ஆண்டின் பொதுக்காலம் 10ம் ஞாயிறு
அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும், அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை, காலையிலோ ஆர்ப்பரிப்பு
(தி.பா 30,5)
1அர 17,17-24
தி.பா 30
கலா 1,11-19
லூக் 7,11-17
1அர 17,17-24
17இதற்குப் பின், ஒருநாள், வீட்டுத் தலைவியான அந்தப் பெண்ணின் மகன் நோயுற்றான். அவனது நோய் மிகவும் முற்றவே, அவன் மூச்சு நின்று விட்டது. 18அவர் எலியாவிடம், 'கடவுளின் அடியவரே, எனக்கு ஏன் இப்படிச் செய்தீர்? என் பாவத்தை நினைவூட்டவும் என் மகனைச் சாகடிக்கவுமா நீர் வந்திருக்கிறீர்?' என்றார். 19எலியா அவரிடம், 'உன் மகனை என்னிடம் கொடு' என்று சொல்லி, அவனை அவர் மடியிலிருந்து எடுத்துத் தாம் தங்கியிருந்த மாடியறைக்குத் தூக்கிச்சென்று தம் படுக்கையில் கிடத்தினார். 20அவர் ஆண்டவரை நோக்கி, 'என் கடவுளாகிய ஆண்டவரே, எனக்குத் தங்க இடம் கொடுத்த கைம்பெண்ணின் மகனைச் சாகடித்து அவளைத் துன்புறுத்தலாமா?' என்று கதறினார். 21அவர் அந்தச் சிறுவன்மீது மூன்று முறை குப்புறப்படுத்து ஆண்டவரை நோக்கி, 'என் கடவுளாகிய ஆண்டவரே, இந்தச் சிறுவன் மீண்டும் உயிர் பெறச் செய்யும்' என்று மன்றாடினார். 22ஆண்டவரும் எலியாவின் குரலுக்குச் செவி கொடுத்தார். சிறுவனுக்கு மீண்டும் உயிர் திரும்பி வரவே, அவன் பிழைத்துக் கொண்டான். 23எலியா சிறுவனைத் தூக்கிக் கொண்டு மாடி அறையிலிருந்து இறங்கி வீட்டிற்குள் வந்து, 'இதோ! உன் மகன் உயிருடன் இருக்கிறான்' என்று கூறி அவனை அவன் தாயிடம் ஒப்படைத்தார். 24அந்தப் பெண் எலியாவிடம், 'நீர் கடவுளின் அடியவரென்றும் உம் வாயிலிருந்து வரும் ஆண்டவரின் வாக்கு உண்மையானதென்றும் தெரிந்து கொண்டேன்' என்றார்.
1அரசர் 17ம் அதிகாரம், மூன்று முக்கிய நிகழ்வுகளை விவரிக்கின்றது. 17,1: அக்காலத்துப் பஞ்சம் பற்றிய இறைவாக்கு, 17,2-6: எலியா காகங்களால் உணவூட்டப்பெற்றது, 17,7-24: எலியாவும் சரிபாத்து கைம்;பெண்ணும். இன்றைய வாசக பகுதிக்கு முன், எலியா இந்த கைம்பெண்ணால் உணவூட்டப்பெற்றிருந்தார், எலியாவின் மூலமான கடவுள் தங்களுக்கு காட்டிய இரக்கத்தை நினைந்து இந்தப் கைம்பெண்ணும் அவர் மகனும் மகிழ்ந்திருந்தனர். இந்த மகிழ்ச்சி நீடிக்க வில்லை,
வ.17: அ) 'மூச்சுப்போனால் பேச்சுப்போச்சு' என்று ஒரு வட்டாரவழக்கு சொல்வதனைப்போல, எபிரேயத்தில் மூச்சு நின்றுவிட்டது என்பது ஒருவர் முழுமையாக இறந்துவிட்டதனைக் குறிக்கலாம்.
ஆ) எபிரேய விவிலியம் இந்த கைம்பெண்ணை வீட்டுத்தலைவி என்று கூறுவது மிக அழகாக உள்ளது. கைம்பெண்கள் அக்காலத்தில் வறிய மற்றும் கைவிடப்பட்டவர்களின் முக்கியமான அடையாளமாக
இருக்கிறார்கள். விவிலியம் கைம்பெண்ணை אַלְמָנָה அல்மனாஹ் என்று அழைக்கிறது, இது முற்காலத்தில் கணவன் மற்றும் மகனை இழந்த ஒரு பெண்ணின் உண்மையான பெயர் என்று கூறப்படுகிறது, பின்னர், பிற்காலத்தில் அனைத்து கைம்பெண்களுக்கும் இதுவே பொதுக் குறியீடாகியது. கணவனையும் மகனையும் இழத்தல், அனைத்து வாழ்வாதாரங்களையும் இழத்தலுக்கு அடையாளமாக அக்கால
சமூதாயத்தில் பார்க்கப்பட்டது. உதவியில்லாத, மணமுடித்தவர்கள் கூட சில வேளைகளில் கைம்பெண்ணாக வாழ கட்டாயப்படுத்தப்பட்டனர். கணவன் இறந்தால், அவரின் உறவினர்கள், மனைவியை அந்த குடும்பத்திலே இன்னொருவருக்கு மணமுடித்துக் கொடுத்தனர். இதனால் சொத்துக்கள் தமது குடும்பத்தைவிட்டு வெளியே போகாமல் பார்த்துக்கொண்டனர். பெண்களுக்கு சொத்துக்களை கொடுப்பது மிகவும் ஆபத்தானதும் மடமையானதும் என்று கருதினர். இந்த ஆண்ணாதிக்க சிந்தனைகளுக்கு மாறாக, இஸ்ராயேலின் சட்டங்கள் கைம்பெண்களை பாதுகாக்க பல விசேட நல்ல சட்டங்களை முன்வைத்தது. காண்க (இணை 27,19). இப்படியான சமூதாயத்தில் பல பெண்கள் புரட்சியை ஏற்படுத்தியிருக்கின்றனர். அதில் நவோமியும் ரூத்துவும் வாசிக்கப்படவேண்டிய வீரப் புதல்விகள் (ஒப்பிடுக ரூத்). அன்னியரோடும் அனாதைகளோடும் கைம்பெண்களின் நிலையை சட்டம் ஒப்பிடுவதிலிருந்தே அக்கால சமூதாயம் (கைம்)பெண்ணுக்கு எவ்வளவு ஆபத்தானதாக இருந்தது என்பதை அறியலாம். போரிலே தோற்கடிக்கப்ட்ட நகரங்களும் கைம்பெண்ணுக்கு ஒப்பிடப்பட்டன. (அக்காலத்திலும் சரி, இக்காலத்திலும் சரி, இலக்கியங்களிலும் சட்டங்களிலும் பெண்களுக்கு எதிரான சட்டங்களையும் வாதங்களையும் முன்வைக்கிறவர்கள் முக்கியமாக ஆண்களாகவே இருக்கின்றனர். பெண்களை தெய்வங்கள் என்றும் அன்னையர் என்று அழைக்கிற இதே உலகம், ஏனோ அவர்களுக்கு கடவுள் கொடுத்த சம உரிமையை கொடுக்க மறுக்கிறது. அதனை நியாயப்படுத்த மதம் சார்ந்த, புலன்களுக்கு எட்டாத சிந்தனைகளை உதாரணத்திற்கு எடுக்கிறது).
வ. 18: இந்த கைம்பெண் எலியாவை கடவுளின் மனிதராக ஏற்றுக்கொள்கிறார். ஆனால் தன்னை பாவியென்று தவறாக விளங்கிக்கொள்கிறார். அதிகமான எளியவர்கள் (கைம்பெண்கள்) உட்பட, பலர் தங்களின் வறுமைகளையும், துர்அதிஸ்டத்தையும் கடவுளின் சாபமாகவே கருதினர், அல்லது அப்படி செய்ய மூளைச் சலவை செய்யப்பட்டனர். இதனையே இந்த சீமாட்டியும் பிரதிபலிக்கிறார். இவரின் வாதங்கள் கடவுளின் பார்வையில் பிழையானது என எலியா எண்பிப்பார். இவ்வாறு தன் மகனின் சாவு, தன் பாவத்தின் விளைவு என நினைக்கிறார்.
வ. 19: எலியா சிறுவனை தூக்கிச்செல்வதிலிருந்து அவன் சிறிய குழந்தையாக இருப்பதை ஊகிக்கலாம். மேல் மாடியென அழைக்கப்படுகிற, அவர் தங்கியருந்த அறை, அதிக வசதியாக இருந்தபடியால் அங்கே சிறுவனை கொண்டுசெல்கிறார்.
வவ. 20-21: எலியாவிற்கே இந்த நிகழ்வு ஆச்சரியமாக இருக்கிறது, இதனால்தான் தன் நியாயங்களை கடவுளிடம் கொட்டி கதறுகிறார். இறைவாக்கினர்க்கு அனைத்தும் தெரிந்திருக்கவேண்டிய அவசியமில்லை. எலியாவின் செயற்பாடுகள் சில மருத்துவ முதலுதவிகளை நினைவு படுத்தலாம். ஆனால் அவர் சுய நம்பிக்கையை தன்னுடைய செயற்பாடுகளில் வைக்கவில்லை மாறாக கடவுளிடம் வைக்கிறார். எலியா இங்கே தன்னுடைய கணச்சூட்டை சிறுவனுக்கு கொடுக்க முயல்கிறார் என சிலர் விவாதிக்கின்றனர். விவிலிய ஆசிரியர் மூன்று முறை என இங்கே குறிப்பிட்டு உயிரை கொடுப்பது கடவுளின் வேலை எனக் காட்டுகிறார்.
வவ. 22-23: கடவுள்தான் சிறுவனுக்கு உயிர்கொடுக்கிறார், எலியா அல்ல. எபிரேய விவிலியம், சிறுவனின் மூச்சு திரும்பியது என்று விவரிக்கிறது. மூச்சற்ற சிறுவனை கைம்பெண்ணிடம் பெற்ற இறைவாக்கினர் மூச்சுள்ள சிறுவனாக அவனை மீண்டும் கையளிக்கிறார். இது, கடவுள் கைவிடப்பட்டவர்களை எவ்வளவு நேசிக்கிறார் என்பதைக் காட்டுகிறது. (ஒப்பிடுக இன்றைய நற்செய்தியிலும், உயிர்பெற்ற இளைஞனை மீண்டும் இயேசு அவர் தாயிடம் கொடுப்பார்)
வ. 24: இதுதான் இந்த சிறு பகுதியின் முக்கிய செய்தி. எலியாவை, வட அரசு அதாவது இஸ்ராயேல் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இந்த புறவின நகரம் சரிபாத்து கடவுளையும் அவரின்
இறைவாக்கினரையும் ஏற்றுக்கொள்கிறது. இந்த பெண்ணின் விசுவாச சத்தியம், ஒம்ரி, ஆகாப் மற்றும் ஜெசபேல் போன்ற வடஅரசின் அவநம்பிக்கைகளுக்கான சாட்டையடி.
தி.பா. 30.
1ஆண்டவரே, உம்மை ஏத்திப் புகழ்வேன்; ஏனெனில், நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்; என்னைக் கண்டு என் பகைவர் மகிழ நீர் விடவில்லை.
2என் கடவுளாகிய ஆண்டவரே, உம்மிடம் உதவி வேண்டினேன்; என்னை நீர் குணப்படுத்துவீர்.
3ஆண்டவரே, நீர் என்னைப் பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்; சாவுக் குழியில் இறங்கிய எனது உயிரைக் காத்தீர்.
4இறையன்பரே, ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; தூயவராம் அவரை நினைந்து நன்றி கூறுங்கள்.
5அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான் இருக்கும்; அவரது கருணையோ வாழ்நாள் முழுதும் நீடிக்கும்; மாலையில் அழுகை; காலையிலோ ஆர்ப்பரிப்பு.
6நான் வளமுடன் வாழந்தபோது, 'என்னை ஒருபோதும் அசைக்க முடியாது' என்றேன்.
7ஆனால், ஆண்டவரே! உமது கருணையினால் மலையென உறுதியாக என்னை நிலைநிற்கச் செய்தீர்; உம் முகத்தை மறைத்துக் கொண்டீர்; நான் நிலைகலங்கிப் போனேன்.
8ஆண்டவரே, உம்மைநோக்கி மன்றாடினேன்; என் தலைவரிடம் எனக்கு இரங்குமாறு வேண்டினேன்.
9நான் சாவதால், படுகுழிக்குப் போவதால், உமக்கு என்ன பயன்? புழுதியால் உம்மைப் புகழ முடியுமா? உமது வாக்குப் பிறழாமையை அறிவிக்க இயலுமா?
10ஆண்டவரே. எனக்குச் செவிசாயும்; என்மீது இரங்கும்; ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.
11நீர் என் புலம்பலைக் களிநடனமாக மாற்றிவிட்டீர்; என் சாக்குத் துணியைக் களைந்துவிட்டு எனை மகிழ்ச்சியால் உடுத்தினீர்.
12ஆகவே என் உள்ளம் உம்மைப் புகழ்ந்து பாடும்; மௌனமாய் இராது என் கடவுளாகிய ஆண்டவரே, உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்.
தாவீதின் ஆலய அர்பணப் பாடல் என்று இத் திருப்பாடலின் தலைப்பு தொடங்குகிறது. இங்கு ஆலயம் என்பது (הַבַּיִת לְדָוִֽד) தாவிதின் வீடு என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் இதனை அறிவது கடினமாய் இருக்கிறது. தாவிதின் காலத்தில் எருசலேம் ஆலயம் கட்டப்படவில்லை என்பதும் முக்கியமானது. சாலமோனின் ஆலயத்தை தாவிதின் ஆலயம் என்று சொல்வதும் அக்காலத்தில் வழக்கிலிருந்தது. சிலர் இந்த ஆலயத்தை சாலமோனின் முதல் ஆலயம், அல்லது யூதர்கள் பபிலோனிலிருந்து திரும்பி வந்து புதுப்பித்த இரண்டாவது ஆலயம், அல்லது கிரேக்கர்கள் இரண்டாவது ஆலயத்தை தீட்டுப்படித்தியபின் மக்கபேயரின் ஆலய தூய்மைப்படுத்தும் சடங்கிற்கான பாடல் எனவும் காண்கின்றனர். எவ்வாறெனினனும், இது ஒரு புகழ்சிப்பாடல் என்பது மட்டும் புலப்படுகிறது.
வவ. 1-3: ஆசிரியர் தன்னுடைய இறையனுபங்களை விவரிக்கிறார். பகைவர், ஒருவருடைய வீழ்ச்சியில் மகிழ்வது, அக்காலத்தில் (இக்காலத்திலும் கூட), அந்த நபரை அவரின் கடவுள் கைவிட்டதனை குறிப்பதாக அறியப்பட்டது. செவிமடுத்தல், குணப்படுத்தல் என்பதும் கூட கடவுளின் முக்கியமான மீட்புப்பணியாக கருதப்பட்டது. மூன்றாவது வசனம், போர் காட்சிபோல காணப்பட்டாலும், தனிப்பட்ட மனித அனுபவமாகக் கூட இருக்கலாம். சாவுக் குழி என்பது செயோல் (שְׁאוֹל) என்று அறியப்படுகிறது. இதனை ஆதாள பாதாளம், சாவின் வாயில் என்று கூட இஸ்ராயேல் கருதினர், சில வேளைகளில், போர் மற்றும் கொடிய நோயையும் இதற்கு ஒப்பிட்டனர்.
வவ. 4-5: ஆசிரியர், இறையன்பர்களை ஆண்டவரை வாழ்த்தும்படி கேட்கிறார். இறையன்பர்கள் என்று தமிழில் வருவது எபிரேயத்தில் (חָסִיד) ஹசிட்- நேர்மையாளர் என்று உள்ளது. அத்தோடு கடவுளின் இரண்டு முகங்களை ஆசிரியர் விவரிக்க முயல்கிறார். அதாவது கடவுள் கோபம் கொள்வார் ஆனால் அவரின் கோபம் ஒரு கணப்பொழுது மட்டுமே, மாறாக அவரின் நன்மைத்தனமோ வாழ்நாள் வரை என்று ஆசிரியர் சொல்வது அவரின் சொந்த அனுபவத்தைக் காட்டுகிறது. மாலையையும் காலையையும் வாழ்வின் அனுபவங்களுக்கு ஒப்பிடும் ஆசிரியர், காலையின் முக்கியத்துவத்தை மையப்படுத்துகிறார். அந்தக்கால சமூதாயங்கள், மாலையையோ அல்லது இரவையையோ அவ்வளவு நல்ல தருணமாக கருதவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
வவ. 6-7: மனித குலத்தின் சுயம் சார்ந்த சிந்தனைகளை ஆசிரியர் காட்சிப்படுத்த முயல்கிறார். எவ்வளவுதான் மலைபோல உயர்ந்தவர் கூட, கடவுள் தன் முகத்தை மறைத்தால் கதிகலங்கிப்போவர் என்கிறார் ஆசிரியர்.
வவ. 8-10: இந்த வரிகள் மன்றாட்டு வடிவில் அமைந்துள்ளது. ஆசிரியர், கடவுள் ஏன் தன் அன்பர்களுக்கு இரக்கம் காட்டவேண்டும் என்ற வாதத்தை முன்வைக்கிறார். மனித குலத்தின் முக்கிய பணியான இறைவனை புகழ, முதலில் கடவுள் அவர்களை மன்னிக்க வேண்டும் என்கிறார். இறந்தவர்களை புழுதிக்கு ஒப்பிடுவதன் மூலமாக மனிதர்கள் புழுதியால் உருவானவர்கள் என்ற இயற்கை நியதியை ஆசிரியர் நினைவூட்டுகிறார். கடவுளின் வாக்கு பிறழாமை என்பது, எபிரேயத்தில் (אֱמֶת எமெட்) அவரின் நேர்மையை குறிக்கிறது. அதாவது கடவுள் தான் மக்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை மீறுவதில்லை என்பதே அந்த நேர்மை. இந்த நேர்மையை பிறவினத்தவர்க்கு அறிக்கையிட இறையன்பர்கள் உயிருடன் இருக்க வேண்டும் என்கிறார்.
வவ. 11-12: புலம்பல்-சாக்குத்துணி மற்றும் களிநடனம்-மகிழ்சி என்பது அடையாளங்களுடன் கூடிய ஒத்த கருத்துச் சொற்கள். ஆண்டவரின் நன்மைத்தனத்தை அனுபவித்த எந்த மனித உள்ளமும் அவரை புகழாமல் இருக்காது என்பது இந்த ஆசிரியரின் நம்பிக்கை.
கலாத் 1,11-19
11சகோதர சகோதரிகளே, உங்களுக்கு ஒன்று தெரிவிக்க விரும்புகிறேன்; நான் உங்களுக்கு அறிவித்த நற்செய்தி மனிதரிடமிருந்து வந்ததல்ல. 12எந்த மனிதரிடமிருந்தும் நான் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை; எந்த மனிதரும் அதை எனக்குக் கற்றுக் கொடுக்கவில்லை. மாறாக இயேசு கிறிஸ்து அருளிய வெளிப்பாட்டின் வாயிலாக அது எனக்குக் கிடைத்தது. 13நான் யூதநெறியைப் பின்பற்றி வந்த காலத்தில் எவ்வாறு நடந்து கொண்டேன் என்பதுபற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். கடவுளின் திருச்சபையை மிகக் கொடுமையாகத் துன்புறுத்தி ஒழிக்க முயன்றேன். 14மூதாதையர் மரபுகளில் ஆர்வம் மிக்கவனாய் என் இனத்தவருள் என் வயதினர் பலரைவிட யூதநெறியில் சிறந்து விளங்கினேன். 15ஆனால் தாயின் வயிற்றில் இருந்தபோதே என்னைத் தமக்கென ஒதுக்கிவைத்துத் தமது அருளால் என்னை அழைத்த கடவுள், 16தம் மகனைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தவர்க்கு நான் அறிவிக்குமாறு அவரை எனக்கு வெளிப்படுத்தத் திருவுளங்கொண்டார். அப்போது நான் எந்த மனிதரிடமும் போய்க் கலந்து பேசவில்லை. 17எனக்குமுன் திருத்தூதர்களாய் இருந்தவர்களைக் காண எருசலேமுக்குப் போகவுமில்லை. ஆனால் உடனே அரேபியாவுக்குச் சென்றேன். அங்கிருந்து தமஸ்கு நகருக்குத் திரும்பினேன். 18மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுநான் கேபாவைப் பார்த்துப் பேச எருசலேமுக்குப் போனேன். அங்கே பதினைந்து நாள் அவரோடு தங்கியிருந்தேன். 19ஆண்டவரின் சகோதரரான யாக்கோபைத் தவிர திருத்தூதருள் வேறு எவரையும் நான் போய்ப் பார்க்கவில்லை. 20நான் உங்களுக்கு எழுதுவதில் பொய் ஒன்றுமில்லை; இதற்குக் கடவுளே சாட்சி!
காலத்தியருக்கு எழுதப்பட்ட இந்த திருமுகம் பவுலின் முக்கியமான நம்பிக்கைகளை சுமந்து வருகிறது. முக்கியமாக யூதமயமாக்கல் யூதரல்லாத கிறிஸ்தவர்களுக்கு தேவையற்ற ஒன்று என்பது பவுலுடைய முக்கியமான வாதம். சில யூத கிறிஸ்தவர்கள், யூதரல்லா கிறிஸ்தவர்களுக்கு இந்த சுமையை தேவையில்லாமல் சுமத்த பார்த்தனர். இதனை விளக்க பவுல் தன்னுடை சொந்த திருத்தூதுப் பணியை அதன் தோற்றத்தை, மற்றும் அதனை அவர் யாரிடம் இருந்து பெற்றுக்கொண்டார் என்பதனையும் விளக்க வேண்டிய தேவையைக் அறிகிறார். கலாத்தியர் திருமுகம் ஆரம்ப கால திருச்சபையில் மட்டுமல்ல பதினாறாம் நூற்றாண்டில் கூட, திருச்சபையின் சீர்திருத்த காலத்திலும் மிக முக்கியமான பங்களிப்புக்களை செய்திருக்கிறது. கடவுளுக்கு முன்னால் நிற்பது என்பது, கடவுள் தரும் அருள் மட்டுமே அதனை பிறப்போ அல்லது வெளியடையாளங்களோ, அல்லது மத சடங்குகளோ ஈடுசெய்ய முடியாது என்பதும் இந்த திருமுகத்தின் படிப்பினைகளில் ஒன்று. இன்றைய பகுதியில் பவுல் தன்னுடைய திருத்தூது (அப்போஸ்தல) அழைத்தலை அதிகாரப்படுத்துகிறார் அல்லது நியாயப்படுத்துகிறார். பவுல், ஆண்டவர் இயேசுவால், அவர் இவ்வுலகில் உடலோடு வாழ்ந்தபோது அழைக்கப்பட்டவர் அல்லர். இதனால் அவர் உண்மையான திருத்தூதராக இருக்க முடியாது என்ற வாதத்தை சில யூத கிறிஸ்தவர்கள் முன்வைத்து அவர் உண்டாக்கிய சில திருச்சபைகளில் கலகங்களை தூண்டிவிட்டனர். இதனை சரிசெய்ய பவுல் முயற்சிப்பதை இங்கு காணலாம்.
வவ. 11-12: பவுல் தான் அறிவிக்கும் நற்செய்தியின் காத்திரத்தை விவரிக்கின்றார். இங்கே பவுல் நற்செய்தி என்று (εὐαγγέλιον எவான்கெலியோன்) கூறுவது இயேசுவைப்பற்றிய விசுவாச சத்தியங்கள் என எடுக்கலாம். பவுல் மறைமுகமாக தானும், தனது அப்போஸ்தலத்துவமும், திருத்தூதர்களின் கருணையில் இருந்து வந்ததல்ல என்கிறார். எப்படி ஆண்டவர் பன்னிருவரை அழைத்தாரோ அதே போல தன்னையும் ஒரு விசேட வெளிப்பாடு (தமஸ்கு அனுபவம்) மூலமாக அழைத்தார் என்பதை நினைவூட்டுகிறார். தான் எந்த விதத்திலும் யூத கிறிஸ்தவர்களுக்கே குறைந்தவனல்ல என்றும், மனிதர் எவருக்கும் ஆண்டவரின் நற்செய்தியை உரிமையாக்கும் உரிமைகிடையாது என்கிறார்.
வவ. 13-14: பவுல் தன்னுடைய யூத விசுவாசத்தை அறிக்கையிடுகிறார். பவுல் உண்மையான யூதன் கிடையாது என்ற வாதத்தையும் இவ்வாறு சரிபடுத்தமுயல்கிறார். இங்கே பவுலுடைய கிறிஸ்தவத்திற்கு-முன் வாழ்ககையை காணலாம். இரண்டு ஆடையாளங்கள் முன்வைக்கப்படுகிறது. அ) கடுமையாக யூத நெறியை பின்பற்றி திருச்சபையை அழிக்க முயலல் ஆ) உண்மையான ஆர்வமுள்ள பரிசேயனாக இருத்தல்.
இவற்றைச் சொல்வதன் மூலம் தன்னுடைய அழைத்தல் மனிதர்களின் கையால் கிடைத்தது அல்ல என சொல்ல விளைகிறார்.
வவ. 15-16: தன் அழைத்தலின்; வரலாற்றை விளக்குகிறாhர். பலம் மிக்க எரேமியா இறைவாக்கை கோடிடுவதன் மூலம், தன்னுடைய அழைப்பு அவர் தாயின் கருவிலிருந்து உருவானது என்கிறார். தன்னை தெரிவுசெய்ததும் அழைத்ததும் ஒரே செயற்பாடாக கிரேக்க பெயரெச்ச சொற்கள் காட்டுகின்றன (ὁ ἀφορίσας καὶ καλέσας அவர் என்னை தெரிவுசெய்திருந்தார், அத்தோடு அழைத்திருந்தார்). இதிலிருந்து பவுலின் அழைப்பு தற்செயலானது அல்லது தற்காலிகமானது என்ற வாதம் தவறானது என்பது முழுவதுமாக புலப்படுகிறது. அத்தோடு எசாயா இறைவாக்கு சுட்டிக்காட்டிய அந்த வேற்று நிலங்களுக்குள் கலாத்தியாவும் வருகிறது என்கிறார். பவுல் இங்கு எந்த மனிதரும் என்று சுட்டிக்காட்டுவது, திருத்தூதர்களையும் மற்றும் ஆரம்ப கால யூத கிறிஸ்தவ மூப்பர்களையும் குறிக்கலாம்.
வவ. 17-20: பவுலுடைய வாதத்தின் மிக முக்கியமான வரிகள் இவையாகும். தனக்குமுன் சிலர் திருத்தூதர்களாக இருக்கின்றனர் என்பதை ஏற்றுக்கொள்கிறார். ஆனால் எந்த திருத்தூதர்களாலும் தான் ஆதிக்கம் செலுத்தப்படவில்லை என்பதுதான் அவரது வாதம். எருசலேம் ஆரம்ப கால திருச்சபையின் அறிவிக்கப்படாத தலைமையகமாக இருந்தது. அரேபியா என்று இங்கே குறிப்பிடப்படுவது நெபேத்தேயாவாக (இன்றைய யோர்தான் இராச்சியத்தின் ஒரு பகுதி) இருக்கலாம். பவுல் ஏன் இங்கே சென்றார் என்பது தெளிவில்லாமல் இருக்கிறது. ஒருவேளை யூதர்களின் துன்புறுத்தல்களில் இருந்து தப்பிக்க அங்கு சென்றிருக்கலாம். ஒரு குறிப்பிட்ட பெரிய காலத்தை பவுல் அங்கு செலவளித்திருக்கிறார். தமஸ்குவும் நெபேத்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம். கேபாவை (பேதுறு) முதல் ஆளாக பவுல் சந்தித்தமை அவரின் முக்கியத்துவத்தை காட்டுகிறது. யாக்கோபு ஆரம்ப கால திருச்சபையில் முக்கியமாக எருசலேம் திருச்சபையில் மூப்பராக இருந்தவர். புதிய ஏற்பாடு ஐந்து யாக்கோபுகளை காட்டுகிறது. இவர் எந்த விதத்தில் ஆண்டவருக்கு சகோதரர் என்பது புதிய ஏற்பாட்டில் நவீன மனிதர்களின் தேவைகளுக்கு ஏற்றபடி இல்லை. கத்தோலிக்கமும், பாரம்பரிய புரட்டாஸ்தாந்தமும் இவரை ஆண்டவரின் நெருங்கிய வழி சகோரர் என்று நம்புகிறன. எம்முடைய அழகிய தமிழ் மரபிலும், இன்றுவரை அப்பாவழி அம்மாவழி சகோதார்களின் பிள்ளைகளை, சொந்த சகோதரா சகோதரிகளாக பார்ப்பது வழக்கம், இது எமக்கு யாக்கோபின் உறவை விளங்கிக் கொள்ள உதவலாம். சிலர் இவரை அன்னை மரியாவின் இன்னொரு புதல்வர் என்றும், அல்லது தூய யோசேப்பின் முதல் திருமணத்தின் மூலம் வந்த வாரிசு என்றும் வாதிடுகின்றனர், இதற்கு ஆதாரங்கள் விவிலியத்தில் இல்லை. பவுல் தன்னுடைய ஆதாரத்திற்கு கடவுளை சாட்சியாக எடுப்பது முழுக்க முழுக்க யூத பாரம்பரியமாகும்.
லூக் 7,11-17
11அதன்பின் இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய சீடரும் பெருந்திரளான மக்களும் அவருடன் சென்றனர். 12அவர் அவ்வூர் வாயிலை நெருங்கி வந்தபோது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன்; அத்தாயோ கைம்பெண். அவ்வூரைச் சேர்ந்த பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர். 13அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவுகொண்டு, 'அழாதீர்' என்றார். 14அருகில் சென்று பாடையைத் தொட்டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள். அப்பொழுது அவர், 'இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு' என்றார். 15இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார். 16அனைவரும் அச்சமுற்று, 'நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்' என்று சொல்லிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். 17அவரைப்பற்றிய இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவியது.
லூக்கா நற்செய்தியில், இதயத்தை தொட்டு, இயேசுவிற்கான நம்முடைய அன்பை பரிசோதிக்கக் கூடிய பகுதியில் இந்த பகுதி மிக முக்கியமானது. இந்த பகுதியில் இயேசுவின் இதயம் எவ்வளவு இனிமையானது என்பதை லூக்கா நச்சென காட்சிப்படுத்துகிறார். கிராக்கோவியாவில் இதனைத்தான் இயேசு ஆண்டவர் தூய சகோதரி பவுஸ்தினாவிற்கு பல ஆண்டுகளுக்கு முன் சொன்னார். (இதனைத்தான் நாம் இறைஇரக்க செபத்தில் செபிக்கிறோம்). நயின் என்னும் அன்றைய ஊர், இன்றைய நயின் ஊராக இருக்கும் என்று புனித
பூமி தொல்பொருளியல் ஏற்றுக்கொள்கிறது. மோரே மலையில் இருந்த இந்த சிற்றூர், நாசரேத்திலிருந்து தென்கிழக்காக 9கி.மீற்றரில் அமைந்துள்ளது. இது எஸ்திராலேயோன் சமவெளியை நோக்குவதாலோ என்னவே இது நயின் அதாவது 'இனிமையானது' என்று அழைக்கப்படுகிறது. (נָאִיןஇ நயின் Ναῒν, நயைன்- இனிமை). ஆண்டவரின் இரக்கத்தை பெற்று தன்பெயரின் இடுகுறிப் பெயர் சரியானதே என்று இன்றுவரை நிரூபிக்கிறது, இந்த சிற்றூர். இந்த நிகழ்வு, முதல் ஏற்பாட்டில் எலியா சரிபாத்து கைம்பெண்ணின் மகனை உயிர்ப்பித்த நிகழ்வை நினைவூட்டுகிறது. ஏழாம் அதிகாரம் முழுவதும் மெசியாவின் பரிவையும் இரக்க குணத்தையும் அறிவிக்கும் படி லூக்கா வடிவமைத்துள்ளார் (ஒப்பிடுக நூற்றுவத் தலைவரின் பணியாளர் குணமடைதல் 7,1-10: நயின் ஊர் இரக்கம் 11-17: யோவானின் மேன்மை 18-35: ஓரங்கட்டப்பட்ட பெண் ஆண்டவரின் பாதங்களுக்கு தைலம் பூசுதல் 36-49).
(நயின் ஊரை வரைபடத்தில் காண்க இங்கே சொடுக்குக:
வ. 11: இந்த பகுதிக்கு முன் இயேசு ஏற்கனவே உரோமைய நூற்றுவத்தலைவரின் பணியாளரை குணப்படுத்தியிருந்தார் அத்தோடு உரோமையரின் விசுவாசத்தையும் மெச்சியிருந்தார். இதனால் கூட பலர் ஆண்டவருக்கு பின் சென்றிருக்கலாம்.
வ. 12: இந்த வசனம், நிச்சயமாக எமது உணர்வுகளைத் தொடும். 30வருட கோர யுத்தமும் அடிமைத்தனமும் பல பெண்களை விதவைகளாக்கியிருக்கிறது (கைம்பெண்). இந்த கைம்பெண்கள் தங்கள் ஒரே பிள்ளைகளையும் இழக்கிறபோது அந்த காட்சி எப்படியிருக்கும். நமக்கு இது மிகவும் தெரிந்ததுதான், பார்கிறவர்களுக்கு வேதனை, அழுகை, கோபம் பொத்துக்கொண்டு வரும். ஒரே வார்த்தையில் இதனை அழகாக சித்தரிக்கிறார் லூக்கா ('அத்தாயோ கைம்பெண்'). இயேசு தன் தாயரும் கைம்பெண்ணாக
இருந்தபடியால் இந்தத் தாயில் தன் தாயை பார்த்திருப்பார். இதனால் உடனடியாக செயலில்
இறங்கியிருப்பார். அதிகமான மக்கள் இந்த கைம்பெண்-தாயோடு இருந்தது யூதர்களின் சமூக விழிப்புணர்வையும் கரிசனையையும் காட்டுகிறது.
வ. 13: இயேசுவின் வார்த்தைகள் முதல் ஏற்பாட்டில், கடவுள் இஸ்ராயேல் மக்களின் துன்பங்களைக் கண்டு பரிவு கொள்வதை நினைவூட்டுகிறது. இங்கே பரிவைக் குறிக்க σπλαγχνίζομαι ஸ்பிலாகினிட்ஸோமாய் என்ற கிரேக்க மூலச் சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இது ஒருவருடைய இதயம், வயிறு அல்லது கர்ப்பப் பையுடன் தொடர்புபட்ட ஒரு உணர்வு. அதிகமாக தாய்மையுடன் சம்மந்தப்பட்டது. கடவுளின் தாய்மையை இங்கே லூக்கா விவரிக்கிறார் போல. அவருக்கு ஆண்டவருடைய ஒரே வார்த்தை 'அழாதீர்'.
வ. 14-15: இறந்தவரின் பாடையைத் தொடுவது யூத முறைப்படி ஒருவரை தீட்டுள்ளவராக்கலாம். தொட்டது மட்டுமல்லாது இறுதிச் சடங்கையும் ஆண்டவர் நிறுத்துகிறார். இறந்தவர்கள் கிறிஸ்தவர்களுக்கு 'சவம்' அல்ல தூய உடல் என்பதை கிறிஸ்தவர்கள் நன்கு உணரவேண்டும். இளைஞனுக்கான இயேசுவின் கட்டளை அவரின் கடவுள் தன்மையை அப்படியே வெளிச்சம் போடுகிறது. இதனைத்தான் இயேசு பல வேளைகளில் திருத்தூதர்களுக்கு சொன்னார், ஒரு இறந்ததாக கருதப்பட்ட சிறுமிக்கும் சொன்னார். இறந்தவர் பேசுதல் என்பது வாசகர்களுக்கு அவர் உண்மையாகவே உயிர்பெற்றுவிட்டார் என்பதை காட்டுகிறது. அத்தோடு இன்னொன்றும் அவதானிக்கப்படவேண்டியது. இங்கே ஆண்டவர் உயிர்பிக்கப்பட்ட இளைஞனை அவர் தாயிடம் ஒப்படைக்கிறார், தன்னை பின்பற்றச் சொல்லவில்லை. இது ஆண்டவரின் உணர்வுகளை இன்னும் அதிகமாக காட்டுகிறது, ஏனெனில் இந்த இளைஞனை ஆண்டவர் உயரிப்பித்தது அந்த தாயின் கண்ணீருக்காகவே.
வவ. 16-17: மக்களின் இந்த பயத்தை, இறையச்சம் என எடுக்கலாம், இப்படியான இறை அச்சத்தைதான் முதல் ஏற்பாட்டின் நீதிமொழிகள் நூல், மெய்யறிவின் தொடக்கம் என எடுத்துரைக்கும். இங்கே இவர்கள் ஆண்டவரை பெரிய இறைவாக்கினர் என்று சொல்வது, நிச்சயமாக எலியாவைக் குறித்துதான் என்று எடுக்கலாம், ஏனெனில் எலியா மிக பலமான பெரிய இறைவாக்கினர் என காலங்கள் கடந்தும் அறியப்பட்டார். இவ்வாறு ஆண்டவரை பற்றிய செய்தி யூதேயா முழுவதும் பரவியது.
கைம்பெண்களின் கண்ணீர் இன்னும் இந்த உலகில் குறைந்த பாடில்லை. இயற்கையாக சில பெண்கள் கைம் பெண்களாகின்றனர், ஆனால் எண்ண முடியாத எண்ணிக்கையில் பல பெண்கள், சிறு வயதிலே மனிதர்களின் நடவடிக்கையால் கைம்பெண்களாகின்றனர். கைம்பெண்களின் கண்ணீர் இந்த மனுக்குலத்தின் அகோர சுயநலத்திடம் கேள்விகள் பல கேட்கிறது. இவர்களை பார்த்து ஆண்டவரும் கண்ணீர் வடிக்கிறார். ஈழப்போர் பத்தாயிரத்திற்கு மேலானவர்களை வடக்கு கிழக்கில் விட்டுச்சென்றுள்ளது, இன்னும் தெற்கிலும் பலர் இவ்வாறே எதிர்காலத்தை தொலைத்து அலைகிறார்கள். இதனை எழுதும் போது இன்னும் ஆயிரக்கணக்கில் பல பெண்கள் மத்திய கிழக்கில் கைம்பெண்களாகின்றனர். இன்னும் கைம் பெண்களை விதவைகள் என்று, எதிர்மறையான பதத்தில் அசுத்தமாக்கி, கெட்ட சகுனமாக்கி, அவர்களை தங்களது தேவைகளுக்காக பாவிக்க எத்தனிக்கும் இந்த உலகத்திடம் இருந்து ஆண்டவர்தாமே இவர்களை காக்கவேண்டும்.
ஆண்டவர் இயேசுவே, பெண்களின் கண்ணீர் இந்த உலகத்திடம் நீதிகேட்டு களைத்து விட்டது, உம்முடைய வருகைக்காக ஒவ்வொரு நயின் ஊரும் பார்த்து நிற்கிறது. உம்முடைய பார்வையை திருப்பி அப்பாவிகளை காக்க வேண்டுகிறோம். ஆமென்.
மி.ஜெகன் குமார் அமதி
உரோமை
புதன், 1 ஜூன், 2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக