வெள்ளி, 27 அக்டோபர், 2017

30th Sunday in Ordinary Time (A): ஆண்டின் பொதுக்காலம் முப்பதாம் வாரம் (அ).




ஆண்டின் பொதுக்காலம் முப்பதாம் வாரம் ().  
29,10,2017


முதல் வாசகம்: விடுதலைப் பயணம் 22,20-26
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 18
இரண்டாம் வாசகம்: 1தெசலோனியர் 1,5-10
நற்செய்தி: மத்தேயு 22,34-40

விடுதலைப் பயணம் 22,20-26
20ஆண்டவருக்கேயன்றி, வேறு தெய்வங்களுக்குப் பலியிடுபவன் அழித்தொழிக்கப்பட வேண்டும். 21அன்னியனுக்கு நீ தொல்லை கொடுக்காதே! அவனைக் கொடுமைப்படுத்தாதே. ஏனெனில் எகிப்து நாட்டில் நீங்களும் அன்னியராயிருந்தீர்கள். 22விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே. 23நீ அவர்களுக்குக் கடுமையாகத் தீங்கிழைத்து அவர்கள் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன். 24மேலும் என்சினம் பற்றியெரியும். நான் உங்களை என் வாளுக்கு இரையாக்குவேன். இதனால் உங்கள் மனைவியர் விதவைகளாவர். உங்கள் பிள்ளைகள் தந்தையற்றோர் ஆவர்.25உங்களோடிருக்கும் என் மக்களில் ஏழை ஒருவருக்கு நீ பணம் கடன் கொடுப்பாயானால், நீ அவர்மேல் ஈட்டிக்காரன் ஆகாதே. அவரிடம் வட்டி வாங்காதே. 26பிறருடைய மேலாடையை அடகாக நீ வாங்கினால், கதிரவன் மறையுமுன் அதை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிடு.

விடுதலைப் பயண நூல் ஒரு அறிமுகம்:

விடுதலைப் பயண நூலை இரண்டு முக்கிமான பிரிவுகளாக நோக்கலாம். விடுதலைப் பயண நூலின் அரைப் பகுதி வரலாற்றையும், மிகுதி அரைப் பகுதி, சட்டங்களையும் கொண்டுள்ளது
விவிலியத்தில், விடுதலைப் பயண நூல் மிகவும் முக்கியமானதொன்று. இஸ்ராயேல் மக்களின் வாழ்க்கை அனுபவத்திலும் விடுதலைப் பயணம் மிக முக்கியமான காலகட்டத்தை தொட்டுச் செல்கிறது. விடுதலைப் பயணம் என்ற தலைப்பு கிரேக்க மொழியில் எக்சொதொஸ் (εξοδος) என்றழைக்கப்படுகிறது. இதிலிருந்துதான் இந்த சொல்லும் வருகிறது. இதன் பொருளாக 'இருந்து வெளியேறுதல்' என்று காணலாம்எபிரேய விவிலியம் இந்த புத்தகத்தை (וְאֵ֗לֶּה שְׁמוֹת֙) வெஎல்லே ஷெமொத் (இந்த பெயர்கள்) என அழைக்கிறது
விவிலியத்தின் மிக பெரிய புத்தகங்களில் இதுவும் ஒன்று. தொடக்க நூல், தொடக்கிய கதைகளையும் விவிலிய தலைப்புக்களையும் இந்த நூல் தனக்கு பின்னால் வரும் நான்கு நூல்களுக்கு கடத்துகிறது. இது தனித்துவமான புத்தகமாக இருந்தாலும், இதன் கதை அம்சங்கள் மிகவும் கவனமாக தொகுக்கப்பட்டுள்ளன. விடுதலைப்பயண நூலை அவதானமாக வாசித்தால், இதன் ஆசிரியர் வரலாற்றை விட, இறையியலுக்கு மிக முக்கியம் கொடுக்கிறார் என்பதுபோல தோன்றும். இஸ்ராயேல் மக்களுக்கும் (தனித்துவமாகவும், பொதுவாகவும்) கடவுளுக்கும் இடையிலான உறவையே இந்த புத்தகம் மையப்படுத்துகிறது. இந்த புத்தககத்தில் கடவுளுக்கு அடுத்தபடியாக மோசேதான் துணை கதாநாயகனாக வருகிறார். எரியும் முட்செடி நடுவில் கடவுளைக் கண்ட அவர், அந்த கடவுளை மக்களுக்கு தெரியப்படுத்தி, பின்னர் படிப்படியாக அவருக்கு அருகில் மக்களைக் கொணர்ந்து, இறுதியாக இந்த கடவுளுடன் தன் மக்களை உடண்படிக்கையில் இணைய வைக்கிறார். எந்த நிகழ்வாக இருந்தாலும் முதலில் முயற்சி எடுப்பவராக கடவுளையே ஆசிரியர் காட்டுகிறார், அத்தோடு பல கதாபாத்திரங்கள் இந்த புத்தகத்தில் வந்தாலும், மோசேயைத்தான், ஆசிரியர் இரண்டாவது முக்கியமான நபராகக் காட்டுகிறார்
இந்த புத்தகத்தின் ஆசிரியர் யார் என சரியாகத் தெரியவில்லை, இருப்பினும் மோசே சில பகுதிகளை தொகுத்திருக்கிறார் என்று பலமான வாதம் ஒன்று இருக்கிறது (காண்க 17,14: 24,4: 34,27). பாரம்பரியமாக மோசேதான் இந்த புத்தகத்தை எழுதினார் என்று பலமாக நம்பப்பட்டாலும், இதற்கான அக மற்றும் புற சான்றுகள் மிக குறைவாகவே உள்ளன. இந்த புத்தகம் எழுதப்பட்ட காலத்தை கணிப்பது மிகக் கடினமாக இருக்கிறது. அதிகமான ஆசிரியர்கள் இந்த புத்தகம் காலத்தால் மிகவும் பிந்தியது என்கிறனர். சிலர் இது பபிலோனிய இடப்பெயர்வின் பின்னர் எழுதப்பட்டது எனவும் வாதாடுகின்றனர். நான்கு பாரம்பரிய (யாவே, எலோகிம், இணைச்சட்ட, குரு) முறை கொள்கை, பல ஆண்டுகளாக அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், இந்த கொள்கையை விடுதலைப் பயண நூலுக்கு பொருத்துவது மிகவும் கடினமாகவே இருக்கும் என்பது தற்கால ஆய்வாளர்களின் வாதம்
விடுதலைப் பயண நூலின் பின்புலத்தை கண்டுபிடிப்பதும் இலகுவான ஒன்றாக ஆய்வாளர்களுக்கு இருப்பதில்லை. இந்நூலின் முதல் பாகத்தில் வருகின்ற நிகழ்வுகள் கி.மு 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நிகழ்வை காட்டுகின்றன. அதேவேளை 1அரசர் 6,1இன் படி இஸ்ராயேலர் சாலமோனின் ஆட்சியின் 480 ஆண்டுக்கு முன்னர் எகிப்பதிலிருந்து வந்திருந்தனர். இதனால் இக்காலத்தை 1446 கி.மு எகிப்திலிருந்து இவர்கள் விடுதலையானார்கள் என கணிக்கலாம்இன்னும் சிலர் கி.மு 13ம் நூற்றாண்டில்தான் இஸ்ராயேலர்கள் விடுதலையானார்கள் என்கின்றனர். எதுஎவ்வாரெனினும் இந்த காலத்தை கணிப்பது மிகவும் கடினமான விடயம் என்பது மட்டும் உண்மை
விடுதலைபயண நூல் வரலாற்று குறிப்புக்களின் அக்கறை காட்டுவது போல தெரியவில்லை. நல்ல உதாரணம், எகிப்திய பாரவோன்களின் பெயர்களை குறிப்பிடாதது. அதனைவிட விவிலியத்தை தவிர வேரெந்த ஆவணமும் எகிப்திய விடுதலை மற்றும் செங்கடல் கடந்ததை பதியவில்லை. எகிப்திய ஆவணங்கள்கூட இதனைக் குறிக்கவில்லை. இஸ்ராயேலர்கள் செங்கடலைக் கடந்த பாதை கூட பல கேள்விகளையும் விடைகளையும் தருகிறது. இதிலிருந்து விடுதலைப் பயண ஆசிரியர் வரலாற்று ஆசிரியர் என்பதை விட ஆழமான இறையியல் ஆசிரியர் என்று கருதப்படவேண்டடியவர் என்கின்றனர் பல விவிலிய ஆய்வாளர்கள்

அதிகாரங்கள் 19-24 சீனாய் உடண்படிக்கையை ஏற்படுத்துதலை மையமாக கொண்டிருக்கின்றன. இந்த உடண்படிக்கைக்கான சட்டங்கள் சமூதாயாத்தின் ஒவ்வொரு அங்கத்தையும் உள்வாங்கியிருப்பதை அவதாணிக்கலாம். இந்த 22வது அதிகாரம், திருட்டு மற்றும் ஈடுருதல் போன்றவற்றை முக்கியமான கருப்பொருளாகக் கொண்டிருக்கின்றன. வேற்றினத்தவர்களை மனிதர்களாக மதிக்காத அக்காலத்தில், போரிலே கொள்ளையிடுவதை வெற்றியென ஏற்றுக்கொண்ட அந்நாட்களில், விவிலியம் அன்னியர்களினதும், பலவீனமானவர்களினதும் உரிமைகளைப் பற்றி பேசுவது, விவிலியத்தை, இறைவார்த்தை என நிரூபிக்கின்றது

வவ.16-19: இதற்கு முதல் வருகின்ற வரிகள் ஒழுக்க நெறிகளை மிகவும் கடுமையாக்குவதை அவதாணிக்கலாம். பெண்களை கவருதல், மற்றும் வன்புணர்வு செய்பவர்களுக்கான தண்டனையை 16-17 வது வரிகள் காட்டுகின்றன. இங்கே குறிப்பிடப்படுகின்ற பெண்கள் இஸ்ராயேல் பெண்கள் என்றே எடுக்க வேண்டும். அதேவேளை, இஸ்ராயேல் ஆண்கள் வேற்று பெண்களை கொடுமைப்படுத்துவதை விவிலியம் சகித்தது என்று சொல்வதற்கில்லை. ஆண்ஆதிக்கம் என்ற நோய் பரவலாகக் காணப்பட்ட அக்காலத்தில், இந்த நோய்க்கு விவிலியம் தரும் மருந்து நிச்சயமாக பாராட்டப்படவேண்டியதே
.18: சூனியக் காரிகளுக்கு எதிராக உள்ளது. சூனியக் காரர்களைப் பற்றி இது பேசவில்லை. குறிசொல்லுதல், சூனியம் பார்த்தல், கைரேகை வாசித்தல், எண் சாஸ்திரம் போன்றவை இஸ்ராயேலுக்கு வெளியில், விஞ்ஞானமாக கருதப்பட்டு மதிக்கப்பட்டது. இவை பிள்ளைகளுக்கு சொல்லியும் கொடுக்கப்பட்டன. இந்த அறிஞர்கள் அரண்மனையில் வேலைக்கும் அமர்த்தப்பட்டார்கள். ஆனால் இஸ்ராயேலின்  ஒரு கடவுள் விழிபாட்டிற்கு இது எதிராக இருக்கிறது என்றெண்ணி இஸ்ராயேலில் இது வெறுக்கப்பட்டது. சில அரசர்கள் இவற்றை தடைசெய்தனர். முக்கியமாக பெண்கள் இதில் ஈடுபடுவது அருவருக்கப்பட்டது. இந்த பின்புலத்தில்தான் இவர்கள் கொலை செய்யப்பட வேண்டும் என்கிறார் ஆசிரியர் (מְכַשֵּׁפָה மெகாஷ்ஷெபாஹ்- குறிசொல்கிறவள்). 
.19: விலங்கோடு புணர்கிறவர்களும் கொலை செய்யப்படவேண்டும் எனப்படுகிறார்கள்
இங்கே இவர்கள் ஆண்களாகவே காட்டப்படுகிறார்கள். இதிலிருந்து இப்படியான பாலியல் பழக்கம் அக்காலத்தில் இருந்திருக்கிறது, அதனை ஆண்களே செய்திருக்கிறார்கள், மேலும் இது பெரிய பிரச்சனையாக இஸ்ராயேல் சமுதாயத்தால் பார்க்கப்பட்டிருக்கிறது எனலாம். (இன்னும் சில ஆண்டுகளில் இந்த பழக்கத்தை தனி மனித சுதந்திரம் எனச்சொல்லி, தாங்களை சுதந்திர நாடுகள் என நினைக்கிறவர்கள், இவற்றை அங்கீகரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை). 
(כָּל־שֹׁכֵ֥ב עִם־בְּהֵמָ֖ה கோல்-ஷோகெவ் இம்-பெஹெமாஹ், விலங்கோடு படுப்பவன்). 

.20: இந்த தொடர்ச்சியில், வேறுதெய்வங்களுக்கு பலியிடுகிறவர்களும் எச்சரிக்கப்படுகிறார்கள். வேறு தெய்வங்கள் என்பதற்கு எலோகிம் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இந்த சொல் பல தடவைகள் கடவுளுக்கும், விவிலியத்தில் பாவிக்கப்படுகிறது (לָאֱלֹהִ֖ים லா'எலோஹிம்: தெய்வங்களுக்கு). 

.21: அன்னியர்களைப் பற்றிய விவிலியத்தின் பார்வை அழகாகக் காட்டப்படுகிறது. இங்கே அன்னியர்கள் என சொல்லப்படுகறிவர்கள் கெர் (גֵר) என எபிரேய மொழியில் அழைக்கப்படுகிறார்கள்இவர்கள் இன்னொரு நாட்டில் அண்டிவாழ்கிறவர்களை குறிக்கிறார்கள். இவர்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டாம் என இஸ்ராயேலர்கள் கேட்கப்படுறார்கள்.அன்னியர்கள் அந்நாட்களின் மிகவும், பலவீனமானவர்களாகவும், ஆபத்துக்குள்ளானவர்களாகவும் இருந்தார்கள். இவர்கள் அன்னியர்கள் என்ற காரத்தினால் மட்டுமே பலவிதமான துன்பங்களையும் சந்தித்தார்கள். இவர்களை கொடுமைப்படுத்த வேண்டாம் எனவும் இஸ்ராயேல் மக்கள் கேட்கப்படுகிறார்கள்
அன்னியர்களின் துன்பத்தை இஸ்ராயேல் மக்கள் எகிப்து நாட்டில் அனுபவத்திருந்தார்கள்
இதனை ஆசிரியர் நினைவூட்டுகிறார். இது கடவுளின் வார்த்தைகளில் சொல்லப்படுகிறது
(כִּי־גֵרִים הֱיִיתֶ֖ם בְּאֶרֶץ מִצְרָֽיִם׃ கி-கெரிம் ஹெயிதெம் பெ'எரெட்ஸ' மிட்ஸ்ராயிம்- ஏனெனில் நீங்கள் அன்னியராய் எகிப்து நாட்டில் இருந்தீர்கள்). இஸ்ராயேலரின் அதிகமான சட்டங்கள் சக இஸ்ராயேல் மக்களுக்கே பாதுகாப்பாகவும், நன்மை பயப்பதாகவும் இருந்தன. அன்னியர்கள் சகோதரர்களாகவோ அல்லது நண்பர்களாகவே ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்தார்கள். இதனால் இவர்கள் பல துன்பங்களை சந்தித்தார்கள். இந்த வரி நிச்சயமாக அக்கால வாசகர்களுக்கு மிகவும் தூரநோக்குடையதாக இருந்திருக்கும்

.22: விதவைகளும் அநாதைகளுக்குன் குறிப்பிடப்படுகிறார்கள். இந்த இருவரும் சமுதாயத்தில் பின்தங்கிய நிலையிலிருந்த வேறு பலவீனமானவர்கள் (אַלְמָנָה 'அல்மானாஹ்: விதவை, יָתוֹם யாதோம்: அநாதை). இவர்கள் ஆண் துணையில்லாத காரணத்தாலும், மற்றவர்களில் தங்கிவாழ்ந்ததன் காரணத்தாலும் பல ஆபத்துக்களை சந்தித்தனர். பணக்கார சுயநலவாதிகளின் கண்களில் இவர்கள் இலகுவாக அகப்பட்டார்கள். இவர்களின் சொத்துக்களும் இலகுவாக சூறையாடப்பட்டன. இதனால்தான் இஸ்ராயேலின் பல சட்டங்கள் இவர்களை பாதுகாப்பனவாக அமைக்கப்பட்டன

.23: இவர்களுக்கு தீங்கிழைக்கப்பட்டு, அதனால் அவர்கள் அழுதால், அதன் விளைவு பாரதூரமானதாக இருக்கும் என்கிறார் ஆண்டவர். பலவீனமானவர்களின் அழுகை மிகவும் ஆபத்தானது, ஏனெனில் அதனை ஆண்டவர் கேட்கிறார், இதனால் அந்த அழுகைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பது சொல்லப்படுகிறது
இந்த வரி தொடக்க நூலில் ஆபேலின் குரலை நினைவூட்டுகிறது. ஆபேலின் குரல் காயினுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்தது. அதனைப்போலவே இங்கே பலவீனமானவர்களின் குரலும் இருக்கும் என சொல்லப்படுகிறது

.24: பலவீனமானவர்களின் அழுகை ஆண்டவரின் சினத்தை கொண்டுவருகிறது (חָרָה אַפִּ֔י ஹாராஹ் ''அபி- என் சினம் பற்றிஎரியும்.). இந்த ஆண்டவரின் சினத்தை ஆசிரியர் வாளுக்கு இரையாதளுடன் ஒப்பிடுகிறார். அக்காலத்தில் தண்டனையின் அடையாளமாகவும், போரின் அடையாளமாகவும் வாள் பார்க்கப்படுகிறது. இந்த அனுபவத்தை இஸ்ராயேலர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள் அல்லது கேள்விப்பட்டிருந்தார்கள். போரின் பின்னர் மிஞ்சியிருப்பவர்கள், விதவைகளும், சிறுவர்களும், தந்தையற்றவர்களும், பலவீனமானவர்களும் மட்டுமே. இது பாவம் செய்கிறவர்களுக்கு நடக்கும் என்கிறார் கடவுள்

.25: வட்டிக்கு கொடுத்தல், வட்டிக்கு வாங்குதல் போன்றவை திருச்சபையால் தடைசெய்யப்பட்ட ஒரு தீச்செயல். ஆனால் இது பலருக்கு தெரிவதில்லை. வட்டிக்கு கொடுத்தலையும், வாங்குதலையும் இன்றைய உலகம் வியாபாரமாகவும், சாதாரண விடயமாகவும் பார்க்க பழகிவிட்டது
முதல் ஏற்பாட்டு உலகத்தில், வட்டிக்கு கொடுத்தல் பாவமாக பார்க்கப்பட்டது. அதுவும் ஒரு இஸ்ராயேலன் இன்னொரு இஸ்ராயேலனுக்கு வட்டிக்கு கொடுப்பது தடைசெய்யப்பட்டது. வறியவருக்கு பணம் கொடுத்தல், ஒரு அறச்செயலாக பார்க்கப்பட்டது. இது உதவியாக செய்யப்பட்டது. இதனை வியாபாரமாக்குவதை இஸ்ராயேலின் சட்டம் அனுமதிக்கவில்லை (נֶֽשֶׁךְ நெஷெக்- வட்டி). இந்த இடத்தில், கடவுள் மக்களை குறிக்க, இரண்டு இதமான வார்த்தைகளை பாவிக்கின்றார், என் மக்கள் (אֶת־עַמִּ֗י 'எத்-'அம்மி: என் மக்கள்), உன்னோடு இருக்கும் ஏழைகள் (אֶת־הֶֽעָנִי֙ עִמָּ֔ךְ 'எத்-ஹெ'அனி 'இம்மாக்- உன்னோடு இருக்கும் ஏழை). இதன் மூலமாக சமூதாயத்தில் பாதிக்கப்பட்டவர்களை கடவுள் தன் மக்கள் என கருதுகிறார் என்பது புலப்படுகிறது

.26: அடகு வைத்தல் அந்நாட்களில் சாதாரணமாக இருந்திருக்கிறது போல தோன்றுகிறது. மக்கள் மேலாடைகளைக் கூட அடகு வைத்திருந்திருக்கிறார்கள் எனலாம்
இங்கே உனக்கு அடுத்திருப்பவனின் மேலாடை என்பதை, உன் நண்பனுடைய மேலாடை என்றும் மொழி பெயர்க்கலாம் (שַׂלְמַת רֵעֶךָ சல்மத் ரெ'ஏகா- உன் நண்பனின் மேலாடை). பகலில் மேலாடையின் தேவை அதிகமாக இருக்காது என நினைக்கலாம். இரவில் குளிரின் கடுமையை தாங்க மேலாடை தேவையாக இருக்கிறது. இதனால்தான் மேலாடையை இரவில் கொடுத்துவிடச் சொல்கிறார் ஆண்டவர்
 


திருப்பாடல் 18

1தெசலோனியர் 1,5-10

5ஏனெனில் நாங்கள் நற்செய்தியை உங்களுக்கு வெறும் சொல்லளவிலன்றி, தூய ஆவி தரும் வல்லமையோடும் மிகுந்த உள்ள உறுதியோடும் கொண்டுவந்தோம். உங்கள் பொருட்டு நாங்கள் உங்களிடையே எவ்வாறு நடந்துகொண்டோம் என்பதும் உங்களுக்குத் தெரியும். 6மிகுந்த வேதனை நடுவிலும் நீங்கள் தூய ஆவி அருளும் மகிழ்வோடு இறைவார்த்தையை ஏற்றுக்கொண்டீர்கள். இவ்வாறு எங்களைப்போலவும் ஆண்டவரைப் போலவும் நடப்பவரானீர்கள். 7மாசிதோனியாவிலும் அக்காயாவிலும் உள்ள, நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் முன்மாதிரியானீர்கள். 8எப்படியெனில் ஆண்டவருடைய வார்த்தை உங்கள் நடுவிலிருந்தே பரவியது. கடவுள்மீது நீங்கள் நம்பிக்கை கொண்டிருப்பது மாசிதோனியாவிலும் அக்காயாவிலும் மட்டும் அல்ல, எல்லா இடங்களிலும் தெரியவந்துள்ளது. எனவே இதைப்பற்றி நாங்கள் எடுத்துச் சொல்ல வேண்டிய தேவையே இல்லை. 9நாங்கள் உங்களிடம் வந்தபோது எவ்வாறு நீங்கள் எங்களை வரவேற்றீர்கள் என்று அவர்களே கூறுகிறார்கள். நீங்கள் எவ்வாறு சிலைகளை விட்டுவிட்டு, உண்மையான, வாழும் கடவுளுக்கு ஊழியம்புரியக் கடவுளிடம் திரும்பி வந்தீர்கள் என்றும் கூறிவருகிறார்கள். 10இவ்வாறு நீங்கள் வானினின்று வரும் அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள். அவரே வரப் போகும் சினத்திலிருந்து நம்மை மீட்பவர். இறந்த அவரையே தந்தை உயிர்த்தெழச் செய்தார்.

.5: பவுல் தனதும் தன்னுடைய சகஊழியர்களினதும், இந்த அறிவிற்கு என்ன காரணம் என்பதை 
இந்த வரியில் காட்டுகிறார். தாங்கள் ஆண்டவரின் நற்செய்தியை வெறும் சொல்லளவில் கொண்டு வரவில்லை என்கிறார் (λόγῳ μόνον லொகோ மொனொன்). ஒருவேளை இப்படியான குற்றச்சாட்டு அக்காலத்தில் இருந்ததோ என்ற ஐயமும் உண்டாகிறது
இந்த நற்செய்தியை தூய ஆவியின் மிகுந்த வல்லமையோடும், உறுதியோடும் கொண்டுவந்ததாகச் சொல்கிறார். பவுலின் நற்செய்தியைப் பற்றி பலவிதமான சந்தேகங்களும் கேள்விகளும் ஏற்பட்ட அக்காலத்தில், பவுல் இந்த உறுதியான வார்த்தைகள் தெசலோனிக்கருக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கும். இவர்கள் கேள்விகளை சந்திக்கின்றபோது, பவுலும் அவர் உடன் பணியாளர்களும் எப்படி நடந்தார்கள் என்பதையே நினைவில் எடுக்குமாறு சொல்கிறார். பவுல் மிகவும் துனிச்சலான திருத்தூதர் என்பது நன்கு புரிகிறது

.6: தெசலோனிகரின் சாட்சிய வாழ்வு அவர்களுக்கே நினைவூட்டப்படுகிறது. பவுல் மற்றும் அவருடைய சீடர்களைப்போலவே தெசலோனியரும் மிகுந்த வேதனையின் நடுவிலும் இவர்கள் தூய ஆவியின் மகிழ்வோடு இறைவார்த்தையை ஏற்றிருக்கிறார்கள்
இந்த வரிகள் ஆரம்ப காலத்தில் தெசலோனிக்க திருச்சபை சந்தித்த துன்பங்களையும், அவற்றின் நடுவிலும் அவர்கள் காட்டிய வீரத்தையும் நினைவூட்டுகிறது. இந்த துன்பம் யூத தலைமை மற்றும் கிரேக்க-உரோமைய தலைமைகளிடமிருந்து வந்த துன்பங்களாக இருக்கலாம்
இப்படியாக துன்பத்தை வீரத்தோடும் மகிழ்வோடும் ஏற்றுக்கொள்வதனால், தெசலோனியர் பவுலைப்போலவும், கிறிஸ்துவைப் போலவும் ஆகிவிட்டார்கள் என்கிறார் பவுல் (ὑμεῖς μιμηταὶ ἡμῶν ἐγενήθητε καὶ τοῦ κυρίου ஹுமெய்ஸ் மிமேடாய் ஹேமோன் எகெநேதேடெ காய் டூ கூரியூ). ஆண்டவருடைய பாடுகள், மற்றும் பவுலுடைய பாடுகள் போன்றவை ஆரம்ப கால திருச்சபையில் உதாரணங்களாக இருந்திருக்கின்றன என்பது புலப்படுகிறது

.7: தெசலோனிய திருச்சபை மற்றைய திருச்சபைகளாக மசிதோனியா மற்றும் அக்கயா திருச்சபைக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கிறது என்பதை இந்த வரி காட்டுகிறது. பவுல் திருச்சபை அங்கத்தவர்களை 'நம்பிக்கைகொண்டோர்' என சொல்கிறார் (τοῖς πιστεύουσιν டொய்ஸ் பிஸ்டெயூஊசின்- நம்பிக்கை கொண்டோருக்கு). 
திருச்சபையின் அடையாளமாக இருந்தது நம்பிக்கை என்பதற்கு இந்த வரி நல்லதோர் உதாரணம். முன்மாதிரியை குறிக்க τύπος டுபொஸ் என்ற சொல் பாவிக்கப்படுகிறது. இது வடிவம் அல்லது உதாரணம் என்ற அர்த்தத்தைக் கொடுக்கும்

.8: எப்படி இவர்கள் சாட்சியானார்கள் என்பதை விவரிக்கிறார் பவுல். அதாவது கடவுளுடைய வார்த்தை இவர்கள் நடுவிலிருந்து பரவியது என்கிறார் (ἀφ᾿ ὑμῶν γὰρ ἐξήχηται ὁ λόγος τοῦ κυρίου அப் ஹுமோன் கார் எக்ட்ஸேகேடாய் ஹெ லொகொஸ் டூ குரிஊ- உங்களிடமிருந்து ஆண்டவரின் வார்த்தை ஒலித்தது). 
இவர்கள் ஆண்டவரில் கொண்ட நம்பிக்கை, அக்காயா மற்றும் மசிதோனியாவிற்கு மட்டுமல்ல மாறாக அனைத்து இடங்களுக்கும் தெரியவந்துள்ளது என்கிறார். அக்காயா மற்றும் மசிதோனியா போன்றவை அக்கால பிரசித்தி பெற்ற உரோமைய பிரதேசங்கள். ஒரு இடத்தில் விதைக்கப்பட்ட நற்செய்தி, தளத்திருச்சபையின் நம்பிக்கையால் எப்படி மற்றைய இடங்களுக்கு செல்கிறது என்பதை பவுல் அழகாகக் காட்டுகிறார்.

.9: தெசலோனிக்கரின் சாட்சிய வாழ்வு மற்றை மாநிலத்தவருக்கு தெரிவது மட்டுமல்ல, மாறாக அவர்கள் இவர்கள் என்னென்ன செய்தார்கள் என்பதையும் அறிந்திருக்கிறார்கள் என்கிறார் பவுல். தெசலோனிக்கர் பவுலையும் அவர் நண்பர்களையும் முதலில் வரவேற்றவர்கள். அத்தோடு இவர்கள் கிரேக்க மற்றும் உரோமைய சிலைகளை விட்டுவிட்டு உண்மை கடவுளை வழிபட வந்தவர்கள்
இதனை அக்காய மற்றும் மசிதோனிய திருச்சபை நன்கு அறிந்திருக்கிறன என்கிறார். இதன் மூலமாக இவர்கள் செய்தது பாராட்டுக்குரியது என்கிறார் பவுல்
உண்மை கடவுளுக்கு திரும்பி வருதல் (ἐπεστρέψατε πρὸς τὸν θεὸν எபெஸ்ட்ரெப்சாஸ்டெ புரொஸ் டொன் தியோன்) என்கின்ற வரி மூலம், இவர்கள் ஏற்கனவே இந்த உண்மைகடவுளின் மக்களாகத்தான் இருந்திருக்கிறார், பின்னர் பிரிந்தார்கள், இப்போது பவுலுடைய வருகையால் மீண்டும் மீணடிருக்கிறார்கள் எனச் சொல்லப்படுகிறது. இவர்களுடைய இந்த சாட்சிய வாழ்வை மற்றை இரண்டு திருச்சபை சொல்லிவருகிறது என்பதன் மூலம், ஒரு திருச்சபையை இன்னொரு திருச்சபை மூலம் உற்சாகப்படுத்தும் பவுலின் தத்துவமும் தெரிகிறது

.10: இந்த வரி மூலம் இயேசு வானின்று சீக்கிரமாக வருகிறார் என்பதை இவர்கள் அக்காலத்தில் உடணடி வருகையாக கருதினார்கள் என்பதும் புலப்படுகிறது. அத்தோடு இந்த இயேசுதான் வரப்போகிற சினத்திலிருந்து காக்கவல்லவர் என்பதும் சொல்லப்படுகிறது. இவர் இறந்தவர் பின்னர் தந்தையால் உயிர் பெற்றவர் என்பதும் சொல்லப்படுகிறது. இந்த வரிகளில் ஆரம்ப கால திருச்சபையின் விசுவாசப் பிரமாணம் சிறிது சிறிதாக வெளிப்படுகிறது எனலாம்



மத்தேயு 22,34-40
34இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர். 35-36அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், 'போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?' என்று கேட்டார். 37அவர்,
''உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.'
38இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை.
39'உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக'
என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. 40திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன' என்று பதிலளித்தார்.

சதுசேயர் மற்றும் பரிசேயர் என்ற யூத குழுக்கள் இயேசுவுடைய காலத்தில் மிகவும் செயட்திறனுடையவர்களாக இருந்தார்கள் (Φαρισαῖος பரிசாய்யோஸ்: Σαδδουκαῖος சத்தூகாய்யோஸ்). இந்த இரண்டு குழுக்களும் வித்தியாசமான பார்வையில் கடவுளையும், மக்களையும், மதத்தையும் மற்றும் உரோமைய ஆட்சியையும் பார்த்தார்கள். சதுசேயர், மக்கபேயர்களின் வழிமரபிலிருந்து வந்தவர்கள். இவர்கள் தலைமைக் குருக்களாகவும், ஆலய குருக்களாகவும் இருந்தார்கள். உரோமையர்களுடைய ஆதிக்கத்தின் கீழ் பாலஸ்தீனம் வந்தபோது, இவர்கள் அரசியல் தலைவர்கள் என்பதிலிருந்த மாறி ஆலய குருக்களாக மாறினார்கள். ஆலயமும் அக்காலத்தில் அரசியல் செய்கின்ற மிக முக்கியமான இடமாகவே இருந்தது. இவர்கள் உடலின் உயிர்ப்பு, மறுவாழ்வு, மற்றும் வானதூதர்கள் போன்றவற்றை நிராகரித்தார்க்ள. இந்த வாழ்கை இந்த உலகத்தோடு முடிந்து போகும், எனவே அனைத்தையும் இந்த உலகத்திலே செய்யவேண்டும் என்ற கொள்கையை கடைப்பிடித்தார்கள். இவர்களுடைய ஆளுமையின் காரணத்தால்தான், யூதர்கள் பல கிளர்ச்சிகளை முன்னெடுத்தபோதும், உரோமையர்கள் யூதர்கள் மட்டில் ஆரம்பத்தில் பொறுமைகாட்டினர் எனச் சொல்லலாம்
பரிசேயர்கள் என்பவர்கள் மோசேயின் சட்டத்தை நுணுக்கமாக கடைப்பிடிப்பதன் வாயிலாக ஆண்டவருடைய வருகைக்காக காத்திருந்தார்க்ள. இவர்கள் லேவியர் மற்றும் மேசேயின் சட்டத்தை மிக முக்கியப்படுத்தினார்கள். உரோமையருடைய ஆதிக்கத்தை இவர்கள் மிகவே வெறுத்தார்கள்
இவர்களுடைய மிக முக்கியமான நோக்கமாக இருந்தது, மெசியாவின் வருகையே ஆகும். வானதூதர்கள், மறுவாழ்வு போன்றவற்றை இவர்கள் நம்பினார்கள். இவர்கள் லேவியர் குல வமசத்திலிருந்து வந்தார்கள் எனவும், அல்லது சாலமோனின் அரண்மனை குருக்களின் வாரிசுகள் என்றும் நம்பப்படுகிறார்கள். மத்தேயுவின் நற்செய்தியில் இயேசுவின் சாவிற்கு இவர்கள்தான் மிக முக்கியமான சூத்திரதாரிகள் எனக் காட்டப்படுகிறார்கள்

.34: பரிசேயர்கள் இயேசுவை அனுகுகிறார்கள். இந்த பகுதிக்கு முன்னர், இயேசு சதுசேயர்களை சாடியிருந்தார். (காண்க வவ.23-33). சதுசேயர்கள் உயிhப்பில் நம்பிக்கை இல்லாத காரணத்தால், ஒரு பெண்ணை சகோதரர்கள் மனைவியாக கொண்டால், உயிர்ப்பின் பின் அந்த பெண் யார் மனைவியாக இருப்பார் என்ற எதார்த்தமான கேள்வியை கேட்டு அவரை சிக்க வைக்கப் பார்க்கிறார்கள். தங்களுடைய நம்பிக்கையைக் கொண்டே இயேசுவை சிக்க வைக்கப் பார்த்தார்கள். இயேசு இவர்களுக்கு உயிர்;ப்பின் பின்னரான வாழ்வின் நிஜயத்தைக் சொல்லிக் கொடுக்கிறார்
இதனை கேள்விப்பட்ட பரிசேயர்கள் இயேசுவை பாராட்ட வருவது போல வந்து, அவர்களும் அவரை சிக்கவைக்கப் பார்க்கிறார்கள். இவர்கள் இயேசுவிடம் வருவது உண்மையில் அவருக்கு செவிகொடுக்க அல்ல, மாறாக தங்கள் எதிரிகளுக்கு ஆண்டவர் பாடம் சொல்லிவிட்டார் என்பதை ஊக்குவிக்கவே. எதிரிக்கு எதிரி, நண்பன் என்ற நம் வாட்டார வழக்கை இவர்கள் நடைமுறைப்படுத்த வருகிறார்கள்

வவ.35-36: இது இப்படியிருக்க இவர்களுள் ஒருவர், அவர் திருச்சட்ட அறிஞர், இயேசுவை சிக்க வைக்க கேள்வி ஒன்று கேட்கிறார். திருச்சட்ட அறிஞர்கள் மோசேயின் சட்டங்களை நன்கு கற்றுத் தேர்ந்தவர்கள். இவர்கள் பரிசேயர்களாகவும் இருந்திருக்கலாம். மத்தேயு நற்செய்திப்படி 
இயேசுவின் சாவில் இவர்களுக்கும் மிக முக்கிய பங்குண்டு. இப்படியாக இயேசுவைச் சுற்றி அக்கால யூத சமுதாயத்தின் மிக முக்கியமான மூன்று குழுக்களும் அவதானிப்பில் இருந்தார்கள் என்பதை அறியலாம். இந்த திருச்சட்ட அறிஞர் (νομικὸς நொமிகொஸ்), இயேசுவை சோதிக்க கேள்வி ஒன்று கேட்கிறார். நற்செய்திகளில் ஆண்டவரை சோதிக்கிறவர்கள் சாத்தான்களாக காட்டப்படுகிறார்கள்
இவர், திருச்சட்ட நூலில் சிறந்த கட்டளை எது எனக் கேட்கிறார் (ποία ἐντολὴ μεγάλη ἐν τῷ νόμῳ; பொய்யா என்டொலே மெகாலே என் டோ நொமோ). இதற்கான விடையை அவர் நன்கு அறிந்திருப்பார், அதனை இயேசு தருகிறாரா என எதிர்பார்த்திருப்பார். இயேசுவின் விடையைப் பொருத்து அவரை சிக்க வைக்கலாம் என்பதே இவர் நோக்கமாக இருந்தது. இவர் எண்ணப்படி இயேசுவிடம் இருந்து எதிர்மறையாக விடையே வரும் என நம்பியிருந்திருப்பார். (கடவுளுக்கே கேள்வி வைக்கிற அறிஞர்களை இன்றும் நாம் காணலாம்). 

.37: இயேசு இதற்கு சரியான விடையைத் தருகிறார். இந்த விடை, ஷெமா இஸ்ராயேல் 
(שְׁמַ֖ע יִשְׂרָאֵ֑ל) என்ற யூதர்களின் காலைச் செபத்திலே வருகிறது. இது சாதாரண யூதருக்கு பெரிய விடயமாக இருந்திருக்காது

காண்க . 6,5: וְאָ֣הַבְתָּ֔ אֵ֖ת יְהוָ֣ה אֱלֹהֶ֑יךָ בְּכָל־לְבָבְךָ֥ וּבְכָל־נַפְשְׁךָ֖ וּבְכָל־מְאֹדֶֽךָ׃ வெ'ஆஹவ்தா 'எத் அதோனாய் 'எலோஹெகா பெகோல்-லெவாவ்கா வுவெகோல்-நப்ஷெகா வுவெகோல்-மெ'ஓதேகா: உன் கடவுளாகிய ஆண்டவரை அன்புசெய், உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் உன் முழு வலிமையோடும். 
இதனைத்தான் இயேசு சற்றுவித்தியாசமாக சொல்கிறார். இயேசு தன்னுடைய விடையின் மூலம் தான் உண்மையான யூதன் என்பதையும், தான் ஒரு சரியான விவிலிய வாசகன் என்பதையும் காட்டிவிட்டார். இணைச்சட்டம் வியங்கோல் வாக்கியத்தில் சொன்னதை இயேசு, எதிர்கால வினையில் சொல்கிறார் ἀγαπήσεις (அகாபேசெய்ஸ்) நீ அன்பு செய்வாய்

.38: அத்தோடு இதுதான தலைசிறந்த முதன்மையான கட்டளை என்பதையும் சொல்லிவிடுகிறார் இயேசு. (ἡ μεγάλη καὶ πρώτη ἐντολή. ஹே மெகாலே காய் புரோடே என்டொலே). இந்த விடையை இவர்கள் ஒரு சாதாரண கலிலேய யூதனிடம் இருந்து எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இது இவர்கள் வைத்த சோதனைக்கே வந்த பெரிய சோதனை

.39: இவர்கள் எதிர்பாராத இன்னொரு விடையையும் இயேசு இவர்களுக்கு கொடுக்கிறார். இந்த முறை இயேசு லேவியர் புத்தகத்திலிருந்து லேவியர் சட்டத்தை காட்டுகிறார். (காண்க லேவியர் 19,18) וְאָֽהַבְתָּ֥ לְרֵעֲךָ֖ כָּמ֑וֹךָ வெ'ஆஹவ்தா லெரெ'அகா காமோகா: அன்பு செய், உன் அயலவனை உன்னைப்போல. (ἀγαπήσεις τὸν πλησίον σου ὡς σεαυτόν. அகாபேசெய்ஸ் டொன் பிலேசியோன் சூ ஹோஸ் செயாவுடொன்). 
இந்த விடை நிச்சயமாக சட்ட வல்லுனர்களுக்கு மரண அடியாக இருந்திருக்கும்
இந்த இடத்தில் இயேசு பரிசேயர்கள், சதுசேயர்கள், சட்ட வல்லுனர்களின் மனட்சாட்சியை தொடுகிறார். இவர்கள் இயேசுவை தங்கள் உடண் யூத சகோதரணாக பார்த்திருந்தால் அவருக்கு எதிராக சூழ்ச்சி செய்திருக்க மாட்டார்கள். சூழ்ச்சி செய்கிறார்கள், இதனால் இவர்கள் உண்மையாக சட்டங்களுக்கு எதிராக பாவம் செய்கிறார்கள் என்பது காட்டப்படுகிறது

.40: இறுதியாக, திருச்சட்டம் மற்றும் இறைவாக்குகளுக்கும் இந்த இரண்டு கட்டளைகளும்தான் மையம் என்கிறார். இந்த விடையின் மூலம், மத்தேயு இயேசுவை உண்மையாக ஆசிரியராகவும், புதிய மோசேயாகவும், மற்றும் வரவிருந்த மெசியாவாகவும் காட்டுகிறார் என்பதை மீண்டும் நிறுபிக்கிறார் எனலாம்

ஆண்டவரை அன்பு செய்தால், அது அயலவரை அன்பு செய்ய வைக்கும்
அயலவரை அன்பு செய்தாலும் அது ஆண்டவரைத்தான் அன்பு செய்வதற்கு சமனாகும்
ஆண்டவரை அன்பு செய்து, அயலவரை வெறுத்தல் என்பது 
அடிப்படையில் உண்மையற்றது
இங்கணம் ஆண்டவரின் பெயரால் நடைபெறும் 
அனைத்து, மத, இன, மொழி, சமய போர்களும்
உண்மையாக சாத்தானுடையவையே

ஆண்டவரை உம்மையும், அயலவரையும், என்னையும் அன்பு செய்ய
வரம் தாரும், ஆமென்

மி. ஜெகன் குமார் அமதி
வசந்தகம், யாழ்ப்பாணம்
வெள்ளி, 27 அக்டோபர், 2017













ஆண்டின் பொதுக்காலம் 32ம் ஞாயிறு ஆ: 32nd Sunday in Ordinary Times (B) 06.11.2024

ஆண்டின் பொதுக்காலம் 32 ம் ஞாயிறு ஆ : 32nd Sunday in Ordinary Times (B) 06.11.2024 ( ஞாயிறு வாசகங்களின் விளக்கவுரை ) ( A Commentary ...