வெள்ளி, 27 மே, 2016

கிறிஸ்துவின் திருவுடல், திரு இரத்த பெறுவிழா, The Most Holy Feast of Corpus Christi

கிறிஸ்துவின் திருவுடல், திரு இரத்த பெறுவிழா
29.05.2016
நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்!

(லூக்கா 9,12)


முதல் வாசகம்: தொ.நூல் 14,18-20
தி.பா: 110.
இரண்டாம் வாசகம்: 1கொரி 11,23-26.
லூக் 9,11-17.

கிறிஸ்துவின் திருவுடல், திரு இரத்த பெருவிழாவின் வரலாறு:

இலத்தீன் திருச்சபையில் இந்த பெருவிழா திரித்துவ பெருவிழாவிற்கு அடுத்த வியாழன் கொண்டாடப்படுகிறது. இந்த வியாழன் பெரிய வியாழனை நினைவுபடுத்துகிறது. இதனை (Natalis Calicis) நடாலிஸ் காலிசிஸ் அதாவது கிண்ணத்தின் பிறப்பு என்றும் அழைப்பர். பெல்ஜிய புனிதையான தூய யூலியானாதான் இந்த பெருநாளின் ஆரம்பத்திற்கு காரணமானவர் என வரலாறு நம்புகிறது. சிறுவயதிலிருந்தே நற்கருணை ஆண்டவரில் அதிக ஆர்வம் கொணடிருந்த இந்த புனிதை, ஒரு நாள், ஒரு காட்சியில், கரும் புள்ளியுடன் கூடிய முழு நிலவுக்கு கீழ் திருச்சபையை கண்டார். இந்த கரும் புள்ளி நற்கருணைக்கு ஒரு விழா இல்லாதனை தனக்கு உணர்த்தியதாக எண்ணினார். இதனை நெதர்லாந்து ஆயர்களுக்கும் தனது ஆயர்க்கும் அறிவித்த அவர், இருதியாக இந்த எண்ணம் திருத்தந்தையை சென்றடைய காரணமானார். நெதர்லாந்திய ஆயர்கள் அக்கால முறைப்படி 1246ம் ஆண்டு இவ்விழாவை தொடங்க முடிவு செய்தனர், ஆனால் சில சிக்கல்களின் காரணமாக 1261ம் ஆண்டே முதன் முதலில் இப்பெருவிழா கொண்டாடப்பட்டது. இந்த மறைமாவட்ட பெருவிழாவில் நிறைவடையாத தூய யூலியானா, படிப்படியாக திருத் தந்தை நான்காம் உர்பானுடைய கட்டளையால் அனைத்து திருச்சபையின் பெருவிழாவாக அது உருவெடுக்க தொடர்ந்தும் முயற்சி செய்தார். நற்கருணையில் அதிகம் விசுவாசம் கொண்டிருந்த இந்த திருந்தந்தை, இந்த விழாவை வருடாந்திர விழாவாக கொண்டாடும்படி தன்னுடைய திருத்தந்தை சுற்று மடல் (Bull Transiturus) டிரான்ஸிடுருஸ் மூலமாக அனுமதியளித்தார். வரலாற்றில் திரித்துவ ஞாயிறுக்கு அடுத்த வியாழனே இந்த விழா இவ்வாறு உருவெடுத்தது. இந்த விழாவில் பங்கேற்றால் பல பாவங்களுக்கு பரிகாரம் ஆகும் வாய்ப்பினையும் திருத்தந்தை அறிவித்தார். தூய அக்குவினா தோமா திருத்தந்தையின் பணிப்புரையின் பேரில் இந்த பெருவிழாவிற்கு திருச்சபையின் பாரம்பரிய செபங்களை, திருப்புகழ்மாலை புத்தகத்திற்கு உருவாக்கினார். இந்த செபமும் அங்கே காணப்படும் பாடல்களும் இன்றளவும் மெச்சப்படுகிறது. இந்த திருத்தந்தையின் மரணம், இவ்விழாவின் உத்வேகத்தை சற்று பாதித்தது. ஐந்தாம் கிளமந்து திருத்தந்தை, இந்த முயற்சியை மீண்டும் வியான்னா பொதுச்சங்கத்தில் (1311ல்) மேற்கொண்டார். சில மாற்றங்கள் புதுமைகளோடு அன்றிலிருந்து,  திருச்சபை இந்த விழாவை பெருவிழாவாக கொண்டாடுகிறது. இன்றைய விழா-முறையான பாரம்பரிய ஊர்வலத்தை பற்றி திருத்தந்தையர்கள் பேசவில்லை, ஏனெனில் இப்படியான ஊர்வலங்கள் ஏற்கனவே, இந்த விழா அதிகாரமாக ஏற்படுத்தப்படும் முன்பே வழக்கிலிருந்தன. பதின்மூன்றாம் நூற்றாண்டில் இருந்தே உரோமைய-மேற்கத்தேய திருச்சபையின் முக்கிய விழாவாக இது இவ்வாறு உருவெடுத்தது. கிரேக்க திருச்சபையிலும் இந்த திருவிழா சிரிய, ஆர்மேனிய, கொப்திக்க, மெல்கித்த, மற்றும் ருத்தேனிய திருச்சபைகளின் கால அட்டவணையில் காணப்பட்டு பல இடங்களில் கொண்டாடப்படுகிறது. 


தொ.நூல் 14,18-20
18அப்பொழுது சாலேம் அரசர் மெல்கிசெதேக்கு அப்பமும் திராட்சை இரசமும் கொண்டு வந்தார். அவர் 'உன்னத கடவுளின்' அர்ச்சகராக இருந்தார். 19அவர் ஆபிராமை வாழ்த்தி, 'விண்ணுலகையும் மண்ணுலகையும் தோற்றுவித்த உன்னத கடவுள் ஆபிராமிற்கு ஆசி வழங்குவாராக! 20உன் எதிரிகளை உன்னிடம் ஒப்புவித்த உன்னத கடவுள் போற்றி! போற்றி!' என்றார். அப்பொழுது ஆபிராம் எல்லாவற்றிலிருந்தும் அவருக்குப் பத்தில் ஒரு பங்கைக் கொடுத்தார்.

இன்றைய முதல் வாசகம், தொடக்க நூலின் மிக ஆச்சரியங்கள் நிறைந்த பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் தான், நாம் முதல் முதலில் மெல்கிசதேக் என்னும் அரசர்-குருவை சந்திக்கின்றோம். இவருடைய பெயரும், இடமும், அவர் செய்யும் செயல்களும் பல கேள்விகளை இன்னும் விவிலிய பிரியர்களுக்கும், விசுவாசிகளுக்கும் நிறைவுறாமல் எற்படுத்திக்கொண்டிருக்கின்றன. மெல்கிசெதேக் என்னும் எபிரேயச் சொல் இரண்டு வார்த்தைகளிலிருந்து அமைக்கப்பட்டுள்ளது. מַלְכִּי־צֶדֶק (מֶלֶךְ மெலக்-அரசன், צֶדֶק செதெக்-நீதி, நேர்மை) ஆக இது நேர்மையின் அரசர் என்றும் பொருள் தரலாம். இது காரணப்பெயரா, இடுகுறிப்பெயரா அல்லது தனிப்பெயரா என்பதற்கு இன்னமும் விடை கிடையாது. 

இவரை விவிலியம் உன்னத கடவுளின் குரு என்று விவரிக்கின்றது. இங்கே கடவுளுக்கு பாவிக்கப்பட்டுள்ள சொல்லும் புராதன பெயராக இருப்பதும் இங்கே விசேடமானது. ( וְהוּא כֹהֵן לְאֵל עֶלְיוֹן - அவர் ஏல் எலியோனின் குருவாக இருந்தார்). குருத்துவம் (ஆரோனின்) ஏற்படுத்தப்படாத காலத்தில் இவரை குருவென்று விவிலியம் விளிப்பது ஆச்சரியமாக இருக்கிறது. பல முதல் ஏற்பாட்டு ஆய்வாளர்கள் இந்த பகுதியை (14,18-20) பின்நாள் இணைப்பு என்றும் கருதுகின்றனர். முதல் ஏற்பாட்டில் மெல்கிசேதேக்கு இரண்டு தடவையும், புதிய ஏற்பாட்டில் எட்டு தடவையுமாக பத்து தடைவைகள் விவிலியத்தில் வருகிறார். தாவீதுடைய அரச-குருத்துவத்தை முதன்மைப் படுத்துவதற்காகவும் எருசலேமின் முக்கியத்துவத்தை நிலைநாட்டுவதற்காகவும் இந்த பகுதி இணைக்கப்பட்டது என்கின்றனர் சிலர். இங்கே வருகின்ற கடவுளின் பெயர்களைக் கொண்டு இப்பெயர்கள் அக்கால கானானிய சமயங்களின் ஒருங்கிணைப்பு என்றும் வாதாடுகின்றனர். பிரிந்து போன வட-நாடு தென்-நாடு காலப் பகுதியில், தென்நாட்டின், தலைநகரை முக்கியத்துவப்படுத்த இந்த பகுதி உருவானதென்றும், பாபிலோனிய நாடுகடத்தலின் பின்னர், எருசலேமின் குருத்துவப் பணியை மீண்டும் நிலைநாட்டவும் இந்த கதை உருவானதென்றும் ஒரு வாதம் இருக்கிறது. எது எப்படியாயினும் மெல்கிசேதேக்கு என்பவர், எபிரேயர் திருமுக ஆசிரியர் கூறுவதைப்போல முதலும் முடிவுமில்லாத ஆச்சரியத்துக்குரிய ஆச்சாரியார். 

வ. 18: சாலம் என்பது (שָׁלֵם ஷாலெம்) சீயோன், அதாவது பழைய தாவிதின் எருசலேமை குறிப்பதாக பாரம்பரியமாக நம்பப்படுகிறது. சாலம் என்பது செக்கேமினுடைய இன்னொரு பெயர் என்ற சறிய வாதமும் இருக்கிறது (காண்க தொ.நூ 33,18). யோவான் திருமுழுக்கு கொடுத்த செலுமியாஸ் என்ற பகுதியோடும் இதற்கு தொடர்பிருப்பதாக சிலர் காண்கின்றனர் (காண்க யோவான் 3,23). அதிகமான வல்லுனர்கள் (தொல்பொருளியல்) சாலமை எருசலேமுடனே காண்கின்றனர்.

வ. 19: மெல்கிசேதேக்கு ஆபிராமை வாழ்த்துவது, ஆபிராம் (ஆபிரகாம்) ஏற்கனவே ஆசீர்வதிக்கப்பட்டவர் என்பதை நினைவூட்டுகிறது. (காண்க தொ.நூல் 12,2). இந்த ஆசீர் இஸ்ராயேலர் சாதாரணமாக பயன்படுத்தும் ஆசீர்வாத வார்த்தைகளை உள்ளடக்கியிருக்கிறது. உதராணமாக, இயேசு காப்பாரக! என்று நாம் வாழ்த்துவதைப் போல. அத்தோடு வானங்களையும், நிலத்தையும் கடவுள் படைத்தார் அல்லது உரிமையாக்கினார் என்பது, இஸ்ராயேலரின் அடிப்படை நம்பிக்கையும் உள்வாங்கியிருக்கிறது. 

வ. 20: அ). ஆபிராமை ஆசீர்வதித்த மெல்கிசேதேக்கு, கடவுளைப் போற்றுகிறார். கடவுளையும் மனிதரையும் போற்ற (ஆசீர்வதிக்க) ஒரே வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, ஆசீரின் இரண்டு முகங்களை காணலாம். (בָּרַךְ பராக்-ஆசீர்வதி, முழந்தாள் படியிடு). 

ஆ). பத்தில் ஒன்று கொடுத்தல் இஸ்ராயேலருக்கு மட்டும் உரிய வழக்கமல்ல, அது மத்திய கிழக்கு சமுதாயங்களில் அன்றே வழக்கிலிருந்தது. இது சமய பொருளாதார, இரு-நோக்கங்களைக் கொண்டமைந்த பயன்பாடு. லேவியர் புத்தகமும் (27,30-33), இணைச்சட்டமும் (14,22-24) இந்த வழக்கத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன. இந்த பத்திலொன்று கொடுத்தல் பல இடங்களில் சமுக அக்கறையான ஏழைகளுக்கு உதவுதல் என்ற எண்ணத்தையும் காட்டுகிறது (காண்க இணை. 14,28-29), அத்தோடு இது வருமானமற்ற குருக்களுக்கு உதவும் முறையாகவும் காணப்பட்டது. இந்தச் சட்டத்தை கடைப்பிடிக்காதவர் கடவுளிடம் திருடுபவர் என்றும் எச்சரிக்கப்பட்டனர் (காண்க மலா 3,8). அரசர்கள் குருக்கள் சேகரிக்கும், இந்த காணிக்கைகள் சில வேளைகளில், தவறான வழியிலும் பாவிக்கப்பட்டன. (ஊழலின் வயது மிக பழமையானது போல). ஆபிராம் மெல்கிசேதேக்குவுக்கு காணிக்கை கொடுத்ததால், அவரை குருவாகவும், அவரின் கடவுளை, தன்கடவுளாக ஏற்றதாகக் கொள்ளலாம். 

தி.பா: 110
1ஆண்டவர் என் தலைவரிடம் 'நான் உம் பகைவரை உமக்குப் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்' என்று உரைத்தார். 
2வலிமைமிகு உமது செங்கோலை ஆண்டவர் சீயோனிலிருந்து ஒங்கச்செய்வார்; உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்! 
3நீர் உமது படைக்குத் தலைமை தாங்கும் நாளில் தூய கோலத்துடன் உம் மக்கள் தம்மை உவந்தளிப்பர்; வைகறை கருவுயிர்த்த பனியைப்போல உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர். 
4'மெல்கிசெதேக்கின் முறைப்படி நீர் என்றென்றும் குருவே' என்று ஆண்டவர் ஆணையிட்டுச் சொன்னார் அவர் தம் மனத்தை மாற்றிக் கொள்ளார். 
5என் தலைவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்; தம் சினத்தின் நாளில் மன்னர்களை நொறுக்குவார். 
6வேற்று நாடுகளுக்கு அவர் தீர்ப்பளித்து அவற்றைப் பிணத்தால் நிரப்புவார்; பாருலகெங்கும் தலைவர்களை அவர் நொறுக்குவார். 
7வழியில் உள்ள நீரோடையிலிருந்து அவர் பருகுவார்; ஆகவே அவர் தலைநிமிர்ந்து நிற்பார்.

இந்த திருப்பாடலை பொதுவாக அரச பாடல் என்றே கருதுகின்றனர். இங்கே அரசர்க்கும் குருவுக்குமான 
இருத்தியல் தொடர்பை ஆசிரியர் காட்டுகிறார். நாம் விவிலியத்தில், மெல்கிசேதேக்கை இரண்டாவது முறையாக இங்கே நினைவுகூருகின்றோம். ஆரோனுடைய குருத்துவம் இல்லாமலும், அரசர்கள் குருக்களாக சில சேவைகளைச் செய்ய முடியும் அல்லது, குருத்துவம் அரசத்துவத்திற்கு மேலானது அல்ல என்ற சில அக்கால சமூக சிக்கல்களை இங்கே ஊகிக்கலாம். இயேசு ஆண்டவரையும், எபிரேயர்-திருமுக ஆசிரியர் அரச-குரு என்று இறையியல்படுத்துவதிலும் இந்த திருப்பாடல் முக்கியம் பெறுகிறது. 

வ. 1: ஆண்டவர் என்று இங்கு விளிக்கப்படுவது கடவுளைக் குறிக்கிறது. என்தலைவர் என்பது பாரம்பரியமாக தாவீதைக் காட்டுகிறது என்றே நம்பப்படுகிறது. கால்மணையாக்குதல் என்ற அழகிய செந்தமிழ்ப் பதம், எதிரிகளை கால் வைக்கும் சிறிய கால்மணையாக்குதலைக் குறிக்கும். வலப்பக்கம் வீற்றிருத்தல் அதிகாரத்தை அல்லது மிக முக்கியமான உரிமைகளைப் பெறுதலைக் குறிக்கும். 

வ. 2: சீயோனில் இருந்து ஆண்டவர் பலமளிப்பதாக பாடகர் அரசருக்கு ஊக்கம் கொடுக்கிறார். செங்கோல் தமிழ் இலக்கியங்களில் உள்ளது போல எபிரேய இலக்கியங்களிலும் ஆட்சி மற்றும் அரச அதிகாரத்தை குறிக்கிறது. தூய கோலத்துடன் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, ஒரு புராதன போருக்கு செல்லும், ஆடை அலங்கார முறைகளை இது குறிக்கலாம். இதனை 'தூய மலைகளில்' என்றும் வாசிக்க முடியும். இந்த தூய மலைகள் என்பது சீயோனை சூழயிருக்கும் மற்றைய குன்றுகளை குறிப்பதாகவும் வாசிக்கலாம். 

வ. 3: போருக்கு செல்லும் காட்சியை ஆசிரியர் அமைக்கிறார். தூய கோலத்துடன் உவந்தளித்தல் என்பது காணிக்கை என்பதை விட போருக்கு செல்ல இளையோர் சுயமாக முன்வருவதைக் குறிக்கலாம். வைகறை கருவுயிர்த்த பனியைப்போல என்று தமிழில் அழகாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இது அவ்வளவு இலகுவான வார்த்தையில்லை. இது இந்த அரசரின் படைப்பலத்தையோ அல்லது அவரின் சொந்த வீரத்தையோ குறிக்கலாம். 

வ. 4: ஏன் ஆசிரியர் அரசரை குருவாக்குகிறார் என்பதில் பல கேள்விகள் வருகின்றன. 'முறைப்படி' என்பது ஒருவகை குரு சபையை குறிக்கலாம். ஆனால் இதன் உண்மையான அர்த்தத்தை காண்பது கடினம். இங்கே இரண்டு வகையான செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. 
அ. அரசரும் குருவைப்போல முக்கியமானவரே. 
ஆ. கடவுள் தந்த ஆசீர் என்றும் திருப்ப பெறமாட்டாது. (சில வேளைகளில் தாவீதும், சாலமோனும் மக்களை ஆசீர்வதிப்பதனை விவிலியத்தில் காணலாம்). 

வ. 5-7: ஐந்தாவது வசனத்தில் தலைவர் என்பது கடவுளை குறிக்க பயன்பட்டுள்ளது. இந்த வரிகளில் பாடல் தலைவர் கடவுளா அல்லது அரசரா என்பதில் மயக்கம் இருக்கிறது. மசரோட்டிக் மெய்யெழுத்து குறிகள் இல்லாத விவிலியம், இரண்டு வகையான அர்த்தங்களையும் கொடுக்கும். ஒன்று மட்டும் நிச்சயம் கடவுளின் அரசரால், கடவுளுக்கு புகழும், அரசர்க்கு வெற்றியும் கிடைக்கின்றன. பிணங்களால் நிரப்புதல் என்னும் வார்த்தை பிரயோகம், போரின் கோர முகத்தை நினைவூட்டுகிறது. (எந்தப் போரின் முடிவிலும் இரண்டு பக்கங்களும் மரணிக்க, மிஞ்சியருப்பது பிணங்களும், பிணக்குகளும் மட்டுமே). நீரோடையிலிருந்து பருகுதல், அழகிய உருவகம். இது இஸ்ராயேல் நாட்டின் முக்கியமான வளங்களான நீரோடைகளை (வற்றக்கூடிய ஆறுகள்) கடவுளின் ஆசீரின் அடையாளமாகக் காட்டுகிறது. 


இரண்டாம் வாசகம்: 1கொரி 11,23-26
23ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, 24கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப்பிட்டு, 'இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்' என்றார். 25அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, 'இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்' என்றார். 26ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.

இந்த பகுதி தூய பவுல் கொரிந்திய திருச்சபைக்கு ஒழுக்கத்தைப் பற்றி கூறும்வேளை, திருச்சபையில் நற்கருணையின் பிறப்பை நினைவூட்டியபோது இவை மேற்கோள் காட்டப்பட்டவை. கொரிந்திய திருச்சபையில் கிறிஸ்தவம் போதித்த, தனி மனித மற்றும் சமூக சுதந்திரம் பல பிரச்சனைகளுக்கு காரணமாய் அமைந்தது. ஒழுக்கமற்ற சுயநோக்கங்கள் மட்டுமே கொண்டமைந்த சுதந்திரம் காட்டாறு போல பல சமூக சிக்கல்களை தோற்றுவிப்பதனை இந்த 11வது அதிகாரத்தில், பவுல் சுட்டிக்காட்டும் பிரச்சனைகள் காட்டுகின்றன. புதிய ஏற்பாட்டில், ஆண்டவரின் நற்கருணையின் வரலாற்றோடு சம்மந்தப்பட்ட தரவுகளில் இந்த பகுதியும் மிக முக்கியமானது. நாம் ஒவ்வொரு நாளும் திருப்பலியில் செபிக்கும் வசீகரச் செபங்கள் இந்தப் பகுதியிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளன. பவுலுடைய வார்த்தைகள், அவர் எதை திருத்தூதர்கள் அல்லது முதல் சாட்சிகளிடமிருந்து பெற்றுக்கொண்டாரோ, அதையே இப்போது அறிக்கையிடுவதாக காட்டுகிறது. 

வ. 23: இந்த வசனம் திருச்சபையில் இருந்த சில பிரிவினைகளைக் காட்டுகிறது. பவுல் ஒற்றுமை நிலவச் செய்ய, ஆண்டவரின் இறுதி இராவுணவு வரலாற்றை அதே வார்த்தையில் மீண்டும் கூறுகிறார். ஒரு வேளை ஆண்டவரின் இறுதித் தருணங்களை நினைவூட்டுகின்ற போது கிறிஸ்தவர்கள் ஒற்றுமைப்படுவார்கள் அல்லது தங்களது சிற்றின்பங்களை விட்டு, கிறிஸ்தவ இலட்சியங்களை முதன்மைப்படுத்துவார்கள் என்று பவுல் நினைத்திருக்கலாம். பவுல் இங்கே கோடிடுகின்ற காட்சிகளை முக்கியமாக மாற்கு 14,17-31ல் காணலாம். காட்டிக்கொடுக்கப்பட்ட என்ற சொல், இயேசு ஆண்டவரின் துன்பங்களுக்கு, சீடர்களும் முக்கியமான காரணம் என்பதனைக் காட்டுகிறது. பவுல் இங்கே சீடர்களின் (கிறிஸ்தவர்களின்) குற்ற உணர்வை தூண்டப் பார்கிறார். ஒரு வேளை இது அவர்களின் பிரிவினையை கைவிட உதவும் என்று நினைத்திருக்கலாம். 

வ. 24: உணவின் முன் நன்றி செலுத்துதல் சாதாரண யூத மக்களின் வழமை. அவர்கள் உணவை தந்தமைக்காக, கடவுளுக்கு நன்றி சொன்னார்கள். முதல் ஏற்பாட்டில் கடவுளைப் போற்றினார்கள் என்று காணலாம். இங்கே இயேசு சாதாரண அப்பத்தை (ἄρτος ஆர்டொஸ்- அப்பம், பாண்) தன்னுடைய உடலாக மாற்றியதை நினைவூட்டுகிறார். ஆக இந்த அப்ப பகிர்வின் போது ஏற்படும் அவமரியாதைகள் இயேசுவையே நேரடியாக அவமரியாதை செய்வதற்கு சமம் என்பததையும் நினைவூட்டுகிறார். இயேசுவின் வார்த்தைகள், ஒவ்வொரு அப்பப்பகிர்வும் அவரின் நினைவை நினைவூட்டுவதாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதனைக் காட்டுகின்றன. 

வ. 25: பாவிக்கப்பட்டுள்ள அதே வார்த்தைகள், ஆண்டவருடைய புதிய உடன்படிக்கையையும் அதன் புதிய அர்த்தத்தையும் நினைவூட்டுகின்றன. முதல் ஏற்பாட்டில் அதிகமான உடன்படிக்கைகள் மிருக இரத்தத்தால் ஏற்படுத்தப்பட்டன, இங்கே இறைமகனுடைய இரத்தத்தால் ஏற்படுத்தப்படும் உடன்படிக்கை நித்திய உடன்படிக்கையாகிறது. மிருக உடன்படிக்கைகள் அதிகமாக மீறப்பட்டன அல்லது உடைக்கப்பட்டன. இந்த உடன்படிக்கை கடவுளின் இரத்தத்தினால் செய்யப்படுவதால் மீறவும் படாது, உடைக்கவும் படாது. இங்கே பவுல், இந்த கொண்டாட்டம் களியாட்டமல்ல, மாறாக கடவுள் காட்டிய அன்பின் நினைவு, அதனை மக்கள் துஸ்பிரயோகம் செய்வது, வெட்கக்கேடானது அத்தோடு ஆபத்தானது என்றும் காட்டுகிறார். விவிலியத்தில் கிண்ணம் ஒரு தொழிலையோ அல்லது துன்பத்தையோ குறிக்கலாம். 

வ. 26: சாவை மீண்டும் அறிக்கையிடுத்ல் என்ற வசனம் மிகவும் காட்டமான வசனம், ஆனால் அது அன்றும் இன்றும் தேவையான வசனம். ஒருவருடைய சாவை நினைக்கிறபோது அவரின் அன்பும்,  மேன்மையும் நினைவுகூறப்படுகின்றது. பவுல் மீண்டும் மீண்டும் இயேசுவின் சாவை நினைவு கூர்ந்து அவருக்கு பிரமாணிக்கமாய் இருக்க, இந்த அப்பப்பகிர்வை நேர்த்தியாக ஒப்புக்கொடுக்கச் சொல்கிறார். பவுலுடைய வார்த்தைகளின் பாரத்திலிருந்து, அக்கால திருச்சபை எவ்வளவு மோசமாக இந்த ஒன்றுகூடல்களை அவமதித்தது என நினைக்கத்தூண்டுகிறது. (இந்த கேவலங்கள் இன்றும் இல்லாமல் இல்லை). ஆண்டவருடைய சாவை என்று, பவுல் எதிர்மறையாக கருத்துரைக்கவில்லை, மாறாக ஆண்டவரின் பணி இன்னும் நிறைவேற இருக்கிறது என்கிறார், இதனால்தான், அவர் வரும்வரை, என்று தொடர்கிறார். 



லூக் 9,11-17
11அதை அறிந்து திரளான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர்களை அவர் வரவேற்று இறையாட்சியைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர்களைக் குணப்படுத்தினார். 12பொழுது சாயத் தொடங்கவே பன்னிருவரும் அவரிடம் வந்து, 'இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே; சுற்றிலுமுள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவு வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்' என்றனர். 13இயேசு அவர்களிடம், 'நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்' என்றார். அவர்கள், 'எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும்' என்றார்கள். 14ஏனெனில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு அவருடைய சீடர்களை நோக்கி, 'இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள்' என்றார். 15அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள். 16அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற்றின் மீது ஆசிகூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார். 17அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.

லூக்கா நற்செய்தியின் ஒன்பதாவது அதிகாரம், பன்னிருவரை அனுப்புதல், ஏரோதுவின் குழப்பம், ஐயாயிரம் பேருக்கு உணவு, பேதுருவின் அறிக்கை, இயேசு சாவை முன்னறிவித்தல், தோற்றம் மாறுதல், சிறுவனிடமிருந்து பேயை அகற்றுதல், இயேசுவை ஏற்க மறுத்த சமாரியர், மற்றும் இயேசுவை பின்பற்ற விரும்பியவர்கள் போன்ற சிறுபகுதிகளைத் தாங்கி வருகிறது. இங்கு வருகின்ற வசனங்களை ஆண்டவர் சொல்லும் முன், பன்னிருவர் அதிகாரத்தோடு அனுப்பப்பட்டிருந்தனர் ஆக இந்தப் பகுதியும் எப்படி ஆண்டவரின் பணியாளர்கள் பணிசெய்ய வேண்டும் என்ற பயிற்சியை தருவதைப் போல் அமைக்கப்பட்டிருக்கிறது. அத்தோடு ஏரோதுவின் குழப்பத்திற்கும் (9,7-9) பேதுருவின் விசுவாச அறிக்கைக்கும் 
(9,18-21) இடையிலான ஒரு இணைப்பாக இப்பகுதி அமைந்துள்ளது. 

வ. 11: திரளான மக்களுக்கு உணவளித்தல் பல்வேறு நற்செய்திகளில், ஒத்தமைவோடும் சிறுவித்தியாசங்களோடும் அமைந்துள்ளன. மாற்கு நற்செய்தியில் இந்த நிகழ்வு, கலிலேய கடலுக்கு அப்பாலிருந்த ஒரு தொலை பிரதேசத்தில் நடந்தது (காண்க மாற்கு 6,32), இங்கே லூக்கா சிறு மாற்றங்களைச் செய்கிறார். லூக்காவிற்கு இந்த இடம் பெத்சாய்தா. அத்தோடு மாற்குவில் இயேசு மக்கள்கூட்டத்தை கண்டு பரிவு கொள்கிறார், இங்கே லூக்கா அதனையும் விட்டுவிடுகிறார் (காண்க மாற்கு 6,34). ஆனால் இந்த மக்கள் கூட்டத்திற்கு, அதே பரிவால் என்னென்ன செய்தார் என்பதை விவரிக்கிறார் லூக்கா. லூக்கா வைத்தியாரனபடியால், குணமாக்குதலுக்கு எப்போதுமே முக்கியம் கொடுக்கிறார் போல. 

வ. 12: மக்களுக்கு சேவை செய்யவும் அவர்களைப் பற்றி அக்கறை கொள்ளுதலையும் லூக்கா நற்செய்தியில் சீடர்களே தொடங்கிவைக்கின்றனர். சீடர்களின் அக்கறைக்கு காரணம் இருக்கிறது. பெத்சாய்தாவாக இருந்தாலும், இப்போது அவர்கள் இருப்பது தொலை தூரமாகும், அந்தியும் சாய்ந்துவிட்டது, மக்கள் களைத்திருக்கிறார்கள், அனைவருக்கும் கொடுக்குமளவிற்கு தங்களிடம் பணமோ உணவோ இல்லை என்பதை நினைக்கிறார்கள். திருத்தூதர்கள் முக்கியமான ஒன்றை மறந்துவிட்டார்கள், இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் ஏன் இன்னும் கூடுதலாக இருந்தாலும், தங்களோடு கடவுளே இருக்கிறார் என்பதை மறந்து விட்டார்கள். அதனால் ஆபத்தை மட்டுமே பார்க்கிறார்கள். தாங்களே மக்களை அனுப்பாமல் அதனை செய்யச்சொல்லி இயேசுவை கேட்கிறார்கள், நல்ல சீடர்கள். 

வ. 13: நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள் என்ற வார்த்தைகள், விவிலியத்தில் பல நிகழ்வுகளை இனம் காட்டுகிறது. 
அ. பாலைவனத்தில் இஸ்ராயேலருக்கு உணவூட்டியது
ஆ. எலியா நூறு பேருக்கு, இருபது அப்பங்களில் உணவூட்டியது (2அர 4,42-44)
இ. இயேசு இறுதி இராவுணவில் அப்பங்களை பிய்த்து நற்கருணையாக்கியது. 
இப்படியாக அப்பங்களை பெருகச்செய்வது கடவுளின் இறை-அளித்தலை நினைவூட்டுகிறது. அத்தோடு இயேசு ஒவ்வொரு சீடராலும் மற்றவருக்கு உணவு கொடுக்க முடியும், உணவு கொடுக்க வேண்டும் என்ற நியதியை சுட்டிக்காட்டுகிறார். ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமுடைய குறியீட்டு அடையாளங்களை 
இனம்காண்பது அவ்வளவு எளிதல்ல. அப்பம் கலிலேயருடைய, அல்லது அனைத்து யூதருடைய முக்கிய உணவாகும். மீன் கலிலேயருடைய முக்கியமான உணவாக இருந்திருக்கலாம். பெரிய எண்ணிக்கையிலான மக்கள் திரள் வரும்போது மாமிசத்தை விட மீன் பொருட்செலவில்லாமல் இருந்திருக்கும். அத்தோடு
மீன்களின் அடையாளம், பல மறைந்துள்ள வெளிப்பாட்டு இலக்கியங்களில் (2பாருக்கு, 1ஏனோக்கு, 4எஸ்ரா) இறுதிக்கால விருந்தை நினைவூட்டுகின்றன. மீன், ஆரம்ப கால கிறிஸ்தவர்களின் அடையாளமாகவும் இருந்தது. மீன் என்ற அடையாளம் 'இயேசு கிறிஸ்து கடவுளின் மகன், அவர் மீட்பர்' என்ற விசுவாச பிரமாணத்தின் அடையாளமாக இருந்தது. காண்க (தி.பணி 8,37). இந்த வசனம் அதிகமான மூலப் பிரதிகளில் காணப்படாது. தமிழ் விவிலியம் இதனை குறிப்பிடுகிறது. இப்படியாக மீன் கிறிஸ்தவரின் விசுவாச அடையாளமாக இருந்திருக்கிறது. 

வ. 14: ஐயாயிரம் மற்றும் ஐம்பது உண்மையான இலக்கங்களையும் தாண்டி குறியீடுகளில் பல அர்த்தங்களைத் தரவல்லவை. இது இஸ்ராயேலரை குழுக்களாக பிரிக்கும் செயற்பாடுகளையும் 
நினைவூட்டுகிறது. ஆனால் இதனை லூக்கா நினைத்து அமைத்திருப்பாரா என்பது சந்தேகமே. ஐயாயிரம் ஆண்கள் (ἄνδρες அந்திரஸ்-ஆண்கள்) என்பது, பெண்கள் அங்கே இல்லை என்பதல்ல, மாறாக பெண்களை எண்ணாமல் ஆண்கள் மட்டும் ஐயாயிரம் என்றெடுக்க வேண்டும். ஆக உண்மையான எண்ணிக்கை ஐயாயிரத்தையும் விட அதிகமாகும். 

வ. 15: அனைவரையும் பந்தியில் அமரச்செய்தது, ஆண்டவருடைய பந்தியில் அனைவருக்கும் இடமுண்டு என்பதைக் காட்டுகிறது. சீடர்களும் ஆண்டவர் சொன்னதை அப்படியே செய்கிறார்கள். ஆண்டவர் உள்ளெடுப்பவர்களை, வெளியில் அனுப்ப எந்த சீடருக்கும் உரிமை கிடையாது. 

வ. 16-17: வானத்தை அண்ணாந்து பார்த்து நன்றி கூறி செபித்தல் இஸ்ராயேலரின் செபிக்கும் முறையைக் காட்டுகிறது. மோசே, எலியா, எலிசேயு போன்றவர்கள் இவ்வாறே செய்தார்கள். ஆண்டவர் பகிர்ந்தளிக்கும் பணியை சீடர்களிடமே கொடுக்கிறார். ஆசீரை ஆண்டவர் கொடுக்கிறார், பகிர்வை, சீடர்கள் செய்ய கேட்கப்படுகிறார்கள். கொடுக்கப்படுவை அனைத்தும் பகிரப்படவே என்பதை இந்த அப்பங்களும் மீன்களும் நினைவூட்டுகின்றன. ஆண்டவரின் பந்தியில் குறைவுகிடையாது, பசி கிடையாது. எஞ்சுபவை கூட நிறைவாக இருக்கும் என்பதை இலக்கம் பன்னிரண்டு காட்டுகிறது. இந்த எஞ்சியவை இன்னும் பசியால் பலர் இருக்கிறார்கள், அத்தோடு எதிர்காலத்திலும் இருப்பார்கள் என்பதையும் பன்னிருவருக்கு (நமக்கும்) 
நினைவூட்டுகிறது. 


இந்த உலகில் ஆண்டவரின் ஆசீர்வாதங்கள் நிறைவாகவே உள்ளன, அனைத்து ஆசீருக்கும் சொந்தக்காரர் ஆண்டவர் மட்டுமே. ஆசீர்வதிக்கிற ஆண்டவர், அந்த ஆசீரை மற்றவருடன் பகிரக் கேட்கிறார். இவ்வுலகின் வறுமையும், இல்லாமைகளும்,  பகிராத சுயநலமிக்க சிந்தனைகளாலேயே உருவாகின்றன. ஆண்டவர் நம்மைப் பார்த்து, அவர்களை அமர வைத்து, 'நீங்கள் உள்ளதைக் கொடுங்கள், உங்களுக்கு நிறைவாகவே மிஞ்சும்' என்கிறார். 

ஆண்டவர் இயேசுவே! எங்களிடம் இருப்பவை அனைத்தும் நீர் தந்தது, அவற்றை மற்றவருடன் பகிர நல்ல மனத்தை தாரும். நாங்களே ஆசீராய் மாற எங்களைத் தொடர்ந்து ஆசீர்வதியும்.
நற்கருணை எங்கள் வாழ்வாக, எங்கள் நம்பிக்கையையும் அதிகரியும். ஆமென். 

மி. ஜெகன்குமார் அமதி
உரோமை
புதன், 25 மே, 2016

வியாழன், 19 மே, 2016

மூவொரு இறைவன்-ஒரு கத்தோலிக்க விவிலியப் பார்வை: The Feast of Blessed Trinity.


The Feast of Blessed Trinity. 
மூவொரு இறைவன்-ஒரு கத்தோலிக்;க விவிலியப் பார்வை
மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? 
(தி.பா 8,4)
முள்ளிவாய்க்கால் வித்துக்களுக்கும், 
சீரற்ற காலநிலையால் மாண்டவருக்கும் சமர்ப்பணம்!

முதல் வாசகம்: நீமொ. 8,22-31
திருப்பாடல்: 8
இரண்டாம் வாசகம்: உரோ 5,1-5
நற்செய்தி: யோ 16,12-15

தாய் கத்தோலிக்க திருச்சபையின் முக்கியமான விசுவாச படிப்பினைகளில், தமத்திரித்துவம் மிக முக்கியமான படிப்பினையாகும். புலன்களுக்கும், மனித அறிவுக்கும் உட்புக முடியாத இறைவன் தன்னுடைய இயல்பைப் பற்றி அங்கும் இங்குமாக விவிலியத்தில் வெளிப்படுத்துகிறார்.
இறைவனின் தன்மையையும், சாரத்தையும் பற்றிய வெளிப்படுத்தல்களை இறைவாக்கினர், நீதி தலைவர்கள், அரசர்கள், விவிலிய ஆசிரியர்கள் என்று பலர் வெளிப்படுத்தினாலும், இயேசு ஆண்டவரே இறைவனின் உண்மைகளை நிறைவாக வெளிப்படுத்தினார் என்பது எமது விசுவாசம். அவர் கடவுளாகவும் அந்த சாரத்தையும், தன்மையையும் கொண்டுள்ளவர் என்பதனாலும் இந்த வெளிப்பாடு முக்கியம் பெறுகிறது. திரித்துவத்தின் விளக்கங்கள், 'தோற்றக்கொள்கை' ((modalism)) என்ற பேதகத்தின் காரணமாகவே வளர்ச்சியடைந்தது என வரலாற்றில் காணலாம். தோற்றக் கொள்கை, கடவுள் பல தோற்றங்களில் தோன்றினார் அவரில் மூன்று ஆட்கள் இல்லை என்று ஆரம்ப திருச்சபையுடன் வாதிட்டது. திரித்துவம் (Trinitas) என்ற நம்பிக்கை ஆரம்ப கால திருச்சபையில், தந்தை மகன் தூய ஆவியின் உறவை ஒரே கடவுள் விசுவாசத்தில் புரிந்து கொள்ள உருவானது.; திருச்சபை தந்தை தெர்த்துல்லியன்தான் இந்த சொல்லை அறிமுகப்படுத்தியதாக நம்பப்படுகிறது. இந்தச் சொல்லை விவிலயத்தில் இவ்வாறே காண இயலாது ஆனால் இதன் சிந்தனைகளை கத்தோலிக்க விசுவாசத்தின் படி முதல் மற்றும் புதிய ஏற்பாடுகளில் காணலாம். 

முதல் ஏற்பாடு, கடவுளின் ஆவி, கடவுளின் தூதர், என்றபடி இறைவனில் ஆட்கள் தன்மையை அடையாளம் காட்டுகிறது (தொ.நூ. 1,2: வி.ப. 23,23). அத்தோடு கடவுளுக்கு பன்மை பதங்கள் பாவிக்கப்படுவதும், கடவுளின் வார்த்தையையும், மெய்யறிவையும்,  ஆளாகக் காட்டுவதும் இதற்கான உதாரணங்கள் என சிலர் வாதிடுகின்றனர் (தொ.நூ 11,7:தி.பா 33,6: நீமொ 8,12). முதல் ஏற்பாட்டில் மூன்று மனிதர்கள் ஆபிரகாமை சந்தித்த நிகழ்வு பாரம்பரியமாக முதலாவது திரித்துவ காட்சி என்று நம்பப்படுகிறது (காண் தொ.நூ 18,1-2). ஆனால் நேரடியாக எந்த இடத்திலும் திரித்துவக் காட்சிகளை முதல் ஏற்பாட்டில் காணுவது கடினம். பல கடவுள் சிந்தனைகளைக் கொண்டிருந்த மக்கள் மத்தியில் இஸ்ரயேலர் வாழ்ந்த படியால், ஒரே கடவுள் நம்பிக்கையை விதைப்பது இஸ்ரயேல் சமய தலைவர்களின் முக்கியமான போராட்டமாக இருந்தது (இ.ச 6,4-5).

புதிய ஏற்பாட்டிலும் நேரடியாக திருத்துவ வெளிப்பாட்டை காணமுடியாவிடினும், அதன் சிந்தனைகளை கொஞ்சம் திருப்தியாக காணலாம். திருத்துவத்தின் வெளிப்பாடு முதலில் அன்னை மரியாவின் மங்களவார்த்தை நிகழ்வில் காணலாம் (லூக் 1,35). இயேசு பலவேளைகளில் தான் தந்தையிடம் இருந்து வந்ததாகவும், அவருடைய கட்டளைகளை மட்டுமே செய்வதாகவும், தானும் தந்தையும் ஒன்று என்றும், பின்னர் தனது துணையாளரை அனுப்புவதாகவும் கூறுகிறார் (யோவா 14-16). தன்னை மகன் என்று கூறுகின்ற ஆண்டவர், துணையாளரை தனது ஆவி, இறைவனின் ஆவி என்றும் கூறுகிறார். இறுதியான கட்டளையையும் திருத்துவத்தின் பெயரிலேயே ஆண்டவர் கொடுக்கிறார் (மத் 28,19). பவுலுடைய கடிதங்கள் இந்த திருத்துவ கடவுளின் ஆசீரை மையப்படுத்திய வாழ்த்துக்களைக் கொண்டிருக்கின்றன (2 கொரி 13,14). இந்த வாழ்த்துக்களில் இருந்து ஆரம்ப கால திருச்சபையின் விசுவாச சத்தியங்களை ஊகிக்கலாம். பிற்காலத்தில் நிசேயா முன்-பின் காலத்தில் இந்த விசுவாச சத்தியம் மிக வளர்ச்சி பெற்றது. இறைவனின் குழுவாழ்க்கை மற்றும் இறைவனின் ஆட்கள் மத்தியிலான அன்பு, உறவு, புரிந்துணர்வு போன்றவை சாதாரண கிறிஸ்தவ மனித வாழ்க்கைக்கு மிகவும் உதவக்கூடிய உதாரணங்களாகும். மற்ற சமய சகோதரர்களுடனான விட்டுக்கொடுப்பிலும், புரிந்துணர்விலும், இந்த திரித்துவ நம்பிக்கை முக்கியமான அடித்தளாமாக அமையலாம். முக்கியமாக சமகால இந்து மதம் மும்மூர்த்திகள் (பிரம்மன்-விஷ்ணு-சிவன்) நம்பிக்கையை அதிகமாகவே அறிக்கையிடுகிறது. 

முதல் வாசகம்: நீமொ. 8,22-31
22ஆண்டவர் தம் படைப்பின் தொடக்கத்திலேயே தொல்பழங்காலத்தில் எதையும் படைக்கும் முன்னரே, என்னைப்படைத்தார். 23தொடக்கத்தில், பூவுலகு உண்டாகுமுன்னே, நானே முதன்முதல் நிலைநிறுத்தப்பெற்றேன். 24கடல்களே இல்லாத காலத்தில் நான் பிறந்தேன்; பொங்கி வழியும் ஊற்றுகளும் அப்போது இல்லை. 25மலைகள் நிலைநாட்டப்படுமுன்னே, குன்றுகள் உண்டாகுமுன்னே நான் பிறந்தேன். 26அவர் பூவுலகையும் பரந்த வெளியையும் உண்டாக்குமுன்னே, உலகின் முதல்மண்துகளை உண்டாக்குமுன்னே நான் பிறந்தேன். 27வானத்தை அவர் நிலைநிறுத்தினபோது, கடல்மீது அடிவானத்தின் எல்லையைக் குறித்தபோது, நான் அங்கே இருந்தேன். 28உலகத்தில் மேகங்களை அவர் அமைத்தபோது, ஆழ்கடலில் ஊற்றுகளை அவர் தோற்றுவித்தபோது, நான் அங்கே இருந்தேன். 29அவர் கடலுக்கு எல்லையை ஏற்படுத்தி, அந்த எல்லையைக் கடல் நீர் கடவாதிருக்கும்படி செய்தபோது, பூவுலகிற்கு அவர் அடித்தளமிட்டபோது, 30நான் அவர் அருகில் அவருடைய சிற்பியாய் இருந்தேன்; நாள்தோறும் அவருக்கு மகிழ்ச்சியூட்டினேன்; எப்போதும் அவர் முன்னிலையில் மகிழ்ந்து செயலாற்றினேன். 31அவரது பூவுலகில் எங்கும் மகிழ்ந்து செயலாற்றினேன்; மனித இனத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி கண்டேன். 

மெய்யறிவு நூல்களில் ஒன்றான நீதிமொழிகளில் இருந்து இன்றைய முதல் வாசகம் எடுக்கப்பட்டுள்ளது. எபிரேய விவிலியம் இதனை ஞான இலக்கியங்களுள் வகைப்படுத்துகிறது. ஒழுக்கங்களையும் சிறந்த பழக்க வழக்கங்களையும் இஸ்ரயேல் பிள்ளைகளுக்கு கற்பிக்க விளையும் இந்த நூலின் முதல் ஒன்பது அதிகாரங்கள் மெய்யறிவின் மேன்மையை எடுத்துரைக்கின்றன. பல காலப் பகுதியில் எழுதப்பட்டு பின்னர் ஒரு நூலாக தோற்றம்பெற்றது என பலர் இந்தப் புத்தக்தை கருதுகின்றனர். எபிரேய விவிலியம் இதனை מִשְׁלֵי שְׁלֹמֹה மெஷ்லே 
ஷெலோமொஹ் என அழைக்கிறது (சாலமோனின் நீதிமொழிகள்). பலவிதமான இலக்கிய நடைகளை இந்த புத்தகம் கையாள்கிறது, பழமொழி உரைகள், நாட்டுப்புற முது மொழிகள், வாய்மொழி காட்சிகள், நீடிக்கப்பட்ட உருவகங்கள், திருப்பாடல்கள், சாதாரண உரைகள் என்று பலவும் பத்தும் இங்கே காணக்கிடக்கிறது. அதிகமானவை, ஆசிரியர் மாணாக்கருக்கு உரைப்பது போல இதன் நடை அமைந்துள்ளது. இதன் ஆசிரியர் சாலமோன் என்பதைவிட, அவருக்கு இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

இன்றைய எட்டாம் அதிகாரம், மெய்யறிவு தரும் வாழ்வு அல்லது ஞானத்திற்கு புகழுரை என்ற பகுதியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. பல வேளைகளில் இந்த மெய்யறிவு, பழைய வழக்கில் ஞானம், கிறிஸ்துவிற்கு ஒப்பிடப்படுகிறது. ஞானம் கடவுளின் சிந்தனையில் இருந்து வருகிற படியால் அதனை திரித்துவத்தின் இரண்டாம் ஆளான மகனாக பார்க்கிறது கிறிஸ்தவ பாரம்பரியம். அத்தோடு இந்த ஞானத்தால்தான் உலகம் உண்டானது என்கிற படியால் அது யோவானின் சிந்தனைகளுடன் ஒத்துப்போகிறது (காண் யோவான் 1). 

வ. 22: மெய்யறிவின் தொன்மை இங்கே காட்டப்படுகிறது. இந்த வசனம் சற்று ஆழமானது. இங்கே தொடக்கம் என்று சொல்ல பயன்படும் சொல் தொடக்க நூலில் முதலாவது வசனத்தில் முதாலாவது சொல்லாக இருக்கிறது (רֵאשִׁית ரெஷித்- தொடக்கத்தில்). என்னை படைத்தார் என்ற சொல்லின் வினை இரண்டு அர்த்தங்களைக் கொடுக்கிறது. קָנָה கனாஹ் - அ) உடைமையாக்கு, ஏற்படுத்து ஆ) படை, உருவாக்கு. இந்த வரியின் அர்த்தங்களும் மொழி பெயர்ப்புக்களும் கொஞ்சம் கடினம், ஆனால் மெய்யறிவு பழங்காலத்திலிருந்தே இருக்கிறது என்பது மட்டும் புலப்படுகிறது. 

வவ. 23-24: நிலம் தோன்றுவதற்கு முன் என்பது ஆச்சரியமான அறிவியல் செய்தி, இன்று பல புவியியல் விஞ்ஞானிகள் பெரு வெடிப்புக் கொள்கையை நிலத்தின் தோற்றத்திற்கு காரணமாக 
இருக்கலாம் என்கின்றனர். விவிலியம் மெய்யறிவை அதற்கும் மேல் வைக்கிறது. நீரூற்றுக்களும் கடல்களும் இல்லாத காலம் என்பது தொடக்கநூல் படைப்பை விவரிக்கும் காலத்திற்கும் முற்பட்டது. இங்கே ஆசிரியரை புவியியல் விஞ்ஞானியாக பார்க்காமல் நம்பிக்கை மெய்யறிவு வாதியாக பார்க்க வேண்டும். இவர் நமக்கு தொடக்க நூல் படைப்புக்களை நினைவூட்டுகிறார்.

வவ. 25-26: மலைகள், குன்றுகள், சமவெளிகள், மணல்கள் இவைகளை கடவுள் மூன்றாம் நாளில் படைத்தார் என தொடக்க நூல் காட்டுகிறது. மெய்யறிவு இவைகளையும் விட பழமையானது என்கிறார் ஆசிரியர். மெய்யறிவு இந்த பௌதீக துகள்களைவிட பழமையானது என்கிறார் ஆசிரியர் (சாலமோன்).

வவ. 27-29: வானம், கடல், மேகம், நீர்த்திரள், நீர் ஊற்றுக்கள் மிகவும் தொன்மையான அத்தோடு அறிவியலால் இன்னமும் ஆழம் காணாமுடியா படைப்புக்கள். இதனை மெய்யறிவு, தனக்கு முன்னால் சிறுவர்கள், என்பது எத்துணை அழகான உதாரணங்கள். இந்த வரிகளின் மூலம் படைப்புக்களை தெய்வங்களாக வணங்கும் மற்றவர்களுக்கு உண்மைக் கடவுளை உணர்த்த விரும்புகிறார் ஆசிரியர். 

வவ. 30-31: 30 வது வசனத்தில் சிற்பி என்பதற்கு அழகான எபிரேய வார்த்தை אָמוֹן ஆமோன் பாவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் இனிமையானது. இதனை சிறிய குழந்தை, தலைமை பணியாளர், கட்டடக் கலைஞர், வளர்ப்புத் தந்தை என்றும் மொழிபெயர்க்கலாம். இதன் பின்புலங்கள் அக்காடிய மற்றும் எகிப்திய படைப்புக் கதைகளை இஸ்ராயேலருக்கு நினைவூட்டி, கடவுளின், அவரின் மெய்யறிவின் மாட்சியை வெளிப்படுத்துகிறது. அத்தோடு இது ஒரே கடவுள் நம்பிக்கைக்கான நல் முயற்சி. 31வது வசனம் மெய்யறிவின் குணத்தைக் காட்டுகிறது. இதுவும் அசீரியர்களின் படைப்புக் கதைகளின் பின்புலத்தை கொண்டுள்ளது. சாதாரணமாக ஓர் கட்டுமானம் மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது, இங்கே மெய்யறிவு, கட்டுமானத்தில் அல்ல மாறாக மனித குலத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறது. கடவுள் அனைத்தையும் படைத்த பின்னர் நல்லதெனக் கண்டார் என தொடக்க நூல் சொல்வதை இங்கே நினைவுபடுத்தலாம். 

திருப்பாடல் 8
1ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது! உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது. 
2பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும் வலிமையை உறுதிப்படுத்தி உம் பகைவரை ஒடுக்கினீர்; எதிரியையும் பழிவாங்குவோரையும் அடக்கினீர். 
3உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது, 
4மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? 
5ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். 
6உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர்.
7ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள், 
8வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்படுத்தியுள்ளீர். 
9ஆண்டவரே, எங்கள் தலைவரே, உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!

திருப்பாடல்கள் தொகுப்பில் காணப்படும் இந்த முதலாவது புகழ்ச்சிப்பாடல் படைப்புக்களில் மனிதரது இடத்தைக் காட்டுகிறது. இது கித்தித் என்ற ஒருவகைப் பாடலாகும், இதன் அர்த்தம் சரியாக புரிந்துகொள்ளப்படவில்லை, ஒருவகை மெட்டாக இருக்கலாம். 

வ.1: கடவுளைப் புகழவோ அல்லது விளங்கிக்கொள்ளவோ மனிதர்களால் இயலாது, எனவே அவரின் பெயரை புகழவும், பெயரை விளங்கிக்கொள்ளவும் இஸ்ரயேலர் முயற்சிசெய்தனர். கடவுளைக் குறிக்க அவரின் பொதுப் பெயரை பாவிக்க முனைந்தது இஸ்ரயேலரின் தனித்துவம். 

வ.2: ஒருவரைப் புகழ, அவரின் போர் வெற்றிகளை உரைப்பது அக்கால வழக்கம், இங்கே கடவுள் தம் எதிரிகளை ஒடுக்க பாலகரை மட்டுமே பயண்படுத்தினார் என்பது, கடவுளின் மக்களில் சிறியவர்கள் கூட பலசாலிகள் என்பதை எண்பிக்கிறது. 

வவ. 3-4: கடவுளை தியானிக்க அதிசயங்கள் தேவையில்லை, படைப்புக்களை நோக்கு அது போதும் என்னும் இஸ்ரயேலின் மெய்யறிவை இங்கே காணலாம். மனிதர்கள் கடவுளுக்கு முன்னால் ஒரு பொருட்டே கிடையாது என்பது திருப்பாடல்கள் கற்றுத்தரும் மிக முக்கியமான பாடம். இன்றைய நவீன சுய-சிந்தனை மனிதர்களுக்கு இது சாலப் பொருந்தும். ஆசிரியர் நிலாவையும் விண்மீன்களையும் மனிதர்களுக்கு மேலாக ஒப்பிடுவது, அவரின் விசுவாசத்தையும், தாழ்ச்சியையும் காட்டுகிறது. 

வவ. 5-7: இருந்த போதும் கடவுள், மனிதர்களுக்கு தமது சாயலைக் கொடுத்துள்ளார் என்பதை ஏற்றுக்கொள்கிறார். மாட்சியும் மேன்மையும் கடவுளுக்குரியது அதனை மனிதர் கொண்டுள்ளமையால் தெய்வீகம் பெறுகின்றனர். கடவுளின் படைப்புக்களை மனிதர் ஆள (מָשַׁל மஷால்) என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இது ஆட்சிசெய்தல், பாவித்தல் என்பதைவிட பராமரித்தல், பாதுகாத்தல் என்ற பொருளை தருகிறது ஏனெனில் கடவுள் அதனைத்தான் செய்கிறார். அனைத்து உயிரினங்களையும் உள்வாங்கி அவற்றை ஒரு குடும்பமாக்கி மனிதரை கடவுளின் பிரதிநிதியாக செயல்படக் கேட்கிறார் ஆசிரியர். 

வ. 8: கடவுளின் பெயர் என்பது இங்கே கடவுளையே குறிக்கும். பெயர் என்பது ஒருவரின் அடையாளம், அது அவரின் குணத்தைக் காட்டுகிறது, பெயரின் மாட்சி, அவரின் மாட்சியைக் குறிக்கும். 

உரோமையர்: 5,1-5
1ஆகையால் நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகியுள்ள நாம், நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம். 2நாம் இப்போது அருள்நிலையைப் பெற்றிருக்கிறோம். இந்நிலையை அடையும் உரிமை இயேசு கிறிஸ்துமீது கொண்ட நம்பிக்கையால் தான் அவர் வழியாகவே நமக்குக் கிடைத்தது. கடவுளின் மாட்சியில் பங்குபெறுவோம் என்னும் எதிர்நோக்கில் நாம் பெருமகிழ்வும் கொள்ள முடிகிறது. 3அதுமட்டும் அல்ல, துன்பங்களைத் தாங்கிக் கொள்வதிலும் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். ஏனெனில், துன்பத்தால் மன உறுதியும், 4மன உறுதியால் தகைமையும், தகைமையால் எதிர்நோக்கும் விளையும் என அறிந்திருக்கிறோம். 5அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது எனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது.

ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்துள்ளபடியால் புது வாழ்வு பெறுகிறார் இதனால் அவர் ஏற்புடைமை அடைகிறார் என்பதனை இந்த ஐந்தாவது அதிகாரம் தெளிவு படுத்துகிறது. கடவுளால் ஏற்புடைமையாக்கப்பட்டவர், மாட்சிப்படுத்தப்பட்டுள்ளார் எனவே அவர் கடவுளுக்காக அவரின் (அவர் தருகின்ற அல்ல) துன்பத்தை ஏற்று ஆவியில் வாழ வேண்டும் என்று இந்த பகுதி ஆழமாக எடுத்துரைக்கின்றது. 

வ.1: இந்த வசனத்தை புரிய, கிரேக்க நம்பிக்கை ஒன்றை ஆராய வேண்டும். கிரேக்கர்கள் மனிதர்களின் துன்பத்திற்கு பல காரணங்களைத் தந்தனர். கடவுளுடனான போர், மனிதர்களின் பாவச் செயல் போன்றவைதான் துன்பத்திற்கு காரணம் என்றும் கண்டனர். இங்கே பவுல் கிறிஸ்துவால் இனி இந்த போராட்டம் கிடையாது என்கிறார். நம்பிக்கை ஒருவருக்கு இந்த புதிய நிலையை தருகிறது என்கிறார். நல்லுறவு என்பதற்கு கிரேக்க மூல பாடம் 'அமைதி' என்ற சொல்லை பாவிக்கிறது. (εἰρήνη எய்ரேனே). ஆக கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டால் அது தருவது கடவுளோடு அமைதி, என்றே பொருள்படும். 

வ.2: மிக ஆழமான வரி. முதல் ஏற்பாட்டில் ஆலயம் ஒருவருக்கு கடவுளிடம் செல்ல அல்லது எதாவது சொல்ல, அணுகல் (அணுகல்தன்மை) தந்தது, இங்கே அதனை இயேசுவில் கொள்ளும் நம்பிக்கை நிறைவாக தருகிறது என்கிறார் பவுல். இந்த அணுகல் மகிமைமையைத் தருகிறது, 
இதனால் நாம் கடவுளுடைய மகிமையில் பங்குகொள்கிறோம் என்ற நம்பிக்கையில் மகிழ்ச்சி கொள்கிறோம் என்கிறார். இந்த மகிழ்வுக்கு உண்மையில் கிரேக்க மூல பாடம் καυχάομαι கௌகோமாய் என்ற சொல்லை பாவிக்கிறது. ஈழத் தழிழில் சொன்னால் 'நாம் புழுகுறோம்' என்று பொருள் படும். நல்ல விடயத்தை புழுகலாம் போல. 

வ.3-4: இந்த புழுகுதல் மாட்சிக்காக மட்டுமல்ல இன்னும் பல செயற்பாடுகளுக்காக என்று சொல்லி பல விழுமியங்களை சங்கிலி வரிசைப் படுத்துகிறார். அவை, துன்பம் இதனால் பொறுமை, பொறுமையால் தகமை, தகமையால் எதிர்நோக்கு என்று வரிசைப்படுத்துகிறார். கிறிஸ்தவம் பெருமைக்குரியதுதான் இருந்தபோதும் அது பொழுதுபோக்கு அல்ல என வாதிடுகிறார். 

வ. 5: எதிர் நோக்கு என்பது, (ἐλπίς எல்பிஸ்); பவுலுடைய இறையியலில் மிக முக்கியமான ஒரு சிந்தனைப் பொருள். கிரேக்க மற்றும் உரோமைய அறிஞர்கள் இச்சொல்லை பாவித்திருக்கின்றனர். கிரேக்க விவிலியத்தில் (புதிய ஏற்பாடு) அதிகமாக இச்சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருளாக, நன்மைக்கான எதிர்பார்ப்பு, எதிர்நோக்கு, எதிர்கால நம்பிக்கை என்று புரிந்து கொள்ளலாம். எல்பிஸ் திருவெளிப்பாட்டோடும், இறுதிக் கால சிந்தனைகளோடும் தொடர்பு பட்டது. இதற்கு நல்ல வரைவிலக்கனத்ததை எபி 11,1-2 இல் காணலாம் (நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை.இந்த நம்பிக்கையால்தான் நம் மூதாதையர் நற்சான்று பெற்றனர்). இந்த எதிர்நோக்கு ஏமாற்றம் தராததற்கான காரணம் தூய ஆவி என்கிறார் பவுல். கடவுளின் அன்பை காட்டுபவர் இயேசு என்பதனை நற்செய்தியாளர்கள் காட்டுகின்றனர், இங்கே அந்த பணியை தூய ஆவி செய்வதாக பவுல் கூறுவது இருவருக்கிடையிலான உறவைக் காட்டுகிறது. 


நற்செய்தி: யோவான் 16,12-15
12'நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. 13உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். 14அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். 15தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் 'அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்' என்றேன்.

யோவான் நற்செய்தியின் 16ம் அதிகாரத்தின் முதல் பகுதி, தூய ஆவியாரின் செயல்களை விவரிக்கின்றன. தூய ஆவியாரைப் பற்றி யோவான் நற்செய்தியில் ஐந்து முக்கியமான பகுதிகள் உள்ளன அவை 14,16-17: 14,26: 15,26: 16,7-11: மற்றும் 16,12-15. இதற்கு முன் பகுதி தூய ஆவியின் பங்கிலிருந்து, இந்த பகுதி அவரின் செயற் பாட்டை விவரிக்க முயல்கின்றது. 

வ.12: எதிர்காலம் எப்போதுமே வியப்புக்குரியது, எதர்காலத்தை எதிர்காலத்தில் சந்திப்பதே மனிதர்களுக்கு சிறந்தது என்பதை ஆண்டவர் பல வேளைகளில் உணர்த்துவார் (மத் 6,34 ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்). உங்களால் தாங்க முடியாது என்பதைக் குறிக்க சுமத்தல் என்ற வினைச் சொல் பாவிக்கப்பட்டுள்ளது (βαστάζω பஸ்டாட்ஸோ). இது ஒருவர் பாரச் சுமைகளை ஒருவர் தமது வலிமையால் சுமப்பதைக் குறிக்கும். இயேசு இங்கு சீடத்துவத்தின் சவால்களையும் மனித பலவீனங்களையும் குறிப்பிடுகிறார் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். ஒரு செயற்பாட்டை தொடங்குமுன் அதனைப் பற்றிய பய உணர்வு நல்லதல்ல என்பதை இயேசு நன்கு அறிந்துள்ளார். 

வ.13: தூய ஆவியார் வந்த பின்னர் சீடத்துவத்தின் சவால்கள் குறையாது ஆனால் அதனைக் கையாளக்கூடிய பக்குவத்தையும் பலத்தையும் சீடர்கள் பெறுவர் எனபதுதான் இங்குள்ள செய்தி. எதிர்காலத்தை சந்திக்க தூய ஆவியானவர், சீடர்களை தனியே விடாமல் தூய ஆவியானவரை துணைக்கு அனுப்புகிறார். உண்மையை நோக்கி வழிநடத்துகின்ற பணியை இயேசு தூய ஆவியானவருக்கு கொடுக்கிறார். உலகம் அறிவைத் தரலாம் ஆனால் உண்மையைத் தரக்கூடியவர் ஆண்டவர் ஒருவரே என்பது யோவானின் முக்கியமான ஒரு சிந்தனை. உண்மை என்பது கிரேகக் மெய்யியலில் வாதிக்கப்பட்ட மிக உன்னதமான ஒரு மறைபொருள். இந்த உண்மையை நோக்கிய தூய ஆவியின் பணி இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது:

அ). உண்மையை நோக்கி வழிநடத்தல்: வழிநடத்தல், தலைவரின் முக்கியமான பண்பாகும், இதனை மெய்யறிவு செய்வதாக காண்கிறோம் (காண் சால ஞா. 9,11: 10,10). எதிர்காலத்தில் இந்த வழிநடத்தல் பணியைச் செய்வது தூய ஆவி என்கிறார் இயேசு. ஏற்கனவே யோவான் நற்செய்தியில் இயேசு, தான் தான் உண்மையான வழியென்றும் சொல்லியிருக்கிறார். (14,6 வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை ).

ஆ). தூய ஆவியின் வழிநடத்தலுக்கு உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது. கேட்பார்(ἀκούσει), பேசுவார் (λαλήσει), அறிக்கையிடுவார்(ἀναγγελεῖ) என்று தூய ஆவியின் செயற்பாடுகள் எதிர்கால வினையிலே தரப்பட்டுள்ளது. இது தூய ஆவியானவர் இயேசுவில் தங்கியுள்ளதனைக் காட்டுகிறது. அத்தோடு தூய ஆவியார் அறிவிக்க இருப்பது ஏற்கனே அவர் இயேசுவிடம் இருந்து ஃகடவுளிடம் இருந்து கேட்டவையாகும். 

வ.14: மாட்சிப்படுத்தலும் இங்கே விவரிக்கப்படுகிறது. இயேசு தான் இந்த உலகத்திற்கு வந்ததும், தந்தையை மாட்சிப்படுத்தவே என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறார். தான் தந்தையை மாட்சிப்படுத்தியது போல், தந்தையையும் தன்னை மாட்சிப்படுத்தக் கேட்டிருக்கிறார் (காண் யோவான் 17,1.4.10). இங்கே அந்தப் பணியையும் தூய ஆவியானவர் தொடர்வார் என்கிறார். இங்கே ஒரே பணி தொடர்வதனைக் காணலாம். மாட்சிப்படுத்தல் (δοξάζω தொக்ஸாட்ஸோ), கடவுள், இயேசு மற்றும் தூய ஆவியின் பணிமட்டுமல்ல மாறாக மனிதர்களின் படைப்பின் நோக்கம் என்றும் விவிலியம் வாசிக்கும் (காண் தி.பா 23,23). 

வ.15: இயேசு, தான் யார் என்றும் தனக்கும் தந்தைக்கும் உள்ள உறவைப்பற்றியும் தெரிவிக்கிறார். இங்கே தந்தை, மகன் தூய ஆவியின் சொத்து விவரங்கள் காட்டப்பட்டுள்ளன. 'தந்தையுடையவை யாவும் என்னுடையவை' என்று தனது அதிகாரத்தை விளங்கப்படுத்துகிறார். என்னுடையவை என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, உண்மையில் 'எனக்குரியது' என்று  நான்காம் வேற்றுமையில் (dativus) உள்ளது அதாவது அது இயேசுவின் சொத்துரிமையைக் குறிக்கிறது. இந்த 'அவருக்குரிய' அனைத்தும் இப்போது தூய ஆவிக்கு கொடுக்கப்பட்டு அவர் வழியாக நமக்கு கொடுக்கப்படுகிறது. 
இயேசுவில் கொண்டுள்ள நம்பிக்கையும் துணையாளரின் வழிநடத்தலும் கடவுளின் ஆசீர்வாதங்களை நமக்கு தருகின்றன என்பதே மனித குலம் பெறும் பெரிய செல்வம் என்பதை யோவான் அழகாக காட்டுகிறார். 

கிறிஸ்தவர்களுக்கும் நல்மனிதர்களுக்கும், கிறிஸ்து இயேசுவைவிட பெரிய சொத்து எதுவும் இருக்க முடியாது. திரித்துவம் என்னும் மறைபொருள் என்பது, சிந்தையில் வைத்து வணங்கி, அதனைப் பற்றி கட்டுரைகள் எழுதும் இறையியல் அல்ல. அது வாழப்பட வேண்டியது. திரித்துவத்தை பற்றி யாரும் நிறைவாக எழுதவும் முடியாது. ஆனால் திரித்துவத்தை வாழ முடியும். அதனையே ஆண்டவர் இயேசுவும் எதிர்பார்க்கிறார் என நினைக்கிறேன்.

அன்பான ஆண்டவரே, உம்முடைய திரித்துவத்தின் மறைபொருள் இவ்வுலக சுயநலங்களையும், மடமைகளையும் விட்டு வெளிவர உதவி செய்ய வேண்டுகிறோம். ஆமென். 

மி. ஜெகன்குமார் அமதி
உரோமை, 
புதன், 18 மே, 2016 (முள்ளிவாய்க்கால் நாள்).


வியாழன், 12 மே, 2016

தூய ஆவியார் வருகை பெந்தகோஸ்த் பெருவிழா 15, மே, 2016: The Feast of the Pentecost














தூய ஆவியார் வருகை பெந்தகோஸ்த் பெருவிழா
15, மே, 2016
நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். 
யோவான் 14,15

முதலாம் வாசகம்: தி.தூ 2,1-11
திருப்பாடல்: 104,1.24.29-31,34
இரண்டாம் வாசகம்: உரோ 8,8-17
நற்செய்தி: 14,15-16.23-26
யார் இந்த தூய ஆவியார்?
விவிலியத்தில் ஆழமான சிந்தனைகளையும் பல ஆராய்சித் தேடல்களையும் உருவாக்கிய சிந்தனைகளில் தூய ஆவியானவர் பற்றிய சிந்தனையும் மிக முக்கியமானது. கத்தோலிக்க திருச்சபை இவரை பாரம்பரிய விசுவாசத்தின் படி திருத்துவத்தின் மூன்றாவது ஆளாக ஏற்றுக்கொண்டு நம்புகிறது. எபிரேயத்தில் רוּחַ קָדוֹשׁ ரூஹா காடோஷ், தூய மூச்சு அல்லது தூய காற்று என இவரை பொருள்கொள்ளலாம். கிரேக்கத்தில் πνεῦμα ἅγιος புனுமா ஹகியோஸ், தூய மூச்சு என்றும் இலத்தீனில் ளிசைவைரள ஸ்பிரித்துஸ், உயிர்-ஆவி என்றும் இவரை பொருள் கொள்ளலாம். எபிரேயத்தில் இவர் பெண் பாலகவும், கிரேக்கத்தில் பலர்பாலகவும், இலத்தீனில் ஆண்பாலகவும் இருப்பதனால், தூய எரோம், கடவுள் பால் பிரிவினைகளை கடந்தவர் என்று வாதாடுகிறார். (காண் தொ.நூ 1,2: யோபு 33,4).

முதல் ஏற்பாட்டில், கடவுள் தெரிவு செய்யும் ஆட்களை உந்துபவர்களாக இந்த சக்தி வர்ணிக்கப்படுகிறது. முக்கியமாக நீதிமான்களையும், இறைவாக்கினர்களையும், அரசர்களையும் இந்த ஆவி ஆட்கொள்கிறது (காண் நீதி.தலை 3,10: 6,34). இறைவாக்குரைத்தல், கனவுகளுக்கு விளக்கம் கொடுத்தல் போன்றவை இந்த ஆவியின் முக்கியமான பணிகளாக காட்டப்படுகிறது (காண் தொ.நூ 41,38: 1சாமு 10,10). இறைவாக்கினர்கள் முக்கியமாக இந்த ஆவியின் நபர்களாக காணப்பட்டனர் (எசே 2,2) அத்தோடு முதல் ஏற்பாட்டில் இந்த ஆவியார் அதிகமான வேளைகளில் நபர் அல்லாத சக்தியாக காணப்படுகிறது. 


புதிய ஏற்பாட்டில் இந்த ஆவியானவரைப் பற்றிய சிந்தனை, முதல் ஏற்பாட்டு விசுவாசத்தில் இருந்து வளர்கின்றது. நற்செய்தியாளர்கள் லூக்கா, யோவான் மற்றும் பவுல் போன்றவர்கள் இந்த ஆவிபற்றிய சிந்தனைகளை விசேட விதமாக இயேசுவின் பணியுடன் இணைத்து காட்சியமைக்கிறார்கள். மாற்கு நற்செய்தியாளர் இயேசு தூய ஆவியில் திருமுழுக்கு கொடுப்பார் எனவும் (1,8), அவர் அந்த ஆவியை தனது திருமுழுக்கில் பெற்றார் எனவும் (1,10), இந்த தூய ஆவிக்கெதிரான குற்றம் பாரதூரமானது எனவும் காட்டுகிறார் (3,29). சில வேளைகளில் இயேசு அசுத்த ஆவிகளை விரட்டுவதையும் காட்டுகிறார் (3,11). ஆண்டவரின் பிறப்பு நிகழ்சிகளில் இந்த ஆவியானவரின் முக்கியமான பணிகளை மத்தேயு விவரிக்கின்றார் (1,20) அதே ஆவியானவரை இயேசு இறுதியில் சீடர்களுக்கும் கொடுத்து கட்டளை கொடுக்கிறார் (28,18-20). லூக்காவின் நற்செய்தியை ஒவ்வொரு பகுதியையும் இந்த ஆவியார் ஆட்கொள்ளுவார். மரியா, சக்கரியா, எலிசபேத்து, யோவான், சிமியோன் போன்றவர்கள் இதே ஆவியால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். இந்த ஆவியார் திருமுழுக்கில் இயேசு மீது இறங்குகிறார், ஆண்டவரை பாலை நிலம் அழைத்து செல்கிறார், பணிகளில் அவர்கூட இருக்கிறார், இறுதியாக இந்த ஆவியானவரை இயேசு தன் சீடர்களுக்கு பணிக்கிறார் (24,49). இதே ஆவியின் ஆட்கொள்ளலை திருத்தூதர் பணிகள் நூல்கள் ஆழமாக காட்டுகிறது. வரலாற்றில் ஒரு கட்டத்தில், இந்த நூல் தூய ஆவியின் நற்செய்தி என அழைக்கப்படும் அளவிற்கு அவரின் செயற்பாடுகளை இங்கே காணலாம். பவுல், உயிர்த்த ஆண்டவரின் முகவராக தூய ஆவியைக் காண்கிறார் (உரோ 8,9). இந்த ஆவியானவரையும் கிறிஸ்துவையும் பிரிக்க முடியாது என்பதும் அவர் நம்பிக்கை (1தெச 1,5-6). முதல் ஏற்பாட்டை போலல்லாது பவுல் தூய ஆவியை தனி ஆளாக காட்டுகிறார், அத்தோடு தூய ஆவியின் கொடைகளையும் கனிகளையும் தனித்தனியாக விவரிக்கிறார் (1கொரி 12-14: கலா 5,22-23). உரோமையார் 8ம் அதிகாரம் தூய ஆவியார் அருளும் வாழ்வை விவரிக்கிறது. 

இவர்களின் சிந்தனைகளையும் தாண்டி தூய ஆவியானவரின் உள்ளார்ந்த அனுபவத்ததை விவரிக்கிறார் யோவான் நற்செய்தியாளர். யோவான் தூய ஆவியானவரை துணையாளராக காட்டுகிறார். ஒருவருடைய புதிய பிறப்பு இந்த தூய ஆவியானவராலேயே நடக்கிறது, எனவும் இயேசு அறிவித்த பலவற்றை இந்த ஆவியானவரே விளங்கப்படுத்துவார் என்பது யோவானின் படிப்பினை. உயிர்த்த இயேசுவின் பிரசன்னம் இந்த தூயஆவியாரலே வழியிலே நடைபெறும் என்பதும் இவரின் புதிய சிந்தனை. திரித்துவத்தின் மூன்றாம் ஆளாக இந்த தூய ஆவியானவரை மத்தேயுவும், திருமுகங்களும் அங்காங்கே தெளிவாக காட்ட முயற்சிக்கின்றன (காண் மத் 28,19: 2கொரி 13,14).

முதலாம் வாசகம்: தி.தூ 2,1-11
1பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள்.✠ 2திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. 3மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். 4அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வௌ;வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள்.
5அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள 
யூதமக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். 6அந்த ஒலியைக்கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக்கேட்டுக் குழப்பமடைந்தனர். 7எல்லோரும் மலைத்துப்போய், 'இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? 8அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பதெப்படி?' என வியந்தனர். 9பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும், 10பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், 11யூதரும் யூதம் தழுவியோரும் கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம்மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக்கேட்கிறோமே! 'என்றனர். 12எல்லாரும் மலைத்துப்போய் இதன் பொருள் என்னவென்று ஒருவரோடொருவர் கேட்டவாறு மனம் குழம்பி நின்றனர். 13இவர்கள் இனிய மதுவை நிரம்பக் குடித்துள்ளனர் என்று மற்றவர்கள் கிண்டல் செய்தனர்.

இன்றைய இரண்டாம் வாசகம், தூயஆவியாரின் வருகை நிகழ்வை காட்டுகின்ற பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியைப் போல திருத்தூதர் பணிகளில் வேறு எந்த பகுதியும் முக்கியம் பெறவில்லை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

வ.1: இந்த விழா, (πεντηκοστή பென்டேகோஸ்டே) பாஸ்காவிற்கு பதினைந்தாம் நாளுக்கு பின்னர் முற்காலத்தில் கொண்டாடப்பட்டது (காண் தோபி 2,1). இஸ்ராயேலரின் மூன்றில் இரண்டாவது முக்கியமான விழாவும் இதுவாகும். ஒவ்வொரு ஆண்டும் இது எருசலேமில் பாஸ்காவின் பின்னர் ஏழாவது வாரத்தில் அறுவடைகளுக்கு நன்றியாக கொண்டாடப்பட்டது. இதனை வாரங்களின் திருநாள் (חַג שָׁבֻעֹת֙ ஹக் ஷவுஓத்) மற்றும் அறுவடையின் திருநாள் (חַג קָּצִיר֙ ஹக் காட்சிர்) என்றும் அழைப்பர்.

வவ.2-4: தூய ஆவியாரின் வருகை விவரிக்கப்படுகிறது. லூக்கா இங்கே, இஸ்ராயேலர் சீனாய் மலையடிவாரத்தில் பெற்ற இறைக்காட்சி அனுபவத்தை ஒத்தாக விவரிக்கின்றார் என்கின்றனர் சில ஆய்வாளர்கள். தூய ஆவியானவரை காற்றாகவோ அல்லது நெருப்பு நாவாகவோ இங்கே லூக்கா காட்டவில்லை மாறாக தூய ஆவியை இவற்றிக்கு ஒப்பிடுகிறார். நெருப்பு நாக்கு என்ற உருவகம் கிரேக்க உரோமைய இலக்கியங்களில் உள்ளாந்த உளவியல் அனுபவங்களையும், இறைவாக்கு, அறிவியல், பேச்சு அனுபவங்களையும் காட்டுவனவாக அமைந்திருந்தது. லூக்கா இந்த உருவகங்கள் மூலமாக கடவுள் தனது வல்லமையை காட்டுவதாக உணர்த்துகிறார். முழு வீடு, ஒவ்வொருவரின் தலை, வௌ;வேறான மொழிகள், இவைகள் கடவுளின் நிறைவான அருளையும் அவரின் பல்முகத்தன்மையையும் காட்டுகின்றன. பரவசப்பேச்சு பற்றும் பல மொழிப்பேச்சுக்கள் என்பவை ஒரே பொருளைக் குறிக்காது.   

வவ. 5-8: ஈழத் தமிழர் சமூதாயத்தைப்போல், யூத மக்கள் பல காலங்களாக தாயக மற்றும் புலம் பெயர்ந்த சமூகங்களாக காணப்பட்டனர். இந்த புலம்பெயர்ந்த யூத மக்கள் அந்த நாட்டு மொழிகளையும் அத்தோடு கல்வி மொழியான கிரேக்கத்தையும், அரச மொழியான இலத்தீனையும் கற்றனர். தாயக இஸ்ராயேலில் அதிகமானோர் பாலஸ்தீன அரமேயிக்கத்தை பேசினர். இந்த அறுவடைத் திருநாளுக்காக அனைத்து புலம்பெயர்ந்த இடங்களில் இருந்து வந்தவர்களை லூக்கா இங்கே காட்டுகிறார். இவர்கள் ஒவ்வொருவரும் கலிலேயரின் அரமேயிக்கத்தை அறிந்திருக்க வாய்பில்லை, திருத்தூதர்கள் அனைவருக்கும் கிரேக்கமோ இலத்தீனோ தெரிந்திருக்கவும் வாய்பில்லை, அல்லது இதனை இந்த யூதர்கள் எதிர்பார்திருக்கவும் மாட்டார்கள். புலம் பெயர்ந்தவர்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது. தமது புலத்து மொழிகளில் கலிலேயர் பேசுவதைக் கேட்கின்றனர். வழமையாக புலம்பெயர்ந்தவர்கள் வசதி படைத்தவர்களாக இருந்தனர், இதனால் தாயகத்தில் இருந்த வறியவர்களை நக்கல் கண்களோடு பார்த்திருக்கலாம். இதனால் கலிலேயரின் சாகசங்கள் ஆச்சரியத்தை தருகிறது. (இந்த தாயாக-புல ஆச்சரியங்களை நாமும் நல்லூரிலும் மடுவிலும் அடிக்கடி காணலாம்). ஆச்சரியம் தந்தாலும் இவர்களின் கேள்விகள் நியாயமானவை.

வவ. 9-11: உரோமைய பேரரசு திருத்தூதர் காலத்தில் பரந்து விரிந்திருந்தது. பார்தியா, மேதியா, எலாயமியா, மொசோப்போதோமியா போன்றவை உரோமையரின் ஆட்சிக்கு உட்பட்டிருக்கவில்லை. மற்றைய பகுதிகளான: யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா (சின்ன),  பிரிகியா, பம்பலியா, சீரேன் போன்றவை வடகிழக்கு உரோமைய மாகாணங்கள் (தற்போதைய துருக்கி, இஸ்ராயேல், லெபனான், சிரியா, பலஸ்தீனா). எகிப்து லிபியா போன்றவை, தெற்கு உரோமைய மாகாணங்கள் (தற்போதைய எகிப்து, லிபியா, துனிசயிh, அல்ஜீரியா, மோறாக்கோ போன்றய நாடுகளின் வடக்கு பிராந்தியாங்கள்). உரோமை என்பது பழைய உரோமை நில அளவைக் குறிக்கும். அத்தோடு லூக்கா, யூதர்கள் மட்டுமல்ல யூத மதத்தை தழுவியவர்களையும் விவரிக்கின்றார். இவர்கள், கிரேக்கரும், அரேபியருமாவர். உரோமையில் பல 
யூதர்கள் இருந்தனர், ஆனால் உரோமையர்களில் சிலர் யூத மதத்தை தழுவினார்கள் என்பது சாத்தியமில்லை. இந்த விவரிப்பில் இருந்து அக்காலத்தில் சமய சுதந்திரங்களும், சகிப்புத்தன்மைகளும், தூர புனித பயணங்களும் வழமையில் இருந்ததை காணலாம். (உரோமை பேரரசின் நில வரபடைத்தை காண இங்கே சொடுக்குக: http://www.timemaps.com/civilization/Ancient-Rome)

திருப்பாடல்: 104,1.24.29-31,34

இந்த திருப்பாடலை தமிழ் விவிலியம் படைப்பின் மேன்மை என்று தலைப்பிடுகிறது. 35 வரிகளைக் கொண்டுள்ள இப்பாடல், ஒரு புகழ்ச்சிப் பாடல் வகையைச் சார்ந்தது. இந்த திருப்பாடலின் மையக் கருத்து தொடக்க நூலின் முதலாம் அதிகாரத்தை ஒத்திருப்பதைக் காணலாம். 

வவ. 1-4: இந்த வரிகளில், ஆசிரியர் படைப்புக்களின் அதிசயங்களால் கடவுளை விவரிக்க முயலுகிறார். 

வவ. 5-9: ஒரு காலத்தில் உலகை மூடியிருந்த நீர்த்திரளை கடவுள் அதனதன் இடத்தில் ஒழுங்கு படுத்துகிறார். 

வவ. 10-12: நீர் திரளையும் கடலையும் கடவுள் எவ்வாறு கட்டுப்படுத்துகிறார் என்பதை விவரிக்கிறார். ஒரு காலத்தில் அடங்காமல் இருந்த நீர் இப்போது மக்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனக் காட்டுகிறார் (ஒப்பிடுக தொ.நூல் 1,6-7).

வவ. 13-18: மழையையும், நிலத்தின் விளைச்சல்களையும் கடவுள் செவ்வனே வடிவமைத்துள்ளார் என்கிறார் ஆசிரியர். லெபனானின் அழகிய மலைகளும் அதன் செழிப்புக்களும் விவரிக்கப்பட்டுள்ளன. 

வவ. 19-23: இருள் மற்றும் வெளிச்சத்தின் வித்தியாசங்களையும் அவற்றின் தேவைகளையும் காட்சிப்படுத்துகிறார். இருளும் வெளிச்சமும் நாளாந்த வாழ்க்கைக்கு தேவையானவை என்பதை அழகிய வார்த்தை பிரயோகங்களில் விவரிக்கின்றார். 

வ. 24.25-29: ஆண்டவருடைய வேலைப்பாடுகளைப் பார்த்து ஆசிரியர் ஆச்சரியப்படுகிறார். ஆண்டவருடைய படைப்புக்களால்தான் பூவுலகு நிறைந்துள்ளது என்பது இவரின் நம்பிக்கை. பரந்து விரிந்த கடலும் ஆண்டவருடைய கட்டளைக்கு கட்டுப்பட்டது என்பது ஆசிரியரின் அசையா நம்பிக்கை. கடல் உயிரினங்கள் அனைத்தையும், அங்கே பயணிப்பவை அனைத்தையும் கடவுளே காக்கிறார் என்கிறார் ஆசிரியர். லேவியத்தான் (לִוְיָתָן லிவ்யாதான்), இது ஒருவகை புராதன கடல் உயிரினத்தைக் குறிக்கும். மத்திய கிழக்கு இலக்கியங்கள் இதனை கடல் அரக்க பாம்பாக கண்டன. முதல் ஏற்பாடு பல இடங்களில் கடவுள் இதனை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை விவரிக்கின்றது. தற்கால திமிங்கலங்கள், பெரிய முதலைகள், ஒக்டோபஸ்கள் போன்றவற்றை அக்கால ஆசிரியர்கள் இவ்வாறு கண்டிருக்கலாம். 

வவ.30-35: உலகம் விதியால் இயங்கவில்லை மாறாக கடவுளின் ஆவியால் இயங்குகிறது என்கிறார் ஆசிரியர். ஆண்டவரின் மாட்சி, பார்வை போன்றவை மனிதனின் கண்களுக்கு அப்பாற்பட்டவை என்றும், உயிர் உள்ளவரை அனைவரும் ஆண்டவரை போற்றி தியானப்பாடல் இசைக்க வேண்டும் என்றும் கட்டளையிடுகிறார் இந்த ஆசிரியர். இறுதியாக பாவிகளையும் தீயோர்களையும் இந்த அழகிய உலகத்தை விட்டு ஓடி விட கேட்கிறார். 

இரண்டாம் வாசகம்: உரோ 8,8-17
8ஊனியல்புக்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாய் இருக்க முடியாது. 9ஆனால் கடவுளின் ஆவி உங்களுக்குள் குடிகொண்டிருந்தால், நீங்கள் ஊனியல்பைக் கொண்டிராமல், ஆவிக்குரிய இயல்பைக் கொண்டிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியைக் கொண்டிராதோர் அவருக்கு உரியோர் அல்ல. 10பாவத்தின் விளைவாக உங்கள் உடல் செத்ததாயினும், கிறிஸ்து உங்களுள் இருந்தால், நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்படுவீர்கள்; அதன் பயனாகத் தூய ஆவி உங்களுக்குள் உயிராய் இருக்கும். 11மேலும், இறந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தவரின் ஆவி உங்களுள் குடிகொண்டிருந்தால், கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்த அவரே உங்களுள் குடிகொண்டிருக்கும் தம் ஆவியினாலே சாவுக்குரிய உங்கள் உடல்களையும் உயிர் பெறச் செய்வார். 12ஆகையால் சகோதர சகோதரிகளே, நாம் ஊனியல்புக்குக் கடமைப்பட்டிருக்கவில்லை; அவ்வியல்பின்படி வாழவேண்டியதில்லை. 13நீங்கள் ஊனியல்புக்கு ஏற்ப வாழ்ந்தால், சாகத்தான் போகிறீர்கள்; ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச்செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள். 14கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள். 15மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை; மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக் கொண்டீர்கள். அதனால் நாம், 'அப்பா, தந்தையே' என அழைக்கிறோம். 16நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார். 17நாம் பிள்ளைகளாயின், உரிமைப் பேறு உடையவர்களாய் இருக்கிறோம். ஆம், நாம் கடவுளிடமிருந்து உரிமைப் பேறு பெறுபவர்கள், கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும்; அப்போதுதான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்.

உரோமையர் எட்டாம் அதிகாரம் தூய ஆவியார் அருளும் வாழ்வை விவரிக்கின்றது. இந்த அதிகாரத்தில் பவுல் ஊனியல்பையும் ஆவிக்குரிய வாழ்வையும் ஒப்பிட்டு, ஆவிக்குரிய வாழ்வை உயர்த்திப் பேசுகிறார். 
இதனை பவுலுடைய திருமுகங்களில் மிக ஆழான பகுதிகளில் ஒன்று என இதனைச் சொல்லலாம். 

வ.8: ஏழாவது வசனத்தில் ஊனியல்பு கடவுளுக்கு பகையானது எனச் சொன்னவர், ஊனியல்புக்கு உட்பட்டோர் கடவுளுக்கு உகந்தவர்களாக இருக்க முடியாது என்கிறார். ஊனியல்பை குறிக்க σάρξ சார்க்ஸ் 
எனும் கிரேக்கச் சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இது சதையையோ, உடலையோ, உடலின் சாதாரண குணங்களையோ குறிக்கலாம். அனேகமாக இது உயிருடன் இருக்கும் உடலை குறிக்கும். 

வவ.9-11: ஆவியை உடலில் கொண்டிருந்தால் இந்த ஊனுடலின் இயல்பில் இருந்து விடுபடலாம் என்று இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவைத் தருகிறார் பவுல். முதல் ஏற்பாட்டில் கடவுளுடைய தோரா சட்டங்களையும் விருத்தசேதனத்தையும் கொண்டு ஒருவர் கடவுளின் பிள்ளையாக ஏற்க்கப்பட்டடார். இங்கே அதற்கு புது விளக்கத்தை தருகிறார் பவுல். ஒருவர் கடவுளுக்கு ஏற்றவராக இருக்க அவருக்கு இருக்க வேண்டியது ஆவியக்குரிய வாழ்வே என்கிறார். இந்த வரிகளை அவதானமாக வாசித்தால் பவுல், கடவுளின் ஆவி (πνεῦμα θεοῦ புனுமா தியு), கிறிஸ்துவின் ஆவி (πνεῦμα Χριστοῦ புனுமா கிறிஸ்து) மற்றும் ஆவி (πνεῦμα புனுமா) என்று மாற்றி மாற்றி பாவிக்கின்றார். ஆக இவருக்கு இந்த மூன்றும் ஒன்றுதான் அல்லது ஒன்றோடொன்று தொடர்புபட்டது போல தோன்றுகிறது. பாவத்தின் விளைவுதான் சாவு என்பது என்பது யூத மக்களின் நம்பிக்கை அதனை பவுலும் நம்புகிறார். 10வது வசனத்தில் கிறிஸ்துவையும் கிறிஸ்துவின் ஆவியையும் ஒத்த சொல்லாக பார்க்கிறார். கடவுளுக்கு ஒருவர் ஏற்புடையவராக, கிறிஸ்து அல்லது அவரின் ஆவியே தேவை என்கிறார். கிறிஸ்துவை உயிர்தெழ செய்தவர் இறந்த அனைவரையும் உயிர்த்தெழ செய்யக் கூடடியவர், எனேவே கடவுளின் ஆவியை நாம் நம் உடலில் கொள்ள வேண்டும் இதனால் உயிர் பெறுவோம் என்கிறார். இங்கே கடவுளின் ஆவியை கொண்டு வருகிறார். 

வவ. 12-13: பவுலுடைய கடிதங்களில் பல வேளைகளில் முடிவடைகின்ற கருத்துக்கள் மீண்டும் மீண்டும் தொடர்வதைப் பார்க்கலாம் (நம்முடைய சில மறையுறைகள் முடிவடைந்து பின்னர் தொடர்வதைப் போல்). மனிதர்கள் மனிதர்களாகத்தான் வாழ முடியும் என்று சொல்லி விழுமியங்களை கனவுகளாகப் பார்ப்பவர்களுக்கு பவுல் விடைசொல்கிறார். ஊனியல்பிற்கு கிறிஸ்தவர்கள் கடமைப்பட்டவர்கள் அல்ல என்பதே அந்த விடை. சாவிற்கும் வாழ்விற்கும் தெரிவைக் காட்டுகிறார். முதல் ஏற்பாட்டில் கடவுள் மோசேக்கு (இஸ்ராயேலருக்கு) வாழ்வையும் சாவையும் முன்வைத்தார். இங்கே அதே சாவும் வாழ்வும் முன் வைக்கப்படுகிறது. (ஒப்பிடுக இ.ச 30,15). ஆக சாக தூண்டக்கூடியது ஊனியல்பின் வாழ்வு, வாழ்வு தரக்கூடியது தூயஆவியின் துணை. 

வவ. 14-15: யார் கடவுளின் மக்கள் என்பதை தெரிவுபடுத்துகிறார் இந்த புறவினத்தவருக்கான திருத்தூதர். உரோமைய புறிவினத்தவ கிறிஸ்தவ சபைக்கு இந்த வரிகள் நிச்சயமாக பலனளித்திருக்கும். பாலை வனத்தில் கடவுளின் மக்கள் கடவுளின் பாதுகாப்பால் இயக்கப்பட்டார்கள் (மேகத் தூணும், நெருப்புத் தூணும்). இங்கே ஓர் உள்ளார்ந்த இயக்கத்தை முன்வைக்கிறார். கடவுளின் ஆவியே அந்த இயக்கம், அந்த இயக்கமே ஒருவரை கடவுளின் பிள்ளையாக்குகிறது (எவ்வளவு ஆழமான வரி). மறைமுகமாக யாரையோ சாடுகிறார். ஒரு வேளை இஸ்ராயேலர் கடவுளால் மீட்கப்பட்டும் அச்சத்திற்கு உள்ளானார்கள் ஆனால் கிறிஸ்தவர்களுக்கு அந்த அச்சம் தேவையில்லை என்பதைப் போல் உள்ளது. அப்பா என்பது அரேமெயிக்கச் சொல். (Αββα அப்பா, தந்தை, அலலது பப்பா என்று பொருள் படும்). உரோமைய யூத -கிறிஸ்தவர்கள் இலத்தீனைவிட கிரேக்கத்தையே பேசினார்கள், இவர்களுக்கு இந்தச் சொல் நன்கு தெரிந்திருந்தது. ஆண்டவர் இயேசுகூட இந்த சொல்லை அடிக்கடி பாவித்திருப்பார் (ஒப்பிடுக மாற் 14,36 கலா 4,6). 

வவ. 16-17: கடவுளின் பிள்ளைகளாவதற்கு புதிய அனுமதி அட்டையை தருகிறார். இங்கே நம்முடைய உள்ளத்தையும் தூய ஆவியையும் குறிக்க, ஆவி என்ற சொல்லே பாவிக்கப்பட்டுள்ளது. பிள்ளைகள் என்பவர்கள் உரிமைப்பேறு பெற்றவர்கள், அதாவது அக்கால நிலைமைகளின் படி அடிமையாய் 
இல்லாதவர்கள். கிறிஸ்து கடவுளின் முதல் வாரிசாக இருக்கிறபடியால் மற்றவர்கள் உடன்-வாரிசுகள் என்று விளக்குகிறார் பவுல். ஆக உடன்-வாரிசுகள் தமது மாட்சிமையில் பங்குபெற துன்பங்களிலும் பங்கு பெற வேண்டும் என்ற நியதியை தர்க்க ரீதியாக விளக்குகிறார். 

நற்செய்தி: யோவான் 14,15-16.23-26
15நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். 
16'உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். 23'என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். 24என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல் அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை. 25உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். 26என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார். 

யோவான் நற்செய்தியின் 14வது அதிகாரம், இயேசு ஆண்டவர் தன் சீடர்களுடன் மேற்கொண்ட நீண்ட உரையாடல்கள் அடங்கிய பகுதியில் அமைந்துள்ளது. இந்த அதிகாரத்தில் சீடர்களுடைய கடமையையும், அவர்களிடம் தாம் எதிர் பார்பவற்றையும், அதனால் அவர்களுக்கு கிடைக்க போகிறவற்றையும் பற்றி அறிந்து கொள்ளலாம். யோவான் நற்செய்தியின் சிறப்புத் தன்மை, அதனை வாசிக்கிறபோது அது காலங்களைக் கடந்து ஏதோ நமக்கு நேரடியாக சொல்வதனைப்போல உணர்வோம். 

வ. 15: அன்பும், கட்டளைகளும் யோவான் நற்செய்தியின் மிக முக்கியமான பதங்கள். அன்பிற்கு இங்கு (ἀγάπη அகாப்பே) என்ற சொல்லும் கட்டளைகளுக்கு (ἐντολή என்டொலே) என்ற சொல்லும் பாவிக்கப்பட்டுள்ளன. அன்பென்ற உள்ளார்ந்த வாழ்க்கை முறை கட்டளை என்ற வெளியார்ந்த வாழ்க்கை முறையுடன் நெருங்கி தொடர்பு பட்டுள்ளதை ஆண்டவர் விவரிக்கின்றார். உள்ளார்ந்த விசுவாசமும் வெளியார்ந்த வாழ்க்கை முறையும் ஒன்றொடொன்று தொடர்பு பட்டிருக்க வேண்டும் என்ற ஆரம்ப கால திருச்சபையின் தேவையை இந்த வரி பிரதிபலிக்கின்றது. 

வ. 16: யோவான் நற்செய்தியில் மிகவும் முக்கியமான வரி. இங்கேதான் முதன் முதலில் παράκλητος பராகிலிடொஸ் என்ற தூயஆவியாருக்கான வார்த்தை வருகிறது. யோவான் நற்செய்தி மற்றும் திருமுகங்களில் இந்த வார்த்தை இதே அர்த்தத்தில் ஐந்து தடவைகள் வருகிறது. நற்செய்தியாளர்களில் யோவான் மட்டுமே இந்த வார்த்தையை பயன்படுத்துகிறார். இதற்கு, உபதேசி, ஊக்குவி, ஆறுதல் சொல், திடப்படுத்து, உதவிசெய், முறையிடு என்று பல அர்த்தங்கள் உள்ளன. இவை சட்ட ரீதியான பண்புகளைக் கொண்டிருப்பது இதனுடைய சிறப்பு அம்சங்களாகும். துணையாளர் என்ற தமிழ் மொழிபெயர்ப்பு மிகவும் பொருத்தமான தெரிவு. ஆங்கில (counseor, advocate, helper) மற்றும் வேறு மொழிபெயர்ப்புக்கள் இந்த παράκλητος இன் ஒரு பக்கத்தையே காட்ட முயல்கின்றன. சில இடங்களில் இயேசு தான்தான் துணையாளரை அனுப்புவதாக கூறியிருக்கிறார், இங்கே தந்தையிடம் கேட்பதாக கூறுகிறார். இது முரண்பாடுகளையல்ல மாறாக தந்தையும் தானும் ஒரே வேலையைத்தான் செய்வதாக காட்டுகிறது. 

வ. 23: இயேசுவின் மீது அன்பு, அவர் கட்டளைகளை கடைப்பிடித்தல், தந்தையின் அன்பு, இயேசு மற்றும் தந்தையின் வாசம் போன்றவை ஒன்றிலொன்று தங்கியுள்ளது. தந்தை மற்றும் இயேசுவின் வாசம், ஆரம்ப கால திருச்சபையில் மிகவும் முக்கியமானதாக தேவைப்பட்டது. கடவுள் மற்றும் இயேசுவினுடைய வருகை எப்படி திருச்சபையின் அன்பிலும் அன்புறவிலும் தங்கியுள்ளது என்பதை இந்த வரி அழகாக காட்டுகிறது. 
தந்தையும் இயேசுவும் வந்து குடியிருத்தல் ஆழமான திருத்துவத்தின் குடியிருப்பை விவரிக்கின்ற சிந்தனைகள். 

வ. 24: கீழ்படிதல் அன்பை அடிப்படையாக கொண்டுள்ளதை ஆண்டவர் காட்டுகிறார். உண்மையான அன்பில்லாத இடத்தில் கடைப்பிடிப்பு இருக்காது. அத்தோடு இயேசுவின் வார்த்தை கடவுளின் வார்த்தைகள். ஆக இயேசுவை வெறுத்து கடவுளை நேசிக்க முடியாது என்கிறார் யோவான். இயேசுவை விட்டு எப்படி கடவுளை அடைய முடியும் என்பது யோவானின் ஆச்சரியமான கேள்வி. 

வ. 26-27: இங்கே இயேசு இரண்டு விதமான அறிவுறுத்தல்களை முன்வைக்கிறார். அ). சாக்குபோக்கிற்கு இனி இடமில்லை, எல்லாவற்றையும் இயேசு சொல்லிவிட்டார். ஆ) துணையாளர் சொல்லித் தருவார். இயேசு தன் மக்களின் பலவீனத்தை அறிந்திருக்கிறார். அதனால்தான் துணையாளர் வந்து சொல்லித்தர வேண்டிய தேவை உள்ளதனை ஏற்றுக்கொள்கிறார். துணையாளர் சொல்லித்தருவதோடு மட்டுமல்லாது நினைவூட்டுவார் என்றும் சொல்கிறார். இங்கே யோவான் மனித குலத்தின் நினைவு மறதி வியாதியை நமக்கு நினைவூட்டுகிறார். 

பரவசப்பேச்சு பேசுதல், பல்மொழி பேசுதல், அதிசயங்கள் குணமாக்கல் செய்தல், ஆழ்ந்த தியானங்கள் செய்தல் போன்றவற்றில் மட்டும் துணையாளரை அடக்கிவிட முடியாது. துணையாளரின் வருகையும் அவரின் செயல்களும் இயேசுவின் அன்பையே மையப்படுத்துகிறது. இயேசுவின் அன்பில்லா வித்தைகள் எல்லாம் மாய வித்தைகளே. தூய ஆவியானவர் எப்போதோ வந்துவிட்டார், இப்போதைய தேவை அவரை கண்டுகொள்ளுவதும் பற்றிக்கொள்ளுவதுமே ஆகும். தூய ஆவியானவர் யாருக்கும் சொந்தமானவர் அல்ல மாறாக நாம் அனைவரும் அவருக்கு சொந்தம். 

அன்பு ஆண்டவரே, இயேசுவே! உம்முடைய ஆவி, உண்மையை கற்றுத்தரவும், அந்த உண்மை எங்களை எங்களது வட்டங்களில் இருந்து விடுவிக்கவும் தொடர்ந்து அருள்வீராக. ஆமென்.

மி. ஜெகன்குமார்அமதி
உரோமை

புதன், 11 மே, 2016

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...