ஆண்டின் பொதுக்காலம் இருபத்தி ஒன்பதாம் வாரம்.
22,10,2017
முதல் வாசகம்: எசாயா 45,1.4-6
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 95
இரண்டாம் வாசகம்: 1தெசலோனியர் 1,1-5
நற்செய்தி: மத்தேயு 22,15-21
எசாயா 45,1.4-6
1சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு செய்துள்ளார்; பிற இனத்தாரை அவர்முன் அடிபணியச் செய்வார். அரசர்களை அவர்முன் ஆற்றல் இழக்கச் செய்வார்; கோட்டை வாயில்களை அவர்முன் பூட்டியிராது திறந்திருக்கச் செய்வார்; அவரது வலக்கையை உறுதியாகப் பற்றிப் பிடித்துள்ளார்; அவரிடம் ஆண்டவர் கூறுவது இதுவே:
4என் ஊழியன் யாக்கோபை முன்னிட்டும் நான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேல் பொருட்டும் பெயர் சொல்லி உன்னை அழைத்தேன்; நீ என்னை அறியாதிருந்தும் உனக்குப் பெயரும் புகழும் வழங்கினேன். 5நானே ஆண்டவர்; வேறு எவருமில்லை; என்னையன்றி வேறு கடவுள் இல்லை; நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு வலிமை அளித்தேன். 6கதிரவன் உதிக்கும் திசை தொடங்கி மறையும் திசை வரை என்னையன்றி வேறு எவரும் இல்லை என்று மக்கள் அறியும்படி இதைச் செய்கிறேன்; நானே ஆண்டவர்; வேறு எவரும் இல்லை.
சைரஸ் மன்னன், இரண்டாம் சைரஸ் என்று அறியப்படுகிறார் இவர் கி.மு 558-530 களில் வாழ்ந்திருக்க வேண்டும். இவர் ஆட்சியை பல விதங்களில் கைப்பற்றினாhர் என்று பல வாதங்கள்
இருந்தாலும், இவருடைய தந்தை ஒரு பழங்குடி இனத்தின் தலைவராக இருந்ததாகவும்
இதனால் இவர் ஆட்சிப் பீடத்தில் ஏறினார் என்றும் ஒரு பலமான வாதம் இருக்கிறது. இவருடைய தந்தை மேதிய இராட்சியத்தில் ஒரு சிற்றரசாரக இருந்ததன் பின்னர், இவருடைய காலத்தில் எலாமிய சிற்றரசர்களும், அரச மைந்தர்களும், சைரசை மேதிய அரசிற்க்கு எதிராக கிழர்ந்தெழ வைத்தனர். மேதிய அரசரால் சைரசை மேற்கொள்ள முடியவில்லை, மேதிய இராணுவம் சைரசுடன் இணைந்து கொண்டது. கி.மு. 550 இல் சைரஸ் எக்படானா என்ற மிக முக்கியமான மேதிய நகரை கட்டி அதனை தன்னுடைய தலைமைப் பீடமாக மாற்றினார், இதிலிருந்து அவர் பாரசீகத்தையும் ஆட்சிசெய்யத் தொடங்கினார்.
மேதிய மன்னராக இருந்தாலும், சைரஸ் பாரசீகத்தையும் இணைத்து ஒரு சர்வதேச நிர்வாக அலகை உருவாக்கி தன்னுடைய ஆட்சியை வலுப்படுத்தினார். மேதியாவும் பாரசீகமும்
இணைந்ததால் அங்கே ஒரு பலமான ஆட்சி உருவாகியது, இது மத்திய கிழக்கில் ஒரு பலமான ஆட்சியை இருநூறு வருடங்களுக்கு உருவாக்கியது (தானி 5,28: எஸ்தர் 10,2). தன் நிலப்பரப்பை உறுதிப்படுத்திய சைரஸ் வடமேற்கு நோக்கி தன் ஆட்சியை விரிவுபடுத்த விரும்பினார். ஆசியா மற்றும் கிரேக்கத்தின் எல்லைப் பகுதியை கைப்பற்றிய சைரஸ் மெதுவாக பபிலோனியாவை நோக்கி தன் ஆட்சியை விரிவுபடுத்தினார். பபிலோனியா அக்காலத்தில் அசிரியாவின் வீழ்ச்சியின் காரணமாக அதிகமான ஆட்சி நிலங்களை தன்னுடையதாக்கியிருந்தது. கி.மு 543 நபோனிதஸ் என்ற பபிலோனிய அரசர் சைரசுடன் போர் செய்ய ஆயத்தமானார். கி.மு 539இல் சைரஸ் தானே படையை நடத்திச் சென்று, பபிலோனியாவின் எல்லைகளை தியாலா சமவெளியில் கைப்பற்றினார். இந்த இடத்தில் இருந்து கொண்டு பபிலோனிய அரசர்கள் கைவிட்ட நீர்பாசனம் மற்றும் விவசாய அபிவிருத்திகளை முன்னெடுத்து மக்கள் மனங்களை வென்று அவர்களிடம் பெயர் பெற்றார். இந்த காலப்பகுதியில் இவர் தன் இராணுவத்தைப் பலப்படுத்தி, பின்னர் எந்த எதிர்ப்பும் இல்லாமல் நபோனிதசை வென்று பபிலோனியாவிற்குள் நுழைந்தார். பபிலோனியவை திருப்திப் படுத்த, அதற்கு மிக முக்கியமான சலுகைகளை கொடுத்து மத்திய கிழக்கின் அனைத்து இடங்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார், இதனால் எகிப்தை விடுத்து அனைத்து விவிலிய நிலங்களும் அவர் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
சைரசின் அசுர முன்னேற்றம், அங்கு இடம்பெயர்ந்திருந்த யூதர்களுக்கு வித்தியாசமான உணர்வைக் கொடுத்தது. அவர்கள் சைரசை கடவுளின் கரமாக பார்த்தனர். இரண்டாம் எசாயா சைரஸை கடவுளின் ஊழியனாகவும், அபிசேகம் செய்யப்பட்டவராகவும் பார்த்தார் (காண்க எசாயா 44,28: 45,1). சைரஸ் இஸ்ராயேலின் கடவுளை அறியாதவராக இருந்தாலும் அவரை வழிநடத்துபவர் இஸ்ராயேலின் கடவுள் என எசாயா நம்பி இறைவாக்குரைக்கிறார். சைரஸ் பபிலோனியாவை கைப்பறியதை இவர் இஸ்ராயேலின் விடுதலையோடு ஒப்பிடுப்பிட்டு இதுதான் சீயோனிற்கு திரும்பும் காலம் என பார்க்கிறார். இதனை சைரஸ் ஒரு அரச ஆணையோடு செய்கிறார் என்ற எஸ்ரா புத்தகமும் காட்டுகிறது. இருப்பினும் இந்த சைரசின் அரச ஆணை, இஸ்ராயேலர்களின் நாட்டை திரும்ப கொடுத்தது, இதன் உண்மைத் தன்மையை சில ஆய்வாளர்கள் கேள்விப்டுத்துகின்றனர். சைரஸ் தன் ஆட்சியில் சிறுபான்மை மக்களை கவர இப்படியான முயற்சிகளை செய்திருக்கிறார், அத்தோடு இந்த அரசாணையில் பாரசீக வாசம் அதிகமாகவே இருக்கிறபடியால் இப்படியான ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டிருக்கலாம் என எடுக்கலாம். விவிலியத்தில் சைரஸ் நேர்முகமான அரசராக பார்க்கப்படுகிறார், இவர் எருசலேம் தேவாலயத்தை கட்டி, அதன் மூலம் இஸ்ராயேலருக்கு தாங்கள்
இழந்த அடையாளத்தை கொடுக்க முயன்றார் என்பதை எஸ்ரா புத்தகமும் காட்டுகிறது.
பபிலோனியாவை கைப்பற்றிய சைரஸ் மெதுமெதுவாக தன் உட்கட்டமைப்பு நிர்வாகத்தை பலப்படுத்தினார். பாரசீகத்தின் மிக முக்கியமான நகர்கள் இவர் காலத்தில் உருவாகின. பபிலோனியாவை கைப்பற்றியதன் பின்னர் சைரசின் வரலாறு அதிகமாக பதியப்படவில்லை. பபிலோனியாவிலிருந்து வடக்கு நோக்கி முன்னேற, சைரஸ் தன் மகன் கம்பிசை பபிலோனிய மன்னராக முடிசூட்டினார் (கி.மு 530). மத்திய ஆசியாவை கைப்பற்றும் போரில் சைரஸ் மரணித்தார் அமைதியாக எளிமையான முறையில் இந்த பேரரசர் அடக்கம் செய்யப்பட்டார். பாசார்காதே என்ற பாரசீக நகரில் இவரின் உடலம் வைக்கப்ட்டது. முற்கால வரலாற்று ஆசிரியர்கள், சைரசை பாரசீக பேரரசின் நிறுவுனராகவும், அவர் பெயரில் பல வரலாறுகள் இருந்ததாகவும் சொல்கிறார்கள், இருப்பினும் அவை தற்போது கிடைக்கவில்லை.
சைரஸ் இறந்த பின்னர் இன்னும் பிரசித்தி பெற்றார், அவர் ஒரு வரலாற்று தெய்வ மகனாக மாறினார். கிரேக்க ஆசிரியர்கள்கூட இவரை ஒரு தலைசிறந்த அரசியல் சாணக்கியனாகவும், போர் வீரராகவும் காண்கின்றனர். கிரேக்க பிரசித்தி பெற்ற ஆசிரியர் செனோபோன் சைரசின் புகழை பிரசித்தி பெற்ற நூலான 'சைரபிடியாவில்' பதிந்திருக்கிறார். சமயம் சார்ந்த வரலாற்று ஆசிரியர்கள் சைரசை தங்கள் நம்பிக்கையின் படி பார்த்திருக்கிறார்கள். யூத வரலாற்று ஆசிரியர் யோசெபுஸ், சைரஸ் எசாயாவின் இறைவாக்கை படித்ததன் பின்னர்தான் பேரரசராக வளர்ந்தார் என்கிறார்.
வ.1: எசாயா சைரஸ் மன்னரை எப்படிப் பார்க்கிறார் என்பது புலப்படுகிறது. எசாயா
இறைவாக்கினருக்கு சைரஸ், ஆண்டவரால் திருப்பொழிவு செய்யப்பட்டவர் (לִמְשִׁיחוֹ֮ לְכ֣וֹרֶשׁ
லிம்ஷிஹு லெகோரெஷ் - சைரசை மெசியாவாக்கினார்) என்கிறார். பிறவினத்தவர்களை ஆண்டவர் சைரஸ் முன்னிலையில் அடிபணிய வைத்தார் எனவும் சொல்கிறார். அரசர்களின் இடைக்கச்சை சைரஸ் முன்னிலையில் அவிழ்ந்தன என்று எபிரேய விவிலியம் காட்டுகிறது. இதன் மூலமாக சைரசின் முன்னால், அரசர்கள் வலுவிழந்தார்கள் எனக் காட்டுகிறது. (וּמָתְנֵ֥י מְלָכִ֖ים אֲפַתֵּחַ வுமோத்நெ மெலாகிம் 'அபாத்தெஹா- இடைக்கச்சைகளை அவிழ்ப்பேன்).
அத்தோடு நகரத்தின் வாயில்கள் பூட்டியிருக்கா என்கிறார் ஆண்டவர். இதன் மூலம் சைரசுக்கு எந்த நகரும் எதிர்ப்பு தெரிவிக்காமல், வரவேற்கும் என்கிறார். இந்த வரி சைரசுடைய
இராணுவ மற்றும் அரசியல் வெற்றிகளைக் காட்டுகிறது (דְּלָתַ֔יִם וּשְׁעָרִים לֹא יִסָּגֵרוּ׃ தெலாதாயிம் வுஷ்'ஆரிம் லோ' யிஸ்ஸாகெரூ- கதவுகளும் வாயில்களும் மூடியிருக்கா).
ஆண்டவர் சைரசின் வலக்கையை உறுதியாக பற்றிக்கொண்டுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது (הֶחֱזַקְתִּי בִֽימִינ֗וֹ ஹெஹெட்சாக்தி பிமிநோ- அவன் வலக்கையை பிடித்துள்ளேன்), வலக்கை சைரசின் ஆட்சி அதிகாரத்தைக் காட்டுகிறது.
வவ.2-3: கடவுள் சைரசுக்கு செய்யவிருப்பதை இந்த வரிகள் காட்டுகின்றன, அத்தோடு இந்த வரிகளிலிருந்து அக்காலத்தில் நாடுகளை கைப்பற்றுகிறவர்கள் அந்த கைப்பற்றப்பட்ட நாடுகளுக்கு என்ன செய்வார்கள் என்பது புலப்படுகிறது. (எங்கள் நிலங்கள் இலங்கை- இந்திய இராணுவங்களால் கைப்பற்றப்பட்டபோது இதனைத்தான் சந்தித்தன). சைரசுக்காக குன்றுகள் சமப்படுத்தப்படும், இதனால் அவருடைய வீரர்கள் இலகுவாக முன்னேறுவார்கள். கதவுகள் செப்புகளால் செய்யப்பட்டு இரும்புகளால் தாழிடப்பட்டன, அவையும் திறந்துவிடப்படுமாம். வேற்று நாட்டவர்கள் வருகின்ற போது, மண்ணின் மைந்தர்கள் செல்வங்களை ஒழித்துவைத்தார்கள். இந்த செல்வங்களும் புதையல்களும் சைரசுக்கு தரப்படும் என்கிறார் ஆண்டவர். இதன் மூலமாக சைரசை இஸ்ராயேலின் கடவுள்தான் பெயர் சொல்லி அழைத்தார் என்பதை சைரசே புரிந்து கொள்வார்.
כִּי־אֲנִי יְהוָה הַקּוֹרֵא בְשִׁמְךָ אֱלֹהֵי יִשְׂרָאֵל׃ கி-'அனி அதோனாய் ஹக்கோரெ' வெஷிம்கா 'எலோஹெ யிஸ்ரா'எல்.- அதாவது நான் உன்னை பெயர்சொல்லி அழைத்தேன், நான் இஸ்ராயேலின் கடவுள்.
இந்த வரிகளின் மூலமாக சைரசின் செயற்பாடுகளுக்கு பின்னால் கடவுளின் கரம்தான் நிச்சயமாக இருக்கிறது என்பதை எசாயா உணர்ந்திருக்கிறார் என்பது புரிந்துகொள்ளலாம்.
வ.4: இந்த வரியில் கடவுள் ஏன் இவற்றை சைரசுக்கு செய்தார் என்பதை தெளிவுபடுத்துகிறார்.
இஸ்ராயேலைப் பொருட்டுத்தான் சைரசஸ் தெரிவு செய்ய்பட்டார் என்பது சொல்லப்படுகிறது.
இஸ்ராயேலரை, தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் மற்றும் ஊழியன் யாக்கோபு என்று ஒத்த கருத்துச் சொற்களில் அழைக்கிறார். (לְמַ֙עַן֙ עַבְדִּ֣י יַעֲקֹ֔ב וְיִשְׂרָאֵ֖ל בְּחִירִ֑י லெமா'அன் 'அவ்தி யா'அகோவ் வெயிஷ்ரா'எல் பெஹிரி- என் பணியாளன் யாக்கோபின் பொருட்டு, இஸ்ராயேல் என்னுடைய தெரிவுசெய்யப்பட்டவன்).
சைரஸ் கடவுளை அறியாதிருந்தவர் என்பதை எசாயாவும் கோடிடுகிறார்
(לֹ֥א יְדַעְתָּֽנִי லோ யெத'தானி), இருந்தும் கடவுள்தான் இவருக்கு பெயரும் புகழும் கொடுத்தவர் என்பதை எசாயாவும் நம்புகிறார். இஸ்ராயேல் அல்லாத ஒருவரை கடவுளின் ஊழியர் என்று
இஸ்ராயேலர் ஏற்றுக்கொள்வது, எசாயா புத்தகத்தின் தனித்துவம். பிற்காலத்தில் சைரசை குறித்துக்காட்டிய சில பகுதிகள் இயேசுவிற்கு கிறிஸ்துவாக பயன்பட்டது.
வ.5: சைரசை ஊழியனாக ஏற்றுக்கொள்வதில் சிக்கல் இல்லை ஆனால் சைரசின் கடவுள் யார் என்பதில்தான் சிக்கல்கள் இருக்கின்றன. சைரஸ் கடவுளை அறியாதிருந்தார் ஆனால் கடவுள் சைரசை நன்கு அறிந்திருந்தார், இதனால் கடவுள் சைரசுக்கு சில உண்மைகளை குறிப்பிட வேண்டியிருக்கிறது. இந்த வரியில் கடவுள் தான்தான் ஆண்டவர் என்கிறார் அத்தோடு வேறு எவரும் இல்லை என்கிறார் (אֲנִי יְהוָה וְאֵין עוֹד 'அனி அதோனாய் வெ'ஏன் 'ஓத்- நான் கடவுள் வேறெவறும் இல்லை). இவர் கடவுளை அறியாதிருந்தும் அவருக்கு கடவுள் வலிமை அளித்துள்ளார்.
வ.6: இந்த வரியிலும் கடவுளின் ஒருமைத்தன்மை காட்டப்படுகிறது. சூரியன் உதிக்கும் திசையிலிருந்து அது மறையும் திசைவரைக்கும் என்று ஆசிரியர் சொல்வது அனைத்து நிலங்களையும் உள்ளடக்குவதற்கான ஒரு யுக்தி (מִמִּזְרַח־שֶׁ֙מֶשׁ֙ וּמִמַּ֣עֲרָבָ֔הּ மிம்மிட்செராஹ்-ஷெமெஷ் வுமிம்மா'அராவாஹ் - சூரியனின் கிழக்கிலிருந்து அதன் மேற்குவரை). சைரசிற்கு தான் யார் என காட்ட கடவுள் அவரை உயர்த்தியுள்ளார், அத்தோடு சைரசின் உயர்ச்சி மக்களினங்களுக்கும் கடவுள் யார் என தெரிவிக்கின்றது.
இந்த பகுதிகள் சைரசை மையமாகக் கொண்டு இறைவாக்குரைத்தாலும், இவற்றின் மையச் செய்தியாக இருப்பது, கடவுள் ஒருவரே என்பதாகும்.
திருப்பாடல் 96
அனைத்து உலகின் அரசர்
(1குறி 16:23 - 33)
1ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;
2ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்; அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்.
3பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.
4ஏனெனில், ஆண்டவர் மாட்சிமிக்கவர்; பெரிதும் போற்றத் தக்கவர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே.
5மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர்.
6மாட்சியும் புகழ்ச்சியும் அவர் திருமுன் உள்ளன் ஆற்றலும் எழிலும் அவரது திருத்தலத்தில் உள்ளன்
7மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள். மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.
8ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள்; உணவுப்படையல் ஏந்தி அவர்தம் கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள்.
9தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள்.
10வேற்றினத்தாரிடையே கூறுங்கள்; 'ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். 11விண்ணுலகம் மகிழ்வதாக் மண்ணுலகம் களிகூர்வதாக் கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்.
12வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்; அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும்.
13ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார்.
திருப்பாடல்கள் 95-100 வரையுள்ளவை அரச முடிசூட்டுப் பாடல்கள் என அறியப்படுகின்றன. இந்த பாடல்கள் ஆண்டவரின் அரசத்துவத்தைப் பற்றிப் பாடுகின்றன. திருப்பாடல் 96இன் பின்புலத்தை சில ஆய்வாளர்கள் தாவீதோடு இணைத்துப்பார்க்கின்றனர். தாவீது ஆண்டவரின் திருப்பேழையை ஒபேத்-ஏதோம் வீட்டிலிருந்து எருசலேமிற்கு கொண்டு வந்தார், பின்னர் அதனை அதற்கென ஆயத்தம் செய்த இடத்தில் வைத்தபின்பு, அங்கே எரிபலிகளையும், தானிய பலிகளையும் ஒப்புக்கொடுத்தார். இறுதியாக தாவீது குருவாக செயற்பட்டு அங்கே கூடியிருந்த தன் மக்களுக்கு ஆண்டவரின் ஆசிரையும், பரிசுப்பொருட்களையும் கொடுக்கிறார். மேலுமாக தாவீது சில லேவியர்களையும், பாடகர்களையும் ஆண்டவரின் கூடாரத்தில் பணியாற்றுமாறு வேலைக்கு அமர்;த்துகிறார். இப்படியாக அமர்த்தப்பட்ட பாடர்கள் அங்கு பாடிய பாடல்களில் ஒன்றே இந்த திருப்பாடல் 96 என்ற வாதமும் இருக்கிறது.
வ.1: இந்தப் பாடல் வியங்கோல் வாக்கியத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் கட்டளை கொடுப்பவராக இந்த பாடலை அமைத்துள்ளார். வழமையான எதுகை மோனைகள், திருப்பிக் கூறல்கள் போன்றவை இந்த பாடலிலும் அவதானிக்கப்படக்கூடியவை.
ஆண்டவருக்கு புதியதொரு பாடல் பாடுமாறு கட்டளையிடுகிறார் ஆசிரியர் (שִׁיר חָדָשׁ ஷிர் ஹாதாஷ்- புதுப் பாடல்). புதிய பாடல் என்பது இங்கே ஆண்டவரின் புகழை மனிதர் ஒவ்வொரு கணமும் புதுமையாக பார்க்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. இந்த வரியின் பிரிவை ஒத்தே அடுத்த பிரிவும், ஆண்டவரை புகழ்ந்து பாடுங்கள் என்ற கட்டளையும் கொடுக்கப்படுகிறது. இங்கணம் புதிய பாடல் என்பது புகழ்ந்து பாடுங்கள் என்பதுடன் ஒப்பிடப்படுகிறது எனலாம்.
வ.2: இரண்டாவது வரியில் மூன்று கட்டளைகள் கொடுக்கப்படுகின்றன:
அ. ஆண்டவரை போற்றிப் பாடுங்கள், שִׁירוּ ஷீரூ
ஆ. அவர் பெயரை வாழ்த்துங்கள், בָּרֲכוּ பாரகு
இ. அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள், בַּשְּׂרוּ பஷ்ரூ
இந்த கட்டளைகள் ஆண்டவரை மகிமைப்படுத்துவதையே மையமாகக் கொண்டுள்ளன. ஆண்டவரை போற்றுதலும், அவரை வாழ்த்துதலும் அவரை அறிவித்தலும் மையத்தில் ஒரே நோக்கத்தையே கொண்டுள்ளன. அவை ஆண்டவரை புகழ்வதற்கான அறைகூவல்கள்.
வ.3: இந்த வரியின் நோக்கமாக பிறவினத்தவர்கான அறிவிப்பு உள்ளது. பிறவினத்தவர்க்கு கடவுளை அறிவிக்க கட்டளையிடுகிறார் ஆசிரியர். பிறிவினத்தவர்கள் (גּוֹיִם கோயிம்) சாதாரணமாக இஸ்ராயேலருக்கு இரண்டாவதாக கருதப்பட்டார்கள். ஆனால் விவிலியத்தில் பல இடங்களில் கடவுள் பிறவினத்தவர்க்கு முக்கியத்துவம் கொடுப்பதை அவதானிக்கலாம். பிறவினத்தவர் என முதல் பகுதி காட்டுவோரை இரண்டாவது பகுதி மக்களினங்கள் (הָעַמִּים ஹா'அம்மிம்) என்று ஒத்தவார்த்தைப் படுத்துகிறது.
வ.4: இந்த கட்டளைகளுக்கான காரணத்தை இந்த வரியில் தெளிவு படுத்துகிறார் பாடலாசிரியர். ஆண்டவர் மாட்சிமிக்கவர் என்பது இவருடைய முதலாவது காரணம் (כִּי גָדוֹל יְהוָה கி கதோல் அதோனாய்). இரண்டாவதாக அவர் பெரிதும் போற்றுதலுக்குரியவர் (מְהֻלָּל מְאֹד மெஹுல்லால் மெ'ஓத்). மூன்றாவதாக அவர் தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான அஞ்சுதற்குரியவர் (עַל־כָּל־אֱלֹהִֽים 'அல்-கோல்-'எலோஹிம்: அனைத்து கடவுள்களுக்கும் மேலானவர்). கடவுளுக்கு அஞ்சுதல் என்பது கடவுளை விசுவசித்தல் என்ற பொருளையே விவிலியத்தில் தருகிறது. அத்தோடு இங்கே வேறு தெய்வங்களைக் குறிக்க எலோஹிம் என்ற வார்த்தை பாவிக்கப்பட்டுள்ளது இதன் பொருளாக தெய்வங்கள் என்பது வரும், இதே வார்த்தை இஸ்ராயேலின் கடவுளை குறிக்க பயன்படும்போது இறைவன் அல்லது கடவுள் என்று ஒருமையில் பாவிக்கப்படுகிறது.
வ.5: திருப்பாடல் ஆசிரியர் தம்மை சுற்றியிருந்த தெய்வ சிலைகளை நன்கு அறிந்திருப்பார். அக்காலத்தில், பலவிதமான சிலைவழிபாடுகள், எகிப்த்து, பாரசீகம், கிரேக்கம், கானானிய பிரதேசங்கள் மற்றும் உரோமையில் பரவிக்கிடந்தன. இவைகளை மக்களினங்களின் சிலைகள் என்கிறார் ஆசிரியர். இந்த வரியில் அழகான எதுகை மோனை பாவனை கையாளப்படுகிறது. சிலைகளைக் குறிக்க எலிலிம் என்ற சொல் பாவிக்கப்படுகிறது, இதனை கடவுளைக் குறிக்கும் எலோகிம் என்ற சொல்லை ஒத்த ஒலியை தருவது விசேடமானது.
כָּל־אֱלֹהֵי הָעַמִּים אֱלִילִים கோல்-'எலோஹெ ஹா'அமிம் 'எலிலிம்
இதற்கு மாறாக இஸ்ராயேலின் கடவுள் விண்ணுலகை படைத்தவர் எனப்படுகிறார். விண்ணுலகை படைத்தவர்கள் என்று அக்காலத்தில் பல கடவுள்களை புராணங்கள் முன்னிலைப்படுத்தின, இதனை அறிந்திருக்கிற ஆசிரியர் உண்மையில் விண்ணுலகை படைத்தவர் இஸ்ராயேலின் கடவுள் என்கிறார்.
וַֽיהוָ֗ה שָׁמַ֥יִם עָשָֽׂה׃ வாஅதோனாய் ஷாமாயிம் 'ஆசாஹ்.
வ.6: இந்த கடவுளின் திருமுன் மாட்சியும் புகழும் உள்ளதாகச் சொல்கிறார் (הוֹד־וְהָדָר ஹோத்-வெஹாதார்). முதல் ஏற்பாட்டுக் காலத்தில் அதிகமான மனித அரசர்கள் தங்களை தெய்வ மனிதர்களாகவே காட்ட முயன்றனர். இவர்களுக்கு மாட்சியும் புகழும் அதிகமாகவே தேவைப்பட்டன. இதனால்தான் பலவிதமான போர்களும், கட்டடக்கலைகளும், அபிவிரித்திகளும் முன்னெடுக்கப்பட்டன. திருப்பாடல் ஆசிரியர் இந்த தேடப்படும் புகழும் மாட்சியும் கடவுளின் திருமுன்தான் உள்ளன என்கிறார். ஆக இவை மனிதர் முன் இல்லை என்பதை சொல்கிறார் எனலாம்.
இதற்கு ஒத்த கருத்தாக பலமும், எழிலும் கடவுளின் தூயகத்தில் இருக்கிறது என்றும் சொல்ப்படுகிறது. இந்த பலம் மற்றும் எழில் போன்றவையும் அக்கால அரசர்களால் அதிகம் விரும்பப்பட்டன. இதனால் அவர்கள் தங்கள் அரண்மனைகளை பலமானதாகவும், எழில்மிகுந்ததாகவும் வடிவமைக்க முனைந்தனர். ஆயினும் ஆண்டவரின் தூயகத்தில்தான் பலமும் எழிலும் நிறைவாக இருக்கிறது என்று சொல்லி, மனித தலைவர்களின் பலவீனத்தைக் காட்ட முயற்சிக்கிறார் ஆசிரியர் என எடுக்கலாம். (עֹז וְתִפְאֶרֶת 'ஓட்ஸ் வெதிப்'எரெத் - பலமும் அழகும்).
வவ.7-8: மக்களினங்களின் குடும்பங்களுக்கு (מִשְׁפְּחוֹת עַמִּים மிஷ்பெஹொத் 'அம்மிம்) கட்டளைகள் கொடுக்கப்படுகின்றன. ஆசிரியர் இவர்களை கடவுளிடம் வருமாறு கட்டளையிடுகிறார், கடவுளிடம் வந்து அவருக்கு பலத்தையும், மாட்சியையும் கொடுக்கச் சொல்கிறார்.
ஆண்டவரின் பெயருக்கு மாட்சி சாற்றுதல், மற்றும் அவருக்கு காணிக்கைகள் கொண்டுவருதல் போன்றவையும் ஆண்டவருக்கு கொடுக்கும் மரியாதைகளைக் காட்டுகின்றன. ஆண்டவருக்கு மரியாதை செலுத்துதல் என்பது ஆண்டவரில் ஒருவர் நம்பிக்கை கொள்ளுதலைக் குறிக்கிறது. நம்பிக்கை உள்ள கடவுளுக்கு மட்டும்தான் மனிதர்கள் மாட்சியையும், காணிக்கைகளையும் கொண்டுவந்தார்கள். ஆசிரியரின் நோக்கம், மக்களின் காணிக்கை அல்ல மாறாக மக்களின் நம்பிக்கை. இந்த இரண்டு வரியிலும் கட்டளையை பெறுகிறவர்கள், யூதர்கள் அல்ல மாறாக மக்களினங்கள், இந்த சொல் புறவினத்தவர்களைக் குறிக்கிறது. இந்த திருப்பாடல் அதிகமாக புறவின மக்களை நோக்கியதாக அமைக்கப்பட்டிருக்கிறது.
வ.9: மீண்டுமாக புறவின மக்கள் தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபட கேட்கப்படுகிறார்கள் (בְּהַדְרַת־קֹדֶשׁ பெஹத்ரத்-கோதெஷ்). தூய கோலம் என்பது இங்கே தூய உள்ளத்தைக் குறிக்கலாம். ஆண்டவரை வழிபட தூய்மையான உள்ளம் தேவையானது என்பதை பல இடங்களில் விவிலியம் காட்டுகிறது. இஸ்ராயேல் மக்களின் சட்டங்களும் அதனைத்தான் வலியுறுத்தின. இந்த தேவையை இப்போது ஆசிரியர் புறவினத்தவருக்கும் கட்டளையாக்குகிறார்.
இதற்கு ஒத்த கருத்தாக, ஆண்டவர் முன் நடுங்குங்கள் என்று சொல்கிறார் (חִילוּ ஹிலூ). இப்படியாக ஆண்டவர் திருமுன் நடுங்குதல் என்பதும், ஆண்டவரிடம் நம்பிக்கை கொள்ளுதல் என்ற அர்த்தத்திலே பார்க்கப்படவேண்டும்.
வ.10: இந்த வரி இஸ்ராயேல் மக்களுக்கு கட்டளை கொடுக்கிறது. அவர்கள் ஆண்டவர் யார் என புறவினத்தவருக்கு அறிவிக்க அழைக்கப்படுகிறார்கள். ஆண்டவர் ஆட்சி செய்கிறார், பூவுலகு உறுதியாக நிலைத்திருக்கிறது, அது அசைவுறாது, ஆண்டவரின் தீர்ப்பு வழுவாது போன்றவற்றை புறவினத்தவர்க்கு அறிவிக்க அழைக்கப்படுகிறார்கள். இந்த ஏக்கங்கள் புறவினத்தவர்க்கு
இருந்திருக்கலாம், இஸ்ராயேல் மக்களுக்கும் இருந்திருக்கலாம். இவற்றை இவர்கள் அறிவிக்க அழைக்கப்படுகிறார்கள் என்றால் முதலில் இவர்கள் இதனை நம்ப வேண்டும் என்றாகிறது.
வவ.11-12: இந்த வரிகளில் ஆசிரியர் தன்னுடைய விருப்பங்களை படைப்புக்களுக்கு கட்டளைகளாக விடுகிறார். விண்ணுலகை மகிழக் கேட்கிறார் (יִשְׂמְחוּ הַשָּׁמַיִם யிஸ்மெஹு ஹஷாமயிம்). விண்ணுலகம் என்பது எப்போதும் மகிழ்வாக இருக்கும் இடம் என நம்பப்பட்டது. இதனையே மகிழ்வாக இருக்கும்படி கேட்பதன் வாயிலாக ஆண்டவரின் மகிழ்விற்கு அனைவரும் ஏங்குகின்றனர் என்பதை காட்டுகிறார் எனலாம். விண்ணுலகை மகிழக் கேட்டவர் மண்ணுலகையும் களிகூரக் கேட்கிறார் (תָגֵל הָאָרֶץ தாகெல் ஹா'ஆரெட்ஸ்). மண்ணுலகிற்கு களிப்புணர்வு மிகவும் தேiவாயனது, அதனை ஆசிரியர் கேட்பது நியாமாகிறது. விண்ணுலகு, மண்ணுலகுடன் இணைத்து கடலில் உள்ளவையும் உள்வாங்கப்படுகிறது.
கடலில் தீய சக்திகள் இருப்பதாக நம்பிய அக்கால உலகில், இந்த வரியை வைத்து பார்ப்பதன் வாயிலாக ஒருவேளை இவர் கடலை கீழுலகாக பார்க்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. அதற்கான வாய்ப்புக்களும் உள்ளன.
இந்த வரியுடன் ஒத்து அடுத்த வரியும் வருகிறது. இந்த வரியில் வயல்வெளியில் உள்ளனவும், காட்டில் உள்ளவையும் எழுவாய்ப் பொருளாக எடுக்கப்படுகின்றன. வயல் வெளியில் உள்ளவை வீட்டு விலங்குகளாகவும், காட்டில் உள்ளவை காட்டு விலங்குகளாகவும் பார்க்கப்பட்டன. இன்னும் விசேடமாக காட்டு மரங்களை ஆசிரியர் அழகாக வர்ணிக்கிறார். மரங்களின் அசைவும், அவைகளின் இலை மற்றும் கிழைகள் ஏற்படுத்தும் ஒலிகளையும் மொழியாக பார்க்கிறார். இதனால்தான் காட்டு மரங்களின் ஓசைகளை பாட்டாக காண்கிறார் ஆசிரியர் (אָז יְרַנְּנוּ כָּל־עֲצֵי־יָעַר'அட்ஸ் யெரன்னூ கோல்-'அட்செ-யா'ர்). கவிஞர்களுக்கு மரங்களின் அசைவுகள் நடனமாகவும், ஒலிகள் பாடலாகவும் தெரிவது சாதாரணமே.
வ.13: இந்த வரியில் ஆண்டவருடைய வருகை எழுவாய் பொருளாக்கப்படுகிறது. இந்த திருப்பாடல் ஆண்டவரின் அரச பாடலாக இருக்கின்ற படியால் அவருடைய வருகை முக்கியமாக சொல்லப்பட வேண்டும். அரசர்களுடைய வருகைக்காக மக்கள் காத்து இருப்பார்கள். அதே நோக்கோடு இங்கே ஆண்டவருடைய வருகையும் பார்க்கப்படுகிறது.
ஆண்டவருடைய வருகையின் நோக்கம் என்னவென்பதும் சொல்லப்படுகிறது. ஆண்டவர் பூவுலகிற்கு நீதித்தீர்ப்பு வழங்கவே வருகிறார். நிலவுலகை நீதியுடனும் உண்மையுடனும் நடத்தவே வருகிறார் என்கிறார். நீதியும் உண்மையும் கடவுளின் கொடையாக பார்க்கப்படுவது
இங்கே நோக்கப்படவேண்டும். (צֶדֶק ட்செதெக், நீதி: אֶמוּנָה 'எமூனாஹ், உண்மை).
1தெசலோனியர் 1,1-5
1. முன்னுரை
வாழ்த்து
1தந்தையாம் கடவுளோடும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கின்ற தெசலோனிக்க சபைக்கு, பவுலும் சில்வானும் திமொத்தேயுவும் எழுதுவது உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!
தெசலோனிக்கரின் நம்பிக்கையும் முன்மாதிரியும்
2நாங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இடைவிடாது உங்களை நினைத்து உங்கள் அனைவருக்காகவும் என்றும் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம். 3செயலில் வெளிப்பட்ட உங்கள் நம்பிக்கையையும், அன்பினால் உந்தப்பட்ட உங்கள் உழைப்பையும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்நோக்கி இருப்பதால் நீங்கள் பெற்றுள்ள உங்கள் மனவுறுதியையும் நம் தந்தையாம் கடவுள்முன் நினைவுகூறுகிறோம். 4கடவுளின் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே! நீங்கள் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். 5ஏனெனில் நாங்கள் நற்செய்தியை உங்களுக்கு வெறும் சொல்லளவிலன்றி, தூய ஆவி தரும் வல்லமையோடும் மிகுந்த உள்ள உறுதியோடும் கொண்டுவந்தோம். உங்கள் பொருட்டு நாங்கள் உங்களிடையே எவ்வாறு நடந்துகொண்டோம் என்பதும் உங்களுக்குத் தெரியும்.
பவுலுடைய திருமுகங்கள் அக்கால கடித முறைகளை உள்வாங்கியிருந்தன. கடிதங்களில் முகவரி, வாழ்த்து, முக்கிய செய்திகள், மற்றும் அறிவுரை இறுதியாக வாழ்த்துக்கள் போன்றவை மிக முக்கியமான பாகங்களாக இருந்தன. பவுலுடைய திருமுகங்களில் முதலாவதாகவும், ஆரம்ப கால திருச்சபையின் சிந்தனைகளை தாங்கியதாகவும் இந்த திருமடல் அமைந்துள்ளது. கி.பி 51ம் ஆண்டளவில் இந்த திருமுகம் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்த காலத்தில் ஆண்டவருடைய வருகை மிகவும் அருகில் உள்ளது என அதிகமானவர்கள் நம்பினார்கள், திருச்சபை தலைவர்களுடைய போதனைகளும் இதனை ஒத்தே இருந்தது.
வ.1: இந்த வரி வாழ்த்துக்களை தாங்கி வருகிறது. இந்த வரியில் எழுதுபவர்களும், எழுத்பபடுகிறவர்களும், வாழ்த்துகிறவர்களும் அறிவிக்கப்படுகிறார்கள்.
அ. எழுதப்படுகிறவர்கள்: தெசலோனிக்கர், இவர்களை அழகான விசுவாசக் கண்ணோடு பார்த்து, அவர்களை ஆண்டவரோடும் இயேசுக் கிறிஸ்துவோடும் இணைத்து வாழ்த்துரைக்கிறார் பவுல் (τῇ ἐκκλησίᾳ Θεσσαλονικέων ἐν θεῷ πατρὶ καὶ κυρίῳ Ἰησοῦ Χριστῷ: டே எக்லேசியா தெஸ்ஸாலொநிகெயோன் என் தியோ பாட்ரி காய் குரியோ இயேசூ கிரிஸ்டோ- தெசலோனிக்க திருச்சபைக்கு, கடவுளிலும் இயேசு கிறிஸ்துவிலும் இருக்கின்ற).
ஆ. எழுதுபவர்: இங்கே பவுல் நேரடியாக தான் ஆசிரியர் என்பதைச் சொல்லாமல் தன்னோடு தன் உடன்பணியாளர்களையும் இணைத்து அவர்கள் வாழ்த்துச் சொல்லவதாக கூறுகிறார். இதிலிருந்து எழுதுபவர் பவுல் என்பது புலப்படுகிறது. (Παῦλος καὶ Σιλουανὸς καὶ Τιμόθεος பௌலொஸ் காய் ட்சிலூஅனொஸ் காய் திமொதெயோஸ்- பவுலும், சில்வானூம், திமோதேயுவும்).
இ. வாழ்த்துச் செய்தி: இவர்கள் குறிப்பிட்ட திருச்சபைக்கு அருளையும் அமைதியையும் விரும்புகிறார்கள் (χάρις ὑμῖν καὶ εἰρήνη காரிஸ் ஹுமின் காய் எய்ரேனே: உங்களுக்கு அருளும் அமைதியும்).
அதிகமான பவுலின் திருமுகங்கள் இப்படியான வடிவங்களை தாங்கியிருக்கின்றன. பவுல் கிரேக்க கடித எழுதும் முறைகளை நன்கு கற்றிருந்தார் என்பதற்;கு இந்த வரிகளும் சாட்சியாகின்றன.
வ.2: தங்களுக்கும் தெசலோனிக்க திருச்சபைக்கும் இடையிலான உறவைப் பற்றி இந்த வரியில் அழகாகச் சொல்கிறார் பவுல். முதலாவது தாங்கள் இடைவிடாது செபிக்கிறவர்கள் என்பதை சொல்லுகிறார் (Εὐχαριστοῦμεν τῷ θεῷ πάντοτε எவுகரிஸ்தூமென் டோ தியூ பான்டொடெ). பின்னர் அந்த இடைவிடாத செபத்தில் எல்லாம் தெசலோனிக்க சபையை நினைப்பதாகவும் அறிக்கையிடுகிறார். அத்தோடு இவர்களைப் பொருட்டு கடவுளுக்கு நன்றி சொல்லவதாகவும் கூறுகிறார். இவர்களைப் பொருட்டு கடவுளுக்கு நன்றி சொல்வது என்பது, இவர்களைப் பற்றி திருத்தூதர் மிகவும் உயர்வான எண்ணத்தைக் கொண்டிருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.
வ.3: தெசலோனிக்கரின் விசுவாசத்தை வரைவிலக்கணப்படுத்துகிறார். இவர்களின் செயலில் நம்பிக்கை வெளிப்பட்டதாகச் சொல்கிறார் (ἔργου τῆς πίστεως எர்கு டேஸ் பிஸ்டெயோஸ்). சேவைகளுக்கும் விசுவாசத்திற்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்பதை ஆரம்ப கால திருச்சபை நன்கு அறிந்திருந்தது என்பதை இந்த வரி காட்டுகிறது. இவர்களின் உழைப்பு அன்பினால் உந்தப்பட்டது என்கிறார் (κόπου τῆς ἀγάπης கொபூ டேஸ் அகாபேஸ்). தெசலோனிக்க திருச்சபையில் சோம்பேறித்தனம் இருந்ததாகவும், அத்தோடு ஆண்டவரின் இரண்டாம் வருகையைக் காரணம் காட்டி பலர் சோம்பித்திரிந்ததாகவும் வரலாறு காட்டுகிறது. இந்த பின்புலத்தில் பவுலின் இந்த வாழ்;த்து வருகிறது.
அத்தோடு இவர்கள் ஆண்டவர் இயேசுவை எதிர்நோக்கியிருப்பதில் மனவுறுதியுடையவர்கள் என்பது புலப்படுகிறது. இந்த மனவுறுதியை தாங்கள் கடவுள் முன் நினைவுகூறுவதாகச் சொல்கிறார். தெசலோனிக்க திருச்சபை ஆண்டவரின் இரண்டாம் வருகையை மிக அருகில் எதிர்பபார்த்தது. இந்த மனவுறுதி பல சவால்களை சந்தித்தது. இதன் காரணமாகத்தான் அதனை பலமான எதிர்பார்ப்பு என்று உற்சாகப்படுத்துகிறார் பவுல் என எடுக்கலாம்.
வ.4: தெசலோனிக்க திருச்சபையை கடவுளின் அன்புக்குரிய சகோதர சகோதரிகளே என அழைக்கிறார் (ἀδελφοὶ ἠγαπημένοι அதெல்பொய் ஏகாபேமெநொய்). ஆண்டவர் இயேசுவைப் பொறுத்த மட்டில் அனைவரும் சகோதர சகோதரிகளே என்பது ஆரம்ப கால திருச்சபையின் நம்பிக்கையாக இருந்தது. (கிறிஸ்தவத்தில் பிரிவினைகள் ஏற்றுக்கொள்ளமுடியாதது. திருச்சபையில் பிரிவினைவாதம் அடிப்படையிலே பிழையானது, இதற்கு இந்த வரி நல்ல உதாரணம்).
இவர்கள் யார் என்பதை தாங்கள் நன்கு உணர்ந்திருக்கின்றோம் என்கிறார் பவுல். இவர்கள் தேர்ந்துகொள்ளப்பட்ட மக்களினம் (ἐκλογὴν ὑμῶν எக்லொகேன் ஹுமோன்). மக்களின் மகிமையை பணியாளர்கள் உணர்கின்றபோது அதிகமான பிரச்சனைகள் இல்லாமல் போகும் என்பதற்கு பவுலுக்கும் இந்த திருச்சபைக்கும் இடையிலான உறவு நன்கு விளக்குகின்றது.
வ.5: பவுல் தனதும் தன்னுடைய சகஊழியர்களினதும், இந்த அறிவிற்கு என்ன காரணம் என்பதை
இந்த வரியில் காட்டுகிறார். தாங்கள் ஆண்டவரின் நற்செய்தியை வெறும் சொல்லளவில் கொண்டு வரவில்லை என்கிறார் (λόγῳ μόνον லொகோ மொனொன்). ஒருவேளை இப்படியான குற்றச்சாட்டு அக்காலத்தில் இருந்ததோ என்ற ஐயமும் உண்டாகிறது.
இந்த நற்செய்தியை தூய ஆவியின் மிகுந்த வல்லமையோடும், உறுதியோடும் கொண்டுவந்ததாகச் சொல்கிறார். பவுலின் நற்செய்தியைப் பற்றி பலவிதமான சந்தேகங்களும் கேள்விகளும் ஏற்பட்ட அக்காலத்தில், பவுல் இந்த உறுதியான வார்த்தைகள் தெசலோனிக்கருக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கும். இவர்கள் கேள்விகளை சந்திக்கின்றபோது, பவுலும் அவர் உடன் பணியாளர்களும் எப்படி நடந்தார்கள் என்பதையே நினைவில் எடுக்குமாறு சொல்கிறார். பவுல் மிகவும் துனிச்சலான திருத்தூதர் என்பது நன்கு புரிகிறது.
மத்தேயு 22,15-21
சீசருக்கு வரி செலுத்துதல்
(மாற் 12:13 - 17 லூக் 20:20 - 26)
15பின்பு பரிசேயர்கள் போய் எப்படி இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்கலாமெனச் சூழ்ச்சி செய்தார்கள். 16தங்கள் சீடரை ஏரோதியருடன் அவரிடம் அனுப்பி, 'போதகரே, நீர் உண்மையுள்ளவர்; எவரையும் பொருட்படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கேற்பக் கற்பிப்பவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர் என்பது எங்களுக்குத் தெரியும். 17சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா? நீர் என்ன நினைக்கிறீர் என எங்களுக்குச் சொல்லும்' என்று அவர்கள் கேட்டார்கள். 18இயேசு அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்து கொண்டு, 'வெளிவேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? 19வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள்' என்றார். அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள். 20இயேசு அவர்களிடம், 'இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?' என்று கேட்டார். 21அவர்கள், 'சீசருடையவை' என்றார்கள். அதற்கு அவர், 'ஆகவே சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்' என்று அவர்களிடம் கூறினார். 22இதைக் கேட்ட அவர்கள் வியந்து, அவரை விட்டுப் போய்விட்டார்கள்.
இயேசுவுடைய காலத்தில் பாலஸ்தீனாவில் யூதர்கள் உரோமையருக்கு பல விதமான வரிகளை செலுத்த நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். இந்த வரிக்கான காரணத்தை பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி என்று உரோமைய பேரரசு வாதிட்டாலும், அவை உண்மையில் அடிமைத்தனம் என்பதை சாதாரண யூதர்கள்கூட நன்கு புரிந்திருப்பார்கள். இயேசுவும் இதனை நன்கு புரிந்திருப்பார். உரோமையர்கள் தாங்கள் பிடித்திருந்த நிலங்களுக்குக்கூட வரி வித்தார்கள். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் உரோமையர்களின் செல்வம் தாங்கள் அடிமைப்படுத்திய நாடுகளின் பொருட்டு மிகவும் உயர்ந்தது. வரிமட்டுமல்ல இந்த நிலங்களின் சொத்துகளைக்கூட அவர்கள் தம்வசப்படுத்தினர். ஆண்டவரைப்போல பவுல் அனைத்து வரிகளையும் உரோமையருக்கு செலுத்துமாறு பரிந்துரைக்கிறார் (காண்க உரோ 13,6-7). இதற்கான காரணத்தை பவுலுடைய உலகத்திலிருந்துதான் தெரிந்துகொள்ளவேண்டும். நேரடியான வரிகள் இரண்டு விதமாக இருந்தது, அதில் முதலாவது நிலத்திற்கான வரி (tributum soli) இரண்டாவது ஆளுக்கான வரி (tributum capitis). இந்த வரிகளைக் கொண்டுதான், உரோமையர் தங்களது இராணுவத்தையும், அதன் கட்டடங்களையும் பெருக்கினர். அத்தோடு பேரரசுக்கான நிதியையும் இதிலிருந்துதான் அவர் பெற்றார்கள். இந்த வரிகளை நிதிபொருப்பாளர்கள் பிரதேச ஆயக்காரர்களைக் கொண்டு சேகரித்தனர். பிலாத்து இப்படியான ஒரு நிதிப்பொறுப்பாளராக இருந்தார். இவர்கள் இராணுவ அதிகாரிகளாகவும், உயர் குடி மக்களாகவும் இருந்தார்கள்.
இயற்கை பேரிடர் ஏற்பட்ட போது பேரரசர் (சீசர்) இந்த வரியை அந்த பாதிக்கப்ட்ட
இடங்களிலிருந்து தள்ளுபடி செய்தார். இவற்றைவிட வருமானவரி, துறைமுக வரி, அடிமை வியாபார வரி, ஏற்றுமதி இறக்குமதி வரி, போன்று இன்னும் பல வரிகள் இருந்தன.
இந்த வரிகளை சேகரிக்க உரோமையர் குத்தகை முறைகளை கையாண்டனர். அதாவது பெரிய பணக்காரர்கள் முதலில் தங்கள் சொந்த பணத்தை உரோமையருக்கு முதலீடாக கொடுத்தனர் பின்னர், அவர்களின் கூலிகளைக் கொண்டு தமக்கு சேரவேண்டிய வரிகளை வசூலித்தனர். சிலர் இதில் கொள்ளை இலாபமும் பெற்றனர். சக்கேயு இப்படியானவர்களில் ஒருவர் (காண்க லூக் 19,2-8). இந்த வரி வசூலிப்பு யூதர்களுக்கு பெரும் தலையிடியாகவும் துன்பமாகவும் இருந்தது. இந்த சாமான்ய யூதர்கள் உரோமைய ஆக்கிரமிப்பாளர்களாலும், தம் சொந்த யூத ஆயக்காரர்களாலும் சுரண்டப்பட்டார்கள். இதனால் சில வேளைகளில் யூத போராளிகள் இந்த ஆயக்காரர்களை வன்முறையால் தண்டித்தார்கள். இதனைத் தடுக்க ஆயக்காரர்களுக்கு உரோமைய அரசாங்கம் இராணுவ பாதுகாப்பைக் கொடுத்தது. இராணுவத்தையும் ஆயக்காரர்களையும் கண்டால் யூதருக்கு எப்படியிருந்திருக்கும் என்பதை நம்முடைய ஈழ பின்புலத்தலிருந்து பார்த்தால் புரியும். இவற்றையும் விட எருசலேம் தேவாலய நிர்வாகமும் மக்களிடம் சமய வரிகளையும், வழிபாட்டு வரிகளையும் விதித்தது (காண்க மத் 17,24-27). இப்படியான பின்புலத்தில்தான் பேதுரு இயேசு ஆண்டவரிடம் வரியைப் பற்றி கேள்வி கேட்கிறார்.
வ.15: பரிசேயர்கள் இயற்கையாக தீயவர்கள் என்பதற்கில்லை. பல பரிசேயர்கள்தான் (Φαρισαῖοι பரிசாய்யோய்) யூத மதம் உரோமையர் காலத்தில் உயிரோடு இருந்ததற்கு காரணம் என நம்பப்படுகிறது. இவர்கள் சதுசேயர்களைவிட வித்தியாசமானவர்களாக, மோசேயின் சட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆலய நிர்வாகங்களில் தலையிடாமல் தூய்மையான வாழ்வை வாழ்ந்து மெசியாவை எதிர்பார்த்து இருந்தார்கள்.
இயேசுவின் சட்டம் பற்றிய வித்தியாசமான பார்வையும், அவருடைய புரட்சிகரமான நடவடிக்கைகள் மற்றும் புறவினத்தாரை அந்நியோன்யமாய் ஏற்றுக்கொள்ளல், இன்னும் பெண்களுக்கான முன்னுரிமை, எல்லாவற்றிக்கும் மேலாக பாவிகள் என்று இவர்கள் கருதுதியவர்களை இயேசு அரவணைத்தது இவர்களுக்கு வெறுப்பாய் இருந்தது. இதனாலும்
இவர்கள் இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்ள தயங்கினார்கள். இயேசு நாசரேத்திலிருந்து வந்ததும், இவர் தகப்பன் யோசேப்பாக அறியப்பட்டதும் இவர்களின் கேள்விகளை அதிகமாக்கியது.
மத்தேயு இவர்களை அதிகமாகவே வெறுத்தார் என்பதை அவர் நற்செய்தியில் காணலாம். ஆரம்ப கால திருச்சபை முக்கியமாக மத்தேயுவின் திருச்சபை பரிசேயர்களின் துன்புறுத்தலை அதிகமாக சந்தித்ததால்தான் மத்தேயு இவர்களை அதிகமாக சாடுகிறார் என்ற வாதமும் இருக்கிறது.
இந்த வரியில் பரிசேயர்கள் இயேசுவிற்கு எதிராக சூழ்ச்சி செய்கிறார்கள் என்று மத்தேயு காட்டுகிறார் (συμβούλιον சும்பூலியோன்- சூழ்ச்சிசெய்தனர்). இவர்களின் சூழ்ச்சியின் நோக்கம் இயேசுவை பேச்சில் சிக்கவைப்பதாகும். இவர்கள் பயங்கரமான அரசியல்வாதிகள் போல செயற்படுகிறார்கள்.
வ.16: இவர்கள் தங்கள் சீடர்களை ஏரோதியருடன் அனுப்புகிறார்கள் (Ηρῳδιανῶν ஏரோதியஆனோன்- ஏரோதியர்கள்). மத்தேயு ஒருமுறை மட்டும்தான் ஏரோதியர்களை குறிப்பிடுகிறார், மாற்கு இரண்டு முறை இவர்களை குறிப்பிடுகிறார். இவர்கள் ஏரோதுவின் ஆட்சியை ஏற்றுக்கொண்ட யூதர்களாக இருந்திருக்க வேண்டும். ஏரோது ஒரு யூத-இதுமேய வம்சமாக இருந்தபடியால் அதிகமான யூதர்கள் ஏரோதை அரசராக ஏற்கவில்லை. அத்தோடு மக்கபேயர்களை உரோமையரிடம் காட்டிக்கொடுத்தே ஏரோதியர் ஆட்சியை கைப்பற்றினர், இதனாலும் யூதர்கள் இவர்களை வெறுத்தனர். அந்நியர்களை வெறுக்கின்ற பரிசேயர்கள், தங்கள் சீடர்களை ஏரோதுவின் கூட்டத்தோடு அனுப்பு தங்கள் மெசியாவிற்கு எதிராக சூழ்ச்சி செய்கின்றனர் என்ற மத்தேயு சொல்வது மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.
அத்தோடு இவர்கள் இயேசுவை முதலில் புகழ்கின்றனர். இந்த புகழ்ச்சி பொய்யான புகழ்ச்சி என்பதை அனைத்து வாசகர்களும் இலகுவாக புரிந்து கொள்ளும்வண்ணம் காட்சி அமைக்கிறார் மத்தேயு. இவர்கள் இயேசுவை ஆசிரியர் என அழைத்து (διδάσκαλε திதாஸ்காலெ- ஆசிரியரே), உண்மையுள்ளவர் (ἀληθὴς அலேதேஸ்), கடவுளின் நெறியை அஞ்சாது கற்பிப்பவர் (ἀληθείᾳ διδάσκεις அலேதெய்ஸ் திதாஸ்கெய்ஸ்- உண்மையில் கற்பிப்பவர்), மற்றும் ஆள்பார்த்து செயற்படாதவர் (οὐ γὰρ βλέπεις εἰς πρόσωπον ἀνθρώπων ஊ கார் பிலெபெய்ஸ் எய்ஸ் புரொசோபொன் அந்ரோபோன்- மனிதரின் முகம் பார்க்காதவர்) என்று சொல்கிறார்கள். இதனைத்தான் தாங்கள் செய்வதாக பரிசேயர்கள் நினைத்தார்கள். ஆக இவர்கள் இயேசுவை ஓர் உயர்ந்த பரிசேயனாக காட்டுவது போல பாசாங்கு செய்கிறார்கள். அனைத்தும் தங்களுக்கு தெரியும் என்கிறார்கள் (οἴδαμεν ஒய்தாமென்).
வ.17: இவர்களின் உண்மை முகத்தை இந்த கேள்வியினால் தெளிவு படுத்துகிறார்கள். சீசருக்கு வரி செலுத்துவது முறையா என்று கேட்கிறார்கள் (κῆνσον Καίσαρι கேன்சொன் காய்சாரி- சீசருக்கு வரி). கிரேக்க மூல மொழியில், சீசருக்கு வரி செலுத்துவதா அல்லது விடுவதா முறை, என்றே உள்ளது.
இவர்களுடைய கேள்விக்கு இரண்டு பக்கத்திலும் பதில் அளிக்க முடியாது. இரண்டு விடைகளுமே ஆபத்தானவையாக அமையும். இருப்பினும் சீசருக்கு வரி கொடுக்க தனிப்பட்ட விதத்தில் பரிசேயர்கள் விரும்பியிருக்கமாட்டார்கள்.
வ.18: இயேசு இவர்களை இரண்டு விதத்தில் திட்டுகிறார். முதலில் இவர்களை வெளிவேடக்காரர்கள் என்கிறார் (ὑποκριταί ஹுபொகிரிடாய்- வெளிவேடக்காரர்கள்). இது மிகவும் பலமான சொல், மத்தேயு இந்தசொல்லை அதிகமாக பயன்படுத்துவார். சோதிக்கிறவர்கள் (πειράζετε பெரிபாட்சேடே- சோதிக்கிறீர்கள்) என்கிறார், இந்த சொல் சாத்தானுக்கு பயன்படும் சொல்.
வ.19: இயேசு வரி வசூலிக்கும் நாணயம் ஒன்றைக்கேட்கிறார். இதன் மூலம் இயேசு இவர்களுக்கு பாடம் ஒன்று கற்பிக்கிறார் எனலாம். அதாவது நாணயம் நிச்சயமாக உரோமையருடையதாக
இருக்கும் என்பது இயேசுவிற்கு தெரிந்திருக்கும். இதனால் உரோமையரின் பணத்தை அவர்களிடம் கொடுப்பது, உண்மையில் உரோமையரின் ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கு சமனாகும் (νόμισμα நொமிஸ்மா- நாணயம்).
அவர்கள் ஒரு தெனாரியத்தை கொண்டுவருகிறார்கள் (δηνάριον தேனாரியோன்). தெனாரியம் அக்காலத்தில் ஒரு நாள் கூலியாக கருதப்பட்டது. நம்முடைய நாள் கூலி 1500 இலங்கை ரூபாய்களைப் போல.
வ.20: இயேசு தெனாரியத்திலுள்ள உருவம் யாருடையது என்கிறார். இயேசுவிற்கு இந்த தெனாரிய உருவம் சீசருடையது என்பது தெரிந்திருக்க வாய்ப்பு இருந்திருக்கிறது. இருப்பினும் இந்த கேள்வி மூலமாக, இயேசு பரிசேயர்களை, அவர்களின் மனட்சாட்சியை சோதிக்க விரும்பியிருக்கலாம். உருவத்திற்கு எய்கோன் என்ற சொல் பாவிக்கப்படுகிறது (εἰκὼν எய்கோன்). இதற்கு வடிவம் என்ற பொருளும் உண்டு.
வ.21: இவர்களின் விடை சீசருடையது என்றாகிறது. இயேசு புத்திக்கூர்மையுடையவராக சீசருடையதை சீசருக்கும், கடவுளுடையதை கடவுளுக்கும் கொடுக்கச் சொல்கிறார். இதில் அர்த்தம் நிச்சயமாக யாருக்கும் புரிந்திருக்காது. சீசருடையது எது என்பது இப்போது அவர்களை குழப்பியிருக்கும். அதாவது இவர்கள் பணத்தையா அல்லது சுதந்திரத்தையா சீசருக்கு கொடுத்தார்கள். பணம் என்றால் பரவாயில்லை அது அழிந்து போகும், ஆனால் சுதந்திரத்தை என்றால் பரிசேயர்கள் தங்களை தேசதுரோகிகளாகவே மாற்றுகிறார்கள் என்பதை இயேசு காட்டுகிறார்.
இயேசு என்ன சொன்னார் என்பதின் அர்த்தத்தை இன்னும் பல ஆசிரியர்கள் வியப்போடு விவாதிக்கின்றனர்.
வ.22: அவர்கள் வியந்து போய்விட்டார்கள். இங்கே வெற்றியடைந்தவர் இயேசு என்று காட்டியும், தோற்றவர்கள் பரிசேயர்கள் என்பதையும் காட்டுகிறார் மத்தேயு. சாத்தானும் சோதனையின் பின்னர் இயேசுவை விட்டு அகன்றதை இங்கே நினைவுகூற வேண்டும். இவர்களுடைய வியப்பு விசுவாச வியப்பில்லை மாறாக தோல்விக்கான வியப்பு (ἐθαύμασαν எதௌமாசான்). மத்தேயு பல இடங்களில் இயேசுவை நம்பாதவர்களுக்கு இந்த சொல்லை பயன்படுத்தியுள்ளார்.
கடவுளுடைய பார்வை எப்போதுமே வித்தியாசமானது,
புறவினத்தவர்கள் என்று நாம் கருதுபவர்கள்,
உரிமை மக்களாகலாம்.
உரிமை மக்கள் என நினைக்கிறவர்கள்,
புறவினத்தவர்களாகலாம்.
அதனை தீர்மானிப்பவர் கடவுளே.
கடவுளையும் அன்பையும் மறந்தவர்கள்,
அனைவரும் புறவினத்தவரே!
அன்பு ஆண்டவரே,
ஆச்சரியம் வேண்டாம், நம்பிக்கை தாரும். ஆமென்.
மி. ஜெகன்குமார் அமதி
வசந்தகம், யாழ்ப்பாணம்,
வெள்ளி, 20 அக்டோபர், 2017
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக