ஆண்டின் பொதுக்காலம் 11ம் ஞாயிறு
எனவே இனி வாழ்பவன் நான் அல்ல கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார். இறைமகன்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நான் இவ்வுலகில் வாழ்கிறேன். இவரே என்மீது அன்புகூர்ந்தார். எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார்.
(கலா 2,20)
2சாமு 12,7-10.13
தி.பா 32
கலாத் 2,16.19-21
லூக் 7,36-8.3
2சாமு 12,7-10.13
7அப்போது நாத்தான் தாவீதிடம், 'நீயே அம்மனிதன். இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: 'நான் இஸ்ரயேலின் அரசனாய் உன்னைத் திருப்பொழிவு செய்தேன்; நான் உன்னைச் சவுலின் கையினின்று விடுவித்தேன். 8உன் தலைவரின் வீட்டை உன்னிடம் ஒப்படைத்தேன்; அவன் மனைவியரையும் உனக்கு மனைவியர் ஆக்கினேன்; இஸ்ரயேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும் உனக்கு அளித்தேன்; இது போதாதென்றால் உனக்கு மேலும் மிகுதியாய்க் கொடுத்திருப்பேன். 9பின் ஏன் நீ ஆண்டவரின் வார்த்தையைப் புறக்கணித்து அவர்தம் பார்வையில் தீயது செய்தாய்? இத்தியன் உரியாவை நீ வாளுக்கு இறையாக்கி, அவன் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய்; அம்மோனியரின் வாளால் அவனை மாய்த்துவிட்டாய்! 10இனி உன் குடும்பத்தினின்று வாள் என்றுமே விலகாது; ஏனெனில் நீ என்னைப் புறக்கணித்து இத்தியன் உரியாவின் மனைவியை உன் மனைவியாக்கிக் கொண்டாய்.'
11இதோ! ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: 'உன் குடும்பத்தினின்றே நான் உனக்குத் தீங்கை வர வழைப்பேன்; உன் கண்கள் காண, உன் மனைவியரை உனக்கு அடுத்திருப்பவனிடம் ஒப்புவிப்பேன். அவன் பட்டப் பகலில் உன் மனைவியரோடு படுத்திருப்பான். 12நீ மறைவில் செய்ததை, அனைத்து இஸ்ரயேலும் காணுமாறு நான் பட்டப்பகலில் நிகழச்செய்வேன்' என்று கூறினார். 13அப்போது தாவீது நாத்தானிடம், 'நான் ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்துவிட்டேன்' என்று சொன்னார். நாத்தான் தாவீதிடம், 'ஆண்டவரும் உனது பாவத்தை நீக்கிவிட்டார்.
சாமுவேல் இரண்டாவது புத்தகம், தாவீது அரசரின் ஆரம்ப கால ஆட்சியின் நிகழ்வுகளில் தொடங்கி, ஒரு விதமான வாதையால் முழு அரசும் பாதிக்கப்பட்ட வரலாற்றை காட்டுவதோடு நிறைவடைகிறது. சாமுவேல் புத்தங்கள், சாமுவேல் இறைவாக்கினரால் எழுதப்பட்டவை என்பதை நிருவிப்பது நிச்சயமாக கடினாமாக இருக்கும். இதற்கு முக்கியமான காரணமாக, சாமுவேலின் மரணமும் இந்த புத்தகத்திலே எழுதப்பட்டிருப்பதுமாகும். எப்படி ஒரு ஆசிரியர் தன் நூலில் அவர் மரணத்தை விவரிக்க முடியும்? (காண்க 1சாமு 25,1: சாமுவேல் இறந்தார்; இஸ்ரயேலர் எல்லாரும் ஒன்றுகூடி அவருக்காத் துக்கம் கொண்டாடினர். பின்பு அவர்கள் அவரை இராமாவிலுள்ள அவரது இல்லத்தில் அடக்கம் செய்தனர்) இந்த புத்தங்கள், இங்கே வரும் சாமுவேல் என்னும் முக்கியமான பாத்திரத்திற்கு
அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது என்றே கருதத் தூண்டுகிறது, இதனால் இந் நூலின் ஒருமைப்பாட்டிற்கு எந்த தீங்கும் இல்லை. இருபத்தி நான்கு அதிகாரங்களைக் கொண்டுள்ள இந்த புத்தகத்தை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.
அ) தாவீதின் ஆரம்ப கால நடவடிக்கைகள் (1-8)
ஆ) தாவீதும் அவரின் அரசவையும் (9-20)
இ) தாவீதின் ஆட்சியின் பிரச்சனைகளும் வாய்ப்புக்களும் (21-24).
இன்றைய பகுதி விவிலியத்தில் வரும் அழகானதும் மனசாட்சியைத் தொடுகின்றதுமான கதைகளில் ஒன்று. தாவீது உரியாவின் மனைவியை தன்னவளாக்க அவர் கணவரை போரிலே அமோனியரின் எல்லையில் நிறுத்தி அவர் சாவை அனுமதித்தார், சுருங்கச் சொல்லின் கொலை செய்தார். இதனால் கோமடைந்த கடவுள் இறைவாக்கினர் நாத்தானூடாக தாவிதிற்கு ஒரு கதையைச் சொல்கிறார். அக்கதை ஒரு பணக்காரன் தன்னுடைய பேராசையினால் ஒரு ஏழையினுடைய வீட்டு செம்மறியை தன் விருந்தினர்காக பலியிட்டான் என்றவாறு அமைந்திருக்கும் (காண்க 2சாமு 12,1-6). இதனால் கோமடைந்த தாவீது தன் ஆட்சியில் இப்படிப்பட்டவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படவேண்டும் என்று கோபத்தில் கர்ச்சிக்கிறார். இதனைத் தொடர்ந்தே இந்தப் பகுதி வருகிறது.
வ. இந்த வசனத்தில் முக்கியமான மூன்று நபர்கள் வருகிறார்கள்.
அ. நாத்தான் (נָתָן நாடான்): தாவீதின் காலத்தில் அவர் அரசவையில் பணியாற்றிய முக்கியமான அவை இறைவாக்கினர் இவர். முதல் ஏற்பாடு நாத்தான் என்னும் பாத்திரத்தை 42 தடவைகளும் புதிய ஏற்பாடு ஒரு தடவையும் காட்சிப்படுத்துகிறது. இறைவாக்கினர் நாத்தானை விட, தாவிதின் இன்னொரு மகனும், சாலமோனின் சகோதரர் ஒருவரும் நாத்தான் என்ற பெயரில் இருந்திருக்கிறார். இந்த தாவிதின் மகன் நாத்தான்தான் இறைவாக்கினர் நாத்தான் என்ற வாதமும் இருந்திருக்கிறது. இதனை விட இன்னும் ஆறு பேர்கள் இந்தப் பெயரில் விவிலியத்தில் வருகின்றனர். புதிய ஏற்பாட்டில் லூக்கா மட்டுமே நாத்தான் என்னும் இந்த தாவிதின் மகனை நினைவூட்டுகிறார் (காண்க லூக் 3,31 மெலேயா மென்னாவின் மகன்; மென்னா மத்தத்தாவின் மகன்; மத்தத்தா நாத்தானின் மகன்; நாத்தான் தாவீதின் மகன்;). இயேசு ஆண்டவரை இஸ்ராயேலின் அரசராக மட்டும் காட்டாமலும், அத்தோடு அரச வம்சாவழியினரின் அட்டூழியங்கள் இயேசுவின் தன்மைகளை பாதிக்கும் என்ற படியினாலும், லூக்கா இயேசுவின் பரம்பரை அட்டவனையை சாலமோன் மூலமகா தொடராமல், நாத்தான் என்ற இந்த இறைவாக்கினர் அல்லது தாவீதின் மகன் மூலமாக தொடர்கிறார் என்று சிலர் வாதிடுகின்றனர் (காண்க மத் 1,6 ஈசாயின் மகன் தாவீது அரசர், தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன்.). எது எவ்வாறெனினும் இந்த இறைவாக்கினர் நாத்தான் மிக முக்கியமான தாவீது கால இறைவாக்கினர். இவர்தான் சாலமோன் அரசராக தாவீதைத் தூண்டியவர், எருசலேம் ஆலயம் நிர்மாணிக்கப்படவும் காரணமானவர், அத்தோடு கடவுள் தாவீதை தனது இதயத்திற்கு நெருக்கமான மகனாக காண்கிறார் என்ற நற்செய்தியை தாவீதிற்கு அளித்தவரும் இவர்தான்.
ஆ. தாவீது (דָּוִד தாவித்): இராஜேந்திர சோழரைப் போல, இவர் இஸ்ராயேல் மக்களின் தேசிய அடையாளம், இஸ்ராயேல் இணைந்த அரசின் இரண்டாவது திருப்பொழிவு செய்யப்பட்ட அரசர். யூதா கோத்திரத்தை சேர்ந்த இவர், தன்னுடைய போர் ஆற்றலாலும், அக்காலத்தில் இருந்த மற்றய கீழைத்தேய பேரரசுகளின் உள்நாட்டு பூசல்களினாலும், தன்னுடைய எதிரிகள் அனைவரையும் இல்லாமலாக்கி இஸ்ராயேலை இணைந்த ஒரு அரசாக மாற்றியிருந்தார். சாதாரண ஆயனாக இருந்த இவரை கடவுள் சவுலுக்கு பதிலாக தேர்ந்தெடுத்து திருப்பொழிவு செய்து தனது இதயத்திற்கு நெருக்கமானவராக்கினார். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ராயேலை ஆண்ட இவர் விவிலியத்தில் மறக்க முடியாத முக்கியமான கதாபாத்திரமும், வீர மகனும் ஆவார். விவிலியத்தின் கவிதைகள் முக்கியமாக திருப்பாடல்கள் இவருக்கே அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. தாவீது இறந்தும் வாழுகின்ற முக்கியமான ஒருவர், இவருடைய குணாதிசியங்கள், முக்கியமாக தாழ்ச்சி மற்றும், தான் பாவி என்று ஏற்றுக்கொள்ளல் போன்றவை இன்றும் நமக்கு முக்கியமான கிறிஸ்தவ பண்புகளை நினைவூட்டுகின்றன. புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் தாவீதை ஆண்டவர் இயேசுவின் மூதாதையர் என்று பல கோணங்களில் காட்டுகி;ன்றனர். தாவீதை அவ்வளவு இலகுவாக ஒரு சிறு வரிகளில் விவரிக்க முடியாது. தாவீது என்பவர் உண்மையில் ஒரு சாதாரண நடோடி மக்கள் அல்லது வழிப்பறி குழுக்களின் தலைவர் அல்லது பின்நாளில் ஏற்படுத்தப்பட்ட காதாபாத்திரம் என்றும் சிலர் வாதாடுகின்றனர். (தாவீதைப் பற்றி மேலும் அறிய: http://www.bible-people.info/David.htm). சாமுவேல், அரசர், மற்றும் குறிப்பேடு போன்ற புத்தகங்கள் தாவீது அரசரின் வரலாற்றை விவிலிய பார்வையில் விளக்குகின்றன.
இ. சவுல் (שָׁאוּל ஷவுல்): இஸ்ராயேலின் திருபொழிவு செய்யப்பட்ட முதலாவது அரசர், இவர் பென்ஞமின் குலத்தை சார்ந்தவர். இவர் மகள் மிக்காலை தாவீது மனமுடித்தார். சாமுவேலால் திருப்பொழிவு செய்யப்பட்ட இவர், கடவுளின் பேச்சை கேட்காததால் அழிந்தார் எனவும் இவருக்கு பதிலாக கடவுள் தாவீதை தெரிந்தெடுத்தார் என்றும் விவிலியம் சொல்கிறது. தாவிது தந்திரமாக இவரின் அரசாட்சியை கைப்பற்றினார் என்ற ஒரு சிறிய வாதமும் இஸ்ராயேலரிடையே இன்றுவரை இருக்கிறது.
இந்த வரி தாவீதுக்கு அவரின் பாவத்தின் கணத்தை நினைவூட்டுகிறது. சற்று முன்னர், இப்படியான பாவிகள் இறக்கவேண்டும் என்று தாவீது கூறினார், அந்த பாவி வேறுயாருமல்ல அவர்தான் என்கிறார் சாமுவேல்.
வவ. 8-9: இந்த வரிகள் சாமுவேல் கடவுள் தாவீதுற்கு செய்தததையும், தாவீது கடவுளுக்கு செய்தததையும் நினைவூட்டுகிறார். சவுலின் அனைத்தையும் கடவுள் தாவீதுற்கு தந்ததாக கூறுகிறார். தாவீது அவற்றை அபகரித்ததாக கூறவில்லை. சாமுவேல் புத்தகங்கள் தாவீதிற்கு சார்பானவை என்ற வாதமும் இருக்கிறது.
இருப்பினும் அவை தாவீதின் பிழைகளை நேரடியாக சுட்டிக்காட்ட மறக்கவில்லை. அரசராக இருப்பவர், தான் விரும்பும் எல்லாவற்றையும் செய்ய முடியாது, சட்டம் அனைவருக்கும் ஒன்றே, இஸ்ராயேலின் அரசர், கடவுள் தன் சாதாரணமானவரே என்பதை இங்கே காணலாம். இப்படியான ஆபத்துக்களை ஏற்கனவே இஸ்ராயேலர் தங்களுக்கு அரசர் வேண்டும் என்று கேட்டபோது சாமுவேல் எச்சரித்திருந்தார் (1சாமு 8,10-18). தாவிதின் படையில் இருந்த இத்தியரான உரியாவை எதிரிகளின் கையால் மடியசெய்வது, துரோகத்தைவிட பாரதூரமானது, அத்தோடு அவர் மனைவியை கவர்வது ஒன்பதாவது கட்டளைக்கு எதிரான பாவம்.(பிறர் மனைவியைக் காமுறாதே! பிறர் வீடு, நிலம், அடிமை, அடிமைப்பெண், மாடு கழுதை அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே. (இணை 5,21 : வி.ப 20,17).) (இந்த பாவம், சுதந்திரம் என்ற பெயரில் இன்று நியாயப்படுத்தப்படுகிறது, இது காட்டுச் சுதந்திரம், மனிதர்களுக்கு பொருந்தாது).
வவ. 10-12: கடவுளின் நீதியும் அதன் தண்டனையும் தாவிதிற்கு நினைவூட்டப்படுகிறது. எந்தப் பெரிய தலைவரும், கடவுளின் தீர்ப்பிற்கு முன்னால் தப்ப முடியாது என்பதை விவிலியம் நினைவூட்டுகிறது. தாவீதின் வழிமரபு சாலமோனிற்கு பின்னால் இரண்டாக உடைந்து, பின்னானில் அசிரிய, பபிலோனிய அடிமைத்தனங்களினால் இல்லாமலே போனது. பதினொராவது வசனம், அடுத்திருப்பவர் என்று சொல்வது அவர் மகன் அப்சலோமைக் குறித்தே. இவர் தாவீதிற்கு எதிராக கலகம் செய்து அவர் வைப்பாட்டிகளை தன்னுடையவராக்கினான் (காண்க 2சாமு 16,20-22). தாவீது மறைவில் களவாக செய்ததை அப்சலோம் பட்டப்பகலில் அனைவரின் முன்னால் செய்தான்.
வ. 13: இதுதான் இந்த சிறிய பகுதி நமக்கு சொல்லும் செய்தி. தாவீது பலவேளைகளில் தன்னுடைய பாவங்களை உடனடியாக ஏற்றுக்கொள்வதை விவிலியத்தில் காணலாம். தாவீதை இன்றும் மறக்க முடியாத மனிதராக காட்டுவதற்கு அவர் கடவுளோடு கொண்டிருந்த நெருங்கிய உறவையே எடுத்துக்ககொள்ளலாம். தாவீது தான் செய்தது கடவுளுக்கு எதிரான பாவம் என்பது, இஸ்ராயேலரின் பாவத்தை பற்றிய நேரிய சிந்தனைகளைக் காட்டுகிறது. கடவுளும் உடனடியாக பாவத்தை நீக்கிவிட்டார் என்று நாத்தான் கூறுவது ஆச்சரியமான கடவுளின் இரக்கத்தைக் காட்டுகிறது.
தி.பா 32
1எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறு பெற்றவர். 2ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர்.
3என் பாவத்தை அறிக்கையிடாதவரை, நாள்முழுவதும் நான் கதறி அழுததால், என் எலும்புகள் கழன்று போயின.
4ஏனெனில், இரவும் பகலும் உம் கை எனக்கு எதிராக ஓங்கி நின்றது; கோடையின் வறட்சிபோல என் வலிமை வறண்டுபோயிற்று.
5'என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக்கொள்வேன்' என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர்.
6ஆகவே, துன்ப வேளையில் உம் அன்பர் அனைவரும் உம்மை நோக்கி மன்றாடுவர்; பெருவெள்ளம் பாய்ந்து வந்தாலும் அவர்களை அது அணுகாது.
7நீரே எனக்குப் புகலிடம்; இன்னலினின்று என்னை நீர் பாதுகாக்கின்றீர்; உம் மீட்பினால் எழும் ஆரவாரம் என்னைச்
சூழ்ந்தொலிக்கச் செய்கின்றீர்.
8நான் உனக்கு அறிவு புகட்டுவேன்; நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்னைக் கண்ணோக்கி, உனக்கு அறிவுரை கூறுவேன்.
9கடிவாளம் பூட்டி வாரினால் இழுத்தாலன்றி உன்னைப் பின்தொடர்ந்து வராத குதிரை போன்றோ கோவேறு கழுதை போன்றோ அறிவிலியாய் இராதே!
10பொல்லாருக்கு வரும் துன்பங்கள் பல ஆண்டவரில் நம்பிக்கை கொள்வோரை அவரது பேரன்பு சூழ்ந்து நிற்கும்.
11நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்; நேரிய உள்ளத்தோரே, நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள்.
பாவிகளின் மனமற்றத்தைப் பற்றி வர்ணிக்கின்ற இந்த திருப்பாடல், மனந்திரும்புதல் என்ற யூத-கிறிஸ்தவ விழுமியத்தின் ஒரு மைல்கல். திருப்பாடல் ஒன்று, பேறுபெற்றோரை வேறுவிதமாக காட்டுகிறது (காண்க தி.பா 1,1: நற்பேறு பெற்றவர் யார்? அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்; பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;). இந்த 32வது திருப்பாடல் குற்றங்களை ஏற்றுக்கொண்டு திருந்தி வாழ்பவர்களும் பேறுபெற்றவர்களே என்கிறது.
திருத்தந்தை பிரான்சிஸ்கு, பாவங்களை நினைப்பதில் கடவுள் பெரிய மறதித்காரர் என்று தன்னுடைய 'கடவுளின் முகம், இரக்கம்' என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
ஒப்புரவு கலந்த செபத்தால் அனைத்து பாவங்களையும், சிக்கல்களையும் பரிகாரம் செய்ய முடியும் என்ற சிந்தனையுடன் இந்த திருப்பாடல் பயணம் செய்கிறது. இந்த திருப்பாடல், தாவீது பெத்செபாவுடன் பாவம் செய்ததன் பின் மனமாறிய நிகழ்வை காட்டுவதாக அமைந்துள்ளது என சில ஆய்வாளர்கள் காண்கின்றனர்.
வவ. 1-2: குற்றங்கள் மன்னிக்பட்டவரே பேறுபெற்றோர் எனச் சொல்வதன் மூலம், பாவத்திற்குள் விழுவது அனைத்து மனிதரின் நாளாந்த பிரச்சினை என்று ஆசிரியர் காட்டுகிறார். ஆனால் பரிகாரம், ஒப்புரவு போன்றவை கடவுளின் தண்டனையில் இருந்து தப்புவதற்கான ஒரே வழி என்று பாதையையும் காட்டுகிறார்.
வவ. 3-5: பாவத்தை அறிக்கையிடாமல் இருத்தலை, ஆசிரியர் எபிரேயத்தில் அமைதியாக இருந்தேன் (הֶחֱרַשְׁתִּי) என்று கூறுகிறார். பாவம் செய்துவிட்டு அமைதியாக இருந்தால், அது எலும்புகளை கழற்றிவிடும் வேதனைகளுக்கு சமம் என்கிறார். கோடை வெயிலின் வரட்சியைப் போல் மனமாறாதவரின் நிலைமை
இருக்கும் என்கிறார். மேலும், பாவத்தை மறைக்காமல் ஒப்புக்கொண்டால் இந்த ஆபத்துக்களில் இருந்து
தப்பலாம் என்கிறார் ஆசிரியர்.
வவ. 6-9: ஒப்புரவு கலந்த செபந்தான் அனைத்து பாவங்களுக்கும் பரிகாரம் என்கிறார். ஆசிரியர் தன்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து எப்படி பாவத்தின் பிடியில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்ற வழியைக் காட்டுகிறார். ஒன்பதாவது வசனம், குதிரைகளைப் போலவோ அல்லது கோவேறு கழுதைகளைப் போலவோ கடிவாளங்களில் தங்கியிருக்கவேண்டாம் என்று தனது வாசகர்களுக்கு சொல்கிறார்.
வவ. 10-11: பொல்லாருக்கும் மனந்திரும்பிய நல்லாருக்கும் உள்ள வித்தியாசத்தை எபிரேய கவிதையியலில் ஒத்த கருத்துச் சொற்களுடன் காட்டுகிறார். பொல்லாரை சூழ்வது வேதனைகள், நல்லாரை சூழ்வது கிருபை என்கிறார். இறுதியாக அனைவரையும் நீதிமான்களாக மாறும் படி கடவுளை புகழ்ந்து மகிழக் கேட்கிறார் ஆசிரியர்.
கலாத் 2,16.19-21
16எனினும் திருச்சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, இயேசு கிறிஸ்துவின் மீது கொள்ளும் நம்பிக்கையால்தான் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகமுடியும் என நாம் அறிந்திருக்கிறோம். ஆதலால்தான் நாமும் சட்டம் சார்ந்த செயல்களால் அல்ல, நம்பிக்கையால் இறைவனுக்கு எற்புடையவராகுமாறு கிறிஸ்து இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். ஏனெனில் சட்டம் சார்ந்த செயல்களால் எவருமே இறைவனுக்கு ஏற்புடையவர் ஆவதில்லை. 19திருச்சட்டத்தைப் பொறுத்தமட்டில் நான் இறந்தவன் ஆனேன். அதற்கு அச்சட்டமே காரணம். நான் கடவுளுக்காக வாழ்கிறேன். கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். 20எனவே இனி வாழ்பவன் நான் அல்ல் கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார். இறைமகன்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நான் இவ்வுலகில் வாழ்கிறேன். இவரே என்மீது அன்புகூர்ந்தார். எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார். 21நான் கடவுளின் அருள் பயனற்றுப்போக விட மாட்டேன். ஏனெனில் சட்டம் சார்ந்த செயல்களால் ஒருவர் இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகக்கூடுமானால் கிறிஸ்து இறந்தது வீண் என்றாகுமே!
பவுலுடைய வசனங்களில் இன்றும் அதிகமானவர்கள் மனப்பாடம் செய்யும் பகுதிகளில் இந்த பகுதியும் ஒன்று. இந்த பகுதியும் கலாத்திய திருச்சபையில் பவுல் தன்னுடைய திருத்தூதுவ பணியின் நண்பகத்தன்மையை விளக்குவதாகவே இருக்கிறது. இதற்கு முன் பகுதிகளில், தன்னுடைய திருத்தூதுவ அழைப்பு எந்த மனிதரிலும் தங்கியிருக்கவில்லை மாறாக அது இயேசுவிடம் இருந்தே நேரடியாக வந்தது என்பதை விளக்கினார். அதனையே இங்கேயும் தொடர்ந்து வியாபிக்கிறார்.
வ. 16: இறைவனுக்கு ஏற்புடையவர் ஆகுதல் (δικαιόω திக்கையோ) என்பது யூதர்கள் மட்டில் நம்பிக்கையில் இருந்த முக்கியமான விழுமியம். இறைவனுக்கு ஏற்புடையவர் மட்டுமே இறைவனின் பிள்ளைகளாய் இருக்க முடியும் என்று யூதர்கள் நம்பினர். முதல் ஏற்பாட்டிற்கும் புதிய ஏற்பாட்டிற்கும் இடைப்பட்ட காலத்தில்,
இந்த இறைவனுக்கு ஏற்புடையவர் மட்டுமே நிலைவாழ்வை அல்லது நித்திய அமைதியை அடைய முடியும் என்ற நம்பிக்கை வளர்ந்தது. கிறிஸ்தவ காலத்தில் இதே இறைவனுக்கு ஏற்புடையவர் மட்டுமே இயேசு தரும் நித்திய வாழ்வை அல்லது மரணத்திற்கு பின் வரும் புதிய வாழ்வை அடைய முடியும் என்ற நம்பிக்கை வளர்ந்தது. காலாத்திய திருச்சபை இந்த ஏற்புடைமை எப்படி வருகிறது என்பதில் பல குழப்பங்களை சந்தித்தது. யூத கிறிஸ்தவர்கள், இந்த ஏற்புடைமை மோசேயின் சட்டத்தை கடைப்பிடிப்பதால் வருகிறது என்று வாதிட்ட யூதரல்லாத கிறிஸ்தவர்களை குழப்ப முயன்றனர். ஆனால் பவுலோ இதனை கடுமையாக சாடுகிறார். கிறிஸ்துவில் கொள்ளும் நம்பிக்கையே ஒருவரை இறைவனுக்கு ஏற்புடையவர் ஆக்க முடியும் என்பது திருத்தூதர்க்ள் மற்றும் தன்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை என்கிறார்.
கிறிஸ்துவில் நம்பிக்கை என்பது (πίστεως Ἰησοῦ Χριστοῦ) சில மயக்கங்களைக் கொண்டுள்ளது. கிரேக்க விவிலியத்தின் இந்த மூல சொற்களை ஆங்கில விவிலியமும், தமிழ் விவிலியமும் ஆறாம் வேற்றுமையுருபில் மொழிபெயர்கிறது. ஆனால் இந்த வேற்றுமையுருபு, எழுவாயாகவோ அல்லது பயனிலையாகவோ இருக்க முடியும் என்ற ஒரு விளக்கத்தை தற்கால அறிஞர்கள் முன்வைக்கின்றனர். ஆக ஆறாம் வேற்றுமை பயனிலைப் படி, ஒருவர் கடவுளுக்கு ஏற்புடைமை ஆவது அவர் கிறிஸ்துவில் வைக்கும் நம்பிக்கையில் ஆகும். ஆறாம் வேற்றுமை எழுவாய் படி ஒருவர் கடவுளுக்கு ஏற்புடைமையாவது கிறிஸ்துவின் நம்பிக்கையால், அதவாது கிறிஸ்து தன் மக்கள்மீது கொண்ட அன்பினால் ஆகும் என்ற விளக்கத்தை தருகிறது. (இரண்டு விதமான ஆங்கில மொழிபெயர்ப்பைக் காண்க: ‘but through faith in Jesus Christ’ (NRSV); but by the faithfulness of Jesus Christ (NET). இரண்டும் வித்தியாசமான ஆனால் ஆளமான இறையியலை முன்வைக்கிறது. )சட்டம் சார்ந்த செயல்களால் எவரும் ஏற்புடைமையாக முடியாது, என்று இங்கே பவுல் அனைவரையும் உள்வாங்குகிறார். அதாவது கிறிஸ்துவில் நம்பிக்கை அல்லது கிறிஸ்துவின் அருள் இல்லாமல், யாரும், கிறிஸ்தவரோ அல்லது யூதரோ ஏற்புடைமை அடைய முடியாது என்பதே பவுலின் வாதம். சட்டங்களை பவுல் மறுக்கவில்லை என்பதை கவனமாக வாசிக்க வேண்டும். சட்டம் (תּוֹרָה தோறா) என்று பவுல் இங்கு கிறிஸ்துவின் போதனைகளை மையப்படுத்தாத சட்டங்களையே சாடுகிறார். இந்த செய்தி கலாத்திய திருச்சபைக்கு முக்கியமான செய்தி.
வ. 19: திருச்சட்டம் ஒருவரை இறந்தவராக்குகிறது என்பது இங்கே ஒருவர் திருச்சட்டத்தின் பயத்தினால் அல்லது அதன் அடிமைத்தனத்தில் இருக்கும் நிலையைக் குறிக்கிறது. ஆனால் கிறிஸ்துவோடு நிலைத்திருப்பது அல்லது அவரோடு சிலுவையில் இருப்பது அடிமைத்தனத்தை அல்ல மாறாக அருளைக் குறிக்கிறது, இது வாழ்வை குறிக்கிறது என்கிறார்.
வ. 20: கிறிஸ்தவர்களும் மறையுறைஞர்களும் அதிகமாக பாவிக்கின்ற ஆழமானதும் அழகானதுமான வரி. ஒருவர் கிறிஸ்துவை தழுவும் போது அங்கே வாழ்பவர் அவர் அல்ல மாறாக கிறிஸ்துவே என்பது பவுலின் அனுபவம் கலந்த அறிவு, மெய்யறிவு என்று கூட சொல்லலாம். இங்கே பவுல் நிகழ்கால வினைகளை பாவித்து (உ.ம்: வாழ்பவன், வாழ்பவர்) இவை நிகழ்காலம் என்கிறார்.
வ. 21: கிறிஸ்துவின் இறப்பு இறைவனின் அருளின் அடையாளமாக இருப்பதனால், இயேசுவின் தியாகத்தைவிட சட்டம் முக்கியம் பெற முடியாது என்கிறார். சட்டங்களை முன்நிறுத்துவபர் கிறிஸ்துவின் தியாகத்தை கொச்சைப் படுத்துகிறார் என்பதுபோல பவுல் காண்கிறார்.
லூக் 7,36-8.3
36பரிசேயருள் ஒருவர் இயேசுவைத் தம்மோடு உண்பதற்கு அழைத்திருந்தார். அவரும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய்ப் பந்தியில் அமர்ந்தார். 37அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரியவந்தது. உடனே அவர் நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார். 38இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார்; அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். 39அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, 'இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாயிற்றே' என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.
40இயேசு அவரைப் பார்த்து, 'சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும்' என்றார். அதற்கு அவர், 'போதகரே, சொல்லும்' என்றார். 41அப்பொழுது அவர், 'கடன் கொடுப்பவர் ஒருவரிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன்பட்டிருந்தனர். 42கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?' என்று கேட்டார். 43சீமோன் மறுமொழியாக, 'அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன்' என்றார். இயேசு அவரிடம், 'நீர் சொன்னது சரியே' என்றார்.
44பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், 'இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை; இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார். 45நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை;
இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார். 46நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை; இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். 47ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன்; இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்' என்றார். 48பின்பு அப்பெண்ணைப் பார்த்து, 'உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன' என்றார். 49'பாவங்களையும் மன்னிக்கும் இவர் யார்?' என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள். 50இயேசு அப்பெண்ணை நோக்கி, 'உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க' என்றார்.
8,1அதற்குப்பின் இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சிபற்றிய நற்செய்தியைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தனர். 2பொல்லாத ஆவிகளினின்றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும் 3ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்.
லூக்கா நற்செய்தியின் ஏழாவது அதிகாரம், மெசியாவின் இரக்கத்தை மையப்படுத்துகின்றன. இந்த நிகழ்வும் கலிலேயாவில் நடந்த நிகழ்வாகவே இருக்க வேண்டும். இயேசுவிற்கு எதிரிகள் என்று உண்மையாக யாரும் இருக்கவில்லை, பலர் இயேசுவை தங்களுக்கு எதிரானவராகவும், எதிரியாகவும் பார்த்தாலும், இயேசு யாரையும் அப்படி பார்த்ததாக புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் காட்டவில்லை. அவருக்கு பல பரிசேயர்கள் நண்பர்களாக இருந்தனர். சிலர் இயேசுவிடம் சேர்வது போல காட்டி தங்களை முதன்மைப்படுத்தவும் முயன்றனர். அப்படியான ஒருவர்போலவே இந்த கதையில் வரும் பரிசேயரும் தோன்றுகிறார்.
வவ. 36-37: பாவியான பெண் முதலில் பரிசேயர் ஒருவரின் வீட்டிற்குள் வருவதே பெரிய ஆச்சரியமானதும் தைரியமானதுமான விடயம். அல்லது அவர் அந்த வீட்டிற்கு வந்துபோகிறவராக இருக்க வேண்டும்.
இயேசுவினுடைய காலத்தில் பெரிய உயர்ந்த மேசைகள் உணவருந்த பாவிக்கப்படவில்லை, மாறாக ஒரு வகையான குட்டை மேசைகளே பாவிக்கப்பட்டன. உணவருந்துபவர் சாய்ந்திருந்தே உணவருந்தினர்.
இதனையே கிரேக்கம் சாய்ந்திருந்தல் (κατακλίνω கடாகிலினோ) என்று அழைக்கிறது. இங்கே முயற்சி எடு;ப்பவர் இந்த பாவியெனப்பெடும் பெண் என மறைமுகமாக எதனையோ லூக்கா சொல்ல விளைகிறார். நறுமணத் தைலம் என்பது வாசனைக்கும் மருத்துவத்திற்கும் பயன்படும் ஒருவகை மத்திய கிழக்கு பகுதி வாசனைத் தைலம். மெர்த் myrrh எனப்படும் ஆங்கிலச் சொல் இதிலிருந்தே வருகிறது.
வ. 38: இவருடைய செயற்பாடுகள் கவனத்தை ஈர்க்கின்றன: பின்னால் அமர்கிறார் அல்லது நிற்கிறார், அழுகிறார், கண்ணீரால் பாதங்களை நனைக்கிறார், கூந்ததால் துடைக்கிறார், முத்தமிடுகிறார், பின்னார் தைலம் பூசுகிறார். இவருடைய செயற்பாடுகள் அவருடைய மனவேதனையையும் மன அழுத்தங்களையும் காட்டுகின்றன. அவருடைய ஆன்மாவும் இயேசுவுடைய ஆன்மாவும் பேசுகின்றன.
வ. 39: லூக்கா இந்த பரிசேயருடைய மனநிலையை நச்சென படம்பிடிக்கிறார். முதலில் அவருக்கு
இந்தப்பெண் மேல் இரக்கம் கிடையாது, இரண்டாவது இயேசு மேல் உண்மையான நம்பிக்கையும் கிடையாது. பின்னர் ஏன் இயேசுவை வீட்டிற்கு அழைத்தார்? ஒருவேளை இயேசுவை இறைவாக்கினர் என பலர் சொல்லியதை கேட்டிருப்பார். இந்த நிகழ்வு சிலவேளை ஒரு செபக்கூட வழிபாட்டின் பின் நடந்திருக்கலாம்.
வ. 40-: இந்த பரிசேயரின் பெயர் சீமோன் என்று இந்த வரியினால் கண்டுகொள்ளலாம். ஆண்டவரை அவர் வெளியில் போதகர் என்று அழைப்பதற்கும், அவர் ஆண்டவரை உள்ளுக்குள் சந்தேகிப்பதற்கும் உண்மைத் தன்மையில்லை.
வவ. 41-43: இயேசுவின் கேள்வி மிகவும் இலகுவானது. தெனாரியம் அக்கால நாளாந்த கூலிப் பணம். கடன் அக்காலத்தில் முக்கியமான பாரச்சுமையாக இருந்தது. இக்கடன் மூலமாக மக்கள் தங்கள் சொத்துக்களை மட்டுமல்ல சில வேளைகளில் தமது சுதந்திரத்தையும் இழந்து அடிமைகளாகக் கூட ஆகினர். இதனாலே
யூபிலி ஆண்டுகள் ஏற்படுத்தப்பட்டு கடன்கள் மன்னிக்கப்பட்டன. ஆனால் இந்த யூபிலி ஆண்டுகளெல்லாம்
யூதர்களுக்கு மட்டுமே, புறவினத்தவர் அடிமைகளாகவே இறுதிவரை வாழ்ந்தனர். ஆக இந்த மன்னிப்பு அக்காலத்தில் மிக முக்கியம் பெறுகிறது.
வவ. 44-46: இயேசு தன்னுடைய தீர்ப்பின் நியாயத்தை முன்வைக்கிறார். இந்த சீமோன் வரவேற்பு சாதாரணத்தைவிட குறைவானதாகவே இருக்கிறது. காலடிகளைக் கழுவ தண்ணீர் தருவது சாதாரண விடயம்.
அதனை சீமோன் செய்யவில்லை, ஆனால் இந்த பெண் தனது கண்ணீரைத் தருகிறார் அத்தோடு கூந்ததலால் துடைக்கிறார். பெண்களுக்கு முக்கியமான பொருள் கூந்தல் இங்கே அது இயேசுவிற்கு துடைப்பான் ஆகிறது. சாதாரணமான யூதர்கள் முத்தமிட்டு வரவேற்பார்கள், அதனையும் சீமோன் செய்யவில்லை ஆனால் இந்தப் பெண் ஆண்டவரின் பாதங்களை முத்தமிட்டு கொண்டே இருக்கிறார். சாதரணமான ஒலிவ எண்ணை தலையில் பூசப்படும் விலைகுறைந்த பொருள் அதனைக்கூட இவர் செய்யவில்லை ஆனால் இந்தப் பெண் நறுமண தைலத்தை ஆண்டவரின் பாதங்களுக்கு பூசுகிறார்.
வ. 47: ஆக இவரின் அதிகமான அன்பு இவரின் எல்லா பாவங்களையும் மன்னிக்கிறது என்கிறார் ஆண்டவர். இங்கே இரண்டு விதமான அன்பைக் காணலாம். இயேசுவின் அன்பு அது அனைத்தையும் மன்னிக்கிறது, இந்தப் பெண்ணின் அன்பு அது ஆண்டவரை மகிமைப்படுத்துகிறது.
வவ. 48-50: இயேசு தான் யாரெனக் காட்டுகிறார். பாவத்தை மன்னிக்கும் அதிகாரம் மானிட மகனுக்கு உண்டு என்று காட்டும் இன்னொரு லூக்காவின் உதாரணம் இது. பந்தியிலிருந்தவர்களின் முணுமுணுப்பு
இயேசுவை இன்னொரு முடிவையும் எடுக்க வைக்கிறது. அதாவது இயேசு இந்தப் பெண்ணுக்கு அமைதியையும் கொடுக்கிறார். ஆக இங்கிருந்தவர்களில் மன்னிப்பையும், அமைதியையும் பெற்றவர் இந்த பெண்ணொருவரே என்று லூக்கா அழகாக படம் வரைகிறார்.
வவ. 1-3: இங்கே இயேசுவோடு இருந்த பெண்களை லூக்கா அட்டவணைப்படுத்துகிறார். அக்கால முறைப்படி பெண்கள் அதிகமாக சீடத்துவத்தை பெறவில்லை. இங்கே இவாக்ள் பன்னிருவருடன் சேர்ந்து ஆண்டவரை பின்பற்றியதாக கூறுவது, ஆண்டவரின் சீடத்துவம் ஆண்களுக்கு மட்டும் உரிய சொத்தல்ல என ஆழமாக உணர்த்துகிறார் லூக்கா. இந்தப் பெண்களில் பாதிக்பட்டு பின்னர் குணமடைந்த பெண்களும் இருந்தார்கள் என்பதன் மூலம் இயேசுவிற்கு எந்த பிரிவினையும் கிடையாது என்பது காட்டப்படுகிறது.
அ). மகதலா மரியா: இயேசுவை பின்பற்றியவர்களில் முக்கியமான பெண். மகதாலாவில் இருந்து வந்தவர். இந்த மகதலா மரியா, லூக்கா நற்செய்தியில் இறுதிவரைக்கும் இயேசுவோடு இருப்பார் (காண்க 24,10 அவர்கள் மகதலா மரியா, யோவன்னா, யாக்கோபின் தாய் மரியா என்பவர்களும் அவர்களோடு இருந்த வேறு சில பெண்களும் ஆவர்.அவர்கள் நிகழ்ந்தவற்றைத் திருத்தூதர்களுக்குக் கூறினார்கள்.). இவரிடமிருந்து ஏழு பேய்களை அதாவது அதிகமான பேய்களை ஓட்டியதாக மாற்குவும் லூக்காவும் காட்டுகின்றனர் (காண்க மாற்கு 16,9).
ஆ). யேவான்னா: கலிலேயாவிலிருந்து வந்த இன்னொரு பெண் சீடர். இயேசுவை வசதிபடைத்த பெண்களும் பின்பற்றினர் என்பதனை இவர் மூலமாகக் காணலாம். இவரின் கணவர், சூசா ஏரோது அந்திபசு வீட்டின் அலுவலராக இருந்திருக்க வேண்டும். இவரும் இறுதிவரைக்கும் இயேசுவோடு இருந்தார்.
இ). சூசன்னா: இவர் இயேசுவை பின்பற்றிய முக்கியமான வசதிபடைத்த பெண்களுள்; ஒருவர். இவர்
இயேசுவிற்கும் அவர் சீடர்களுக்கும் உதவிகளைச் செய்தார் என்று லூக்காவில் மட்டுமே காண்கின்றோம்.
ஒப்புரவு அல்லது மன்னிப்பு என்பது ஒரு இறையனுபவம்.
இறைவனிடம் இருந்து இலவசமாக இது கிடைத்தாலும் ஒரு சிலரே இதனை பெற்றுக்கொள்கின்றனர்.
ஒப்புரவு திருவருட்சாதனம் கத்தோலிக்க திருச்சபையின் சொத்தாக இருப்பினும், அதிகமானவர்கள் அதனை பெறுவது கிடையாது.
ஈழ கத்தோலிக்கருக்கும் ஒப்புரவு திருவருட்சாதனத்திற்கும் வெகு தூரம் போல.
ஒப்புரவிற்கு தேவையானது, முதலாவது தாழ்ச்சி, பாவம் பற்றிய பயம், அத்தோடு சுய நியாயப்படுத்தும் தன்மை இல்லாமை.
இந்த திருவருட்சாதனங்களை வருடக்கணக்கில் செய்யாமலும், மற்றவரை உற்சாகப் படுத்தாமலும், இப்படியான மறுத்தல்களை வெற்றிகளாக பேசித்திரிவதையும் என்வென்று சொல்வது!!!
அன்பான ஆண்டவர் இயேசுவே!
நாங்கள் யாரென்று எங்களுக்கு புரிய வையும்.
பாவத்தின் மீது பயம் கொள்ள வையும்.
இதனால் எங்கள் கண்ணீர் எங்கள் பாவங்களை உம்மிடம் அறிக்கையிட வைக்கும். ஆமென்.
மி.ஜெகன்குமார் அமதி
உரோமை
புதன், 8 ஜூன், 2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக