ஆண்டின் பொதுக்காலம் இருபத்தெட்டாம் வாரம் (ஆ)
13.10.2024
(ஞாயிறு வாசகங்களின் விளக்கவுரை)
(A Commentary on the Sunday Readings)
M. Jegankumar Coonghe OMI,
Our Lady of Good Voyage,
Chaddy, Velanai.
Thursday, 10 October 2024
முதல் வாசகம்: சாலமோனின் ஞானம் 7:7-11
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 90
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 4:12-13
நற்செய்தி: மாற்கு 10:17-30
சாலமோனின் ஞானம் 7:7-11
எனவே நான் மன்றாடினேன்; ஞானம் எனக்குக் கொடுக்கப் பட்டது.
நான் இறைவனை வேண்டினேன்; ஞானத்தின் ஆவி என்மீது பொழியப்பட்டது.
8செங்கோலுக்கும் அரியணைக்கும் மேலாக அதை விரும்பித் தேர்ந்தேன்; அதனோடு ஒப்பிடும்போது, செல்வம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தேன்.
9விலையுயர்ந்த மாணிக்கக்கல்லும் அதற்கு ஈடில்லை;
அதனோடு ஒப்பிடும்போது, பொன்னெல்லாம் சிறிதளவு மணலுக்கே நிகர்; அதற்குமுன் வெள்ளியும் களிமண்ணாகவே கருதப்படும்.
10உடல் நலத்திற்கும் அழகிற்கும் மேலாக அதன்மீது அன்புகொண்டேன்;
ஒளிக்கு மாற்றாக அதைத் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் அதன் சுடரொளி
என்றும் மங்காது.
11ஞானத்தோடு எல்லா நலன்களும் என்னிடம் வந்து சேர்ந்தன. அளவற்ற செல்வத்தை
அது ஏந்தி வந்தது.
சாலமோனின் ஞானம் என்ற நூல் கிரேக்க செப்துவாஜின்து மொழியில் எழுதப்பட்டபடியால் இதனை எபிரேய விவிலியத்தில் காணமுடியாது. இதனை எபிரேயர்கள் 'ஏற்றுக்கொள்ளப்படாத நூலாகவே' கருகின்றனர். கத்தோலிக்கருக்கு இந்த நூல் இணைத்திருமுறை நூல். ஞான நூல்கள் என்ற பிரிவில் இந்த நூல் இடம் பெறுகிறது. இந்த நூலை மன்னர் சாலமோனுக்கு அர்ப்பணித்தாலும், இதனை அந்த மன்னர்தான் எழுதினார் என்று நிரூபிப்பது கடினமாக இருக்கும். சாலமோன், ஞானத்தில் (மெய்யறிவில்) சிறந்து விளங்கியவர். ஆகவே மெய்யறிவு நூல்களை அவருக்கு அர்ப்பணிப்பது அக்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மரபு. இந்த வகையான நூல்களுக்கு அதிகாரமும், பிரசித்தமும் பெற்றுக்கொடுக்கப்பட்டது. இதனைப் போலத்தான் திருப்பாடல்கள் தாவீது அரசருக்கும், சட்ட புத்தகங்கள் மோசேக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகத்திலுள்ள ஒன்பதாவது அதிகாரம், 1அரசர்கள் 3,6-9 உள்ள சாலமோனின் செபத்தை ஒத்திருப்பதால் இந்த புத்தகத்திற்கும் சாலமோனுக்குமான உறவு நோக்கப்படுகிறது. சாலமோனின் ஞானம் என்று இந்த புத்தகம் அறியப்பட்டாலும், சாலமோனின் பெயர் இந்த புத்தகத்தில் இடம்பெறவில்லை. வல்கேற் இந்த புத்தகத்தை மெய்யறிவு புத்தகம் என்றே அழைக்கிறது. தூய ஜெரோமுடைய விரும்பத்தக்க புத்தகமாக இந்த நூல் இருந்திருக்கிறது.
இந்த புத்தகத்தின் காலத்தை அறிவது இலகுவாக இருக்காது. அநேகமாக இந்த புத்தகம் முதலாம் நூற்றாண்டின் (கி.பி) இறுதிப் பகுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். கிரேக்கர்களின் ஆதிக்கம் இஸ்ராயேல் நாட்டில் இருந்தபோது இந்த இந்த புத்தகம் யூதர்களின் விசுவாசத்தை
தக்கவைப்பதை நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கலாம். இதன் ஆசிரியர் நிச்சயமாக ஒரு பாரம்பரிய யூதர், அவர் செப்துவாயிந்து மொழிபெயர்ப்பில் பணி செய்திருக்க வேண்டும். இவர் எகிப்திய அலெக்சாந்திரியாவில் இருந்த பிரபலான யூதர்களில் ஒருவராக இருந்திருக்க வேண்டும். இதனால் புலம்பெயர் யூதர் ஒருவரின் புத்தகம் என இதனை சிலர் வரையறுக்கின்றனர். பல ஆசிரியர்கள் இந்த புத்தகத்திற்கு இருந்திருக்க வேண்டும் எனவும், இந்த புத்தகம் முதலில் அரமேயிக்கத்தில் எழுதப்பட்டது என்று சிலர் வாதிட்டாலும், அவைகளுக்கு அக புற சான்றுகள் மிக குறைவாகவே இருக்கின்றன.
இலக்கிய வகையில் இந்த புத்தகம் மெய்யறிவு புத்தக வகையைச் சார்ந்தது, முக்கியமாக கிரேக்க வகையைச் சார்ந்தது. இருப்பினும் எபிரேயர்களின் ஆழமான நம்பிக்கைகள், பாரம்பரியங்கள், இலக்கிய வரிவடிவங்கள் இந்த புத்தகத்தில் நிறைவாகவே உள்ளன. ஆய்வாளர்கள் இந்த புத்தகத்தை மூன்று பிரிவுகளாகவும் பிரிக்கின்றனர். இன்றைய வாசகம் முதலாம் அதிகாரத்திலிருந்து எடுக்கப்படுகிறது. இந்த வரிகள் சாவு என்கின்ற மறைபொருளை விளக்க முயற்சிக்கின்றது. ஞானம் பல கேள்விகளுக்கு விடையாக வருகிறது என்ற தொனியில் இந்த அதிகாரம் அமைந்துள்ளது.
ஞானத்தை மதித்தல் மற்றும் ஞானத்தின் இயல்பும் மேன்மையும் என்ற தலைப்புக்கள் ஏழாவது அதிகாரத்தில் ஆராயப்பட்டுள்ளன. இந்த பாடலின் ஆசிரியர் சாலமோன் மன்னர் அல்லது வேறு மன்னர் ஒருவர் என்பது போல தோன்றுகிறது. ஆசிரியர் தானும் ஒரு சாதாரண மனிதன் என்பதையும் தன்னுடைய பிறப்பிற்கு தன் தாயும், தகப்பனும் காரணம் என்பதைக் காட்டுகிறார். சாதாரண மனிதர்களைப் போலவே தானும் காற்றை சுவாசித்ததாகவும், மண்ணில் கிடத்தப்பட்டதாகவும், துணியில் சுற்றப்பட்டதாகவும், அனைவரைப்போலவே தானும் என்பதை ஞான வார்த்தைகளில் தெளிவுபடுத்துகிறார்.
எந்ந மன்னரும் வித்தியாசமான வழியல் பிறப்பதுமில்லை இறப்பதுமில்லை என்கிறார், ஆக இவரும் சாதாரண மன்னருள் ஒருவர் என்பதை ஏற்றுக்கொள்கிறார். மிகவும் அனுபவம் பெற்றவர் போலவும், மனதால் முதிர்ச்சி பெற்றவர் போலவும் பேசுகிறார். இந்த நிலையில் தன்னுடைய இன்னெரு அனுபவத்தைக் வெளிக்கொணர்கிறார்.
வ.7: தான் மன்றாடியதாகவும், தனக்கு ஞானம் அருளப்பட்டதாகவும் சொல்கிறார். எபிரேய கவிநடைக்கே உரிய திருப்பிக்கூறல் முறை இங்கே பின்பற்றப்பட்டுள்ளது. ஞானத்தை குறிக்க ஞானத்தின் ஆவி என்ற ஒத்தகருத்துச் சொல் பாவிக்கப்பட்டுள்ளது (φρόνησις புரொனேசிஸ்- மெய்யறிவு, σοφίας - சொபியாஸ்- ஞானம்).
வ.8: ஒரு அரசர் செங்கோலையும் (σκήπτρων ஸ்கேப்ரோன்- செங்கோல்) அரியணையையும் (θρόνος துரோனொஸ்- அரியணை) விரும்பித்தேர்வது வழக்கம். ஆனால் இவர் உண்மையான ஞானியாக, ஞானத்தை விரும்பித்தேர்கிறார், இந்த ஞானத்தோடு ஒப்பிடும்போது, செல்வம் என்பது ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்ததாக அறிக்கையிடுகிறார்.
அரசர்கள் செல்வத்தை விரும்பித்தேடுவார்கள். சாலமோன் இஸ்ராயேல் அரசர்கள் மத்தியில் மிகவும் செல்வந்தராகவும், செல்வத்தை விரும்பித்தேடுபவராகவும் இருந்தார் என்று அரசர்கள் மற்றம் குறிப்பேடு புத்தகங்கள் காட்டுகின்றன. சாலமோனை பார்க்க வந்தவர்கள் அவரை திருப்திப்படுத்த செல்வங்கள் பலவற்றை அவருக்கு கொண்டு வந்திருக்கின்றனர். பிற்காலத்திலே, சாலமோனுடைய செல்வம் மீதான வேட்கைதான் அவர் மக்கள் மீது அதிகமான வரிச்சுமையை சுமத்த காரணமாக இருந்தது என்றும் சொல்லப்படுகிறது. ஆக இவருக்கு செல்வத்தின் ஆசை அதிகமாக இருந்திருக்கிறது. இதன் காரணமாகத்தான் அரசர் ஒருவர் செல்வத்தை பற்றி பேசுகிற படியால், இந்த புத்தகத்தின் ஆசிரியர் நிச்சயமாக சாலமோன் அரசராகத்தான் இருக்க வேண்டும் என்ற பாரம்பரிய நம்பிக்கை உருவானது எனலாம்.
வ.9: ஞானத்தோடு விலையுயர்ந்த மாணிக்க கல்லை ஒப்பிடுகிறார் (λίθον ἀτίμητον, லிதோன் அடிமேடொன் - விலையுயர்ந்த கல்). மாணிக்க கல்லிற்கு பெருமதியில்லை என்கிறார், அத்தோடு ஞானத்தோடு ஒப்பிடும் போது பொன்னும் சிறிதளவு மணலே என்கிறார்.
மணல் ஒரு சாதாரண இயற்கை கனிமம், பொன் மிகவும் மதிக்கப்படும் அத்தோடு மிக அரிதான கனிமம். இரண்டையும் ஒப்பிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பொன் மிகவும் விலையுயர்ந்ததாக இருந்திருக்கிறது. இருப்பினும் ஞானத்தோடு ஒப்பிட்டால் பொன்னும் (χρυσός குருசொஸ்- பொன்) சிறிதளவு மணல்தான் (ψάμμος ப்சம்மொஸ்) என்கிறார்.
அக்காலத்தில் பொன்னுக்கு அடுத்தபடியாக அல்லது இன்னும் சில இடங்களில் பொன்னுக்கு நிகராக வெள்ளியும் அரிதான பொருளாக கருதப்பட்டது. சில இடங்களில் வெள்ளி பணமாகவும் அல்லது பண அலகாகவும் கருதப்பட்டது. ஞான நூல் ஆசிரியர், ஞானத்தோடு ஒப்பிடும் போது அது வெறும் களிமண் என்கிறார் (ὡς πηλὸς ஹோஸ் பேலொஸ்- களிமண் போன்றது).
வ.10: அரசர்கள் மற்றும் பண்க்காரர்கள் தங்கள் உடல் நலத்தில் மிகவும் கரிசனையாக
இருப்பார்கள். ஊடல்நலத்தைப் போலவே தங்கள் அழகிலும் அவர்கள் மகி அக்கறையாக
இருப்பார்கள். இந்த வரியில் ஆசிரியர் தான் ஞானத்தை உடல் நலத்திற்கும் அழகிற்கும் மேலாக தேர்ந்தெடுத்ததாகச் சொல்கிறார் (ὑπὲρ ὑγίειαν καὶ εὐμορφίαν ἠγάπησα αὐτὴν ஹுபெர் ஹுகிஎய்யான் காய் எவ்மொர்பியான் ஏகாபேசா அவ்டேன்- உடல் நளத்திற்கும் அழகிற்கும் மேலாக அவளை அன்பு செய்தேன்).
ஒளி இன்றும் அதிகமானவர்களால் விரும்பப்படும் இயற்கையில் ஒரு அங்கம். ஒளியைப் போலவே இருளும் இயற்கையானது. இருந்தாலும் மனித மனம் ஒளியையே விரும்புகிறது. ஒளி கடவுளாகவும், இருள் தீய சக்தியாகவும் வர்ணிக்கப்படுகிறது. கடவுள் தான் ஒளியையும் இருளையும் படைத்தார் என்று தொடக்கநூல் காட்டினாலும், ஆட்சியாளர்களும் அறிவியலாளர்களும் இருளைவிட ஒளியையே அதிகம் அன்பு செய்கிறார்கள்.
இந்த ஆசிரியர், ஒளியை விடுத்து ஞானத்தை தேர்ந்தெடுக்கிறார், ஏனெனில் ஒளி மங்கக்கூடியது ஆனால் ஞானம் மங்காதது என்பதை இவர் கண்டுகொண்டுவிட்டார். ὅτι ἀκοίμητον τὸ ἐκ ταύτης φέγγος. ஹோடி அகொய்மேடொன் டொ எக் டவ்டேஸ் பெக்கொஸ்- அதாவது அதன் ஒளி மங்காதது.
வ.11. ஞானத்தை பெறுபவர் அனைத்தையும் பெறுகிறவர் ஆகிறார், ஞான தனிமையாக வராமல் அனைத்து செல்வத்தையும் சேர்த்துக்கொண்டு வருகிறது என்கிறார். அதாவது ஞானத்தை பெறுகிறவர் உண்மையாகவே செல்வராகிறார் என்பதை தெளிவு படுத்துகிறார்.
ἦλθεν δέ μοι τὰ ἀγαθὰ ὁμοῦ πάντα μετ᾿ αὐτῆς ஏல்தேன் தெ மொய் டா அகாதா ஹுமூ பான்டா மெட் அவ்டேஸ்- அவளோடு சேர்த்து அனைத்தும் என்னிடம் வந்தது. ἀναρίθμητος πλοῦτος ἐν χερσὶν αὐτῆς· அனாரித்மேடொஸ் புலூடொஸ் என் கெர்சின் அவ்டேஸ்- எண்ணமுடியா வளங்கள் அவள் கைகளில்.
திருப்பாடல் 90
1. என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடமாய் உள்ளீர்.
2மலைகள் தோன்றுமுன்பே, நிலத்தையும் உலகையும் நீர் உருவாக்குமுன்பே, ஊழி ஊழிக்காலமாய் உள்ள இறைவன் நீரே!
3மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; 'மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர்.
4ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும்
இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன.
5வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும்
புல்லுக்கு ஒப்பாவர்;
6அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்;
மாலையில் வாடிக் காய்ந்து போகும்.
7உமது சினத்தால் நாங்கள் அழிந்து போகின்றோம்; உமது சீற்றத்தால் நாங்கள்
திகைப்படைகின்றோம்.
8எம் குற்றங்களை உம் கண்முன் நிறுத்தினீர்; மறைவான எம் பாவங்களை
உம் திருமுக ஒளிமுன் வைத்தீர்.
9எங்கள் அனைத்து வாழ்நாள்களும் உமது சினத்தால் முடிவுக்கு வந்துவிட்டன்
எங்கள் ஆண்டுகள் பெருமூச்செனக் கழிந்துவிட்டன.
10எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே; வலிமை மிகுந்தோர்க்கு எண்பது; அவற்றில் பெருமைக்கு உரியன துன்பமும் துயரமுமே! அவை விரைவில் கடந்துவிடுகின்றன. நாங்களும் பறந்துவிடுகின்றோம்.
11உமது சினத்தின் வலிமையை உணர்பவர் எவர்? உமது கடுஞ்சீற்றத்துக்கு அஞ்சுபவர் எவர்?
12எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப்
பெற்றிடுவோம்.
13ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும்.
14காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம்
நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.
15எங்களை நீர் ஒடுக்கிய நாள்களுக்கும் நாங்கள் தீங்குற்ற ஆண்டுகளுக்கும் ஈடாக,
எம்மை மகிழச் செய்யும்.
16உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும்.
17எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்!
திருப்பாடல் 90, மோசேயின் பாடல் என தலைப்பிடப்பட்டுள்ளது. ஆதகிமான ஆய்வாளர்கள் இந்த பாடல் மோசேயுடைய பாடலாகத்தான் இருக்கவேண்டும் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். மக்களுடைய பாவ வாழ்க்கை கடவுளை கோபப்படுத்தியதும், இதனால் கடவுள் அவர்களது பாலைவன வாழ்க்கையை விரிவுபடுத்தியதையும் அவர்கள் பின்புலமாகக் காட்டுகின்றனர். תְּפִלָּה לְמֹשֶׁה אִישׁ־הָאֱלֹהִים தெபிலாஹ் லெமோஷெஹ் 'இஷ்-ஹா'ஏலோஹிம்- கடவுள் மனிதர் மோசேயின் மன்றாட்டுப் பாடல்.
வ.1: ஆண்டவரை தலைவராக பார்த்து அவரை தங்களுடைய புகலிடம் என்கிறார், கடவுளை புகலிடமாக காண்பது இஸ்ராயேலரின் அழகான பாரம்பரிய நம்பிக்கை. מָעוֹן மா'ஓன்- புகலிடம்.
வ. 2. கடவுளுடைய காலத்தை கணிக்கிறார் ஆசிரியர். மலைகள் மற்றும் நிலம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் இருந்ததாகச் சொல்கிறார். நிலமும் மலையும் பௌதீகத்தில் முதலில் தோன்றிய இயற்கை வளங்கள் என நம்பப்படுகிறது (הָרִים ஹரிம், மலைகள்: אֶרֶץ 'எரெட்ஸ்- நிலம்).
தற்கால விஞ்ஞான ஆய்வுகள் கல் மணல் ஆகியவற்றை ஆய்வு செய்வதன் வாயிலாக உலகத்தின் காலத்தை கணிக்க முடியும் என காட்டுகின்றன. இதனை இந்த ஆசிரியர் அறிந்திருக்க வாய்ப்பில்லை, இருந்தாலும், இறைவார்த்தை பல காலங்களுக்கு முன்பே எடுத்துரைக்கிறது.
עַד־עוֹלָם אַתָּה אֵל 'அத்-'ஓலாம் 'அத்தாஹ் 'எல்- என்றென்றும் நீர்தான் கடவுள்.
வ.3: புழுதியும் மனிதரும் ஒப்பிடப்படுகின்றனர். மனிதரை புழுதி நிலைக்கு ஒப்பிடுகிறார் (דַּכָּא தாகா'- புழுதி). புழுதி என்ற இந்தச் சொல் துகளைக் குறிக்கிறது. மனதளவில் மிகவும் துவண்டுபோனவர்களையும் இந்த சொல் குறிக்கும் (காண்க தி.பா 34,18). தொடக்கநூலில் கடவுள் மனிதரை தூசியிலிருந்து படைத்ததாகக் காண்கின்றோம், இதற்கும், இந்த சொல்லிற்கும் தொடர்பிருக்கலாம்.
கடவுளுடைய மாட்சிக்கு முன்னர், மனிதரின் நிலை வெறும் துகள்தான் என்பது இந்த வரியின் செய்தியாக இருக்கிறது.
வ.4: ஆயிரம் என்ற இலக்கம் எபிரேய சிந்தனையில் மிகவும் அதிகமான எண்ணிக்கையை குறிக்கும் இலக்கம். אֶלֶף שָׁנִים 'எலெப் ஷானிம்- ஆயிரம் ஆண்டுகள். ஆயிரம் ஆண்டுகள் என்ற பெரிய இலக்கம் கூட கடவுளுடைய பார்வையில் சிறிதாக தோன்றுகிறது. இதன் மூலம் கடவுளுடைய பார்வையில் மகத்துவம் சொல்லப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளை அவர் ஒரு சாமத்திற்கு ஒப்பிடுகிறார். சாமம் என்பது சாதரணமாக ஐந்து மணித்தியாளங்களை மட்டும்தான் குறிக்கும், ஆயிரம் ஆண்டுகளும் ஐந்து மணித்தியாளங்கள்தான் என்கிறார் ஆசிரியர் (אַשְׁמוּרָה בַלָּיְלָה 'அஷ்மூராஹ் வாலாய்லாஹ்- இரவின் காவல்வேளை).
வ.5: மானிடரை புழுதிக்கு ஒப்பிட்டவர், இந்த வரியில் கடவுளின் வல்லமையை வெள்ளத்திற்கு ஒப்பிடுகிறார். எபிரேய விவிலியம் இந்த வரியை 'கனவுபோல மனிதரின் வாழ்வை மறையச் செய்கின்றீர்' (זְרַמְתָּם שֵׁנָ֣ה יִהְי֑וּ ட்செராம்தாம் ஷெனாஹ் யிஹ்யூ) என்று மொழிபெயர்க்கிறது. அதேவேளை மானிடரை வைகரைப் புல்லுக்கு ஒப்பிடுகிறார் ஆசிரியர். புல் விவிலிய பாரம்பரியத்தில் மிகவும் பலவீனமான ஒரு தாவரம், அது உடனடியாக அற்றுப் போகக்கூடியது. חָצִיר ஹட்சிர்- புல்.
வ.6: புல் காலையில் புத்துக்குழுங்கும், மாலையில் வதங்கிப்போகும், இந்த உருவகத்தை பயன்படுத்தி மானிடரின் நிலையாமையை அவர் விளக்க முயல்கிறார். திருப்பாடல் ஆசிரியரைப்போல பல விவிலிய ஆசிரியர்கள் மனிதரின் நிலையை புல்லுக்கு ஒப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
வ.7: கடவுளுடைய சினம் மற்றும் சீற்றம் என்ற ஒத்த கருத்துச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன (אַף 'அப்- கோபம், חֵמָה ஹெமாஹ்-சினம்). மனிதர்களுடைய அழிவிற்கு காரணம் கடவுளைய கோபமும் சினமும் என்பதை சொல்ல முயல்கிறார் ஆசிரியர்.
முதல் ஏற்பாடு கடவுளை கோபக்காரராகவும், சினம் கொள்பவராகவும் அங்காங்கே காட்டுகின்றது. இந்த கருத்தை முன்வைக்கின்றபோதெல்லாம், கடவுளுடைய நீதி பின்புலமாக
இருப்பதை நோக்கவேண்டும்.
வ.8: முதல் வரியில் சொல்லப்பட்ட கடவுளின் சினம் கோபத்தின் பின்புலத்தை ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார். கடவுளின் தன் அறிவிற்குள் மனிதரின் குற்றங்களையும், பாவங்களையும் கொண்டுவந்துவிட்டார் என்கிறார். குற்றம் (עָוֹן 'ஆயோன்- பாவம்), மறைவான பாவம் (עֲלֻמֵ֗נוּ 'அலூமெனூ- எம் மறைவானவை) என்பவை ஒத்த கருத்துச் சொற்களாக பாவிக்கப்படுகின்றன.
கடவுளுடைய அறிவைக் குறிக்க அவர் கண்முன் மற்றும் அவர் திருமுக ஒளி என்ற ஒத்த கருத்துச் சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன (נֶגְדֶּךָ நெக்தெகா- உமக்குமுன்பாக, לִמְאוֹר פָּנֶיךָ லெம்'ஓர் பானெகா - உம் திருமுக ஒளியில்).
வ.9: வாழ்நாட்களை தீர்மாணிக்கிறவர் கடவுள் என்ற நம்பிக்கை இந்த வரியில் காட்டப்படுகின்றது. வாழ்நாட்களைக் குறிக்க ஆண்டுகள் என்ற சொல்லும் பாவிக்கப்பட்டிருக்கிறது. வாழ்நாட்கள் முடிவுக்கு வருகின்றன, ஆண்டவரின் கோபத்தால் என்று சொல்கிறார். இங்கே ஆண்டவரின் கோபத்தை அவர் தண்டனையாகவே முன்வைக்கிறார்.
வாழ்நாளை பெருமூச்சிற்கு ஒப்பிட்டு இன்னொரு முறை நிலையாமையை உதாரணத்திற்கு எடுக்கிறார். பெருமூச்சிற்கு הֶגֶה (ஹெகெஹ்) என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. இந்த சொல் முணுமுணுத்தல் அல்லது புலம்பல் சத்தம் என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. இந்த இடத்தில் மனிதனுடைய பலவீனத்தின் அடையாளமாக இந்த சொல் பாவிக்கப்பட்டுள்ளது எனலாம்.
வ.10: திருப்பாடல்கள் பல மெய்யறிவை நோக்கமாக கொண்டவை. இந்த பாடலின் இந்த வரி மெய்யறிவை வாசகர்களுக்கு கொடுக்கிறது. மனிதர்களின் வாழ்நாட்கள் எத்தனை, அந்த வாழ்நாட்களில் நடப்பது என்ன என்ற கேள்விகளுக்கு விடை தருகின்றன:
மானிடர்களின் வாழ்நாட்கள் எழுபது என்கிறார் (יְמֵֽי־שְׁנוֹתֵינוּ யெமெ-ஷெனோதெனூ- எம் வாழ்நாட்களின் ஆண்டுகள் שִׁבְעִים שָׁנָה ஷிவ்'யிம் ஷானாஹ் எழுபது ஆண்டுகள்). பலமானவர்களுக்கு எண்பது என்பதும் சொல்லப்படுகிறது (גְבוּרֹת ׀ שְׁמוֹנִים கெவூரோத் ஷெமோனிம்- பலசாலிகளுக்கு எண்பது). இதிலிருந்து இந்த திருப்பாடல் எழுதப்பட்ட காலத்தில், இந்த இடத்தில் எழுபது தொடக்கம் எண்பது ஆண்டுகள் மனிதர்களின் சாதாரண வாழ்நாள் ஆண்டுகளாக இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.
இந்த வருடங்களின் பெரும்பான்மையானவை, துன்பமும் துயரமுமாக இருக்கிறது எனவும், வாழ்நாட்கள் விரைவில் கடந்துவிடுவதாகவும், மனிதர்களும் மறைந்துவிடுகிறார்கள் எனவும் ஆசிரியர் காட்டுகிறார். மிக அழகாக மனிதர்களின் நிலையாமை காட்டப்படுகிறது.
வ.11: இப்படியிருக்க மனிதர்கள் தங்கள் வாழ்நாட்களை கணிப்பதை விடுத்து, கடவுளின் சினத்தின் வலிமையை கணிக்க கேட்கப்படுகிறார்கள். கடவுளின் சினத்தை கணிப்பவரும், அவரின் சினத்திற்கு அஞ்சுபவர்களும் ஞானிகள் என்பதை அவர் மறைமுகமாகக் காட்டுகிறார். யார் இதனை செய்பவர் என்ற கேள்வியை அவர் கேட்பதன் மூலம், அதிமானவர்கள் இந்த மெய்யறிவை பெறாதவர்கள் என்ற செய்தி சொல்லப்படுகிறது.
வ.12: ஞானமிகு உள்ளம் என்பது உண்மையில் என்ன என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறார் (לִמְנוֹת יָמֵינוּ כֵּן הוֹדַע லிம்னோத் யாமெனூ கென் ஹோதா'- உண்மையாக எங்கள் வாழ்நாட்களைக் கணிக்க).
வாழ்நாளை கணிப்பவர் அதன் நிலையாமையை அறிந்து கொள்வார், ஆக வாழ்நாளின் நிலையாமை ஒருவருக்கு கடவுளின் வலிமையை கற்றுத்தரும். இதனால் அவர் ஞானியாகிறார்.
வ.13: மோசே தன் ஆண்டவரை கூவியழைக்கிறார். அவரைத் திரும்பி வரச்சொல்கிறார். எத்துணை காலத்திற்கு இந்த நிலை என்று கேட்கிறார். மோசேயுடைய கேள்வியின் மூலம், அவரும்; அவரைச் சார்ந்த மக்களும் துன்பமான நிலையில் இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. ஆண்டவரின் திரும்பி வருதல் என்பது அவருடைய இரக்கம் என்ற அர்த்தத்தில் ஒத்த வார்த்தைப் படுத்தப்படுகிறது.
வ.14: ஒவ்வொரு காலையும் ஆண்டவருடன் விடிந்தால் எப்படியிருக்கும், இந்த அனுபவத்தை மோசே பல முறை அனுபவித்தவர். ஆண்டவர் இல்லாத நாட்கள் அவருக்கு மிகவும் ஆபத்தான நாட்களாகவே தோன்றுகின்றன். இதனால்தான் அவர் காலைதோறும் ஆண்டவரை வரவேற்கிறார். காலையில் ஆண்டவரை அனுபவிப்பதன் வாயிலாக ஒருவருடைய வாழ்நாட்கள் எல்லாம் களிப்படையும் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்துகிறார்.
வ.15: குழந்தைகள் பெற்றோரிடம் முறையிடுவது போல, ஆசிரியர் மோசேயிடம் முறையிடுகிறார். கடவுள்தான் இவர்களுக்கு துன்பம் கொடுத்தது போல இந்த வரி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது அவர் ஒடுக்கிய நாட்களுக்கு பதிலாக மகிழ்ச்சியின் நாட்களை தரச்சொல்கிறார்
(שַׂמְּחֵנוּ כִּימ֣וֹת עִנִּיתָ֑נוּ சம்ஹெனூ கிமோத் 'இன்னிதானூ- நாங்கள் துன்பமடைந்த நாட்களுக்காக எங்களை மகிழச் செய்யும்). இந்த வரிகளை கவனமாக ஆய்வு செய்கிறவர்களுக்கு இது பாரமாக இருக்கும். கடவுள் எப்படி மக்களை ஒடுக்க முடியும்?, கடவுள் எப்படி தன் மக்கள் தீமையை அனுபவிக்கவிட முடியும்?
விவிலியத்தில் பல வரிகளைப்போல இந்த வரியிலும், மக்களுடைய பாவ வாழக்கையும், கீழ்பபடியாமையுமே மையப்பொருளாக காட்டப்பட்டுள்ளன. שְׁנ֗וֹת רָאִ֥ינוּ רָעָֽה׃ ஷெனோத் ரா'இனூ
ரா'ஆஹ்- நாங்கள் தீமையான நாட்களை பார்த்ததற்கு).
வ.16: ஆசிரியர் தன்னையும் தன் மக்களையும் விசேட மொழியால் அழைக்கிறார். தன்னை கடவுளின் அடியார் என்கிறார், அவரோடு சேர்த்து அவர் மைந்தரையும் உள்வாங்குகின்றார். மக்கள் மீது மாட்சிமை விளங்கச் செய்தல் என்பது, மக்களுக்கு ஆசீர் கொடுத்தல் என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது.
வ.17: வழமையான திருப்பாடல்களைப் போல இறுதி ஆசீர் இந்த வரியில் காட்டப்படுகிறது. கடவுளை தம் தலைவர் என்று அழைக்கிறார். וִיהִ֤י ׀ נֹ֤עַם אֲדֹנָי אֱלֹהֵ֗ינוּ யிஹி நோ'அம் 'அதோனாய் 'எலோஹெனூ- என் தலைவராம், எம் ஆண்டவரின் அருள் எம்மோடு இருப்பதாக.
தாங்கள் செய்பவற்றில் வெற்றி கேட்கிறார். அதாவது அனைத்தையும் தீர்மானிக்கிறவர் கடவுளாக இருக்கின்ற படியால் வெற்றி தோல்வியும், கடவுளிடமே தங்கியிருக்கிறது என்பத இந்த வரியில் சொல்லப்படுகிறது.
எபிரேயர் 4:12-13
கடவுளுடைய வார்த்தை
12கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இருபக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. 13படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன. நாம் அவருக்கே கணக்குக் கொடுக்கவேண்டும்.
விவிலியத்தில் இறைவார்த்தையைப் பற்றி சொல்லப்படுகின்ற வரிகளுள் இந்த வரி மிக முக்கியமானதும், அதிகமான ஆய்வாளர்கள் மற்றும் ஆராச்சியாளர்களால் ஆய்வு செய்யப்பட்டதுமான வரி. அதிகமான மறையுரையாளர்களும் இந்த வரியை கோடிடுவார்கள்.
வ.12: கடவுளுடைய வார்த்தையை கிரேக்க மூல மொழி ὁ λόγος τοῦ θεοῦ (ஹொ லொகொஸ் டூ தியூ) என்று வார்த்தைப் படுத்துகிறது. இந்த வார்த்தையின் வல்லமை ஆற்றல் வாய்ந்ததாகவும் (ἐνεργὴς எனெர்கேஸ்-சக்தியுள்ள), இரண்டு பக்கமும் வெட்டக்கூடிய வாளினும் கூர்மையானதாகவும் (μάχαιραν δίστομον மாகாய்ரான் திஸ்டொமொன்- இரண்டு பக்கமும் வெட்டக்கூடிய வாள்) சொல்லப்படுகிறது. ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கக்கூடியதாகவும் (ψυχῆς καὶ ⸁πνεύματος ப்சுகேஸ் காய் புனூமாடொஸ்- ஆன்மாவும் ஆவியும்), எலும்பு மூட்டையும் மச்சையையும் ஊடுருவக்கூடியதாகவும் (μυελῶν புனுலோன்;- சீர்தூக்கிப் பார்க்கக்கூடியது), உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப்பார்கக்கூடியதாகவும் (κριτικὸς கிரிடிகொஸ்- நீதிசெய்யும்) அழகான தமிழ்வார்த்தைகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மனிதர்களுடைய வார்த்தைகள் அதிகமான வேளையில் சக்தியில்லாமல் போகின்றவேளை, கடவுளுடைய வார்த்தை என்றும் சக்தியுள்ளது என்பது சொல்லப்படுகிறது. இரண்டு பக்கமும் வெட்டக்கூடிய வாள் அக்காலத்தில் பாவனையிலிருந்த மிகவும் சக்தி வாய்ந்த வாள். இந்த வாளின் அடையாளம்தான் இன்று நீதி தேவதைகளின் அடையாளமாக காட்டப்பட்டுள்ளது. இந்த வாள் எந்த நிலையிலும் தன் வல்லமையை இழக்காது என்பதால் இதனை கடவுளுடைய வார்த்தையை வர்ணிக்க பாவிக்கிறார் எனலாம். கிரேக்கர்கள் ஆன்மாவிற்கும் ஆவிக்கும் இடையிலான பரிவுகளை முன்னிருத்தினர். இது எபிரேய சிந்தனையாக இருக்க வாய்ப்பில்லை. கிரேக்க சிந்தனையை உள்ளவாங்கினாலும், அதற்குள் எபிரேய சிந்தனையை உள்நுழைக்கிறார் ஆசிரியர். அதாவது கடவுளுக்கு ஆன்மாவென்றாலும், ஆவியென்றாலும் சிக்கலில்லை, அனைத்தையும் அவர் வார்த்தை கண்ணோக்கும் என்பது சொல்லப்படுகிறது. நீதி மற்றும் நீதிமன்ற செயலமர்வுகள் கிரேக்க-உலகத்திற்கு மிகவும் பரிட்சயமானது. இந்த அடையாளத்தையும் கடவுளுடைய வார்த்தையின் ஒரு பணியாக பார்ப்பது மிகவும் அழகானது.
வ.13: கடவுளுடைய சர்வ-அறிவு இந்த வரியில் காட்டப்படுகிறது. கடவுளுடைய பார்வைக்கு எதுவும் மறைவாய் இல்லை, அனைத்தும் அவருடைய அறிவிற்கு தெளிவாய் உள்ளன. மானிடர்கள் அனைவரும் அவருக்கே கணக்கு கொடுக்கவேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
கிரேக்க சிந்தனைகள் பல தெய்வ வழிபாட்;டை கொண்டிருந்தன. அதில் ஒவ்வொன்றிக்கும் ஒவ்வொரு தெய்வங்கள் பாதுகாவலர்களாக இருந்தனர். சிலவேளைகளில் ஒருவர் மற்றவரில் தங்கியிருப்பராகவும் இருந்தனர். இதே சிந்தனையைத்தான் அதிகமான மத்திய கிழக்கு நம்பிக்கைகளும் கொண்டிருந்தன. எபிரேய சிந்தனையும், இஸ்லாமிய சிந்தனைகளும் இந்த முறையிலிருந்து மாறுபடுகின்றன. ஒரே சர்வ வல்ல கடவுளை முன்னிருந்துவது எபிரேய-கிறிஸ்தவ-இஸ்லாமிய சிந்தனை. இந்த ஆண்மீகத்தை இந்த வரியில் காணலாம்.
மாற்கு 10:17-30
இயேசுவைப் பின்பற்ற விரும்பிய செல்வர்
(மத் 19:16-30 லூக் 18:18-30)
17இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, 'நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?' என்று அவரைக் கேட்டார். 18அதற்கு இயேசு அவரிடம், 'நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே. 19உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா?
'கொலைசெய்யாதே;
விபசாரம் செய்யாதே;
களவு செய்யாதே;
பொய்ச்சான்று சொல்லாதே;
வஞ்சித்துப் பறிக்காதே;
உன் தாய் தந்தையை மதித்து நட''
என்றார். 20அவர் இயேசுவிடம், 'போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்' என்று கூறினார். 21அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, 'உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்' என்று அவரிடம் கூறினார். 22இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்று விட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.
23இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், 'செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்' என்றார். 24சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, 'பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். 25அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது' என்றார். 26சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், 'பின் யார்தாம் மீட்புப்பெற முடியும்?' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். 27இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, 'மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்' என்றார். 28அப்போது பேதுரு அவரிடம், 'பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே' என்று சொன்னார். 29அதற்கு இயேசு, 'உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் 30இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார். 31முதன்மையானோர் பலர் கடைசி ஆவர்; கடைசியானோர் முதன்மை ஆவர்' என்றார்.
மத்தேயுவும் லூக்காவும் இந்த நிகழ்வை செல்வரான இளைஞருடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றன. மாற்கு இவரை இளைஞராக நேரடியாக காட்டவில்லை. இருந்தாலும் பாரம்பரியமாக இந்த நிகழ்வு இயேசுவிற்கும் ஒரு இளைஞருக்கும் இடையில் நடந்ததாகவே நம்பப்படுகிறது.
வ.17: இந்த வரியில் இயேசு தன்வழியில் சென்று கொண்டிருக்க செல்வர் ஒருவர் தன்னுடைய விருப்பத்தில் பெயரில் இயேசுவை அணுகுகிறார் என மாற்கு காட்டுகிறார். இவருடைய செயல்கள் வாசகர்களுக்கு முன்மாதிரியாக அமைகின்றன. அவர் வழியில் இயேசுவை அடையாளம் கண்டுகொள்கிறார். ஆண்டவர் முன் முழந்தாள் படியிடுகிறார், நல்லபோதகரே என்று அறிக்கையிட்டு நிலைவாழ்வை உரிமையாக்க என்ன செய்ய வேண்டும் என்கிறார்.
διδάσκαλε ἀγαθέ, திதாஸ்காலெ அகாபே, நல்ல போதகரே, τί ποιήσω ἵνα ζωὴν αἰώνιον κληρονομήσω; டி பொய்யேசோ ஹினா ட்சோஏன் அய்யோனியொன் கிலேரொனொமேசோ- நிலை வாழ்வை உரிமையாக்க என்ன செய்ய வேண்டும்.
வ.18: இயேசு இவருக்கு போதகராகவே தன்னை வெளிப்படுத்துகிறார். அதாவது போதகர்களை விட கடவுள் முக்கியமானவர் என்பது அவருக்கு சொல்லப்படுகிறது. கடவுள் ஒருவர்தான் நல்லவர் என்பது இன்னொரு முறை நினைவுகூறப்படுகிறது. போதகர்கள் கடவுளிடம் கொண்டு செல்ல வேண்டியவர்கள், இதனால்தான் கடவுள் ஒருவரே நல்லவர் என்பதை அவருக்கு நினைவூட்டுகிறார். οὐδεὶς ἀγαθὸς εἰ μὴ εἷς ὁ θεός. ஊதெய்ஸ் அகாதொஸ் எய் மே ஹெய்ஸ் ஹொ தியோஸ்- கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் ஒருவரும் இல்லை.
வ.19: யூதர்கள் சட்டங்களை கடைப்படித்து, அதன் மூலமாக நிலைவாழ்வை உரிமையாக்க முடியும் என நம்பினார்கள். இது யூதராக இயேசுவிற்கும், இந்த பணக்காரருக்கும் நன்கு தெரியும். இதனை மறைமுகமாக கிண்டலடிக்கிறார் இயேசு. கட்டளைகளை அவருக்கு சாரம்சமாக நினைவுபடுத்துகிறார் (கொலை செய்யாதே- μὴ φονεύσῃς, மே பொநெயுசேஸ், விபச்சாரம் செய்யாதே- μὴ μοιχεύσῃς மே மொய்கெயுசேஸ், களவு செய்யாதே- μὴ κλέψῃς மே கிலெப்சேஸ், பொய்யசான்று சொல்லாதே- μὴ ψευδομαρτυρήσῃς, மே ப்செதொமார்டுரேசேஸ், வஞ்சித்து பறிக்காதே- μὴ ἀποστερήσῃς மே அபொஸ்டெரேசேய்ஸ், தாய் தந்தையை மதித்துநட- τίμα τὸν πατέρα σου καὶ τὴν μητέρα டினா டொன் பாடெரா சூ காய் டேன் மேடெரா).
வ.20: தான் நல்ல யூதன் என்பதை அவர் இயேசுவிற்கு தெரியப்படுத்துகிறார். தான் இளமைமுதல்
இவற்றை கடைப்பிடித்து வருவதாகச் சொல்கிறார். இதிலிருந்து இவர் மிக இளமையான நபராக இருக்கவில்லை என்பது புரிகிறது.
மோசேயின் கட்டளைகளை கடைப்படித்தாலும் இவருடைய மனம் திருப்தியடையவில்லை என்பது காட்டப்படுகிறது. மேசேயின் கட்டளைகள் வெறும் தொடக்கம் மட்டுமே, அது முடிவல்ல, இயேசுதான் முடிவு என்பது இந்த வரியின் பின்புலமாக இருப்பது நோக்கப்படவேண்டும்.
வ.21: மாற்கு நற்செய்தியில் மிகவும் முக்கியமான வரி. இயேசு அவரை அன்பொழுக கூர்ந்து நோக்குவதாக தமிழ் விவிலியம் வார்த்தைப்படுத்துகிறது. Ὁ δὲ Ἰησοῦς ἐμβλέψας αὐτῷ ஹொ தெ ஈயேசூஸ் எம்பிலெப்சாஸ் அவ்டோ- இயேசு அவரை கூர்ந்து நோக்கி. முதல் ஏற்பாட்டில் இந்த பார்வை கடவுளுடைய பார்வையை நினைவு படுத்தும்.
ஒருவருடைய கண்களை கூர்ந்து பார்த்தால், அவருடைய உள் மனம் தெரியும் என்று சொல்வார்கள். இயேசு இவருடைய பலவீனத்தை கண்டுகொண்டுவிட்டார் எனலாம். அவருக்கு உரியவற்றை விற்று ஏழைகளுக்கு கொடுக்கச் சொல்கிறார். யூதர்கள் தங்கள் செல்வங்களில் ஏழைகளுக்கு உதவிசெய்வதை வழக்கமாகக் கொண்டவர்கள். அதிலும் யூத ஏழைகள் மீது அவர்கள் விசேட கரிசனை காட்டுவார்கள். இந்த இடத்தில் இயேசு இவரை அவருக்கு உரியதனைத்தையும் விற்று ஏழைகளுக்கு கொடுக்கச் சொல்கிறார். இதுதான அவருக்கு குறைவாக உள்ளது என்பதைக் காட்டுகிறார் (ἕν σε ὑστερεῖ· என் செ ஹஸ்தெரெய்- ஒன்று உமக்கு குறைபடுகிறது).
அனைத்தையும் ஏழைக்களுக்கு கொடுப்பவர் ஏழையாகமால் விண்ணகத்தில் செல்வராக இருப்பார் என்ற புதிய நியதியைக் சொல்கிறார். இவர் செல்வராக இருந்தாலும், விண்ணகத்தில் ஏழையாகவே இருக்கிறார் என்பது இவருக்கு காட்டப்படுகிறது. விண்ணகத்தில் செல்வராகவும், மண்ணகத்தில் ஏழையாகவும் இருக்கிறவரால் மட்டும்தான் இயேசுவை பின்பற்ற முடியும் என்பது காட்டப்படுகிறது (καὶ δεῦρο ἀκολούθει μοι காய் தெயூரொ அகொலூதெய் மொய்- பின் வந்த என்னை பின்பற்றும்).
வ.22: இயேசு சொன்னது அவருக்கு முகவாட்டத்தை கொண்டுவருகிறது, அவரும் சென்று விடுகிறார். இயேசுவை சந்திக்க வந்தது இவர்தான், இயேசுவை பின்பற்றாமல் செல்வதும் இவர்தான். ஆக இயேசுவை பின்பற்றுவதும், அவரை விட்டு அகல்வதும் ஒருவருடைய தனிப்பட்ட சுதந்திரத்தில் உள்ளது என்பது அழகாகக் காட்டப்பட்டுள்ளது. ἀπῆλθεν λυπούμενος· அபேல்தென் லுபூமெனொஸ்- முகம்வாடி சென்றுவிட்டார். இவருடைய முகம் வாட்டத்திற்கு காரணமாக அவருடைய ஏராளமான சொத்துக்கள் காட்டடப்படுகிறது (ἦν γὰρ ἔχων κτήματα πολλά. ஏன் கார் எகோன் க்டேமாடா பொல்லா- ஏராளமான சொத்துக்கள் இருந்தன). ஏராளமான சொத்துக்கள் ஆண்டவரை பின்பற்ற காரணமாக இருப்பதையும், அவரை விட்டுச்செல்ல காரணமாகவும் அமைவதை தன் வாசகர்களுக்கு காட்டுகிறார் மாற்கு.
வ.23: இறையாட்சிக்கும் செல்வத்திற்கும் இடையிளான பிளவை இயேசு தன் சீடர்களுக்கு காட்டுகிறார். இயேசு இதனை தன் சீடர்களுக்கு கற்பிக்கிறார்.
இறையாட்சியின் நோக்கமும், அதீத செல்வத்தின் நோக்கமும் இரண்டு வேறுபட்ட திசைகளில் செல்வதன் வாயிலாகவே ஒன்று மற்றொன்டை விலத்துகிறது எனலாம். இறையாட்சி செல்வத்திற்கு எதிரானது என்று இயேசு சொல்லவில்லை. மாறாக இறையாட்சிக்கு மேலாக செல்வம் செல்லக்கூடாது என்பதையே இயேசு வலியுறுத்துகிறார்.
வ.24: இயேசு சொன்னதைக் கேட்டு சீடர்கள் திகைப்படைகிறார்கள். இதன் மூலம் சீடர்களுடைய சிந்தனை இயேசுவின் சிந்தனைக்கு இன்னமும் உள்வரவில்லை என்பதை மாற்கு காட்டுகிறார். μαθηταὶ ἐθαμβοῦντο ἐπὶ τοῖς λόγοις αὐτοῦ மாதேடாய் எத்தாம்பூன்டொ எபி டொய்ஸ் லொகொய்ஸ் அவ்டூ- அவருடைய வார்த்தைக்கு அவர்கள் குழம்பிப்பபோனார்கள்.
அவர்களுடைய குழப்பத்தின் காரணமாக இயேசுவிற்கு மீண்டும் அதனை விளக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது. இந்த முறை இயேசு தான் சொல்லவேண்டியதை அழுத்தமாகச் சொல்கிறார், இருந்தாலும், சீடர்களை பிள்ளைகளே என்று அன்பாக அழைக்கிறார் (τέκνα டெக்னா- பிள்ளைகளே). பிள்ளைகளே என அழைப்பதன் வாயிலாக ஆண்டவர், அவர்களை இன்னமும் பெற்றோரில் தங்கியிருக்கிறவர்கள் எனப்தை நினைவூட்டுகிறார்.
வ.25: இயேசு வித்தியாசமான உருவகம் ஒன்றை முன்வைக்கிறார். ஊசியின் காதிற்குள் ஒட்டகம் நுழைவதைவிட, செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடடினம் என்கிறார். κάμηλον διὰ °τῆς ⸁τρυμαλιᾶς °τῆς ⸀ῥαφίδος διελθεῖν கம்மேலொன் தியா டேஸ் டுருமாலியாஸ் டேஸ் ரம்பிதொஸ் தியெல்தெய்ன்- ஊசியின் காதில் ஒட்டகம் நுழைதல்.
ஊசியின் காதில் உப்படி ஒட்டகம் நுழைய முடியும்? சில விரிவுரையாளர்கள் இந்த உருவகத்தை எருசலேம் வாயில்களில் ஒன்று என்ற வாதத்ததை முன்வைக்கின்றார்கள். இயேசுவின் காலத்தில் ஊசியின் காது என்ற எருசலேம் வாயில் இருந்திருக்கவில்லை. இது மத்திய காலத்தில்தான் இருந்தது. இயேசு உண்மையாக இதனை உருவகமாக பேசுகிறார். அவர் கண்ட பெரிய மிருகமாக ஒட்டகம்தான் இருந்திருக்கும், அவர் கண்ட சிறிய உருவகமாக ஊசியின் துளைதான் இருந்திருக்க வேண்டும். ஆக பண்காரர்களின் ஆணவமும், பெருமையும் அவர்களை விண்ணரசிற்குள் நுழைவதை நிச்சயமாக தடுக்கும் என்பது அவர் வாதம்.
வ.26: சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தார்கள் (περισσῶς ἐξεπλήσσοντο பெரிஸ்சோஸ் எக்செப்லேஸ்சொன்டொ- பெரிதும் வியந்தார்கள்), இவர்களுடைய வியப்பு சாதாரணமானதே.
இறையாட்சி இவ்வளவு கடினமாக இருக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
இயேசுவின் கருத்துப்படி யாரும் மீட்படையமாட்டார்கள் என்ற சந்தேகம் அவர்களுக்கு எழுகின்றது.
இயேசுவும் பெயரும், அவருடைய போதனைகளும், அவருடைய செயல்களும் மீட்பையே மையப்படுத்தும் வேளை, சீடர்கள் இந்த கேள்வியை தமக்குள்ளே கேட்பதன் வாயிலாக, அத்திவாரமே ஆட்டம் காணும் நிலையை மாற்கு வாசகர்களுக்கு கொடுக்கிறார்.
வ.27: இயேசு சொன்னது மனிதர்களின் பலவீனத்தைப் பற்றியே என்பதை இந்த வரி தெளிவு படுத்துகின்றது. இதனால் கடவுளால் இயலாதது என்று ஒன்றுமில்லை என்பது சொல்லப்படுகிறது. கடவுளால் எல்லாம் இயலும் என்பது ஆழமான எபிரேய சிந்தனை.
இதன் மூலமாக மனிதர்கள் மனிதர்களில் நம்பிக்கை வைப்பதைவிடுத்து கடவுளின் நம்பிக்கை வைக்க கேட்கப்படுகிறார்கள்.
வ.28: பேதுரு வழக்கம் போல நியாயமான கோரிக்கையை தன் சகோதரர்களுக்காக முன்வைக்கிறார். பேதுருவின் இந்த கோரிக்கையும் மனச் சஞ்ஞலமும் ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் அல்லது சீடர்களுடைய மனப்பான்மையை காட்டுகின்றன. அவர்களும் துன்ப வேளையில் இந்த கேள்வியைத்தான் கேட்டார்கள். இயேசு என்ற தெரியாத நபருக்காக அவர்கள் தங்களுடைய சொந்த நாடு, இனம், கலாச்சாரம், அரசியலை தியாகம் செய்கிறோமே என்பது அவர்களுக்கு சற்று பயமாக இருந்திருக்கலாம்.
ஆரம்ப கால திருச்சபை மிகவும் உன்னதமான திருச்சபை, அது அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவை பின்பற்றியது. இதனை பேதுருவின் இந்த வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன. ஒரு விதத்தில் இது அவர்களுக்கு பாராட்டாக இருக்கிறது, இன்னொரு விதத்தில் இது அப்படிச் செய்யாதவர்களுக்கு, இயேசுவில் நம்பிக்கை கொள்ளும் படி உற்சாகப்படுத்துவதாக இருக்கிறது எனலாம். ἰδοὺ ἡμεῖς ἀφήκαμεν πάντα καὶ ⸀ἠκολουθήκαμέν σοι இதூ ஹெமெய்ஸ் அபேகாமென் பான்டா காய் ஏகொலூதேகாமென் சொய்- பாரும், நாங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு உம்மை பின்பற்றினோம்.
வவ.29-30: ஆரம்ப கால கிறிஸ்தவர்களின் கேள்விக்கு அழகான விடைகள் கிடைக்கின்றன. இயேசு உறுதியாகச் சொல்கிறார், அதாவது அவர் தன்னுடைய அபிப்பிராயத்தையோ அல்லது விருப்பத்தையோ சொல்லவில்லை, மாறாக அவர் உண்மையைச் சொல்கிறார் (ἀμὴν λέγω ὑμῖν, அமேன் லெகோ ஹுமின்- உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்).
இயேசு தன்னையும் நற்செய்தியையும் ஒன்றாக அடையாளப்படுத்துகிறார். தியாகங்கள் நற்செய்திக்காகவும், தனக்காகவும் செய்யப்படுகின்றன. இரண்டும் ஒன்றுதான். இயேசுவிற்காக செய்யப்பட்ட தியாகங்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன: சிலர் வீடுகளை, சகோதரர்களை, சகோதரிகளை, தாயை, தந்தையை, பிள்ளைகளை, நிலபுலன்களை இழந்திருக்கிறார்கள். அவர்களுடைய தியாகம் மறுவாழ்வில் நிச்சயமாக நூறு மடங்கு திருப்பிக்கொடுக்கப்படும் என்கிறார். இவ்வுலக இன்னல்களுக்காக மறுவுலகில் நிலைவாழ்வும் கிடைக்கும் என்பதும் சொல்லப்படுகிறது. இந்த நம்பிக்கை ஆரம்ப கால கிறிஸ்தவர்களின் மறைக்கல்வியாகவும் இருந்திருக்கலாம். மறுவுலக வாழ்வு பற்றிய நம்பிக்கைகள் பிற்காலத்தில் இன்னும் அதிகமாக வளர்ச்சியடைந்திருக்கலாம்.
வ.31: முதன்மையானோர் கடைசியாவதும், கடைசியானோர் முதன்மையாவதும் ஆண்டவரின் நியதி. அதாவது அனைத்து வளங்களையும் கொண்டிருக்கிறவர் இறைவனையும் பெறலாம் என்ற நம்பிக்கை கேள்வியாக்கப்படுகிறது. முதன்மையான இடத்தை பிடிக்க விரும்புவோருக்கும் இந்த எச்சரிக்கை சொல்லப்படுகிறது. இயேசு முதன்மையானவர்களுக்கு எதிராக பேசவில்லை, மாறாக முதன்மையான இடத்தை மட்டுமே இலக்காக கொண்டவர்களுக்கு, தான்தான் முதன்மையான இடம் என்பதைக் காட்டுகிறார்.
மனிதரின் தேடல், பொருளாக இருந்தால்,
அது முடிவடையாது,
மனிதரின் தேடல் அன்பான கடவுளாக இருந்தால்,
தேடல் தோற்காது.
சட்டங்களை விட அதனைக் கொடுத்த ஆண்டவர் முக்கியமானவர்.
உலக செல்வத்தைக் கொண்டு
உலகையும் தாண்டிய செல்வமான இயேசுவை தேடவோர்,
பேறுபெற்றவர்கள்.
ஞானமே செல்வம் என்பது சாலமோனுக்கு வித்தியாசமாக தெரிந்தது.
இந்த செல்வமும், ஞானமும் இயேசுதான் என்று ஆரம்பகால
திருச்சபைக்கு தெரிந்தது.
அன்பான ஆண்டவரே,
உம்மையே செல்வம் எனக் கொள்ள வரம் தாரும். ஆமென்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக