வெள்ளி, 21 மார்ச், 2025

தவக்காலம் மூன்றாம் வாரம் (இ),  3rd Sunday of Lent 2025 C Sunday, 23 March 2025






 தவக்காலம் மூன்றாம் வாரம் (), 

3rd Sunday of Lent 2025 C

Sunday, 23 March 2025







முதல் வாசகம்: விடுதலைப் பயணம் 3,1-8.13-15

பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 103

இரண்டாம் வாசகம்: 1கொரிந்தியர் 10,1-6.10-12

நற்செய்தி: லூக்கா 13,1-9


மி. ஜெகன்குமார் அமதி,

Shrine of Our Lady of Good Voyage, 

Chaddy, Velanai, Jaffna,

Friday, 21 March 2025



வி. 3:1-8.13-15

1மோசே மிதியானின் அர்ச்சகராகிய தம் மாமனார் இத்திரோவின் ஆட்டு மந்தையை மேய்த்து வந்தார். அவர் அந்த ஆட்டு மந்தையைப் பாலை நிலத்தின் மேற்றிசையாக ஓட்டிக் கொண்டு கடவுளின் மலையாகிய ஓரேபை வந்தடைந்தார். 2அப்போது ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார். அவர் பார்த்தபோது முட்புதர் நெருப்பால் எரிந்து கொண்டிருந்தது. ஆனால் அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை. 3'ஏன் முட்புதர் தீய்ந்துபோகவில்லை? இந்த மாபெரும் காட்சியைப் பார்ப்பதற்காக நான் அப்பக்கமாகச் செல்வேன்' என்று மோசே கூறிக்கொண்டார். 4அவ்வாறே பார்ப்பதற்காக அவர் அணுகி வருவதை ஆண்டவர் கண்டார். 'மோசே, மோசே' என்று சொல்லிக் கடவுள் முட்புதரின் நடுவிலிருந்து அவரை அழைக்க, அவர் 'இதோ நான்' என்றார். 5அவர், 'இங்கே அணுகி வராதே உன் பாதங்களிலிருந்து மிதியடிகளை அகற்றிவிடு; ஏனெனில் நீ நின்று கொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம்' என்றார். 6மேலும் அவர், 'உங்கள் மூதாதையரின் கடவுள், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் நானே' என்றுரைத்தார். மோசே கடவுளை உற்று நோக்க அஞ்சியதால் தம் முகத்தை மூடிக்கொண்டார். 7அப்போது ஆண்டவர் கூறியது: எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்; அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்; ஆம், அவர்களின் துயரங்களை நான் அறிவேன். 8எனவே எகிப்தியரின் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அந்நாட்டிலிருந்து பாலும் தேனும் பொழியும் நல்ல பரந்ததோர் நாட்டிற்குஅதாவது கானானியர், இத்தியர், எமோரியர், பெரிசியர், இவ்வியர், எபூசியர் வாழும் நாட்டிற்குஅவர்களை நடத்திச் செல்லவும் இறங்கிவந்துள்ளேன். 13மோசே கடவுளிடம், 'இதோ! இஸ்ரயேல் மக்களிடம் சென்று உங்கள் மூதாதையரின் கடவுள் என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார் என்று நான் சொல்ல, 'அவர் பெயர் என்ன?' என்று அவர்கள் என்னை வினவினால், அவர்களுக்கு என்ன சொல்வேன்?' என்று கேட்டார். 14கடவுள் மோசேயை நோக்கி, 'இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே' என்றார். மேலும் அவர், 'நீ இஸ்ரயேல் மக்களிடம், 'இருக்கின்றவர் நானே' என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்' என்றார். 15கடவுள் மீண்டும் மோசேயை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: 'நீ இஸ்ரயேல் மக்களிடம், 'உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர்ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்' என்று சொல். இதுவே என்றென்றும் என்பெயர்; தலைமுறை தலைமுறையாக என் நினைவுச் சின்னமும் இதுவே!


 முதல் ஐந்து நூல்களில் (தோரா תּוֹרָה) இரண்டாவதும் முக்கியமானதுமான இந்த நூல், விடுதலைப்பயண நூல் என்று செப்துவாயின்துவை ஒட்டி அழைக்கப்படுகிறது. செப்துவாயின்ந்தின் ἔξοδος-எக்ஸோதோஸ், என்றால் புறப்பட்டு போதல் என்று பொருள். மூல எபிரேய மொழியில் இது שְׁמוֹת ஷெமோத்- பெயர்கள் என்று அழைக்கப்படுகிறது. இதன் ஆசிரியரோ அல்லது காலமோ இலகுவில் கண்டு பிடிக்கப்பட முடியாதவை. பாரம்பரியமாக இதனை மோசே எழுதினார் எனவும், இது ஒரு முழுப்புத்தகம் எனவும் நம்பப்பட்டது. இதற்கான வாய்ப்புக்கள் மிக மிக குறைவாகவே உள்ளன. இஸ்ராயேல் மக்களுடைய விடுதலைப்பயணத்தை முன்னிட்டு இதன்காலத்தை கணிக்க சிலர் எண்ணுகின்றனர். ஆனால் இஸ்ராயேல் மக்கள் எப்போது எகிப்திலிருந்து வெளியேறினர் என்பதை கணிப்பதும் மிகவும் கடினம். வி. நூல் எகிப்திய மன்னர்களின் பெயர்களைத் தரவில்லை. மாறாக, அவர்களை 'பாரவோன்' என்றே அழைக்கிறது. இது ஒரு பொதுப்பெயர், தமிழில் அரசன் அல்லது அரச அதிகாரம் எனப் பொருள் கொள்ளலாம். கிட்டத்தட்ட கி.மு 1300களில் இஸ்ராயேலர் வெளியேறி இருக்கலாம்

 வி. நூல் இரண்டு இறையியல் வாதங்களை முன்வைக்கிறது

). கடவுளுடனான உறவின் தொடக்கம் 

). கடவுள் இஸ்ராயேலருடன் செய்து கொண்ட உடன்படிக்கை. வி. நூல் பல வரலாற்று பதிவுகளைக் கொண்டிருந்தாலும், இது உண்மையில் ஒரு இறையியல் புத்தகம். ஒரு விசேட தேவைக்காக எழுதப்பட்டது என்பதை விசுவாச வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்


.1: ஆபிரகாமிற்கு கெத்தூராவினால் பிறந்த ஒருவரே மிதியானியரின் குலமுதுவர் என 

இஸ்ராயேலர் கருதுகின்றனர். பாரசீக வளைகுடாவின் வடமேற்கு திசையில் உள்ளதே இந்த நிலப்பகுதி. மோசே பாரவோனிடம் தப்பி இங்கேயே வருகிறார், இங்குதான் திருமணமும் செய்து கொள்கிறார். இத்திரோ எந்த கடவுளின் குரு என்பது தெளிவாக இல்லை, எண்ணிக்கை நூல் (10,29) வரை இரகுவேல் என்கிறது. இவர்கள் இருவரா அல்லது ஒருவரா என்பதும் தெளிவில்லை. சிலர் கடவுளைத்தான் மோயிசனுக்கு முன்னர் மிதியானியர் வழிபட்டனர் என்கின்றனர். பெயர்கள் பலவாயினும் கடவுள் ஒருவராயிருப்பதற்கு பல வாய்புக்களை இங்கு காணலாம். ஒரேபு, கடவுளின் மலை என அழைக்கப்படுகிறது, சீனாய் இதற்கு இன்னொரு பெயர். மந்தைகளை ஓட்டிக்கொண்டு மலைக்கு வருவது பின்னர் மக்களை கடவுளிடம் கொண்டுவருவதை குறிக்கலாம்


வவ. 2-3: முதலில் தோன்றியது கடவுளின் தூதரே, இவர் நெருப்புச் சுடரில் தோன்றினாரா அல்லது நெருப்புச் சுடராகத் தோன்றினாரா என்பதில் மயக்கம் உள்ளது. இந்த முற்புதர் (סְּנֶה செனே) இஸ்ராயேலரைக் குறிக்கலாம். וַיֵּרָא מַלְאַךְ יְהוָֹה אֵלָיו வாய்யெரா' மல்'க் அதோனாய் 'எல்லாவ்- ஆண்டவருடைய தூதர் அவருக்கு தோன்றினார்

 நெருப்பு விடுதலைப் பயண நூலில் கடவுளின் முக்கியமான ஒரு உருவகம். முட்புதர் எரிவது இஸ்ராயேலரின் துன்பத்தைக் குறிக்கலாம். தீய்ந்துபோகவில்லை என்பது மக்கள் துன்பத்தால் அழியார் என்பதைக் குறிக்கலாம். இங்கே மோசே மட்டும் இருப்பதனால் அவர் தனக்கு தானே பேசுகிறார் என எடுக்கலாம்.


வவ. 4-5: இப்போது மோசேயைக் காண்பது கடவுள், தூதர் அல்ல. முதல் ஏற்பாட்டில் பல வேளைகளில் கடவுளும் தூதர்களும் மாறி மாறி வருவதனைக் காணலாம். கடவுள் மோசேயை அழைப்பதும், மோசே இதோ என சொல்வதும் ஓர் இறைவாக்கினரின் அழைப்புப்போல தெரியலாம். கடவுளின் தூய்மை என்பதும் விடுதலைப் பயண நூலின் இன்னொரு முக்கிய செய்திபாதணிகளைக் கழற்றச் சொல்வது இதனையே குறிக்கிறது. பாதணிகள் அக்கால மக்கள் பாவித்த மிக விலைகுறைந்த சாதாரண அணிகலன். விவிலியத்தில் பாதணிகளைக் கழற்றுவது பல அர்த்தங்களைக் கொடுக்கும். இங்கே மரியாதையைக் காட்ட இவை கழற்றப்படுகின்றன. யோசுவாவும் இதனைச் செய்தார் (யோசுவா 5,15). ரூத்து புத்தகத்தில் பாதணிகளைக் கழற்றல் வேறு அர்த்தத்தைக் கொடுக்கிறது (ரூத் 4,6-10). ஒரேபு மலை, மோசேயின் வருகைக்கு முன்பே புனிதமான இடமாக இருந்திருக்க வேண்டும். கடவுளின் பிரசன்னம் இந்த இடத்தில் நிலையாக இருந்திருக்கலாம். மோசே வரலாற்றில் தோன்றிய ஒரு முக்கியமான மனிதர். கடவுள் மோசேயை தெரிவதற்கு முன் இந்த இடத்தில் வேறு மனிதர்கள் ஆண்டவரை அறிந்திருந்திருக்கலாம் என்ற வாதம் ஒன்று பிற்காலத்தில் முன்வைக்கப்படுகிறது. இந்த ஒரேபு மலை பலருடைய வழிபாட்டு இடமாகக் கூட இருந்திருக்கலாம்


வவ. 6-8: கடவுள், தன்னை மூதாதையரின் கடவுள் எனச்சொல்லி, தனக்கு வரலாறு கட்டுப்பட்டது என்கிறார். ஆபிரகாமின், ஈசாக்கின், யாக்கோபின் கடவுள் என்பது, கடவுளுக்கான முக்கியமான சொல்லணிமுகத்தை மறைத்தல் பலவேளைகளில் மக்கள் காட்டும் மரியாதையின் உருவகம். אָנֹכִי אֱלֹהֵי אָבִיךָ 'அனோக்கி 'எலோஹெ 'அவிகா- நான் உன் மூதாதையரின் கடவுள். கடவுளுடைய முகம் மிக தூய்மையானதாக இருக்க, அதனை மோசேயால் நோக்க முடியாமல் போகிறது. கடவுளுக்கும் மனிதருக்குமிடையிலான தூரம் இப்படியாக காட்டப்படுகிறது. יַּסְתֵּר מֹשֶׁה פָּנָיו யாஸ்தெர் மோஷேஹ் பானாவ்- மோசே அவர் முகத்தை மறைத்துக்கொண்டார்


 கடவுள் மூன்று வினைச்சொற்களை மக்களின் துன்பங்களின் பொருட்டு பாவிக்கிறார். அவை: துன்பங்களைப் பார்த்தேன், அழுகையைக் கேட்டேன், வேதனையை அறிவேன். இஸ்ராயேலின் கடவுள் மக்களின் உணர்வுகளை புரிந்தவராக காட்டப்படுகிறார்.   

 கடவுளின் இறங்கிவருதல் இரண்டு காரணங்களைக் கொண்டுள்ளது: எகிப்தியரிடமிருந்து மீட்கவும், பாலும் தேனுமுள்ள நாட்டுக்கு அழைத்துச்செல்வதும் ஆகும். கானானை பாலும் தேனும் உள்ள நாடாக காட்டுவது, பல அர்த்தங்களைக் கொடுக்கிறன. இவை ஒரு வளமான நாட்டையோ அல்லது கடவுளுடைய தாய்மையின் குணத்தையோ காட்டலாம். இந்த மக்கட் கூட்டம் 

இந்நிலப்பரப்பில் இருந்தவர்களைக் குறிக்கிறது. இஸ்ராயேல் மக்களும் வந்து குடியேறியவர்கள் என்பதனையும் குறிக்கிறது. கானானியர் (הַֽכְּנַעֲנִי֙ ஹக்கெனா'னி), இத்தியர் (הַ֣חִתִּ֔י ஹஹித்தி), எமோரியர் (הָאֱמֹרִי֙ ஹப'ஏமோரி), பெரிசியர் (הַפְּרִזִּי ஹப்பெரிட்சி), இவ்வியர் (הַחִוִּ֖י ஹஹிவ்வி), எபூசியர் (הַיְבוּסִי ஹயெவூசி), ஆக இஸ்ராயேல் நாடு, அவர்களுக்கு முன் இன்னொருவருடையது. யாரை எங்கே வைப்பதென்று கடவுள்தான் தீர்மானிக்கிறார் எனலாம். நாடு, நிலம், மண் கடவுளுடையது. இதனால் புறவினத்தவர் என்று யாருமில்லை. அனைவரும் இன்னொரு வரியில், குடியேறிகளே. அகதிகள், நாடற்றவர்கள், உரிமை மக்கள் என்பதெல்லாம் வெறும் வார்த்தை பிரயோகங்களே


வவ.9-12: ஆண்டவரின் உரையாடல் தொடர்கிறது. ஆண்டவர் மோசேயை எகிப்திய பாரவோனிடம் செல்லச் சொல்லி தூண்டுகிறார். கடவுளுக்கு மக்களின் அழுகை கேட்கிறது. மோசேக்கு பாரவோனிடம் செல்ல தனக்கு என்ன தகுதி என்பது தெரியவில்லை. இந்த கேள்விக்கு விடைகொடாமல் கடவுள். மோசேக்கு இரண்டு அடையாளங்களைக் கொடுக்கிறார். . அவர் மோசேயோடு இருப்பார், . அவர்கள் மீண்டு வரும்போது இந்த மலையில் கடவுளுக்கு வழிபாடு செய்வார்கள். இதுதான் மோசேக்கான அடையாளமாக மாறிவிடுகிறது


வவ. 13-15: மோசேயின் நியாயமான கேள்வியால், மக்களின் நம்பாத் தன்மையை, அழகாக கேள்வியாக்குகிறார் ஆசிரியர். கடவுள் என்பவர் கடந்து இருக்கிறவர். இதனால் அவரை அறிவது அறிவுக்கு அபாற்பட்டது. இது அக்காலத்திலேயே விவிலிய ஆசிரியருக்கு நன்கு தெரிந்திருக்கிறது. மோசேயின் கேள்வி ஒவ்வொரு நம்பிக்கையாளரின் கேள்வியாக இருக்கும் என தென்படுகிறது

 14வது வசனம் விவிலியத்தில் மிக மிக முக்கியமான வசனம். இங்கு கடவுள் தன்னுடைய பெயரை முதல் முதல் வெளிப்படுத்துகிறார். 'இருக்கிறவராக இருக்கிறவர் நாமே', என்பதை பலவாறு மொழிபெயர்கலாம் (אֶהְיֶה אֲשֶׁר אֶהְיֶה எஹ்யே அஷெர் எஹ்யே). வினையெச்ச சொல்லே இங்கே பாவிக்கப்படுகிறது, ஆனால் எபிரேயத்தில் வினைமுற்று, இறந்த காலத்தையும் எதிர்காலத்தையும் குறிக்கும். ஆக இங்கே கடவுள் காலத்தை கடந்தவர் என்பதை குறிக்கிறார். யோவான் நற்செய்தியிலும் பல வேளைகளில் இயேசு 'நானே' என்பதை கூறுவதை நினைவில் கொள்வோம். காலங்களும் நேரங்களும் மனிதனுடையவை. ஆசிரியர் காரணத்தோடே பெயர்தெரியாத பாரவோனையும் பெயர்சொன்ன கடவுளையும் விவரிக்கின்றார் என நினைக்கிறேன். கடவுளாகிய ஆண்டவர் என்பது எபிரேயத்தில் (יְהוָה אֱלֹהִים யாவே எலோகிம்) இதில் முதலாவது இறை பெயர், மரியாதையின் நிமித்தம் உச்சரிக்கப்படுவதில்லை. אֶהְיֶה שְׁלָחַנִי אֲלֵיכֶם׃ 'எஹ்யெஹ் ஷெலாஹனி 'அலெகெம்- இருக்கிறவர் என்னை உங்களிடம் அனுப்பினார்



 ஒரேபு மலையைப் பற்றி மேலும் அறிய இங்கே சொடுக்கவும்: (http://www.biblearchaeology.org/post/2008/11/17/What-Do-Mt-Horeb2c-The-Mountain-of-God2c-Mt-Paran-and-Mt-Seir-Have-to-Do-with-Mt-Sinai.aspx



திருப்பாடல் 103

கடவுளின் அன்பு

(தாவீதுக்கு உரியது)


1என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு

2என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே

3அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். 4அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார்

5அவர் உன் வாழ்நாளை நலன்களால் நிறைவுறச் செய்கின்றார்; உன் இளமை கழுகின் இளமையெனப் புதிதாய்ப் பொலிவுறும்

6ஆண்டவரின் செயல்கள் நீதியானவை ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் அவர் உரிமைகளை வழங்குகின்றார்

7அவர் தம் வழிகளை மோசேக்கு வெளிப்படுத்தினார்; அவர் தம் செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார்

8ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.

9அவர் எப்பொழுதும் கடிந்து கொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர்

10அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை

11அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவுபோன்று உயர்ந்தது. 12மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார்

13தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இரங்குகிறார்

14அவர் நமது உருவத்தை அறிவார்; நாம் தூசி என்பது அவர் நினைவிலுள்ளது

15மனிதரின் வாழ்நாள் புல்லைப் போன்றது; வயல்வெளிப் பூவென அவர்கள் மலர்கின்றார்கள். 16அதன்மீது காற்றடித்ததும் அது இல்லாமல் போகின்றது அது இருந்த இடமே தெரியாமல் போகின்றது

17ஆண்டவரது பேரன்போ அவருக்கு அஞ்சுவோர்மீது என்றென்றும் இருக்கும்; அவரது நீதியோ அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள்மீதும் இருக்கும்

18அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடித்து அவரது கட்டளையின்படி நடப்பதில் கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும்

19ஆண்டவர் தமது அரியணையை விண்ணகத்தில் நிலைநிறுத்தியுள்ளார்; அவரது அரசு அனைத்தின்மீதும் பரவியுள்ளது

20அவர்தம் சொற்கேட்டு நடக்கும் வலிமைமிக்கோரே! ஆண்டவரின் தூதர்களே! அவரைப் போற்றுங்கள்

21ஆண்டவரின் படைகளே! அவர் திருவுளப்படி நடக்கும் அவர்தம் பணியாளரே! அவரைப் போற்றுங்கள்

22ஆண்டவரின் ஆட்சித் தலத்தில் வாழும் அனைத்துப் படைப்புகளே! ஆண்டவரைப் போற்றுங்கள்! என்னுயிரே! ஆண்டவரைப் போற்றிடு!


 திருப்பாடல் 103, தாவிதின் பாடல் என்று தலைப்பிடப்பட்டுள்ளது, ஆனால் இந்த தலைப்பு பிற்கால விளக்கவுரையின் ஓர் அங்கமாக இருக்கலாம். இந்த திருப்பாடலை நான்காம் புத்தகத்தின் ஒரு அங்கமாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கடவுளை - தந்தை பண்புமிக்க, என்றென்றும் அரசாள்கிற தலைவராக காண்கிறார் ஆசிரியர். இருபத்திரண்டு வரிகளைக் கொண்டுள்ள இந்தப் பாடல் எபிரேய புகழ்ச்சிப் பாடல் வகையை சார்ந்தது. ஆசிரியர் தன் சுயத்தை, ஒரு ஆளாக வர்ணித்து அதற்கு தானே கட்டளையிடுவதைப் போல இந்த பாடலை அமைத்தாலும், இந்த கட்டளை ஒவ்வொரு கடவுளின் பிள்ளைக்கும் பொருந்தும் படியாக அமைந்துள்ளது. எபிரேய கவிநடையான திருப்பிக்கூறல் மற்றும் ஒத்த கருத்துச் சொற்களின் பாவனைகள் இந்த பாடலிலும் மீண்டும் மீண்டும் வலம் வருகின்றன


.1: இந்த முதலாவது வரியில் ஆசிரியர் தன் உயிருக்கு கட்டளையிடுகிறார். உயிரையும் (נֶפֶשׁ நெபெஷ்- ஆன்மா, உயிர்), தனது முழு உள்ளத்தையும் (כָל־קְ֝רָבַ֗י கோல்-கெராவாய் அனைத்து உள்ளுளவை) இரண்டாவது ஆளாக பாவித்து கட்டளை கொடுக்கிறார். ஆண்டவரும் அவரது திருப்பெயரும் ஒரே அர்;த்தத்திலே முதல் ஏற்பாட்டில் பாவிக்கப்படுகின்றன


.2: ஆண்டவருடைய கனிவான செயல்களை மறக்கவேண்டாம் என்ற கட்டளை கொடுக்கப்படுகிறது. மறதி, மனித குலத்தின் இக்கால சாபமல்ல, மாறாக அக்காலத்திலும் அது பயங்கரமாக இருந்துள்ளது என்பதை இது காட்டுகிறது. கனிவான செயல்கள் என்பது (גְּמוּלָיו கெமூலெவ்- அவர் பிரதிபலன்கள்), ஆண்டவரின் நலன்தரும் செயல்கள் என்ற பொருளைக் கொடுக்கிறது. ஆண்டவரின் கனிவான செயல்களை மறத்தல், ஆண்டவரையே மறப்பதற்கு சமமாகும்


.3: குற்றங்களையும் நோய்களையும் ஒரே வரியில் இணைத்து இவை இரண்டிற்கும் தொடர்புள்ளது போல காட்டுகிறார். குற்றங்களுக்காகத்தான் நோய்கள் வருகின்றன என்ற ஒரு முதல் ஏற்பாட்டு சிந்தனையை இந்த வரியில் காணலாம். இதனால் மன்னிப்பும் (סָלַח சாலாஹ்- மன்னித்தல்) குணமாக்கலும் (רָפָא ராபா' குணப்படுத்தல்) ஆண்டவரின் செயற்பாடாகின்றன


.4: படுகுழி என்பது (שַׁחַת ஷாஹாத் படுகுழி) ஒரு முடிவில்லாத பள்ளத்தை குறிக்கிறது. இதனைப் பற்றி பல தரவுகளை முதல் ஏற்பாட்டில் காணலாம். இந்த பள்ளத்திற்குள் உயிர்கள் செல்கின்றன என்ற நம்பிக்கையையும் இஸ்ராயேல் மக்கள் கொண்டிருந்தனர். பிற்காலத்தில் நரகம் என்ற கருவும் இதிலிருந்து உருவானதே. இந்த பள்ளத்திற்குள் செல்பவர்கள் வெளியில் வருவதில்லை ஆனால் கடவுள் ஒருவருக்கே இந்த பள்ளத்தின் மீது அதிகாரம் இருக்கிறது என்பதையும் 

இஸ்ராயேலர்கள் நம்பினர். சீயோல் (שְׁאוֹל ஷெ'ஓல்- பாதாளம்) என்பதும் இந்த பள்ளத்திற்கான 

இன்னொரு சொல்

  பேரன்பும் இரக்கமும், கடவுள் தரும் மணிமுடியாக வருவது எத்துணை அழகான அடையாளங்கள் (חֶסֶד וְרַחֲמִים ஹெசெத் வெரஹாமிம்- பேரன்பும் இரக்கமும்). இவை இரண்டும் பணம் கொடுத்தும் வாங்க முடியாத இறையாசீர்கள் என்பதால் இதனை மணி முடியாகக் காண்கின்றார் ஆசிரியர்


.5: வாழ்நாள் நலன்களால் நிறைக்கப்படுகின்ற போது அது வளமானதாகவும் நிம்மதியானதாகவும் மாறுகின்றது. இதனை தரவல்லவர் கடவுளே என்பது ஆசிரியரின் நம்பிக்கை கலந்த அனுபவம். நலன்கள் என்பதற்கு எபிரேய விவிலியம் நல்ல அணிகலன்களால் (בַּטּוֹב עֶדְיֵךְ பாதோவ் 'எத்யெக்- உம் நல் அணிகளன்களால்) என்று சொல்லிடுகிறது. அணிகலன்கள் இங்கே உருவகங்களாக பாவிக்கப்பட்டுள்ளன

 இளமை கழுகின் இளமையாக மாறும். இது கழுகு தன் இறகுகளை புதுபித்து, மீண்டும் மீண்டும் தன் வல்லமையை புதுப்பிக்கும் இயற்கையான செயற்பாட்டைக் குறிக்கிறது. (נֶּשֶׁר நெஷெர்- கழுகு


.6: ஆண்டவரின் செயல்கள் என்றும் நீதியானவை, அதற்கு நல்ல உதாரணம் அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் நீதியை வழங்குகின்றார். ஒடுக்கப்பட்டவர்கள் பல முகங்களில் அக்காலத்தில் இருந்திருக்கிறார்கள், இவர்களுக்கு நீதி என்பது எட்டாக்கனியாகவே இருந்திருக்கிறது. பலர் தங்கள் தேவைகளுக்காவே, இவர்களுக்கு உதவி செய்ய முன்வருவர் ஆனால் உண்மையாக இவர்களுக்கு உரிமையளிப்பவர் கடவுள் ஒருவரே என்பது இங்கே புலப்படுகிறது. (עֲשׁוּקִים 'அஷுக்கிம்- ஒடுக்கப்பட்டோர்).


.7: ஆண்டவர் மேசேக்கு தன் வழிகளை காட்டினதும், இஸ்ராயேலருக்கு தம் செயல்களை காண்பித்ததும் ஒரே செயற்பாடாக காட்டப்பட்டுள்ளன. இந்த செயற்பாடுகளை என்னவென்று ஆசிரியர் காட்டவில்லை ஆனால் சூழலியலில் அவற்றை மீட்புச்செயல்கள் என எடுக்கலாம். דְּרָכָיו தெராகாவ்- அவர் பாதைகள்.


.8: ஆண்டவரின் சில முக்கிய பண்புகள் விளக்கப்பட்டுள்ளன. இரக்கமும் அருளும் ஆண்டவரின் பண்புகள் (רַחוּם וְחַנּוּן {ஹம் வெஹநூன்- இரக்கமும் அருளும்). இதற்கு ஒத்த கருத்துச் சொற்களாக நீடிய பொறுமையும், பேரன்பும் காட்டப்படுகின்றன. நீடிய பொறுமைக்கு, எபிரேய விவிலியம், 'கோபத்தில் மெதுமை' என்ற சொல்லை பயன்படுத்துகின்றது (אֶרֶךְ אַפַּיִם 'எரெக் 'அப்பிம்- மூக்கில் மெதுமை). ஆண்டவர் கோபம் கொள்ளாதவர் என்பது இங்கே காட்டப்படவில்லை, மாறாக அவர் மெதுவாக கோபம் கொள்பவர் என்பதே இங்கே சொல்லப்படுகிறது. பேரன்பு (רַב־חָסֶד ராவ்-ஹாசெத் அதிகமான அன்பு), ஆண்டவருடைய அடையாளம். பின்வரும் வரிகள் இந்த பண்புகளை விளக்குகின்றன:


.9: எப்போதும் கடிந்து கொள்வதும், சினம் கொள்வதும் கடவுளுடைய பண்பல்ல என்கிறார் ஆசிரியர். ஆண்டவர், மனிதரின் பாவங்களுக்காக சினம் கொள்வதும் அவர்களை கடிவதும் பல வேளைகளில் விவிலியத்தில் காட்டப்பட்டுள்ளன. இது சிலவேளைகளில் கடவுளின் மென்மையை குறைவாக எடைபோட காரணமாக அமைந்துவிடக்கூடாது என்பதில் ஆசிரியர் கரிசனையாக 

இருக்கிறார். ஆண்டவரின் கோபமும், கடிதலும் தேவையான நேரங்களில் நிச்சயமாக இருக்கும் என்பதை ஆசிரியர் மறுக்கவில்லை.


.10: நம் பாவங்களும் குற்றங்களும் நியாயப்படுத்தப்பட முடியாதவை. அவை கழுவப்பட வேண்டியவை. கடவுள் முன்னிலையில் அனைவரும் பாவிகளாக இருக்கின்ற படியால், யாரும் கடவுள் முன் தங்களை நியாயப்படுத்த முடியாது. நியாயம் என்று சொன்னால் அது, கடவுள் காட்டும் இரக்கமே என்று அழகாக காட்டுகிறார் ஆசிரியர்


.11: இந்த பேரன்பு எந்தளவு பெரியது என்று விவரிக்கின்றார் ஆசிரியர். மண்ணுலகிற்கும் விண்ணுலகிற்கும் இடையிலான உயரம்தான் மிக மிக உயரமான தூரம் என்று அக்கால மக்கள் கருதினர். அவ்வளவு பெரியது கடவுளின் அன்பு என்கிறார் ஆசிரியர் (שָׁמַיִם עַל־הָאָרֶץ ஷமாயிம் 'அல்-ஹா'ஆரெட்ஸ்- வானமும் வையமும்). இது கடவுளின் இரக்கத்திற்கான ஒரு செங்குத்து அடையாளம்


.12: இதில் கடவுளின் மன்னிப்பை காட்ட ஒரு கிடைமட்ட அளவு பாவிக்கப்பட்டுள்ளது. கடவுளின் மன்னிப்பு தூரத்தை கணக்கிட முடியாது என்பது இங்கே காட்டப்பட்டுள்ளது. அதாவது 

நெடுந்தூரத்திற்கு நம் பாவங்களை கடவுள் துரத்தி விடுகிறார் என்பது காட்டப்பட்டுள்ளது. மேற்கிற்கும் கிழக்கிற்கும் இடையிலான கிடைமட்ட தூரம்தான் அக்காலத்தில் அறியப்பட்ட மிக பெரிய தூரம், அவ்வளவிற்கு கடவுள் பாவங்களை துரத்திவிடுகிறார் என்று கடவுளின் இரக்கத்தை விவரிக்கிறார் ஆசிரியர். (מִזְרָח מִמַּעֲרָב மிட்ஸ்ராஹ் மிம்மா'அராவ்- கிழக்கிலிருந்து மேற்கு). 


.13: இரக்கமுள்ள தந்தை என்பது இஸ்ராயேல் சமுதாயத்தில் தெரிந்திருந்த அழகான அடையாளம். தந்தை (אָב 'அவ்- அப்பா) என்பவர் செமித்திய குடும்பங்களில் மிக மிக முக்கியமானவர். தமிழ் சமுதாயத்தில் தாயைப் போல, செமித்திய சமுதாயத்தில் தந்தைதான் வீட்டிலும், வெளியிலும் மிக முக்கியமானவர். ஒருவிதத்தில் தந்தை ஒரு குடும்பத்தில் கடவுள் போல கருதப்பட்டார். தந்தையின் பேச்சு மற்றும் அவரின் முடிவுகள்தான் குடும்பத்தின் இறுதி முடிவாக கருதப்பட்டது. இதனால் தந்தை இரக்கம் காட்டும் போது, அந்த இரக்கம் பலமான இரக்கமாக கருதப்பட்டது. இந்த நன்கு தெரிந்த உருவகத்iதை, கடவுளுக்கு ஒப்பிட்டு, கடவுளின் இரக்கம் தமக்கு அஞ்சுவோர் மீது, தந்தையின் இரக்கம் போல இருக்கும் என்கிறார் ஆசிரியர். இதனை ஒரு உருவக பாவனை என எடுக்கலாம்


.14: மனிதர்களின் அடையாளம் மற்றும் உருவம் என்பது, தூசி (עָפָר அபார்). இந்த நம்பிக்கை தொடக்கநூலில் இருந்து உருவாகிறது. கடவுள் மனிதரை தூசியிலிருந்து படைத்தார், இதனால் அவர்கள் தூசிக்கு திரும்புவர் என்பதும் இஸ்ராயேலரின் நம்பிக்கை. தூசி, பாலஸ்தீனாவிற்கு மிகவும் நெருங்கிய மற்றும் அறியப்பட்ட பொருள். பாலஸ்தீனத்தின் வரட்சியான காலநிலை, இந்த தூசியை மிகவே உருவாக்கியது. காற்றினால் தூக்கியெறியப்படும் இந்த தூசி, எதற்கும் உதவாதது என்பது, அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனைப்போன்றது மனிதரின் உருவம் என்கிறார், ஆசிரியர்


வவ.15-16: புல்லும் (חָצִיר ஹாட்சிர்- புல்), வயல்வெளி பூவும் (צִיץ הַשָּׂדֶה ட்சிட்ஸ் ஹஸ்ஸாதெஹ்- வயல்வெளி பூ) அழகானதாக இருப்பினும், அவை நிலையில்லாதவை. அவை மலர்கின்ற வேகமும் அவற்றின் உதிர்தலின் வேகமும் இங்கே ஒப்பிடப்படுகின்றன. காற்று என்பது மிகவும் பலமான ஒரு பௌதீக சக்தி, இந்த சக்தியின் முன்னால் புல்லும் பூவும் இல்லாமல் போகின்றன. இப்படித்தான் மனித வாழ்க்கை, என்கிறார் ஆசிரியர்


.17: மனிதரின் நிலையாமையை பற்றி பாடிய ஆசிரியர், கடவுளின் அதாவது அவரின் பேரன்பின் நித்தியத்தை விவரிக்கின்றார். ஆண்டவரின் பேரன்பும் (חֶסֶד ஹெசெத்- அன்பிரக்கம்), அத்தோடு அவரின் நீதியும் (צְדָקָה ட்செதெகாஹ் நீதி) ஒப்பிடப்படுகின்றன. இந்த இரண்டும் முற்குறிப்பிடப்பட்ட புல் மற்றும் பூவைப்போல இல்லாமல் போகாது, மாறாக அவை நித்தியத்திற்கம் நிலைக்கும் என்பது ஆசிரியரின் அனுபவ மெய்யறிவு


.18: மேற்குறிப்பிட்ட வரப்பிரசாதங்கள், ஆண்டவரின் கட்டளையை கடைப்பிடித்து அதனை வாழ்வோருடையது என்கிறது இந்த வரி. ஆண்டவரின் உடன்படிக்கை (בְרִית יְהוָה வெரித் அதோநாய்- ஆண்டவரின் உடன்படிக்கை), இஸ்ராயேலருக்கு மிக முக்கியமான ஒரு அனுபவம்

இருப்பினும் இந்த உடன்படிக்கை பல வேளைகளில் மீறப்பட்டது. இந்த உடன்படிக்கையும், ஆண்டவரின் கட்டளைகளும் (פְּקוּדִים பெகூதிம்- கட்டளைகள்) தொடர்புபட்டது என்கிறார் ஆசிரியர். ஆண்டவரின் கட்டளைகளை கடைப்பிடிப்போர், அவரின் உடன்படிக்கையை பாதுகாக்கிறார்கள் என்பது ஆசிரியர் படிப்பினை என்பது புலப்படுகிறது


.19: இஸ்ராயேலின் ஆரம்ப கால கடவுள் நம்பிக்கை, அவரை ஒரு விண்ணக அரசராகவும், அவரது அரியணை (כִּסֵּא கிஸ்ஸெ'- அரியணை) விண்ணகத்தில் இருக்கிறதாகவும் கண்டது. இஸ்ராயேலரை சுற்றியிருந்த மக்களும் இப்படியாக தங்கள் தெய்வங்களின் அரியணைகளை கற்பனை செய்தனர். இந்த மக்களின் நம்பிக்கைகள், இஸ்ராயேலின் நம்பிக்கையில் தாக்கம் செலுத்தியதை இங்கே காணலாம். இந்து மக்களும் இப்படியான நம்பிக்கையை கொண்டிருந்தனர் என்பதை இந்து புராண மற்றும் தெய்வக் கதைகளில் காணலாம்

இருப்பினும் இஸ்ராயேலரின் நம்பிக்கை, இந்த மக்களின் நம்பிக்கையை அப்படியே ஒத்தது என்று சொல்ல முடியாது, இங்கே அவர்கள் உருவக அணியை மட்டுமே பாவிக்கிறார்கள். விண்ணகத்தை யாரும் பார்த்ததாகவோ அல்லது அது மனிதர் அறிவிற்கு உட்பட்டதாகவோ, அவர்கள் சொல்லவில்லை. அத்தோடு கடவுளின் அரசுதான் உண்மையான பலமிக்க அரசு என்பதும் காட்டப்படுகிறது


.20: ஆண்டவரின் சொற்கேட்டு நடக்கிறவர்கள், பலமானவர்கள், அவர்கள் வானதூதர்கள் என்பதையும் ஆசிரியர் காட்டுகிறார். வானதூதர்களைப் (מַלְאָךְ மல்'ஆக்- தூதன்) பற்றிய அறிவு மெது மெதுவாக இஸ்ராயேலின் வரலாற்றில் வளர்ந்தது. கிரேக்க காலத்தில்தான் இந்த அறிவு உச்ச கட்டத்தை அடைந்தது. இந்த வரிகளைக் கொண்டு சிலர் இந்த திருப்பாடலின் வயதையும் கணிக்க முயற்சி செய்யலாம். இந்த வானதூதர்களுக்கு ஆசிரியர் கட்டளை கொடுத்து, கடவுளை போற்றச் சொல்லி கேட்கிறார்


.21: ஆண்டவரின் படைகளுக்கும் கட்டளைகள் கொடுக்கப்படுகிறது. ஆண்டவர் படைகளின் ஆண்டவர் என்பது, முதல் ஏற்பாட்டில் கடவுளுக்கு கொடுக்கப்படும் முக்கியமான ஒரு பெயர் 

(יְהוָה צְבָאוֹת அதோநாய் ட்செபாஓத்). கடவுளுக்கு படைகள் இருப்பதாகவும் அவர்கள் கடவுளின் கட்டளைகளை நிறைவேற்றும் பணியாளர்களாகவும் நம்பப்பட்டன. இந்த படைகள், வானதூதர்கள், செருபீன்கள், கெருபீன்கள், மற்றும் தூயவர்கள் என்று பல வகைப்படுத்தப்பட்டனர்


.22: ஆண்டவரின் ஆட்சித் தளம் என்பது எங்கே என்று சொல்லப்படவில்லை, இது பூவுலகாகவும் இருக்கலாம். அனைத்து படைப்புக்கள் என்பது உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்தையும் குறிக்கலாம். இறுதியாக, முதலாவது வரியில் சொல்லப்பட்ட அதே வார்த்தை பாவிக்கப்பட்டுள்ளது, 'என்னுயிரே! ஆண்டவரைப் போற்றிடு!' בָּרֲכִי נַפְשִׁ֗י אֶת־יְהוָה׃ பாராகி நப்ஷி 'எத்-அதோநாய்


இரண்டாம் வாசகம்

1கொரிந்தியர் 10,1-6.10-12

1சகோதர சகோதரிகளே, நீங்கள் ஒன்றை அறிந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன். நம் முன்னோர் அனைவரும் மேகத்தின்கீழ் வழிநடந்தனர். அவர்கள் அனைவரும் கடலைக் கடந்து சென்றனர். 2அவர்கள் அனைவரும் மோசேயோடு இணைந்திருக்கும்படி மேகத்தாலும் கடலாலும் திருமுழுக்குப் பெற்றார்கள். 3அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிக உணவை உண்டனர். 4அவர்கள் அனைவரும் ஒரே ஆன்மிகப் பானத்தைப் பருகினர். தங்களைப் பின்தொடர்ந்து வந்த ஆன்மிகப் பாறையிலிருந்து அவர்கள் பருகினார்கள். கிறிஸ்துவே அப்பாறை. 5அப்படியிருந்தும், அவர்களில் பெரும்பான்மையோர் கடவுளுக்கு உகந்தவராய் இருக்கவில்லை. பாலை நிலத்திலேயே அவர்கள் கொல்லப்பட்டார்கள். 6அவர்கள் தீயனவற்றில் ஆசைகொண்டு இருந்ததுபோல நாமும் இராதவாறு இவை நமக்கு ஒரு முன்னடையாளமாக நிகழ்ந்தன.10அவர்களுள் சிலர் முணுமுணுத்தனர். இதனால் அவர்கள் அழிவு விளைவிக்கும் தூதரால் அழிக்கப்பட்டனர். அவர்களைப்போல் நாமும் முணுமுணுக்கக் கூடாது. 11அவர்களுக்கு நிகழ்ந்த இவையனைத்தும் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமைகின்றன. இறுதிக்காலத்தில் வாழும் நமக்கு இவை அறிவுரையாக எழுதப்பட்டுள்ளன. 12எனவே தாம் நிலையாக நிற்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர் விழுந்து விடாதபடி பார்த்துக் கொள்ளட்டும்.


 பவுல் கொரிந்தியருக்கு, நற்செய்தி அனைவருக்கும் உரியது என்பதை விளங்கப்படுத்துகிறார். இவர், ஒப்புவமை வாயிலாக விசுவாச படிப்பினைகளை தருவதில் எவ்வளவு வல்லவர் என்பதை இங்கே காணலாம். கிறிஸ்து யாரும் அறிந்திராத புதியவர் அல்ல மாறாக ஏற்கனவே நமது முன்னோர்கள் அவரை அறிந்திருந்தனர் என்பது பவுலுடைய வாதம்


. 1: கிரேக்க மூலத்தில், 'நீங்கள் அறிவிலிகளாக இருக்கக்கூடாது என விரும்புகிறேன்,' என்கிறார் பவுல். மேகத்தையும் கடலையும் உருவகித்து, தனது வாசகர்களை விடுதலைப்பயண அனுபவத்திற்கு அழைக்கிறார். Οὐ θέλω γὰρ ὑμᾶς ἀγνοεῖν, தெலோ கார் ஹுமாஸ் அக்னொய்ன், நீங்கள் அறிவிலிகளாக இருக்க கூடாது என விரும்பிகிறேன்



வவ. 2-4: 'மோசேக்குள் இருக்கும்படி திருமுழுக்கு' என்பது பவுலுடைய வித்தியாசமான கருத்து. ஒரே ஆன்மீக உணவு-பானம் என்று மன்னாவையும் தண்ணீரையும் சொல்கிறார் போல. பாலைவனத்தில் தண்ணீர் வந்த அந்த பாறை இயேசு என்கிறார். இயேசுவை உணவாகவும், பானமாகவும் மற்றும் பாறையாகவும் கண்டு பாவிக்கிறார் பவுல். இங்கே காட்டப்படுகின்றன உருவகங்கள்:

. மேகத்தாலும், கடலாலும் திருமுழுக்கு,

. ஒரே ஆன்மீக உணவு - மன்னா

. ஒரே ஆன்மீக பானம் - பாறை நீர்

. ஆன்மீக பாறை - கிறிஸ்து


வவ. 5-6: முன்னைய உருவகத்தை முன்வைத்ததற்கான காரணத்தை சொல்கிறார். ஆன்மீக பானத்தை பருகியபோதும் முன்னோர்கள், கடவுளுக்கு உகந்தவர்களாக இல்லாத காரணத்தினால் இறந்தார்கள். இந்த நிகழ்வு கிறிஸ்தவர்களுக்கு முன்னடையாளம் என்று மக்களை எச்சரிக்கிறார்

 எகிப்திலிருந்து புறப்பட்ட அதிகமான இஸ்ராயேலர்கள் பாலைநிலத்திலேயே இறந்து விட்டார்கள். இந்த வரலாறு விவிலியத்தில் அதிகமான இடத்தில் மீண்டும் மீண்டும் சொல்லப்படும்


இன்றைய வாசகத்தில் 7-9 வசனங்கள் விடப்பட்டுள்ளன. அவற்றில், சிலை வழிபாட்டுக் காரர்களாகவும், நெறிகெட்டவர்களாகவும், கிறிஸ்துவை சோதிக்கிறவர்களாகவும் இருக்க வேண்டாம் என்றும், இதுவேதான் முன்னோர்களின் அழிவுக்கு காரணமாக அமைந்தது என்றும் சொல்கிறார். இங்கே காட்டப்படுகின்ற பாவங்கள்:

. சிலைகளை வழிபடுகிறவர்கள் (εἰδωλολάτραι எய்தோலொலாட்ராய்)

. களியாட்டம்

. பரத்தமை (πορνεύω பொர்நெயுஓ)

. ஆண்டவரை சோதித்தல் (ἐκπειράζω எக்பெய்ராட்சோ)

. முணுமுணுத்தல் (γογγύζω கொக்குட்சோ)


வவ. 10-11: முணுமுணுத்தல் கொரிந்திய திருச்சபையின் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாக 

இருந்திருக்க வேண்டும். அழிவு விளைவிக்கும் தூதர் என்ற சொல் இங்கு மட்டும்தான் புதிய ஏற்பாட்டில் பாவிக்கப்பட்டுள்ளது. கிரேக்க மூலம் இதனை ὀλοθρευτής ஒலோத்ரெயுடெஸ், அழிப்பவன் என்று சொல்கிறது. பவுல் இதனை யாருக்கு ஒப்பிடுகிறார் என்று அறிய முடியவில்லை. சாத்தானாகவோ அல்லது கடவுளின் கட்டளையை நிறைவேற்றும் தூதனாகவோ இருக்கலாம். முன்பு நடந்தவற்றைக் கொண்டு முன்னையவர்களை தீர்ப்பிடாமல், தனது மக்கள் தாம் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்பதே பவுலின் போதனை. இதனை யூதர்களுக்கு எதிரான வாதமாக எடுக்க முடியாது


. 12: தற்பெருமை கொரிந்தியருக்கிருந்த இன்னொரு, தீர்க்கப்பட வேண்டியிருந்த சிக்கல். இங்கே மறைமுகமாக தற்பெருமையுடையவர்களை சாடுகிறார். நிலையாக நிற்பதாக நினைப்பவர் விழுவது இயற்கை




நற்செய்தி

லூக் 13,1-9

1அவ்வேளையில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரைப் பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். 2அவர் அவர்களிடம் மறுமொழியாக, 'இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும் விடப் பாவிகள் என நினைக்கிறீர்களா? 3அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள். 4சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கிறீர்களா? 5அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்' என்றார்.

காய்க்காத அத்திமரம். 6மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: 'ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. 7எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், 'பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?' என்றார். 8தொழிலாளர் மறுமொழியாக, 'ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன். 9அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்' என்று அவரிடம் கூறினார்.'


  பொந்தியுஸ் பிலாத்து, யூதேயாவில் எப்போதும் மக்களால் வெறுக்கப்பட்ட உரோமைய அதிகாரியாகவே இருந்தான். ஃபீலோ இவனை இரண்டாம் தர படைகளின் கட்டளை அதிகாரி என்று எழுதினார். கி.பி 26-36 களில் இவன் யூதேயாவில் அதிகாரம் செலுத்தினான். லூக்கா இவனை அவ்வளவு கெட்டவனாக காட்டவில்லை, இரண்டு தடவை இவன் ஆண்டவரை விடுதலை செய்ய முயற்சித்ததை பதிவுசெய்கிறார் (23,4.7.16). லூக்காவிற்கு, கிறிஸ்துவின் உடன்-யூதர்களே அவரின் மரணத்திற்கு காரணமானவர்களாக இருந்ததனை காட்ட வேண்டிய தேவையிருந்தது. ஆண்டவரைப் பற்றிய கனவை, பிலாத்துவின் மனைவி கண்டதும் லூக்கா நற்செய்தியிலேதான். யோசேப்புஸ் பிலாத்துவை அரக்க குணம் கொண்டவனாக ஊழல் நிறைந்தவனாகவும் சித்தரிக்கிறார். பல மோதல்களையும் இரத்தங்களையும் சிந்த காரணமாக இருந்த இவன், உரோமைக்கு மீள அழைக்கப்பட்டு பின்னர் பதிவியிழந்தான் என்றும் ஒரு வரலாறு சொல்கிறது. லூக்காவிற்கு இவனைவிட பல பாவிகள் எருசலேமில் இருந்தனர் என்பது ஒரு வாதம். லூக்காவிற்கு பிலாத்து பல தீயவர்களுள் ஒருவன்


வவ. 1-2: பிலாத்து கலிலேயரைக் கொலைசெய்த நிகழ்வு நற்செய்தியைவிட வேறு எங்கும் பதிவு செய்யப்படவில்லை. இங்கே இந்த 'சிலர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளவர், இரண்டு நபர்களை குற்றம் சுமத்துகின்றனர், ஒன்று கலிலேயர் மற்றது பிலாத்து. இந்த சந்தர்ப்பத்தை பாவித்து இயேசு அவர்களிடம் முக்கியமான கேள்வியொன்றை கேட்கிறார். தண்டனை பெறுகிறவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் மட்டும்தான் பாவிகளா அல்லது, பாதிக்கப்படுகிறவர்கள் உண்மையில் பாவிகளா? என்பதுதான் அந்தக் கேள்வி


வவ. 3-5: அப்பாவிகளின் மரணம் அவர்களை பாவிகளாக்காது. இதனை நாம் சுனாமியிலும், பல ஈழப் போர்களிலும் அனுபவித்திருக்கிறோம். இதை எழுதும் போதும்கூட பல அப்பாவிகள் கொலை செய்யப்பட்டுக்  கொண்டிருக்கிறார்கள். பாவம் மரணத்திற்கு காரணம் என்று விவிலியத்தில் சில இடங்களில் காணலாம். (காண் யோபு 4,7: யோவான் 9,2). கடவுளே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறார் என்றால், இந்த மரணத்தையும் அவரே தீர்மானிக்கிறார் என்பது இவர்களின் வாதம்

 இயேசு இங்கே அப்பாவிகள் பாவிகள் இல்லை என்பதை தெளிவு படுத்துகிறார், ஆனால் அவர்களின் மரணத்தின் மர்மத்தையல்ல. சீலோவாம் கோபுரம் விழுந்து பதினெட்டு போரைக் கொன்ற நிகழ்வு சீலோவாம் குளத்தின் தெற்கு பகுதியில் நடந்திருக்கலாம். இக்குளம் எருசலேமின் தெற்கு பகுதியில் இருக்கிறது. மனமாறாவிட்டால் அனைவரும் அழிவர் என்பதே இங்கே நோக்கப்பட வேண்டிய செய்தி. தீயவர்களின் வாழ்வதற்கான வாய்ப்பு அவர்களை நீதிபதிகளாக்காது. அப்பாவிகளின் துன்பத்திற்கு இன்றுவரை சரியான விடையை இயேசுவாலன்றி, எவராலும் தர முடியவில்லை. μὴ  μετανοῆτε πάντες  ὡσαύτως ἀπολεῖσθε. மே மெடாநொயேடெ பான்டெஸ் ஹேசாவ்டோஸ் அபொலெய்ஸ்தெ- நீங்களும் மனமாறாவிட்டால், இப்படியே அழிவீர்கள்


. 6: இந்த பழம்கொடாத மலட்டு மரங்களைப் பற்றிய கதைகள் அக்காலத்தில் புழக்கத்தில் இருந்தன. இயேசு இதனை சொல்கின்ற போது மக்களுக்கு இவற்றைப் பற்றிய தெளிவு எற்கனவே இருந்திருக்க வேண்டும். அக்கால கதைகளில் அந்த மரங்களின் தலைவர்கள் மரத்தை வெட்ட வரும்போது மரம் இன்னொரு முறை தவணை கேட்கும், ஆனால் தவணை கொடுக்கப்படாது

 ஏன் தோட்டக்காரர் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரத்தை நட்டுவைத்திருக்கிறார் என்பது புரியவில்லை. இது லூக்காவின் அடையாளமாக இருக்கலாம் (συκῆ சுகே- அத்தி). அத்தி மரம் மற்றும் திராட்சை, இஸ்ராயேல் மக்களை காட்டும் விவிலிய அடையாளங்கள்


. 7: இங்கேயும் அதே பிரச்சனையைத்தான் லூக்கா பதிவு செய்கிறார். ஆனால் இங்கே தலைவர் பேசுவது மரத்தோடு அல்ல, தோட்ட தொழிலாளியோடு. மூன்று ஆண்டுகள் என்பது நிறைவான காலங்களைக் காட்டுகிறது. ஆக இந்த தோட்ட முதலாளி ஒரு பொல்லாதவர் அல்ல என்பது தெளிவாகிறது. அவருடை கோபம் நியாயமானது என்பது காட்டப்படுகிறது. இடத்தை யாரும் அடைத்துக்கொண்டிருக்கக் கூடாது. இடம் கடவுளுக்குரியது, மக்கள் அதனை பயன்படுத்தாவிட்டால் அது மற்றவருக்கு கொடுக்கப்படவேண்டியது. இந்த செய்தி அழைக்கப்பட்ட மக்களுக்கு பொருந்துகிறது


. 8-9: தொழிலாளி மரத்திற்காக இரைஞ்சுவது, லூக்கா நற்செய்தியின் இரக்க பண்பினை தெளிவு படுத்துகிறது. ஆனால் ஒரு வருடமே இங்கே தவணையாக கொடுக்கப்படுகிறது. இது விவிலிய எண்கணக்கில் மிகவும் குறுகிய காலம். இதன் மூலமாக லூக்கா அழிவினை, மனமாறாவிட்டால் தடுக்க முடியாது என்கிறார்

 கிறிஸ்தவ விளக்கவுரையாளர்கள் இந்த அத்தி மரத்தை, இஸ்ராயேல் அல்லது யூத மக்களாகவும், தலைவராக கடவுளையும், தோட்டக்காரராக இயேசுவையும் கண்டனர்

இது இப்படியிருக்கவேண்டிய தேவையில்லை என நினைக்கிறேன். முதல் ஏற்பாட்டில் பல வேளைகளில் அத்தி மரமும் திராட்சை தோட்டமும் இஸ்ராயேல் மக்களை குறித்தது உண்மைதான். இந்த மரம் கிறிஸ்தவர்களையோ அல்லது வாய்ப்பு கிடைத்தும் அதனை பாவிக்காத அறிவுள்ள எந்த மனிதரையும் குறிக்கலாம். இந்த கதை உருவகக் கதையாக பார்க்கப்படாமல் (யடடநபழசநை), உவமையாக பார்க்ப்பட்டால், லூக்கா சொல்லிய மரம் நம்மையும் குறிப்பதை தியானிக்கலாம். கனி என்று லூக்கா குறிப்பிடுவது (καρπός கார்போஸ்), பல அர்தங்களைத் தரவல்லது: மரத்தின் கனி, ஒரு செயலில் விளைவு, கிறிஸ்தவ அன்பு, இறையரசை அடைய தேவையான வேலை, நீதியான வாழ்வு, என்றும் பொருள் படும்


யார் அந்த மரம்

என்று என்று அயலவரை பார்க்காமல்

நம்மை அந்த மரமாக பார்த்து தியானிக்க

இன்னொரு வருடம் இரக்கம் கேட்டு வளருவோம்


ஆண்டவரே தூய்மையான காலணிகளை, அசுத்தமென களைந்துவிட்டு

அசுத்தமான இதயங்களோடு உம்மை தரிசிக்க பழகியிருக்கும் எமக்கு

நல்ல அறிவைத்தாரும் இன்னொரு வருடம் தவணை தந்து உமது உரத்தை 

உள்வாங்க, பக்குவத்ததையும் தாரும்

பாதணிகளின் அழுக்கைவிட

இதயத்தின் அழுக்கு ஆபத்தானது என்பதை சொல்லித்தாரும். ஆமென்


தவக்காலம் மூன்றாம் வாரம் (இ),  3rd Sunday of Lent 2025 C Sunday, 23 March 2025

  தவக்காலம் மூன்றாம் வாரம் ( இ ),  3rd Sunday of Lent 2025 C Sunday, 23 March 2025 முதல் வாசகம் : விடுதலைப் பயணம் 3,1-8.13-15...