானதாக இல்லை என்பது புலப்படுகிறது. மக்களினங்கள் எருசலேமை நோக்கி சாரை சாரையாக வருவர் என்கிறார் எசாயா. எபிரேய விவிலியம் மக்கள் வெள்ளமாக திரண்டு வருவர் என்றே கூறுகிறது (נָהֲרוּ  אֵלָיו כָּל־הַגּוֹיִֽם׃). யார் இந்த மக்களினம் என்பதில் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இது யூதர்களை மட்டுமல்லாது அனைத்து மக்களையும் குறிப்பது போல உள்ளது, அனைத்து மக்களையும் குறிக்க பயன்படும் சொல்தான் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. (גּוֹיִֽם கொய்யிம்).

வ.3: இரண்டாவது வசனத்திலிருந்த மயக்கத்தை இந்த மூன்றாவது வசனம் தெளிவுபடுத்துகிறது. வேற்றின மக்கள் என்படுவபர் யூதரல்லாதவரைக் குறிக்கிறது. வேற்றின மக்கள் என தமிழ் விவிலியம் குறிப்பிடுபவர்களை, எபிரேய விவிலியம் 'அனைத்து மக்களினங்கள்' என்றே குறிப்பிடுகின்றது (עַמִּים רַבִּים). எருசலேமிற்கு, கடவுளின் மலை (הַר־יְהוָה ஹார் அதோனாய்) மற்றும் யாக்கோபின் கடவுளின் இல்லம் 
(בֵּית אֱלֹהֵי יַעֲקֹב பேத் எலோஹாய் யாகோவ்) என்ற பெயர்களைக் கொடுக்கின்றனர். அத்தோடு அங்கு கடவுள் தமக்கு ஆசிரியரைப்போல் கற்பிப்பார் எனவும், தாங்களும் கற்பிக்கப்பட ஆயத்தமாயிருப்போம் எனவும் மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர். கடவுள் கற்பிக்கிறார் ஆனால் நாம்தான் படிக்க ஆயத்தமாயிருக்க வேண்டும் என்பது அழகான சிந்தனை. 
திருச்சட்டமும் (תוֹרָה ஹ தோறா), திருவாக்கும் (דְבַר־יְהוָה தெவர் அதோனாய்) சீயோனிலிருந்தே புறப்படும் என்பது இஸ்ராயேலர்களின் முக்கியமாக தென்நாட்டவரின் (யூதேயா) அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த நம்பிக்கை பலகாலமாக இருந்ததை சமாரியப் பெண்ணின் இயேசுவுடனான உரையாடல் காட்டுகின்றன. அங்கே இன்னோர் அர்த்தத்தில் இயேசு அந்த சமாரியப் பெண்ணுடன் உரையாடுகிறார், அத்தோடு உண்மை வழிபாடு எருசலேமில் அல்ல மாறாக உள்ளத்தில் ஆவியிலே என்று இன்னோர் அத்தியாயத்திற்கு இயேசு நம்மை அழைக்கிறார் (காண்க யோவான் 4,20-26). 

வ.4: ஆண்டவரின் குணாதிசியங்களை இந்த வரி அழகாகவும் ஆழமாகவும் படம்பிடிக்கிறது. 
அ. ஆண்டவர் வேற்றினத்தாரின் வழக்குகளை தீர்க்கிறார்
ஆ. மக்களுக்கு தீர்ப்பளிக்கிறார் 
(இந்த இரண்டு பண்புகளும் கடவுளை குறைவுபடாத அரசராகக் காட்டுகின்றன)
இ. வாள்கள், கலப்பைக் கொளுக்களாகவும்: ஈட்டிகள், கருக்கரிவாள்களாகவும் மாறும்.  ஆரம்பத்திலிருந்தவை கலப்பைகளும் அரிவாள்களுமே ஆனால் மனிதரின் பேராசை ஈட்டிகளையும், வாள்களையும் கண்டுபிடித்தது. முன்னயவை வாழ்வு தரக்கூடியவை, பின்னயவை சாவை வருவிப்பபது. ஆண்டவர் சாவையல்ல மாறாக வாழ்வைத் தருவார் என்கிறார் எசாயா. 

ஈ. போர்ப்பயிற்சி தேவையில்லை: போர்பயிற்சி போர்வருவதற்கான ஆயத்தமாகும், அத்தோடு அது மற்றய மனிதர்களில் நம்பிக்கையில்லாத தன்மையைக் காட்டுகிறது. இங்கே போர்ப்பயிற்சி தேவையில்லை என்பது, மற்றவர் மேல் இனி சந்தேகம் தேவையில்லை என்பதைக் காட்டுகிறது. 
எசாயா கண்ட அமைதியான அரசில் சாயல்கள் சிலநாடுகளில் ஏற்கனவே வந்துவிட்டது, ஆனால் இன்னும் பல நாடுகளில் அரிவாள்கள் மற்றும் கலப்பைக் கொளுக்களைவிட பல நூறு மடங்கு ஆயுதங்கள்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.  

திருப்பாடல் 122
(இந்த திருப்பாடல் சென்ற வாரம் எடுக்கப்பட்ட அதே திருப்பாடல், புதிய நன்பர்களுக்காக மீள தரப்படுகிறது.) 

1'ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்', என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். 2எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். 
3எருசலேம் செம்மையாக ஒன்றிணைத்துக்கட்டப்பட்ட நகர் ஆகும். 
4ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். 
5அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். 6எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்; 'உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக! 
7உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக! 8உன்னுள் சமாதானம் நிலவுவதாக!' என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன். 
9நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன்.

எருசலேம் மலையை நோக்கி, அல்லது அங்கே அமைந்திருந்த சாலமோனின் ஆலயத்தை நோக்கி இஸ்ராயேல் விசுவாசிகள் கால்நடையாகவும், விலங்குகளிலும் வருவது வழக்கம், அப்போது அவர்கள் பல பிரயாணப் பாடல்களைப் பாடுவார்கள். அவற்றில் இந்த திருப்பாடல் 122ம் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். இந்தப் பாடல் கடவுளின் பிரசன்னத்தையும், எருசலேமின் புகழையும், தாவீது வீட்டாரின் அரியணையையும், மற்றும் எருசலேமின் சமாதானத்தைப் பற்றியும் பாடுகிறது. இந்த பாடல் பிற்காலத்தில் எழுதப்பட்டிருந்தால், இந்தப் பாடல் வாயிலாக இஸ்ராயேல் பிள்ளைகள், முக்கியமாக எருசலேமை காணாதவர்கள், அதன் அழகையும் முக்கியத்துவத்தையும் உணர இது நல்ல வாய்ப்பாக இருந்திருக்கும். 

வ.1: இந்த பாடலின் முன்னுரை குறிப்பாக, தாவீதின் எருசலேம் மலையேறு பாடல் என்றிருக்கிறது. 
இஸ்ராயேலருக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பது எந்த விதமான செல்வமுமல்ல மாறாக எருசலேமிற்கு போவதற்கான வாய்பே ஆகும் என்று பாடுகிறார் ஆசிரியர். இந்த வரியிலிருந்து, இவர்கள் எருசலேமிற்கு பல காரணங்களுக்காக குழுக்களாகச் செல்கின்றனர் என்பது புரிகிறது. எருசலேமிற்கு இன்னொரு பெயரான கடவுளின் இல்லம் (בֵּית יְהוָה பேத் அதோனாய்) கொடுக்கப்படுகிறது. 

வ.2-3: எருசலேமின் வாயிலில் நிற்பதை மகிழ்வாகக் காண்கிறார் ஆசிரியர். ஒருவேளை இதன் வாயிலிற்கு வருவதற்கு முன் அவர்கள் சந்தித்த சவால்கள் மற்றும் ஆபத்துக்களை நினைவுகூருகிறார் போல. 
எருசலேம் என்ற சொல்லின் அர்த்தமாக (יְרוּשָׁלַםִ ஜெருஷலாயிம்) பலவற்றை ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர். இவற்றில், சமாதானம், நிறைவு போன்றவை முக்கியம் பெறுகிறது. அத்தோடு கானானியரான எபூசியரின் நகர் எனவும் இதற்கு இன்னொரு பொருளுண்டு. தாவீது எபூசியரிமிருந்து 
இந்த நகரை கைப்பற்றியதாக விவிலியம் சாற்றுகின்றது. தாவீது தொடங்கி பின்னர் தென்நாட்டு தலைநகராக இருந்த இந்நகர் பல வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களால் (இஸ்ராயேலர் உட்பட) கட்டப்பட்டு அழிக்கப்பட்டது. எபூசியர், இஸ்ராயேலர், யூதர்கள், பபிலோனியர், பாரசீகர், கிரேக்கர், உரோமையர், அரபிய இஸ்லாமியர், ஐரோப்பிய கிறிஸ்தவர், பாலஸ்தினர் என்ற பலவிதமான மக்களின் கரங்களில் இது மாறி மாறி இருந்திருக்கின்றது. சிலர் இதனை அழகு படுத்தினர் பலர் இதன் அர்த்தமான சமாதானத்தையே (அமைதி) இல்லாமலாக்கினர். இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் பிரித்தானியரிடமிருந்து இது சர்வதேச தனி அலகான நகராக மாறினாலும் இன்று வரை நவீன இஸ்ராயேல் நாட்டின் கனவு தலைநகராக ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது. 
இந்த நகர், புதிய எருசலேம், பழைய எருசலேம் மற்றும் தாவீதின் நகர் என முக்கியமான மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பழைய மற்றும் தாவீதின் நகர் எருசலேம்தான் விவிலியத்தில் அறியப்பட்ட எருசலேம். இந்த சிறிய நிலப்பகுதி மதத்தாலும், மொழியாலும், இனத்தாலும் பிரிக்கப்பட்டுள்ளது. அமைதி என்ற இதன் அர்த்தத்தை கடவுள் மட்டும்தான் இந்த இடத்திற்கு கொடுக்க முடியும். இருப்பினும் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இது பல மக்களின் விசுவாசத்திற்கு சான்றாக இருந்தது என்ற காரணத்தைக் கொண்டே இதன் மாட்சியை புரிந்து கொள்ள முடியும். ஏன் இறைவாக்கினர்களும் இயேசுவும் எருசலேமை நினைத்து கண்ணீர் விட்டார்கள் என்பதை இங்கே செல்லும் ஒவ்வொருவரும் கண்டுகொள்ளவர்.
ஆசிரியர் எருசலேமை ஒற்றிணைக்கப்பட்ட நகர் என்பது அதன் உட்கட்டமைப்பை அல்லது வெளிச் சுவரைக் குறிக்கும். இருப்பினும், இங்கே பலர் ஒன்றாக கூடுவதனால் ஆசிரியர் இதனை 
இவ்வாறு அழைக்கிறார் என்றும் வாதாடுகின்றனர். 

வ.4: இந்த வரி திருப்பிக் கூறல் என்ற எபிரேய கவிநடையில் அமைந்துள்ளது. திருக்கூட்டத்தார் என்பது இங்கே இஸ்ராயேலின் அனைத்து குலங்களையும் குறிக்கிறது. அவர்கள் அங்கே கடவுளின் பெயருக்காக அதாவது கடவுளுக்காக செல்கின்றனர் என நினைவூட்டுகிறார். உண்மையில் கடவுளுக்காக அங்கே மக்கள் சென்றால் நலமாக இருக்கும், மாறாக பலர் தங்களது மாறுபட்ட, திரிக்கப்பட்ட சமய நம்பிக்கைகளுக்காக அங்கே செல்வதால்தான் மற்றய மதத்தாருடன் சண்டை போடுகிறார்கள் என நினைக்கிறேன். 

வ.5: இந்த வரியில் ஆசிரியர் முக்கியமான ஒரு வரலாற்று நம்பிக்கையை பாடுகிறார். அதாவது இங்கேதான் தாவீதின் அரியனை இருக்கிறது என்கிறார். இதனை எந்த காலத்தில் இவர் பாடுகிறார் என்பதில் மயக்கம் இருக்கிறது. இவர், பழைய தாவீதின் அரியணையை பாடுகிறாh அல்லது தற்போதும் இருக்கிற அரியணையை பாடுகிறாரா என்று கண்டுபிடிப்பது கடினம். எபிரேய வினைச் சொற்களின் கால குறிப்பை கணிப்பது அவ்வளவு இலகல்ல. 

வ.6: எருசலேமின் சமாதானத்திற்காக மன்றாடுங்கள் என்றே எபிரேயத்தில் இருக்கிறது. (אֲלוּ שְׁלוֹם יְרוּשָׁלָם) இது ஓருவேளை அங்கே சமாதானம் இல்லை அதற்காக மன்றாடுகள் என்பது போலவும் தோன்றலாம். அத்தோடு எருசலேமை அன்புசெய்வோர் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்ற ஆசீரும் 
இங்கே வழங்கப்படுகிறது. 

வ.7: எருசலேமின் கோட்டை என்பது அதன் காவல் அரண்களைக் குறிப்பது போல தோன்றினாலும் அது எருசலேமைத்தான் குறிக்கிறது. இந்த அமைதிதான் நிலைவாழ்வை தரும் என்பது மிகவும் ஆழமான எபிரேயச் சிந்தனை. 

வ.8: எருசலேமிற்கான பயணம் ஒரு சமூக பயணம் என்பதை அழகாக இந்த வரி காட்டுகிறது. சமாதனாம் ஒரு உள்ளார்ந்த அனுபவம் மட்டுமல்ல மாறாக ஒரு சமூக ஆவல் என்பதும் காட்டப்படுகிறது. 

வ.9: எருசலேம் புகழப்படுவதற்கான காரணம் தாவீதல்ல மாறாக கடவுளும் அவரின் இல்லமுமாகும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய நிதர்சனம். எருசலேமை கடவுளின் இல்லம் என்றழைத்து தொடங்கிய இந்தப் பாடல் அவ்வாறு மீண்டும் அழைத்து முடிவுறுகிறது.    

உரோமையர் 13,11-14
11இறுதிக்காலம் இதுவே என அறிந்து கொள்ளுங்கள்; உறக்கத்தினின்று விழித்தெழும் நேரம் ஏற்கெனவே வந்துவிட்டது. நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டபோது இருந்ததை விட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது. 12இரவு முடியப்போகிறது; பகல் நெருங்கி உள்ளது. ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து விட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக! 13பகலில் நடப்பதுபோல மதிப்போடு நடந்து கொள்வோமாக! களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, ஆகியவற்றைத் தவிர்ப்போமாக! 14தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்.

உரோமையர் திருமுகத்தின் 11வது அதிகாரம் மூன்று முக்கியமான கருத்துக்களை முன்வைக்கிறது. அவை: 
அ. அதிகாரிகளுக்கு கீழ்பப்படிதல், 
ஆ. ஒருவருக்கொருவர் அன்பு செய்தல், மற்றும் 
இ. இறுதிக் காலம் நெருங்குதல் என்பவை. 
இவை இந்த திருமுக ஆசிரியர், அக்கால உரோமைய திருச்சபையில் இருந்த மிக முக்கியமான சிக்கல்களை கலந்துரையாடுவதைப் போல இருக்கிறது. அதிகமான புதிய ஏற்பாட்டு நூல்கள் இயேசுவின் இரண்டாம் வருகை அருகில் இருப்பதனை நினைவூட்டுவதாக அமைகின்றன. இது புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களின் முக்கியமான நம்பிக்கைகளில் ஒன்று. இந்த நம்பிக்கை சில இடங்களில் நேரான பாதிப்புக்களையும், சில இடங்களில் எதிர்மறையான பாதிப்புக்களையும் கொண்டு வந்தது. உரோமைய திருச்சபையில், ஆண்டவரின் இரண்டாம் வருகை காலம் தாழ்த்துகிறது என்ற ஒரு வாதம் முன்வைக்கப்பட்டு சில நடைமுறைச் சிக்கல்களையும் உண்டு பண்ணியது. அல்லது ஆரம்ப திருச்சபை சந்தித்த கலாபனைகள் பல கேள்விகளை ஆரம்ப கால திருச்சபையில் உருவாக்கியது. அந்த வேளைகளில் துன்பங்களைத் தாங்கிக் கொள்ள இயேசுவின் இரண்டாம் வருகை மற்றும் அதனுடைய நெருங்கிவரும் காலத்தை பற்றிய அறிவு மிக முக்கியமான ஒன்றாக கருதப்பட்டிருக்க வேண்டும். 

வ.11: அவசரமான தொனியில் இந்த வார்த்தைகளை பவுல் அறிவுறுத்துவதைப்போல உள்ளது. கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப்பற்றிய விவாதங்களும், சிலர் இரண்டாம் வருகையை மனித கணிப்பில் கணக்கிட முயன்றதன் காரணமாகவும், பல மாறுபட்ட சிந்தனைகளை முன்வைக்க முயன்றனர். இங்கே பவுல் இறுதிக் காலத்தில்தான் நாம் இருக்கின்றோம் என மீளவும் நினைவூட்டுகிறார். உறக்கம் என்று அவர் இங்கே குறிப்பிடுவதை உலகியல் ஈடுபாட்டைக் குறிக்கிறது (ὕπνος ஹஉப்னோஸ் நித்திரை, உறங்குநிலை). மீட்பு முன்னைய நாட்களை விட மிக அருகில் இருக்கிறது என்ற வார்த்தையின் ஊடாக, யாரும் மனந்தளர்ந்து போக வேண்டாம் அத்தோடு இரண்டாம் வருகை மிக அருகில் இருக்கிறது என்கிறார். 

வ.12: இரவையும் பகலையும் உருவக அணிகளாக பயன்படுத்துகிறார். νύξ நுக்ட்ஸ் இரவு என்பது சூரிய வெளிச்சம் இல்லாத காலத்தைக் குறிக்கும். இதனை உருவகமாக பயன்படுத்தி இந்த
இருட்டான காலம்தான், இயேசு இல்லாத, இந்த உலகின் ஆட்சி நிறைந்த காலம் எனக் காட்டுகிறார். இரவு அனைவருக்கும் தெரிந்திருக்கிற ஒரு நாளாந்த யதார்த்தம் என்ற படியால் இந்த செய்தி வாசகர்களை இலகுவாக சென்றடையும். பகல் என்பதற்கு கிரேக்கம் 'நாள்' என்ற சொல்லை (ἡμέρα ஹேமெறா- நாள்) பயன்படுத்துகிறது. எவ்வளவுதான் இரவு முக்கியமான சந்தர்ப்பமாக இருந்தாலும், எப்போது விடியல்வரும் அல்லது எப்படி இரவை ஒளியாக்கலாம் என்றே அனைவரும் விரும்புவர். இந்த உவமானம் மூலமாண கிறிஸ்துவில் வாழ்வே பகலைப்போன்றது என விளக்குகிறார் ஆசிரியர். 
அத்தோடு இருளின் ஆட்சிக்குரிய செயல்கள் என்று பவுல் குறிப்பிடுபவற்றுள் பல அடங்கும். நம்பிக்கையில்லாதன்மை, வீண் குழப்பங்கள், சண்டைகள், சச்சரவுகள், இவ்வுலக இன்பங்கள் போன்றவை அடங்கும். ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணியவும் கேட்கிறார். ஒளி (φῶς போஸ்- விடியல், வெளிச்சம், ஒளி, தூய்மை), புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவை குறிக்கும் முக்கியமான ஒரு அடையாளம். ஒளியின் படைக்கலங்கள் என்பது ஒளியை அதாவது கிறிஸ்துவை சார்ந்த செயல்களைக் குறிக்கும். 

வவ. 13-14: பகலின் செயல்களையும் இரவின் செயல்களையும் விளக்குகிறார். பகலின் நடந்தை மதிப்பான நடத்தைக்கு ஒப்பிடப்படுகிறது. பகலில் மனிதர்கள் தாங்கள் அவதானிக்கப்படுவர் என்ற காரணத்தால் நமது நடத்தையில் கவனமாக இருப்பர், இதனை மாண்புக்குரிய நடத்தை என்கிறார் பவுல். இதற்கு ஒவ்வாத நடத்தைகளாக சில தரப்படுகின்றன:

அ. களியாட்டம் (κῶμος கோமோஸ்)- கிரேக்க உரோமையருடைய காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிற்றின்ப வகையில் மிக முக்கியமானது. அறைகுறை ஆடையுடன், குடிமயக்கத்தில் நடந்து, நடனமாடி, பாடி நேரத்தை களிக்கும் ஒரு வகை இன்பம். (இன்று வடக்கில் தமிழ் கலாச்சாரத்தை அழிக்க பாவிகளாலும் எதிரிகளாலும் முன்னெடுக்கப்படும் இரவுக் களியாட்டங்களைப் போன்றது). இது இதில் பங்கேற்பவர்களுக்கு ஒரு போதையையும் மயக்கத்தையும் கொடுக்கும். ஐரோப்பாவில் பல இளைஞர்களும் முதியவர்களும் விரும்பி போகின்ற இரவு விடுதிக் களியாட்ட வகைகள் 
இதிலிருந்தே வளர்ந்தன. 

ஆ. குடிவெறி (μέθη மேதே) மனிதரை தொடக்க காலமுதல் அடிமைப்படுத்தும் மதுப்பழக்கம். குடிவெறிக்கு ஆயுள் மிக அதிகம். உலகில் எல்லா மூலைகளையும் இது ஆட்கொள்கிறது. சிலர் சந்தர்ப்பத்திற்காக குடிக்க பலர் குடிப்பதற்காகவே சந்தர்ப்பத்தை தேடுகின்றனர். இந்த மதுபானங்களில் உள்ள போதைக் குணங்கள் மனிதரின் மூளையை மந்தப்படுத்தி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். சிந்திக்கும் ஆற்றலைத் தடுக்கும், இதனால் ஒரு வகை மயக்கமும் மோகமும் உண்டாகும். நம்மவர்கள் இதற்கு பல அர்த்தங்களைக் கொடுக்க முயன்றாலும் அனைத்தும் அழிவிற்கே என்பது இவர்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு நன்கு தெரியும். குடிப்பவர்கள் பெரியவர்கள், கதாநாயகர்கள் என்ற சிந்தனை மாறும் நாள் மட்டும், இந்த முழு உலகும் வெறியில்தான் இருக்கும். இந்த சிக்கல் உரோமைய உலகில் அதிகமான தாக்கத்தை உண்டுபண்ணியது. உரோமையர் மது-இரச பிரியர்கள். இந்த பழக்கம் இயேசுவை பற்றி சிந்திக் நல்ல வாய்ப்பை தராது என்பது பவுலின் மயக்கமற்ற சிந்தனை. 

இ. கூடாஒழுக்கம் (κοίτη கொய்டே) என்ற இந்த கூடாத பழக்கம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமூக தீய காரணிகளில் ஒன்றாக இருந்திருக்கின்றது. இந்த கொய்டே கலாச்சாரத்திற்கும் 
இயற்கைக்கும் ஒவ்வாத உடலுறவுகளைக் குறிக்கும். இப்படியான பழக்கங்கள் கிரேக்க-உரோமைய உலகத்திற்கு தெரியாத அல்லது புதிதான ஒன்றல்ல. பெண்கள் பெண்களுடனான பாலியல் உறவு, ஆண்கள் ஆண்களுடனான உறவு, மனிதர் விலங்களுடனான உறவு, இரத்த உறவுகளுடனான உறவு, சுயஇன்பங்கள் என்றவாறு வகைப்படுத்தப்படுகிறது. அன்று அசிங்கமாகவும் தவறாகவும் கணிக்கப்பட்டது இன்று மனிதர்களின் 'புத்திக்கூர்மையான' அறிவினால் வியாக்கியானம் செய்யப்பட்டு சாதாரணமானதாக மாற்றப்பட்டிருக்கிறது. கூடாவொழுக்கம் எக்காலத்திலும் கூடாவொழுக்கமே 
(வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்பும்
தெய்வத்துள் வைக்கப் படும்- குறள் 50) 
ஈ. காமவெறி (ἀσέλγεια அசெல்கெய்யா) மனிதர்கள் தாங்கள் மிருகங்களின் குலம் என்பதை அவர்களின் கட்டுப்படுத்த முடியாத காம இச்சைகளிலிருந்து அறிந்துகொள்ளலாம். காம 
இச்சைகளை கட்டுப்படுத்தக் கூடாது அவற்றை அவற்றின் வழியில் கையாளவேண்டும் என்ற ஒரு மருத்துவ நம்பிக்கையும் அன்றைய கிரேக்க உரோமைய உலகத்தில் இருந்தது. இங்கே பவுல் சாடுவது பாலியல் ஈடுபாடுகளையல்ல மாறாக கட்டுப்படுத்த முடியாத காம இச்சைகளை. 

உ. வாக்கு வாதங்கள் (ἔρις ஏரிஸ்). உரோமைய கிரேக்க உலகில் வாத முறை பேச்சுக் கலையின் முக்கியமான ஒரு வடிவமாக கருதப்பட்டது. பெரிய தத்துவ ஞானிகள் தங்களது பேச்சு வாதத்திறனின் வல்லமையால் உண்மையில்லாத வாதங்களைக்கூட நிரூபித்தனர். இங்கு அவர்கள் வாதிக்கும் திறனுக்கும் அவர்களின் வாதித்கும் முறைக்குமே முக்கியத்துவம் கொடுத்தனர், வாய்மைக்கல்ல. இந்த கலை சிலவேளைகளில் பயங்கரமான கோபத்தை வெளிகாட்டக்கூடிய வாய்ச்சண்டையாக மாறியது (எமது அரசியல் கூடங்களில் நடப்பது போல்). இதனைத்தான் தேவையில்லாத வாதங்களாகக் காண்கிறார் பவுல். 

ஊ. பொறாமை (ζῆλος ட்சேலொஸ்). இதற்கு பல அர்த்தங்கள் இருந்தாலும், இந்த பகுதியில் இது சுயவிருப்பத்தை மட்டும் உள்ளடக்கிய பொறாமையையும் வஞ்சகத்தையும் குறிக்கிறது. இந்த தீய பண்பை கிறிஸ்தவத்திற்கு ஒவ்வாத பண்பாக பவுல் காண்கின்றார். கிறிஸ்தவ தியாக அன்பிற்கு நேரடி எதிர் பதமாக இந்த சுயநலமே அமைகிறது. 

மத்தேயு 24,37-44
மானிடமகன் வரும் நாளும் வேளையும்
36'அந்த நாளையும் வேளையையும்பற்றித் தந்தை ஒருவருக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. விண்ணகத் தூதருக்கோ மகனுக்கோகூடத் தெரியாது. 37நோவாவின் காலத்தில் இருந்தது போலவே மானிட மகன் வருகையின்போதும் இருக்கும். 38வெள்ளப் பெருக்குக்கு முந்தைய காலத்தில், நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். 39வெள்ளப்பெருக்கு வந்து அனைவரையும் அடித்துச் செல்லும்வரை அவர்கள் எதையும் அறியாதிருந்தார்கள். அப்படியே மானிடமகன் வருகையின்போதும் இருக்கும். 40இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார். 41இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். 42விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. 43இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடவிடமாட்டார் என்பதை அறிவீர்கள். 44எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.


மத்தேயு நற்செய்தி அறிமுகம்:
இந்த ஆண்டில் நாம் மத்தேயு நற்செய்தியில் இருந்து வாசிக்கவிருக்கிறோம். மத்தேயு நற்செய்தியை நாம் வருகின்ற வாரங்களில் தொடர்சியாக அதன் அறிமுகம், ஆசிரியத்துவம், காலம், நோக்கம், மற்றும் இறையியல் என்ற தலைப்புக்களில் நோக்குவோம். யூத இலக்கிய அழகில் ஒரு கிறிஸ்தவ நற்செய்திதான் மத்தேயு என காலம் காலமாக நம்பப்பபட்டு வருகிறது. இதன் அளவை கணக்கில் கொண்டு நற்செய்திகளுக்குள் இது முதலாவதாக புதிய ஏற்பாட்டில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளது. 
மத்தேயு நற்செய்தியை அதன் படிப்பினைகளையும் மற்றும் படிப்பிக்கும் திறனையும் கொண்டு அதனை 'ஆசிரியரின் நற்செய்தி' என்று அழைக்கின்றனர். மற்றைய நற்செய்திகளைப் போலல்லாது ஒரு ஆசிரியருக்கே உள்ள தோரனையில் இயேசுவின் வாழ்க்கை முறையை தொடர்ச்சியான பாதையில் மத்தேயு அழகாக தொடுத்துள்ளார். பல மத்தேயு நற்செய்தி அறிஞர்கள், இந்த நற்செய்தியை ஐந்து தொகுப்புக்களின் வடிவமாகக் காண்கின்றனர். ஒவ்வொரு தொகுப்பும் 'இதன் பிறகு இயேசு...' என்ற வடிவில் தொடங்குகின்றது. இதனை ஐந்து தொகுப்புக்களின் அதிகாரங்களாக 5-7, 10, 13, 18 மற்றும் 24-25 என்று வகைப்படுத்துகின்றனர். ஒவ்வொரு தொகுப்பும் இயேசுவின் உரைகளை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது. அத்தோடு ஒவ்வொரு தொகுப்பும், ஒரு தலைப்பை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது. இதனைவைத்து நோக்குமிடத்து, மத்தேயு கவனமாக ஐந்து தலைப்புக்களில் தனது புத்தகத்தை, முதல் ஏற்பாட்டு முதல் ஐந்து நூல்களான தோறாவை ஒட்டி அமைத்துள்ளார் போல் தோன்றுகின்றது என சிலர் வாதாடுகின்றனர். இந்த பிரிவுகளுக்குள்ளும் மனப்பாடம் செய்யும் வகையில் இன்னும் சிறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர் உ-ம்: இயேசுவின் பரம்பரை அட்டவணை 1,1-17: மலைப்பொழிவு 5,3-10: நேர்மாற்று உரைகள் 5,21-48. அத்தோடு பெரிய பிரிவுகளும் ஒரு கருப்பொருளை மையமாக கொண்டு நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன என்ற வாதமும் இருக்கிறது. 
மாற்கு நற்செய்தியைப்போல கதைசொல்லும் ஆற்றலை மத்தேயு கொண்டிருக்காவிடினும், தன்னுடைய கதைக்கு மத்தேயு கொண்டிருக்கும் தரவுகளின் தெரிவுகள், மாற்குவைவிட அதிகமாகும். மத்தேயு இயேசுவை மையமாகக் கொள்ளாத தரவுகளை தெரிந்தே விட்டுவிடுகிறார். 
மத்தேயு நற்செய்தியின் 24ம் 25ம் அதிகாரங்கள் ஐந்தாவது சொற்பொழிவுக் கூட்டம் என அறியப்டுகிறது. இந்த அதிகாரங்களில் இயேசு இறுதித் தீர்ப்பை பற்றி போதித்த படிப்பினைகள் ஆராயப்பட்டுள்ளன. எருசலேம் ஆலயத்தின் அழிவு, வரப்போகும் கேடு, வரப்போகும் பெரும் துன்பம், மானிடமகனின் வருகை, அத்தி மர உவமை, மானிட மகனின் வருகையும், நேரமும், மற்றும் நம்பிக்கைக்குரிய பணியாளர் என்று அனைத்தும் ஆண்டவரின் இறுதி நாளை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது. 

வ.46: யாருக்கு ஆண்டவரின் இறுதி நாளைப்பற்றிய அறிவு இருக்கிறது என்ற கேள்விக்கு மத்தேயு அழகாக விடையளிக்கிறார். ஆரம்ப கால திருச்சபையின் மிக முக்கியமான கேள்விகளுள், எப்போது இயேசுவின் இரண்டாம் வருகை வரும் என்ற கேள்வி மிக முக்கியமானதாக இருந்தது. இந்த கேள்விக்கு ஆசிரியர் இயேசுவைக் கொண்டே பதிலளிக்கிறார். அதாவது கடவுளின் நாளைப்பற்றி வானக வாசிகளான வானதூதர்களுக்கோ (ἄγγελοι ஆன்கலோய்), மானிட மகனுக்கே தெரியாது மாறாக கடவுள்கு மட்டுமே தெரியும். இதிலிருந்து கடவளின் நாளைப் பற்றிய புரிதலை சாதாரண மனிதர் அறிய முற்படுவது அபத்தம் என்று கூறுகிறார். 

வ.37-39: நோவாவின் காலம் ஒப்பிடப்படுகிறது (ἡμέραι τοῦ Νῶε). இதிலிருந்து ஆசிரியருக்கு 
இஸ்ராயேலின் பழங்கால கதைகள் மற்றும் முதல் ஏற்பாட்டைப் பற்றிய நல்ல அறிவு இருந்தது என்பது புலப்படுகிறது. நோவாவினுடைய காலத்தில் நோவாவை சுற்றியிருந்தவர்களுக்கு வெள்ளப்பெருக்கைப் பற்றிய அறிவு தெரிந்திருக்கவில்லை. இதனால் அவர்கள் தங்களுடைய ஆபத்தினை அறியாமலே அழிந்து போயினர் என்பதை ஆசிரியர் நினைவூட்டுகிறார். நோவா காலத்து வெள்ளப் பெருக்கை பற்றி அறிய காண்க தொ.நூல் 6,5-8,22. 
திருமணம் செய்துகொள்ளுதல், உண்ணுதல் மற்றும் குடித்தல் செயற்பாடுகளை ஆசிரியர் 
இறுதி நாட்களைப்பற்றி அறியாதவர் செய்கிற வேலைகளாக காண்கிறார். இவற்றை அவர் பாவம் அல்லது குற்றம் என்று சொல்கிறார் என எடுக்கமுடியாது மாறாக அவற்றை அவர் இறுதி நாட்களுக்கு காத்திருப்போர் செய்கிற வேலைகளில் ஒன்றாக கருதமுடியாது என்றே சொல்கிறார். இவர்கள் இவற்றில் கவனம் செலுத்திய படியால்தான் வெள்ளத்தின் அழிவைப்பற்றி முன்கூட்டியே அறியாதிருந்தனர் என்கிறார். மானிட மகனின் வருகையையும் இந்த வெள்ளத்திற்கு மத்தேயு ஒப்பிடுகிறார். வெள்ளம் புரிய முடியாத இயற்கையின் வல்லமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கடவுளைத் தவிர வேறெவர்க்கும் இந்த வெள்ளத்தின் மீது அதிகாரம் இல்லை என்பதையும் பலவிதத்தில் இயேசு மத்தேயு நற்செய்தியில் எண்பிப்பார். 

வ.40-41: இந்த வரிகளில் இறுதிநாட்களின் அவசரம் அல்லது ஆபத்து எப்படியிருக்கும் என்பது புலப்படுத்தப்படுகிறது. 

அ. வயலில் வேலைசெய்பவர்கள்: ஒருவர் எடுத்துக்கொள்ளப்பட இன்னொருவர் விடப்படுகிறார். வயல் வேலை ஒரு நாட்பொழுதின் முக்கியமான நேரத்தில் செய்யப்படுகிற சாதாரண வேலை. இந்த வேலையின் போது அனைவரும் சுறுசுறுப்பாக இருப்பர், அவர்கள் அக்கறையில்லாமல் 
இருப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும். இப்படியான வேலையிலும் மானிட மகனின் வருகையை மக்கள் புரிந்து கொள்ளார். 

ஆ. திரிகையில் மாவரைக்கும் ஒருவர் விடப்பட இன்னொருவர் எடுத்துக்கொள்ளப்படுவர்: இந்த திரிகையில் மாவரைத்தல் செயற்பாடு சாதாரணமாக இரண்டு பெண்களால் கைகளால் செய்யப்படும் வேலை. இந்த வேளையில் இவர்கள் உரையாடிக்கொண்டேயிருப்பர் அத்தோடு அங்கே தூங்குவதற்கான வாய்ப்பு மிக குறைவாகவே இருக்கும். இப்படி முக்கியமான வேளையிலும் கூட ஒருவர் விடப்படும் அளவிற்கு மானிட மகனின் வருகை அசாதாரணமானதாக இருக்கும் என்கிறார் ஆசிரியரான மத்தேயு. 

வவ.42-43: மானிடமகனின் வருகை திருடனின் வருகையைப்போல் ஆபத்தானதாகவும், எதிர்பாராத விதமானதாகவும் இருக்கும் என்று மீண்டும் உதாரணப்படுத்துகிறார். திருடர்கள் எந்த காவல் வேளையில் வருவர் என்பது காவல் வீரர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. காவல் வேளை என்பது உரோமைய காவலர்கள் இரவை பிரித்த விதத்தின் ஒரு அலகு ஆகும். மாலை ஆறுமணி தொடக்கம் காலை ஆறு மணிவரையான பன்னிரண்டு மணித்தியாளங்களும் காவல் கடமைகளுக்காக பல காவல் வேளைகளாக பிரிக்கப்பட்டிருந்தது. இதனைத்தான் அன்றைய உரோயைர்கள் காவல் வேளைகள் என்றழைத்தனர். அந்தகால திருடர்கள் கதவை உடைத்து திருடுவதை மட்டுமல்லாது மண்களால் ஆன சுவரையும் உடைத்து திருடும் அளவிற்கு தைரியம் படைத்திருந்தனர். இதனைத்தான் சுவரில் கன்னம் வைத்தல் என்கிறார் ஆசிரியர்.

வ.44: இந்த வசனம்தான் மத்தேயு தன்வாசகர்களுக்கு கொடுக்கிற செய்தி. அதாவது கிறிஸ்தவர்கள் ஆயத்தமாக இருக்க கேட்கப்படுகிறார்கள். அத்தோடு மானிட மகனின் வருகை நினையாத நேரத்தில் நிச்சயமாக இருக்கும் என்பதும் அறிவிக்கப்படுகிறது. மானிட மகன் என்ற வார்த்தை (υἱὸς τοῦ ἀνθρώπου) மத்தேயு நற்செய்தியில் இயேசுவை குறிக்க பயன்படுகின்ற முக்கியமான வார்த்தைகளில் ஒன்று. இது முதல் ஏற்பாட்டின் திருவெளிப்பாடுகளில் வருகின்ற மானிட மகனை நமக்கு நினைவூட்டுகிறது (✽காண்க தானியேல் 7,13). இயேசுவிற்கு மானிட மகன் என்ற பெயரை மத்தேயு கொடுப்பதற்கான பல காரணங்களை ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள், அவற்றுள் இறுதிநாள் அடையாளமும் ஒன்றாக இருக்கிறது. 
(✽இரவில் நான் கண்ட காட்சியாவது வானத்தின் மேகங்களின் மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார்.)

மானிட மகனின் வருகை எப்போதுதென்று மானிட மகனுக்கே தெரியாமல் இருக்கிறபோது 
அதனை அறிய மனிதர் முயல்வதில் பயனென்ன இருக்கபோகிறது. ஆனால் விழிப்பாய் இருப்பதே நல்லது என மத்தேயு சொல்வதை கவனத்தில் எடுக்கவேண்டும். 

ஆண்டவரே வழிகள் விழித்திருந்தும், உள்ளங்கள் தூங்கிக்கொண்டிருக்கும் 
இந்த உலகில் உண்மையான விழிப்பைத் தாரும். ஆமென். 




மி. ஜெகன் குமார் அமதி
அமல உதயம்,
திருகோண மலை.
செவ்வாய், 22 நவம்பர், 2016



ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...