வியாழன், 28 ஏப்ரல், 2016

பாஸ்கா காலம் ஆறாம் வாரம்; Paschal time, Sixth week of Sunday



பாஸ்கா காலம் ஆறாம் வாரம்;
01,மே,2016
அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்.
(யோவான் 14,27)

முதல் வாசகம்: தி.பணி 15,1-2.22-29.
திருப்பாடல்: 67.
இரண்டாம் வாசகம்: தி.வெளி 21,10-14.22-23.
நற்செய்தி: யோவான் 14,23-29.

முதல் வாசகம்: தி.பணி 15,1-2.22-29
1யூதேயாவிலிருந்து வந்த சிலர், நீங்கள் மோசேயின் முறைமைப்படி விருத்தசேதனம் செய்து கொள்ளாவிட்டால் மீட்படைய முடியாது' என்று சகோதரர் சகோதரிகளுக்குக் கற்பித்து வந்தனர். 2அவர்களுக்கும் பவுல், பர்னபா ஆகியோருக்குமிடையே பெருங் கருத்து வேறுபாடும் விவாதமும் உண்டாயின. எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுள் சிலரும் எருசலேமுக்குச் சென்று, திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும் இந்த சிக்கலைக் குறித்துக் கலந்து பேசுமாறு நியமிக்கப்பட்டனர்.
சங்கத்தின் தீர்மானம்
22பின்பு திருத்தூதர்களும் மூப்பர்களும் திருச்சபையார் அனைவரும் தம்முள் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களைப் பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோக்கியாவுக்கு அனுப்புவது என்று தீர்மானித்தனர். அவ்வாறே அவர்கள் சகோதரர்களிடையே முதன்மை இடம் பெற்றிருந்த பர்சபா என அழைக்கப்பட்ட யூதாவையும் சீலாவையும் தேர்ந்தெடுத்தார்கள். 23பின்பு அவர்கள் ஒரு கடிதத்தை எழுதி அவர்கள் கையில் கொடுத்து அனுப்பினார்கள். அக்கடிதத்தில், 'திருத்தூதரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோக்கியா, சிரியா, சிலிசியா ஆகிய இடங்களிலுள்ள பிற இனத்துச் சகோதரர் சகோதரிகளுக்கு வாழ்த்துக் கூறுகின்றோம். 24எங்களுள் சிலர் அங்கு வந்து தங்களுடைய பேச்சால் உங்களது மனத்தைக் குழப்பி உங்களைக் கலக்கமுறச் செய்தனர் என்று கேள்விப்பட்டோம். இவர்களுக்கு நாங்கள் எந்தக் கட்டளையும் கொடுக்கவில்லை. 25எனவே, நாங்கள் ஒருமனத்துடன் கூடிவந்து சிலரைத் தேர்ந்தெடுத்து எம் அன்புக்குரிய பர்னபா, பவுல் ஆகியோரோடு உங்களிடம் அனுப்புவதென்று தீர்மானித்தோம். 26இவர்கள் இருவரும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் துணிந்தவர்கள். 27எனவே, நாங்கள் 
யூதாவையும் சீலாவையும் உங்களிடம் அனுப்புகிறோம். அவர்கள் நாங்கள் எழுதுகிற இவற்றைத் தங்கள் வாய்மொழி மூலம் உங்களுக்கு அறிவிப்பார்கள். 28இன்றியமையாதவற்றைத் தவிர அதிகமான வேறு எந்தச் சுமையையும் உங்கள் மேல் சுமத்தக்கூடாது என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம். 29சிலைகளுக்குப் படைக்கப்பட்டவை, இரத்தம், கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை மற்றும் பரத்தைமை ஆகியவற்றை நீங்கள் தவிர்த்து உங்களைக் காத்துக்கொள்வது நல்லது. வாழ்த்துகள்' என்று எழுதியிருந்தார்கள்.

எருசலேம் பொதுச் சங்கம்: மனிதர்கள் தங்களது மட்டுப்படுத்தப்பட்ட சிந்தனைகளை கடவுளின் உதடுகளில் வைக்கிறபோது சகிப்பின்மை தோன்றுகிறது. இது வரலாற்றில் தோன்றிய பல போர்களுக்கு காரணமாகிறது. இன்றைய முதல் வாசகம் திருச்சபையினுடைய முதலாவது பொதுச் சங்கத்தினைப் பற்றியும் அது தோன்றிய வரலாற்றுத் தேவையைப் பற்றியும் விவரிக்கிறது (காண்க தி.ப 15,1-29). ஆரம்ப கால திருச்சபையில் முதலில் இணைந்தவர்களும் அனைத்து திருத்தூதர்களும் இஸ்ராயேலராகவே இருந்தனர், அதாவது யூத மதத்திலிருந்து வந்தவர்களாகவோ அல்லது யூத கோட்பாடுகளை கைவிடாதவர்களாகவோ இருந்தனர். திருச்சபை எருசலேமை விட்டு வெளியில் சென்றபோது, முக்கியமாக அந்தியோக்கியாவிற்கும் அத்தோடு பவுலுடைய மறைபரப்பு பணியினால் சின்ன ஆசியாவிற்கும் பரவத்தொடங்கியபோது யூதரல்லாத மற்றைய விசுவாசிகள் திருச்சபையில் இணைந்து கொள்கின்றனர். இந்த வேளையில் யூத கிறிஸ்தவர்களுக்கும், 
யூதரல்லாத கிறிஸ்தவர்களுக்கும் மோசேயின் சட்டங்களை அடிப்படையில் கொண்ட பல விவாதங்களும் கருத்து முரண்பாடுகளும் தோன்றுகின்றன. அந்தியேக்கியாவில் தோன்றிய இந்த கருத்து முரண்பாடு எருசலேமிலும் வாத-பிரதி வாதங்களை தோற்றுவிக்கின்றது. இந்த சங்கத்தில் 
யூத கிறிஸ்தவர்கள் விருத்தசேதனத்தை அனைவருக்கும் கட்டாயமாக்க கேட்கின்றனர். பேதுரு தான் கொர்னேலியு வீட்டில் பெற்ற அனுபவத்தைக் கொண்டு யூத சட்டங்கள் அனைவருக்கும் பொருந்தாது என விளக்குகிறார். பவுலும் பர்ணபாவும் தங்களது மறை பரப்புப் பணி அனுபவத்தை பகிர்கின்றனர். யாக்கோபு இறுதியாக விவிலிய சாற்றுகளைக்காட்டி பேதுருவுக்கு சார்பாக பேசுகிறார். இறுதியாக ஒருவரின் சடங்கு முறைகள் மற்றவர்கள் மேல் திணிக்கப்படக்கூடாது என இரண்டு குழுக்களுக்கும் பொதுவான முடிவு எடுக்கப்படுகிறது. மனிதர்கள் குழுவாதத்தை முன்வைத்தபோது தூய ஆவியார் பொதுவாத மனப்பாங்கை முன்வைத்து முடிவெடுக்க சந்தர்பத்தை ஏற்படுத்துகிறார். இதன் விளைவுதான் திருத்தூதர்கள் அந்தியோக்கியாவிற்கு அனுப்பிய மேய்ப்புப் பணி திருமுகம்.  

வவ. 1-2: 
அ. பிரிவினை வாதம் திருச்சபையின் வரலாற்று பிரச்சனையான அனுபவம். யார் இந்த எருசலேமிலிருந்து வந்தவர்கள்? இவர்கள் யூத கிறிஸ்தவர்களாக இருக்கலாம் அல்லது பரிசேயர் சார்பான கிறிஸ்தவர்களாக இருக்கலாம். இங்கே இவர்களுடைய பிரச்சனை இயேசு ஆண்டவர் அல்ல மாறாக விருத்தசேதனமும், யூத சடங்குகளுமாகும். விருத்தசேதனம் (περιτομή; பெரிடொமே) இஸ்ராயேல் மக்கள் தாங்கள் கடவுளுடன் செய்த உடன்படிக்கையின் அடையாளம். ஆபிரகாம் இதனை முதலில் தன்வீட்டில் தொடங்கிவைத்தார் என காண்கிறோம் (காண் தொ.நூ 17,10). இது எபிரேயத்தில் מוּלָה முலாஹ் என அழைக்கப்படுகிறது. இதனை இஸ்ராயேல் மக்கள் மட்டுல்ல பல செமித்தியர் தங்களது மருத்துவ அல்லது தூய்மை சடங்காக கொண்டிருந்தனர். இயேசுவும் அனைத்து திருத்தூதர்களும் விருத்த சேதனம் செய்யப்பட்டவர்களாகவே இருந்தனர். இயேசு தன் போதனைகளில் இதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை (காண்க யோவான் 7,22). 

ஆ. பவுலும் பர்னபாவும் நாடுகடந்த யூதர்களாக இருந்தபோதும், யூத சட்டங்களை கடைப்பிடித்தவர்கள். ஆனால் தங்களது சட்டங்களுக்கு மேலாக இயேசுவை நேசித்தபடியால் இங்கே யூதரல்லாத கிறிஸ்தவர்கள் மேல் தங்கள் சட்டங்களை திணிக்காமல் இருக்கிறார்கள். அந்தியோக்கிய திருச்சபை இவர்களை எருசலேம் திருச்சபையுடன் கலந்தாலோசிக்க பணியமர்த்துகிறது. 

வ. 22: பலமான வாதங்கள் அனுபவப் பகிர்வுகளுக்குப் பின் யூதாவையும் சீலாவையும், பவுல் பர்னபாவுடன் அந்தியோக்கியாவிற்கு அனுப்புகிறது எருசலேம். இந்த யூதாவும் சீலாவும் பின்னர் முக்கியமான பணியாளர்களாக உருவெடுத்தனர். தெரிந்தெடுத்தலும் அனுப்புதலும் திருச்சபையின் முக்கியமான பணிகளாகும், இவை திருத்தூதர்களை ஆண்டவர் தெரிந்தெடுத்து அனுப்பியதை பின்புலமாகக் கொண்டுள்ளன. 

வ. 23: γράφω கிராபோ என்னும் செயற்பாடு எழுதுதலையும் சிலவேளைகளில் கடிதத்தையும் குறிக்கும். ஆரம்ப காலங்களில் முக்கியமான தகவல்கள் இவ்வாறே அறிவிக்கப்பட்டது. சிரிய அந்தியோக்கிய, சிசிலிய, கிறிஸ்தவர்களை பெறுநர்களாகவும், மூப்பர்களையும் திருத்தூதர்களையும் அனுப்புனர்களாகவும் இக்கடிதம் கொண்டுள்ளது. திருச்சபையின் தொடக்க காலத்திலேயே மூப்பர்கள் திருத்தூதர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதனை இங்கே காணலாம்.

வவ. 24-27: நடந்த தவறுகளுக்கு தாய் திருச்சபை பொறுப்பில்லை என்பதையும் அதனை நிவர்த்தி செய்ய தகுந்தவர்களையும் விரும்பியவர்களையும் திருச்சபை அனுப்புவதை அவதானிக்கலாம். பிழைகள் நிவர்த்தி செய்யப்படும்போது மக்களின் உணர்வுகளை மதிப்பதில் திருச்சபை அவதானமாக இருப்பதனை இந்த தெரிவு காட்டுகிறது. கடிதத்தில் உள்ளவற்றை வாய்மொழியில் அறிவிப்பது நேரடி சாட்டியமாக இருப்பதனால் இத்தூதர்களை திருச்சபை நியமித்திருக்கலாம். பவுலும் பர்னபாவும் தல திருச்சபையின் கவலைகளை நேரடியாகவே அறிவித்தனர், அதனைப் போலவே தாய்திருச்சபை தன் அனுசரனைகளை நேரடியாக வெளிப்படுத்துகிறது. இயேசுவிற்காக உயிரையும் கொடுக்க துணிவது ஆரம்ப கால திருச்சபையில் உயர்ந்த தியாகமாக கருதப்பட்டது. 

வ. 28: சுமைகள் இல்லாத வாழ்க்கையை ஆண்டவரோ தூய ஆவியானவரோ அல்லது திருச்சபையோ முன்வைக்கவில்லை. என் சுமை எளிது என்று ஆண்டவர் கூறியது நினைவிற்கு வரலாம் (மத் 11,30). (சுமைகள் இல்லாத வாழ்க்கை கானல் வாழ்க்கை). இன்றியமையாத சுமைகள் என்று பின்வருபவை காட்டப்படுகின்றன:

வ. 29: சிலைகளுக்கு படைக்கப்பட்டவை, இரத்தம், கழுத்து நெரிக்கப்பட்டவை, பரத்தமை: இவை 
யூத மக்களால் மட்டுமல்ல, பல வளர்ந்த அக்கால நாகரீகங்களால் வெறுக்கப்பட்டவை.
இவற்றிக்கெதிரான வாழ்க்கை நல்ல மனித பொறுப்புணர்சியுள்ள வாழ்;க்கையாக கருதப்பட்டது.

திருப்பாடல்: 67
1கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! (சேலா) 
2அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். (சேலா) 
3கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! 
4வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். (சேலா) 
5கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக! 
6நானிலம் தன் பலனை ஈந்தது நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார். 
7கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக!

இது ஒரு அறுவடை நன்றிப் பாடல். ஆசிர், வாழ்வு தரக்கூடிய-கடவுளைப் பற்றிய மெய்யறிவு போன்ற இரண்டு முக்கியமான பாடற் பொருட்;களை இந்தப் பாடல் கொண்டு வருகிறது.
உயிரினங்களின் விருத்தி கடவுளின் ஆசியில்தான் தங்கியுள்ளது என்பதனை இந்த பாடல் ஆசிரியர் நமக்கு நினைவூட்டுகிறார். இஸ்ராயேல் மக்கள் கடவுளின் ஆசிர்வாதத்தில் பெரிதும் நம்பி அதனை முக்கியமான காலங்களில் எதிர்பார்த்தனர். (ஆசீர் בְּרָכָה பெராகாஹ் என்று எபிரேயத்தில் அழைக்கப்படுகிறது). ஆசீர்வாதமே, ஆரோனுடையவும் அவர் குரு மக்களினதும் முக்கியமான தொழிலாக இருந்தது.

வவ. 1-2: ஆண்டவருடைய இரக்கத்தையும் ஆசீர்வாதங்களையும் ஒன்றில் ஒன்று தங்கியதாக காண்கிறார் ஆசிரியர். திருமுக ஒளியை காட்டுதல் என்பது, பார்வையை ஒருவர் மீது திருப்புதல் என்று பொருள்படும். ஆண்டவர் இரக்கம் வைத்தால் மட்டுமே மக்கள் மீட்பை உணர்ந்து கொள்ள முடியும் என்ற உண்மையை உரைக்கிறார் ஆசிரியர். 

வவ. 3-4: கடவுளைப் புகழ்வது ஒரு இனத்தினுடையதோ அல்லது ஒரு சமயத்தினதோ கடமை மட்டுமல்ல அனைவருக்கும் கடவுளைப் புகழ வாய்ப்பும் உரிமையும் உள்ளது என்கிறார் ஆசிரியர். கடவுளை ஏன் மக்கள் புகழ வேண்டும் என்பதற்க்கும் காரணம் காட்டுகிறார். நேர்மையுடன் மக்களை காப்பவர், கடவுள் ஒருவர் மட்டுமே என்பதனால், மக்களுக்கு அரசராக இருக்கும் தகுதியும் பெறுமதியும் கடவுள் ஒருவருக்கு மட்டுமே உள்ளது என்னும் உண்மையை அழகாக காட்டுகிறார். 

வவ. 5-6: இரண்டாவது முறையாக கடவுளை புகழுமாறு அனைத்து மக்களினங்களையும் அழைக்கிறார் ஆசிரியர். இந்த முறை அதற்கான காரணமாக நிலத்தின் விளைச்சலைக் காட்டுகிறார். 

வ. 7: இறுதியாக கடவுளிடம் தொடர் ஆசீரையும் மக்களிடம் இறையச்சத்தையும் கேட்கிறார். இந்த இரண்டும் ஒரு மனிதரின் நிம்மதியான வாழ்க்கைக்கு முக்கியம் என்பதை உணர்ந்தவாராக அதனை இப்பாடலின் தொடக்கத்திலும் முடிவிலும் கேட்கிறார். 


தி.வெளி 21,10-14.22-23
10தூய ஆவி என்னை ஆட்கொள்ளவே, அந்த வானதூதர் ஒரு பெரிய, உயர்ந்த மலைக்கு என்னைக் கொண்டுசென்றார்; திருநகரான எருசலேம் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவருவதை எனக்குக் காட்டினார். 11அதில் கடவுளின் மாட்சி விளங்கிற்று; விலையுயர்ந்த கல்போன்றும் படிகக்கல்போன்றும் அதன் ஒளி பளிங்கெனத் துலங்கியது. 12அதைச்சுற்றி பெரிய, உயர்ந்த மதிலும் அதில் பன்னிரண்டு வாயில்களும் இருந்தன. வாயில்களுக்குப் பொறுப்பாய்ப் பன்னிரண்டு வானதூதர்கள் நின்றார்கள். இஸ்ரயேல் மக்களுடைய பன்னிரண்டு குலங்களின் பெயர்களும் அவ்வாயில்களில் பொறிக்கப்பட்டிருந்தன. 13கிழக்கே மூன்றும் வடக்கே மூன்றும் தெற்கே மூன்றும் மேற்கே மூன்றுமாக அவை அமைந்திருந்தன. 14நகரின் மதில் பன்னிரண்டு அடிக்கற்களைக் கொண்டிருந்தது. அவற்றில் ஆட்டுக் குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.

22நகருக்குள் கோவில் காணப்படவில்லை. ஏனெனில் எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவரும் ஆட்டுக்குட்டியுமே அதன் கோவில். 23அந்நகருக்கு ஒளி கொடுக்கக் கதிரவனோ நிலாவோ தேவைப்படவில்லை. கடவுளின் மாட்சியே அதன் ஒளி; ஆட்டுக்குட்டியே அதன் விளக்கு.

இந்த இருபத்தோராவது அதிகாரம் கடவுளுடைய நகரைப் காட்சிப்படுத்துகிறது. யோவானுடைய காட்சிகளில் முக்கிய காட்சியான கடவுளின் நகரம் என்ற காட்சியையும் புதிய படைப்பையும் யோவான் இங்கு காண்கிறார். 

வ. 10: எசேக்கியேலைப் போல யோவானும் தூக்கிச் செல்லப்படுகிறார். முதல் ஏற்பாட்டில் கடவுளின் தூதர்கள் மற்றும் தூய ஆவிக்கிடையிலான வேற்றுமை அவ்வளவு தெளிவாக தென்படாது. இங்கே யோவானை ஆட்கொள்கிறவர் தூய ஆவியானவர் எனவும், தூக்கி செல்பவர் வானதூதர் எனவும் வேறுபடுத்தி காட்டுகிறார் யோவான். பெரிய மற்றும் உயர்ந்த மலை என்பது கடவுளின் இருப்பிடத்தை குறிக்க முதல், மற்றும் புதிய ஏற்பாடுகிலில் அதிகமாக பாவிக்கப்படுகின்ற உருவகங்கள். இதனால்தான் எருசலேமும் மலையில் அமைக்கப்பட்டது அல்லது மலையில் இருந்த நகர் எருசலேமாக தெரிவு செய்யப்பட்டது. இங்கே இறங்கி வருகின்ற எருசலேம் சாதாரன எருசலேம் அல்ல கடவுளின் புதிய நகரான புதிய எருசலேம். இது திருச்சபையை குறிக்கலாம். எசேக்கியல் கண்ட நகருக்கும் யோவானின் நகருக்கும் பொருள் ரீதியில் வித்தியாசம் இருக்கிறது என நினைக்கிறேன் (காண்க எசேக்கியேல் 40,1). எசேக்கியேல் கண்டது புதிய சுதந்திர இஸ்ராயேல் நாட்டையும், சுதந்திர தலைநகர் எருசலேமையும். இங்கே யோவான் காண்பது புதிய எருசலேமான திருச்சபையை என கொள்ளலாம். அன்று எருசலேம் பபிலோனியரால் அழிந்திருந்தது, இங்கே உரோமையரால் அழிந்திருந்தது. 

வ. 11: மீண்டுமாக, எசேக்கியேல் கண்டதனைப்போல், கடவுளின் மாட்சியை யோவானும் காண்கிறார் (காண்க எசேக்.43,4). விலையுயர்ந்த கல் மற்றும் படிக்கல் என்பது தௌ;ளத் தெளிவான வச்சிரக்கல்லைக் குறிக்கும். இது பல நிறங்களில் காணப்பட்ட அக்கால பொக்கிசம். கடவுளுடைய மாட்சியை குறிக்க யோவான் விலையுயர்ந்த கற்களை உருவகத்திற்கு எடுப்பது அழகான முயற்சி. மேசேயும் கடவுளின் பின்புறத்தை கண்டதாக உணர்ந்தபோது இப்படியான உருவகத்தையே பாவிப்பார். இங்கே யோவான் காண்பது கடவுளை அல்ல அவரது மாட்சியை மட்டுமே. அந்த மாட்சியை இந்த புதிய நகரின் அழகாக வர்ணிக்கிறார். 

வ. 12: எருசலேம் நகர் பல வாயில்களால் அமைந்த நகராகவே அன்றும் இன்றும் காணப்படுகிறது. எசேக்கியலும் தன் காட்சியில் பல வாயில்களைக் காண்கிறார். (காண்க எசேக் 48,30-)யோவானும் இந்த புதிய எருசலேமில் பல வாயில்களைக் காண்கிறார். வாயில் மக்களை உள் கொண்டுவருகின்ற முக்கியமான ஊடகம். இங்கே உயர்ந்த மதில் என்பது, கடவுளின் பாதுகாப்பைக் குறிக்கும். பன்னிரண்டு வாயில் என்பது பன்னிரு திருத்தூதர்களைக் குறிக்கலாம். இவர்களின் மீதுதான் புதிய எருசலேம் கட்டப்படுகிறது என்பது யோவானின் காட்சி. பன்னிரண்டு குலங்களின் பெயர்களை இங்கே யோவான் கொண்டுவருவது பன்னிரண்டு திருத்தூதர்களை பன்னிரண்டு குலமுதுவர்களுடன் (யாக்கோபின் புதல்வர்கள்) இணைப்பதர்கான முயற்சி. வாயிலில் நிற்கின்ற வானதூதர்கள் அந்த வாயில்களின் பாதுகாப்பை காட்டுகிறார்கள். பழைய எருசலேமைப் போல இந்த எருசலேமை அழிக்க முடியாது என்கிறார் போல. 

வவ. 13-14: பன்னிரண்டு 3ஒ4 என்று பிரிக்கப்டுகிறது. மீண்டுமாக நகரின் மதில்களும் அதன் அடித்தளங்களும் பன்னிருவரைக் கொண்டுள்ளது. ஆட்டுக்குட்டி என்பது இங்கே ஆண்டவர் இயேசுவைக் குறிக்கும். ஆட்டுக் குட்டியின் பன்னிரு திருத்தூதர்கள் என்னும் வார்த்தைகள், திரு வெளிப்பாட்டில் இங்கு மட்டுமே காணப்படுகிறது. 

வவ. 22: விடப்பட்ட வசனங்களில் யோவான் புதிய எருசலேமினதும் அதன் வாயில் மற்றும் சுவர்களுடைய  நீள-அகல பொருள் அளவுகளை காட்சிப்படுத்துவார் (வவ. 15-21). இங்கே காட்சி மாறுகிறது. பழைய எருசலேமின் அழகும் அதன் கௌரவமும் சாலமோன் கட்டிய கோவிலில் தங்கியிருந்தது. இங்கே யோவான் காணும் புதிய எருசலேமில் கோயில் கிடையாது. கடவுளாகிய ஆண்டவரும் ஆட்டுக்குட்டியுமே கோவில் என்பது எத்துனை ஆழமான இறையனுபவம். (உலகம் 
இன்று பல கோயில்களால் நிறைந்து வழிகிறது, ஆனால் ஆண்டவரைத்தான் காணவில்லை). ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் சில வருடங்களின் பின்னர் எருசலேம் தேவாலயத்திற்குள் செல்ல
தடுக்கப்பட்டனர். இதன் தாக்கத்தை இந்த வரிகளின் பின் புலத்தில் காணலாம். 

வ. 23: கடவுளின் புதிய நகரை காட்சியில் கண்ட யோவான், இன்னொரு அழகைக் காண்கிறார். கடவுளின் மாட்சி என்பது கதிரவனையும் நிலவையும் விட ஒளி மிகுந்தது என்பது அந்த மெய்யறிவு. உலகிற்கு ஒளி கொடுக்கவே கடவுள் கதிரவனையும் நிலவையும் படைத்ததாக தொடக்க நூல் காட்டுகிறது.  இங்கே புதிய நகருக்கு ஒளியாக, கடவுளின் மாட்சியையும், ஆட்டுக்குட்டியையும் காண்பது விசேட இறையியல் கருத்தாகும். (இன்று உலகு எந்நேரமும் மின்னொளியில் ஒளிர்ந்தாலும்,  பல உள்ளார்ந்த இருளே உலகை ஆட்சிசெய்வதனை யோவான் அன்றே அறிந்திருக்கிறார்). 


நற்செய்தி: யோவான் 14,23-29
23அதற்கு இயேசு பின்வருமாறு கூறினார்: 'என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். 24என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல் அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை. 25உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். 26என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார். 27அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். 28'நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்' என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வது பற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர். 29இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லி விட்டேன்.


யோவான் நற்செய்தியில் 13-17 வரையான அதிகாரங்கள் ஆண்டவர் தான் காட்டிக் கொடுக்கப்படுவதற்கு முன்னர், தன் சீடர்களுடன் உரையாடின பல காட்சிகளைக்
கொண்டமைந்துள்ளன. இன்றைய நற்செய்தியில் ஆண்டவர், தன்மீது அன்பு கொள்பவர் செய்யக்கூடிய செயல்களையும், தூய ஆவியாரின் செயற்பாடுகளையும், மற்றும் தன்னுடைய அமைதியைப் பற்றியும் தெளிவூட்டுகிறார். 

அ. இயேசு மீது அன்பு கொண்டுள்ளவர்: (மூல பாடத்தில் ἐάν τις ἀγαπᾷ με என்பது 'என்னை யாராவது அன்புசெய்தால்' அல்லது 'என்னை அன்பு செய்யும் அவர்', என்று பொருள் படும்). இந்த வசனங்களை உச்சரிக்கின்ற வேளையில் ஆண்டவர் பேதுருவின் மறுதலிப்பையும், சீடர்களின் ஒதுங்குதலையும், யூதாசின் காட்டிக்கொடுப்பபையும் நினைத்திருப்பார். யோவான் நற்செய்தியில் இந்த அன்பு கொண்டவர் என்பது திருத்தூதர்களை மட்டுமல்ல அனைத்து கிறிஸ்தவர்களையும் அத்தோடு அனைத்து சீடர்களையும் குறிக்கும். 

ஆ. துணையாளர்: இவரை கிரேக்க மூல பாடம் παράκλητος பராகிலேடொஸ் என்று குறிக்கிறது. 
இதன் பொருளாக சார்பு வழக்கறிஞர்;, பரிந்து பேசுகறவர் எனக் கொள்ளலாம். இது ஒரு நீதித்துறை சட்ட நிலைச் செல். யோவான் நற்செய்தியில், இயேசு இந்த பரிந்து பேசுகிறவர் தூய ஆவியார் எனச் சொல்லுகிறார். 

இ. அமைதி: எபிரேயத்தில், இதற்கு பல ஆழமான அர்த்தங்கள் உள்ளன. தமிழில் அமைதி என்பது கிரேக்க மொழியில் εἰρήνη எய்ரேனெ என்று வழங்குகிறது. ஆண்டவர் அரேமேயத்தில் இதனை שְׁלָם ஷேலாம் என்று பாவித்திருப்பார். இந்த ஷேலாமை எபிரேயம் שָׁלוֹם ஷலோம் என்று அழைக்கிறது. கிரேக்க எய்ரேனெ தேசிய நல்லினக்கத்தையும், போரற்ற நிலையையும் குறிக்கிறது. ஆனால் எபிரேய ஷலோம் நிறைவான வாழ்வையும், பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும், வளமையையும், அமைதியையும், சாந்தத்தையும், நிறைவையும், நட்பையும், அமைதியான மரணத்தையும், குறிக்கும். 

வ. 23: அன்புகொள்பவர் செய்பவையும், கடவுள் அவருக்கு செய்பவையும் விளக்கப்பட்டுள்ளன. 
இயேசுவை அன்புசெய்தல், கீழ்படிதலையும் ஆண்டவரின்-குடியிருப்பையும் கொண்டுவருகிறது. 
இயேசு தந்தையாகிய கடவுளுடன் கொண்டிருந்த குடியிருப்பை இது ஒத்திருக்கும்  என்ற திரித்துவ வார்த்தைகள் இங்கு பாவிக்கப்பட்டுள்ளன. 

வ. 24: இயேசு, தன்னில் அன்பில்லாமை, சுயநல வாழ்வை கொண்டுவரும் என்கிறார். அத்தோடு தன்னுடைய வார்த்தைகள் தன் தந்தையுடையது என்பதை அறிவிப்பதில் மிகவும் கவனமாக 
இருக்கிறார். இது தன்னுடைய கீழ்படிவை தன் சீடர்களும் பின்பற்ற வேண்டும் என்பதற்காக 
இருக்கலாம். தன்னை அனுப்பியது இறைவனின் திட்டம், ஆகவே கடவுளை விரும்புவோர், தன்னை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்ற உண்மையை இலகுவாக தெளிவூட்டுகிறார். 

வ. 25-26: உங்களோடு இருக்கும் போதே... என்று இயேசு தொடர்ந்து மனிதராக இவ்வுலகில் 
இருக்கப்போதில்லை என கூறுகிறார். 26ம் வசனம் துனையாளரின் செயற்பாடுகளைக் குறிக்கிறது. 
இயேசுவைப்போலவே இவரும் கடவுளால் அனுப்பப்படுகிறார், அனைத்தையும் கற்றுத்தருவார், அத்தோடு அனைத்தையும் நினைவூட்டுவார். (மனிதர்களுக்கு நினைவு மறதி ஓரு பயங்கர வியாதி என்பதை ஆண்டவர் நன்கு அறிந்திருக்கிறார்). 

வ. 27: இங்கே எழுவாய் பொருள், அமைதி என மாறுகிறது. வழமையாக பிரியாவிடையில் அமைதியை வாழ்த்துவது வழக்கம். இங்கே இயேசு அமைதியை வாழ்த்தவில்லை மாறாக தருவதாகச் சொல்கிறார். உலக-மாயையான அல்லது அரசியில் மயமான அமைதியல்ல தன்னுடையது என்கிறார். தன்னுடைய அமைதி தன் இதயத்திலிருந்து வருகிறது இதனால் உள்ள மருளளோ கலக்கமோ தேவையில்லை என்கிறார். 

வ. 28: தன்னுடைய பிரியாவிடை ஒரு பிரிவல்ல, மாறாக அது நல்வருகை என்கிறார் ஆண்டவர். நல்ல நட்பு, தேவையான-பிரிதல்களை வரவேற்க வேண்டும் என்கிறார். இங்கே தந்தை தன்னைவிட பெரியவர் என்று சொன்னது பிற்காலத்தில் பல கிறிஸ்தியல் சிக்கல்களை தோற்றுவித்தது. முக்கியமாக ஆரிய வாதம் இதனை கொண்டே இயேசு கடவுள் அல்ல எனவும் அவர் கடவுளுக்கு கீழ்பட்டவர் எனவும் வாதிட்டது. இங்கே இயேசு தன்னுடைய ஆள் தன்மையைப் பற்றி பேசவில்லை மாறாக கடவுள் தன்னிடம் கொடுத்த பணியைப் பற்றியே பேசுகிறார். இயேசு தொடர்ந்து குறிப்பிட்ட சீடர்களுடன் இருப்பதை விட அவர் தன்னுடைய உண்மையான நிலைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தை விளக்குகிறார் என எடுக்கலாம். ஆக தன்னுடைய பிரிவை நினைத்து இவர்கள் வருந்துவதைவிட, தான் போவதை நினைத்து மகிழ்வதே பெரியதாக இருக்கும் என விளக்குகிறார். 

வ. 29: எதிர்காலத்தை நிகழ்காலத்தில் காட்டக்கூடியவர் கடவுள் ஒருவரே என்பதை இங்கே புலப்படுத்துகிறார். 

ஈழ நாட்டில் போர் நடந்தால் பயங்கரவாதம் என்கிறார்கள், அரசியல் நடந்தால் பிரிவினை வாதம் என்கிறார்கள். அமைதி என்ற பேரில் ஈழ மக்களை அடிமைககளாக்க முயல்கிறார்கள். யார் யாருக்கு உரிமைகளை தருவது? யார் யாருக்கு அமைதியை தருவது? அமைதி என்ற பெயரில் போருக்கு பின் மௌமான யுத்தம் நடக்கிறதோ, நினைவு மறதி வேர்களையும் தகர்த்து விடுமோ என்று அச்சம் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆண்டவரே! உரிமை வாழ்வைத் தரக்கூடிய உண்மையான அiதியையும் வரலாற்றை மறக்காத 
நினைவு சக்தியையும் தாரும். ஆமென்
மி. ஜெகன்குமார் அமதி 
உரோமை, 26,ஏப்ரல்,2016. 

வியாழன், 21 ஏப்ரல், 2016

பாஸ்கா காலம் ஐந்தாம் வாரம் ஞாயிறு, 24 ஏப்ரல், 2016. Paschal Time, Fifth Sunday



பாஸ்கா காலம் ஐந்தாம் வாரம்
ஞாயிறு, 24 ஏப்ரல், 2016
'ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்; 
வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும்'
(தி.பா 145,4)

தி.பணி 14,21-27
திருப்பாடல் 145
தி.வெளி 21,1-5
யோவான் 13,31-35

தி.பணி 14,21-27
21அந்த நகரில் அவர்கள் நற்செய்தி அறிவித்துப் பலரைச் சீடராக்கிய பின் லிஸ்திரா, இக்கோனியா, அந்தியோக்கியா ஆகிய நகரங்களுக்குத் திரும்பி வந்தார்கள். 22அங்குள்ள சீடர்களின் உள்ளத்தை அவர்கள் உறுதிப்படுத்தி, 'நாம் பலவேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்பட வேண்டும்' என்று கூறி நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவித்தார்கள்.
23அவர்கள் ஒவ்வொரு திருச்சபையிலும் மூப்பர்களைத் தேர்ந்தெடுத்து நோன்பிருந்து இறைவனிடம் வேண்டித் தாங்கள் நம்பிக்கை கொண்டிருந்த ஆண்டவரிடம் அவர்களை ஒப்படைத்தார்கள்; 24பின்பு பிசிதியா வழியாகப் பம்பிலியா வந்தார்கள். 25பெருகை நகரில் இறைவார்த்தையை அறிவித்தபின் அத்தாலியா வந்தார்கள்; 26அங்கிருந்து கப்பலேறி அந்தியோக்கியா வந்தார்கள்; அங்குதான் அவர்கள் அருள் வழங்கும் கடவுளின் பணிக்கென்று அர்ப்பணிக்கப்பட்டார்கள். இப்போது அப்பணியைச் செய்து முடித்துவிட்டார்கள். 27அவர்கள் அங்கு வந்ததும் திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும், அவர் பிற இனத்தவர்க்கு நம்பிக்கை கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்ததையும் அறிவித்தார்கள். 28அங்கே அவர்கள் சீடர்களுடன் பல நாள்கள் தங்கினார்கள்.

இந்த பகுதி பவுலடிகளாரின் முதலாவது மறையுறை பயணத்தின் முடிவுரையாக வருகிறது. பவுல் எவ்வளவு ஆர்வமாக திருச்சபைகளை நிறுவுவதில் கவனம் செலுத்தினாரோ அதனையே அவர் அவற்றை சந்தித்து திடப்படுத்துவதிலும் கவனமாக இருந்தார் என்பதனை இந்த பகுதிகளில் காணலாம். ஆரம்ப கால திருச்சபை பலவீனமானதாகவும், அதனை சுற்றியிருந்த கேளிக்கைகளும் சவால்களும் பலமானதாக இருந்ததையும் பவுல் நன்கு அறிந்திருந்தார். இதனால்தான் ஒரு தகப்பனைப்போல இந்த இளம் திருச்சபைகளை திடப்படுத்துவதில் ஆர்வமாய் இருக்கிறார். 

வவ. 21-22: இங்கே பவுல் நிறைவான எண்ணிக்கையில் பலரை சீடராக்கியது, அதாவது அவர்களை கிறிஸ்துவிற்கு சீடராக்கியதனையே குறிக்கிறது. சீடர்களின் உள்ளத்தை உறுதிப்படுத்த உண்மையை நேரடியாகவே உரைக்கிறார். துன்பங்களின் வழியாகவே இறையரசை அடையமுடியும் என்பதனை பவுல் தன்னுடைய வாழ்வினாலும் உணர்ந்திருந்தார். பல விதமான துன்பங்கள் என்பது இங்கே பல ஆரம்ப கால சமய-அரசியல் கலாபனைகளைக் குறிக்கலாம். 

வவ. 23: இந்த வரி, ஆரம்பகால திருச்சபையின் தலைமைத்துவ ஒருங்கிணைப்பினை படம்பிடிக்கிறது. மூப்பர்களைத் தேர்ந்தெடுக்க இரண்டு விதமான செபமுறைகள் பின்பற்றப்படுகிறன்றன. அ). நோன்பிருத்தல், ஆ). இறைவனிடம் வேண்டுதல். மூப்பர்களை தெரிவுசெய்ததன் பின்னரே இவற்றை செய்கின்றனர். பவுலும் பர்னாபாவும் இப்படித்தான் தெரிவுசெய்யப்பட்டனர். இறுதியாக தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் ஆண்டவரிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். இக்கால ஆயர்கள் தெரிவும் அத்தோடு அவர்களுடைய திருப்பொழிவு நிகழ்வுகளும் இந்த சிந்தனைகளை காட்டுவதாக வழிபாடுகளில் அமைகின்றன. மூப்பர்கள் என்பவர்களைக் குறிக்க πρεσβύτερος பிரஸ்புடெரொஸ் என்ற கிரேக்க மூலச்சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையில் வயதிலும் அனுபவத்திலும் முதிந்தவர்களைக் குறிக்கும், பின்நாளில் இது திருச்சபையின் தலைமைத்துவத்தில் இருந்தவர்களை குறிக்க பயன்பட்டது. திருத்தூதர்களான பேதுரு, பவுல், யாக்கோபு போன்றோரும் தங்களை இந்த பதத்துடன் அழைத்திருக்கின்றனர். திருச்சபையின் வருகைக்கு முன்பே இப்படியான பலர் யூத மற்றும் கிரேக்க உயர்சபைகளில் இருந்ததாக காணக்கூடியதாக உள்ளது. எவ்வாறெனினும், ஆரம்பகால திருச்சபை மூப்பர்களை யூத பாரம்பரியத்தில் அதாவது அவர்களின் நம்பிக்கை மற்றும் நன்நடத்தை முதிர்சியிலே தெரிவுசெய்தது. 

வ.24-28: அதிகமாக தான் நிறுவிய திருச்சபைகளை தரிசித்துவிட்டு பம்பிலியாவிலிருந்த பெருகையிலிருந்து நேரடியாக அந்தியோக்கியாவிற்கு வருகிறார் பவுல். அந்தியோக்கியாவில் தன்னுடைய உடன் சகோதரர்களிடம் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்வதன் மூலமாக பவுல் மறைபரப்பு பணி திருச்சபையினுடைய பணி, தன்னுடைய தனிப்பட்ட பணியல்ல என்பதைக் காட்டுகிறார். பவுல் கடவுள் செய்த அதிசயங்களையும், பிற இனத்தவரின் நம்பிக்கையையும் தனது செய்தியின் பொருளாக காட்டுகிறார், அவர்களுடைய திறமைகளையோ அல்லது அவர்கள் செய்த அதிசியங்களையோ பவுல் கூறவில்லை என்பதை லூக்கா அழகாக காட்டுகிறார். கடினமான பணிக்குப் பின்னர், மறைபணியாளர்கள் தேவையான ஓய்வு எடுப்பதனைக் காணலாம்.

திருப்பாடல் 145
1என் கடவுளே, என் அரசே! உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவேன். 2நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். 
3ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கும் உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. 
4ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்; வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும். 
5உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும் வியத்தகு உம் செயல்களையும் நான் சிந்திப்பேன். 
6அச்சந்தரும் உம் செயல்களின் வல்லமையைப்பற்றி மக்கள் பேசுவார்கள்; உமது மாண்பினை நான் விரித்துரைப்பேன், 7அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை நினைந்துக் கொண்டாடுவார்கள்; உமது நீதியை எண்ணி ஆர்ப்பரித்துப் பாடுவார்கள். 
8ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர். 
9ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்; தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். 
10ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 11அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். 
12மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின் பேரொளியையும் புலப்படுத்துவார்கள். 13உமது அரசு எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு; உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. 
14தடுக்கி விழும் யாவரையும் ஆண்டவர் தாங்குகின்றார். தாழ்த்தப்பட்ட யாவரையும் 
தூக்கிவிடுகின்றார். 
15எல்லா உயிரினங்களின் கண்களும் உம்மையே நோக்குகின்றன் தக்க வேளையில் நீரே அவற்றிற்கு உணவளிக்கின்றீர். 
16நீர் உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர். 
17ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும் நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும் இரக்கச் செயல்களே. 
18தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும், ஆண்டவர் அண்மையில் இருக்கிறார். 
19அவர் தமக்கு அஞ்சி நடப்போரின் விருப்பத்தை நிறைவேற்றுவார்; அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து அவர்களைக் காப்பாற்றுவார். 
20ஆண்டவர் தம்மிடம் பற்றுக் கொள்ளும் அனைவரையும் பாதுகாக்கின்றார்; பொல்லார் அனைவரையும் அழிப்பார். 
21என் வாய் ஆண்டவரின் புகழை அறிவிப்பதாக! உடல்கொண்ட அனைத்தும் அவரது திருப்பெயரை என்றும் எப்பொழுதும் போற்றுவதாக!

திருப்பாடல்களில் உள்ள அகரவரிசை பாடல்களில் 145வது பாடலும் அடங்கும். அகர வரிசை பாடல்கள் என்பது எபிரேய அகரவரிசையை ஒத்து 22 எழுத்துக்களுடன் ஒவ்வொன்றாகத் தொடங்கி 22 வரிகளைக் கொண்டிருக்கும். தமிழிலக்கியங்களில் ஓளவையார் இப்படியான பல பாடல்களை அமைத்துள்ளார். ஆனால் எபிரேய அகரவரிசையில் உள்ள நுன் (נ) என்ற எழுத்தில்லாமல் 21 வரிகளைக் இப் பாடல் கொண்டமைந்துள்ளது. இந்த எழுத்து இல்லாமைக்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. சிலர் அது தவறிவிட்டது என்கின்றனர், சிலர் கடவுளுடைய அதிசயங்களை மனிதவரிகளில் விவரிகக் முடியாது என்பதனைக் காட்ட ஆசிரியர் காரணத்தோடே இந்த எழுத்தை விட்டு விட்டார் என்கின்றனர். புகழ்சிப்பாடல்களில் மிகவும் அழகான பாடல் என்றே இதனை அதிகமானவர்கள் கருதுகின்றனர் அதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

வவ. 1-6: இந்த வரிகளில் புகழ்ச்சி என்ற கருப்பொருள் மீண்டும் மீண்டும் வருவதைக் காணலாம். இந்த புகழ்சியைக் குறிக்க பல ஒத்தகருத்துச் சொற்கள் எதுகை மோனை என்ற வகையிலும் சமாந்தர வரிகள் அமைப்பிலும் எழுதப்பட்டுள்ளது. நான்காவது வரி சிந்தனையைத் தூண்டுகின்ற வரி. (ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்; வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும்) 

வவ. 7-9: ஆண்டவரின் பண்புகள் கூறப்படுகின்றன. நீதி, இரக்கம், கனிவு, பொறுமை, பேரன்பு, மற்றும் நன்மைத்தனம் போன்றவை எபிரேய ஆன்மீகத்தின் ஆழத்தை காட்டுபவை. இவற்றிற்கு கடவுள்தான் உறைவிடம் என்று காட்டுகிறார் ஆசிரியர். 

வவ. 10-13: இந்த வரிகள் ஆண்டவரின் படைப்புக்கள் என்று முழு உலகத்தையும் ஒன்றாக்குகின்றன. கடவுளுடைய இறைமைக்கு அடையாளங்கள் அவர் உருவாக்கிய படைப்புக்களே என்பது ஆசிரியருடைய நம்பிக்கை. 

வவ. 14-20: இந்த வரிகள், கடவுளுடைய தெய்வீக செயற்பாடுகள் உண்மையில் அவரது அன்பையும், அருளையும், மற்றும் பரிவையும் காட்டுகின்றன என்பதை விவரிக்கிறது. தடுக்கி விழுபவர், தாழ்த்தப்பட்டவர் என சமுதாயத்தில் நலிந்தவர்களை கடவுள் என்றுமே பார்கிறார் என்கிறார் ஆசிரியர். 16-19 வரையான வரிகள் கடவுளின் இரக்க பண்பையும், 20வது வசனம் கடவுளுடைய நீதிப் பண்பையும் விவரிக்கின்றன. 

வ.21: உடல் கொண்ட அனைத்தும் என்பது எபிரேய மொழியில் அனைத்து சதைகளையும் அதாவது அனைத்து உயிரினங்களையும் குறிக்கின்றன. (כָּל־בָּשָׂר அனைத்து சதைகள்-உயிர்கள்). அனைத்து உயிரினங்களும் கடவுளை புகழ்வது நீதியானது என்பது ஆசிரியரின் நம்பிக்கை. 


தி.வெளி 21,1-5
1பின்பு நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன. கடலும் இல்லாமற் போயிற்று. 2அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன். தன் மணமகனுக்காகத் தன்னையே அணி செய்து கொண்ட மணமகளைப்போல் அது ஆயத்தமாய் இருந்தது.
3பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது, 'இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார்; அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார். 4அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது. துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது; முன்பு இருந்தவையெல்லாம் மறைந்து விட்டன' என்றது.
5அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், 'இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்' என்று கூறினார். மேலும், ''இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை' என எழுது' என்றார்.

யோவானுடைய திருவெளிப்பாட்டின் 21வது அதிகாரம் புதிய விண்ணகத்தையும் புதிய மண்ணகத்தையும் காட்சிப்படுத்துகிறது. இதற்கு முன்னுள்ள அதிகாரங்களில், ஏழு திருச்சபைகள், வானுலக காட்சி, ஏழு முத்திரைகள், ஏழு எக்காளங்கள், திருச்சபைக்கும், சாத்தானுக்குமான போராட்டம், ஏழு வாதைக் கிண்ணங்கள், மற்றும் அந்திக் கிறிஸ்துவின் தோற்றமும் அழிவும் என்று திருவெளிப்பாட்டை யோவான் காட்சிப்படுத்தினார். இந்த இறுதி அதிகாரங்களில் (19-22), கிறிஸ்துவின் வருகையையும், கடவுளின் நகரத்தையும் காட்சிப் படுத்துகிறார். இந்த அதிகாரம் துன்பப்பட்ட ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் செய்திகளைக் கொண்டமைந்துள்ளன. 

வ.1: 
அ). புதிய விண்ணகமும், மண்ணகமும் ஏற்கனவே விவிலியத்திலே அறியப்பட்டிருக்கின்றன. 
எசாயா இதனை புதுப்படைப்பாக காண்பார் (65,17). நற்செய்தியாளர்களும் இந்த சிந்தனையை பலமாக முன்வைத்தனர். யூத இராபிக்கள் இதனை கடவுள் இஸ்ராயேலை பெரிய வல்லரசாக மாற்றுவார் என்று விளக்கம் கொடுத்தனர், இன்னும் சிலர், கடவுள் பழையதை புதியதால் மீள்நிரப்புவார் என்றும் விளக்கம் கொடுத்தனர். யோவானுடைய காட்சியில் இந்த விளக்கங்கள் அனைத்தும் அடங்கியிருப்பதைக் காணலாம். 
ஆ). கடல் மறைவு என்பது தீமையின் மறைவைக் குறிக்கும். விவிலியத்தில் கடல் தீய சக்திகளின் உறைவிடமாக பார்கப்பட்டது. ஆண்டவர் இயேசு கடலின் மேல் நடந்தது, பேதுரு கடலில் மூழ்கச் சென்றது, பன்றிகளை கடலினுள் அமிழ்தியது போன்றவை இதனையே குறிக்கின்றன. அத்தோடு கடல் தீமையின் அடையாளம் என்று மட்டுமே கருத முடியாது. கடளுக்கு வேறு அர்தங்களும் உள்ளன. யோவானின் திருவெளிப்பாட்டில், அந்திக்கிறிஸ்து, அந்திக் கிறிஸ்தவர், கடளில் வாழ்ந்த அசுரர்களாக உருவகப்படுத்ப்பட்டனர். (ἀντίχριστος அன்டிகிரிஸ்டொஸ், எதிர் கிறிஸ்து - இது கிறிஸ்துவிற்கு எதிரானவர்களைக் குறிக்கும், அன்றைய உரோமை கொடிய ஆட்சியாளர்களையும் குறித்தது). 

வ. 2: தூய நகர் என்பது இங்கே புதிய எருசலேமைக் குறிக்கிறது. எருசலேமும் பபிலோனும் ஒப்பிடப்படுவதை அவதானிக்க வேண்டும். பபிலோன் என்பது திருவெளிப்பாட்டில் உரோமையை குறிக்கலாம். (உரோமை, உரோமையர்களின் தலை நகராக இருந்து சீடர்களை துன்புறுத்தியமையே இதற்கு காரணம்). இந்த புதிய எருசலேம் வானுலக காட்சியின் முன்சுவையை தருகிறது. முதல் ஏற்பாட்டில் எருசலேம் மணமகளாகவும் கடவுள் மணமகனாகவும் காண்பிக்கப்படுவது, இங்கே வேறுவிதமாக சொல்லப்படுகிறது. இங்கே வருவது புதிய எருசலேம். இங்கே மணமகள், புதிய எருசலேம் அதாவது திருச்சபை. மணமகன் கிறிஸ்து ஆண்டவர். 

வ. 3: மிகவும் ஆழமானதும் அழகானதுமாக வரி. இந்தக் குரல் அறிவிப்புக் குரலாக இருக்கலாம். கடவுளின் உறைவிடம் என்பது, கிரேக்க மூல மொழியில் கடவுளின் 'கூடாரம்' என்றே இருக்கிறது. இந்தக் கூடாரம் பற்றிய சிந்தனையை யோவான் தன்னுடைய நற்செய்தியில் ஏற்கனவே வார்த்தையைப் (λόγος லோகோஸ்) பற்றிக் கூறும் போது அலசியிருப்பார் (காண்க யோவான் 1,14). ஆண்டவரின் கூடாரம் என்பது இஸ்ராயேல் மக்கள் மத்தியில் ஆண்டவர் குடியிருந்த சந்திப்புக் கூடாரத்தையும் ஆண்டவரின் திரு இல்லமான எருசலேம் தேவாலயத்தையும் பற்றிய சிந்தனைகளை உள்ளடக்கியருக்கிறது. இந்த வரியில் கடவுளின் உடனிருப்பு சுட்டிக்காட்டப்படுகிறது. மூன்று தடவை 'உடன்' என்ற முன்னிடைச் சொல் பாவிக்கப்பட்டுள்ளது, இது  பலைவன கூடாரத்தைப்போலவோ அல்லது அழிந்துபோன எருசலோம் தேவாலயத்தைப் போலவோ அன்றி கடவுளின் உடனிருப்பு அசைக்க முடியாதது என்பதனைக் குறிக்கிறது (μετά மெதா, உடன், ஓடு, நடுவில்).  கடவுள் மற்றும் மக்களின் இந்த புதிய உறவைப் பற்றி இறைவாக்கினர்களும் வாக்குரைத்திருக்கிறார்கள். யோவானின் திருவெளிப்பாட்டிலும் இந்த செய்தி முக்கியமானதொன்றாகும். 

வ. 4: கிறிஸ்தவர்களுடைய துன்பங்களான சாவு, துயரம், அழுகை போன்றவை இனி இருக்காது என்று யோவான் அன்பு மொழி கூறுகிறார். இவை மனித குலத்தின் தவிர்க்க முடியாத துன்பியல் காரணிகள், இதற்கு மருந்து கடவுளிடம் இருந்தே வருகிறது என்பது யோவானின் செய்தி. 

வ. 5: இப்பொழுது கடவுள் பேசுகிறார். இவ்வளவு நேரமும் முழங்கிய அறிவிப்புக் குரலை அரியணையில் இருந்தவர் ஏற்றுக்கொள்கிறார். அரசவையில் பரிந்துரைகள் வாசிக்கப்பட்டதன் பின் அரசர் அதனை ஏற்றுக்கொள்கின்ற போது அது சட்டமாகிறது. இங்கேயும் கடவுள் புதிய சட்டங்களைக் கொடுக்கிறார். யோவானுடைய காட்சி வெறும் காட்சியல்ல அது உண்மை என்று காட்டப்படுகிறது. அனைத்தையும் புதியனவாக்குதல் என்ற செய்தி யோவானின் படிப்பினைகளில் மிக முக்கியமானது. இது வாழ்க்கையை இயேசுவில் நிலை நிறுத்தி அனைத்தையும் அவரில் உறுதிப்படுத்துவததைக் குறிக்கும். 


யோவான் 13,31-35
31அவன் வெளியே போனபின் இயேசு, 'இப்போது மானிடமகன் மாட்சி பெற்றுள்ளார். அவர் வழியாகக் கடவுளும் மாட்சிபெற்றுள்ளார். 32கடவுள் அவர் வழியாக மாட்சி பெற்றாரானால் கடவுளும் தம் வழியாய் அவரை மாட்சிப்படுத்துவார்; அதையும் உடனே செய்வார். 33பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நான் போகும் இடத்திற்கு உங்களால் வர இயலாது. இதையே யூதர்களுக்குச் சொன்னேன்; இப்போது உங்களுக்கும் சொல்கிறேன். 34'ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். 35நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்' என்றார்.

இந்த பகுதி ஆண்டவர் தன் சீடர்களோடு அமர்ந்து, தன்னுடைய மரணத்தின் முன் சில முக்கிய படிப்பினைகளை கற்பித்த நிகழ்விலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இநத் காட்சிக்கு முன் ஆண்டவர் சீடர்களுடைய பாதங்களை கழுவினார், அத்தோடு தன்னை காட்டிக்கொடுப்பவரைப் பற்றியும் சுட்;டிக்காட்டியிருந்தார். சீடர்கள் ஆண்டவரின் மரணத்தைப் பற்றியும், அவரது பாடுகளைப் பற்றியும் அத்தோடு ஆண்டவர் தங்களின் அருகில் இல்லாத நிலையை பற்றியும் நினைத்து துன்பப்பட்டுக்கொண்டிருந்த வேளையில், இந்த வரிகள் ஆண்டவரின் வாயிலிருந்து வருகின்றன. இங்கே, மாட்சி மற்றும் அன்பு என்ற இரண்டு முக்கியமான யோவான் நற்செய்தியின் படிப்பினைகள், உரையாடல்களில் மையம் பெறுகின்றன. 

வவ. 31-32: 
அ). இவ்வளவு நேரமும் பல முக்கிய படிப்பினைகளை பற்றி கூறிக்கொண்டிருந்த ஆண்டவர், இந்த வரிகளுடன் ஒரு புதிய பகுதிக்குள் நுளைகிறார். யூதாசு வெளியே சென்றவுடன் இந்த நேரம் ஆரம்பமாவது ஒரு அடையாளம் போல காட்சி தருகிறது. யோவான் அடிக்கடி கூறும், நேரம் என்ற குறிப்பிட்ட காலம் இங்கே வந்திருக்கிறது. அந்த தக்க நேரத்திற்குள் ஆண்டவர் சீடர்களையும் உள்வாங்குகின்றார். இந்த நேரத்தை யோவான் மாட்சிக்குரிய நேரமாக காட்டுகிறார். இங்கே பல இறுதிக்கால வார்த்தைகள் பாவிக்கப்பட்டுள்ளன.

ஆ). மாட்சி என்பது யோவான் நற்செய்தியில் ஆண்டவர் இயேசுவிற்கும் கடவுளுக்கும் மட்டுமே உரிய பண்பாக காட்டப்படுகிறது. மாட்சி என்பதற்கு, δόξα தொக்சா என்ற கிரேக்கச் சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இது ஒருவரின் பார்வை, தீர்ப்பு, நோக்கு, மரியாதை, கௌரவம் போன்ற அர்தங்களைக் கொடுக்கும். எபிரேய மொழியில் மாட்சியை குறிக்க כָּבוֹד கவோட் என்ற சொல் பாவிக்கப்படுகிறது, இதுவும் கடவுளின் மாட்சியையை குறிக்கிறது. யோவான் இந்த சொல்லை அவதானமாக பாவித்து, ஆண்டவர் இயேசுவினுடைய வருகை கடவுளை மாட்சிப்படுத்துவதாகும் என்கிறார். அத்தோடு, ஆண்டவர் இயேசுவும், தன்னுடைய உயிர்பினால் கடவுள் மானிட மகனை மாட்சிப்படுத்துவார் என்ற இன்னொரு கட்டத்தை காட்டுகிறார். இங்கே மாட்சிப் படுத்துதல் ஒரு உறவாக நடைபெறுகிறது. கடவுள் ஆரம்பத்தில் உலகத்தையும் மனிதர்களையும் படைத்தது, இந்த மாட்சிமை என்ற பணிக்காகவே என்று தொடக்க நூல் அழகாக படைப்புக் கதைகளில் உருவகப்படுத்துகின்றது. கடவுள் மானிட மகனை உடனே மாட்சிப்படுத்துவார் என்பதில் ஒரு அவசரத்தை யோவான் காட்டுகிறார். இது ஆண்டவர் இயேசுவின் கடவுள் தன்மையை குறிக்கலாம், அதாவது இயேசு உண்மையான கடவுள், மாட்சிமை இல்லாத நிலை அவருக்கு கிடையாது என்பதை குறிக்கிறது. 

வவ. 32-33:  அன்பொழுக பிள்ளைகளே என்ற இதய வார்த்தை மூலம் தன் சீடர்களை விழிக்கிறார் இயேசு. சாதாரணமாக பிரியாவிடையின் போது இப்படியான வார்த்தைகள் பாவிக்கப்படுவது வழக்கம். இந்த பிள்ளைகளே என்ற விழிப்புச் சொல் யோவான் குழுமங்களிடையே பாவனையில் இருந்த சொல் என்று சில யோவான் நற்செய்தி அறிஞர்கள் வாதிடுகின்றனர். ஆண்டவர் எவ்வளவு
சொல்லியும் சீடர்கள் அவரின் மரணத்தின் பின் கலங்கி அவரைத் தேடுவர், அல்லது அவரில்லாமல் அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்ற நிலைக்குள் வருவர் என்பதை இயேசு நன்கு அறிந்துள்ளார். அதனால்தான் இங்கே ஒரு தகப்பனைப் போல் பேசுகிறார்.
இயேசு யூதர்களையும் உள்வாங்கி தன்னுடைய போதனைகளில் மாற்றமோ பிரிவினையோ இல்லை என்பதைக் குறிப்பிடுகிறார். ஆண்டவருடைய இடத்திற்கு சீடர்களால் வரமுடியாது என்பது இறைவன் என்றும் இறைவன் என்பதைக் காட்டலாம், சீடர்கள் சீடர்களாய் இருக்கவே அழைக்கப்படுகின்றனர், கடவுளாக மாற அல்ல.  

வ. 34: இந்த வரிதான் முழு யோவான் நற்செய்தியின் மையச் செய்தி போல. ஆண்டவர் இயேசு தான் எப்படி சீடர்களை அன்பு செய்தாரோ அதே அன்பை ஒருவர் மற்றவரிடம் வாழக் கேட்கிறார். இதை ஏன் இயேசு புதிய கட்டளை என்று சொல்வதைப் பார்க்க வேண்டும். ஏற்கனவே முதல் ஏற்பாடு அன்பைப் பற்றி பல கட்டளைகளை கொடுத்திருக்கிறது. ἀγαπάω அகபாவோ என்ற கிரேக்க சொல்லை இயேசுவின் உதடுகளில் வைக்கிறார் யோவான், நிச்சயமாக ஆண்டவர் அரேமேயத்தில்தான் இந்த செய்தியை சொல்லியிருக்க வேண்டும். இந்த ἀγαπάω அன்பு செய், நல் எண்ணம் கொண்டிரு, நன்மையை நினை, நன்மையை நிறைவாகச் செய், போன்ற ஆழமான அர்தங்களைக் கொண்டுள்ளது. கிரேக்க இலக்கியங்களில் இந்தச் சொல் தோன்றினாலும், உண்மையில் இது ஒரு விவிலிய அல்லது கிறிஸ்தவ சொல் என்றே பலர் கருதுகின்றனர். தமிழில் அன்பு என்கின்ற சொல், இதன் ஆழத்தை கச்சிதமாக உணர்த்துகிறது. (ஒப்பிடுக: அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு, குறள் 80). தமிழில் ஆசை, காதல், பிரியம், சிநேகம், விரும்பம், இஸ்டம் போன்ற சில சகோதர வார்த்தைகள் இருப்பது போல, கிரேக்கத்திலும் பல வார்த்தைகள் பல விதமான அன்பைக் குறிக்கிறது. ἀγαπάω என்பது உண்மையில் தியாக-தாய்மை அன்பைக் குறிக்கும், அதற்கு வரைவிலக்கணமாக இயேசுவின் அன்பை மட்டுமே எடுக்கலாம். இதற்கு உதாரணமாகத்தான் பாதம் கழுவுதலையும் தன்னுடைய உயிரைக் கொடுத்தலையும் ஆண்டவர் செய்தார். 

வ. 35: இஸ்ராயேலருக்கு அடையாளமாக விருத்தசேதனம் இருக்கின்ற போது இப்போது தன்னுடைய சீடர்களுக்கு அடையாளமாகவும், புதிய கட்டளையாகவும் ஆண்டவர் இந்த அன்பை கொடுக்கிறார். இந்த அன்பு சிந்தனையிலும் படிப்பினைகளிலும் இருக்கிற அன்பாக மட்டுமிருக்காமல், செயற்பாட்டிலும் இருக்கிற அன்பாக வேண்டும் என்பது இயேசுவின் கட்டளை. இந்த அன்புக் கட்டளை பல இடங்களில் ஆண்டவரின் முக்கியமான செய்தியாக யோவான் நற்செய்தியில் ஆழ ஊடுருவி இருப்பதனைக் காணலாம் (காண்க யோவான் 14, 15. 21. 23: 15, 12). 

இன்றைய உலகில் அதிகமாக துஸ்பிரயோகம் செய்யப்பட்ட வார்த்தைகளில் அன்பு என்ற இந்த அழகிய சொல்லும் அடங்கும். காதல், வீரம், தியாகம், பொறுமை, அமைதி, இரக்கம், சகிப்புத்தன்மை, கல்வி, தெய்வீகம் போன்ற அடக்க முடியாத அர்தங்களைக் கொண்டுள்ள இந்தச் சொல், இன்று, சிற்றின்பக் காமம், கோழைத்தனம், தந்திரம், சுயநலம், வரட்டு-சுதந்திரம், வன்முறை, பிடிவாதம், அறியாமை போன்ற தற்கால மதிப்புக்கால் மழுங்கடிக்கப்படுகிறது. 
அன்பை உணராதவர்களும், வாழதாவர்களும் அதற்க்கு அர்த்தம் கொடுக்க விளைவது மிக ஆபத்தானது. 

அன்பான ஆண்டவர் இயேசுவே! 
உமது அன்பை வாழ கற்றுத்தாரும், உமது அன்பால் எம்மை நிறைவாக்கி உமது சீடராக்கும். ஆமென். 


மி.ஜெகன்குமார் அமதி
செவ்வாய், 19 ஏப்ரல், 2016
உரோமை. 


வியாழன், 14 ஏப்ரல், 2016

பாஸ்கா காலம் நான்காம் வாரம். Paschal Time, 4th Sunday. 17 ஏப்ரல் 2016


பாஸ்கா காலம் நான்காம் வாரம்
17 ஏப்ரல் 2016
'நல்ல ஆயன் நானே, நல்ல ஆயர் ஆடுகளுக்காக தம் உயிரைக் கொடுப்பார்' 
(யோவான் 10,11)

முதல் வாசகம்: தி.பணி 13,14.43-52.
திருப்பாடல் 100.
இரண்டாம் வாசகம்: தி.வெ 7,9.14-17.
நற்செய்தி: யோவான் 10,27-30.
தி.பணி 13,14.43-52.
14அவர்கள் பெருகையிலிருந்து புறப்பட்டுச் சென்று பிசிதியாவிலுள்ள அந்தியோக்கியாவை அடைந்தார்கள். ஓய்வு நாளன்று அவர்கள் தொழுகைக்கூடத்திற்குச் சென்று அங்கு அமர்ந்திருந்தார்கள்.

43தொழுகைக் கூடத்தில் இருந்தோர் கலைந்து சென்றபோது பல யூதர்களும் யூதம் தழுவிக் கடவுளை வழிபட்டவர்களும் பவுலையும், பர்னபாவையும் பின் தொடர்ந்தார்கள். இவ்விருவரும் அவர்களோடு பேசிக் கடவுளின் அருளில் நிலைத்திருக்கும்படி அவர்களைத் தூண்டினர்.
44அடுத்து வந்த ஓய்வு நாளில் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்க ஏறக்குறைய நகரத்தார் அனைவரும் கூடி வந்தனர். 45மக்கள் திரளைக் கண்ட யூதர்கள் பொறாமையால் நிறைந்து, பவுல் கூறியதை எதிர்த்துப் பேசி அவரைப் பழித்துரைத்தார்கள்.

46பவுலும் பர்னபாவும் துணிவுடன், 'கடவுளின் வார்த்தையை உங்களுக்குத் தான் முதலில் அறிவிக்க வேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் அதனை உதறித் தள்ளி நிலை வாழ்வுக்குத் தகுதியற்றவர்கள் என்று உங்களுக்கு நீங்களே தீர்ப்பளித்துக் கொண்டீர்கள். எனவே நாங்கள் பிற இனத்தாரிடம் செல்லுகிறோம். 47ஏனென்றால், 'உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னை வேற்றினத்தார்க்கு ஒளியாக ஏற்படுத்துவேன்' என்று ஆண்டவர் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்' என்று எடுத்துக் கூறினார்கள். 48இதைக் கேட்ட பிற இனத்தார் மகிழ்ச்சியடைந்தனர்; ஆண்டவரின் வார்த்தையைப் போற்றிப் புகழ்ந்தனர். நிலைவாழ்வுக்காகக் குறிக்கப்பட்டோர் அனைவரும் நம்பிக்கை கொண்டனர். 49அப்பகுதியெங்கும் ஆண்டவரின் வார்த்தை பரவியது. 50ஆனால் யூதர்கள் கடவுளை வழிபட்டு வந்த மதிப்புக்குரிய பெண்களையும் நகரின் முதன்மைக் குடிமக்களையும் தூண்டிவிட்டு, பவுலையும் பர்னபாவையும் இன்னலுக்குள்ளாக்கி, அவர்களைத் தங்களது நாட்டிலிருந்து துரத்திவிட்டார்கள். 51அவர்கள் தங்கள் கால்களில் படிந்திருந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிவிட்டு இக்கோனியாவுக்குச் சென்றார்கள். 52சீடர்களோ தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.

பிசிதியாவிலுள்ள அந்தியோக்கு என்னும் நகரம், உரோமைய கலாத்திய மாநிலத்தின் தெற்கில் அமைந்திருந்தது, புவியியலாளர்கள் இதனை இன்று மத்திய துருக்கியில் இருப்பதாக் காண்கின்றனர். பவுல் தன்னுடைய முதலாவது திருத்தூதர் பயணத்தை தொடங்கி, சைப்பிரஸ் தீவில் திருப்பயணத்தை முடித்துக்கொண்டு, பொருகை வழியாக இங்கே வந்திருந்தார். அக்காலத்தில் இந்த உரோமைய காலனித்துவ நகரம் நன்கு வளர்ந்துகொண்டிருந்தது. திபேரியஸ் சீசர், எரோது அரசன், மற்றும் அந்தியோக்கிய அரசபரம்பரை போன்றவர்களின் உறவினர்கள் இந்த நகரில் வசித்து வந்தனர். இந்த காரணத்திற்காகவும், இந்நகர், சின்ன ஆசியாவின் முக்கிய இடங்களில் ஒன்றாக உருவெடுத்தது. பவுல், சைப்பிரஸ் தீவில் தன்னுடைய மறைபயணத்தில் வெற்றி கண்டிருந்தார். அதே வல்லமையோடு இங்கே பணியைத் தொடர்கிறார். இந்த முதலாவது பயணம் முழுவதும் பர்னபா பவுலுடன் பயனம் செய்கிறார். பவுலுடைய குழுமத்தில் இருந்த யோவான் மாற்கு இங்கே இவர்களை விட்டுவிட்டு எருசலேமிற்கு திரும்பினார். என்ன காரணத்திற்காக மாற்கு வீட்டிற்கு திரும்பினார் என்று, லூக்கா பதிவுசெய்யவில்லை. 

வ.14: ஓய்வு நாளன்று இந்த இருவரும் செபக்கூடத்திற்கு சென்று அமர்திருந்தது, இவர்கள் தங்கள் யூத மதச் சடங்குகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தையும், அதனை பாவித்து நற்செய்தியை அறிவிக்க முயலுவதையும் காட்டுகிறது. இவர்களின் வருகையை தொடக்கத்தில் யாரும் எதிர்க்காமை, ஆரம்பகாலத்தில் அனைத்து யூதர்களும் கிறிஸ்தவத்திற்கு எதிராக இருந்திருக்கவில்லை அல்லது அதனை அறிந்திருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. 

வ.43: இந்த செபக்கூடத்தில் பவுல் முக்கியமான மறையுரையொன்றை ஆற்றுகிறார் (வவ.16-25), வரலாற்றை தனக்கே உரித்தான பாணியில் விளக்கிய பவுல், யூதர்களுக்குத்தான் செய்தி முதலில் அறிவிக்கப்பட்டது என்கிறார் (26-31). இந்த செய்தி நற்செய்தி என்று பின்னர் அழகாக விவரிக்கின்றார் (வவ.32-37). இயேசுவின் வழியால்தான் அனைவருக்கும் பாவமன்னிப்பு உண்டு என்று முழக்கமிடுகிறார், அத்தோடு லேசாக கேட்போரை எச்சரிக்கையும் செய்கிறார் (வவ.39-42). இந்த செய்தியை கேட்டுக்கொண்டிருந்த யூதர்கள் கோபம் கொள்ளாமலும் அத்தோடு அடுத்த வாரமும் செபக்கூடத்திற்கு வரும்படியும் கேட்கின்றனர், இவ்வாறு இங்கே, பவுலுடைய செய்தி யூதர்களை பொறாமைகொள்ளச் செய்யவில்லை என்பதை நமக்கு லூக்கா காட்டுகிறார். 

வவ.44-46: முந்தின வாரம் யூதர்களுக்கு அறிவித்திருந்த நற்செய்தி இப்போது முழு நகரத்தையும் பற்றிகொண்டிருந்தது. லூக்கா மறைமுகமாக பவுல் அறிவித்த செய்தி யூத போதகர்களின் செய்தியைவிட கவரக்கூடியதாய் இருந்ததால், நகரமே கூடி வருவதாக காட்டுகிறார், இதனால் சில யூதர்களுக்கு பொறாமையை ஏற்படுகின்றது. இந்த பொறாமை இவர்களை திருத்தூதர்களுக்கு எதிராக பழித்துரைக்க வைக்கிறது. பவுலும் பர்னபாவும், யூதர்கள் தங்களின் செயலுக்கு தாங்கள்தான் பொறுப்பு என்று காட்டி அதற்கு திருத்தூதர்கள் காரணம் அல்ல என்பதையும் காட்டுகின்றனர். ஆரம்ப காலத்தில் கிறிஸ்தவர்கள்தான் யூத மத்தை பிளவடைய வைத்தார்கள் என்ற குற்றச்சாட்டும் இருந்ததை இங்கே நினைவில்கொள்ள வேண்டும். 

வ.47: இந்த வசனம் சிமியோன் ஆலயத்தில் குழந்தை இயேசுவைப்பற்றி சொன்னதையும் (லூக் 2,32), இயேசு திருத்தூதர்களுக்கு கொடுத்த கட்டளையையும் (தி.ப 1,8) நினைவூட்டுகிறது. எசாயா 42,6 மற்றும் 49,6 போன்ற வசனங்கள் இந்த வரிக்கு பின்புலமாக அமைகின்றன. அனைத்து நாட்டினருக்கும் ஒளி என்பது மிக முக்கியமான மறைபரப்பு வசனம் (לְאוֹר גּוֹיִם மக்களினங்களுக்கு ஒளியாக). இந்த கட்டளை இயேசுவிற்கு முன்னமே, கடவுளால் இஸ்ராயேலருக்கு கொடுக்கபட்டது என்பதை திருத்தூதர்கள் நினைவூட்டுகின்றனர். 

வவ.48-50: 47வது வசனம் யூதரல்லாதோருக்கும், ஏற்கனவே இயேசுவில் நம்பிக்கை கொண்டோருக்கும் மகிழ்சியைக் கொண்டுவருகிறது. லூக்கா இங்கே திருத்தூதர்களுக்கும் சில யூதர்களுக்கும் இடையே நடைபெற்ற இழுபறியை ஒப்பிடுகிறார். யூதர்கள் திருத்தூதர்களை விரட்ட புதிய உத்தியை கையாளுகின்றனர். கடவுளை வழிபட்டு வந்த மதிப்புக்குரிய பெண்கள் என்பவர்கள், யூத மதத்திற்கு தழுவ இருந்த முக்கியமான பெண்களைக் குறிக்கலாம். முதன்மை குடிமக்கள் என்பவர்கள் கிரேக்க-உரோமைய குடிமக்களைக் குறிக்கலாம். லூக்கா, யூத தலைவர்கள் தங்கள் பொறாமைக்கு சார்பாக சமூக தலைவர்களை பாவிப்பதைக் காட்டுகிறார். 

வவ.51-52: ஒரு சமூகத்தினுடைய படிவாதம் இன்னொரு சமூகத்திற்கு நன்மையை செய்கிறதை இங்கே காண்கிறோம். ஆண்டவர் கட்டளையிட்ட படி கால்களின் தூசி இவர்களுக்கு எதிராக தட்டிவிடப்படுகிறது (ஒப்பிடுக மத் 10,14). திருத்தூதர்களுக்கு எதிரான சூழ்சிகளும் அதனால் வந்த துன்பங்களும் அவர்களையோ அல்லது சீடர்களையோ பாதிக்கவில்லை மாறாக மகிழ்சியைத்தான் தந்தது என்கிறார் லூக்கா. மறை-அறிவிற்பிற்கு துன்பமும் மகிழ்சியே.  





திருப்பாடல் 100
1அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள்! 
2ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சிநிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! 
3ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! 
4நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப்பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! 
5ஏனெனில், ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர்.

தொடர் அணிநயத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் திருப்பாடல் ஒரு வகை நன்றிப்பாடல் இயல்பைச் சார்ந்தது. மூன்றுவகை அழைப்புக்கள், மூன்றுவகை உறுதிப்படுத்தல்கள் என்று இரண்டு அடுக்காக அழகான எபிரேய வார்த்தைகளில் இது கோர்கப்பட்டுள்ளது. 

அ.1). வவ.1-2: மூன்றுவகை அழைப்புக்கள், 
ஆர்ப்பரியுங்கள், மகிழ்வோடு பணிசெய்யுங்கள், பாடலுடன் அவரிடம் வாருங்கள்.
ஆ.1). வ.3: மூன்றுவகை உறுதிப்படுத்தல்கள்,
எம் கடவுள் எங்களை உருவாக்கினார், நாம் அவர் மக்கள், அவர் மேய்சலின் மந்தைகள்.
அ.2). வ.4: மூன்றுவகை அழைப்புக்கள்,
அவர் வாயிலுக்குள் வாருங்கள், நன்றிசெலுத்தி புகழுங்கள், அவர் பெயரை போற்றுங்கள்
ஆ.2). வ.5: மூன்றுவகை உறுதிப்படுத்தல்கள்,
அவர் நல்லவர், அவர் அன்பு-இரக்கம் தலைமுறைக்கும், சந்ததிக்கும் நம்பத்தகுந்தவர். 

இந்த திருப்பாடலை மொழிபெயர்த்த தமிழ்த் தந்தையர்கள் அழகு தமிழில், எபிரேய கவிநயம் குன்றாமல் மொழி பெயர்த்திருக்கிறார்கள். எபிரேய கவிநடைக்குரிய திருப்பிக்கூறுதல், சமாந்தர வார்த்தைகள், ஒத்தகருத்துச் சொற் பாவைனைகள் என்று அழகாக இந்தப்பாடல் புனையப்பட்டுள்ளது. கடவுளை நாம் ஏன் நம்ப வேண்டும் என்றும், அதற்கான காரணங்களையும் மென்மையான வரிகளில் ஆனால் ஆழமான விசுவாசத்தில் பாடுகிறார் இந்த பெயர் தெரியாத நம்பிக்கையாளர்.

 
தி.வெ. 7,9.14-17:
9இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள்.
14நான் அவரிடம், 'என் தலைவரே, அது உமக்குத்தான் தெரியும்' என்றேன். அதற்கு அவர் என்னிடம் கூறியது: 'இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள். 15இதனால்தான் கடவுளது அரியணைமுன் நின்றுகொண்டு அவரது கோவிலில் அல்லும் பகலும் அவரை வழிபட்டுவருகிறார்கள்; அரியணையில் வீற்றிருப்பவர் அவர்களிடையே குடிகொண்டு அவர்களைப் பாதுகாப்பார். 16இனி அவர்களுக்குப் பசியோ தாகமோ இரா கதிரவனோ எவ்வகை வெப்பமோ அவர்களைத் தாக்கா. 17ஏனெனில் அரியணை நடுவில் இருக்கும் ஆட்டுக்குட்டி அவர்களை மேய்க்கும்; வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழிநடத்திச் செல்லும். கடவுள் அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.'

ஏழாவது அதிகாரத்தில் யோவான் புதிய இஸ்ராயேலை காட்சியில் காண்கிறார். ஆறு தொடக்கம் எட்டு வரையான அதிகாரம், ஏழு விதமான முத்திரைகளை மையப்படுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஏழாவது அதிகாரம் ஆறாவது மற்றும் ஏழாவது முத்திரைகளுக்கிடையிலான இடைவெளியாக வருகிறது. வெளிப்பாட்டு நூல்களில் கதாநாயகன், காட்சி மற்றும் குரல் போன்ற இரண்டு விதமான வெளிப்பாடுகளை பெறுவார். இநத் பகுதியில் யோவான் இரண்டு விதமான வெளிப்பாடுகளையும் பெறுகிறார், அதாவது காட்சி காண்கிறார் அத்தோடு வானக குரலையும் கேட்கிறார். 

வ.9: இந்த வசனம், பல்முகத்தன்மையை வெளிப்படுத்துகிறது. விவிலியத்தில் பல இடங்களில் கடவுளுக்கு அனைவரும் சமமே என்ற வாதம் வலுவாக அறிவிக்கப்படும். அப்படியான இடங்களில் இந்த வசனம் மிகவும் முக்கியமானது. ஏற்கனவே வவ.5-8 இஸ்ராயேல் குலத்திலிருந்து செம்மறியின் முன்நின்றவர்களை 144,000 என்று எண்ணிக்கை காட்டியது. இப்போது இஸ்ராயேல் குலமல்லாத எண்ணமுடியாதவர்கள் செம்மறியின் முன்நிற்பதாக காட்டப்படுகிறது. இஸ்ராயேல் குலத்திலிருந்தவர்களை எண்ணக்கூடியதாகவும், மற்றவர்களை எண்ண முடியாதனவர்கவும் யோவான் காட்டுவதால், கடவுள் ஒரு குறிப்பிட்ட இன-குல மக்களுடையவர் 
இல்லை என்பது தெளிவாகிறது. இந்த கூட்டம், எண்ணிக்கையில் அடங்காமல், பல நாட்டு-குல-மக்களின-மொழியையும் சார்ந்திருந்தார்கள். அனைவரும் வித்தியாசமின்றி ஆட்டுக்குட்டிக்கு முன் நிற்கின்றனர். வென்மையான தொங்கலாடை அவர்களின் தூய்மையைக் குறிக்கிறது. கையில் குருத்தோலையை பிடித்திருந்தமை அவர்கள் வெற்றியடைந்தவர்கள் என்பதனைக் காட்டுகிறது. இந்த எண்ண முடியாத தொகை தொடக்கத்தில் கடவுள் ஆபிராகமிற்கு வாக்களித்த சந்ததியை நினைவூட்டலாம். செம்மறியின் முன் பரிவினை அடையாளங்கள் காணாமல் போய்விட்டது. 

வ.14: யோவான் இந்த மூப்பரை தலைவரே என்று அழைப்பது, அவர் இந்த உயிர்த்தவர்களைவிட உயர்ந்தவரல்ல என்பதை காட்டுகிறது, அத்தோடு யோவான் தன்னுடைய அறியாமையையும் வெளிப்படுத்துகிறார். கொடிய வேதனை என்பது இந்த புத்தகத்தின் காலக்கோட்டில் உரோமைய கலாபனைகளையும் துன்பங்களையும் குறிக்கும். தங்கள் ஆடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தில் தோய்ததன் வாயிலாக இயேசுவின் ஆசீர்களை பெற்றுக்கொள்கின்றனர். 

வ.15: இந்த வசனம், இவர்களுக்கு இனி தோல்வியில்லை என்பதைக் குறிக்கிறது. திருப்பாடல்கள், ஆண்டவரின் திருத்தலத்தில் நாள் முழுவதும் இருப்பதை கொடையாக பாடுகின்றன, இங்கே அந்த சந்தர்ப்பம் இவர்களுக்கு மிகவும் இலவசமாக கிடைக்கிறது, கடவுளும் ஓர் ஆயனைப்போல அவர்களில் நடுவில் இருப்பார், அதாவது இனி கலாபனைகள் இராது என்கிறார் யோவான். இனி இவர்கள் ஆண்டவரை மையமாகக் கொண்ட கூட்டம். 

வவ.16-17: இவ்வுலக சாதாரண தேவைகளான பசி, தாகம், உறைவிட தேவை போன்றவையும் இருக்காது என்கிறார். வாழ்வளிக்கும் நீருற்று என்பது நித்திய வாழ்வை அல்லது கிறிஸ்துவோடு இணைந்த வாழ்வை குறிக்கிறது. கண்ணீரைத் துடைத்தலும், கடவுளின் பாதுகாப்பைக் குறிக்கிறது. 

ஆரம்பகால கிறிஸ்தவர்கள் எப்படியான துன்பங்களைக் தாண்டி இயேசுவிற்கு சாட்சியம் பகர்ந்தார்கள் என்பதனையும், துன்புறுகிறவர்கள் எவ்வாறு துன்பங்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதனையும் இந்த திருவெளிப்பாடு அழகாக காட்டுகிறது. பல ஆயிரம் வருடங்கள் தாண்டியும் கிறிஸ்தவர்கள்; (அத்தோடு மற்றவாக்ளும்) தங்களது மத நம்பிக்கையின் பொருட்டு தொடர்ந்து துன்புற்று வருவது தடுக்கமுடியாத கதையாகிப்போகிறது. 



யோவான் 10,27-30:
27என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப்பின் தொடர்கின்றன. 28நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ளமாட்டார். 29அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ள இயலாது. 30நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்' என்றார்.

யோவான் நற்செய்தி பத்தாவது அதிகாரம் இயேசுவை நல்ல ஆயனாக அடையாளப்படுத்தி விளங்கப்படுத்துகிறது. ஆயர்கள் அல்லது ஆயர்த்துவம் என்பது, விவிலியத்தில் மிகவும் அறியப்பட்ட கடவுளின் அடையாளம். அனைத்து மக்களினங்களைப் போலவும், இஸ்ராயேல் மக்களும் நாடோடிகளாக வாழ்வைத் தொடங்கி பின்னர் நிலையான குடிகளாக தங்களை மாற்றிக்கொண்டவர்களே. தமிழர்களாகிய நாங்களும் எதோ ஒரு காலத்தில் இப்படியான நாடோடி மேய்ச்சல்காரர்களாக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். விவிலயம் காட்டுகின்ற முதலாவது ஆயன் ஆபேல். ஆபிராகாம் தொடங்கி தாவீது அரசர்வரை அனைவரும் ஆயர்களாகவே இருந்திருக்கிறார்கள். ஆயர்களிலும் ஏழைகள், எளியவர்கள், அத்தோடு யாக்கோபு போன்ற வல்லமையுள்ள வளர்ப்பாளர்கள் என்ற பிரிவினைகளும் இருந்திருக்கின்றன. வேளான்மை, இஸ்ராயேல் மக்களிடையே தொடங்கிய பின்னர்கூட, இந்த ஆயத்துவம் இவர்களிடையே மிக முக்கியமான தொழிலாகவும், கலாச்சாரமாகவும் இருந்தது. மந்தைகள் எப்போதும், மென்மையானதாகவும், செயற்திறனற்றதாகவும், கூட்ட-கூச்ச-சுபாவமுடையதாகவும், முழுமையாக தமது ஆயர்களின் குரலை நம்பியதாகவும் காணப்படுகின்றன. பலமற்ற இந்த மந்தைகளைச் சுற்றி பலமான வேட்டை மிருகங்கள் என்றுமே நிறைந்திருந்தன. இதற்குள் மனித மிருகங்களும் அடங்கும். இதனாலே ஆயத்துவம் மிக முக்கியமான காத்தல் கலையாக உருவெடுத்தது. மேய்சல் நிலங்களை கண்டு கொள்ளுதல், தண்ணீர் தேசங்களை அடையாளம் காணல், பத்திரமாக அவற்றை நோக்கி மந்ததைகளை வழிநடத்துதல், கர்ப்பமுற்ற சினையாடுகளை பாதுகாத்தல், குட்டியாடுகளை தூக்கி வளர்த்தல் போன்ற பலவகையான இனிமையான தொழில்களைக் கொண்டது ஆயர்த்துவம். ஆயர்கள் சாதாரன உடைகளையும் பாதுகாப்பு ஆயுதங்களையும் கொண்டிருந்தனர். கடினமான உடை, கோல், தோற்பை, தண்ணீர்ப்பை, கவண் மற்றும் கவண் கற்கள் போன்றவையாகும். இது கரடுமுரடாக இருந்தாலும் கண்ணியமான தொழில். 

இப்படியான சாதாரண மனித வாழ்வினுடைய, இந்த அழகானதும் ஆனால் கடினமானதுமான வாழ்கைமுறை, பின்னாளில் தலைவர்களினதும் கடவுளுடையதுமான அடையாளமாக மாறியது. விவிலிய ஆசிரியர்;கள், அரசர்களையும் தலைவர்களையும் இறைவாக்கினர்களையும் ஆயர்களாக வர்ணிக்கின்றனர். மோசே தொடங்கி தாவீது வரை தலைவர்கள் இந்த பணியை செய்தவர்களே. எல்லாவற்றிக்கும் மேலாக விவிலிய ஆசிரியர்கள் கடவுளையே நல்ல ஆயனாக வர்ணித்து படம் பிடித்தனர். இந்த சிந்தனை
இஸ்ராயேல் மக்களுக்கு மட்டுமே உரிய சிந்தனை அல்ல. தலைவர்கள் தவறிய போது அவர்களை கண்டித்த இறைவன், தன்னையே நல்ல ஆயனாக இறைவாக்கினர் வழியாக மீண்டும் மீண்டும் வழியுறுத்துவார் (காண்க எரேமியா 10,21: 23,1-4: எசேக் 34,1-10: செக் 10,3: தி.பா 23: எசா 44,28: லூக் 15,3-7: மத் 15,24: யோவான் 10,1-29). இன்றையை நற்செய்தியில் யோவான், ஆண்டவர் இயேசுவை உண்மையான ஆயனாக காட்டுவதனை சற்று பார்ப்போம். 

வ.27: ஆடுகளுக்கு, தன் ஆயனின் குரல் தெரிந்திருக்க வேண்டும், தம் ஆயனை அவை பின்பற்ற வேண்டும், அத்தோடு ஆயனுக்கு தன் ஆடுகளைத் தெரிந்திருக்கவேண்டும். தெரிந்திருத்தல், பின்பற்றல், செவிசாய்தல் ஆயனுக்கும் ஆடுகளுக்குமிடையிலான நெருக்கமான உறவை காட்டுகிறது, இவை தனக்குரிய பன்பு என்கிறார் இயேசு ஆண்டவர். 

வ.28: சாதாரன ஆயர் ஆடுகளுக்கு உணவை அளிக்கிறார், ஆனால் ஆண்டவர் இயேசு, தான் நிலைவாழ்வை அளிப்பாதாக கூறுகிறார் (ζωὴν αἰώνιον ட்சோஏன் அய்யோனிஓன்- நிலை வாழ்வு). சாதாரன ஆயனிடமிருந்து எப்போதாவது ஒருநாள் ஆடுகள் பிரியும் அல்லது அழிந்து போகும், ஆனால் இயேசு தன்னுடைய ஆயத்துவத்தில் அந்த ஆபத்தில்லை என்று நம்பிக்கை அளிக்கிறார். இந்த வசனங்கள் இயேசு கடவுள் என்பதற்கு நல்ல உதாராணங்கள். (தங்களை அரச-மத ஆயர்கள் என்று சொல்பவர்கள், இன்று காப்பதைவிட அழிப்பதையை தொழிலாக செய்கிறார்கள்).

வ.29: இயேசு, ஏன் தன்னுடைய ஆயத்துவத்தும் நித்தியமானது அத்தோடு அழிக்க முடியாதது என்று விளக்கம் கொடுக்கிறார். ஆயத்துவம் கடவுளிடமிருந்து வரவேண்டும். இயேசுவிற்கு ஆயத்துவம் கடவுளிடமிருந்தே வருகிறது, இதனால், அதனையோ அல்லது அவரது ஆடுகளையோ யாரும் பிரிக்க முடியாது என்கிறார். 

வ.30: இந்த வசனத்ததை அவதானமாக நோக்க வேண்டும். 'ஒன்றாய் இருக்கிறோம்' என்பதில் எழுவாய் பொருள் 'ஒன்றாய்' என்பதாகும (ἐγὼ καὶ ὁ πατὴρ  ἕν ἐσμεν.). இது கிரேக்க மொழியிலும் தமிழ் மொழியிலும் பலர்பால் வகையைச் சார்ந்தது. இன்னும் இலகுவாக மொழிபெயர்த்தால், நானும் தந்தையும் ஒரே பொருளாய் இருக்கிறோம் என்றும் கொள்ளலாம். இங்கே யோவான் இரண்டு அர்தங்களை ஆழமாக சொல்கிறார். அ).நல்ல ஆயன்-தந்தையாகிய கடவுள்-இயேசு. ஆ). முதல் ஏற்பாட்டில் தந்தையாகிய கடவுள் தன்னை நல்ல ஆயன் என்றுசொன்னததை மீண்டுமாக நினைவூட்டி, தான்தான் அவர், அவர்தான் தான், என்று சொல்கிறார் ஆண்டவர்
சொல்வதாக பதிகிறார் யோவான். 

ஆயர்த்துவம் எவருடையதுமான பரம்பரை சொத்து கிடையாது. எவரும் ஆயர்களாக பிறக்கவும் முடியாது. தனது மந்தைகளை மேய்ப்பதற்காகவும், மந்தைகளுக்கு பணிசெய்வதற்காகவும் கடவுள்தான், தன் ஆயர்களை தெரிவு செய்கிறார். ஆயர்த்துவம் ஒர் அழைப்பு, தொழிலல்ல. உண்மையில் மந்தைகளே ஆயர்களின் முதல்வர்களும், முதலாளிகளுமாவர். தகுதியில்லாதவர்கள் தங்களை, தாங்களே ஆயர்களாக்கி, மந்தைகளை சிதறடித்து அழிவிற்கு கொண்டுசெல்கின்றனர். சில மந்தைகளும் பகுத்தறிவில்லாமல், ஆயருக்கும் ஆபத்திற்கும் வித்தியாசம் தெரியாமல், அழிவைத் தேடுகின்றன. நடிகர்களின் படங்களுக்கு பால் ஊற்றுவதும், அரசியல் தலைவர்களை தெய்வாங்களாக பார்த்து காலில்கூட விழுவதும், இதற்கு நல்ல உதாரணங்கள்.

அன்பான நல்ல ஆயனே, ஆண்டவர் இயேசுவே! உம்முடைய மந்தைகளுக்கு நல்ல அறிவையும், நல்ல ஆயர்களையும் தாரும். ஆமென். 
மி. ஜெகன்குமார் அமதி
உரோமை,
செவ்வாய், 12 ஏப்ரல், 2016

வியாழன், 7 ஏப்ரல், 2016

பாஸ்காக் காலம் மூன்றாம் வாரம், Paschal Time, Third Week, 10,சித்திரை,2016



பாஸ்காக் காலம் மூன்றாம் வாரம், 
10,சித்திரை,2016
மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்?

முதல் வாசகம்: தி.பணி 5,27-32.40-41
திருப்பாடல்: 30
திருவெளிப்பாடு 5,11-14
யோவான் 21,1-19
தி.பணி 5,27-32.40-41

27அழைத்து வந்தவர்களை அவர்கள் யூதத் தலைமைச் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள். தலைமைக் குரு அவர்களை நோக்கி, 28'நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக் கூடாது என்று நாங்கள் கண்டிப்பாய்க் கட்டளையிடவில்லையா? என்றாலும் எருசலேம் முழுவதும் நீங்கள் கற்பித்து வருகிறீர்கள். மேலும் இந்த மனிதருடைய இரத்தப் பழியையும் எங்கள்மீது சுமத்தப் பார்க்கிறீர்களே!' என்றார்.
29அதற்குப் பேதுருவும் திருத்தூதரும் மறுமொழியாக, 'மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்ப்படிய வேண்டும்? 30நீங்கள் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார். 31இஸ்ரயேல் மக்களுக்கு மனம் மாற்றத்தையும் பாவமன்னிப்பையும் அளிப்பதற்காகக் கடவுள் அவரைத் தலைவராகவும் மீட்பராகவும் தமது வலப்பக்கத்துக்கு உயர்த்தினார். 32இவற்றுக்கு நாங்களும் கடவுள் தமக்குக் கீழ்ப்படிவோருக்கு அருளும் தூய ஆவியும் சாட்சிகள்' என்றனர்.
40பின்பு அவர்கள் திருத்தூதர்களை அழைத்து அவர்களை நையப்புடைத்து, இயேசுவைப்பற்றிப் பேசக் கூடாதென்று கட்டளையிட்டு விடுதலை செய்தனர். 41இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச் சங்கத்தை விட்டு வெளியே சென்றார்கள்.

இந்தப் பகுதி திருத்தூதர்கள் துன்புறுத்தப்பட்ட வரலாற்றை விவரிக்கின்றது. இதற்கு முன் உள்ள பகுதியில் ஏற்கனவே திருத்தூதர்கள் எச்சரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தனர். ஆண்டவரின் தூதரின் வல்லமையால் இவர்கள் விடுதலையாகி ஆலயத்தின் வாயிலில் வாழ்வு தரும் வார்த்தைகளை கற்பிக்கும்படி கேட்கப்பட்டிருந்தனர். தலைமைச் சங்கம் அவர்களை விசாரனை செய்யும்படி சிறையை ஆய்வு செய்தபோது அவர்கள் ஏற்கனவே தப்பியிருந்தனர். சிறையில் இல்லாத திருத்தூதர்களை, மீண்டும் கோவிலில் கைது செய்து தலைமைச் சங்கத்தின் முன் கொண்டு வருகின்றனர். அதன் பின்னர் நடந்தவற்றையே இன்றைய முதலாம் வாசகம் நமக்கு காட்டுகிறது. 

வவ.27-28: இந்த தலைமைக்குரு அநேகமாக கயபாவாக இருக்கலாம். அவர் இரண்டு விதமான குற்றச்சாட்டுக்களை திருத்தூதர்கள்மேல் சுமத்துகிறார். அ). கீழ்படியாமை ஆ). மரணப்பழி: லூக்கா இந்த இரண்டு குற்றச்சாட்டுக்கள் வாயிலாக இரண்டு செய்திகளை ஆழமாக கற்பிக்கிறார். அவை,
இயேசுவின் போதனைகளை முன்னெடுக்கிறவர்களும் அவரை பின்பற்றுகிறவர்களும் நிச்சயமாக சமய தலைவர்களினால் சோதிக்ப்படுவார்கள், எனவே அவர்கள் அதற்கு தயாராக இருக்கவேண்டும் என்பது. அவர்கள் வித்தியாசமான கட்டளைகளை அதிகாரத்தின் பேரில் முன்வைப்பார்கள். இங்கே இவர்கள் இயேசுவை பற்றி கற்பிக்கக்கூடாது என்று கட்டளை வைக்கிறார்கள். இயேசுவை கற்பிக்கக்கூடாது என்று கட்டளை கொடுக்க இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? கடவுளை தடுக்க மனிதர்கள் முயல்வதை இங்கே காணலாம். (இன்றும் இயேசுவை அறிவிப்பதை தடுக்க பல மனித அரசாங்கங்கள் கட்டளை கொடுப்பதை என்னவென்று சொல்வது. இதில் இன்னும் நசைக்சுவையான விடயம், சில கிறிஸ்தவ அரசுகளே தங்களை அறிவாளிகளாகவும், அரச-தந்திரிகளாகவும் நினைத்து ஆண்டவரை தடுக்க முயலுவார்கள்!!!).
இறுதியாக இயேசுவின் இரத்தபழி தங்களுடையது அல்ல என்று மறுதலிக்கின்றனர். பிலாத்து, பல முறை முயன்றும் இதே தலைமைச் சங்கம்தான் ஆண்டவரை சிலுவையில் அறையக்கேட்டது. பிலாத்து ஆண்டவருடைய இரத்தப்பழியை கழுவியபோது, தங்கள்மேலும், தங்கள் பிள்ளைகள் மீதும் இவர்கள்தான் கேட்டு வாங்கிக்கொண்டார்கள். ஆக இந்த கேள்விக்கான விடையை இவர்கள் தங்கள் வாயிலாக அவர்களே சொல்வதை அழகாக லூக்கா படம்பிடிக்கிறார்.

வ.29: லூக்கா இங்கே கிரேக்க பொதுக் கூட்டங்களில் ஆளும் தரப்பும் எதிர்தரப்பும் விவாதம் செய்வதனைப்போல காட்சியமைக்கிறார். இப்போது எதிர்கட்சியாக உருவெடுத்திருக்கும் பேதுருவின் தலைமையிலான ஆரம்ப கால திருச்சபை பேசுகிறது. இங்கே பேதுருவின் பதில், இந்த தலைவர்கள் தங்களுக்கு கடவுள்கள் அல்ல எனவும், தங்களின் கடவுள் இயேசு, ஆகவே வானதூதர் சொன்ன கட்டளையைத்தான் தாங்கள் செய்வதாக (காண் வ.20) காரணம்காட்டுகிறது.  

வவ.30-31: இங்கே திருச்சபை பல குற்றச்சாட்டுக்களையும் கடவுளின் செயல்களையும் முன்வைக்கிறது. இயேசுவை சிலுவையில் அறைந்து கொலை செய்ததாக தலைமைச் சங்கத்தை சாடுகிறது. ஏற்கனவே பேதுரு தன்னுடைய தலைமையுரையில் மக்களையும் உரோமையரையும் குற்றம் சுமத்தியிருந்தார், இங்கே தலைமைச் சங்கத்தை சாடுகிறார். அத்தோடு பேதுரு தன்னுடைய மறைபோதனையை அழகாக தலைமைச்சங்கத்திற்கே முன்வைக்கிறார், அதாவது: மனமாற்றத்தையும் பாவமன்னிப்பையும் வழங்க கடவுள் இயேசுவை தனது வலப்பக்கத்திற்கு உயிர்பித்துள்ளார் எனவும், அதற்கு தாங்களும் தூய ஆவியும் சாட்சிகள் என்கிறார்.
இங்கே ஆழமாக பார்கப்படவேண்டியவை இரண்டு: வலப்பக்கம் என்பது, (δεξιᾷ αὐτοῦ அவரின் வலப்பக்கம்) இனி கடவுளின் அதிகாரம் இயேசுவையே சாரும், தலைமைச் சங்கத்தையோ அல்லது அவர்களின் சட்டங்களையோ சாராது என்பதைக் குறிக்கிறது. இரண்டாவது, மனிதர்களின் சாட்சியத்தை தலைமைச் சங்கம் மறுக்கலாம், ஆனால் தூய ஆவியை மறுத்தால் தண்டிக்கப்படுவார்கள் என்பதாகும். 

வவ.40-41: எப்படித்தான் திருச்சபை உண்மையை உரைத்தாலும் தண்டிக்கப்படுவாள்; என்று கூறுகிறார் லூக்கா. இறுதி வசனம், திருத்தூதர்கள் தண்டிக்கப்பட்டாலும் மகிழ்சியோடு சென்றார்கள் என்று காட்டுகிறது. ஆக துன்பங்களில் இருந்து தப்பியோடுதல் சாட்சியம் அல்ல மாறாக அதனை தாங்கி, தாண்டி வருவதே மகிழ்சியளிக்கும் என்று பாடம் புகட்டுகிறார் லூக்கா. 

திருப்பாடல் 30
நன்றி செலுத்தல்
(புகழ்ப்பர் திருக்கோவில் அர்ப்பணப்பர் தாவீதுக்கு உரியது)
1ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை. 
2என் கடவுளாகிய ஆண்டவரே, உம்மிடம் உதவி வேண்டினேன்; என்னை நீர் குணப்படுத்துவீர். 
3ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர். 4இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள். 
5அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு. 
6நான் வளமுடன் வாழந்தபோது, 'என்னை ஒருபோதும் அசைக்க முடியாது' என்றேன். 
7ஆனால், ஆண்டவரே! உமது கருணையினால் மலையென உறுதியாக என்னை நிலைநிற்கச் செய்தீர்; உம் முகத்தை மறைத்துக் கொண்டீர்; நான் நிலைகலங்கிப் போனேன். 
8ஆண்டவரே, உம்மைநோக்கி மன்றாடினேன்; என் தலைவரிடம் எனக்கு இரங்குமாறு வேண்டினேன். 
9நான் சாவதால், படுகுழிக்குப் போவதால், உமக்கு என்ன பயன்? புழுதியால் உம்மைப் புகழ முடியுமா? உமது வாக்குப் பிறழாமையை அறிவிக்க இயலுமா? 
10ஆண்டவரே. எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும். 
11நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; என் சாக்குத் துணியைக் களைந்துவிட்டு எனை மகிழ்ச்சியால் உடுத்தினீர். 
12ஆகவே என் உள்ளம் உம்மைப் புகழ்ந்து பாடும்; மௌனமாய் இராது; என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்.

நன்றிப்பாடல்கள் அனேகமான வேளைகளில், செபங்களாக இருப்பதனைக் காணலாம் இதனை இந்த முப்பதாவது திருப்பாடலிலும் காணலாம். அத்தோடு நன்றிப்பாடல்கள், பழைய நிகழ்வுகளையும் நினைவூட்வதனையும் காணலாம். இறுதியாக, வேண்டுதல்கள் ஏற்கனவே நிறைவேறிவிட்டது எனவும், பாடலாசிரியர் தான் எக்காலமும் இனி நன்றி செலுத்துவதாகவும் கூறுவதாக அமையும். இந்தப் பாடல், தேவை-மீட்பு-நன்றி என்ற தோரனையில் அமைந்துள்ளதனைக் காணலாம். 

வவ.1-3: இந்தவரிகள் ஆண்டவரை மூன்று தடவை விழிக்கின்றன அத்தோடு மூன்று தடவை பாதாளம், படுகுழி, குணப்படுத்தல் என்றும் சாட்சியம் சொல்கின்றன. குணப்படுத்தல் அக்காலத்தில் கடவுளுக்கே உரித்தான உன்னதாமான ஆசீராக கருதப்பட்டது. שְׁאוֹל nஷயோல் בּוֹר போர், என்பவை அதாளபாதாளத்தையோ அல்லது படுகுழியையோ குறிக்கின்றன. இறப்பிற்கு பின்னர் மனிதர்கள் அல்லது உயிர்கள் இங்கே அலைவதாக இஸ்ராயேலர் கருதினர். இது மீட்பில்லாத இருண்ட நிலையையும் குறிக்கும். ஆசிரியர், கடவுள் தன்னை இப்படியான நிலையிலிருந்து மீட்டு குணப்படுத்தியுள்ளார் என்று சாட்சி சொல்கிறார். 

வவ.4-5: திருப்பாடல் ஆசிரியர் அறிவுரை கூறுகிறார். இறையன்பர்கள் என்பவர்கள், חָסִיד ஹசிட் என்ற பக்திமான்களைக் குறிக்கிறது. ஆசிரியர் கடவுளை நினைக்கவும், நன்றி சொல்லவும் அழைப்புவிடுகிறார். ஆண்டவரின் சினம் குறைவானது ஆனால் அவரின் கருணையோ வாழ்நாள் வரை என்று தன் அழைப்பிற்கு காரணம் காட்டுகிறார். 

வவ.6-7: தன்னுடைய பழைய கால வாழ்க்கையை உதாரணத்திற்கு எடுக்கிறார். தான் தலைக்கனம் உடையவராக இருந்ததாக சாட்சி சொல்கிறார். ஆண்டவரின் மறைக்கப்பட்ட முகம் என்பது இங்கே ஆணடவரின் பிரசன்னத்தைக் குறிக்கும். ஆண்டவரின் இருப்பில்லாத வாழ்வு கலக்கம் நிறைந்த வாழ்வு என்கிறார். 

வவ.8-10: தனது வேண்டுதல்களையும் நியாயங்களையும் முன்வைக்கிறார். ஒன்பதாவது வசனம், இஸ்ராயேல் மக்கள் மரணத்தை வாழ்வின் முடிவாகவும் மரணித்தவர்கள் கடவுளைப் போற்ற முடியாதவர்கள் என்ற நம்பிக்கையை கொண்டிருந்ததையும் காட்டுகிறது. இந்த உலகத்திலே கடவுளைப் போற்ற வேண்டும், நல் வாழ்வை வாழவேண்டும் என்பதே இவர்களின் முக்கியமான நம்பிக்கை. கிறிஸ்தவ நம்பிக்கையும் இவ்வுலக நல் வாழ்விற்கு எதிரானதல்ல என்பதையும் இவண் காணவேண்டும். செவிசாயும், இரங்கும், துணையாய் இரும் என்பதே இங்கே ஆசிரியரின் வேண்டுதல்கள்.

வவ.11-12: இந்த வரிகளில் புது வாழ்க்கையை ஆசிரியர் விவரிக்கிறார். புலம்பல் களிநடனமாக மாறுதலும், ஓர் ஆடை களைந்து இன்னோர் ஆடை அணிதலும் புது வாழ்வை காட்டுகிறது. பவுல் இந்த உருவகத்தையே திருமுழுக்கிற்கு ஒப்பிடுவார். பன்னிரன்டாவது வரி, இஸ்ராயேல் மக்களின் விசுவாச வாழ்வை ஒப்பனை செய்கிறது. துன்பத்தில் இருந்து நம்பிக்கைக்கு வருவதே திருப்பாடல்களின் வழமையாக இருப்பதனை இங்கே காணலாம்.  

திருவெளிப்பாடு 5,11-14

11தொடர்ந்து நான் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அரியணையையும் உயிர்களையும் மூப்பர்களையும் சுற்றி நின்ற கோடிக்கணக்கான வானதூதர்களின் குரலைக் கேட்டேன்: 12'கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் ஞானமும் ஆற்றலும் மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றது' என்று அவர்கள் உரத்த குரலில் பாடிக் கொண்டிருந்தார்கள். 13பின்பு, விண்ணுலகு, மண்ணுலகு, கீழுலகு, கடல் எங்கும் இருந்த படைப்புகள் அனைத்தும், அவற்றில் இருந்த ஒவ்வொன்றும், 'அரியணையில் வீற்றிருப்பவருக்கும் ஆட்டுக்குட்டிக்கும் புகழ்ச்சியும் மாண்பும் பெருமையும் ஆற்றலும் என்றென்றும் உரியன' என்று பாடக் கேட்டேன். 14அதற்கு அந்த நான்கு உயிர்களும், 'ஆமென்' என்றன. மூப்பர்கள் விழுந்து வணங்கினார்கள்.

வானுலக காட்சி என்ற பகுதியிலிருந்து, இன்றைய இரண்டாம் வாசகம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் யோவான் ஆட்டுக்குட்டியின் மாட்சியை விவரிக்கின்றார். 

வ.11: நான் பார்த்துக்கொண்டிடுருக்கும் போது என்று யோவான் தொடங்குவது, வெளிப்பாட்டு
இலக்கியங்களின் முக்கியமான பண்பாகும். இந்த முறை அவர் பலவற்றைக் காண்கிறார். அவை, அரியணை, மூப்பர்கள், கோடிக்கணக்கான வானதூதர்களின் குரல் என்பனவாகும். 4,10 இந்த மூப்பர்களை இருபத்தினாங்கு என்று வரையறுக்கிறது. இந்த இலக்கம் பன்னிரண்டின் நிறைவான இன்னொரு இலக்கமாகும். அத்தோடு இது பன்னிரு குலங்களையோ அல்லது பன்னிரு திருத்தூதர்களையோ அல்லது நிறைவான திருச்சபையின் தலைவர்களையோ குறிக்கலாம். இந்த நான்கு உயிர்கள், முழு உலகத்தையும் குறிக்கிறது. அல்லது முழு உலகத்திற்கு பொறுப்பான கடவுளின் அதிகாரத்தை குறிக்கிறது.  கோடிக்கணக்கான வானதூதர்கள் உண்மையில் ஆயிரம் ஆயிரம் வானதூதர்களின் கூட்டம் என்றே மூல மொழியில் அமைந்துள்ளது. 

வ.12: வானதூதர்கள் இங்கே மூப்பர்கள், உயிர்கள் முன்நிலையில் ஆட்டுக்குட்டிக்கு சாட்சியமும் தீர்ப்பும் சொல்கிறார்கள். இந்த ஆர்ப்பரிப்பு எசாயா நூலில் செராபீன்கள் கடவுளுக்கு புகழ்பாடி சாட்சியம் சொன்னதை நினைவூட்டுகிறது. 

வ.13: இந்த வசனத்தின் மூலம் இப்பொழுது முழு பிரபஞ்சமுமே ஆட்டுக்குட்டியை புகழத்தொடங்குகின்றன. விண்ணுலகு, மண்ணுலகு, கீழுலகு, கடல் என்பவை இந்த நான்கு உயிர்களுடன் தொடர்புடைய, வாழும் உலக உயிர்களைக் குறிக்கின்றன. ஆக முழு உலகமும் இங்கே அரியணையிலிருக்கும் கடவுளையும் அவருடைய ஆட்டுக்குட்டியான இயேசுவையும் புகழ்கின்றன. 

வ.14: உயிர்களின் அறிக்கையை கேட்டவுடன் நான்கு உயிர்கள் ஆமென் என்று பதிலளிக்கின்றன.
இது இஸ்ராயேல் மக்களின் செபத்தைக் குறிக்கிறது. ஆமென் என்பது ஏற்றுக்கொள்ளுதலைக் குறிப்பவை. மூப்பர்கள் விழுந்து வணங்குதலும் இன்னொரு ஏற்றுக்கொள்ளுவதற்கான அடையாளம். இந்த வரிகளின் அடையாளங்கள் மூலமாக யோவான், இயேசுவை அனைத்து உலகங்களும், கடவுளின் வானதூதர்களும் முறையாக ஏற்றுக்கொண்டனர் என்று விவரிக்கின்றார்.  


யோவான் 21,1-19
இயேசு தம் சீடர் எழுவருக்குத் தோன்றுதல்

1பின்னர் இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு: 2சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர், 3அப்போது சீமோன் பேதுரு அவர்களிடம், 'நான் மீன்பிடிக்கப் போகிறேன்' என்றார். அவர்கள், 'நாங்களும் உம்மோடு வருகிறோம்' என்று போய்ப் படகில் ஏறினார்கள். அன்று இரவு அவர்களுக்கு மீன் ஒன்றும் கிடைக்கவில்லை. 4ஏற்கெனவே விடியற்காலை ஆகியிருந்தது. இயேசு கரையில் நின்றார். ஆனால் அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்து கொள்ளவில்லை. 5இயேசு அவர்களிடம், 'பிள்ளைகளே! மீன் ஒன்றும் கிடைக்கவில்லையா?' என்று கேட்டார். அதற்கு அவர்கள், 'இல்லை' என்றார்கள். 6அவர், 'படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும்' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பபட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை. 7இயேசுவின் அன்புச் சீடர் அதைக் கண்டு பேதுருவிடம், 'அங்கு நிற்பவர் ஆண்டவர்தாம்' என்றார். அதைக் கேட்டவுடன் தம் ஆடையைக் களைந்திருந்த சீமோன் பேதுரு ஆடையை இடுப்பில் கட்டிக்கொண்டு கடலில் குதித்தார். 8மற்றச் சீடர்கள் மீன்களுடன் வலையை இழுத்துக்கொண்டு படகிலேயே வந்தார்கள். அவர்கள் கரையிலிருந்து வெகு தொலையில் இல்லை; ஏறக்குறைய நூறு மீட்டர் தொலையில்தான் இருந்தார்கள். 9படகைவிட்டு இறங்கியவுடன் கரியினால் தீ மூட்டியிருப்பதையும் அதன்மீது மீன் வைத்திருப்பதையும் அவர்கள் கண்டார்கள். அங்கு அப்பமும் இருந்தது. 10இயேசு அவர்களிடம், 'நீங்கள் இப்போது பிடித்தவற்றில் சில மீன்களைக் கொண்டு வாருங்கள்' என்றார். 11சீமோன் பேதுரு படகில் ஏறி, வலையைக் கரைக்கு இழுத்தார். வலை நிறைய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றின் எண்ணிக்கை நூற்று ஐம்பத்து மூன்று. இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. 12இயேசு அவர்களிடம், 'உணவருந்த வாருங்கள்' என்றார். சீடர்களுள் எவரும், 'நீர் யார்?' என்று இயேசுவிடம் கேட்கத் துணியவில்லை. ஏனெனில், அவர் ஆண்டவர் தாம் என்று அவர்கள் அறிந்து கொண்டார்கள். 13இயேசு அவர்கள் அருகில் வந்து, அப்பத்தை எடுத்து அவர்களிடம் கொடுத்தார்; மீனையும் அவ்வாறே கொடுத்தார். 14இவ்வாறு, இயேசு இறந்து உயிருடன் எழுப்பப்பட்ட பின்பு தம் சீடருக்கு இப்போது மூன்றாம் முறையாகத் தோன்றினார். 

இயேசுவும் பேதுருவும்

15அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம், 'யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், 'ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!' என்றார். இயேசு அவரிடம், 'என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்' என்றார்.

16இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், 'யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா?' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், 'ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே!' என்றார். இயேசு அவரிடம், 'என் ஆடுகளை மேய்' என்றார்.
17மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், 'யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா?' என்று கேட்டார். 'உனக்கு என்னிடம் அன்பு உண்டா?' என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், 'ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?' என்றார். இயேசு அவரிடம், 'என் ஆடுகளைப் பேணிவளர். 18'நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்' என்றார். 19பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்ன பின் பேதுருவிடம், 'என்னைப் பின் தொடர்' என்றார்.

இந்த பகுதியில் பேதுருவிக்கு ஆண்டவர் பொறுப்பாளர் பட்டம் கொடுக்கும் நிகழ்வை யோவான் அழகான கிரேக்க வார்த்தைகளில் காட்சிப்படுத்துகிறார். யார் இந்த பேதுரு என்ற சற்று பார்ப்போம். 

அ. சிமோன் பார்யோனா என்பது அரமேயத்தில் யோனாவின் மகன் சிமோன் என்று பொருள்படும் (Σίμων  Βαριωνᾶ). சீமோன் பேதுரு தனது சகோதரர் போல ஒரு கலிலேய மீனவராவர். நற்செய்தியாளர்கள் பல விதமான அழைப்புக் கதைகளை பேதுருவுக்கு கொடுக்கின்றனர். மாற்கு-லூக்காவின் காட்சிப்படி இவர் மீன்பிடித்தபோது இயேசுவால் அழைக்கப்படுகிறார் (மாற்கு 1,16-17: லூக்கா 5,1-11). யோவான் இவரை அவர் சகோதரர் அந்திரேயா இயேசுவிடம் அழைத்துவந்தாக காட்டுவார் (யோவான் 1,35-42). ஆக பேதுரு அழைக்கப்பட்ட முக்கியமான திருத்தூதர் என்பது புலப்படுகிறது. அனைத்து நற்செய்தியாளர்களும் பல விதமாக பேதுருவின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றனர். மத்தேயுவின் நற்செய்தியில் பேதுரு முக்கியமான பாத்திரம். முக்கியமான மூன்று பேர்களிலும் சரி, பன்னிருவரிலும் சரி மிக முக்கியமானவராக பேதுரு இருப்பார், பேசுவார். பிறகால முதல் திருச்சபையும் பேதுருவிற்கு முக்கியமான இடத்தை கொடுத்திருந்தது, பவுலடிகளார் கூட பேதுருவுடன் கருத்தில் முரன் பட்டாலும், அவரது முக்கியத்துவத்தை கேள்வியாக்கமாட்டார் என்பதை நோக்க வேண்டும் (1கொரி 15,5). 

ஆ. ஆளுமையைப் பொறுத்த மட்டில் ஒரு சாதாரண மீனவராக இருந்தார், அதீத ஈடுபாட்டாலும், இயேசுவின் மீது கொண்ட ஆழமான அன்பினாலும் சில வேளைகள் இடம் பொருள் ஏவல் மறந்து செயல் பட்டு இயேசுவிடம் அன்பு-குட்டு வாங்குவார். நற்செய்தியாளர்களும் சரி பவுலும் சரி பேதுருவை சுயநலவாதியாகவே அல்லது தீய என்னங்கள் உடையவராகவோ காட்ட மாட்டார்கள். பலவீனனான பேதுரு இயேசுவின் அசைக்க முடியாத கட்டளைத் தளபதி என்பதை புதிய ஏற்பாடு விதவிதமாக விவரிக்கிறது. ஆண்டவரை மறுதலித்த காட்சி உண்மையில் பேதுருவிற்கு எதிரான காட்சியல்ல மாறாக அது பேதுருவிற்கு முக்கியமான படிப்பினையும், சாட்சியமும் தந்த காட்சி. பேதுருவின் மறுதலிப்பைவிட அவரது அழுகையையும், விசுவாச பிரமாணங்களையும் நாம் உற்று நோக்க வேண்டும். 

இ. பேதுரு பல கடிதங்களை எழுதியதாக பாரம்பரியம் நம்புகிறது, அவற்றுள் இரண்டு புதிய ஏற்பாட்டில் தரப்படுத்தப்பட்டுள்ளது. பேதுரு உரோமைக்கு மறை பயணம் செய்ததாகவும், உரோமையில் ஏற்பட்ட பெரிய தீச் சம்பவத்தின் பின் (கி.பி 64) சிலுவையில் தழைகீழாக அறையப்பட்டு மறைசாட்சியானதாகவும் பாரம்பரியம் ஏற்றுக்கொள்கிறது. திருமுகங்களைவிட, பேதுருவின் பணிகள், பேதுருவின் வெளிப்பாடு, பேதுருவின் நற்செய்தி, பேதுருவின் போதனைகள், பேதுரு-பவுலின் பாடுகள், பேதுரு மற்றும் பன்னிருவரின் பணிகள், பேதுரு யாக்கோபுக்கு எழுதிய கடிதம், மற்றும் பேதுரு பிலிப்புக்கு எழுதிய கடிதம் என்பவை விவிலியத்திற்கு வெளியால் ஏற்றுக்கொள்ளப்படாமல் மறைந்திருக்கின்றன. இவற்றை பேதுரு எழுதாவிட்டாலும், அவை பேதுருவிற்கு அர்பணிக்கப்பட்டிருப்பதிலிருந்து அவரின் முக்கியத்துவம் கேள்வியின்றி புலனாகின்றது. 

அதிகமான அறிஞர்கள் இந்த பகுதியை பிற்சேர்ப்பு என்றே அழைக்கின்றனர். இவர்கள், இந்தப் பகுதி யோவான் நற்செய்திக்கு முடிவுரை போலவும், திருச்சபையை மையப்படுத்தியதாகவும் இருக்கிறது என்று காரணம் காட்டினாலும் சில முக்கியமான தற்கால, யோவான்-நற்செய்தி அறிஞர்கள் இப்பகுதி யோவான் நற்செய்தியின் பிரிக்க முடியாத பகுதியே என்றும் வாதாடுகின்றனர். இந்த நற்செய்தி இரண்டு முக்கியமான காட்சிகளை உள்ளடக்கியிருக்கிறது. வவ.1-14: இயேசுவின் காட்சி, வவ.15-24: பேதுருவுடனான இயேசுவின் உரையாடல். 

வவ. 1-3: கானாவூர் திருமண வீட்டுக் காட்சி போலுள்ளது. நேரம், இடம், காலம் சொல்லப்பட்டுள்ளது. திபேரியாக்கடல் என்று காட்டி உயிர்த்த ஆண்டவர் எருசலேமைவிட்டு வெளியில் தோன்றுவது காட்டப்படுகிறது. இயேசு தோன்றினார் என்று, கடவுளின் காட்சிக்கு பயன்படுத்தும் வார்த்தை பாவிக்கப்பட்டுள்ளது (φανερόω தோன்று). ஏழு சீடர்கள் இங்கே அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். நத்தானியேல் முதல் தடவையாக பெரிய நிகழ்வொன்றைக் காண்கிறார். மூன்றாவது வசனம் சீடர்கள் தங்கள் பழைய வாழ்விற்கு திரும்பியதை காட்டுவதாக அமைந்துள்ளது. சிலர், பேதுருவின் தலைமையில் புது மீன்பிடித்தலில் இவர்கள் ஈடுபடுகின்றனர் என்றும் இதனை பார்க்கின்றனர். ஆண்டவர் இல்லாமல் மீன்பாடு குறைவாக இருக்கிறது (மீன்பாடு சவுத்). 

வவ. 4-6: நற்செய்தியாளருக்கு (ஆசிரியர்) கரையில் நிற்பவர் இயேசு என்ற தெரிகிறது, சீடர்களுக்கல்ல. பகல் நம்பிக்கையை குறிக்கிறது. பிள்ளைகளே என்று நெருக்கமான வார்த்தையாலும், கேள்வி கேட்பதன் மூலம் தான் அவர்களின் சிக்கல்களை புரிந்துள்ளார் என்று காட்டுகிறார் (παιδίον பைதியொன்- பிள்ளாய்). வலப் பக்கம் அதிகமான மீன்கள் இயேசுவின் அதிகாரத்தையும் ஆசீர்களையும் குறிக்கின்றன. 

வவ. 7-14: அதிகமான மீன் பாடு இயேசுவை அன்புச் சீடருக்கு அடையாளம் காட்டுகிறது. கல்லறையில் நடந்ததைப் போல, இங்கே மீண்டுமாக அன்புச் சீடர்தான் இயேசுவை அடையாளம் காண்கிறார். பேதுரு அதே உற்சாகத்தை இங்கேயும் எண்பிக்கிறார். ஆர்வத்தோடும் கூட ஆடையணிவதில் முக்கியம் காட்டி ஆண்டவருக்கு மரியாதை செய்ய முயற்சிக்கிறார். ஆண்டவர் சீடர்களுக்கு அப்பமும் மீனும் கொடுப்பது அவர்தான் ஊற்றுக்களின் உறைவிடம் என காட்டுகிறது. பெரிய மீன்கள், 153 என்ற எண்ணிக்கை, வலைகள் கிழியவில்லை என்றுமாக சொல்லி வாசகர்களின் பார்வையை திருப்புகிறார் ஆசிரியர். சிலர் இந்த எண்ணிக்கையை உருவகமாக பார்க்கின்றனர். உதாரணமாக அகுஸ்தினார் இதனை நிறைவின் அடையாளமாக பார்கிறார், அலெக்சாந்திரிய சிறில் இதனை திருத்துவத்தின் அடையாளமாக அகுஸ்தினாருடன் சேர்ந்து பார்க்கிறார். சிலர் இதனை திருச்சபையின் நிறைவின் அடையாளமாக பார்க்கின்றனர். பேதுரு வலையை இழுத்தது பிடிப்பட்டவற்றை இயேசுவோடு இணைக்கிறது என்று பார்க்கலாம். இங்கே பாவிக்கப்பட்டுள்ள வினைச்சொல் இதனையே குறிக்கிறது (ἕλκω இழு). கேள்வி கேட்காமையும், ஆண்டவரோடு உணவருந்தியமையும், உயிர்த்த ஆண்டவர் சீடர்களுடன் நல்ல உறவை கொண்டிருந்ததைக் காட்டுகிறது. அத்தோடு சில பாடங்கள் இந்த நிகழ்வில் நற்கருணை ஏற்படுத்திய செபங்களையும் இணைத்து, இதனையும் நற்கருணைக் கொண்டாட்டமாக பாhக்கின்றன (வ.13). ஆண்டவர் மூன்றுமுறை தோன்றினார் என்பது பல முறை தோன்றினதை உறுதிப்படுத்துகிறது. 

வவ.15-17: 15வது வசனத்தில் தமிழில் இவர்களைவிட என்று மொழிபெயர்கப்பட்டுள்ளது, கிரேக்கத்தில் பலர்பால் வகையில் உள்ளது (πλέον τούτων இவைகளைவிட) ஆதலால் கிரேக்கத்தில் இது பேதுருவின் பழைய சீடத்துவத்தையோ அல்லது அவரது தொழில் துறைகளையோ அல்லது மற்றைய சீடர்களின் மேல் அவருக்கிருந்த அன்பையோ குறிக்கலாம், இவையனைத்தையும் அவர் துறக்கவேண்டும்.இங்கே ஆண்டவர் பேதுருவை தன்னுடைய ஆடுகளை மேய்குமாறு மூன்று தடவை கேட்கிறார், இது பேதுரு மூன்று தடவை ஆண்டவரை மறுதலித்ததை சரிபடுத்த என்று பலர் வாதிடுகின்றனர். இயேசு மூன்று தடவை பேதுருவை முழுப் பெயர் சொல்லி அழைத்தமை, அவரை நல்ல ஆயராக காட்டுகிறது. ஏற்கனவே நல்ல ஆயன் தன் ஆடுகளை பெயர்சொல்லி அழைப்பான் என்று யோவான் சொல்லி இருக்கிறார். அன்பைக் குறிக்க இரண்டு முக்கியமான சொற்கள் பாவிக்கப்பட்டுள்ளன (ἀγαπάω அகாபாஓ- அன்புசெய், φιλέω ஃபிலெஓ- நட்புகொள்). அதேபோல ஆடுகளைக் குறிக்கவும் இரண்டு வேறு வார்த்தைகள் பாவிக்கப்பட்டுள்ளன (ἀρνίον அர்னியோன்- செம்மறி, πρόβατον புரொபாடொன்- மந்தை). இந்த அமைப்புகள், சாதாரண ஒத்த கருத்துச் சொற் பாவனை என்று சில அறிஞர்கள் பார்க்கின்றனர், சிலர் இதனையும் அடையாளமாக பார்க்கின்றனர். அதிகமானவர்கள் இந்த பகுதியை பேதுரு பொறுப்பெடுக்கும் காட்சியாக காண்கின்றனர். உண்மையில், இந்த பகுதியின் முக்கியத்துவம் பேதுருவுக்கும் இயேசுவிற்குமான உறவாகும். இங்கே ஆண்டவர் தன் ஆடுகளை பேதுருவின் அதிகாரத்திலோ அல்லது தனி கவனிப்பிலோ விடவில்லை, மாறாக இயேசுவை அன்புசெய்வதென்றால், தன் ஆடுகளை பேணிகாப்பதே ஆகும் என்று விளங்கப்படுத்துகிறார். இயேசு மட்டுமே, என்றும் ஆண்டவர். 

வவ.18-19: இவ்வரிகள் பேதுருவின் சாட்சிய மரணத்தை பற்றியது என்று திருச்சபை பாரம்பரியமாக நம்புகிறது. கைகளை விரித்துக்கொடுத்தல் சிலுவை மரணத்தை குறிக்கலாம் (ஒப்பிடுக: வி.ப 17,12: எசா 65,2).  இடையைக் கட்டுதல் ஒருவருடைய தனிச் சுதந்திரத்தை குறிக்கிறது. இயேசுவைப் போல் பேதுருவும் தம் மரணத்தால் கடவுளை மாட்சிபடுத்தினார் என்கிறார் ஆசிரியர். இறுதியான வசனம் அனைத்து சீடர்களுக்கும் உரியது. பேதுருவின் அதிகாரம் அவரது தலைமைத்துவத்தில் இருந்து வரவில்லை மாறாக அவர் இயேசுவோடு கொண்ட உறவிலும், நட்பிலும் அவரது சாட்சியத்திலிருந்தும் வருகிறது என்பது யோவானின் ஆழமான போதனை. 

ஆண்டவர் இயேசு மட்டும்தான் ஆண்டவர், ஆடுகளுக்கிடையில் வெள்ளாடோ, கறுப்பாடோ செம்மறியோ கிடையாது. ஆடுகள் என்பதும் உருவகம் மட்டுமே. அனைவரும் சீடர்கள். இயேசுவுடன் உள்ள உறவே பணியை தெரிவு செய்கிறது. இந்த பணி இயேசுவை பற்றிக்கொள்ள கேட்கிறது, அதிகாரத்தையல்ல. பேதுருவின் அதிகாரம் என்ற மாயையை பார்க்காமல் அவர் இயேசுமேல் கொண்ட நம்பிக்கையையும், அவர் காட்டிய அன்பையும் பார்த்து வாழ்வோம்.    

ஆண்டவரே, அனைத்தையும் விட உம்மை அன்பு செய்வது கடினமாக இருக்கிறது, 
அதனைச் செய்ய நம்பிக்கையையும் வல்லமையையும் தாரும். ஆமென். 

மி. ஜெகன்குமார்அமதி
உரோமை, இத்தாலி
06, சித்திரை, 2016.

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...